சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The Myth of Ordinary Germans: A Review of Daniel Goldhagens Hitlers Willing Executioners1

சாதாரண ஜேர்மனியர்கள்என்னும் கட்டுக்கதை: டானியல் கோல்ட்ஹாகனின் ஹிட்லரது தன்னார்வமிக்க தண்டனை நிறைவேற்றுர்கள் புத்தகத்தின் ஒரு திறனாய்வு

Use this version to printSend feedback

ஹிட்லரின் மூன்றாம் ரைய்ஷ் (நாஜி ஆட்சி, 1933-45) வீழ்ச்சியடைந்து அரைநூற்றாண்டுக்கும் அதிகமாய் கடந்து விட்டது, ஆனாலும் அதன் பயங்கரமான மற்றும் மிருகத்தனமான குணாம்சத்தின் மரபுத்தொடர்ச்சியின் பிடிகளில் இருந்து வெளிவருவதற்கு மனிதகுலம் இன்னமும் போராடியவண்ணம் தான் இருக்கிறது. 1945 இலையுதிர் காலத்தில் நாஜி படுகொலை முகாம்களைத் திறந்து பார்த்தபோது அம்பலமான பாரிய மக்கட்படுகொலை காட்சிகள் மனித நனவில் இருந்து ஒருபோதும் அழிக்கப்படாது. ஆனால் அவுஸ்விட்ஸ், ரெப்லிங்கா, பேர்கன் பெல்சன், பூஹென்வால்ட் மற்றும்      டாகோவ் ஆகிய இடங்களில் மனிதகுலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை மறக்காமலிருந்தால் மட்டும் போதாது. இந்தக் குற்றங்களது அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்து வைத்திருப்பதும் அதேஅளவுக்கு இன்றியமையாததாகும்.  

இந்த இடத்தில் ஒரு பெரிய பிரச்சினையை நாம் எதிர்கொள்கிறோம்: யூத இனப்படுகொலை (Holocaust) குறித்து நிறைய எழுதப்பட்டிருந்தாலும் பேசப்பட்டிருந்தாலும் கூட, அது ஒரு விநோதமான தெளிவில்லாத ஒரு நிகழ்வாய் தான் தொடர்ந்து தென்பட்டுக் கொண்டிருக்கிறது. யூதஇனப்படுகொலை குறித்து அனுபவரீதியான தகவல்கள் ஏராளமாய் திரட்டப்பட்டிருக்கின்றன என்பது உண்மையே. நாஜிக்கள் தமது “இறுதி”த் தீர்வை, ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்களது படுகொலையை, எவ்வாறு ஒழுங்கமைத்து நிறைவேற்றினார்கள் என்பது குறித்த விரிவான தகவல்களும் நம்மிடம் இருக்கிறது. இருந்தும் கூட யூதஇனப்படுகொலையை புரிந்து கொள்வதற்கு மையத்தானமாக இருக்கின்ற விடயங்களான அதன் வரலாற்று மூலங்கள், அரசியல் காரணங்கள், மற்றும் இறுதியாய், இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் அதற்குரித்தான இடம் ஆகியவை அபூர்வமான விதிவிலக்குகளுடன், மிக அரிதாகவே கையாளப்பட்டு வந்திருக்கின்றன. இது உண்மையிலேயே சகிக்க முடியாத ஒரு விடயமாகும். “அது ஏன் நடந்தது?” என்ற யூதஇனப்படுகொலை எழுப்புகின்ற மிக அடிப்படையான ஒரு கேள்விக்கு விடையைக் கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான ஒன்றாகிறது.

’யூதஇனப்படுகொலை ஒரு பகுத்தறிவான விளக்கத்தை எளிதாக மறுதலித்துவிடக்கூடிய அளவுக்கு ஒரு மிகப்பயங்கரமான நிகழ்வு’ என்ற வாதத்தைக் கொண்டுதான் பெரும்பாலும் யூதப்படுகொலையானது முன்வைக்கப்படுகிறது. அடோர்னோ சொன்னது போல, அவுஸ்விட்ஸ் க்குப் பின்னர் கவிதை எழுதுவதெல்லாம் இனியும் சாத்தியமற்றதாக இருந்ததென்றால், மனிதனின் சமூக செயல்பாட்டை அல்லது, இன்னும் துல்லியமாக சொல்வதென்றால், சமூகவிரோத செயல்பாட்டை உந்துகின்ற சக்திகளைப் புரிந்து கொள்வதற்கான வரலாற்றாசிரியரின் திறனில் அதிகமான நம்பிக்கை வைப்பதும் கூட இனியும் சாத்தியமில்லாமல் போயிற்று என அனுமானிக்கப்பட்டது. இத்தகையதொரு ஒரு ஆழம்காணமுடியாத தீமை இருந்த நிலையில் வரலாற்று விஞ்ஞானமும் அரசியல் தத்துவமும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனவாய் பார்க்கப்பட்டன.  

யூதஇனப்படுகொலையும் விரக்தியும்

ஆகவே இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு, மூன்றாவது ரைய்ஷ் இன் வருகைக்கு முந்தைய ஐரோப்பிய மற்றும் ஜேர்மன் சமூகத்தின் பொருளாதார அடித்தளங்கள், வர்க்கக் கட்டமைப்பு மற்றும் அரசியல் போராட்டங்கள் ஆகியவை குறித்த ஒரு ஆய்வில் இருந்து பெறத்தக்க மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றும் இருப்பதில்லை. அதிகபட்சம் போனால் இத்தகைய விஞ்ஞானபூர்வ-சடவாத அணுகுமுறையானது, மனிதனின் ஆன்மா அல்லது எண்ணத்தில் புதைந்திருக்கக் கூடிய தீய சக்திகளானவை மனிதநாகரிகத்தின் தார்மீக கட்டுப்பாடுகளை மீறிப்பாய்ந்து, தவிர்க்கமுடியாமல் கட்டாயமாக அதற்கு வழிசெய்கின்ற தற்செயலான சமூக அமைப்பு குறித்த பின்புல விவரங்களுக்கு அதிகமாய் வேறொன்றையும் வழங்கி விட முடியாது.

மனித சூழல் குறித்த இந்தத் துயரமான கண்ணோட்டத்தை ஊக்குவித்து 1950களில் ஒரு புனைகதை எழுதப்பட்டது. வில்லியம் கோல்டிங்கின் லார்டு ஆஃப் தி ஃபிளைஸ் (Lord of the Flies) புனைகதையை உங்களில் பலர் நிச்சயம் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். காட்டுமிராண்டித்தனம் தான் மனிதகுலத்தின் இயல்பான நிலை என்று அது வாதிட்டது. நாகரிகத்தின் இயல்பான தளைகளில் இருந்து சாதாரண பள்ளிச் சிறுவர்களின் ஒரு குழுவை விடுவித்துப் பாருங்கள், அவர்கள் ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே கொலைசெய்யும் மிருகத்தனமான ஒரு நிலைக்குத் திரும்பி விடுவார்கள். மனிதகுலத்தின் மீதே அவநம்பிக்கை கொள்கின்ற இந்த படைப்பு இரண்டாம் உலகப் போரின் அனுபவங்களில் இருந்து கோல்டிங்கால் (Golding) வரைந்தெடுக்கப்பட்ட முடிவுகளில் இருந்தே தோற்றம் பெற்றிருந்தது. பின்னர் அவர் எழுதினார், “அந்த வருடங்களைக் கடந்து வந்த எவரும், ஒரு தேனீ தேனை உருவாக்குவது போல மனிதன் தீமையை உருவாக்குகிறான் என்பதைப் புரிந்து கொள்ளாமலிருந்தால், அவர்கள் ஒன்று குருடராயிருக்க வேண்டும் அல்லது தலையில் கோளாறுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.”2

Lord of the Flies புனைகதையின் பிரபலமானது இரண்டாம் உலகப் போரின் பயங்கரங்களால் தூண்டப்பட்டிருந்த அதிர்ச்சி மற்றும் விரக்தியை பிரதிபலித்தது. போருக்குப் பின் எழுந்த அரசியல் உறவுகளால் இந்த மனோநிலை மேலும் வலுவூட்டப்பட்டது. சொல்லப் போனால் மூன்றாம் ரைய்ஷின் தன்மை குறித்த விவாதத்தில் ஈடுபடுவதென்பது 1945 க்கு முன்பிருந்த எப்போதையும் காட்டிலும் அதற்குப் பிந்தைய காலத்தில் தான் இன்னும் கடினமாகி விட்டிருந்தது. பனிப் போரின் பிற்போக்குத்தனமான அரசியல் சூழலில், பாசிசத்திற்கும் நவீன முதலாளித்துவத்திற்கும் இடையிலான உறவு குறித்து தீவிரமாய் சிந்திப்பதென்பது, குறிப்பாக அமெரிக்காவில், இனிப் பொருத்தமற்றது என்பதாய் கருதப்பட்டது.

முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பிய பாசிசத்தின் எழுச்சி என்பது பாரிய சோசலிச தொழிலாளர் இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட புரட்சிகர அபாயங்களுக்கு முதலாளித்துவ சமூகத்தின் ஒரு நேரடி விடையிறுப்பு என்பதை 1930களில், அரசியல் அறிவுபெற்றோரும் வர்க்க நனவுள்ளோரும் புரிந்து கொண்டனர். கோபாவேசம் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கங்களை, குட்டி முதலாளித்துவத்தை, முதலாளித்துவத்தின் நலன்களின் பேரில் சோசலிச தொழிலாளர் இயக்கத்திற்கு எதிராக எதிர்ப்புரட்சிகரமாக அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதே பாசிசத்தின் சாரமாய் இருந்தது என்பதை முசோலினியின் இத்தாலி, ஹிட்லரின் ஜேர்மனி மற்றும் பிராங்கோவின் ஸ்பெயின் ஆகிய உதாரணங்கள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டின. பாசிசம் அதிகாரத்திற்கு வந்த இடங்களில் எல்லாம், தொழிலாள வர்க்கம் ஒரு ஒழுங்கமைந்த அரசியல் மற்றும் சமூக சக்தியாக இருப்பதில் இருந்து ஒழிக்கப்பட்டது.

1930களில் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது, முதலாளித்துவத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான உறவு மட்டுமன்று. நடுத்தர வர்க்கங்களை சீரழித்து அவற்றை பாசிசத்தின் கரங்களில் தள்ளியிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியானது யூதர்களை சரீர ரீதியாக அழித்தொழிக்க அச்சுறுத்திக் கொண்டிருந்தது என்பதை சோசலிஸ்டுகள் மீண்டும் மீண்டும் எச்சரித்திருந்தனர்.

லியோன் ட்ரொட்ஸ்கி 1940 இல் எழுதியவாறாய்:

வெளிநாட்டு வர்த்தகம் நலிவுற்று உள்நாட்டு வர்த்தகமும் வீழ்ச்சி காணுகின்ற அதே காலகட்டம் தான் பேரினவாதம், இன்னும் குறிப்பாக யூத-விரோதம், அசுரத்தனமாய் தீவிரமடைகின்ற காலகட்டமாகவும் இருக்கிறது.   முதலாளித்துவம் தனது எழுச்சி சகாப்தத்தில், யூதர்களை யூதர்சேரிகளில் இருந்து வெளிக்கொணர்ந்து அவர்களை தனது வர்த்தக விரிவாக்கத்திற்கான ஒரு சாதனமாய் பயன்படுத்தியது. இன்று சிதைவடைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகமோ யூத மக்களை அத்தனை வழிகளிலும் நசுக்கிப்பிழிய முனைகிறது; இரண்டு பில்லியன் பேர் வசிக்கும் உலகத்தில் பதினேழு மில்லியன் மக்களுக்கு, அதாவது 1 சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கு, பூமியில் ஒரு வசிப்பிடம் காண இனியும் முடியாதிருக்கிறது! பரந்த நிலப் பரப்பும் தொழில்நுட்ப அற்புதங்களும் மனிதனுக்கு விண்ணையும் மண்ணையும் வென்றுதந்திருப்பதற்கு மத்தியில், முதலாளித்துவமானது நமது பூமியை ஒரு நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக மாற்றி விட முடிந்திருக்கிறது.3

பாசிசத்தின் உண்மையான மூலங்கள், வர்க்க அடிப்படைகள் மற்றும் அரசியல் நோக்கங்கள் ஆகியவை குறித்த ஒரு வெளிப்படையான விவாதமென்பது அமெரிக்க அரசாங்கத்தின் நடைமுறை அரசியல் நலன்களால் சூழப்பட்டிருந்தது என்ற மட்டத்திற்கு, ஒரு புத்திஜீவித வெற்றிடம் உருவாக்கப்பட்டு அது பாசிசம், மூன்றாம் ரைய்ஷ் மற்றும் யூதஇனப்படுகொலை ஆகியவை குறித்த வரலாறற்ற மற்றும் முற்றிலும் விஞ்ஞானபூர்வமற்ற கருத்தாக்கங்கள் ஊடுருவ ஊக்குவித்திருந்தது. இது வெகுஜன நனவிற்கான நெடிய பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. யூதஇனப்படுகொலையானது அதன் வரலாற்று மற்றும் அரசியல் உள்ளடக்கத்திலிருந்து இருந்து பிரித்தெடுக்கப்பட்டு புரிந்து கொள்ள முடியாததாக ஆக்கப்பட்டிருந்தது. யூதஇனப்படுகொலை பற்றிய பொது நனவென்பது சுரண்டும்வகையான பரபரப்பூட்டல்தனம், மலிவான தார்மீக வெற்றுரைகள் மற்றும் இயலாமைமிக்க கைப்பிசைதல்கள் ஆகியவற்றால் தான் மேலும் மேலும் ஆதிக்கம்செலுத்தப்பட்டதாக இருந்தது.

யூதஇனப்படுகொலையில் இருந்து ஏதேனும் படிப்பினையை பெறுவதாக இருந்தால், மனிதன் சிறிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் கூட விபரிக்கமுடியாத மிருகத்தனத்தின் திறனைகொண்டிருக்கின்றான் என்பதையும், ஆறு மில்லியன் மனிதர்கள் ஈவிரக்கமற்ற வகையில் படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னரும் மனிதனின் முன்னேற்றத்திலும் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதில் நம்பிக்கை கொள்வதென்பது பிரமையே என்பதையும் தான் பெற்றுக்கொள்ள முடியுமாம். இந்த வகையில் யூதஇனப்படுகொலையானது போருக்குப் பின்னர் இருந்த நிலைமையை நியாயப்படுத்துவதற்கும் ஒரு மேம்பட்ட உலகத்திற்கான போராட்டத்தை நசுக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் விஞ்ஞானபூர்வ மதிப்புமிக்க எந்தப் படைப்புகளுமே உருவாக்கப்படவில்லை என்று நான் கூற வரவில்லை. நாஜி ஆட்சி மற்றும் யூதஇனப் படுகொலையின் மாறுபட்ட அம்சங்கள் மீதான அற்புதமான தனிநூல்களை உருவாக்கிய ஏராளமான வரலாற்றாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய அற்புதமான வரலாற்றாசிரியர்களின் ஆராய்ச்சியானது பொது நனவிற்கு அரிதாகத் தான் எட்டியிருக்கிறது, அவர்களது படைப்புகள் பொதுவாக, இத்துறையின் நிபுணர்களால் மட்டுமே, அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தான், பின் தொடரப்படுபவையாக இருக்கின்றன.

நவீன அரசியல்-வரலாற்று நனவின் தாழ்ந்த நிலை பற்றி கவனத்தை ஈர்ப்பதென்றால், லியோன் ட்ரொட்ஸ்கி தான் வாழ்ந்த காலத்தின் வேறெவரையும் விட ஜேர்மன் பாசிசத்தின் அபாயத்தையும் அழிவுகரமான ஆற்றலையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்த நிலையிலும், நாசிசம் தொடர்பாக 1930க்கும் 1934க்கும் இடையில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியவற்றில் இருந்த எந்தக் குறிப்பையுமே இன்றைய வரலாற்று ஆய்வுப்படைப்புகளில் காண்பதென்பது மிக அரிதானதாக இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டுக் காட்டுவதற்கு என்னை அனுமதியுங்கள்.

கோல்ட்ஹாகனும் ஜேர்மனியர்களும்

அடிப்படையான தப்பெண்ணங்களையும் தவறான கருத்தாக்கங்களையும் சவால் செய்யாமல் விட்டுவிடுகின்ற, அல்லது உண்மையில் அவற்றுக்கு வலுவூட்டுவதாக இருக்கின்ற படைப்புகள் தான் மிகப்பெரும் கவனத்தை ஈர்ப்பவையாக ஆகின்றன. டானியல் கோல்ட்ஹாகனின் ஹிட்லரின் தன்னார்வமிக்க தண்டனை- நிறைவேற்றுனர்கள்: சாதாரண ஜேர்மனியர்களும் யூதப்படுகொலையும் (Hitler’s Willing Executioners: Ordinary Germans and the Holocaust) என்ற மிகவெற்றிகரமானதும் முழுவதும் பரிதாபகரமானதுமான புத்தகமும் இந்த வகையின் கீழே வருவதாகும்.

கோல்ட்ஹாகன் புத்தகத்தின் அடிப்படையான கருப்பொருளை எளிதாக சுருக்கி விடலாம். அதாவது, யூதஇனப்படுகொலைக்கான காரணத்தை ஜேர்மனியர்களின் மனோநிலையிலும் நம்பிக்கையிலுமே காணலாம்; ஜேர்மனிய மக்கள் ஒரு பரந்த தேசியஅளவிலான கூட்டமாக, பிரத்யேகமானதொரு ஜேர்மன் யூத-விரோத சித்தாந்தத்தால் உந்தப்பட்டிருந்த நிலையில், யூதஇனப்படுகொலை என்ற ஒரு ஜேர்மனிய முயற்சியை நடத்தினர். யூதர்களை திட்டமிட்டு கொலை செய்வதென்பது ஒரு தேசிய பொழுதுபோக்காகி, அதில் சந்தர்ப்பம் கிட்டிய அத்தனை ஜேர்மனியர்களுமே ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று வந்திருந்தனர்.

ஜேர்மனியர்கள் யூதர்களைக் கொன்றதன் காரணம் அவர்கள், ஜேர்மானியர்களாக, கட்டுப்படுத்த முடியாத ஜேர்மனிய யூத-விரோதத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர். யூதர்கள் மீதான வெறுப்புத்தான் ஜேர்மனிய மக்களின் உலகளாவிய கண்ணோட்டமாக, உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகப் பார்வை ஆக (weltanschauung) இருந்தது.

ஆட்சியின் அரசியல் எல்லாம் இரண்டாந்தர முக்கியத்துவத்தையே கொண்டிருந்தது என்கிறார். கொலைகாரர்களைக் குறிக்கும்பொழுது “நாஜிக்கள்” மற்றும் “SS நபர்கள்” போன்ற வார்த்தைப் பதங்கள் எல்லாம் பயன்படுத்தப்படக்கூடாத “பொருத்தமற்ற முத்திரைகள்” என்று கோல்ட்ஹாகன் வலியுறுத்துகிறார். மூன்றாம் ரைய்ஷிற்கும், யூதர்கள் கொல்லப்பட்டதற்கும் இடையிலான ஒரே முக்கிய காரணகாரியமான தொடர்பு என்னவென்றால் அது ஜேர்மானியர்களை, ஜேர்மானியர்களாக, ஜேர்மானிய நம்பிக்கைகளுக்கு தக்கபடி செயல்பட அனுமதித்தது என்பது தான் என்று கோல்ட்ஹாகன் வலியுறுத்துகிறார்.

கோல்ட்ஹாகன் எழுதுகிறவாறாக:

யூதஇனப்படுகொலையில் ஈடுபட்ட ஜேர்மனியர்களுக்கு “ஜேர்மானியர்கள்” என்பது மட்டுமே மிகப் பொருத்தமான பெயராக, சொல்லப் போனால் உரிய பொதுப் பெயராக இருக்கும். ஜேர்மனியின் பேரிலும் அதன் மக்களுக்கு உயர்ந்த தலைவராக இருந்த அடோல்ஃப் ஹிட்லரின் பேரிலும் செயல்பட்ட ஜேர்மானியர்கள் தான் அவர்கள்.

கோல்ட்ஹாகனின் திகைக்க வைக்கும் சிந்தனைப் பாய்வில் இருந்து கவனம் சிதறி விடக்கூடாது என்பதால், ஹிட்லரே ஒரு ஆஸ்திரியர் என்ற உண்மையிலோ, அல்லது அவரது இனவாதத் தத்துவங்கள் எல்லாம் Gobineau என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபு ஒருவரது எழுத்துக்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை என்ற உண்மையிலோ, அல்லது அவரது அரசியல் நாயகனான முசோலினி ஒரு இத்தாலியர் என்ற உண்மையிலோ, அல்லது அவரது தலைமை சித்தாந்தவாதியான ஆல்ஃபிரட் ரோசன்பேர்க் சாரிச ரஷ்யாவின் ஆளுகையில் இருந்த ஒரு பால்டிக் மாகாணத்தில் இருந்து வந்தவர் என்ற உண்மையிலோ, அல்லது ஹிட்லரின் மிக நெருங்கிய தோழரான ருடோல்ஃப் ஹெஸ் எகிப்தில் பிறந்தவர் என்ற உண்மையிலோ நான் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை.  

இத்தகைய சங்கடமான முரண்பாடுகளினது விளைவுகளை பற்றி சீர்தூக்கிப்பார்த்துக் கொண்டிருப்பதை காட்டிலும், கோல்ட்ஹாகன் முடிவாக என்ன சொல்ல வருகிறார் என்பதற்குச் செல்லலாம்:

யூதவிரோதமானது பல ஆயிரம் “சாதாரண” ஜேர்மனியர்களை யூதர்களைக் கொல்ல செய்ய நகர்த்தியது, இன்னும் மில்லியன் கணக்கானோரும் வேறுவிதமாக கையாளப்பட்டிருக்காவிட்டால் அதே பொருத்தமான இடத்திற்கு நகர்த்தப்பட்டிருப்பர். பொருளாதாரக் கடினநிலை அல்ல, ஒரு சர்வாதிபத்திய அரசின் பலவந்தமான வழிமுறைகள் அல்ல, சமூக உளவியல் அழுத்தங்கள் அல்ல, உளவியல் நெருக்கடிகள் அல்ல, மாறாக யூதர்கள் குறித்து ஜேர்மனியில் பல தசாப்தங்களாக நிலவி வந்த சிந்தனைகளே ஆயுதங்களின்றி நிராயுதபாணிகளாய் இருந்த யூத ஆண் பெண் மற்றும் குழந்தைகளை ஆயிரக்கணக்கில் திட்டமிட்டு ஈவிரக்கமின்றி கொல்வதற்கு சாதாரண ஜேர்மனியர்களை தூண்டியது.5 

யூத-விரோதம் என்பது ஜேர்மானியர்களின் உலக பார்வையின் ஒரு ஒருங்கிணைந்த, உண்மையில் முதன்மையான, தன்னனுபவாத அறிதலின் ஒரு உட்கூறான ஒரு விடயமாகும் என்று காண்ட் வாத அறிவாதார முறையியலின் ஒரு கொச்சை வடிவத்தை பயன்படுத்தி கோல்ட்ஹாகன் மீண்டும் பின்வருமாறு வாதாடுகின்றார்: “யூதவிரோத கோட்பாடு” ”ஜேர்மனியில் அடிப்படையாக எவராலும் சவால் செய்ய முடியாத ஒன்றாக இருந்தது” என்று அவர் எழுதுகிறார். 6

கோல்ட்ஹாகனின் வாதங்கள் எத்தனை தூரத்திற்கு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறித்து சற்று பின்னர் ஆராய்வேன். முதலில் அவரது சிந்தனை மற்றும் பகுப்பாய்வு வழிமுறை குறித்து சில கருத்துப் பதிவீடுகளைச் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு சிக்கலான பல்பரிமாண எதார்த்தத்தை, மிகவும் பரந்த, ஒழுங்கற்ற மற்றும் ஒரு-பரிமாண வரையறைகளைக் கொண்டு எளிமைப்படுத்துகின்ற போக்கே பொதுவழக்கிலுள்ள சிந்தனையின் மிகப் பொதுவான அம்சமாக இருப்பதாகும். விஞ்ஞானபூர்வ சிந்தனையோ ஒவ்வொரு நிகழ்வுப்போக்கிலும் உள்ளடங்கியுள்ள என்னென்ன வித்தியாசமான மற்றும் எதிர்முரணான கூறுகளின் பரஸ்பர இடையுறவை அடையாளம் காணவும் ஆராயவும் முனைவதாகும். இது விஞ்ஞானியின் மூளையில் பிரதிபலிக்கப்படுகின்ற எதார்த்தத்தின் சிக்கலான தன்மையை, அதாவது முரணியல்பை, துல்லியமாக வெளிப்படுத்துகின்ற கருத்துருக்களை அபிவிருத்தி செய்ய முனைகிறது.  

ஆனால் மறுபக்கத்தில் பொதுவழக்கிலுள்ள சிந்தனையோ, தான் பகுப்பாய்வதாக அனுமானித்துக் கொள்கின்ற நிகழ்வுப்போக்கின் கட்டமைப்பில் அடங்கியிருக்கும் அத்தியாவசியமான உள் முரண்பாடுகளை உதாசீனப்படுத்தும் கூரறிவற்ற பொதுமைப்படுத்தல்களில் இறங்குகிறது. மெய்யியலில் இத்தகைய வெற்று பொதுமைப்படுத்தல்கள் அருவமான அடையாளங்களாக, அதாவது அனைத்து உள்முக வித்தியாசங்களனைத்தும் அகற்றப்பட்ட அடையாளங்களாக அறியப்படுகின்றன. வார்த்தையின் மோசமான அர்த்தத்தில்தான் அவை அருவமானவை எனலாம். ஏனென்றால் அவை எதார்த்தத்தின் பூரணமற்ற சிந்தனைப்பிம்பங்களே: சடரீதியான உலகமானது இதுபோன்ற உள்முக வித்தியாசங்கள் அற்ற நிகழ்வுப்போக்கை கொண்டிருப்பதே கிடையாது. 

ஒவ்வொரு “அடையாளமுமே” தனக்குள் வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது. பொதுவழக்கிலுள்ள சிந்தனையின் அடிப்படையான பிழை எங்கே அமைந்திருக்கிறது என்றால், எதார்த்தத்தின் ஒரு விஞ்ஞானபூர்வமான மற்றும் உண்மையான பிரதிநிதித்துவத்தை வழங்கத் திறனற்ற இத்தகைய அருவமான அடையாளங்களுடனான மிகத்தாழ்வான தரத்தைகொண்ட ஒருதலைப்பட்சமான கருத்துருக்களைக் கொண்டு அது இயங்குகிறது.

“சாதாரண ஜேர்மானியர்கள்”

பேராசிரியர் கோல்ட்ஹாகனின் புத்தகத்தின் வழிமுறைப் பிழையானது அதன் தலைப்பிலேயே காணக்கூடியதாக இருக்கிறது: ஹிட்லரது தன்னார்வமிக்க தண்டனை-நிறைவேற்றுனர்கள்: சாதாரண ஜேர்மானியர்களும் யூதப்படுகொலையும். இங்கே ஒருகணம் நிற்போம். அதென்ன “சாதாரண ஜேர்மானியர்கள்?” ஒரு “அருவ அடையாளம்” என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை காண வேண்டுமென்றால், அது இதுதான். இது ரொம்பப் பரந்தவொரு வகைப்பாடு, ஏறக்குறைய அனைவருமே இதற்குள் வந்து விட முடியும், யூத தாய்-தந்தைகளை கொண்ட ஜேர்மானியர்கள் வேண்டுமானால் இதில் இருக்கமாட்டார்கள் என்று கருதலாம். எப்படிப் பார்த்தாலும், எந்தவொரு குறிப்பிட்ட ஜேர்மானியரையும் எது “சாதாரண” ஜேர்மானியராக ஆக்குகிறது? ஒரு சுற்றுபருத்த உடலும், பதப்படுத்தப்பட்ட மாமிச உணவு (knockwurst) மற்றும் ஊறவைக்கப்பட்ட இறைச்சி (sauerbraten) உண்ணுவதிலும் விருப்பமுள்ளவர்களா? இளம்பொன்நிற முடி, நீலக் கண்கள் மற்றும் நிர்வாண சூரியக் குளியலுக்கான விருப்பமுள்ளவர்களா? எளிதில் புரிந்துகொள்ள முடியாத மெய்யியல் பேசும் திறமையும் 300 இறாத்தல் நிறையுள்ள வாக்னரின் உச்சஸ்தாயின் மீதான பேரார்வமுமா? இத்தகைய முட்டாள்தனமான மற்றும் தொடர்பில்லாத ஒரேவகைகளின் மீது கட்டி எழுப்பப்பட்டதான ஒரு கருத்துருவானது புறநிலை எதார்த்தத்தின் அறிந்துகொள்ளலுடன் எந்த விஞ்ஞானபூர்வமான மதிப்பீடையும் கொண்டிருக்க முடியாது. 

ஆனால் நமது வரையறைக்கு சற்று கூடுதல் கவனமான சமூகவியல் குணாதிசயங்களை நுழைக்க நாம் முனைவோமானால் உடனடியாக ”சாதாரண” என்ற கருத்தாக்கத்தின் மதிப்பற்ற தன்மை வெளிப்படையாக தெரிந்துவிடும். 1933 இல் ஜேர்மன் சமூகம் ஒரு சிக்கலான வர்க்க கட்டமைப்பை கொண்டிருந்தது. ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த சமயத்தில் “சாதாரண ஜேர்மானியராக” இருந்தது ஒரு தொழிற்சாலை தொழிலாளியா, ஒரு நொடித்த கடைவியாபாரியா, உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு வெறுப்பேறிய உறுப்பினரா, பெரும் கடனில் தத்தளித்த ஒரு விவசாயியா, கிழக்கு பிரஷ்ய நிலப் பிரபுவா அல்லது ஒரு தொழிற்சாலை அதிபரா?

பல்வேறு சமூகத் தட்டுகளையும் சேர்ந்த இந்த அத்தனை கூறுகளையும் “சாதாரண ஜேர்மானியர்கள்” என்று ஒன்றாக இணைத்துவிட்டால், ”சாதாரண” என்ற கருத்தாக்கம் 1933 இல் இருந்தவாறாக ஜேர்மன் சமூகத்தின் உள்முக முரண்பாடுகளையும் மோதல்களையும் பிரதிபலிக்கவில்லை என்பதே அதன் பொருளாக இருக்கும். ஆக, கோல்ட்ஹாகன் தனது வாசகர்களுக்கு தருவது ஜேர்மன் சமூகம் 1933 இல் உண்மையாக எப்படி இருந்தது என்பதன் மீதான ஒரு விஞ்ஞானபூர்வமான ஆய்வினை அல்ல, மாறாக கூறுவதற்கு சங்கடமான விடயமான இனம் மற்றும் இரத்தத்தால் வரையறை செய்யப்படுகின்ற ஒன்றுபட்ட ஜேர்மானிய மக்கள் (German Volk) என்ற நாஜி கட்டுக்கதையை விமர்சனமற்று உறுதிப்படுத்துகின்ற, ஒரே இயல்புள்ள சமூகம் குறித்த கருத்துவாத சித்திரத்தையே அது வழங்குகிறது.

”சாதாரண ஜேர்மானியர்” என்ற கருத்தாக்கத்தை தனது ஒட்டுமொத்த பகுப்பாய்வுக்கும் அடிப்படையாக எடுத்துக் கொண்டு விட்ட பின்னர், இந்த ஒரே பல்லவியின் செல்தகைமையை கேள்விக்குட்படுத்தக் கூடிய எதுவொன்றையும் அல்லது எவரொருவரையும் தனது புத்தகத்தில் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் கோல்ட்ஹாகனுக்கு நேர்கிறது. அழிக்கமுடியாத யூதரை (Der ewige Jude) ஜேர்மானிய மக்களின் நிரந்தர எதிரியாகக் காட்டுகின்ற நாஜி பேயுருவிற்கு பதிலாக அழிக்கமுடியாத ஜேர்மானியரை (Der ewige Deutsche) யூத மக்களின் என்றென்றுமான மாறாத எதிரியாக காட்டுகின்ற பேயுருவை அவர் முன்வைக்கிறார்.

ஜேர்மானியர் மற்றும் யூதர் இடையிலான ஒரு நிலையான பிரிவினை என்பதைத் தவிர்த்து எந்தவித உள்ளார்ந்த வேறுபாடுகளும் இல்லாத ஒரு தேசமாக முன்நிறுத்தி விட்ட பின்னர், அதை உண்மையான எந்த வரலாறும் இல்லாத ஒரு தேசமாகக் காட்டும் நிர்ப்பந்தம் கோல்ட்ஹாகனுக்கு நேர்கிறது. ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு முந்தைய 100 ஆண்டுகளில் ஜேர்மன் அபிவிருத்தி கண்ட பாதையை தீர்மானித்திருந்த நிகழ்வுகள் மற்றும் நபர்கள் குறித்து ஏறக்குறைய எந்தக் குறிப்புமே இல்லை.

கோல்ட்ஹாகனின் புத்தகத்தில், சோசலிச இயக்கமென்பதே கண்ணுக்குப் புலப்படாததாக இருக்கிறது. 622 பக்கங்கள் இருக்கின்ற ஒரு புத்தகத்தில், கார்ல் மார்க்ஸ், பிரெடரிக் ஏங்கெல்ஸ், ஃபெர்டினாண்ட் லசால், ஆகுஸ்ட் பேபெல் அல்லது வில்ஹெம் லீப்னெக்ட் பற்றிய ஒரேயொரு குறிப்பும் கூட இல்லை. பிஸ்மார்க் ஆட்சியால் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட 1878-90 சோசலிச-எதிர்ப்புச் சட்டங்கள் குறித்து ஒரு வார்த்தையும் கூட இல்லை. வரலாற்றில் முதல் வெகுஜனக் கட்சியும் 1912 ஆம் ஆண்டிற்குள்ளாக ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருக்கைகளை வென்ற கட்சியுமாக இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் பெயர் போகிற போக்கில் குறிப்பிடப்படுகிறது. 1918 புரட்சி குறித்தோ அல்லது ஸ்பார்டகஸ் லீக் எழுச்சி குறித்தோ எந்தக் குறிப்புமில்லை.

இந்த தவிர்த்தல்கள் எல்லாம் ஒரு கவனம்தப்பியவையாகக் கூறி விட முடியாது. ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் வரலாற்று இருப்பானது, தனது ஒட்டுமொத்த தத்துவத்திற்குமான ஒரு மறுப்பை குறிப்பதாக இருப்பதால் கோல்ட்ஹாகன் அதனைக் கையாள இயலாமல் போய் விடுகிறது. ஆயினும், ஜேர்மன் சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியை ஆய்வு செய்யாமல், நவீன யூத-விரோதத்தின் தன்மையையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வது சாத்தியமில்லாததாகும்.

அரசியல்ரீதியான யூத-விரோதம்

யூதர்களிடத்தில் குரோதம் காட்டுவதென்பது ஒரு நவீன நிகழ்வுப்போக்கு அல்ல என்றபோது, அது ஜேர்மனியின் எல்லைக்கு மட்டும் உட்பட்டதல்ல என்பதையெல்லாம் சொல்லவும் தேவையில்லை. ஆனால் ஜேர்மனியில் மட்டுமல்லாது, ஏராளமான ஐரோப்பிய நாடுகளில், யூதவிரோதமென்பது ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த அரசியல் இயக்கமாக தோற்றம் பெற்றது பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக்கு முந்தைய மூன்றாவது ஆண்டில் தான். யூத-விரோத அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியானது நவீன தொழிற்துறை முதலாளித்துவத்தின் அபிவிருத்தியுடன் தொடர்பான சிக்கலான சமூக நிகழ்ச்சிப்போக்குகளில் வேரூன்றியிருந்தது என்பது மறுக்கவியலாதது.

தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கம் என்ற ஒரு புதிய மற்றும் பெரும் சக்திவாய்ந்த சமூக வர்க்கத்தின் எழுச்சி இவற்றில் மிக முக்கியமானதாகும். 1870களில், நிச்சயமாக 1871 பாரிஸ் கம்யூனுக்கு பின்னர் தான், சோசலிச சித்தாந்தத்தின் பெருகிய செல்வாக்குடன் ஒரு பாரிய தொழிலாள வர்க்கம் இருப்பதென்பது, முதலாளித்துவ நலன்களுக்கு ஒரு புரட்சிகர அச்சுறுத்தலாகத் திகழும் சாத்தியத்திறன் கொண்டுள்ளமை அடையாளம் காணப்பட்டிருந்தது.

இந்த அபாயத்திற்கான பதிலிறுப்பாக, சலுகைபடைத்த வர்க்கங்களான முதலாளித்துவ வர்க்கமும் அப்போதும் கணிசமான ஆதிக்கத்தை கொண்டிருந்த நிலவுடமை வர்க்கங்களும் அப்போதிருந்த சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான ஒரு வெகுஜன அடித்தளத்தை வளர்த்தெடுக்க முனைந்தன. விசித்திரப் புதிர் போன்ற வகையில், சோசலிச தொழிலாளர் இயக்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான வெகுஜன அடித்தளமானது, நவீன தொழிற்துறை அபிவிருத்தி நிகழ்ச்சிப்போக்குகளால் தொடர்ந்து தமது சமூக மற்றும் பொருளாதார நிலை பலவீனப்படுத்தப்படுவதைக் கண்ட நடுத்தர வர்க்கக் கூறுகளில் இருந்தே எழவிருந்தது.

ஜேர்மனியில், 1873 இல் ஒரு மிகப் பயங்கரமான பங்குச் சந்தைப் பொறிவு குறிப்பாக நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களது சேமிப்புகளை பெருமளவில் சூறையாடியதுடன் ஒரு கடும் மந்தநிலையின் உதயம் அறிவிப்பானது. பிஸ்மார்க்கின் தடையில்லா வாணிபம் மற்றும் அரசுத் தலையீடின்மை கொள்கைகளுக்கு எதிரான பரந்த மக்கள் மனோநிலை ஓரளவுக்குத் துரிதமாகவே அபிவிருத்தியாகியது. இந்த பங்குச் சந்தைப் பொறிவினைச் சூழ்ந்த மோசடிகளில் துரதிர்ஷ்டவசமாக கணிசமான எண்ணிக்கையிலான யூத ஊகவணிகர்கள் பங்குபெற்றிருந்ததானது நோக்குநிலையற்றிருந்த நடுத்தர வர்க்கங்களின் கோபத்திற்கு ஒரு கவனப்புள்ளியாக ஆகியது. இந்த சூழ்நிலையில், நவீன முதலாளித்துவத்தின் தீங்குகளுடன், யூதர்களை ஒப்பிட்டுநோக்குவது என்பது ஒரு புதிய அரசியல் முக்கியத்துவத்தை பெற்றது.

குட்டி-முதலாளித்துவ வெகுஜனங்கள் இத்தகைய பரப்புரைகளின் இலக்கானதற்கு நீண்டகாலமாய் இருந்து வந்திருந்த மதரீதியான தப்பெண்ணங்களும் வழிவகை செய்து தந்தன என்பது நிச்சயம். ஆனால் முதலாளித்துவ அபிவிருத்தியால் உருவாக்கப்பட்ட திட்டவட்டமான நிலைமைகள், இந்த தப்பெண்ணங்களை அதீத பிற்போக்குத்தனமான பாதைகளில் செலுத்தி அவற்றை ஒரு பயங்கரமான அழிவுகரமான சக்தியாக்கியது.

யூதர்களை முதலாளித்துவக் கொடுங்கொள்ளையின் உருவடிவமாகச் சித்தரித்த Otto Glagau, Rudolf Meyer மற்றும் Wilhelm Marr போன்ற யூத-விரோத எழுத்தாளர்களுக்கு, ஜேர்மன் மத்தியதர வர்க்கத்தின் (Mittelstand) வெறுப்பூறியிருந்த பிரிவுகளான சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் பதட்டத்தில் இருந்த தொழில்நிபுணர்கள் ஆகியோரிடத்தில் கணிசமான வாசகர்கள் கிடைத்தனர்.

ஜேர்மன் மத்தியதர வர்க்கத்தின் குழப்பமான முதலாளித்துவ எதிர்ப்பு மனோநிலைகளை யூதர்களுக்கு எதிரான கோபமாகச் செலுத்துவதற்கான முயற்சியானது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதையில் ஜேர்மன் யூதர்களது சமூக நிலை கணிசமாக மேம்பட்டதைக் கொண்டு வலுப்பெற்றது. வரலாற்றாசிரியர் ராபர்ட் விஸ்ட்ரிச் எழுதுவது போல, “1870களுக்குள்ளாக யூதர்கள், இன்னும் முழுமையாக முதலாளித்துவமயமடைந்திராத ஒரு சமூகத்தில் மிக உன்னதமான முதலாளிகளாகவும், இன்னும் முழுமையாக நவீனமடைந்திராத ஒரு தேசத்தின் புதுமையான நவீனமயமாக்குவோராகவும் காட்சியளித்தனர்.”7

விஸ்ட்ரிச் அளித்திருந்த புள்ளிவிவரங்களின் படி, 1880 இல் வங்கிகளிலும் மற்றும் பங்குச் சந்தைகளிலும் வேலை செய்து கொண்டிருந்த 22 சதவீத ஊழியர்கள் யூதர்களாய் இருந்தனர். ஜேர்மானிய மக்களில் ஒரு சதவீதத்திற்கு மிகாத அளவில் யூதர்கள் இருந்தவொரு சமயத்தில், வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களது உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களில் 43.25 சதவீதத்தினராக அவர்கள் இருந்தனர். பேர்லினில் Bleichrder, ஹம்பேர்க்கில் Warburg, கொலோனில் Oppenheim மற்றும் ஃபிராங்பேர்ட்டில் Rothschild இதுபோன்று ஜேர்மனியின் சில மிகப்பெரும் வங்கிகள் யூதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 1900களின் ஆரம்பவாக்கில், புகழ்பெற்ற பொருளாதார அறிஞரான வேர்னர் ஸோம்பார்ட் குறிப்பிடுகையில், ஜேர்மன் தொழிற்துறையின் பத்து முக்கிய பிரிவுகளில் உள்ள இயக்குநர் குழு உறுப்பினர்களில் 25 சதவீதம் பேர் யூதர்களாய் இருந்தனர் என்று குறிப்பிட்டுக் காட்டினார்.

தேர்ச்சிமிக்க வேலைத்துறைகளில் பிரதான இடம் பிடித்திருந்ததும் ஜேர்மன் யூதர்களது வெற்றியில் இன்னுமொரு முக்கியமான அம்சமாக இருந்தது: 1882 ஆம் ஆண்டு வாக்கில், மருத்துவர்களில் 11.7 சதவீதத்தினரும், பத்திரிகையாளர்களில் 8.6 சதவீதத்தினரும் ஒட்டுமொத்த வழக்கறிஞர்களில் 7.9 சதவீதத்தினரும் யூதர்களாய் இருந்தனர். இந்த எண்ணிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றவாறு, யூத இளைஞர்கள் கல்லூரிகளில் பெரும் எண்ணிக்கையில் பங்குபெற்றனர்.

இந்த வெற்றியானது, யூதப் போட்டியை வெறுத்த ஜேர்மன் மத்தியதர வர்க்கத்தின் பாதுகாப்பற்ற உணர்வுக்கு யூத-விரோத கோரிக்கை விடுவதற்கு மேலதிக முகாந்திரங்களை வழங்கியது.

ஆரம்பகாலத்தில், யூதஎதிர்ப்பு மனோநிலைகள் யூதர்களை அவர்தம் மதமும் பழக்கவழக்கங்களும் அவர்களை பொது மக்களில் இருந்து தனித்துப் பிரித்து வைத்திருந்தது ஒதுக்கி வைப்பதாகப்படுகின்ற நடவடிக்கைகளில் கவனம் குவித்திருந்தது. இப்போது புதிய அரசியல் யூத-விரோதமானது யூதர்கள் தேசிய வாழ்விற்குள் அதீதமாய் ஒன்றுபடுவதற்கு எதிர்ப்புக் காட்டியது; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிந்தைய காலத்து குமுறல்களாய் இருந்த போலிவிஞ்ஞானபூர்வ இனவாத தத்துவங்களுடன் இந்த எதிர்ப்புகள் ஒட்டவைக்கப்பட்டன. யூத மூலதனத்துக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான ஆவேசமிக்க அழைப்புகளுடன் யூத மேலாதிக்க அபாயத்திற்கு எதிராக ஜேர்மானிய இனத்தை பாதுகாப்பதற்கான வெறிகொண்ட கோரிக்கைகளும் சேர்க்கப்பட்டன. “ ‘யூதத்துக்கும்’ ஜேர்மானியத்திற்கும் இடையிலான போராட்டம் ஒரு பழையநிலைக்கு திரும்பவியலாத ‘உலக-வரலாற்றுத் தலைவிதி’ ” என்று வில்ஹெம் மார் அறிவித்தார்.8

அரசியல் யூத-விரோதமானது ஜேர்மனியுடன் மட்டுப்பட்டு நின்றுவிடவில்லை. அதேபோன்றதொரு நிகழ்வுப்போக்கு பிரான்சிலும் அபிவிருத்தியானது. யூதஎதிர்ப்பை முன்மொழிந்தவர்கள் வளர்ந்து வந்த சோசலிசப் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக மட்டுமன்றி தாராளவாத ஜனநாயகத்தின் அனைத்து கூறுகளுக்கு எதிராகவும் கூட பரந்த மக்கள் ஆதரவை அணிதிரட்டுவதற்கான திறம்பட்ட வழிமுறையாக அதனைக் கண்டனர். சோசலிசத்துக்கான ஈர்ப்புசக்தியை அடித்தளமாக கொண்டிருந்த முதலாளித்துவ தொழிற்துறைமயமாக்கம் என்ற நிகழ்ச்சிப்போக்கினால் உருவாக்கப்பட்டிருந்த வர்க்கப் பிரிவினைகளை கடந்து, யூத-விரோதத்தின் அடிப்படையில், ஒரு புதிய தேசிய கருத்தொருமைப்பாடானது உருவமைக்கப்படவிருந்தது. பிற்போக்குத்தனமான தத்துவாசிரியரான மோரஸ், பாட்டாளி வர்க்கத்தை தேசம் என்ற அங்கத்துக்குள் ஒன்றிணைப்பதற்கான ஒரு வழிமுறையாக யூத-விரோதத்தை சிந்தித்தார். “பாட்டாளி வர்க்கத்தை ஒருவர் ஒடுக்கியாக வேண்டும்” என்று அவர் எழுதினார். “பாதுகாப்பதற்கான ஒன்றை, வெற்றி கொள்வதற்கான ஒன்றை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும்”. இந்த தேசிய அளவிலான திட்டமென்பது யூத-விரோதப் புரட்சியின் மூலமாக நிறைவேற்றப்படவிருந்தது.9

வர்க்க குரோதங்களை ஒடுக்குவதற்கு வழிசெய்ய யூத-விரோதத்தை பயன்படுத்தாமல் ஒன்றுபட்ட தேசிய ஒற்றுமை சாதிக்கப்பட முடியாது என்று கடைந்தெடுத்த பிற்போக்குவாதியான சார்ல்ஸ் மொராஸ் அறிவித்தார். “யூத-விரோதத்தின் நற்பேறான தோற்றம் இல்லாமல் அத்தனையுமே சாத்தியமற்றதாகவோ அல்லது படுபயங்கரமானதாகவோ தோன்றுகிறது. ஒவ்வொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டு, சீர்செய்யப்பட்டு, எளிமைப்படுத்தப்படுவதற்கு இது வழிசெய்கிறது. தேசப்பற்று மூலமாக ஒருவர் யூதவிரோதம் பூணவில்லை என்றாலும் கூட, சந்தர்ப்பம் என்ற ஒரு எளிமையான உணர்வின் மூலமாக ஆக முடியும்.”10

இந்த சித்தாந்த பின்புலத்தில் தான் 1984 இல் பிரான்சில் ட்ரேஃபஸ் (Dreyfus) வழக்கு வெடித்தது. ஜேர்மனிக்காக வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்த வசதிபடைத்த யூத இராணுவ அதிகாரி தீமைகரமான யூத-விரோதப் பிரச்சாரத்தின் மையமாக ஆனார். எழுபதுக்கும் மேலான நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் “யூதர்கள் சாகட்டும்!” என்ற கூக்குரலுடன் கும்பல்கள் யூதர்களுக்கு எதிரான கலகங்களில் ஈடுபட்டன. யூத பிரார்த்தனைத் தலங்கள் தாக்கப்பட்டன, யூதர்களுக்கு சொந்தமான கடைகள் சூறையாடப்பட்டன, வீதிகளில் யூதர்கள் அடித்து உதைக்கப்பட்டனர்.

ஜேர்மனியில் கண்டவாறு, யூத-விரோத இயக்கமானது தனக்கான மக்கள் ஆதரவை பிரதானமாக நடுத்தர வர்க்கத்திடம் இருந்து, அதிலும் குறிப்பாக கடைஉரிமையாளர் மற்றும் சிறு மற்றும் குறு வணிகங்களைச் சேர்ந்த மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெற்றது. ட்ரேஃபஸ் விவகாரம் அல்லது பிரான்சிலான யூத-விரோத இயக்கங்கள் குறித்த எந்தக் குறிப்பும் பேராசிரியர் கோல்ட்ஹாகனின் புத்தகத்தில் காணக் கிடைக்கவில்லை.

யூத-எதிர்ப்பு என்பது ஜேர்மன் சமூகத்தின் அத்தனை பிரிவுகளாலும் ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது என்பது தான் ஹிட்லரது தன்னார்வமிக்க தண்டனை-நிறைவேற்றுனர்கள் புத்தகத்தின் மையமான முதற்கோளாக இருக்கிறது. ஜேர்மனியில் யூத-விரோதத்திற்கு கொஞ்சமும் எதிர்ப்பு இருந்ததற்கான எந்த முக்கியமான அல்லது நம்பகமான ஆதாரமும் இல்லை என்று அழுத்தம்திருத்தமாகக் கூறும் மட்டத்திற்கு பேராசிரியர் கோல்ட்ஹாகன் சென்று விடுகிறார். ஒரு புலமைத்துவ ஆய்வு தொடர்பான ஆராய்ச்சியாக முன்வைக்கப்படும் நோக்கத்துடனான ஒரு புத்தகத்தில் இப்படியொரு வாசகத்தைக் காண்பது திகைப்பூட்டக் கூடியதாக இருக்கிறது.

யூத விரோதத்திற்கு எதிரான சமூக ஜனநாயகத்தின் போராட்டம்

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் வரலாறு, அது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜன இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆண்டுகளில், அதாவது 1870கள் தொடங்கி 1914 இல் முதலாம் உலகப் போர் வெடித்த காலம் வரையிலும், யூதவிரோதத்திற்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டமாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலான அரசியல் போராட்டத்தின் அவசரதேவையானது யூத-விரோத பிரச்சாரத்தின் அத்தனை வடிவங்களுக்கும் எதிரான ஒரு சமரசமற்ற அணுகுமுறையை கோரின. ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் அறநெறி நோக்கங்கள் என்பது தவிர, யூதவிரோதத்தை உணர்ச்சியாவேச முதலாளித்துவ-எதிர்ப்பு வாய்வீச்சுடன் ஒன்றுசேர்ப்பதென்பது தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை தவறச் செய்து அதனை நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளுக்கு கீழ்ப்படியச் செய்கின்ற ஒரு முயற்சி எனவும் சமூக ஜனநாயகக் கட்சி கண்டது.

அடோல்ஃப் ஸ்டோக்கர் யூத-விரோதத்தை வெளிப்படக் காட்டிய தனது கிறிஸ்தவ சமூகத் தொழிலாளர் கட்சியை உருவாக்கியமை, சட்டவிரோதமாக இருப்பினும் கூட நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகிக் கொண்டிருந்ததான சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து தொழிலாள வர்க்கத்தை விலக்கி வைப்பதில் யூத வெறுப்பினை பயன்படுத்த செய்த முயற்சியே ஆகும். ஸ்டோக்கருக்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சியானது யூத-விரோதத்தின் பிற்போக்குத்தனமான தன்மை குறித்து தொழிலாள வர்க்கத்திற்குக் கல்வியூட்டுவதில் ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்தை நடத்தியது. 1881 தேர்தலுக்கான சமூக ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிக்கையில், கட்சி கூறியது:

யூத-விரோத தொந்தரவுகளது மோசடியானது முதன்முதலில் சோசலிச விரோத சட்டத்திற்குப் பின்னர் தான் சாத்தியமானது. அவை ஒரு பொதுவான யூத வெறுப்பின் மட்டத்தை எட்டாதிருந்ததன் ஒரே காரணம் சமூக ஜனநாயகவாதிகள் தான். இந்த கண்ணியமற்ற செயலானது மிக அடிப்படையான நோக்கங்களில் இருந்து எழுந்திருப்பது குறித்து தொழிலாள வர்க்கத்தை அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்…11

சமூக ஜனநாயகக் கட்சியின் பதில்தாக்குதலானது தொழிலாள வர்க்கத்தின் மீது முக்கியமான அரசியல் மற்றும் தார்மீக செல்வாக்கை செலுத்துவதாக இருந்தது. யூத-விரோத பேரணிகள் தொழிலாளர்களால் உடைக்கப்பட்டன, ஸ்டோக்கர் பரிகசிக்கப்பட்டார். யூத சோசலிச வணிகரான போல் சிங்கர் முக்கியமானதொரு பேர்லின் மாவட்டத்திற்கான சமூக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலமாக யூத-விரோதத்திற்கான சமூக ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு ஒரு சக்திவாய்ந்த அடையாளத்தைக் கண்டது. 1887 தேர்தலில், அந்த நகரில் வேறெந்தவொரு வேட்பாளரை விடவும் அதிகமான வாக்குகளை சிங்கர் பெற்றார்.

விஸ்ட்ரிச் எழுதுகிறார்:

யூத-விரோதத்திற்கான எதிர்ப்பு என்பது தொழிலாளர் இயக்கத்திற்கான ஒரு கௌரவச் சின்னமாக ஆகியிருந்தது: அடோல்ஃப் ஸ்டோக்கரின் பேர்லின் இயக்கத்திற்கு எதிராக ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட கடுமையான பிரச்சாரம் யூத-விரோதத்திற்கு எதிரான தடுப்பு மருந்தாக தொழிலாள வர்க்கத்திற்கு சேவை செய்தது. தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக யூதர்களுக்கு எதிராக இருந்த தப்பெண்ணங்களை அது அகற்றி விடவில்லை என்றாலும் அதனை அரசியல்ரீதியாக அருகிய நிலைக்குக் கொண்டுசென்றது. ஸ்டோக்கருக்கு எதிரான போராட்டமானது சமூக ஜனநாயகத்திற்கான போராட்டமாக, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு திட்டவட்டமான நடவடிக்கையாக இருந்தது.12

யூத-விரோதத்திற்கு எதிரான போராட்டத்தில் சமூக ஜனநாயகக் கட்சி வகித்த பாத்திரமானது, ஜேர்மன் மக்கள் தொகையில் அக்கட்சியின் நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக சற்று பின்னடிப்புடன் அவதானித்துக்கொண்டு வந்திருந்த ஒரு பிரிவான யூத நடுத்தர வர்க்கத்தில் அதற்கு பரந்த ஆதரவை இறுதியில் பெற்றுத்தந்தது. சோசலிச இயக்கத்தின் ஆரம்ப நாட்கள் தொட்டே ஜேர்மன் யூத புத்திஜீவிகளது ஒரு சிறிய பிரிவு என்றாலும் முக்கியமானதொரு பிரிவு முக்கியமானதொரு பாத்திரத்தை ஆற்றி வந்திருந்தது என்றபோதிலும் கூட, யூத நடுத்தர வர்க்கம் மற்றும் முதலாளித்துவத்தின் பரந்த பெரும்பான்மையினர், அப்பட்டமாய் பொருளாதார சுயநலக் காரணங்களின் பொருட்டு, சமூக ஜனநாயகத்தில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தனர். Kaiser Wilhelm இன் ஆட்சிக்கு தமது தெளிவான விசுவாசத்தை காட்டவேண்டும் என்ற அவர்களுக்கிருந்த விருப்பம் அவர்களது உள்பாதுகாப்பின்மையிலிருந்து வந்திருந்தாலும் அதுவும் பலருக்கும் சமூக ஜனநாயகக் கட்சியை நோக்கி இருந்த வெறுப்பான மனோபாவத்திற்கான ஒரு கூடுதல் காரணமாக இருந்தது.

எப்படியிருந்த போதிலும், அந்த நூற்றாண்டின் திருப்பத்தில், யூதவிரோதத்தை ஒரேகுரலில் எதிர்த்த ஒரேயொரு கட்சி சமூக ஜனநாயகக் கட்சி மட்டுமே என்ற உண்மையை உதாசீனப்படுத்துவது ஜேர்மன் யூதர்களுக்கு சாத்தியமற்றதாகி விட்டது. மேலும், நாடாளுமன்றத்திற்கு (Reichstag) தேர்ந்தெடுக்க யூதர்களை நிறுத்திய ஒரேயொரு கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சி  ஆகவே இருந்தது. 1903 தேர்தலில் முதன்முறையாக ஜேர்மன் யூத வாக்குகளில் கணிசமான பகுதியினை சமூக ஜனநாயகக் கட்சி வென்றெடுத்தது.

இதுவும் ஜேர்மனியின் 1933க்கு முந்தைய அரசியல் வரலாற்றில் பேராசிரியர் கோல்ட்ஹாகன் குறித்துகாட்ட மறந்த இன்னுமொரு மிக முக்கியமான அம்சமாகும்.

ஜாரிச ரஷ்யாவில் யூத-விரோதம்

சமூக ஜனநாயகக் கட்சியின் போராட்டத்தின் விளைவாக யூத-விரோதக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கு 1890களுக்கும் முதலாம் உலகப் போர் வெடிப்புக்கும் இடையிலான காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் வீழ்ச்சியடைந்துகொண்டு வந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளில் யூத-விரோதத்தின் மிக வன்முறையான வெளிப்பாடுகள் வெடித்தது, ஜேர்மனியிலோ, அல்லது பிரான்சிலோ கூட அல்ல, ஆனால் ரஷ்யாவிலாகும்.

ரஷ்யாவில் நடந்த இரத்தம்தோய்ந்த படுகொலைகள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி கண்டு வந்த புரட்சிகர இயக்கத்திற்கு ஜாரிச ஆட்சி அளித்த ஒரு நேரடியான பதிலிறுப்பாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தினை அச்சுறுத்துவதற்காக கறுப்பு நூற்றுவர் (Black Hundreds) என்று அழைக்கப்பட்ட வலது-சாரி துணைஇராணுவப் படைகளின் உருவாக்கத்திற்கு அரசாங்கம் உதவியது.

வரலாற்றாசிரியர் ஓர்லாண்டோ ஃபிகெஸ் எழுதுகிறார்:

போருக்கு மத்தியிலான ஐரோப்பாவின் பாசிச இயக்கங்களை பொறுத்தவரை, நவீனமயமாக்கங்கள் மற்றும் சீர்திருத்தங்களின் விளைவாக சமூக அடுக்கில் தமது அற்பமான நிலையை இழந்து விட்டிருந்த அல்லது இழந்து விடுவோமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த கசப்படைந்திருந்த உதிரித் தட்டுக்களில் இருந்துதான் அவர்களுக்கான பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது: தற்காலிக தொழிலாளர்களாக நகரங்களில் தஞ்சமடைய தள்ளப்பட்ட தமது நிலத்தை இழந்த விவசாயிகள்; பெரு வணிகங்களில் இருந்து வந்த போட்டியால் நசுக்கப்பட்ட சிறு கடைவியாபாரிகள் மற்றும் கலைஞர்கள்; கடைநிலை அதிகாரிகள் மற்றும் போலிஸ்காரர்கள்.... “நேற்று முளைத்த” தொழிலாளர்கள், மாணவர்களும் மற்றும் யூதர்களும் ஜார் மன்னருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சவால் செய்வதைக் கண்டு வெதும்பிய அத்தனை வகையான வாடிக்கையான மதுக்கடை தேசப்பற்றாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.13

1905 ஆம் ஆண்டின் புரட்சிகர இயக்கத்திற்கான பதிலிறுப்பாக ஜார் இரண்டாம் நிக்கோலாஸின் ஆட்சி கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறை அலையின் ஒரு பிரதான இலக்காக யூதர்கள் இருந்தனர். ஜனநாயக ஸ்தாபனங்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு வாக்குறுதி அளிக்கின்ற ஜாரின் 1905 அக்டோபர் அறிக்கை விநியோகமானதன் பிந்தைய இரண்டு வாரங்களில், 690 படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றன. இந்தக் காலகட்டத்தில் 3,000 யூதர்கள் கொல்லப்பட்டனர். ஒடிஸாவில் நடைபெற்ற ஒரு படுகொலைச் சம்பவத்தில் 800 யூதர்கள் பலியாயினர். ஐநூறு பேர் காயமடைந்ததோடு 100,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாயினர். அரசாங்கத்தின் நேரடி உதவியுடன் தான் இந்தப் படுகொலைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டிருந்தன என்பது வெகுவிரைவிலேயே நிரூபணமானது. இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்கான அரசியல் பொறிமுறை எங்ஙனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை அந்த சமயத்தின் சோசலிச செய்தித்தாள் ஒன்று இவ்வாறு விவரித்தது: 

அதே பழகிப்போன பழைய சித்திரம்! படுகொலைச் சம்பவத்திற்கு போலிஸ் முன்கூட்டியே ஏற்பாடு செய்கிறது. போலிஸ் தூண்டி விடுகிறது: யூதர்களை மொத்தமாய் படுகொலை செய்ய அழைக்கும் துண்டறிக்கைகள் அரசாங்க அச்சடிப்பு அலுவலகங்களில் அச்சடிக்கப்படுகின்றன. படுகொலைச் சம்பவம் தொடங்கும்போது, போலிஸ் செயலற்று இருக்கிறது. கறுப்பு நூற்றுவர் அமைப்பினரின் சுரண்டல் வேலைகளை துருப்புகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன. பின் அதே போலிஸ் படுகொலையாளர்களை தண்டிப்பதாகவும் விசாரிப்பதாகவும் நடிக்கின்றனர். பழைய அதிகாரத்தின் அதிகாரிகளால் நடத்தப்படும் புலனாய்வுகளும் விசாரணைகளும் ஒரே வகையில் தான் எப்போதும் முடிகின்றன: வழக்குகள் இழுத்துக் கொண்டே செல்கின்றன, படுகொலையாளர்களில் ஒருவரும் குற்றம் உறுதி செய்யப்படுவதில்லை, சில சமயங்களில் அடிவாங்கி நொருங்கிப் போய் கிடக்கும் யூதர்களும் புத்திஜீவிகளும் நீதிமன்றத்திற்கு இழுக்கப்படுகின்றனர், பழைய கதையாக மாதங்கள் கடக்கின்றன, அடுத்த படுகொலைச் சம்பவம் வரையிலும், அதுவரையானதில் புதிய கதையாக இருந்தது மறக்கப்படுகிறது.14

1906 ஜூனில் வெளியான இந்தக் கட்டுரையின் ஆசிரியர் லெனின் ஆவர்.

ஜேர்மனியில் மட்டும் தான் யூத-விரோதமிருந்தது போல் காட்டும் தனது ஆய்வறிக்கைக்கு வரலாற்று உண்மைகள் இடையூறு செய்வதை அனுமதிப்பதைக் காட்டிலும், மூன்றாம் ரைய்ஷ் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னதாக ஐரோப்பாவில் யூத-விரோத வன்முறையின் மோசமான வெடிப்புகளுக்கான எந்தக் குறிப்பையும் கோல்ட்ஹாகன் வெறுமனே தவிர்த்துச் சென்று விடுகிறார்.

ஜேர்மனியில் புரட்சி வெடித்ததை தொடர்ந்தும் ஹோஹென்சோல்லேர்ன் (Hohenzollern) முடியாட்சி நிலைகுலைந்ததை தொடர்ந்தும் முடிவுக்கு வந்திருந்த முதலாம் உலகப் போருக்குப் பின்னர்தான் அரசியல் ஒழுங்கமைப்புக்கான ஒரு சாதனமாக யூத-விரோதத்தை பயன்படுத்துவதென்பது மீண்டும் ஒரு கவனத்திற்குரிய காரணியாக ஆனது. நாஜிக்களின் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த யூத-விரோதத்தின் செயல்திற சாத்தியவளமானது குட்டி-முதலாளித்துவத்தின் விரக்திக்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலைபிறழ்வுக்கும் நேர்விகிதத்திலானதாக இருந்தது.

போரில் ஜேர்மனி தோல்வி கண்டதை அடுத்து வந்த நிகழ்வுகளால் குட்டி முதலாளித்துவம் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு, சீரழிவடைந்தது. புரட்சியை மூச்சுத்திணறச் செய்யததை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த வைய்மார் குடியரசானது ஒரு நெருக்கடியில் இருந்து இன்னொரு நெருக்கடியை நோக்கி தட்டுத்தடுமாறிச்சென்றது.

ட்ரொட்ஸ்கி எழுதினார்:

போருக்குப் பிந்தைய குழப்பநிலை, தொழிலாளர்களை பாதித்த மோசமான மட்டத்திற்கு குறையாமல் கலைஞர்களையும், ஊர் ஊராய்ச் சென்று விற்கும் வியாபாரிகளையும், மற்றும் அரச உத்தியோகத்தர்களையும் பாதித்தது. ... போர், தோல்வி, இழப்பீடு, பணவீக்கம், ரூர் பிரதேச ஆக்கிரமிப்பு, நெருக்கடி, தேவை, விரக்தி ஆகியவற்றினால் பழுக்கக் காய்ச்சிய நிலைக்கு கொண்டு வரப்பட்டிருந்த சூழ்நிலையில், குட்டி முதலாளித்துவமானது அதனை ஏமாற்றி வந்திருந்த அத்தனை பழைய கட்சிகளுக்கும் எதிராக எழுந்து நின்றது. சிறு உரிமையாளர்கள் ஒருபோதும் திவால்நிலையில் இருந்து வெளிவந்திராத நிலையும், அவர்களது பல்கலைக்கழக பிள்ளைகளுக்கு பதவிகளும் வாடிக்கையாளர்களும் இல்லாத நிலையும், பெண்பிள்ளைகளுக்கு வரதட்சணைகளும் மாப்பிள்ளைகளும் கிடைக்காத நிலையும் தந்த கூர்மையான துன்பங்கள் சட்டம்ஒழுங்கிற்கும் மற்றும் ஒரு இரும்புக்கரத்தின் தேவைக்கும் கோரிக்கை வைப்பதாக இருந்தன.15

ஹிட்லரின் யூத-விரோதம்

பாட்டாளி வர்க்கத்தின் நிலைகளுக்கு தள்ளப்பட்டுவிடுமோ என்ற எப்போதுமான அச்சத்தைக் கொண்ட இந்த சூழலின் சுயவெறுப்பு, கவலைகள் மற்றும் அதிர்ச்சிகள் ஹிட்லருக்கூடாக வெளிப்படுத்தப்பட்டது. கீழ்-நடுத்தர வர்க்கத்தின் ஒரு விளைபொருளான ஹிட்லர் தனது ஆரம்ப வருடங்களை வியன்னாவில் கழித்திருந்தார். அங்கே அவரது உலகப் பார்வை என்பது மலிவான பரபரப்புகளை விற்கும் ஊடகங்களால் உருப்பெற்றதாக இருந்தது, தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்தின் மீதான தனது ஆயுட்கால வெறுப்பை அவர் அங்கே தான் பெற்றார். ஹிட்லரின் யூத-விரோதம் என்பதே பாட்டாளி வர்க்கத்தின் மீதான அவரது முழுமையான வஞ்சத்தின் ஒரு உப-விளைபொருளாகவே இருந்தது என்று உணர்திறன்மிக்க பாசிச-எதிர்ப்பு ஜேர்மன் எழுத்தாளரான கோன்ராட் ஹேய்டன் கூறுகிறார்.

ஹேய்டன் விளக்குகின்றவாறாக ஹிட்லர்,

உழைப்பை உற்பத்திப்பொருளாக மாற்றுவதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மனித வாழ்க்கையின் ஒட்டுமொத்த வட்டத்தையுமே வெறுத்தார்; உற்பத்தியின் இந்த நிகழ்ச்சிப்போக்கில் சிக்கிக் கொண்டு நசுங்கிப் போக தம்மை அனுமதித்த அந்த மனிதர்களை அவர் வெறுத்தார். அவரது வாழ்க்கை முழுவதிலுமே, தொழிலாளர்கள் என்பவர்கள், அவரைப் பொறுத்தவரை ஒரு பயங்கரமான, இழிவான இரக்கமற்றதொரு மக்கள்பரப்பு குறித்த சித்திரமாகவே இருந்தனர். உடலுழைப்பு தொழிலாளரை புகழ்ந்து மேடையில் இருந்து அவர் பின்னாளில் சொன்ன அத்தனையுமே முழுக்கப் பொய்கள் தான்.16

யூதர்கள் விடயத்தில் ஹிட்லர் கொண்டிருந்த அசுரத்தனமான பிடிவாதத்தை புரிந்து கொள்வதற்கான திறவுகோல் இங்கே தான் அமைந்திருக்கிறது. தனது யூத-விரோதத்திற்கான மாற்றம் எப்படி தொழிலாளர் இயக்கத்துடனான தனது அனுபவங்களில் இருந்து பிறந்திருந்தது என்பதை எனது போராட்டம் (Mein Kampf) புத்தகத்தில் ஹிட்லர் விளக்கியிருந்தார். முதன்முதலில் தொழிலாளர்களிடையே தான் ஹிட்லர் யூதர்களுடனான தொடர்புக்கு வந்தார். அப்போதுதான், தொழிலாளர் இயக்கத்தில் பல யூதர்கள் பிரதான பாத்திரங்களை வகிப்பதை ஆச்சரியத்துடன் அவர் கண்டுபிடித்தார். ”அவர் மீது ஞானஒளி மலர்ந்தது” என்று எழுதினார் ஹேய்டன். “’யூதப் பிரச்சினை’ சட்டென்று அவருக்குத் தெளிவாகி விட்டது. ... யூதர்கள் தலைமை கொடுத்ததால் தொழிலாளர் இயக்கத்தை அவர் வெறுக்கவில்லை; தொழிலாளர் இயக்கத்திற்கு தலைமை கொடுத்ததால் யூதர்களை அவர் வெறுத்தார்.”17

ஒரு விடயம் நிச்சயம், “ரோத்ஷைல்ட் என்ற முதலாளி அல்ல, மாறாக கார்ல் மார்க்ஸ் என்ற சோசலிஸ்ட்” தான் அடோல்ஃப் ஹிட்லரின் யூத-விரோதத்தை எரியவைத்தவராக இருந்தார்” என்று ஹேய்டன் முடிக்கிறார். 18

ஹேய்டன் எழுதிய ஹிட்லரின் வாழ்க்கைச் சரிதத்தை கவனமாகப் படித்திருந்தால் அதன் மூலம் பேராசிரியர் கோல்ட்ஹாகன் புத்திஜீவிதரீதியாக பயனடைந்திருக்க முடியும். ஆனால் அப்போது அவரது படைப்பு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்திருக்கும், அது ஹிட்லரது தன்னார்வமிக்க தண்டனை-நிறைவேற்றுனர்கள் புத்தகம் போல கணிசமான பண இலாபத்தைக் கொண்டுவராமல் போயிருக்கக் கூடும். வாழ்க்கையில், நாம் நமது தெரிவுகளைச் செய்து கொள்கிறோம்.

முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் யூத-விரோதம் என்பது ஒரு சக்திவாய்ந்த பிரச்சினையாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், கோல்ட்ஹாகன் கூறுவது போலன்றி, ஹிட்லருக்கு யூதர்கள் மீதிருந்த வஞ்சம் மட்டுமே அவர் அதிகாரத்திற்கு வருவதற்கு அவசியமாக இருந்த அரசியல் அடித்தளத்தை வழங்கியிருக்க முடியாது. யூத-விரோதத்தின் தடுக்கமுடியாத ஒரு அலையின் மீது சவாரி செய்து நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்து விடவில்லை. 1933க்கு முன்பு வரை யூத-விரோதத்திற்கு கோரிக்கைவிடுதல் எல்லாம் மட்டுப்பட்ட நிலையில் தான் இருந்தது என்பதை நாஜி கட்சியின் சமூக அடித்தளங்கள் குறித்த கவனமான ஆய்வுகள் ஸ்தாபித்திருக்கின்றன. உண்மையில், யூத-விரோதமென்பது ஜேர்மனியின் சில பகுதிகளுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியதாய் இருந்தது என்பதை நாஜிக்கள் கண்டறிந்து வைத்திருந்தனர், உள்ளூர் தலைவர்களுக்கு அவர்களது யூத-விரோத அமிலப் பேச்சுக்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் இன்னும் சில சமயங்களில் அவர்களது பேச்சுகளில் இருந்து யூத-விரோதக் குறிப்புகள் அத்தனையையும் அகற்றவும் கூட கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

எந்த வகையிலும், ஜேர்மனியில் 1933 இல் நிலவிய யூத-விரோதத்தின் அளவை அளவிடுவது நாஜிக்களின் வெற்றியை விளக்கி விடாது. யூத-விரோதம் நிலவியதென்பது எத்தனை வெறுப்பூட்டக் கூடியதாய் இருப்பினும், அது ஜேர்மனியின் அரசியல் வாழ்வின் தனித்தொரு காரணி மட்டுமே தவிர அது மிக முக்கியமான காரணியே அல்ல. கிடையவே கிடையாது. ஒரு அரசியல் ஆட்சியானது, அது வலதாயினும் சரி அல்லது இடதாயினும் சரி, வெறுமனே மக்களது அத்தனை தப்பெண்ணங்கள் மற்றும் வஞ்சங்களது கூட்டுமொத்தத்தின் விளைபொருளாக இருப்பதில்லை. இறுதி ஆய்வில், சமூகத்தின் பிரதான வர்க்கங்களுக்கு இடையிலான சமூக மற்றும் அரசியல் போராட்டங்களது பாதையில் வார்க்கப்படும் ஒரு குறிப்பிட்ட உறவின் வெளிப்பாடே ஆகும். போட்டி வர்க்கங்களது அரசியல் தலைமையின் குணாம்சமும், அவை தமது போராட்டத்திற்கு அடித்தளமாகக் கொள்கின்ற வேலைத்திட்டமும் அந்தப் போராட்டங்களது விளைபொருளில் பிரதான காரணிகளாக அமைபவை ஆகும்.   

எந்தவொரு நாட்டிலும் யூத-விரோதத்தின் துல்லியமான அளவைக் கணக்கிடுவது சாத்தியமாக இருந்திருக்குமேயானால், அந்த நஞ்சானது 1933 இல் ஜேர்மனியில் இருந்ததற்குக் கொஞ்சமும் குறைவின்றி 1917 இல் ரஷ்யாவில் இருந்தது என்பதை அது நிரூபித்திருக்கும். அப்படியிருந்தும் கூட, யூதர்களை நோக்கிய அனுதாபப் பார்வைக்கென அறியப்படாத சமூகப் பிரிவான நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தின் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளின் மீது தொழிலாள வர்க்கம் தனது அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் போல்ஷிவிக்குகளது அரசியல் தீர்க்கமும் தெளிவும் ஒரு அதிமுக்கிய பாத்திரத்தை வகித்தது.    

ரஷ்யாவில் 1917 இன் அரசியல் போராட்டங்கள் பாசிஸ்டுகளது வெற்றியுடன் அல்ல மாறாக சோசலிஸ்டுகளின் வெற்றியுடனேயே முடிந்தன.

ஜேர்மன் புரட்சியின் தோல்வி

பாசிசத்தின் வெற்றியானது யூத-விரோதத்தின் நேரடியானதும் தவிர்க்கவியலாததுமான விளைபொருளாக இருக்கவில்லை, மாறாக வர்க்கப் போராட்டத்தின் மூலம் உருவமைக்கப்பட்ட ஒரு அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளாக இருந்தது. இந்த நிகழ்ச்சிப்போக்கில் அதிமுக்கிய காரணியாக இருந்தது ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் நெருக்கடி ஆகும். இது சர்வதேச சோசலிசத்தின் ஒரு பரந்த அரசியல் நெருக்கடியின் ஒரு பகுதியாக இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.    

ஹிட்லரின் எழுச்சி தடுக்க முடியாததாகவும் இருக்கவில்லை, அவரது வெற்றியும் தவிர்க்கமுடியாததும் அல்ல. போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் ஒட்டுமொத்தப் பாதையிலும் பரந்துபட்ட சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளானவை அரசியல்ரீதியாக திவாலான நிலையிலும் வெகுஜனங்களுக்கு முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட பெருநாசத்தின் மன உளைச்சலில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியை வழங்க முற்றிலும் இயலாத ஒரு நிலையிலும் தங்களை வெளிக்காட்டியதற்குப் பின் தான் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வர முடிந்தது. 

ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் நெருக்கடி குறித்து ஒரு மிகச்சுருக்கமான திறனாய்வு மட்டுமே இந்த விரிவுரையின் வடிவமைப்பிற்குள் சாத்தியமாகும்.

1914 ஆகஸ்ட் மாதத்தில், மிகப்பெரும் போர் வெடித்த சமயத்தில், சமூக ஜனநாயகக் கட்சியானது தனது புரட்சிகரக் கோட்பாடுகளைக் கைவிட்டு ஜேர்மன் அரசாங்கத்திற்கு போர் நிதி ஒதுக்குவதற்கு ஆதரவாய் வாக்களித்தது. பல வருட கால சந்தர்ப்பவாதச் சீரழிவின் விளைபொருளாகிய இந்தக் காட்டிக்கொடுப்பானது, ஒரு புரட்சிகரக் கட்சியாக சமூக ஜனநாயகக் கட்சியின் முடிவைக் குறித்து நின்றது. அந்தப் புள்ளியில் தொடங்கி, சமூக ஜனநாயகக் கட்சியானது முன்னெப்போதையும் விட வெளிப்படையாக முதலாளித்துவ ஆட்சியின் ஒரு முட்டுத்தூணாக செயல்பட்டது. முதலாளித்துவ முகாமிற்கு சமூக ஜனநாயகக் கட்சி சென்று விட்டிருந்தமையானது 1918-19 நிகழ்வுகளின் மூலமாய் ஊர்ஜிதப்பட்டது.

1918 நவம்பர் புரட்சி மூலமாக அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கமானது தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாகவும் சரீர ரீதியாகவும் நிராயுதபாணியாக்குவதற்கும் முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்குமாய் தன்னை அர்ப்பணித்தது. 1919 ஜனவரியில் இது ஸ்பார்டகஸ் எழுச்சியை ஒடுக்க ஏற்பாடு செய்ததோடு கார்ல் லீப்னெக்ட் மற்றும் ரோசா லுக்சம்பேர்க்கின் படுகொலைகளுக்கும் ஒப்புதலளித்தது.

போல்ஷிவிக் புரட்சியின் வெற்றியே கம்யூனிஸ்ட் கட்சியின், அதாவது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) ஸ்தாபகத்திற்கான அரசியல் உத்வேகத்தை வழங்கியிருந்தது. ஆயினும், ஆரம்பம் தொட்டே, கட்சியானது அரசியல் தலைமையின் ஒருதொடர் நெருக்கடியால் சூழப்பட்டிருந்தது. ஒரு அர்த்தத்தில், அது ரோசா லுக்சம்பேர்க்கின் இழப்பில் இருந்து மீளவேயில்லை என்றும் சொல்லலாம். அவரது இடத்தை நிரப்புமளவுக்கு ஒப்பிடத்தக்க அளவிலான அனுபவம் மற்றும் திறன் கொண்ட தலைவர் ஒருவரும் இல்லை. ஒரு புரட்சிகர அரசியல் தலைமையின் அபிவிருத்தியென்பது, போல்ஷிவிக் கட்சியின் அனுபவம் எடுத்துக்காட்டியிருந்ததைப் போல, பல மாதங்கள் அல்லாமல் பல வருடங்கள் அவசியமான ஒரு நெடிய மற்றும் சிரமமான நிகழ்ச்சிப்போக்காகும்.

இவ்வாறாக, ரூர் பிராந்தியத்தின் மீதான பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்குப் பின்னர், 1923 இல் கட்டவிழ்ந்த புரட்சிகர நெருக்கடிக்கு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலும் தயாரிப்பின்றி இருந்தது. மிகைபணவீக்கத்தின் தோற்றமானது நடுத்தர வர்க்கங்களைச் சீரழித்து, சீர்திருத்தவாத சமூக ஜனநாயகக் கட்சியின் அதிகாரத்தை பலவீனப்படுத்தி, அத்துடன் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான ஒரு சக்திவாய்ந்த எழுச்சிக்கும் இட்டுச் சென்றது.

அரசியல்ரீதியாக முதிர்ச்சி பெற்றதும் தீர்மானகரமானதுமான ஒரு தலைமை என்ற ஒன்றைத் தவிர, ஒரு சோசலிசப் புரட்சிக்கு அவசியமான அத்தனை சூழல்களுமே ஜேர்மனியில் இருந்தன. 1923 அக்டோபரில் இந்த நெருக்கடி ஒரு இறுதிக்கட்டத்தை எட்டிய சமயத்தில், வைய்மார் அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு ஒழுங்கமைக்க ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்வதானது பரவலாய் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. உண்மையில், ஒரு கிளர்ச்சிக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பதட்டமிக்க மற்றும் தீர்மான உறுதியற்ற தலைமையின் காரணத்தினால், அது கடைசி நிமிடத்தில் தான் கைவிடப்பட்டது. ஹம்பேர்கில், கம்யூனிஸ்ட் தொழிலாளர்களுக்கு திட்டங்களிலான மாற்றம் தெரிவிக்கப்பட்டிராத நிலையில், அங்கு கிளர்ச்சி தொடங்கி விட்டிருந்தது. ஆனால் இந்த தனிமைப்பட்ட நடவடிக்கை எளிதாக ஒடுக்கப்பட்டு விட்டது. சில நாட்களுக்கு முன்பு வரை, தான் தூக்கியெறியப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்று உறுதியாக எண்ணிக் கொண்டிருந்த முதலாளித்துவ அரசாங்கம் சுதாரித்துக் கொண்டது. நெருக்கடி கடந்தது, முதலாளித்துவ ஆட்சி ஸ்திரப்படுத்தப்பட்டது.

அடுத்து வந்த ஆண்டுகளில், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் செல்வாக்கு அதிகரித்து, லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடது எதிர்ப்பாளர்கள் அணி ஒடுக்கப்பட்ட சூழலியே ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வாழ்க்கை உருப்பெற்றது. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் வெற்றியானது, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் துயரகரமான பின்விளைவுகளைக் கொண்டதாக ஆகவிருந்தது.

1923 இல் தொழிலாள வர்க்கத்தின் தோல்வியைத் தொடர்ந்து வந்த ஸ்திரநிலை மற்றும் செழுமையின் ஒரு மிகக் குறுகிய காலகட்டமானது, 1929 அக்டோபர் வோல்ஸ்ட்ரீட் பொறிவு மற்றும் உலகளாவிய மந்தநிலையுடன் ஒரு முடிவுக்கு வந்தது. ஜேர்மன் தொழிற்துறை நொடித்தது, மில்லியன் கணக்கானோர் தமது வேலைகளை இழந்தனர், நடுத்தர வர்க்கம் சீரழிக்கப்பட்டது. இவைதான் நாஜிக் கட்சி மிகத் துரிதமாய் வெகுஜன ஆதரவை வெல்வதற்கு வழிவகுத்த நிலைமைகளாய் இருந்தன.

ஹிட்லர் அதிகாரத்திற்கு எழுந்தமை

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அமைப்புகளான சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும், ஜேர்மன் அரசியலில் பிரம்மாண்டமான காரணிகளாக இருந்தன. இந்த இரண்டு கட்சிகளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் விசுவாசத்தை பெற்றிருந்தன. பாசிச எதிர்ப்புரட்சி அபாயத்திற்கு முகம் கொடுத்த நிலையில், நாஜிக்களுக்கு எதிரானதொரு பொதுப் போராட்டத்தில் தனது படைகளை ஒன்றுதிரட்டுவது தான் தொழிலாளர் இயக்கத்தின் அவசரமான மூலோபாய பணியாக இருந்தது.

ஆனால் முதலாளித்துவ வைய்மார் ஆட்சியின் பாதுகாப்பிற்கு உறுதிபூண்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள், மண்ணிற சட்டைக்காரர்களது தாக்குதல்களுக்கு எதிராய் ஒரு ஒன்றுபட்ட தற்காப்பினை ஒழுங்கமைக்கும் நோக்கத்திற்காகவும் கூட, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உடன் எந்த அரசியல் உடன்பாட்டினையும் எதிர்த்தனர். சமூக ஜனநாயகக் கட்சியினர் முட்டுக்கட்டையிடும் நிலைப்பாடை எடுத்தாலும் கூட, அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் நாஜி அபாயத்திற்கு எதிராக இரண்டு கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுவதன் அவசியத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு அதன் தலைவர்களுக்கு அழைப்பு விடுவதே ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் அத்தியாவசியக் கடமையாக இருந்தது.

ஆனால் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ராலினது வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பாசிஸ்டுகளுக்கு மிகவும் வசதியாக அமைந்து விடத்தக்கதான ஒரு அரசியல் நிலைப்பாட்டை பின்பற்றியது. 1928 இல், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச அகிலத்தில் இருந்து ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பாளர்களும் வெளியேற்றப்பட்டதன் ஒரு வருடத்திற்குப் பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் திடுதிப்பென, தீர்மானகரமான புரட்சிகர போராட்டங்களுக்கான மூன்றாம் காலகட்டம் என்று அழைக்கப்படுவதானது தொடங்கி விட்டிருந்ததாக அறிவித்தனர். சோவியத் ஒன்றியத்தில் கூட்டுறவுமயமாக்கலுக்கான துணையளிப்பாகவும் அதனை நியாயப்படுத்துவதற்குமானதாகவே இந்தக் கொள்கை பெரும்பாலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்றாம் காலகட்டம், அதன் நடைமுறை செயல்பாட்டில், ’சமூக ஜனநாயகக் கட்சியினர் பாசிசத்தின் தொங்குதசை என்பதைவிட வேறொன்றும் இல்லை’ என்று கண்டனம் செய்வதை உள்ளடக்கியதாய் இருந்தது. இவ்வாறாக, ஜேர்மனியில், ’சமூக ஜனநாயகக் கட்சி என்பது வெறுமனே பாசிசத்தின் இடது பிரிவு என்பதால் அதனுடனான ஒரு ஐக்கிய முன்னணி என்பது அனுமதிக்க முடியாதது’ என்று ஸ்ராலினிஸ்டுகள் வலியுறுத்தி, சமூக ஜனநாயகக் கட்சியினரை “சமூக பாசிஸ்டுகள்” என்று வருணித்தனர்.

பாசிசத்திற்கு எதிராய் பாரிய சோசலிசத் தொழிலாளர்களது இயக்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் சாத்தியத்தை ஏறக்குறைய அகற்றியது தான் இந்த குற்றவியல்தனமான பொறுப்பற்ற, ஏறக்குறைய பைத்தியக்காரத்தனமான, கொள்கையின் பின்விளைவாக இருந்தது.

1933 ஜனவரியில் ஹிட்லர் சான்சலராய் நியமனம் பெறுவதற்கு முந்தைய அரசியல் நிகழ்வுகள் மீதான தனது மிகச் சுருக்கமான திறனாய்வில் கோல்ட்ஹாகன், நாஜிக்கள் 1932 ஜூலை தேர்தலில் ஏறக்குறைய பதினான்கு மில்லியன் வாக்குகள், அதாவது 37.4 சதவீத வாக்குகள் பெற்றிருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். நாஜி-ஆதரவு மனோநிலையின் பெருவாரியான தன்மைக்கு அழுத்தமளிக்கும் பொருட்டு இந்த எண்கள் தனித்து சாய்வெழுத்துக்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகளை கோல்ட்ஹாகன் குறிப்பிடவில்லை. உண்மையில், சமூக ஜனநாயகக் கட்சி  7.95 மில்லியன் வாக்குகளும் (21.6 சதவீதம்) ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி 5.2 மில்லியன் வாக்குகளும் (14.6 சதவீதம்) பெற்றிருந்தன. அதாவது, ஜேர்மனியில் இரண்டு சோசலிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 13.2 மில்லியன், அல்லது 36.2 சதவீதம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஜேர்மனியின் அரசியல் வாழ்க்கையானது சோசலிசப் புரட்சிக்கும் பாசிச எதிர்ப்புரட்சிக்கும் இடையில் துருவமயப்படுத்தப்பட்டதாக இருந்தது.

1932 நவம்பரில் நடந்த அடுத்த தேர்தலில் —இதனை கோல்ட்ஹாகன் குறிப்பிடவேயில்லை— நாஜிக்களின் வாக்குகள் அதிரடியாக இரண்டு மில்லியன் வரை சரிவைக் கண்டிருந்தது. அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 11.73 மில்லியன் (33.1 சதவீதம்). சமூக ஜனநாயகக் கட்சியின் வாக்குகள் 7.24 மில்லியனாக சரிந்திருந்தன (20.4 சதவீதம்). அதேநேரத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் 5.98 மில்லியனாக (16.9 சதவீதம்) அதிகரித்திருந்தன. இரண்டு சோசலிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இப்போது பாசிஸ்டுகள் பெற்றதை விடவும் அரை மில்லியன் அதிகமாக இருந்தது. சதவீதத்தில் கூறுவதானால், சமூக ஜனநாயகக் கட்சி-ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்து பெற்ற வாக்குகள் 37.3 சதவீதம்.

இந்தத் தேர்தல், நாஜிக்களுக்கு ஒரு அரசியல் நாசம் என்பதற்குக் குறையாததாக இருந்தது. அவர்களது உயர்ச்சி அலை கடந்து விட்டிருந்தது என்பதையும், காலக்கெடுக்களையும் ஊசலாட்டத்தையும் கொண்ட ஒரு குழப்பமான கலவையாக இருந்த ஹிட்லரின் அரசியல் தந்திரம் நாஜிக்களுக்கு நட்டமேற்படுத்தி விட்டிருந்ததையும் அது தெளிவாக எடுத்துக்காட்டியது. பிரபல அமெரிக்க வரலாற்றாசிரியரான ஹென்றி ஆஷ்பி டர்னர், நாஜிக்கள் அதிகாரத்திற்கு எழுந்ததன் கடைசிக் கட்டம் குறித்த ஒரு சமீபத்திய ஆய்வில் எழுதுகிறார்:

நவம்பர் தேர்தல் ஹிட்லருக்கும் அவரது கட்சிக்கும் ஒரு பெரும் அடியாக இருந்தது. முந்தைய மூன்று ஆண்டுகளின் காலத்தில் தொடர்ச்சியாக அதிரடியான முன்னேற்றங்களைப் பெற்றதன் பின்னர், நாஜிப் பெருந்தேர் தடுமாறி விட்டது. நாஜிக்கள் விரைவில் ஆட்சிக்கு வந்து ஜேர்மனியின் துயரத்திற்கு துரிதமான மற்றும் தீர்மானகரமான தீர்வுகளைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஜூலை மாதத்தில் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பலரும் ஹிட்லர் சான்சலர் பதவிக்கு முயன்று தோற்றதில் ஏமாற்றம் கண்டு தங்கள் வாக்களிப்பை இடமாற்றி விட்டனர்.19

முழுக்க வாக்குகளைக் கொண்டு பார்த்தோமென்றால் கூட, ஹிட்லர் சான்சலராக நியமிக்கப்படும் சமயத்திலும் கூட, சோசலிச தொழிலாளர் இயக்கமானது பாசிஸ்டுகளை விடவும் ஒரு பெரும் சக்தியாகவே திகழ்ந்தது. தொழிற்துறையில் மிகத் தீர்மானகரமான பொறுப்புகளில் அமர்ந்திருந்த ஒரு சமூக சக்தியாக, சோசலிச தொழிலாளர் இயக்கமானது, அதன் சாத்தியத்திறனில், எண்ணிலடங்கா வகையில் கூடுதல் சக்தி படைத்ததாக இருந்தது. ட்ரொட்ஸ்கி 1931 இல் எழுதியதைப் போல:

தேர்தல் புள்ளிவிவரங்கள் என்று வந்தால், ஆயிரம் பாசிச வாக்குகள் ஆயிரம் கம்யூனிஸ்டு வாக்குகளுக்குச் சமம் தான். ஆனால் புரட்சிகரப் போராட்ட அளவுகோல் என்று பார்த்தால், ஒரு பெரிய தொழிற்சாலையின் ஆயிரம் தொழிலாளர்கள் என்பது ஆயிரம் குட்டி அதிகாரிகள், குமாஸ்தாக்கள், அவர்தம் மனைவியர் மற்றும் அவர்தம் மாமியார்களது சக்தியைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமானதொரு சக்தியை பிரதிநிதித்துவம் செய்வதாகும். பாசிஸ்டுகளின் மாபெரும் மலையும் மனிதத் தூசிகளாலானது.20

என்றபோதிலும், தொழிலாள வர்க்கமானது அதன் தலைமையின் பொறுப்பற்ற மற்றும் தோல்விவாதக் கொள்கைகளின் காரணத்தால் அரசியல்ரீதியாக அணிதிரட்டப்படாமல் இருந்தது. சமூக ஜனநாயகமானது, ’ஹிட்லர் ஆட்சிக்கு வந்தாலும் கூட ஜனநாயக அரசியலமைப்புச் சட்டமானது தொழிலாள வர்க்கத்திற்கான பாதுகாப்பினை வழங்கும்’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, வைய்மார் குடியரசு என்ற அழுகிய பிணத்தைக் கட்டிப்பிடித்தபடி இருந்தது. ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உணர்ச்சியாவேச பகட்டுப்பேச்சு என்ற முகமூடியின் பின்னால் தனது பெருகும் விரக்தியை மறைத்துக் கொண்டு, தனது அழிவுகரமான தந்திரோபாயத்தை மாற்றுவதற்கு மறுத்தது.

இறுதி ஆட்டம் 1933 ஜனவரியில் விளையாடப்பட்டது. இறுதியில் இரண்டு தொழிலாளர் கட்சிகளுமே எந்த தீவிரமான எதிர்ப்பையும் வழங்க முடியாத அளவுக்கு முடங்கிப் போயிருப்பதில் உறுதி ஏற்படுத்திக் கொண்டு, ஜேர்மன் முதலாளித்துவமானது அரசியல்சட்ட வழிமுறைகளின் மூலமாக அதிகாரத்தை எடுத்துக் கொள்ள ஹிட்லரை அழைத்தது. ஒரேயொரு ரவையும் கூட சுடப்படாமலேயே, ஹிட்லர் 1933 ஜனவரி 30 அன்று சான்சலராய் ஆனார்.

தொழிலாள வர்க்கம் அதன் வரலாற்றின் மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்தது, இந்தத் தோல்வியானது அடுத்து வந்த பேரழிவுக்கு பாதையமைத்துத் தந்தது.

தனது புத்தகத்தின் நிறைவுப் பக்கங்கள் ஒன்றில், கோல்ட்ஹாகன் எழுதுகிறார்:

நாஜி ஜேர்மன் புரட்சி … எந்த விதத்தில் அசாதாரணமான புரட்சியாக இருந்ததென்றால், உள்நாட்டில் அது பாரிய பலவந்தம் மற்றும் வன்முறை இல்லாமலேயே — முதல் சில ஆண்டுகளில் அரசியல் இடதுகள் ஒடுக்கப்பட்டனர் என்றபோதிலும் — எட்டப்பட்டிருந்தது. …பெருமளவுக்கு, அது ஜேர்மன் மக்களால் அமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைதிப் புரட்சியாக இருந்தது. உள்நாட்டு மட்டத்தில், நாஜி ஜேர்மன் புரட்சியானது, ஒட்டுமொத்தமாக, ஏக உடன்பாட்டு விடயமாகவே இருந்தது.21

இந்த வார்த்தைகளை நான் படிக்கின்ற வரைக்கும், கோல்ட்ஹாகன் ஒரு சோகமான மற்றும் ஓரளவுக்கு பரிதாபத்திற்குரிய மனிதராக இருப்பார், ஐரோப்பிய யூதர்களின் கதி குறித்த ஆய்வு புத்திஜீவித்தனரீதியாக —உணர்ச்சிவசப்பட்ட ரீதியாக இல்லையென்றால்— அவரை மீளாஅதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டிருந்திருக்கும் என்றே எண்ணத் தலைப்பட்டிருந்தேன். ஆனால் மேற்கண்ட பத்தியில் மிக அவலட்சணமான அம்சம் வெளிப்பட்டது. யூதர்களை நடத்திய விதம் தவிர்த்து, நாஜிப் ”புரட்சி”யானது —கோல்ட்ஹாகன் “எதிர்ப்புரட்சி” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை— அதிக பாதகமில்லாத ஒரு விடயமாகவே இருந்ததாம். “அரசியல் இடதுகளை ஒடுக்கியமை” குறித்த அவரது குறிப்பு, அது அத்தனை பெரிய விடயமில்லை என்பதைப் போல, இணைப்புக்குறிகளுக்கு இடையே செருகப்பட்டிருக்கிறது.

நாஜிக்கள் அதிகாரத்தை கைப்பற்றியமை “ஜேர்மன் மக்கள் எதிர்ப்பில்லாமல் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு அமைதியான புரட்சி” என்று கூறுவது ஒரு வெறுப்பூட்டக் கூடிய பொய்மைப்படுத்தலாகும். ”அரசியல் இடதுகள் மீதான ஒடுக்குமுறை” என்று கோல்ட்ஹாகன் குறிப்பிடுவதற்குள்ளே, உண்மையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் மற்றும் ஜேர்மன் புத்திஜீவித்தட்டின் ஆகச் சிறந்த பிரிவினரும் ஒரு நியாயமான மற்றும் கண்ணியமான உலகத்திற்கென கொண்டிருந்த நம்பிக்கைகளையும் அபிலாசைகளையும் பிரதிநிதித்துவம் செய்த பாரிய சோசலிஸ்ட் கட்சிகளை உருரீதியாக அழித்தமை அடங்கியிருந்தது. ஜேர்மன் சோசலிசம் என்பது வெறுமனே ஒரு அரசியல் இயக்கமன்று; அது தன்னுள் அத்தனை முரண்பாடுகளையும் கொண்டிருந்தும், மனித புத்திஜீவித்தனம் மற்றும் கலாச்சாரத்தின் மலர்ச்சிக்கான ஆதர்சம் மற்றும் வெளிப்பாடு இரண்டுமாயும் இருந்ததாகும். அதனை அழிப்பதற்கு நாஜிக்கள் கைத்தேர்ச்சி பெற்றிருந்த மிருகத்தனமான வழிமுறைகள் அவசியமாயிருந்தது.

புத்தகங்கள் எரிப்பு, விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஜேர்மனியில் இருந்து தப்பியோடியமை, டாகோ (Dachau) வதை முகாம் நிறுவப்பட்டு இடது-சாரி அரசியல் எதிரிகள் ஆயிரக்கணக்கில் சிறைப்படுத்தப்பட்டமை, தேசிய சோசலிஸ்டுகள் (நாஜி) தவிர்த்து மற்ற அத்தனை அரசியல் கட்சிகளையும் சட்டவிரோதமாக்கியமை, தொழிற்சங்கங்களது கலைப்பு — இவைதான் நாஜி ஆட்சியின் முதல் மாதங்களில், அதன் “அமைதிப் புரட்சி”யின் பிரதான சாதனைகளாக இருந்தன.

நாஜிக்கள் கட்டவிழ்த்து விட்ட பயங்கரத்தையும் தாண்டி, அங்கே விடாப்பிடியான மற்றும் கணிசமான எதிர்ப்பு இருந்தது.

வரலாற்றாசிரியர் F.L. கார்ஸ்டன் எழுதுகிறார்:

சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் ஒரு கணிசமான சிறுபான்மையினர் அழுத்தத்திற்குப் பணிந்து புதிய ஆட்சி உத்தரவிடக் கூடியதையெல்லாம் அமைதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கவில்லை. “அதிகாரத்தை கைப்பற்றியமை” மற்றும் ஆரம்ப மாதங்களில் நிகழ்ந்த பெருந்திரள் கைதுகள் இவற்றுடன் கைகோர்த்து நடந்த பரவலான பயங்கரம் அவர்களுக்குப் போதுமான அளவு கூறியிருந்தது. இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் தலைமறைவுக் குழுக்களை உருவாக்குவதன் மூலமும், இரகசிய துண்டறிக்கைகளை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பதன் மூலமும் நாஜி பிரச்சாரத்தை தம்மால் இயன்ற, ஆகச் சிறந்த அளவுக்கு இடைஞ்சல் செய்வதன் மூலமாக பதிலிறுப்பு செய்தனர். 1933 மற்றும் 1934 இல் இரகசியக் குழுக்கள் ஜேர்மனி எங்கும் நூற்றுக்கணக்கில் உதயமாயின — அத்துடன் பல சமயங்களில் அவை கெஸ்டாப்போ (Gestapo நாஜி ஆட்சியின் இரகசிய போலிஸ் பிரிவு) வினால் அதே அளவுக்கு துரிதமாக ஒழிக்கப்பட்டும் விட்டன... ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி 1933 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிறையிலடைக்கப்பட்டு சுமார் 75,000 உறுப்பினர்களை இழந்திருக்கலாம் —அவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர்— என்பதை நம்பகமான வகையில் மதிப்பிட முடியும். இது 1932 ஆம் ஆண்டில் பதிவு செய்திருந்த உறுப்பினர்களில் ஏறக்குறைய கால்வாசி எண்ணிக்கையினர் அளவாகும். 22

நாஜி பயங்கரமானது மில்லியன்கணக்கான ஜேர்மனியர்களை அச்சுறுத்தி பணியச் செய்திருந்தது. தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதியினர், தமது அமைப்புகளின் அவமானகரமான உருக்குலைவினால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்து எதையும் கண்கொண்டு பார்க்கத் தயங்கும் நிலைக்குப் பின்வாங்கி விட்டனர். இத்தனை தாண்டியும், நாஜிக்களின் இரக்கமற்ற மிருகத்தனத்தைக் கண்ட நிலையில், ஆட்சிக்கான கணிசமான செயலூக்கமான எதிர்ப்பு தொழிலாளர்களிடையே இருந்தது. 

கார்ஸ்டன் விளக்குகிறார்:

பெரும்பாலான தொழிலாளர்கள் நாஜி ஆட்சியுடன் சமரசப்பட்டுக் கொண்டு விட்டார்கள் என்றபோதிலும், அரசியல் காரணங்களுக்காக சிறைப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதும் உண்மையே. டோர்ட்முண்ட் நகரில் உள்ள Steinwache இல் அரசியல் குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டிருந்த 21,823 ஜேர்மானியர்களில் மிகப் பெருவாரியானோர் தொழிலாளர்கள். அரசியல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்றிருந்த சோலிங்கன் இல் இருந்தான 629 பேரில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தொழிலாளர்கள், பட்டியலில் இருந்த 49 இல்லத்தரசிகளில் பலரும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே என்று தாராளமாக அனுமானிக்க முடியும். ரூர் பிரதேசத்தில் உள்ள ஓபர்ஹவ்சன் நகரில் இந்த எண்ணிக்கை 90 சதவீதத்திற்கு நெருக்கமாக இருந்தது. தொழிற்துறைமயப்படல் குறைந்த பகுதிகளில் இந்த சதவீத எண்ணிக்கையும் குறைந்ததென்பதில் சந்தேகமில்லை, ஆனாலும் அரசியல் குற்றச்சாட்டுகளின் பேரில் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான பேர் நிச்சயமாக ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். 1933 முதல் 1944 வரையான ஆண்டுகளில், இடதுசாரி அரசியல் நடவடிக்கைக்காக எசன் நகரில் 2,162 பேர் கைது செய்யப்பட்டனர், டுஷ்ஸில்டோர்பில் இல் 1,721 பேர் கைது செய்யப்பட்டனர், இவர்களில் 297 பேர் பெண்கள். பிராண்டன்பேர்க் சீர்திருத்த சிறையில் போரின் சமயத்தில் 1,807 பேர் தண்டனையளிக்கப்பட்டிருந்தனர், இவர்களில் 775 பேர் தொழிலாளர்கள் அல்லது கலைஞர்களாக இருந்தனர். இது ஒரு பெருமிதமான வரலாறாகும். அவர்களால் ஆட்சியைத் தூக்கிவீச முடியவில்லை, ஆனால் அது சாத்தியமில்லாத ஒரு பணியாக அல்லவா இருந்தது. 1944 இல் இராணுவ மற்றும் பழமைவாத வட்டங்களில் அது முயற்சிக்கப்பட்டபோதும் அதேமட்டத்திற்கு அவர்கள் தோல்வியடைந்தனர். ஒரு போரில் தோற்றதன் பின்னர் தான் அந்த ஆட்சி இறுதியாக மறைந்தது, அதன் வீழ்ச்சியிலும் கூட அது தன் எதிரிகள் சூழ்ந்திருந்த நிலையிலேயே இருந்தது. சர்வாதிகாரத்தை பொறுத்தவரை சிதறிக்கிடந்த எதிர்ப்பு ஒரு நமைச்சல் மட்டும்தான் ஆனாலும் கூட —ஏனைய சிறுபான்மைகளை போலவே— இதுவும் இரக்கமின்றி துன்புறுத்தப்பட்டது. 23

இதுபோன்ற உண்மைகள் ஹிட்லரின் தன்னார்வமிக்க தண்டனை-நிறைவேற்றுனர்கள் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. யூதர்களை தவிர்த்து வேறெவர் மீதும் பாசிசத்தின் தாக்கம் குறித்த குறிப்பான கவலை ஏதும் அற்றதான ஒரு தோற்றப்போக்கையே கோல்ட்ஹாகன் வழங்குகிறார். யூதஇனப்படுகொலை என்பது யூதர்களுக்கு எதிராக "சாதாரண ஜேர்மானியர்கள்” இழைத்த ஒரு குற்றம் என்று கருத்துருவாக்கம் செய்வதன் மூலமாக ஜேர்மானியர்கள் ஒருவருக்கொருவர் என்ன செய்து விட்டிருக்கக் கூடும் என்பதில் குறிப்பான அக்கறை அவருக்கு இல்லை, இந்த குறுகிய மற்றும் கடுமையான கண்ணோட்டத்தில் இருந்து தான் அவரது துடுக்குத்தனம் தோற்றம் பெறுகிறது. எவ்வகையிலும் அவரது கருதுகோள்கள் ஜேர்மன் மக்கள் மத்தியில் ஹிட்லருக்கு எதிராக குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இருந்தது என்பதை ஒத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.

உண்மைவிபர அர்த்தத்தில் இது தவறானது என்பது மட்டுமல்ல. பேராசிரியர் கோல்ட்ஹாகனது நிலைப்பாட்டின் முரண்நகை என்னவென்றால் இது யூதப்படுகொலையின் காரணத்தையும் அவரை புரிந்து கொள்ள இயலாததாக்கி விடுகிறது, அதன் உலக வரலாற்று முக்கியத்துவத்தையும் அவர் புரிந்து கொள்ள இயலாததாக்கி விடுகிறது.

சோசலிசமும் யூதர்களது தலைவிதியும்

வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களாக யூதர்களது தலைவிதியும், தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியும் பிரிக்கவியலாமலும் துயரகரமான வகையிலும் பிணைக்கப்பட்டுள்ளதாகும். ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் வீழ்ச்சியானது ஐரோப்பிய யூதர்களது அழிப்புக்கு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. யூதர்களது ஜனநாயக உரிமைகள், சொல்லப் போனால், வாழ்வதற்கான அவர்களது உரிமையே கூட, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வலிமையைச் சார்ந்ததாக இருந்தது. யூதர்கள் கூட்டமாய் கொலைசெய்யப்பட்டமை 1933 இல் தொடங்கியதல்ல. இத்தனை பெரிய அளவிலான ஒரு குற்றத்தை ஒழுங்கமைத்து நடத்துவதற்கு முன்பாக, நாஜிக்கள், ஜேர்மன் சமூகத்தின் புத்திஜீவித்தனரீதியாய் உயிர்நிலையான, முற்போக்கான, மற்றும் மனிதாபிமானக் கூறுகளை பயமுறுத்தி அழிக்க வேண்டியிருந்தது.

யூதஇனப் படுகொலை என்பது, இறுதி ஆய்வில், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கிவீசத் தவறியமைக்கு யூத மக்களும் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலமும் கொடுக்க நேர்ந்த விலையாகும்.

இந்த படிப்பினைதான் மறக்கவொண்ணாததாகும். முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மீண்டுமொருமுறை வெடிப்புமிக்க பரிணாமங்களை எடுத்துக் கொண்டிருக்கிறதொரு உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக முதலாளித்துவத்தின் வெறிகொண்ட செயல்பாடுகளால், பரந்த எண்ணிக்கையிலான மக்கள், உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் இருந்து –முழுமையாக பிரிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாதென்றால்– கொஞ்சம் கொஞ்சமாக விளிம்புக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலுமே, வேலைவாய்ப்பின்மை அளவு 10 சதவீதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கிறது.  உலக முதலாளித்துவ சந்தையின் சமூகப் பைத்தியக்காரத்தனத்திற்கு ஒரு உண்மையான மாற்றீடு அபிவிருத்தி செய்யப்படவில்லையானால், முதலாளித்துவத்திற்கு பலியானவர்கள் நோக்குநிலை தவறி வலது-சாரி வாய்வீச்சாளர்களின் ஆவேசப் பகட்டுப் பேச்சுகளுக்கு ஆட்படும் நிலையில் இருக்கிறார்கள்.

ரஷ்யாவில் யூத-விரோதம் மீண்டும் தலைகாட்டுவது குறித்த ஒரு அறிக்கை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் சமீபத்தில் வெளியாகியிருந்தது:

1991 இல் கம்யூனிசம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பொறிவைத் தொடர்ந்து உருவான வேதனைமிக்க பொருளாதார மற்றும் சமூக திடீர்மாற்றத்தினால் வெறுப்படைந்தும், அத்துடன் அவர்களது அதிருப்திகளை அறுவடை செய்து கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளால் தூண்டப் பெற்றும், பலரும் வழக்கமான பலியாடுகளாகிய யூதர்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 24

இத்தகைய நிகழ்வுகள் முன்நிறுத்தும் அபாயத்தை எதிர்கொள்வதில் கோல்ட்ஹாகன் படைப்பு என்னவிதமான மதிப்பைக் கொண்டிருக்கிறது? 

பொருளாதார நெருக்கடியும் சிக்கல்களும் ஆழமடைகின்ற நிலைமைகளின் கீழ், 1930களின் படிப்பினைகள் மீண்டுமொருமுறை அவசரமான சமகாலப் பொருத்தத்தை ஏற்கும். அதனால் தான் யூதஇனப் படுகொலையின் மூலங்களையும் உண்மையான காரணங்களையும் கற்பதும் உள்வாங்கிக் கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது.

1 Lecture delivered April 17, 1997 at Michigan State University in East Lansing.

2 Andrew Michael Roberts, The Novel: From Its Origins to the Present Day (London: Bloomsbury, 1993), p. 173.

3 Will Reissner, ed., Documents of the Fourth International: The Formative Years 1933–40 (New York: Pathfinder Press, 1973), p. 312.

4 Daniel Goldhagen, Hitler’s Willing Executioners: Ordinary Germans and the Holocaust, (New York: Alfred A. Knopf, 1996), p. 6.

5 Ibid., p. 9.

6 Ibid., p. 33.

7 Robert S. Wistrich, Socialism and the Jews: The Dilemmas of Assimilation in Germany and Austria-Hungary (London and Toronto: Associated University Presses, 1982), p. 56.

8 Quoted in Socialism and the Jews, p. 53.

9 Quoted in Zeev Sternhell, Neither Right Nor Left: Fascist Ideology in France, trans. David Maisel (Princeton: Princeton University Press, 1986), pp. 45–46.

10 Ibid., p. 46.

11 Quoted in Socialism and the Jews, p. 94.

12 Ibid., 94–101.

13 Orlando Figes, A People’s Tragedy: A History of the Russian Revolution (New York: Viking Press, 1996), pp. 196–197.

14 V.I. Lenin, Collected Works, Volume 10 (Moscow: Progress Publishers, 1972), p. 509.

15 Leon Trotsky, The Struggle Against Fascism in Germany (New York: Pathfinder Press, 1971), pp. 523–524.

16 Konrad Heiden, Der Fuehrer, (Boston: Houghton Mifflin, 1944), p. 58.

17 Ibid., p. 66.

18 Ibid.

19 Henry A. Turner, Hitler’s Thirty Days to Power: January 1933 (New York: Addison-Wesley, 1996), pp. 14–15.

20 The Struggle Against Fascism in Germany, p. 164.

21 Hitler’s Willing Executioners, p. 456.

22 F.L. Carsten, The German Workers and the Nazis (Aldershot: Scolar Press, 1995), p.180.

23 Ibid., p. 182.

24 Available: http://www.nytimes.com/HYPERLINK "http://www.nytimes.com/1997/04/15/world/success-