சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Saudi Arabia, Egypt prepare US-backed invasion of Yemen

ஏமன் மீதான அமெரிக்க-ஆதரவு படையெடுப்புக்கு சவூதி அரேபியா, எகிப்து தயாரிப்பு செய்கின்றன

By Niles Williamson
27 March 2015

Use this version to printSend feedback

ஏமனின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஹௌதி போராளிகள் குழுவினரைத் தோற்கடிக்கவும் மற்றும் சுற்றிவளைக்கப்பட்ட ஜனாதிபதி அப்த் ரப்புஹ் மன்சூர் ஹாதியின் கட்டுப்பாட்டை மறுஉறுதிப்படுத்தவும் நோக்கங்கொண்ட அமெரிக்க-ஆதரவிலான ஒரு ஏமன் படையெடுப்புக்கு சவூதி அரேபியா மற்றும் எகிப்து தயாரிப்பு செய்து வருகின்றன.

வடக்கில் சவூதி அரேபியாவிலிருந்தும், மேற்கே செங்கடலில் இருந்தும், தெற்கே அரேபிய கடலில் இருந்தும் மும்முனை தாக்குதல் நடத்தப்படுமென எகிப்திய அதிகாரிகள் அசோசியேடெட் பிரஸிற்கு தெரிவித்தனர். அதிகபட்சம் ஐந்து எகிப்திய துருப்பு கப்பல்கள் ஏமன் கடற்கரையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ளன. விமான தாக்குதல்கள் ஹௌதி கிளர்ச்சியாளர்களைப் போதுமான அளவிற்கு பலவீனப்படுத்திய பின்னர், இந்த தாக்குதல் தொடங்குமென அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் ஏமன் மீதான தாக்குதல், அதாவது Decisive Storm நடவடிக்கை என்று குறியீடு பெயரைக் கொண்ட இது, ஹௌதியரை ஒடுக்குவதற்காக வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும்பான்மை சுன்னி முஸ்லீம் நாடுகளின் ஒரு கூட்டணியிடமிருந்து வான்வழி ஒத்துழைப்பு மற்றும் தரைப்படை துருப்புகளைப் பெற்று வருகிறது. ஹௌதியர் இஸ்லாமின் ஜாய்தி ஷியைட் (Zaydi Shiite) பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, ஷியைட் இனத்தவர் மேலோங்கிய ஈரானால் ஆதரிக்கப்பட்டு வருகின்றனர்.

குறைந்தபட்சம் 150,000 சவூதி சிப்பாய்களுக்கு கூடுதலாக, எகிப்து, பாகிஸ்தான், ஜோர்டான் மற்றும் சூடானில் இருந்து இராணுவ படைகளும் தரைவழி படையெடுப்பில் பங்கெடுக்க தயாரிப்பு செய்து வருவதாக வியாழனன்று சவூதி தொலைக்காட்சி Al Arabiya அறிவித்தது. சவூதி அரேபியா ஏற்கனவே ஏமனுடன் ஒட்டிய அதன் தெற்கு எல்லையோரத்தில் சிப்பாய்களையும் மற்றும் கனரக படைத் தளவாடங்களையும் ஒன்றுதிரட்ட தொடங்கியுள்ளது.

அப்பிராந்தியம் முழுவதிலுமான நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தரைப்படைகளின் திடீர் தாக்குதல், அந்த உள்நாட்டு போரை ஒரு பிராந்தியம் தழுவிய பகிரங்க வகுப்புவாத போராக மாற்றக்கூடும் என்பதோடு, அது சவூதி சுன்னி முடியாட்சி உடன் அணிசேர்ந்த படைகளை ஷியைட்-மேலாதிக்கம் கொண்ட ஈரான் அரசாங்கத்துடன் இணைந்த படைகளுக்கு எதிராக நிலைநிறுத்தும்.

சூடானின் பாதுகாப்பு மந்திரி அப்தெல் ரஹீம் மொஹம்மத் ஹூசைன் வியாழனன்று அறிவிக்கையில், தரைப்படை துருப்புகளுக்கு கூடுதலாக அவரது நாடு போர் விமானங்களையும் வழங்குமென்றும், அவை ஏற்கனவே அப்பிராந்தியத்திற்கு செல்லும் நிலையில் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். ஏடன் வளைகுடாவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவும் மற்றும் ஹௌதி போக்குவரத்து பாதைகளை முற்றுகையிடுவதற்காகவும் எகிப்திய அராசங்கம் செங்கடலுக்குள் நான்கு போர் கப்பல்களை அனுப்பி உள்ளது.

வான்வழி தாக்குதல்கள் மற்றும் உடனே நிகழக்கூடிய படையெடுப்பு ஆகியவற்றிற்கு வாஷிங்டன் உடனடியாக அதன் ஆதரவை அறிவித்திருந்தது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் பெர்னாடெட் மீஹன், ஹௌதியரை கண்டித்தும் மற்றும் சவூதி தலைமையிலான தாக்குதலுக்கு ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவைத் தெளிவுபடுத்தியும் புதனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மீஹனின் கருத்துப்படி, ஏமனில் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக “அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க சவூதி அரேபியாவுடன்" அமெரிக்கா "ஒரு கூட்டு திட்டமிடல் குழுவை ஸ்தாபித்து வந்தது.”

வியாழனன்று சவூதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா கூட்டு-ஒத்துழைப்பு கவுன்சில் அரசுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவை மீண்டும் எடுத்துரைத்தார். கெர்ரி "ஹௌதியருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக கூட்டணியின் பணியை மெச்சியதோடு, உளவுத்தகவல் பரிமாற்றம், இலக்கு வைப்பதில் உதவுவது, ஹௌதி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆலோசனை மற்றும் தளவாட பரிவர்த்தனை உதவிகளை வழங்குவது உட்பட அந்த கூட்டணியின் முயற்சிகளுக்கு அமெரிக்காவினது ஒத்துழைப்பை சுட்டிக் காட்டியதாக" வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் ராய்டர்ஸிற்கு தெரிவித்தார்.

பெண்டகனின் மத்திய கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் லாய்ட் ஆஸ்டின் வியாழனன்று அமெரிக்க செனட் விவாத கூட்டத்தில் உரையாற்றுகையில், மண்டெப் மற்றும் ஹோர்முஸ் மூலோபாய ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதைகள் திறந்திருப்பதை, அந்த மோதலின் போது அமெரிக்கா உறுதிப்படுத்தி வைக்குமென தெரிவித்தார். “அந்த இரண்டு ஜலசந்திகள் வழியாக நாம் தடையற்ற வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவது நமது முக்கிய நலன்களில் ஒன்றாகும்,” என்று அவர் அங்கே கூடியிருந்த செனட்டர்களுக்குத் தெரிவித்தார். USS Iwo Jima மற்றும் USS Fort McHenry ஆகிய இரண்டு அமெரிக்க போர்கப்பல்கள், ஏமன் கடற்கரையை ஒட்டியவாறு செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹௌதி தாக்குதலுக்கு எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த வாரம் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகள் ஏமனை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் உளவுத்துறை கோப்புகளை அங்கே விட்டுவிட்டதாகவும், அவை போராளிகள் குழுக்களின் கரங்களில் சிக்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வான்வழி தாக்குதல்களுக்கு பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களும் ஆதரவளித்து வருகின்ற அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரி பெடிரிகா மொஹிரினி, ஓர் இராணுவ தாக்குதலைக் குறித்து எச்சரித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வாகாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்ட மொஹிரினி, “இந்த முக்கிய கட்டத்தில் பிராந்திய அரசுகள் அனைத்தும், அவசர விடயமாக கொண்டு, பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்க பொறுப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் நடந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி மொஹம்மத் ஜாவித் ஜாரீப் சவூதி-தலைமையிலான நடவடிக்கையை எதிர்த்து செய்தியாளர்களுக்கு ஓர் அறிக்கை அளித்தார். “ஏமனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அந்நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் இராணுவ நடவடிக்கை கூடுதலாக இரத்தஆறையும் மற்றும் இன்னும் மரணங்களையும் உண்டாக்குவதைத் தவிர வேறு விளைவை உண்டாகாது,” என்றார்.

ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மார்ஜெஹ் அஃப்காம் வியாழனன்று இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர அழைப்புவிடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “ஏமனுக்கும் அதன் மக்களுக்கும் எதிரான எல்லா இராணுவ தாக்குதல்களையும் மற்றும் வான்வழி தாக்குதல்களையும் ஈரான் உடனடியாக நிறுத்த விரும்புகிறது,” என்று அஃப்காம் தெரிவித்தார். ஏமனில் நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் "மேற்கொண்டும் நிலைமையைச் சிக்கலாக்கும்" என்பதோடு, “சமாதானமான வழிகளில் நெருக்கடியைத் தீர்ப்பதற்குரிய முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும்" என்று அப்பெண்மணி எச்சரித்தார்.

அமெரிக்காவிற்கான சவூதி அரேபிய தூதர் அடெல் அல் ஜூபெர் வாஷிங்டனில் உள்ள அந்நாட்டின் தூதரகத்திலிருந்து பேசுகையில், அந்த வான்வழி தாக்குதல்களில் பங்கெடுக்கும் சவூதி அரேபியா, எகிப்து, மொரோக்கோ, ஜோர்டான், சூடான், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் பஹ்ரெய்ன் ஆகியவற்றின் போர்விமானங்களுடன் புதனன்று நள்ளிரவு இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக அறிவித்தார்.

ஏமன் எங்கிலும் உள்ள இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்துப்படி, 25க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், தலைநகர் சானா மீதான விமான தாக்குதல்களில் 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள் என்பதை செய்திகள் சுட்டிக் காட்டின.

வடக்கு மாகாணம் சாடாவில் உள்ள ஹௌதியின் சொந்த பிராந்தியமும், அல் தாய்லாமி விமானத்தளமும், சானாவில் உள்ள சர்வதேச விமான நிலையமும் மற்றும் தெற்கில் உள்ள ஏடன் துறைமுக நகருக்கு வடக்கே உள்ள அல் அட்னான் விமானத் தளமும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சிறப்பு நடவடிக்கைகளுக்கான சிப்பாய்களின் ஒரு முன்னாள் இராணுவத் தளமும் அறிவிக்கப்பட்ட இலக்குகளில் உள்ளடங்கும். ஹௌதியருடன் இணைந்து சண்டையிட்டு வரும் முன்னாள் நீண்டகால சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் சலெஹிற்கு விசுவாசமான இராணுவ படைகளும் விமான தாக்குதல்களில் இலக்கில் வைக்கப்பட்டுள்ளன.

2011 மற்றும் 2012 இல் பாரிய போராட்டங்களின் முன்னால் பதவியை இராஜினாமா செய்த சலெஹ், ஹாதியைப் பதவியிலிருந்து நீக்கி மீண்டும் அந்நாட்டின் மீது கட்டுப்பாட்டைப் பெறும் ஒரு முயற்சியில் அவரது ஒத்துழைப்பையும் மற்றும் இன்னமும் அவருக்கு விசுவாசமாக உள்ள இராணுவ படைகளையும் ஹௌதியருக்குப் பின்னால் அனுப்பி உள்ளார். ஹௌதி கிளர்ச்சியாளர்களது சில பிரிவுகள் சலெஹின் மகன் அஹ்மத் அலி அப்துல்லாஹ் சலெஹை ஏமனின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு அழைப்புவிடுத்துள்ளன.

ஷியைட் ஹௌதி போராளிகள் குழுக்களால் சானாவில் ஒரு மாதகால நீண்ட முற்றுகையில் வைக்கப்பட்ட பின்னர், ஜனவரியில் வீட்டுக் காவலின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஹாதி அவரது இராஜினாமை அறிவிக்க நிர்பந்திக்கப்பட்டார். ஹாதி பெப்ரவரியில் அந்த கூண்டிலிருந்து, தெற்கு துறைமுக நகரமான ஏடனுக்குத் தப்பிச் சென்று, அங்கே அவர் ஹௌதியர் மீதான ஒரு தாக்குதலுக்கான இராணுவ ஒத்துழைப்புக்கு வேலை செய்து வந்தார். ஹாதி ஏமனிலிருந்து தப்பி சென்றுவிட்டதாகவும், அவர் சவூதி தலைநகர் ரியாட்டில் இருப்பதாகவும் வியாழனன்று சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.