சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan parliament passes amendment to restrict presidential powers

இலங்கை பாராளுமன்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்த அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியது

By Wasantha Rupasinghe
1 May 2015

Use this version to printSend feedback

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சி கூட்டணிக்கும் இடையே பல வாரங்களாக தொடர்ந்த பேரத்தின் பின்னர், இலங்கை பாராளுமன்றமானது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏப்ரல் 28 அன்று நாட்டின் அரசியலமைப்பில் (19 ) திருத்தத்தை நிறைவேற்றியது.

அரசாங்கமும் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் "சர்வாதிகார அரசியலமைப்பில் இருந்து நாட்டுக்கு விடுதலைஎன்று அறிவித்தனர். அரசியலமைப்பு மாற்றத்தை தனது ஆதரவு இல்லாமல் நிறைவேற்றியிருக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..) தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி பெருமைபட்டுக்கொண்டது. ஜனநாயகத்தின் வெற்றி என்று அழைக்கப்படுவதை பாராட்டும் ஆரவாரத்தில் ஊடகங்களும் சேர்ந்து கொண்டன.

இந்தக் கூற்றுக்கள் மோசடியானவையாகும். இந்த 19ம் திருத்தமானது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன கோரிக்கைகளை முன்னெடுப்பதற்காக தயாரிக்கப்பட்டு வரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒரு ஜனநாயக முகமூடி வழங்குவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தையும் ஏழைகளையும் ஏமாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டதாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஸ்தாபித்து, பாராளுமன்றத்தை இறப்பர் முத்திரையளவிற்கு தரம் குறைத்த, 1978 அரசியலமைப்பை அமுல்படுத்தியது ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே ஆகும். அவருடைய அரசாங்கம், மலிவு உழைப்புக் களமாக தீவை மாற்றும் தனது "திறந்த பொருளாதார கொள்கையை" சுமத்த முயன்றபோது, பலம்வாய்ந்த ஜனாதிபதி அதிகாரங்கள் தேவைப்படும் என்று ஜெயவர்த்தன கணக்கிட்டிருந்தார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக, ஜனாதிபதி அதிகாரங்களை பலப்படுத்த ஒரு டஜன் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் 2010ல் 18வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அது உயர்மட்ட நீதிபதிகளையும் அரசு அதிகாரிகளையும் நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியதோடு ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற வரம்பையும் நீக்கியது.

சமீபத்திய திருத்தம் இருமுறை பதவிக்கால வரையறையை மீண்டும் ஸ்தாபித்தது; அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்களை அனுமதிப்பதன் மூலம் ஜனாதிபதிக்கான குற்றச்சாட்டு விலக்களிப்பை அகற்றியது; ஒரு வருடத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை நான்கரை ஆண்டுகளாக மாற்றியது. தேர்தல் ஆணைக் குழு மற்றும் நீதித்துறை உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை நியமிப்பது இப்போது "சுயாதீன ஆணைக்குழுக்களிடம்" ஒப்படைக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி இன்னும் அரசாங்கத்தினதும் அரசினதும் தலைவர் என்ற முறையில் பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பது உட்பட கணிசமான அதிகாரங்களைக் கொண்டுள்ளார். மேலும் அவர் ஆயுதப் படைகளின் பிரதம தளபதி ஆவார்.

யூஎன்பீயின் ஆதரவுடன் ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக திடீரென இராஜினாமா செய்வதற்கு முன்னர் சிறிசேன இராஜபக்ஷ அரசாங்கத்தின் அங்கமாக இருந்தார். அவர்களுடைய பிரச்சாரம், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் பற்றிய பரந்த சீற்றத்தை சுரண்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக, இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியையும் ஊழலையும் கண்டனம் செய்வதாகவும் பாராளுமன்ற ஆட்சி மீட்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுப்பதாகவும் இருந்தது.

சிறிசேன பக்கம்மாறியமையை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் திரைக்குப் பின்னால் வடிவமைத்தனர். அவர்கள் இருவரும் வாஷிங்டனுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். இராஜபக்ஷ மீதான அமெரிக்காவின் எதிர்ப்பு அவரது சர்வாதிகார ஆட்சி பற்றியதாக இருக்கவில்லை, மாறாக, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் இலக்காக உள்ள சீனா உடன் அவரது அரசாங்கம் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் மீதானதாக இருந்தது
.

19ம் திருத்தமானது உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது சம்பந்தமானது அல்ல. மாறாக, யூஎன்பீ பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு "ஜனநாயக" நாடகம் போட விரும்பிய அதேவேளை, பாராளுமன்றத்தினதும் பிரதமரதும் கைகளில் அதிகாரத்தைக் குவித்துக்கொள்வதன் மூலம் தனது நிலையையும் அரச இயந்திரத்தையும் பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. அது கூட்டணி பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய (JHU) மற்றும் எதிர்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ..சு..) எதிர்ப்புக்களை பின்தள்ள நெருக்கப்பட்டது. உயர் நீதிமன்றமானது மசோதாவின் அரசிலமைப்பு பொருத்தத்தை தீர்மானிக்கும் போது, பாராளுமன்ற மசோதாவின் மூலம் ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்களையும் கட்டுப்படுத்துவது பற்றி சில வரையறைகளை வெளிப்படுத்தியிருந்தது.

தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணைக் குழுவின் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிப்பதற்கு தவறினால் தனியார் ஊடகங்களைத் தண்டிக்கும் ஒரு உப பிரிவை திணிப்பதன் மூலம், அரசாங்கம்  தனது சொந்த ஜனநாயக விரோத தன்மையை காட்டியது. பரவலான விமர்சனத்தின் பின்னர் அது அந்த பிரிவை விலக்கிக் கொண்டது.

இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதத்தின் பின்னர், மசோதா 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 214 வாக்குகள் மூலம் நிறைவேற்றப்பட்டது. ஒரு முன்னாள் கடற்படை அதிகாரியும் ஸ்ரீ..சு. பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர மட்டுமே, "தேசிய பாதுகாப்புக்கு" அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்,

 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற கட்சியின் கோரிக்கையை கைவிட்டுவிட்டு, முன்னிலை சோசலிசக் கட்சியின் (முசோக) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார, வாக்கெடுப்பை புறக்கணிப்பதன் மூலம் சத்தமின்றி மசோதாவை ஆதரித்தார். இனவாத மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி.) இருந்து பிரிந்து சென்ற முசோக, வீரசேகர போன்ற சிங்கள அதிதீவிரவாதிகளுடன் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று புறக்கணிப்புக்கு காரணம் கூறியது.

ஜே.வி.பி., ஒரு உயர்மட்ட ஆலோசனை குழுவான தேசிய செயற் குழுவில் இருந்து யூ.என்.பீ. மற்றும் ஜனாதிபதியுடன் நெருக்கமாக இருந்து இந்த திருத்தத்தை கொண்டுவர ஒரு கருவியாக செயற்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்களையும் நீக்க வேண்டும் என்று கட்சி அறிவித்தாலும், "ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட எதாவது இருப்பது சிறந்தது" என்று ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த தோரணைகள் அனைத்தும் ஒரு போலித்தனமானவை ஆகும். இலங்கை முதலாளித்துவத்தில் ஜனநாயக உரிமைகளுக்கு எந்த இடமும் கிடையாது. 1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றது முதல், இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பை நசுக்க விரிவான அவசரகால அதிகாரங்களை பயன்பாடுத்துவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் கிராமப்புற வறியவர்களின் ஜனநாயக உரிமைகளை இரக்கமின்றி நசுக்கிவந்துள்ளன.

ஆளும் கும்பல் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த தமிழர்-விரோத பேரினவாதத்தை மீண்டும் மீண்டும் கிளறி வந்துள்ளதோடு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்ட கால இனவாத யுத்தத்தின் போது பொலிஸ்-அரச வழிமுறைகளை ஆழப்படுத்தியது. 1978 ஆம் ஆண்டு வரையான பாராளுமன்ற ஆட்சி என்று அழைக்கப்படுவது, ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை நிறுத்தியிருக்கவில்லை.

தேர்தல் மீதான மற்றொரு திருத்தத்தின் பின்னர், ஒரு சில வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை உக்கிரமாக்கும். அரசாங்கம், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக இருந்த வரவு செலவுப் பற்றாக்குறையை இந்த ஆண்டு 4.4 சதவிகிதமாக குறைக்கக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் உள்ளது. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையேயான பிளவு ஆழமடைகின்ற நிலையில் ஜனநாயகம் பொருத்தமற்றதாகும்.

அமெரிக்காவின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையினால் தூண்டிவிடப்பட்ட சர்வதேச புவியரசியல் பதட்டங்களுக்குள்ளும் நாடு அகப்பட்டுக்கொண்டுள்ளது. வாஷிங்டனும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் இலங்கையில் அரசியல் அபிவிருத்தியை கண்காணித்து வருகின்றன. ஏப்ரல் 23, சிறிசேன தனது "நூறு நாள் சாதனைகள்" பற்றிய உரையை ஆற்றுவதற்கு சற்று முன்னதாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனியினதும் தூதர்களும் அவரது கொள்கைகளுக்கு தங்கள் "பூரண ஒத்துழைப்பை" வழங்க முன்வந்தனர்.

துணை அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ மான், "இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்ய பெரும் சாத்தியம் இருக்கின்றது" என்று அறிவித்ததுடன், மறுநாள் கொழும்பு விஜயம் செய்யவிருந்த இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியின் பயணத்தையும் சுட்டிக் காட்டினார். வாஷிங்டன் சீனாவிற்கு எதிரான யுத்த தயாரிப்பில் ஒரு முக்கிய மூலோபாய சொத்தாக இலங்கையை நிறுவ ஆர்வமாக உள்ளது.

தொழிலாள வர்க்கமும் வறிவர்களும் சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிராக சளைக்காது அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதன் அடிப்படையில் மட்டுமே, தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுகிறது.