சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Danger of war with Russia grows as US sends military equipment to Ukraine

அமெரிக்கா உக்ரேனுக்கு இராணுவ தளவாடங்களை அனுப்புவதால் ரஷ்யா உடனான போர் அபாயம் அதிகரிக்கிறது

By Johannes Stern and Alex Lantier
13 March 2015

Use this version to printSend feedback

நேட்டோ கூட்டணிக்கும் ஓர் அணுஆயுதமேந்திய சக்தியான ரஷ்யாவிற்கும் இடையே முழு போர் அபாயத்தைத் தீவிரப்படுத்தும் வகையில், கிழக்கு ஐரோப்பாவில் தொடர்ந்து நடந்துவரும் நேட்டோவின் ரஷ்ய-விரோத இராணுவ ஆயத்தப்படுத்தலின் பாகமாக வாஷிங்டன் உக்ரேனுக்கு இராணுவ தளவாடங்கள் அனுப்புவதை தொடங்கி உள்ளது.

அது 30 ஆயுதமேந்திய ஹம்வீஸ் (பன்முக பயன்பாட்டுக்குரிய துரித ஊர்திகள் - Humvees) மற்றும் 200 ஆயுதமேந்தாத ஹம்வீஸ் ஆகியவற்றையும், அத்துடன் வேவுபார்க்கும் டிரோன்கள், ரேடியோக்கள் மற்றும் இராணுவ ஆம்புலன்ஸ்கள் உட்பட 75 மில்லியன் டாலர் மதிப்பிலான தளவாடங்களையும் அனுப்புமென ஒபாமா நிர்வாகம் புதனன்று அறிவித்தது. கியேவ் ஆட்சிக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான உயிர்பறிக்கும் ஆயுதங்கள் வழங்க அமெரிக்க காங்கிரஸூம் சட்டமசோதாவைத் தயாரித்துள்ளது.

அதேநேரத்தில் வாஷிங்டன் ரஷ்ய பெருநகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிற்கு அருகிலுள்ள பால்டிக் குடியரசுகளில் 3,000 கனரக ஆயுதமேந்திய துருப்புகளையும் அனுப்புகிறது. அவர்களுக்கான 750 பிரதான அப்ராம்ஸ் போர்க்கள டாங்கிகள், சிப்பாய்களுக்கான ஆயுதமேந்திய பிரட்லி ஊர்திகள், மற்றும் ஏனைய ஊர்திகளும், அமெரிக்க துருப்புகள் அனுப்பப்பட்டதும் பின்னாலேயே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு எதிராக "நாம் தீர்மானகரமான ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதைக் காட்டுவதே" இந்த ஒப்படைப்புகளின் நோக்கமாக உள்ளது என்று அமெரிக்க மேஜர் ஜெனரல் ஜோன் ஓ' கொன்னொர் லாட்விய தலைநகர் ரிகாவில் தெரிவித்தார்.

அதன் எல்லையோரங்களில் உள்ள விரோத நாடுகளுக்கு நேட்டோ பாரிய ஆயுதங்கள் வழங்குவதை மாஸ்கோ அதன் ரஷ்ய தேசிய பாதுகாப்பிற்கு சகிக்கவியலாத ஓர் அச்சுறுத்தலாக பார்ப்பதாக அதன் கடும் எச்சரிக்கைகளுக்கு இடையிலும், வாஷிங்டன் இவற்றை முன்னெடுத்து வருகிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி அதுபோன்றவொரு முடிவு எட்டப்பட்டால், அது அமெரிக்க-ரஷ்ய உறவுகளில், அதுவும் குறிப்பாக அமெரிக்க ஆயுதங்களால் டோன்பாஸில் [கிழக்கு உக்ரேனில்] வசிப்பவர்கள் கொல்லப்பட தொடங்கும்போது, படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அலெக்சாண்டர் லுகாஷெவிச் கடந்த மாதம் கூறியிருந்தார். அவர் நேட்டோவின் திட்டங்களை "மிகவும் கவலையளிப்பதாக" குறிப்பிட்டதோடு, தொடர்ந்து கூறுகையில்: “இது ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் அக்கூட்டணியை எதிர்வினையாற்ற அனுமதிக்கும் வகையில் கூடுதல் செயல்பாட்டு தகைமைகளை உருவாக்குவதாகும்... அத்தகைய முடிவுகள் இயல்பாகவே எங்களது இராணுவ திட்டமிடலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்,” என்றார்.

அந்த முடிவு வாஷிங்டன் மற்றும் பேர்லினுக்கு இடையிலான பதட்டங்களையும் கூர்மைப்படுத்தி வருகிறது. பேர்லின் ரஷ்யா மீதான தற்போதைய தடைகள் மற்றும் நிதியியல் இடுக்கிப்பிடிகளை ஆதரிக்கின்ற போதினும், அது ரஷ்யாவுடன் ஒரேயடியான போர் அச்சுறுத்தல் நகர்வுகளை எதிர்க்கிறது.

வாஷிங்டனுக்கு நேற்று விஜயம் செய்த ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர், ரஷ்யா மீது "பொருளாதார மற்றும் அரசியல்ரீதியில் அழுத்தம்" அளிக்கும் மூலோபாயத்தைத் தொடருமாறு வலியுறுத்தினார். உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதென்பது, “விசை வில்பொறியை (அதாவது மோதலை) ஒரு புதிய கட்டத்திற்குள்" கொண்டு போய்விடுமென அவர் சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான சிந்தனை குழாமில் (CSIS) பேசுகையில் எச்சரித்தார்.

ஆனால் மின்ஸ்கில் ஜேர்மன், பிரெஞ்சு, ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த மாதம் உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்திற்கு முன்னர் ஏற்பட்டிருந்த கியேவ் ஆட்சியின் தோல்விக்குப் பின்னரில் இருந்து, அமெரிக்க ஆளும் மேற்தட்டின் பரந்த பிரிவுகளின் மனோபாவம் அதிகளவில் மிரட்டும் தொனியில் திரும்பியுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தால் கண்டிக்கப்பட்ட ஒரு கருத்துரையை, ஓய்வூபெற்ற மேஜர் ஜெனரலும் தொலைக்காட்சி மேதாவியுமான ரோபர்ட் ஸ்கேல்ஸ் வெளியிட்டிருந்தார். “அதுவொரு விளையாட்டு, களம், உக்ரேனிய போட்டி. அப்பிராந்தியத்தில் ஏதேனும் தாக்கத்தைக் கொண்டு வரவும், போக்கைத் திருப்பவும் ரஷ்யர்களைக் கொல்ல தொடங்குவது மட்டுமே அமெரிக்காவிற்கு இருக்கும் ஒரே வழி,” என்றார்.

இந்த வாரம், பெண்டகனும் காங்கிரஸ் அதிகாரிகளும் வெள்ளை மாளிகை வேகமாக நடவடிக்கை எடுக்க அழுத்தம் அளித்து, கியேவிற்கு ஆயுதம் வழங்க அழைப்புவிடுத்தனர். பாதுகாப்பு செயலர் அஸ்தோன் கார்டரும் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் தலைமை அலுவலக தலைவர் மார்டின் தெம்ப்சேவும், பெருவியாபார கட்சிகள் இரண்டினதின் முன்னணி காங்கிரஸ் உறுப்பினர்களைப் போலவே, கியேவிற்கு பெருமளவில் ஆயுதங்கள் வழங்க அழுத்தம் அளித்து வருகின்றனர்.

உக்ரேன் மக்களுக்கும் சரி, அத்துடன் கிரெம்ளினுக்கும் சரி இரண்டு பேருக்குமே ஒரு பலமான சமிக்ஞை அனுப்பியதற்காக நான் ஜனாதிபதி ஒபாமாவைப் பாராட்டுகிறேன்,” என்று ஜனநாயக கட்சி செனட்டர் டிக் டர்பின் தெரிவித்தார். “ஆனால் உக்ரேனுக்கு முடிந்தளவிற்கு நிறைய செய்தாக வேண்டும், சாத்தியமான அளவிற்கு உடனடியாக பாதுகாப்பு ஆயுதங்களையும் அதில் உள்ளடக்க வேண்டும்,” என்றார்.

“[ஜேர்மன் சான்சிலர் அங்கேலா] மேர்கெல் இங்கே வந்திருக்கும் போதே, அல்லது ஜேர்மன் தூதருக்கு, ஜனாதிபதி ஓர் உறுதிமொழியை அளித்திருக்கலாம் என்பதே உண்மையாக தெரிகிறது, அவ்வாறு செய்யாமல் விட்டமை நிச்சயமாக தடத்தின் இருதரப்பிலும் பெரும் கவலைகளை உருவாக்கி உள்ளது,” என்று குடியரசு கட்சி செனட்டர் பாப் கோர்கர் தெரிவித்தார்.

உக்ரேனிய இராணுவத்திற்கு பாதுகாப்புத்துறை ஆயுதங்களை அனுப்புவது, புட்டினை தூண்டிவிடும் என்ற இந்த வாதத்தை நான் ஏற்க மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும்,” என்று ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி தெரிவித்தார்.

வெறித்தனமான ஆக்ரோஷம் மற்றும் முன்பின் யோசனையற்றதன்மையின் ஒரு நச்சார்ந்த கலவையாக, நேட்டோ கூட்டணி ஒட்டுமொத்த பூமியையுமே அழிக்கக்கூடிய ரஷ்யா உடனான ஒரு போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க கொள்கை மீதான பேர்லினின் எச்சரிக்கைகள் பெரிதும் ஒரு தந்திரோபாய குணாம்சத்தைக் கொண்டுள்ளன, அதுவே கூட கியேவின் பெப்ரவரி 2014 பதவிக்கவிழ்ப்பை ஆதரிப்பதிலும் மற்றும் கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆட்சியின் இரத்தந்தோய்ந்த போருக்கு ஒத்துழைப்பு அளிப்பதிலும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு தலைமை வகித்துள்ளது. போரை எதிர்க்கின்ற ஒரே சக்தி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர் வர்க்கமாகும்.

அமெரிக்க கொள்கை மீதான பேர்லினின் மனக்கசப்புகளுக்கு இடையிலும், நேட்டோ கூட்டணி ரஷ்யாவிற்கு எதிரான அதன் தீவிரப்படுத்தலைப் பின்தொடர்ந்து வருகிறது. புதன்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில், நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க்கும் மற்றும் ஐரோப்பிய படைகளுக்கான நேட்டோவின் தலைமை தளபதி பிலிப் ப்ரீட்லோவ்வும் கிழக்கு ஐரோப்பா எங்கிலும் நடந்துவரும் இராணுவ ஆயத்தங்களை விவரித்தனர். அவர்கள் ஐரோப்பாவில் நேட்டோ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும், பெல்ஜியத்தின் மொன்ஸில் உள்ள ஐரோப்பிய கூட்டு படைகளின் உயர் தலைமையகத்திலிருந்து (SHAPE) உரையாற்றினர்.

உக்ரேனிய நெருக்கடியின் காரணமாக, நேட்டோ "அதன் கூட்டு பாதுகாப்பை விரிவாக்க வேண்டியுள்ளது, பனிப்போர் முடிவுக்குப் பின்னர் அது ஒருபோதும் இவ்வாறு செய்ததில்லை... நாம் துரித விடையிறுப்பு படையின் 13,000 சிப்பாய்களை 30,000 சிப்பாய்களாக இரட்டிப்பாக்குவோம். நாம் 5,000 நபர்களின் ஒரு தாக்குமுகப்புடன் துரித விடையிறுப்பு படையை பலப்படுத்த உள்ளோம், அது 48 மணி நேரத்திற்குள் அனுப்புவதற்கு தயாராக இருக்கும். மேலும் நாங்கள் பால்டிக் அரசுகளிலும் மற்றும் ஏனைய மூன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஆறு கட்டளை மையங்களை ஸ்தாபிக்க உள்ளோம்," என்று ஸ்டொல்டென்பேர்க் அறிவித்தார்.

நேட்டோ உறுப்பு நாடுகள் பாரியளவில் பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்கை அதிகரிக்க சூளுரைத்துள்ளதை சமீபத்திய வேல்ஸ் உச்சிமாநாட்டில் குறிப்பிட்டு காட்டிய ஸ்டொல்டென்பேர்க், “அதை வேகப்படுத்துமாறு" வலியுறுத்தினார். பால்டிக்கில் தீவிரப்படுத்துதலுக்கு அப்பாற்பட்டு, கருங்கடலில் கடற்படை ஒத்திகைகளும் நடந்து வருகின்றன, அத்துடன் நேட்டோ 25,000 பேர்களுடன் தென்கிழக்கு ஐரோப்பாவில் பல ஆண்டுகளுக்கு மிகப் பெரிய ஒத்திகைகளை நடத்த தயாரிப்பு செய்து வருகிறது.

எதிர்கால சவால்களை ஒருங்கிணைந்து கையாள நேட்டோவிற்குள்" இந்தளவிற்கு சிறந்த "ஒற்றுமையை, தயார்நிலையை மற்றும் தீர்மானகரமாக இருப்பதை" அவர் ஒருபோதும் பார்த்ததில்லை என்று ப்ரீட்லோவ் தெரிவித்தார். அது தொடருமென்பதில் அவர் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

எதார்த்தத்தில், வாஷிங்டனுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள், அனைத்திற்கும் மேலாக ஜேர்மனிக்கும் இடையிலான பதட்டங்கள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளன. அதன் சமீபத்திய பதிப்பில் Der Spiegel குறிப்பிடுகையில், “வாஷிங்டனில் உள்ள கடும் போக்கினர்கள், முதலும் முக்கியமுமாக ஐரோப்பாவில் உள்ள நேட்டோவின் தலைமை தளபதி, மாஸ்கோவுடன் மோதலைக் கிளறிவிட்டு வருவதன் மீது" பேர்லின் கோபமாக உள்ளது என்று அறிவித்தது.

"அபாயகரமான பிரச்சாரத்திற்காக" மற்றும் "துல்லியமற்ற, முரண்பாடான மற்றும் உண்மையற்ற" அறிக்கைகளை வெளியிடுவதற்காக ஜேர்மன் சான்சிலர் அலுவலகம் ப்ரீட்லோவை விமர்சித்தது.

அரசியல் விவகாரங்களில், ப்ரீட்லோவ் மிகவும் புத்திசாலித்தனமாகவும், அரைகுறையாகவும் தன்னைத்தானே வெளிப்படுத்துகிறாரோ என்று நான் நினைக்கிறேன்,” இது வெளியுறவு-கொள்கை நிபுணர் சமூக-ஜனநாயக கட்சியின் நெய்ல் அனென் கூறியது. "மிகவும் கவனத்துடன் நேர்மறையாக பார்ப்பதற்குரிய சரியான நேரமென நாங்கள் கருதும் ஒரு துல்லியமான தறுவாயில்,” அதற்கு மாறாக நேட்டோவோ "உக்ரேனிய பிரச்சினையில் மீண்டும் மீண்டும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு மோதலைக் குறித்து பேசி வருகிறது.”

Der Spiegel செய்தியின்படி, அமெரிக்க-ஜேர்மன் பிரச்சினை "அடிப்படையில் ஏனென்றால் அட்லாண்டிக் கடலுக்கு அப்பாலுள்ள பங்காளிகள் வேறுபட்ட நோக்கங்களைக் [கொண்டுள்ளனர்] என்பதனால் ஆகும்... ஜேர்மன்-பிரெஞ்சு முனைவு [மின்ஸ்க் சமாதான உடன்படிக்கையைக் குறிக்கும் ஒரு குறிப்பு] உக்ரேனிய நிலைமையை ஸ்திரப்படுத்த நோக்கம் கொண்டிருக்கின்ற நிலையில், அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள கழுகுகளுக்கோ அது ரஷ்யா குறித்த பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் அப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் செல்வாக்கைப் பின்னுக்குத் தள்ள விரும்புகின்றனர் என்பதோடு, புட்டினின் ஆட்சியை நிலைகுலைக்க விரும்புகின்றனர். ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதே அவர்களின் இலட்சியக்கனவாக உள்ளது.”

ஜேர்மன் ஏகாதிபத்தியம் உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தது, அது நேட்டோ கட்டமைப்பிற்குள் மீள்ஆயுதமேந்துவதற்கான மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இராணுவரீதியில் அதன் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை பின்தொடர்வதற்கான அரசியல் நிலைமைகளை உருவாக்க அந்நெருக்கடியைப் பயன்படுத்தியது. ஆனால் உக்ரேன் மோதல் தீவிரமடைந்தால், அது நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரேயடியான போராக விரிவடையும் நிலையில், அதற்கு ஜேர்மன் இராணுவம் இன்னும் தயாராகவில்லையென அது அஞ்சுகிறது.