சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The paramilitary occupation of America

அமெரிக்காவில் துணை இராணுவப்படையின் ஆக்கிரமிப்பு

Joseph Kishore
12 March 2015

Use this version to printSend feedback

விடயங்களை சரியான பெயரிட்டு அழைப்பது மிகவும் முக்கியமாகும். அருவருப்பூட்டும் வகையில் அமெரிக்காவில் பொலிஸ் படுகொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது, பொலிஸைப் பொருத்தமாக ஓர் ஆக்கிரமிப்பு இராணுவமென்று குறிப்பிடுவதற்குரிய புள்ளியை எட்டியுள்ளது. அதன் அன்றாட வன்முறை மற்றும் மூர்க்கத்தனத்தை, அந்நாட்டின் ஏழை மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரான ஒரு போராக வர்ணிப்பதே மிகச் சரியாக இருக்கும்.

நடைமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அட்டூழியத்தைக் கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும் பகுதிகளில் வாழ்வின் அன்றாட உண்மைகளாகி உள்ள துன்புறுத்தல் மற்றும் அடித்தல் ஆகியவற்றின் பின்னணியில், உயிரிழப்போரின் எண்ணிக்கை விட்டுகொடுப்பின்றி அதிகரித்து வருகிறது. அரசாங்கம் பொலிஸ் படுகொலைகள் பற்றிய புள்ளிவிபரங்களைப் பிரசுரிப்பதில்லை; இருப்பினும், ஊடக செய்திகளிலிருந்து தொகுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பொலிஸ் வன்முறையின் விளைவாக சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். அது சராசரியாக நாளொன்றுக்கு ஏறத்தாழ மூன்று மரணங்களாகும்.

வெறும் கடந்த மூன்று வாரங்களில் செய்திகளில் வந்த பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடங்குபவர்கள்:

ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் 27 வயதான ஆண்டனி ஹில். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், நிராயுதபாணியாக, நிர்வாணமாக, அவர் அவரது பால்கனியில் தொங்கி கொண்டிருந்து பின்னர், தரையில் விழுந்து தவழ்ந்து கொண்டிருந்ததை பார்த்ததாக கூறிப்படுகிறது. அவர் மார்ச் 9 அன்று ஒரு பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விஸ்கான்சின் மாடிசனில் 19 வயது நிரம்பிய ஆண்டனி ரோபின்சன் ஜூனியர். நிராயுதபாணியாக இருந்த அவர், மார்ச் 6 அன்று அவரது அடுக்குமாடி வீட்டு கட்டிடத்திற்குள் பலவந்தமாக நுழைந்த ஒரு பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலோராடோவின் அரோராவில் 37 வயது நிரம்பிய நெய்ஸ்சிலஸ் வின்ஜண்ட். நிராயுதபாணியான இவர் ஒரு கைது ஆணையின் கீழ் தேடப்பட்டு வந்தவர். மார்ச் 6 அன்று ஒரு கனரக ஆயுதமேந்திய துணை இராணுவப்படை SWAT குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புளோரிடாவின் வொலுசியா உள்ளாட்சியில் 26 வயது நிரம்பிய டெரீக் க்ரூஸ். நிராயுதபாணியாக, அவரது வீட்டில் கொல்லப்பட்டார். “கதவைத் தட்டாமல்" நுழையும் திடீர் SWAT சோதனையின் போது, சில அவுன்ஸ் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்ட, மார்ச் 4 அன்று பலியான அவர் உயிர்போகுமாறு முகத்தில் சுடப்பட்டார்.

கலிபோர்னியாவின் சாண்டா அனாவில் 28 வயது நிரம்பிய எர்னஸ்ட் ஜேவியர் வனிபா டயஸ். நிராயுதபாணியாக, அவரது காரில் கொல்லப்பட்டார். நான்கு குழந்தைகளுக்கு தந்தையான அவர் இரண்டு வேலைகள் செய்து வந்தார். உள்ளூர் பொலிஸ் தலைமை அதிகாரி வார்த்தைகளில் கூறுவதானால், பெப்ரவரி 27இல் அவர் "ஒத்துழைக்காததால்" சுட்டுக் கொல்லப்பட்டார்.

டெக்சாஸின் யுலெஸில் 31 வயது நிரம்பிய ரூபென் கார்சியா வில்லாபாண்டோ. நிராயுதபாணியாக, அவரது காரில் கொல்லப்பட்டார். ஒரு போக்குவரத்து நிறுத்தத்தில் அதிகாரியின் கட்டளைகளுக்கு அவர் கீழ்படிய மறுத்தார் என்று கருதப்படும் சம்பவத்திற்குப் பின்னர், பெப்ரவரி 20இல் சுட்டு கொல்லப்பட்டார்.

வாஷிங்டன் பாஸ்கோவில் 35 வயது நிரம்பிய அண்டோனியோ ஜாம்பிரேனோ. நிராயுதபாணியாக இருந்தார். பொலிஸ் மீது கற்களை வீசினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். பெப்ரவரி 10 அன்று கைகளை மேலே தூக்கி இருந்த நிலையில் சுட்டு கொல்லப்பட்டார்.

நியூ யோர்க்கில் அகாய் குர்லே மற்றும் எரிக் கார்னர்; ஓஹியோவின் க்ளீவ்லாந்தில் பன்னிரெண்டு வயது நிரம்பிய தமிர் ரைஸ்; மிசோரியின் ஃபேர்குசனில் மைக்கேல் பிரௌன்; இன்னும் பலரின் பெயர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில் மனதை உறைய செய்யும் மட்டத்திற்கு பொலிஸ் வன்முறை, வேறெந்த பிரதான தொழில்துறைமயப்பட்ட நாட்டையும் விட மிக அதிகமாகும். ஜேர்மனியில் 2013 மற்றும் 2014 இரண்டாண்டுகளையும் சேர்த்து அங்கே எட்டு பொலிஸ் படுகொலைகள் நடந்திருந்தன. கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டஜன் மக்கள் பொலிஸால் கொல்லப்படுகிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 64,000,000 மக்கள் வாழும் மொத்த பிரிட்டனில் கொல்லப்பட்டவர்களை விட, 68,000 பேர் வாழும் வாஷிங்டனின் பாஸ்கோவில் கடந்த ஆண்டு அதிகமான மக்கள் பொலிஸால் கொல்லப்பட்டார்கள்.

இத்தகைய படுகொலைகளில் சில காணொளிகளில் பதிவு செய்யப்பட்டு, தேசிய செய்திகளாகவும் ஆகி உள்ளன. இன்னும் பல சம்பவங்கள் அரிதாகவே செய்திகளில் வருகின்றன அல்லது குறிப்பிடப்படாமலேயே போய்விடுகின்றன.

உள்ளூர் ஊடக செய்திகளைத் தொகுத்தளிக்கும்Killed by Police,” எனும் ஒரு வலைத் தளம், இந்த ஆண்டின் முதல் 70 நாட்களில் 212 பொலிஸ் படுகொலைகளை ஆவணப்படுத்தி இருந்தது. அதில் புதனன்று ஒரேநாளில் நடந்த குறைந்தபட்சம் ஏழு சம்பவங்களும் உள்ளடங்கும். ஒரு சுருக்கமான ஊடக விபரம் சுட்டிக் காட்டுகிறது: “சந்தேகத்திற்குரிய ஒருவர், பொலிஸின் சிறிது பின்தொடரலுக்குப் பின்னர், உயிர்போகும் அளவிற்கு தாக்கப்பட்டுள்ளார்... இறுதியில் அந்த கார் நின்றதும், ஷெரீப்பின் அதிகாரி அந்த காரின் மீது அவரது ஆயுதத்தைப் பிரயோகித்தார். சந்தேகத்திற்குரிய அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது...”

மேலே குறிப்பிடப்பட்ட சம்பவம் ஈராக்கிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ கூட நடந்திருக்கலாம். பொது மக்களுக்கு எதிரான அதுபோன்ற அட்டூழியங்கள், அமெரிக்க இராணுவம் ஆக்கிரமித்த நாடுகளில் சகஜமாக நடக்கின்றன. கார் ஓட்டுனர்கள் அமெரிக்க இராணுவ ரோந்து படையினரின் கட்டளைகளை மதிக்கவில்லை என்பதற்காக அவர்களால் காரில் சுடப்பட்ட சம்பவங்களும்; அமெரிக்க துருப்புகளால் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அவற்றில் வசிப்பவர்கள் அடிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட அல்லது சுடப்பட்ட சம்பவங்களும், கடந்த 14 ஆண்டுகளில் அங்கே எண்ணற்ற செய்திகளில் உள்ளன.

இராணுவத்தைப் போலவே, பொலிஸூம் மக்களை ஒரு விரோத சக்தியாக பார்க்க பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்கொள்ளும் எவரொருவரும் முழுமையாக அடிபணிந்து நடந்து கொள்ள வேண்டுமென அவர்கள் கோருகின்றனர். அடிபணிய தவறினால் அடி, மின் அதிர்ச்சி, கைது அல்லது கூடுதல் அதிகாரத்தில் படுகொலை இவற்றால் தண்டிக்கப்படுகிறது.

சீருடை அணிந்த இராணுவம் மற்றும் பெண்டகனுடன் உள்ளூர் பொலிஸ் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டுள்ளது. அவை அந்நாடெங்கிலுமான பொலிஸ் துறைக்கு, ஜனாதிபதி ஒபாமாவின் முழு ஒப்புதல் கொண்ட ஒரு திட்டத்தின் கீழ், பில்லியன் கணக்கில் மதிப்பிலான கனரக ஆயுதங்கள் மற்றும் இராணுவ ரக தளவாடங்களைக் கைமாற்றி உள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய போர்களில் மிஞ்சிய ஆயுத வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தானியங்கி ஆயுதங்களும் அவற்றில் உள்ளடங்கும்.

சான்றாக, கடந்த வாரம் நெய்ஸ்சிலஸ் வின்சண்ட் கொல்லப்பட்ட கொலோராடோவின் அரோரா, 2006க்குப் பின்னர் 500,000 டாலர் மதிப்பிலான இராணுவ தளவாடங்களைப் பெற்றுள்ளது. கன்னிவெடி அதிர்வைத் தாங்கும் (MRAP) வாகனங்கள், கவசங்கள், மற்றும் டஜன் கணக்கான தானியங்கி துப்பாக்கிகளும் அதில் உள்ளடங்கும்.

டெரிக் க்ரூஸ் சுட்டுக் கொல்லப்பட்ட வொலுசியா உள்ளாட்சி, 1,251,000 டாலர் மதிப்பிலான இராணுவ தளவாடங்களைப் பெற்றுள்ளது. அவை பிரதானமாக தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 250,000 டாலர் மதிப்பிலான சிப்பாய்களுக்கான வாகனங்கள், மற்றும் சுமார் 700,000 டாலர் மதிப்பிலான MRAP வாகனங்கள் என்ற வடிவத்தில் இருந்தன.

கடந்த அரை-நூற்றாண்டாக உள்நாட்டு பொலிஸ் நடவடிக்கையை இராணுவமயமாக்கியதைக் கணக்கில் எடுக்க வேண்டுமானால், ஒருவர் அமெரிக்க சமூகத்தின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நீண்டகால மாற்றங்களை ஆராய வேண்டும். தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் போராட்டங்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட பொலிஸ் வன்முறை நீண்ட காலமாகவே பெரிதும் அமெரிக்க வாழ்வின் அடிப்படை அம்சமாக இருந்துள்ள போதினும், பொலிஸை முறையாக இராணுவமயமாக்கிய நடைமுறை 1960களுக்குப் பின்னர் நடந்துள்ள மாற்றங்களை ஒட்டியே அபிவிருத்தி அடைந்துள்ளது.

கனரக ஆயுதமேந்திய SWAT குழுக்கள் அந்த தசாப்தத்தின் இறுதி ஆண்டுகளில் தான், அக்காலகட்டத்தின் நகர்புற மேலெழுச்சிகள் மற்றும் சமூக எழுச்சிகளுக்கு விடையிறுப்பாக, முதன்முதலாக தோன்றின. அந்த தசாப்தத்தின் இறுதி வாக்கில், ஆளும் வர்க்கம், 1930களின் புதிய உடன்படிக்கைக்குப் பின்னர் அது தொடர்ந்து கொண்டிருந்த சமூக சீர்திருத்த கொள்கையை கைத்துறந்து கொண்டிருந்தது.

1970களின் இறுதியில், அரசியல் ஸ்தாபகம் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக ஒரு தாக்குதலைத் தொடங்கியது, அப்போதிருந்து அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறைச்சாலை அமைப்புமுறையின் பாரிய விரிவாக்கம் மற்றும் பொலிஸை ஒரு துணை இராணுவப் படையாக மாற்றுவது உட்பட அரசின் பொலிஸ் அதிகாரங்களை வேகமாக ஆயத்தப்படுத்துவதற்கு, “சட்டம் ஒழுங்கு" அரசியல், ஓர் அரசியல் போர்வையாக மாறியது.

இந்த நிகழ்வுபோக்கு 9/11க்குப் பின்னர் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பதாகையின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் பாரிய இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்குள் —FBI, CIA, NSA மற்றும் பெண்டகனுக்குள்— மிக நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உள்ளுர் பொலிஸ் இன்று, ஒடுக்குமுறை மற்றும் கட்டுப்பாடு என்ற தேசிய அமைப்புமுறைக்குள் ஒரு மில்லியன் நூலிழைகளால் பிணையப்பட்டுள்ளது.

இது தான் பொலிஸை நியாயப்படுத்தும் ஒபாமாவின் ஆணித்தரமான தலையீடுகளின் அடியிலிருப்பது. அவற்றில் மைக்கேல் பிரௌனைக் கொன்ற ஃபேர்குசன் காவல் அதிகாரி டேரென் வில்சனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததை ஆதரித்த ஒபாமாவின் அறிக்கையும், மற்றும் கடந்த வாரம் அவர் வலியுறுத்திய "பெரும்பாலான சட்டம் ஒழுங்கு அதிகாரிகள்" அவர்களது வேலையை "நியாயமாகவும், சாகசத்துடனும் செய்கின்றனர்,” என்ற அறிவிப்பும் உள்ளடங்குகின்றன.

வில்சனின் கண்துடைப்பை அரசியல் ஸ்தாபகம் வெறுமனே ஒரு உள்ளூர் பிரச்சினையாக பார்க்கவில்லை, மாறாக ஒரு தேசிய அவசியமாக பார்க்கிறது. பொலிஸைப் பாதுகாப்பதில், அவர்களின் குற்றங்களுக்கு கணக்கு காட்டும் எந்த பொறுப்பும் அங்கே இல்லை என்பதை உறுதிப்படுத்துவதில், ஒபாமா ஒடுக்குமுறை எந்திரத்தின் ஒரு முக்கிய பாகத்தைத் தாங்கிப் பிடித்து வருகிறார்.

பொலிஸ் மக்களின் சேவைக்காக அந்த "சாகச" வேலையை நடத்தவில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் ஆளும் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டை பாதுகாப்பதற்காக செய்கிறது. சமூகப் போராட்டங்கள் அபிவிருத்தி அடைகையில், அன்னிய நாடுகளில் மெருகூட்டப்பட்ட இராணுவத்தின் வன்முறை வகைமுறைகளை உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக, பொலிஸ் இன்னும் அதிகமாக நேரடியாக பிரயோகிக்க அழைக்கப்படுகின்றன.

ஜனநாயக கட்சியின் சுற்றுவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளால் கூறப்படுவதைப் போல, பொலிஸ் வன்முறை அடிப்படையிலேயே ஒரு இனவாத பிரச்சினை அல்ல. எந்தவொரு குறிப்பிட்ட காட்டுமிராண்டித்தனத்திலும் இனவாதம் என்ன தான் பாத்திரம் வகித்தாலும், பொலிஸ் வன்முறையானது முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்கள் மற்றும் அதன் எதிர்தரப்பில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு இடையிலான சமரசத்திற்கிடமற்ற மோதலில் உள்ளடங்கி உள்ளது. சமூகத்தின் இந்த அடிப்படை வர்க்க பிளவானது, சமூக சமத்துவமின்மையின் மிகப் பாரிய வளர்ச்சி உடன் எல்லா விதத்திலும் பெரும் வெடிப்பார்ந்து வளர்ந்துள்ளது.

இதனால் தான் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் ஒன்றுதிரட்டலில் வேரூன்றி இருக்க வேண்டும் என்பதோடு, தொழிலாள வர்க்கம் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்தை அதன் சொந்த நலன்களின் மையத்தில் வைத்து பார்க்க வேண்டும்.

சுதந்திர பிரகடனத்தை வரைகையில், தோமஸ் ஜெபர்சன், பிரிட்டிஷ் அரசரின் "துஷ்பிரயோகங்கள் மற்றும் அபகரிப்புகள் தொடரக்கூடாது" என்பதோடு, “நம்மிடம் உள்ள ஆயுதமேந்திய துருப்புகளின் பெரிய அமைப்புகளைப் பகுதிபகுதியாக பிரிப்பது" மற்றும் "அவை நடத்தும் எந்தவொரு படுகொலைக்கான தண்டனையிலிருந்தும், போலி வழக்குகள் மூலமாக, அவற்றை பாதுகாப்பதைத் தடுப்பது" என்பதையும் உள்ளடக்கினார். அப்போது அது பிரிட்டிஷ் முடியாட்சியைத் தூக்கியெறிவது மீதான பிரச்சினையாக இருந்தது. இப்போது இது முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிவது மீதான பிரச்சினையாக உள்ளது.