World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The fight against militarism, war and the falsification of history

இராணுவவாதம், போர் மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கு எதிரான போராட்டம்

By Uli Rippert
6 May 2015

Back to screen version

இந்த உரையானது மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தின கூட்டத்தில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் உலி ரிப்பேர்ட் நிகழ்த்திய பேச்சின் உரைவடிவமாகும்.

ஜேர்மனியில், தற்போது ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பு நடந்து வருகிறது. அதனை "ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவு" என்று மட்டுந்தான் கூற முடியும். அதேநேரத்தில், அங்கே வரலாற்றை பொய்மைப்படுத்தவும் திட்டமிட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன.

அவுஸ்விட்ச் (Auschwitz), ட்ரிப்லிங்கா (Treblinka), மாஜ்டனாக் (Majdanek), புஹென்வால்ட் (Buchenwald) மற்றும் ஏனைய வதைமுகாம்கள் விடுதலை செய்யப்பட்டு எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நாஜி குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதும் அதை மூடிமறைப்பதும் நிகழ்ந்து வருகின்றது.

ஊடகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும், அந்த பயங்கரம் ரஷ்ய புரட்சி, போல்ஷிவிசம் மற்றும் செம்படையிலிருந்து தோன்றியதாக வாதிடப்படுகிறது. அவ்விதத்தில் நாஜிக்களது குற்றங்கள் ஒரு புரிந்துகொள்ளத்தகுந்த பிரதிபலிப்பாக இருந்தனவாம்.

இந்த வரலாற்று பொய்மைபடுத்தல் நேரடியாக இராணுவவாதம் மற்றும் வல்லரசு அதிகார அரசியலின் மீள்எழுச்சியுடன் பிணைந்துள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் புதிய குற்றங்களுக்கு தயாரிப்பு செய்ய வேண்டுமானால், அதன் வரலாற்று குற்றங்கள் துப்புரவு செய்யப்பட்டு, பூசிமெழுகப்பட வேண்டும்.

ஓராண்டுக்கு முன்னர், ஜனாதிபதி கௌவ்க் மற்றும் மத்திய அரசாங்கமும் இராணுவத்தின் மீதிருந்த தடைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தனர். ஜேர்மனி மிகவும் பெரியதென்றும் உலக அரசியலில் வெறுமனே ஒதுங்கியிருந்து கருத்துக் கூறுவதை விடவும் மிகவும் பொருளாதாரரீதியில் பலமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அப்போதிருந்து, சிறந்த ஆயுதங்களுக்கான கோரிக்கைகளும், படையினருக்கு சிறப்பான பயிற்சிகள் மற்றும் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடுகளுக்கான கோரிக்கைகளும் இல்லாமல் ஒரு நாள் கூட கடந்து செல்வதில்லை.

வரலாறு முழுப் பலத்துடன் திரும்பி வந்துள்ளது.

தீவிரமடைந்திருக்கும் ரஷ்யாவிற்கு எதிரான போர்வெறியூட்டலின் வேகம், மூச்சடைக்க வைக்கிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் ரஷ்யாவை நோக்கி முன்னேறுவதைப் புதுப்பிக்க, இரண்டு உலக போர்களில் அது ஆக்கிரமித்த ஒரு நாடான உக்ரேனை பயன்படுத்தி வருகிறது. இரண்டாம் உலக போரில் நாஜி ஒத்துழைப்பாளர்களது பாரம்பரியத்தைக் கொண்ட ஸ்வோபோடா மற்றும் Right Sector பாசிசவாதிகளுடன் இதுவரையில் ஜேர்மன் அரசாங்கம் கூடி வேலை செய்துள்ளது.

ஜேர்மனி, மத்திய கிழக்கில் அதன் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்துள்ளது. 2003 இல் ஈராக் போர் தொடங்கிய போது, அல்லது 2011 இல் லிபியா போரில் நடந்து கொண்டதைப் போலில்லாமல், அப்பிராந்தியத்தின் அடுத்த சுற்று வன்முறை துண்டாடலில் ஜேர்மனி ஒரு தீர்க்கமான பாத்திரம் வகிக்கும் என்பதை பேர்லின் அரசாங்கம் இப்போது உறுதிப்படுத்தி வருகிறது.

நாஜிக்களால் நடத்தப்பட்ட பெரும் குற்றங்களில் இருந்து ஜேர்மனி படிப்பினைகளைப் பெற்று, ஒரு சமாதானமான வெளியுறவு கொள்கையைத் தொடங்கி, ஒரு நிலையான ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்தது என்ற போருக்குப் பிந்தைய தசாப்தங்களின் பிரச்சாரங்கள் எல்லாம் ஒரு கட்டுக்கதையாக மாறிவிட்டன.

ஜேர்மன் ஏகாதிபத்தியம், அது வரலாற்றுரீதியில் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில், உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் அது அதன் முழு ஆக்ரோஷதன்மையில் தன்னைத்தானே மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய டாங்கிகள், புதிய போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் தாக்குதலுக்குரிய புதிய துப்பாக்கிகள் வாங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. நீர்மூழ்கி கப்பற்படை பெரிதாக்கப்படும், அனைத்திற்கும் மேலாக, தாக்கும் ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும்.

பெப்ரவரியில், ஒரு புதிய இராணுவ கோட்பாடு அறிவிக்கப்பட்டது.

உலகளாவிய நடவடிக்கைகளுக்காக விரைவாக நிலைநிறுத்தக்கூடிய நேட்டோவின் விரைவு படைக்கு ஜேர்மன் இராணுவம் தலைமை ஏற்றுள்ளது. அது பெரும் எண்ணிக்கையிலான இராணுவ ஒத்திகைகளில் முன்னணி பங்களிப்பாளராக பங்கெடுத்து வருவதுடன், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவைக் கட்டமைப்பதிலும் மற்றும் ரஷ்யாவைச் சுற்றி வளைப்பதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஸ்வீடன் முன்னாள் பிரதம மந்திரி கார்ல் பில்ட் கூறுகையில், ரஷ்யாவுடன் ஒரு போர் சாத்தியமே என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாம் தற்போது உலக அரசியலின் மிகவும் அபாயகரமான கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் … கிழக்கு எரிந்து கொண்டிருக்கிறது, தெற்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நெருப்புகள் நமக்கு மிக அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன,” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 1914 மற்றும் 1939 போர்களை விட மிக மோசமான ஓர் அணுஆயுத பேரழிவின் விளிம்பில் ஐரோப்பா நிற்கிறது.

ஒவ்வொரு கட்சியும் போர் உந்துதலை ஆதரிக்கின்றன. சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD), அதன் வெளியுறவு மந்திரியும், இதில் தூண்டிவிடும் பாத்திரத்தை எடுத்துள்ளனர். அவர்கள் பசுமை கட்சியினர் மற்றும் இடது கட்சியால் ஆதரிக்கப்படுகின்றனர். இந்த கட்சிகள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. “சமாதானம்,” “ஜனநாயகம்,” மற்றும் "மனித உரிமைகள்,” குறித்த வார்த்தைகளுக்குப் பின்னால், ஜேர்மன் இராணுவவாதத்தின் மீளெழுச்சியை மூடிமறைப்பதிலும் மற்றும் அதற்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதிலும் அவர்களது சிறப்பு பங்களிப்பு உள்ளது.

தொழிற்சங்கங்களும் போர் முனைவை ஆதரிக்கின்றன. ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (DGB) தலைவர் ரெய்னர் ஹோப்மன், வல்லரசு அரசியலுக்கு ஜேர்மன் திரும்பி இருப்பதை "முன்னோக்கி-பார்க்கும் வெளியுறவு கொள்கையாக" பாராட்டுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு ஜேர்மன் இராணுவத்துடன் ஏற்கனவே ஒரு கூட்டணியை உருவாக்கி இருந்தது. அந்நேரத்தில், அத்தொழிற்சங்கத்தின் தலைவர் அறிவிக்கையில், தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல, மாறாக இராணுவமும் சமாதான இயக்கத்தில் பங்கெடுக்கின்றன என்றார்.

ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் மக்களுக்கு எதிராக ஒரு உண்மையான சூழ்ச்சியில் இணைந்துள்ளன. அவர்களில் ஒரே ஒருவர் கூட விடயத்தை அவற்றின் நிஜமான பெயரிட்டு அழைப்பதில்லை. அத்துடன் ரஷ்யா உடனான ஒரு போர் என்பது ஓர் அணுஆயுத பேரழிவாக இருக்கும் என்பதையும் கூறுவதில்லை.

அதற்கு மாறாக, கட்சிகளும் தொழிற்சங்கங்களும், இராணுவத்துடன் சேர்ந்து, அடுத்த மாதம் "ஆயுத படை தினம்" என்றவொரு இராணுவ கொண்டாட்டத்திற்கு தயாரிப்பு செய்து வருகின்றன. நூற்றுக் கணக்கான "இளம் அதிகாரிகளும்" “இராணுவ தொழில் ஆலோசகர்களும்" இராணுவத்திற்கு நியமிப்பதற்காக இராணுவ பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படுவார்கள். பிரஷ்ய இராணுவவாதம் மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் பாணியில், “சிப்பாய்கள் மீதான நன்மதிப்பு" மீண்டுமொருமுறை ஒரு முன்மாதிரியாக ஆக்கப்படுகிறது.

போருக்குப் பிந்தைய ஜேர்மன் மீள்ஆயுதமயமாக்கலில் மற்றும் ஜேர்மன் இராணுவ மத்திய ஆயுத படைகளைத் தோற்றுவிப்பதில் கருவியாக இருந்த நாஜி அதிகாரிகளுக்கு, அஞ்சலி செலுத்துவதும் இராணுவ காட்சிப்படுத்தலின் ஒரு பாகமாக இருக்கும்.

மில்லியன் கணக்கான மக்கள், நம்பிக்கையின்றி, அதிர்ச்சியோடு, அதிகரித்த சீற்றமும் கலந்து, போர் பிரச்சாரம் மற்றும் இராணுவ ஆயத்தப்படுத்தலை கவனித்து வருகின்றனர்.

வதை முகாம்கள் விடுவிக்கப்பதன் 70ஆம் நினைவாண்டைக் குறிக்கும் வகையில் சமீபத்திய வாரங்களில் காட்டப்பட்ட தொலைக்காட்சி ஆவணப்படங்கள், 6 மில்லியன் யூதர்களின் பாரிய இனப்படுகொலையின் முழு கொடூரத்தையும் மீண்டுமொருமுறை தெளிவுபடுத்தின.

நாஜிக்களது அசுரத்தனமான குற்றங்கள் மக்களின் பெரும் பிரிவினரின் நனவில் பதிந்து போயுள்ளது. “மீண்டும் போர் வேண்டாம்!” “பாசிசம் மீண்டும் திரும்ப கூடாது!” போன்ற கோரிக்கைகள் தலைமுறைகளை உருவமைத்துள்ளதுடன், அவை இன்றைய நாள் வரையில் உயிர்ப்புடன் உள்ளன.

இந்த எதிர்ப்பை முறியடிக்கும் பொருட்டு, வரலாற்றை மாற்றி எழுதவும் மற்றும் திரிக்கவும் ஓர் ஒருமித்த நடவடிக்கை நடந்து வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றாளர் ஏர்ன்ஸ்ட் நோல்ட, நாஜிசத்தின் குற்றங்களைக் குறைத்துக்காட்டி, அவற்றை போல்ஷிவிசத்தின் "புரிந்துகொள்ளத்தகுந்த" பிரதிபலிப்பாக சித்தரித்தார். அந்நேரத்தில் அவர் பலமான எதிர்ப்பை எதிர்கொண்டதுடன், அவரது கருதுகோள்கள் நிராகரிக்கப்பட்டது.

இன்றோ அவரது திரித்தல்வாதம் வரலாற்று மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் மற்றும் இங்கே உள்ள பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களிலும் நியாயப்படுத்தப்படுகின்றன. அப்பல்கலைக்கழகம் இத்தகைய வரலாற்று பொய்கள் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் ஒடுக்க முனைந்து வருகிறது.

ஆனால் வரலாறு புறநிலையானது. வரலாற்று உண்மை ஒரு பலம்வாய்ந்த அரசியல் சக்தியாகும். வரலாற்றுடன் விளையாடலாம் என்று யாரேனும் நினைத்தால் அவர் மிகவும் தவறிழைத்தவர் ஆகிவிடுவார்.

அசுரத்தனமான பாசிச குற்றங்களும், மில்லியன் கணக்கானவர்கள் உலக போர்களில் கொல்லப்பட்டதும் இறுதியாக முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையின் முரண்பாடுகளில் வேரூன்றி இருந்தன என்ற உண்மையை யாராலும் மூடிமறைக்க முடியாது.

மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள, இராணுவவாதம் மற்றும் போரின் மீள்வரவு, சமூக உறவுகளின் நிஜமான நிலையை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமூக கூட்டு-பங்காண்மை (partnership) ஆகியவை முதலாளித்துவத்துடன் பொருந்தியது என்ற எல்லா பிரமைகளையும் இதனால் மறுத்தளிக்கப்படுகின்றது. அது எல்லா கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் உண்மையான குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது. இவ்வாறு செய்வதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அபிவிருத்திக்கு நிலைமைகளை உருவாக்குகிறது.

நமது கட்சியின் பலமே நாம் ஒருபோதும் சமரசத்திற்கு போனதில்லை என்பது தான். நாம் வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கு எதிராக சளைக்காமல் போராடி வருகிறோம். நாம் சந்தர்ப்பவாதம் மற்றும் தேசியவாதத்தின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகவும், மற்றும் ஒரு சோசலிச அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவற்காக போராடுகிறோம்.

அத்தகைய கோட்பாடுகளுக்கான இந்த போராட்டம் இப்போது ஒரு பரந்த தட்டுக்களை வென்றெடுத்து வருவதுடன், அது நமது நம்பிக்கை மற்றும் நமது உறுதிப்பாடான கருத்திற்கு மூலஆதாரமாக விளங்குகிறது.