சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Turkey after the elections

தேர்தல்களுக்குப் பின்னர் துருக்கி

Peter Schwarz
7 November 2015

Use this version to printSend feedback

துருக்கியில் நவம்பர் 1 நாடாளுமன்ற தேர்தல்கள், அதீத சமூக பதட்டங்கள் மற்றும் தீவிரமடைந்துவரும் வன்முறை நிலைமைகளின் கீழ் நடந்தன.

வாக்குப்பதிவுக்கு முன்னதாக, துருக்கிய விமானங்கள் சிரியா மற்றும் ஈராக்கிய இலக்குகள் மீது குண்டுவீசின. சிரியா மற்றும் ஈராக் போரானது, எல்லைகளைக் கடந்து சூருக் மற்றும் அன்காராவில் இரத்தக்களரியான பயங்கரவாத தாக்குதல்களின் வடிவில் துருக்கிக்குள் பரவியது. இஸ்லாமியவாத AKP (நீதி மற்றும் அபிவிருத்திக்கட்சி) அரசாங்கம், PKK க்கு (குர்திஷ் தொழிலாளர் கட்சி) எதிரான தாக்குதலை மீண்டும் தொடங்கியதுடன், குர்திஷ் நகரங்களில் அவசரகால நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தியது. ஜனாதிபதி ரெசெப் தஹீப் எர்டோகான் தலைமையிலான அரசாங்கம் நீதிமன்ற வழிவகைகள் மூலமாகவும், கூலிப்படை குண்டர்கள் மற்றும் பொலிஸைக் கொண்டும் அதன் அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் முக்கிய ஊடக நிறுவனங்களைத் தாக்கியது.

அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடியும், அத்துடன் சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து நூறாயிரக் கணக்கான அகதிகளின் உள்வரவும் சேர்ந்து, இந்த அரசியல் நெருக்கடியும் மற்றும் மக்கள் எதிர்ப்பும் அதிகரிக்க எரியூட்டியுள்ளன. ஐந்துக்கும் குறைவான மாதங்களுக்கு முன்னர், எர்டோகான் மற்றும் அவரது AKP  கட்சியும் தேசிய தேர்தல்களில் அவர்களது நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் AKP மீண்டும் அதன் பெரும்பான்மையை மீட்டுப்பெற்றுள்ளதுடன், கடந்த ஞாயிறுக்கிழமை தேர்தலின் இந்த எதிர்பாரா முடிவு, இத்தகைய நெருக்கடிகள் மற்றும் முரண்பாடுகளில் எதையும் தீர்க்கப் போவதில்லை. அதற்கு மாறாக அது வன்முறையான வர்க்க போராட்டம் மற்றும் அரசியல் மோதலின் ஒரு காலக்கட்டத்தை முன்னறிவிக்கிறது. AKP ஒரு ஏதேச்சாதிகார ஆட்சியை ஸ்தாபிக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை நேரடியாக தாக்குவதற்கும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அரச மற்றும் பாதுகாப்பு எந்திரங்களைப் பாவிக்க முயலும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன தலையீடு மட்டுமே, துருக்கியையும் மற்றும் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையுமே மேற்கொண்டு ஓர் உள்நாட்டு போர் மற்றும் சர்வாதிகார சுழலுக்குள் விழுவதிலிருந்து தடுக்க முடியும்.

எர்டோகானின் AKP அரசாங்கம் நெருக்கடியின் ஓர் ஆட்சியாக உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளால் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட போர்கள் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளைச் சின்னாபின்னமாக்கி உள்ளன.

முதல் உலக போருக்கு முந்தைய பால்கன்களைப் போலவே மத்தியக் கிழக்கும் ஒரு யுத்தக்களமாக மாறியுள்ளது. அதில் பிரதான சக்திகள் எண்ணெய், செல்வாக்கு எல்லைகள் மற்றும் புவிசார் அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றுடன் ஒன்று சண்டையிடுகின்றன. சிரியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான ஒரு பினாமி போர் உருவானது, அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்துகிறது.

இத்தகைய சர்வதேச காரணிகள் தான் துருக்கிய அரசியலில் மேலாளுமை செலுத்துகின்றன. AKP அரசாங்கம் ஒரு கருவியாக இருந்து தீவிரப்படுத்தியுள்ள இந்த சிரிய போரின் இக்கட்டான நிலைமை, பழைய ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் அடிச்சுவட்டிலிருந்து எழும் அரபு உலகம், கருங்கடல் பிராந்தியம், காகசஸ் மற்றும் பால்கன்களுக்குள் அதன் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவாக்குவதற்கான மற்றும் மத்திய கிழக்கின் "புலியாக" ஆவதற்குரிய அதன் கனவுகளைச் சிதைத்துள்ளது. AKP தலைவர் அஹ்மெட் தாவ்டோக் இன் "அண்டைநாடுகளுடன் பிரச்சினையில்லா" கொள்கை, "அண்டை நாடுகளுடன் பிரச்சினைகள்" எனும் ஒரு யதார்த்தமாக மாறியுள்ளது.

இந்த நெருக்கடியிலிருந்து எழும் பிரச்சினைகளுக்கு துருக்கியில் உள்ள எந்த முதலாளித்துவ கட்சிகளிடமும் பதில் கிடையாது. இது இஸ்லாமிஸ்ட் AKP விடயத்தில் மட்டுமல்ல, மாறாக கேமாலிச CHP (குடியரசு மக்கள் கட்சி), அதிதீவிர தேசியவாத MHP (தேசியவாத இயக்க கட்சி), மற்றும் குர்திஷ்-சார்பு HDP (மக்களின் ஜனநாயக கட்சி) ஆகியவற்றின் விடயத்திலும் உண்மையாகும்.

தேர்தல் முடிவுக்களுக்கு இடையிலும், போர்-எதிர்ப்பு உணர்வும் தொழிலாள வர்க்க எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், மெர்சின் (Mersin) நகரின் கண்ணாடி நிறுவன தொழிலாளர்கள் ஓர் ஆலை ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட செய்திகள் வெளியாயின. பெருந்திரளான துருக்கிய தொழிலாளர்கள் வலதிற்கு அல்ல, இடதிற்கு நகர்ந்து வருகின்றனர்.

அதன் அரசியல் போட்டியாளர்களது திவால்நிலைமை காரணமாக மட்டுமே AKP ஆல் வெற்றிபெற முடிந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமடைந்திருந்த வன்முறைக்கு இடையே, அது ஸ்திரப்பாடு மற்றும் தேச ஒற்றுமைக்கான ஒரு காரணியாக தன்னைத்தானே காட்டிக்கொண்டு, MHP இன் ஸ்தாபகர் அல்பார்ஸ்லான் துர்க்கஸ் இன் மகன் ருக்றுல் துர்க்கஸ் தலைமையிலான தேசியவாத வாக்காளர்களையும் மற்றும் பழமைவாத குர்தியர்களையும் ஈர்த்திருந்தது. AKP இன் தேர்தல் வெற்றிகள் பிரதானமாக MHP மற்றும் HDP இன் இழப்பில் விளைந்ததாகும்.

அத்தேர்தல் துருக்கிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை உயர்த்திக் காட்டுகிறது, அது அதன் வரலாறு நெடுகிலும் நிஜமான ஜனநாயக நிலைமைகளை ஸ்தாபிக்க இலாயக்கற்று இருந்துள்ளது. அது இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோவின் நிழலில் செலவிட்டதுடன், தொழிலாள வர்க்கத்தை ஒடுக்க மீண்டும் மீண்டும் இராணுவ சர்வாதிகாரங்கள் மற்றும் பாசிச வன்முறைக்கு திரும்பியது. கேமாலிச CHP மற்றும் MHP இன் பரம-தேசியவாதிகள் இத்தகைய கொள்கைகளுடன் அடையாளம் காணப்பட்டார்கள்.

அரசு எந்திரத்திற்குள் உள்ள எதிரிகளால் அதன் சொந்த வளர்ச்சி அச்சுறுத்தப்பட்ட வரையில் மட்டுந்தான், AKP, இராணுவத்தின் ஒரு எதிர்ப்பாளராக மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கு வக்காலத்து வாங்கும் ஒரு கட்சியாக இருந்தது. அதிகாரம் ஏற்றதும், அது அதன் கேமாலிச மற்றும் தேசியவாத முன்னோடிகளைப் போலவே அதே சர்வாதிகார போக்குகளை வளர்த்தெடுத்தது.

HDP ஐ பொறுத்த வரையில், அது குர்திஷ் மக்களுக்காக பேசவில்லை, மாறாக குர்திஷ் முதலாளித்துவ வர்க்கத்திற்காக மற்றும் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க அடுக்குகளுக்காக பேசுகிறது. குர்திஷ்களின் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன மற்றும் அரசால் HDP குற்றவிசாரணைக்கு இழுக்கப்படுகிறது என்ற உண்மை அதை குர்திஷ் முதலாளித்துவ முற்போக்குத்தனத்தின் கட்சியாக மாற்றிவிடாது. அதற்கு நேர்மாறாக, துருக்கிய முதலாளித்துவ வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளைப் போலவே, HDP உம் அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு அதன் சேவைகளை வழங்கி, அவற்றின் ஆதரவைக் கவர தலைப்படுகின்றன.

சிரியாவில் அமைதி திரும்ப HDP அழைப்புவிடுக்கின்ற போதினும், அது அப்பகுதியிலிருந்து ஏகாதிபத்திய படைகள் வெளியேறுவதற்கோ, அமெரிக்க இராணுவ மற்றும் சிஐஏ தளங்களை மூடுவதற்கோ, நேட்டோவிலிருந்து துருக்கி வெளியேற வேண்டுமென்றோ அழைப்புவிடுக்கவில்லை. அது கோரி வருகிற பிராந்திய தன்னாட்சி அல்லது சுதந்திர அரசு, குர்திஷ் மக்களுக்கு சிறந்த சமூக நிலைமைகளையோ அல்லது கூடுதலான ஜனநாயக உரிமைகளையோ பெற்றுக்கொடுக்காது, மாறாக குர்திஷ் உயரடுக்குகளுக்கு தான் நிறைய தனிச்சலுகைகளைப் பெற்றுத்தரும்.

HDP க்கு எது உண்மையோ அது PKK க்கும் பொருந்துகிறது, அது அதன் ஆயுதமேந்திய போராட்ட தந்திரோபாயத்தில் மட்டுமே HDP இல் இருந்து வேறுபடுகிறது. இந்த தந்திரோபாயம் பிற்போக்குத்தனமானதாகும். கொரில்லா போர் குர்திஷ் மற்றும் துருக்கிய தொழிலாளர்களுக்கு இடையே ஒரு பிளவை வளர்ப்பதுடன், அது வலதுசாரி துருக்கிய தேசியவாதிகளின் அரைத்த மாவையே அரைக்கிறது. துருக்கிய அரசு மீது அழுத்தத்தை பிரயோகிப்பதே அதன் நோக்கமாகும். குர்திஷ் உயரடுக்குகளுக்கு கூடுதல் அரசியல் அதிகாரத்தையும் மற்றும் குர்திஷ் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதிலிருந்து ஒரு பங்கு மிச்சமீதிகளையும் வழங்கினால், துருக்கிய அரசாங்கத்துடன் எந்நேரத்திலும் ஓர் உடன்படிக்கையை செய்துகொள்ள PKK தலைவர் அப்துல்லா ஒச்சலான் (Abdullah Öcalan) தயாராக இருக்கிறார்.

PKK இன் சிரிய கிளையான மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் (YPG), இப்போது அவற்றிற்கு ஆயுதப் பயிற்சிகளும் மற்றும் ஆயுத தளவாடங்களும் வழங்கி வரும் அமெரிக்க இராணுவத்துடன் நெருக்கமாக வேலை செய்து வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் மட்டுந்தான் மேற்கொண்டு உள்நாட்டு போருக்குள் சரிவதிலிருந்து தடுக்க முடியும். ஆகவே தொழிலாளர்கள், முதலாளித்துவ கட்சிகளின் மற்றும் பல்வேறு போலி-இடது குழுக்களின் முடமாக்கும் மேலாளுமையிலிருந்து தங்களைத்தாங்களே விடுவித்துக் கொண்டு, அவர்களது சொந்த வேலைத்திட்டத்துடன் தலையீடு செய்ய வேண்டும். போருக்கு எதிரான போராட்டமும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும் பிரிக்கவியலாதவையாகும்.

ஏகாதிபத்திய சக்திகளும் மற்றும் பிராந்திய உயரடுக்குகளும் மத்திய கிழக்கையும் மற்றும் அதன் பொருளாதார ஆதாரவளங்களையும் மறுபங்கீடு செய்து கொள்வதற்காக சண்டையிடுகின்றன. அவை 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் தோற்கடிக்கப்பட்ட ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் பெரும் பாகங்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட எல்லைகள் மற்றும் அரச கட்டமைப்புகளை உடைத்து, அவற்றின் இடத்தில் புதிய எல்லைகள் மற்றும் நவ-காலனித்துவ ஒடுக்குமுறையைக் கொண்டு பிரதியீடு செய்ய விரும்புகின்றன.

ஆனால் இந்த நிகழ்ச்சிநிரல் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் தலையீடு செய்து துருக்கியின் முதலாளித்துவ வர்க்க கட்சிகளுக்கு அதன் மாற்றீட்டை முன்வைக்க ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும், மத்திய கிழக்கின் ஒரு சோசலிச கூட்டாட்சி குடியரசு என்ற முழக்கத்தின் கீழ் நாடு, இன, பிராந்திய வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதுமே அதற்கான பதிலாகும்.

மிக அவசரமான பணி, துருக்கியிலும் அப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளாக சுயாதீனமான புரட்சிகர தொழிலாளர் கட்சிகளை ஸ்தாபிப்பதாகும்.