சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Twenty-five years since the reunification of Germany

ஜேர்மனியின் மறுஐக்கியத்திற்கு பின்னர் இருபத்தைந்து ஆண்டுகள்

Peter Schwarz
5 October 2015

Use this version to printSend feedback

அக்டோபர் 3, 1990 இல், 17 மில்லியன் மக்களைக் கொண்ட ஓர் அரசாக விளங்கிய ஜேர்மன் ஜனநாயக குடியரசு (Deutsche Demokratische Republik, DDR என்று அறியப்பட்ட கிழக்கு ஜேர்மனி) அதன் உருவாக்கத்தின் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் கலைக்கப்பட்டு, ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு (Bundesrepublik Deutschland) இனுள் உள்ளடக்கப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி இரண்டிலுமே, பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுந்தான் அந்த நடவடிக்கையின் விளைவுகளைக் குறித்து அறிந்திருப்பார்கள். அங்கே எந்த பொது விவாதமோ அல்லது வெகுஜன வாக்கெடுப்போ நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு அரசியல் கட்சியாலும் மற்றும் ஊடகங்களாலும் அங்கே செய்யப்பட்ட பிரச்சாரம், DDR கலைப்பதை, தேசியமயப்பட்ட சொத்துக்களை தனியார்மயமாக்குவதை மற்றும் முதலாளித்துவத்தை அறிமுகம் செய்வதை சுதந்திரம், ஜனநாயகம், செல்வவளம் மற்றும் சமாதானத்திற்கு சமமானதென்று பிரகடனப்படுத்தியது. சான்சிலர் ஹெல்முட் கோல் (CDU) DDR இன் பெருந்திரளான மக்கள் பேரணிகளில் உரையாற்றினார், அப்பிராந்தியம் "வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உரிய சம்பளம் வழங்கும், பூத்துக்குலுங்கும் பெருநிலப்பகுதிகளாக" மாற்றப்படுமென வாக்குறுதியளித்தார்.

DDR இன் அரச கட்சியான ஸ்ராலினிச சோசலிச ஐக்கிய கட்சியும் (Sozialistische Einheitspartei Deutschlands - SED) இந்த பிரச்சாரத்தை ஆதரித்தது. “என்னைப் பொறுத்த வரையில், ஐக்கியத்திற்கான அந்த பாதை தவிர்க்கவியலாது இருந்தது, அத்துடன் அதை தீர்மானகரமா பின்பற்ற வேண்டி இருந்தது,” என SED இன் கடைசி பிரதம மந்திரி ஹன்ஸ் மொட்ரோவ் அவரது நினைவுக்குறிப்புகளில் எழுதியிருந்தார்.

1989 இன் இறுதியில் SED இன் தலைமை பதவியில் இருந்தவரும் மற்றும் இடது கட்சியில் (Linkspartei) இப்போது ஒரு முன்னணி பாத்திரம் வகிப்பவருமான கிரிகோர் கீசி, இவ்வாரம் ஒரு நேர்காணலில் கூறுகையில், “நடுத்தர பதவிகளில் இருந்த கட்சி நடவடிக்கையாளர்கள் உட்பட கிழக்கின் உயரடுக்குகளை ஐக்கிய ஜேர்மனிக்குள்" ஒன்றிணைக்கும் பணியை அவர் ஏற்றிருந்ததாக தெரிவித்தார்.

கீசி பொருத்தமாக SED இன் பாத்திரத்தை தொகுத்தளித்துள்ளார். உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதிலிருந்து விலகி, பிரதானமாக தேசியமயப்பட்ட சொத்துக்களை அதன் சொந்த தனிச்சலுகைகளின் ஆதாரமாக கருதிய ஒட்டுண்ணித்தனமான அந்த ஸ்ராலினிச அதிகாரத்துவ கட்சி, "கிழக்கு உயரடுக்குகளுக்காக" பேசியது. பாரிய போராட்டங்களை முகங்கொடுத்திருந்த நிலையில், அந்த அதிகாரத்துவம், DDR ஆல் பேணப்படுவதை விட முதலாளித்துவ சொத்துடைமையின் அடித்தளத்தில், மேற்கு ஜேர்மன் அரசின் பாதுகாப்பின் கீழ் அதன் தனிச்சலுகைகள் சிறப்பாக பாதுகாக்கப்படும் என்று தீர்மானித்தது.

தொழிலாள வர்க்கத்தை பொறுத்த வரையில், முதலாளித்துவ மீட்சியின் விளைவுகள் பேரழிவுகரமாக இருந்தன. ஏற்கனவே அக்டோபர் 3 க்கு முன்னரே, மேற்கத்திய பெருநிறுவனங்களும் வங்கிகளும் DDR இன் தேசியமயப்பட்ட சொத்துக்கள் மீது கழுகுகளைப் போல வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு உத்தரவாதமளித்து, கிழக்கு ஐரோப்பாவில் முன்னணி பாத்திரம் வகித்த கிழக்கு ஜேர்மன் தொழில்துறை, ஒரு மிகச்சிறிய காலகட்டத்திலேயே தரைமட்டமாக்கப்பட்டது.

DDR இன் அரச சொத்துக்களை தனியார்மயமாக்க மொட்ரோவ் அரசாங்கம் நிறுவிய Treuhand நிறுவனம், அரசுக்கு சொந்தமான 14,000க்கு குறைவில்லாத நிறுவனங்களை கலைப்பதை மேற்பார்வையிட்டது. சில நிறுவனங்கள் விற்கப்பட்டன, பெரும்பாலானவை மூடப்பட்டன. மூன்றாண்டுகால இடைவெளிக்குள், மொத்த பணியாளர்களில் 71 சதவீதத்தினர் வேலையிழந்தார்கள். நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த கல்வி மற்றும் சமூக அமைப்புமுறை, மற்றும் கலாச்சார அமைப்புகளின் ஒன்றுதிரண்ட வலையமைப்பும் அத்துடன் சிதைக்கப்பட்டன.

ஜேர்மனியின் கிழக்கு பகுதி ஒருபோதும் இந்த சேதங்களிலிருந்து மீளவேயில்லை. மேற்கில் 5.8 சதவீதமாக இருந்ததை விட அதிகமாக, கிழக்கில் வேலைவாய்ப்பின்மை 9.8 சதவீதத்தில் இருந்தது. கிழக்கிலிருந்த மொத்த மக்கள்தொகை, புலம்பெயர்வு மற்றும் பிறப்புவிகித வீழ்ச்சியின் காரணமாக இரண்டு மில்லியன் அளவிற்கு குறைந்தது. வேலைதேடிய இளைஞர்களில் பலர் கிழக்கிலிருந்து வெளியேறியுள்ளனர், இப்போது அப்பிராந்தியமே பொருத்தமற்ற விகிதாசாரத்தில் வயதான முதியவர்களுக்கான பிராந்தியமாக உள்ளது.

இத்தகைய சமூக சீரழிவு முன்னாள் DDR உடன் நின்றுவிடவில்லை. ஜேர்மன் பெருவணிகங்கள் கிழக்கு ஜேர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் குறைந்த கூலிகளை, மேற்கில் கூலிகளை குறைப்பதற்கான உந்துவிசையாக பாவித்தன. ஜேர்மன் ஐக்கியத்திற்கு பத்தாண்டுகளுக்கு பின்னர், ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையிலான சமூக ஜனநாயக-பசுமை கட்சி கூட்டணி ஹார்ட்ஸ் சட்டங்களை (Hartz laws) அறிமுகம் செய்தது, அது மலிவு கூலி தொழில்துறை ஒன்றை பரவலாக்குவதற்கு அடித்தளத்தை உருவாக்கியது, இத்துறையுள் இப்போதுள்ள மொத்த பணியாளர்களில் ஒரு கால் பகுதிக்கும் அதிகமானவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

சமூக பின்விளைவுகளை விட இன்னும் அதிகமாக அழிவுகரமாக இருந்தவை, ஜேர்மன் ஐக்கியத்தினால் ஏற்பட்ட அரசியல் விளைவுகளாகும். ஹிட்லர் ஆட்சியால் நடத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலக போரில் அதன் தோல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து, ஜேர்மனி இராணுவக் கட்டுப்பாட்டு கொள்கை ஒன்று நிறைவேற்ற நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் ஜேர்மனி ஐக்கியம் அது அத்தனையையும் மாற்றியது. ஜேர்மன் ஆளும் வர்க்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எதிர்கொண்டிருந்த அதே சிக்கலான நிலையை எதிர்கொண்டுள்ளது. ஐரோப்பாவிற்கு மிகப் பெரிதாகவும் உலகிற்கு மிகச் சிறிதாகவும் இருப்பதால், ஜேர்மனி ஒரு உலக பாத்திரம் வகிப்பதற்காக ஐரோப்பாவில் மேலாதிக்கம் பெற முயன்று வருகிறது.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டுமொருமுறை அதன் முந்தைய இறுமாப்பு மற்றும் ஆக்ரோஷத்தன்மைக்கு திரும்பி வருகிறது. அது கிரீஸ் மற்றும் ஏனைய நாடுகள் மீது சிக்கன திட்டங்களுக்கு ஆணையிட்டும், நாஜி ஆக்கிரமிப்பின் காட்டுமிராண்டித்தனத்தை மீண்டும் நினைவுகூர்ந்தும், ஐரோப்பாவின் ஆதிக்க சக்தியாக மற்றும் ஒழுங்குமுறையாளராக அதன் உரிமைகோரலை உயர்த்துகிறது மற்றும் அதன் இராணுவ தகைமைகளை வேகமாக அதிகரித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், “நமது நாட்டின் முக்கியத்துவத்திற்கு ஏற்ற வகையில்" வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் இராணுவ விவகாரங்களில் ஒரு பாத்திரம் வகிக்குமாறு ஜேர்மனிக்கு அழைப்புவிடுப்பதற்கு ஜேர்மன் ஐக்கிய தினத்தைத் தான் பயன்படுத்தினார். அவரது முறையீடு அரசாங்கம் மற்றும் ஊடகங்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேற்கை-சார்ந்த ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வர உதவிய உக்ரேனிய ஆட்சிக் கவிழ்ப்பு சதியிலும் மற்றும் ரஷ்ய எல்லையில் நேட்டோவின் இராணுவ ஆயத்தப்படுத்தலிலும் பேர்லின் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

இப்போது ஜேர்மனி, இரண்டு அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா நேரடி இராணுவ மோதலில் உள்ள சிரியாவில் தலையீடு செய்ய தயாரிப்பு செய்து வருகிறது. “சிரிய மோதலில் ஜேர்மனிக்கு அடிப்படை நலன்கள் உள்ளன,” என்று Frankfurter Allgemeine Zeitung வலியுறுத்தியது. ஜேர்மனி புட்டினைக் கணக்கிலெடுக்க முடியாது அல்லது அதன் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு கூட்டாளிகளைச் சார்ந்திருக்க முடியாதென அப்பத்திரிகை எழுதியது. பனிப்போரின் போது எப்போதும் அச்சுறுத்திக்கொண்டிருந்த ஆனால் ஒருபோதும் நடந்திராத ஓர் அணுஆயுத உலக போர், இப்போது மீண்டும் ஒரு நிஜமான அபாயமாகி உள்ளது.

இராணுவவாதம் இவ்விதத்தில் மீண்டும் திரும்பி வந்திருப்பது, கூட்டாட்சி குடியரசின் ஜனநாயக முகத்திரையைக் கிழித்துள்ளது. பழமைவாத நீதிமான்களே கூட இதை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். “மறுஐக்கியத்திற்கு கால் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டிருந்த இந்நாடு உயிர்பிழைத்திருப்பதற்கான நெருக்கடியை முகங்கொடுக்கிறது, சட்டத்தின் ஆட்சி படிப்படியாக அழிந்துவருகிறது, ஜனநாயகம் பலவீனமடைந்து வருகிறது, அதிகாரப் பகிர்வு முறை கூடுதலாக நிறைவேற்று அதிகாரப்பிரிவுக்கு சாதகமாக மாறியுள்ளது,” என்று Frankfurter Allgemeine Zeitung இன் கருத்துரை ஒன்றில் மத்திய அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி பீட்டர் எம். ஹூபர் எழுதினார்.

மத்திய கிழக்கிலிருந்து வரும் போர் அகதிகளை நோக்கிய பரந்த மக்களின் ஆதரவு மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக, ஆளும் உயரடுக்குகள் மீண்டுமொருமுறை ஐரோப்பாவில் முள்கம்பிகளையும் சுவர்களையும் எழுப்பி வருகின்றன, வெளிநாட்டவர் விரோத வலதுசாரி போக்குகளை பலப்படுத்துகின்றன. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாவேரிய மாநிலத்தின் CSU கட்சி, அதி-வலது ஹங்கேரிய பிரதமர் விக்டொர் ஓர்பனுடன் அணிசேரும் அளவிற்கு சென்றுள்ளது.

ஆளும் உயரடுக்குகள், பயபக்தியான சொற்பொழிவுகள் மற்றும் வெற்றி ஆரவாரங்களுடன் ஜேர்மன் ஐக்கியத்தை பிராங்பேர்ட் மற்றும் பேர்லினில் மூன்று நாட்கள் கொண்டாடுகின்றன. உழைக்கும் மக்களைப் பொறுத்த வரையில், இந்த நினைவுதினம் அவர்களது சொந்த இருப்புநிலை குறிப்பை வரைவதற்குரிய ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டும்.

இந்த ஐக்கியத்தை இப்போது பலர் கசப்புணர்வோடு தான் திரும்பி பார்க்கிறார்கள். ஒரு ஆய்வின்படி, இன்று கிழக்கு ஜேர்மனியில் "ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு மனோபாவம்" மேலோங்கியுள்ளது. பத்து கிழக்கு ஜேர்மனியர்களில் எட்டு பேர் சந்தை பொருளாதாரத்தைச் சுரண்டலுடன் இணைத்து பார்க்கிறார்கள், 50 சதவீதத்தினர் முந்தைய திட்டமிட்ட பொருளாதாரத்தைப் பாதுகாப்புடன் இணைத்து பார்க்கிறார்கள். அடிப்படையில் மேற்கிலும் இந்த பிரதிபலிப்பு வேறுவிதமாக இருக்காது.

இருந்தாலும் DDR முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் காரணங்கள் மற்றும் ஒரு மாற்று அரசியல் முன்னோக்கை குறித்த புரிதலே மக்கள் நனவில் இல்லாதுள்ளது. குறிப்பாக ஸ்ராலினிசம் வகித்த பாத்திரம் பரந்தளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. ஸ்ராலின் சோவியத் ஒன்றியத்தில் 1920களில் ஒரு பழமைவாத அதிகாரத்துவத்தின் பிரதிநிதியாக எழுச்சி கண்டார், அது அக்டோபர் புரட்சியின் தலைவர்களை நீக்கியதோடு பின்னர் அவர்களைப் படுகொலை செய்தது. இது 75 ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்ய புரட்சியின் துணை தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் உச்சக் கட்டத்தை அடைந்தது..

இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஸ்ராலினிச அதிகாரத்துவம், அக்டோபர் புரட்சியில் தோற்றுவிக்கப்பட்ட சொத்துடைமை உறவுகளோடு சேர்ந்து, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஜேர்மனி வரையில் அதன் கட்டுப்பாட்டை விரிவாக்கியது, அதேவேளையில் அதனோடு சேர்ந்து பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஏனைய பல நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிலாஷைகளை அது ஒடுக்கியது. DDR இல், ஹங்கேரி மற்றும் போலந்தில் ஆட்சியிலிருந்த அதிகாரத்துவம், தொழிலாளர்களது எழுச்சிகளை வன்முறையானரீதியில் ஒடுக்கியது. அது இரண்டாம் உலக போரின் பேரழிவுகளுக்குப் பிந்தைய முதலாளித்துவ ஸ்திரப்பாட்டில் கணிசமானளவிற்கு பங்களித்தது.

எதிர்-புரட்சிகர அரசு எந்திரத்தின் நலன்களை வெளிப்படுத்திய ஸ்ராலினிசத்தின் தேசியவாத வேலைத்திட்டம், நான்காம் அகிலத்தால் முன்னெடுக்கப்பட்ட சோசலிசத்திற்கான சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு நேரெதிராக இருந்தது. பூகோளமயப்பட்ட உற்பத்தியானது, ஸ்ராலினிச வேலைத்திட்டமான "தனியொரு நாட்டில் சோசலிசத்தை" அதிகரித்தளவில் செல்லுபடியற்றதாக செய்தது. கோர்பசேவ்வின் கீழ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலிருந்த அதிகாரத்துவம், 1936 ஆம் ஆண்டிலேயே ட்ரொட்ஸ்கி முன்கணித்ததைப் போல, முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு விடையிறுத்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter - BSA) ஜேர்மன் மறுஐக்கியம் குறித்த ஓர் அறிக்கையில் அக்டோபர் 1990 இல் அறிவித்தது: “ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் உதவியோடு ஏகாதிபத்தியவாதிகள் எதைக் கொண்டு அவர்களது ஆட்சியை நெறிப்படுத்தினார்களோ மற்றும் அவர்களது உலகளாவிய நலன்களைப் பாதுகாத்தார்களோ, அத்தகைய சக்திகளின் சர்வதேச சமநிலை உடைந்து போயுள்ளது. மனிதயினத்தை இந்நூற்றாண்டில் இரண்டுதடவை உலகப் போரின் பயங்கரத்திற்குள் தள்ளிய, உலகை மறுபங்கீடு செய்வதற்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பழைய மோதல்கள், மீண்டும் எழுந்துள்ளன.”

இந்த எச்சரிக்கை இப்போது முழுமையாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு உடனடியான பதில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக கட்டுவதாகும்.