சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Reinstate victimised Deeside plantation workers!

இலங்கை: பழிவாங்கப்பட்ட டீசைட் தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு!

By the Socialist Equality Party (Sri Lanka)
15 June 2015

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE), மத்திய மலையக மாவட்டத்தில் மஸ்கெலியாவின் கிளனியூஜி பெருந்தோட்டத்தின் நிர்வாகம் மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததோடு மேலும் நான்கு பேரை இடைநீக்கம் செய்ததையும் கண்டனம் செய்வதுடன் அவர்களுக்கு உடனடியாக மீண்டும் வேலை கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றன.

தோட்ட நிர்வாகம் வேலை சுமைகளை அதிகரித்ததற்கு எதிராக, கிளனியூஜி தோட்டத்தின் டீசைட் பிரிவில் பெப்ரவரியில் நடந்த மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாகவே இந்த தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டனர். சுரண்டலை அதிகரிக்கும் தமது அதிகாரத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அடக்கும் முயற்சியாகவே இந்த ஏழு தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டனர்.

டீசைட் பிரிவில் நடந்தது என்னவெனில், தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினர் மீதுமான அரசாங்கத்தினதும், பெருநிறுவன உயரடுக்கினதும் பரந்த தாக்குதலை முன்னெடுப்பதற்கான ஒரு ஒத்திகையே ஆகும். வீழ்ச்சியடைந்து வரும் இலாபத்தை அதிகரிக்க ஊதியங்கள் மற்றும் தொழில்களை வெட்டிக் குறைக்கும் அதேவேளை, உற்பத்தியை அதிகரிக்குமாறு கோரி தனியார் நிறுவனங்களும் அதேபோல் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் இடைவிடாது தொழிலாளர்களை நெருக்குகின்றன.

தொழில், நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக, வேலை நிறுத்தம் உட்பட ஒரு எதிர்த் தாக்குதலை முன்னெடுப்பதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக, பழிவாங்கப்பட்ட டீசைட் தொழிலாளர்களை பாதுகாக்க முன்வருமாறு ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றன.

இந்த பிரச்சாரம் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்கும் ஒரு கருவியாக செயற்பட்டு வரும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் தொடுக்கப்பட வேண்டும். நாம், டீசைட் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை பெறுவதற்காகப் போராடவும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை காக்கவும் தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வேலைத் தளங்களிலும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.

தோட்ட நிர்வாகம் திடீரென்று ஒரு நாள் ஊதியத்திற்கு பறிக்கும் கொழுந்தின் அளவை 16 முதல் 18 கிலோ வரை அதிகரித்ததாலேயே டீசைட் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, அதில் முன்னணியில் நின்ற தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் பொய்க் குற்றச்சாட்டுக்களை புனைந்திருந்தது. ஒரு தோட்ட மேற்பார்வையாளர், தொழிலாளர்கள் தன்னை தாக்கியதாகவும் ஒரு குளவி கூட்டை கிளறி விடுவதன் மூலம் மற்ற தொழிலாளர்களின் வேலைக்கு தடங்கல் ஏற்படுத்தியதாகவும் போலீசில் புகார் செய்தார். மார்ச் 11 அன்று கைதுசெய்யப்பட்ட தொழிலாளர்கள், அடுத்த நாள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னரே பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஹட்டன் இணக்க சபையில் ஜூன் 7 நடந்த விசாரணையின் போது நிர்வாகத்தின் பங்கு தெளிவாக அம்பலத்துக்கு வந்தது. இரண்டு தரப்பினருக்கும் இடையே ஒரு சமரசத்தை இணக்க சபை பிரேரித்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள், தாம் மேற்பார்வையாளரை தாக்கவில்லை என்று முழுமையாக மறுத்ததோடு குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவை என்றும் கண்டனம் தெரிவித்தனர். மேற்பார்வையாளர் சமரசத்துக்கான தனது தயார் நிலையை வெளிப்படுத்திய போதிலும், தொலைபேசியில் முகாமையாளரை தொடர்புகொண்ட பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். தான் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டால் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலாளர்களின் கதியே தனக்கும் ஏற்படும் என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.

அதே நேரம், தோட்டக் கம்பனியும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 25 வரை தனது சொந்த போலி உள்ளக விசாரணையை நடத்தியது. பல தொழிலாளர்கள், மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை மற்றும் குளவி கூடு கலைக்கப்பட்டமை பற்றிய குற்றச்சாட்டு பொய்யானது என்று சாட்சி கூறினர். மேற்பார்வையாளரும் வேறு ஒரு ஊழியருமே தொழிலாளர்களுக்கு எதிராக சாட்சி கூறினர்.

சாட்சியம் இல்லாத நிலையிலும், நிர்வாகம் மே 22 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களை அலுவலகத்துக்கு அழைத்து, சோ.ச.க. ஆதரவாளர் ஜி. வில்பிரட் உடன் எம். நெஸ்தூரியன் மற்றும் எஃப். பிராங்க்ளின் ஆகியோரை வேலை நீக்கம் செய்தது. எஸ். டக்ளஸ்நியுமன், எஃப். அன்டன் ஜூலியன், எஸ். பெனடிக்ட் மற்றும் எஸ். ஜனரட்னம் ஆகியோரை ஒரு மாதம் வேலை இடைநீக்கம் செய்தது.

தொழிலாளர்கள், அவர்களுக்குரிய தண்டனைகளை அறிவிக்கும் உத்தியகபூர்வ கடிதங்கள் தங்களால் புரிந்து கொள்ள முடியாத ஆங்கில மொழியில் உள்ளன என்ற அடிப்படையில் அவற்றை ஏற்க மறுத்துவிட்டனர். அவர்களது சொந்த தமிழ் மொழியிலான கடிதங்கள் இன்னமும் கொடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மாறாக, தொழிற்சங்கங்கள் தோட்ட முகாமைத்துவத்துக்கும் பொலிசுக்கும் பின்னால் நிற்கின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) பிரதேசத் தலைவர்களே, தொழிலாளர்களுக்கு எதிராக மேற்பார்வையாளரை பொலிசில் புகார் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பொலிஸ் தொழிலாளர்கள் கைது செய்ய முயன்றபோது, தொழிலாளர் தேசிய சங்கமானது (NUW) தொழிலாளர்களை தாமாகவே சரணடையச் செய்துள்ளது.

தொழிற்சங்கங்கள் வழமையாகவே கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் பக்கம் நின்றுவருகின்றன. NUW தலைவர் பி. திகாம்பரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு அமைச்சரவை அமைச்சராவார்.

முன்னாள் இ.தொ.கா. தலைவர்களில் ஒருவரான யூ.என்.பீ. பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜன், நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு மூடி மறைக்கப்பட்ட உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்தப் பிரச்சினையில் தலையிட்டுள்ளார். அவர், தொழிலாளர்கள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டால், மூவரின் வேலை நீக்கத்தை ஒரு மாத இடை நீக்கமாகவும், நால்வரின் ஒரு மாத இடை நீக்கத்தை ஒரு வார இடை நீக்கமாகவும் குறைக்க முன்மொழிந்துள்ளார்.

யோகராஜனின் யோசனை ஒரு தீர்வு அல்ல மாறாக தொழிலாளர்களுக்கு ஒரு பொறியே ஆகும். குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதானது தொழிலாளர்கள் எதிர்காலத்தில் கம்பனியின் தண்டனைகளையும் பொலிஸ் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ளவே வழிவகுக்கும். மிகவும் அடிப்படையில், அது தமது நிலைமைகள், வேலைகள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள சட்டபூர்வமான உரிமைக்கு குழிபறிக்கும்.

டீசைட் தொழிலாளர்களின் அனுபவங்கள், தொழிற்சங்கங்களும் அவற்றின் ஊழல் மிகு அதிகாரத்துவ வாதிகளும் தொழிலாளர் சார்பில் இயங்கவில்லை, மாறாக, தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்கு கம்பனிகளுக்கான தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்படுகின்றன என்பதையே மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

டீசைட் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் ஒரு தனியான பிரச்சினை அல்ல. கிளனியூஜி நிர்வாகத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஹாலிஎல டிக்வெல்ல தோட்ட உரிமையாளர்கள் தினசரி தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கை 16 கிலோவில் இருந்து 20 கிலோ வரை அதிகரித்துள்ளனர். தொழிலாளர்கள் வேலை அதிகரிப்பை எதிர்த்து, புதிய இலக்கு கைவவிடப்பட வேண்டும் எனக் கோரி மே மாதம் வேலை நிறுத்தம் செய்தனர்.

பெருந்தோட்ட கம்பனிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து, தேயிலை மற்றும் இறப்பர் போன்ற விளைபொருட்களின் விலை வீழ்ச்சியில் வெளிப்பட்டுள்ள, இந்த இலாப அமைப்பின் ஆழமடைந்துவரும் சரிவின் சுமையை தொழிலாளர்கள் சுமக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

புதிய கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்துக்கும் (CEEA) தொழிற்சங்கங்களுக்கும் இடையே மே 18 அன்று நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் திட்டவட்டமாக நிராகரித்த உரிமையாளர் சங்கம், கொழுந்து பறிக்கும் இலக்கை 5 கிலோவால் உயர்த்த வலியுறுத்தியது. பேச்சுவார்த்தை முழுமையாக முறிந்துபோனது. தொழில்துறை "சர்வதேச ரீதியில் போட்டியிடக் கூடியதாக" இருப்பதை உறுதி செய்வதே அவர்களது முன்னோக்காக இருக்கின்ற நிலையில், தொழிற்சங்கங்கள் சம்பளம் மற்றும் நிலைமைகளை பாதுகாக்க எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கப் போவதில்லை.

சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான நாய்ச் சண்டையினால், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் இதே போன்ற கோரிக்கைகளையே எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு தொழிற்துறையிலும் இதே நிலையே காணப்படுகின்றது. அரசாங்கத் துறை ஊழியர்கள், அரசாங்கத்தை செலவைக் குறைக்க நெருக்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கனத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அமைப்பும், பாதிக்கப்பட்டுள்ள டீசைட் தொழிலாளர்களை பாதுகாக்க அணிதிரளுமாறு பெருந்தோட்டங்களிலும் நாடெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. இலங்கை தொழிலாளர்கள் சர்வதேச ரீதியில் தமது வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்ப வேண்டும். அது, முதலாளிகள் மற்றும் அவர்களின் அரசாங்கமும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்களையும் சிக்கன நடவடிக்கைகளையும் முறியடிப்பதற்கான முழு தொழிலாள வர்க்கத்தினதும் அரசியல் மற்றும் தொழிற்துறை பிரச்சாரத்தின் முதல் அடி எடுப்பாக இருக்க வேண்டும்.

அத்தகைய பிரச்சாரம், சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தையும் மற்றும் உலகம் பூராவும் தெற்காசியாவிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் பாகமாக தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நாம், இந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கத் தேவையான வெகுஜன சோசலிச புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.