சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek parliament rubber-stamps new EU austerity plan

கிரேக்க நாடாளுமன்றம் புதிய ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டத்திற்கு ஒப்புதல் முத்திரை குத்துகிறது

By Christoph Dreier and Alex Lantier
23 July 2015

Use this version to printSend feedback

அதிகாலையிலேயே பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்களுக்குப் பின்னர், கிரேக்க நாடாளுமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்ட ஒரு பரந்த புதிய செலவு-வெட்டு நடவடிக்கைகளையும் மற்றும் சட்டபூர்வ "சீர்திருத்தங்களையும்" பெரும்பான்மையோடு ஏற்றுக் கொண்டது.

அந்த சிக்கன நடவடிக்கை பொதி, 300 அங்கத்தவர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 230 “சம்மத" வாக்குகளுடன் எளிதாக நிறைவேறியது. ஆளும் சிரிசா கட்சி பிரதிநிதிகளில் மூன்று கால்பகுதியினருக்கு அதிகமானவர்கள் அந்த சட்டமசோதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக பிரதான எதிர்கட்சிகளோடு வலதுசாரி புதிய ஜனநாயகம் (ND), To Potami (ஆறு), மற்றும் சமூக ஜனநாயக PASOK கட்சியோடு இணைந்தனர். சிரிசாவின் இடது அரங்கத்தை (Left Platform) சேர்ந்த சுமார் 36 பிரதிநிதிகள் அந்த சட்டமசோதாவிற்கு எதிராக வாக்களிப்பதில் சிரிசாவின் தீவிர வலது கூட்டணி பங்காளிகளான சுதந்திர கிரேக்கர்கள் (Anel) மற்றும் ஏனைய தீவிர-வலது கட்சிகளின் சில அங்கத்தவர்களோடு இணைந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட கடந்த வார சிக்கன முறைமைகளின் முதல் பொதிக்கு எதிரான சிரிசாவின் "வேண்டாமெனும்" வாக்குகளை விட மூன்று வாக்குகள் இதில் குறைந்திருந்தது.

நேற்றைய வாக்கெடுப்பு ஜனநாயகத்தின் ஓர் அவமதிப்பாகும். அந்த 900-பக்க வரைவைப் படிக்கக்கூட சட்டமன்ற அங்கத்தவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. கிரீஸின் கடன்வழங்குனர்களான ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக இணைந்து வரையப்பட்டிருந்த அந்த வரைவு, ஒருநாள் முன்னதாகத்தான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் எந்தவித திருத்தங்களோ அல்லது மாற்றங்களோ செய்ய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆரம்ப செய்திகளின்படி, கிரேக்க நீதித்துறை அமைப்புமுறைக்குரிய நிதிகளையும் மற்றும் நீதித்துறை விசாரணைகளையும் கடுமையாக குறைக்கின்ற தனிவகைமுறைகளும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தினது வங்கி வசூல் மற்றும் தீர்மான வழிகாட்டியை ஏற்றுக்கொள்வதும் அந்த சட்டமசோதாவில் உள்ளடங்குகின்றன. வீடுகளை ஏலத்திற்கு விட உதவுகின்ற மற்றும் அடமான கடன் கட்ட தவறியவர்களிடமிருந்து வங்கிகள் வீடுகளை ஜப்தி செய்து சந்தை விலையில் விற்பனை செய்ய அனுமதிக்கின்ற புதிய விதிமுறைகளும் அதில் உள்ளன.

அந்த உடன்படிக்கையை பேரம்பேசுவதில் சம்பந்தப்பட்ட முன்னாள் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸின் கருத்துப்படி, "அவர்களது கடன்வழங்குனர்களுக்கு கடனைத் திரும்ப செலுத்தவியலாத நிலைமையில் இருக்கும் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் மற்றும் வணிகங்களை ஏலத்திற்கு விடுவதை, ஜப்தி செய்வதை மற்றும் அவற்றை அழிப்பதை" எளிமைப்படுத்துவதே அந்த சீர்திருத்தங்களின் நோக்கமாகும்.

அதன் வங்கிகளைப் பிணையெடுக்கும் அரசு கடப்பாடுகளை மட்டுப்படுத்தும் அந்த வங்கியியல் திட்டத்தில், எதிர்கால வங்கி தோல்விகளின் இழப்புகளை அவற்றின் கடன்வழங்குனர்களும் மற்றும் பங்குதாரர்களுமே தாங்கிக்கொள்ளுமாறு வங்கிகள் நிர்பந்திக்கும் என்பது வெறுமனே வெளிப்பார்வைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 8,000 யூரோவிற்கு (8,742 அமெரிக்க டாலருக்கு) அதிகமாக கொண்ட அனைத்து வங்கி கணக்குகளிலும் 30 சதவீத வெட்டைக் கொண்டு வர கிரேக்க வங்கிகள் தயாரிப்பு செய்து வருகின்றன என்ற செய்திகளும் இம்மாத தொடக்கத்தில் வந்திருந்தன.

பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் அவரது அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவும் மற்றும் சிரிசா நாடாளுமன்றவாதிகளின் புதிய கட்சித்தாவல்களை தடுப்பதற்காகவும் விவசாயிகளுக்கான வரி வெட்டுக்களை நீக்குவது போன்ற கடுமையான மக்கள்விரோத வெட்டுக்களில் சிலவற்றை ஒத்தி வைத்திருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன. சிப்ராஸ் ஏற்கனவே இடது அரங்கம் அங்கத்தவர்களை நீக்குவதற்காக அவரது மந்திரிசபையில் மாற்றம் செய்துள்ளார். “அதிருப்தியாளர்களைக் குறைக்க நாங்கள் முயன்று வருகிறோம்,” என்று கிரேக்க தொலைக்காட்சியில் விளக்கமளிக்கையில் சுகாதாரத்துறை மந்திரி Panagiotis Kouroumplis தெரிவித்தார்.

ஏதென்ஸ் ஒன்றில் முறைமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிரேக்க அரசு மற்றும் நிதியியல் அமைப்புமுறையை திவாலாக்கும் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதியுதவிகளின் வெட்டுக்களை முகங்கொடுக்க வேண்டும் என ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அதிகாரிகள் கோரினர்.

நாளிதழ் Bild க்கு ஜேர்மன் நாடாளுமன்றத்தின் ஐரோப்பிய கமிட்டி தலைவர் Gunther Krichbaum கூறுகையில், “ஏதென்ஸ் வெறுமனே சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமின்றி, மாறாக அவற்றை நடைமுறைப்படுத்துகிறதா என்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் கிரீஸ் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், இல்லையென்றால் பணஓட்டம் நிறுத்தப்படும்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டத்தின் மீது நடத்தப்பட்ட ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பின் 61 சதவீத பெரும்பான்மை "வேண்டாமென்ற" வாக்குகளை உதறித்தள்ளிவிட்டு, கிரேக்க நாடாளுமன்றம், இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் முத்திரை வழங்கிவிட்டது.

கிரேக்க நாடாளுமன்ற வாக்குகளின் முடிவைக் குறித்து வெளிப்படையாக நம்பிக்கையோடு இருந்த ஐரோப்பிய மத்திய வங்கி, புதனன்று மாலை அவசரகால கடனுதவியாக 900 மில்லியன் யூரோவை நீடித்தது.

அந்த நாடாளுமன்றம் கிரேக்க மக்களுக்கு எதிராக நிதியியல் சர்வாதிகாரத்தின் ஒரு கருவியாக செயல்பட்டு வருகிறது. ND, To Potami மற்றும் PASOK ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை கிரீஸ் நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரி, அந்த வரைவு முன்வைக்கப்படுவதற்கு முன்னரே அந்த சட்டமசோதாவிற்கு ஆதரவளிக்க உறுதியளித்தன.

திரு. சிப்ராஸ் எதற்கு ஒப்புக்கொண்டுள்ளாரோ எதற்காக கையெழுத்திட்டுள்ளாரோ அதை நடைமுறைப்படுத்த, அதை நிர்வகிக்க நாங்கள் அவரை கேட்டுக் கொள்கிறோம்,” என்று ஜனாதிபதி Prokopis Pavlopoulos சந்தித்து வந்த பின்னர் PASOK தலைவர் Fofi Gennimata தெரிவித்தார்.

வாக்கெடுப்புக்கு முன்னதாக, சிப்ராஸூம் அவரது அரசாங்கமும் அவர்களது சிக்கன பொதியை ஒரு தவிர்க்கவியலாத அவசியமாக நியாயப்படுத்தினர். புதிய நிதி மந்திரி ஏக்குளிட்ஸ் சக்காலோட்டோஸ் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், “வெள்ளியன்று நாங்கள் பேரம்பேசல்களைத் தொடங்கும் வகையில் இந்த முன்-நடவடிக்கைகளின் நடைமுறைகளை முடித்துக் கொள்வது அதிமுக்கியமாகும்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை உறுதிப்படுத்த சிப்ராஸ் நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாலையில் உரையாற்றினார். ஐரோப்பிய ஒன்றியத்திடம் அவரது தரந்தாழ்ந்த சரணடைவிற்கான மொத்த போக்கையுமே, அவர் எரிச்சலூட்டும் விதத்தில் அவரது அரசாங்கத்தால் போராடப்பட்ட ஒரு "போராட்டமாக" சித்தரித்ததுடன், “என்றாவது ஒருநாள் இந்த போராட்டம் பலன் கொடுக்கும்" என்றவர் சூளுரைத்தார். அவரது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஒரு தவிர்க்கவியலாத தீமையாக சித்தரித்து, அவற்றை நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளுமாறு கோருமளவிற்கு சென்றார்.

யதார்த்தத்தில், நாங்கள் சிரமமான விருப்பத்தேர்வையே தேர்ந்தெடுத்தோம், நாம் அனைவரும் இப்போது புதிய நிலைமைகளுக்கு பழகிக்கொள்ள வேண்டும்,” என்றார்.

வீடுகள் ஜப்தி செய்யப்படும் என்ற வாரௌஃபாகிஸின் எச்சரிக்கைகளை சிப்ராஸ் மறுப்பதாக தெரிகிறது, அவரது அரசாங்கத்தின் கீழ் அவ்வாறு நடக்காது என்று அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். “அதுபோல ஒருபோதும் நடக்காது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் அந்த உத்திரவாதம் இல்லாமல், நாங்கள் இருக்க முடியாது,” என்றார்.

இதுவரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்கு வரும் அதன் தேர்தல் வாக்குறுதிகளையும் மற்றும் அது அழைப்புவிடுத்த அந்த வெகுஜன வாக்கெடுப்பின் முடிவையும் சிரிசா ஏற்கனவே காட்டிக்கொடுத்துவிட்ட நிலையில், வீடுகள் சம்பந்தமான சிப்ராஸின் வாக்குறுதிகள் மதிப்பற்றவையாகும். ஆனால், அவை உண்மையாக மாறினாலுமே கூட, சிரிசா அரசாங்கம் வீடுகளை ஜப்தி செய்யவில்லை என்றாலுமே கூட, இது தாக்குதலைத் தள்ளிப்போட மட்டுமே செய்யும். சிரிசா செப்டம்பருக்கு முன்னதாக புதிய தேர்தல்களை ஒழுங்கமைக்கும் என ஏற்கனவே செய்திகள் பரவி வருகின்றன.

ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் அதிகாரத்திலிருந்து இறங்குவதற்கு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த சிப்ராஸ், உண்மையில் "சம்மத" வாக்குகள் மேலோங்கி வருமென்றும், அது பதவியிலிருந்து இறங்குவதற்கு அவருக்கு ஒரு காரணத்தை வழங்குமெனவும் கருதியிருந்தார்.

அந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக, இன்னமும் சிப்ராஸின் முறைமைகளை விமர்சித்து வரும் சிறுபான்மை இடது அரங்கத்துடன் சிரிசா பெரும்பான்மையானது விரும்பத்தகாத பேரம்பேசலை செய்தது. இடது அரங்கம் (Left Platform), அது எதிர்ப்பதாக கூறும் ஆழ்ந்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை சிப்ராஸ் திணித்து வருகின்ற போதினும் கூட அது சிரிசாவிற்குள்ளே தான் இருக்கிறது. அது சிக்கன நடவடிக்கைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை, ஒன்றுக்கு எதிராக இன்னொன்றென சிரிசாவின் பல்வேறு கன்னைகளை ஆதரிக்கும் முட்டுச்சந்திற்குள் திருப்பிவிட முனைந்து வருகிறது.

சிரிசா பெரும்பான்மை இப்போது பகிரங்கமாக இடது அரங்கத்துடன் ஒரு உடைவை அச்சுறுத்தி வருகிறது. “அங்கே சிரிசாவிற்குள் இரண்டு கண்ணோட்டங்கள் உள்ளன, அனேகமாக ஒரு முறிவு தவிர்க்கவியலாததாகும், ஆனால் முதலில் அங்கே பேச்சுவார்த்தைகள் இருக்க வேண்டும்,” என்று செவ்வாயன்று ஆல்பா ரேடியோவில் அரசாங்க செய்தி தொடர்பாளர் Olga Gerovasili தெரிவித்தார். இந்த "முறிவு" அடுத்த பொது தேர்தல்களுக்கு முன்னதாக நிறைவேற்றப்படலாம், அனேகமாக தேர்தல்கள் செப்டம்பர் வாக்கில் இருக்கலாம் என்று அவர் அச்சுறுத்தினார்.   

நேற்று இடது அரங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் அந்த சட்டமசோதாவிற்கு வாக்களிக்க போவதில்லை என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டினர். “நான் எமது வாக்காளர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன்,” என்று Rachel Makri, அவர் ஏன் "வேண்டாம்" என்று வாக்களித்தார் என்பதற்கு விளக்கமளித்தார், அதேவேளையில் நாடாளுமன்ற சபாநாயகர் Zoe Konstantopoulou கருத்துரைக்கையில், “ஒரு வழக்கறிஞராகவோ, சிரிசாவின் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது கிரேக்க நாடாளுமன்ற சபாநாயகராகவோ கூட இத்தகைய முன்-நடவடிக்கைகளுக்கு என்னால் வாக்களிக்க முடியாது,” என்றார்.

இடது அரங்கம் பிரதிநிதிகளை கூர்மையாக தாக்கியதன் மூலமாக சிப்ராஸ் விடையிறுத்தார். “இன்று வரையில் நான் எதிர்நடவடிக்கைகளைப் பார்த்து வருகிறேன், வீரதீர அறிக்கைகளை வாசித்து வருகிறேன், ஆனால் ஜூலை 12 பயமுறுத்தல்களுக்கு வேறெந்த மாற்றீடுகளையும் என்னால் செவியுற முடியவில்லை,” என்று கூறி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜூலை 12 அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை எதிர்ப்பவர்களை தாக்கினார்.

ஐரோப்பிய மத்திய வங்கி குறிப்பிடும் கணக்குகளை கடந்து, அல்லது ஓய்வூதியங்களுக்கு பதிலாக IOUகளை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டுமென்பதை கடந்து செல்லும் சொய்பிள திட்டத்திற்கு மாற்றீடான இடது திட்டம் இருப்பதாக யாரேனும் நம்பினால், அவர்கள் அதை கிரேக்க மக்களுக்கு விவரிக்க வேண்டும். எனது கையெழுத்துக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள கூடாது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சிரிசாவிற்குள் பல்லுபிடுங்கிய விசுவாசமான எதிர்கட்சியாக தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதன் மூலமாக அதுபோன்ற தாக்குதல்களுக்கு "இடது அரங்கம்" விடையிறுத்துள்ளது. Panagiotis Lafanzanis சிப்ராஸ் எரிசக்தித்துறை மந்திரி பதவியிலிருந்து நீக்கிய போதும்கூட, இடது அரங்கம், அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிக்க வாக்குறுதி அளித்தது.

கட்சிக்குள் இருந்து கொண்டே சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களிக்க மறுப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவது என்ற அவரது அறிக்கையை, சிப்ராஸ், சிரிசாவிற்குள் ஒரு பிளவை தவிர்ப்பதற்காக திரும்பபெற வேண்டுமென இடது அரங்கம் அதன் வலைத் தளத்தில் சிப்ராஸிற்கு அழைப்புவிடுக்கிறது.