சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan estate workers face government-company-union conspiracy on wages

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பாக அரசாங்கம்–கம்பனி-தொழிற்சங்கத்தின் சதியை எதிர்கொள்கின்றனர்

By Pani Wijesiriwardena
10 October 2015

Use this version to printSend feedback

இலங்கையின் தொழில் அமைச்சர் டபிள்யு.டி.ஜெ.செனிவரட்ன, தொழிலாளர்களின் தற்போதய 620 ரூபாய் நாள் சம்பளத்தை 770 ரூபாவாக உயர்த்துமாறு பெருந்தோட்டக் கம்பனிகளுடனும் தொழிற் சங்கங்களுடனும் பேசியுள்ளதாக அக்டோபர் 4 பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார். பலவகையான மேலதிக கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய இந்த உத்தேச சம்பள உயர்வானது தொழிற் சங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட 1000 ரூபாய் கோரிக்கையையும் விட மிக குறைந்ததாகும்.

புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை தோட்ட உரிமையாளர் சங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்ததை தொடர்ந்தே அமைச்சரின் கருத்து வெளிவந்துள்ளது. உற்பத்திப் பண்டங்களின் விலைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், சம்பள உயர்வு வழங்குவது சாத்தியப்படாது என  தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் ரோசான் இராஜதுரை செப்டெம்பர் 22 நடந்த தோட்ட உரிமையாளர் சங்க ஆண்டு கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.

அத்துடன் உற்பத்திச் செலவை குறைப்பதற்காக தற்போது நாளாந்தம் பறிக்கும் 16 முதல் 18 கிலோவரையான கொழுந்தின் அளவை குறைந்தபட்சம் 25 கிலோ வரை உயர்த்த வேண்டும் என்றும் தோட்ட உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

வாழ்க்கை செலவு  உயர்வடையும் நிலைமையின் கீழ், ஒட்டு மொத்தமாக சம்பள உயர்வை நிராகரிப்பதானது பெருந்தோட்டப் பகுதியில் போராட்டங்கள் வெடிக்க வழிவகுக்கும் என்பதையிட்டு அரசாங்கம் பீதியடைந்தள்ளதையே தொழில் அமைச்சர் செனவிரத்னவின் அற்ப சம்பள உயர்வுக்கான ஆதரவு பிரதிபலிக்கின்றது. அரசாங்கம் தொழிற் சங்கங்களுடனும் கம்பனிகளுடனும் கலந்துரையாடிய பின், கூட்டு ஒப்பந்தமொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது, என அவர் கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) பெருந்தோட்டத் தொழிற் சங்க கூட்டுக் கமிட்டி ஆகியவையும் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) ஆகிய சங்கங்களின் கூட்டும் பெருந்தோட்டங்களில் உள்ள பிரதான தொழிற் சங்கங்கள் ஆகும்.

அமைச்சரின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அதற்கும் கூடுதலான சம்பள உயர்வுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தொழிற்சங்கங்கள் பகிரங்கமாக தெரிவித்தன. தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளுடன் எந்தவிதத்திலும் பொருந்தாத மற்றும் வேலைச் சுமையை உள்ளடக்கி இருக்கக் கூடிய சம்பள கொடுக்கல் வாங்களில் அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் அவர்கள் திரை மறைவில் சதியில் ஈடுபட்டுள்ளார்கள் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கை செய்கின்றது.

பெருந் தோட்டத்துறையின்  2013ம் ஆண்டு சம்பள கூட்டு ஒப்பந்தம் மார்ச் இறுதியில் முடிவுற்றது. எனினும், கம்பனிகள் எந்த ஒரு சம்பள உயர்வையும் நிராகரித்ததன் காரணமாக புதிய ஒப்பந்தம் மாதக் கணக்காக இழுபட்டு வருகின்றது.

இ.தொ.கா. தொழிற்சங்கத் தலைவர் முத்து சிவலிங்கம், கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறியதாவது: கம்பனிகள் எமது கோரிக்கைகளை கடுமையாக எதிர்க்கின்ற நிலமையில், பேச்சு வார்த்தையின் முன்னேற்றங்கள் சம்பந்தமாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது சங்கடமாக இருக்கின்றது.

ம.ம.மு. செயலாளர் எ. லோறன்ஸ், “இ.தொ.கா.வின் கோரிக்கை 1000 ரூபாயாக இருந்தாலும், யதார்த்தமான முறையில் அடிப்படை சம்பளம் 700 ரூபாய் உட்பட 960 ரூபா நாட் சம்பளத்தைக் கோருகின்றோம் என்றார். தொழிற் சங்கங்கள் கம்பனிகளின் யதார்த்தமான கோரிக்கையையே அதிகம் ஏற்றுக் கொள்ள விரும்புகின்றன என்பது தெளிவாகின்றது.

2013ல், ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக இருந்த இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், கம்பனிகள் உற்பத்தி அளவை அதிகரிக்க அனுமதிக்கும் சரத்துக்கள் அடங்கிய ஒப்பந்தத்தை தயாரிப்பதில் LJEWU மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியுடன் சேர்ந்து தலைமைப் பாத்திரம் வகித்திருந்தார். மற்றய தொழிற் சங்கங்களான தொ.தே.ச., ம.ம.மு. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியும் இந்தக் கொடுக்கல் வாங்கலை விரைவாக ஏற்றுக்கொண்டன.

தொழிலாளர்களின் கோபமும் அமைதியின்மையும் அதிகரிக்கும் நிலமையில் சகல தொழிற்சங்களும் எந்த ஒரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு உறுதி பூண்டுள்ளன. ஆகஸ்டில் 200.000 தொழிலாளர்கள் பங்குபற்றிய மெதுவாக வேலை செய்யும் நடவடிக்கைக்கு இ.தொ.கா. அழைப்பு விடுத்து எதிர்ப்பை பிசுபிசுக்கச் செய்தது. எவ்வாறெனினும், அரசாங்கமும் கம்பனியும் அது பற்றி கவலை வெளியிட்ட நிலையில், தொண்டமான நடவடிக்கையை விரைவில் நிறுத்திக்கொண்டார். ஆகஸ்ட் 17ல் நடைபெற்ற தேர்தலை அதற்கான சாக்குப் போக்காக காட்டிய அவர், தேர்தலின் பின் பிரச்சாரத்தை மீண்டும் தொடர்வதாக கூறினார்.

தொ.தே.ச., ம.ம.மு. மற்றும் ஜ.ம.முன்னணியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கூறி, மெதுவாக வேலைசெய்யும் இயக்கத்தை எதிர்த்தன. தொ.தே.ச., ம.ம.மு. மற்றும் ஜ.ம.மு. தலைவர்களான முறையே பி. திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் மற்றும் மனோ கணேசனும் தற்போதய அரசாங்கத்தின் அமைச்சர்களாவர்.

வறுமையில் வாடுகின்ற தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை எந்த ஒரு தொழிற்சங்கமோ அதன் தலைவர்களோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை. தொண்டமான் தேயிலைத் தோட்டச் சொந்தக்காரராக உள்ள அதே வேளை, திகாம்பரம், இராதாகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் வசதிபடைத்த வியாபாரிகளாவர். அவரகள் எல்லோரும் தொழிற்சங்கங்களை தமது சொந்த வியாபாரத்துக்காகவும் அரசியல் அபிலாசைகளுக்காகவும் உபயோகிக்கின்றனர்.

இதற்கு மாறாக, சகலதும் அடங்கிய தொழிலாளர்களின் நாள் சம்பளம், அடிப்படை சம்பளம் 420 ரூபா, 75 வீதத்திற்கு மேலான வருகைக்கான ஊக்குவிப்பு தொகை 140 ரூபா, விலையுடன் தொடர்புபட்ட மேலதிக கொடுப்பனவு 30 ரூபா உள்ளடங்கலாக 620 ரூபா மட்டுமே. வருகைக்கான எல்லையை கடக்க முடியாமையால் அநேகமான தொழிலாளர்கள் இந்த சம்பளத்தை பெறுவதில்லை. அவர்களுடைய சராசரி மாதச் சம்பளம் 12,000 ரூபாய், அல்லது கிட்டத்தட்ட 86 அமெரிக்க டாலர்கள். பெரும்பான்மையான தொழிலாளர்கள் முகாம் மாதிரியான லயன் அறைகளில் கல்வி மற்றும் சுகாதார வசதிகளற்ற நிலைமையிலேயே வாழ்கின்றார்கள்.

தொழில் துறையில் அரசியல் மயமாக்கம் குறைவான உற்பத்திதிறன், பலத்த போட்டி மற்றும் தோட்டத் தொழிலாளரின் ஒரு பகுதியினர் தோட்டங்களை விட்டு இடம் பெயர்தல் உட்பட வளர்ச்சியடைந்து வரும் பிரச்சினைகளை கம்பனிகள் முகம் கொடுப்பதாக தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் இராஜதுரை புலம்புகிறார்.

தொழிலாளர் மத்தியில் பரந்த எதிர்ப்பை முகம் கொடுக்கின்ற தொழிற் சங்கங்கள், முதலாளிமாரின் கோரிக்கைகளுக்கு விரைவில் வளைந்து கொடுக்கத் தவறியுள்ளதையே ராஜதுரை தொழிற்துறையின் அரசியல்மயமாக்கம் என அர்த்தப்படுத்தியுள்ளார். தொழிலாளர்களில் பலர் தங்களுடைய சம்பளத்தில் வாழமுடியாத நிலைமையில், மேலதிக வேலை தேடத் தள்ளப்பட்டுள்ளதை அல்லது தோட்டத்தை விட்டு வெளியேறுவதையே இடம் பெயர்தல் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை கம்பனிகள் விலை மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியை எதிர் கொண்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்தடுத்து 12வது மாதமாக கடந்த ஜூலையில் ஏற்றுமதி 14 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கூர்மையான பூகோள அரசியல் பதட்ட நிலைமை மற்றும் மோதல்கள் காரணமாக ரஷ்யாவுக்கும் மத்திய கிழக்குக்கும் ஏற்றுமதி தடைப்பட்டதே வீழ்ச்சிக்கான பிரதான காரணமாகும்.

இலங்கையினதும் மற்றும் ஏனைய நாடுகளினதும் தேயிலை கூட்டுஸ்தாபனங்கள் பிரதிபலிப்பு, உலக சந்தையில் கழுத்தை அறுக்கும் போட்டியில் முன்னேறுவதற்காக, சம்பள உயர்வை நிறுத்துதல் மற்றும் வேலைச் சுமையை அதிகரித்தலின் மூலம், தொழிலாளர்கள் மீது புதிய சுமைகளை சுமத்துகின்றன.

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 300,000 பேர் சம்பள உயர்வை கோரி செப்டெம்பர் 28 காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளார்கள். மாநில அரசின் தொழில் அமைச்சர் சிபு பேபி ஜோன், முதலாளிமாருடன் கூட்டுச் சேர்ந்து, தொழிற்துறையை ஸ்தம்பிக்கச் செய்வதால் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவு தர முடியாது எனக் கூறியுள்ளார்.

அரசங்கத்தினதும் கம்பனிகளினதும் முகவர்களாக தொழில்படும் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிவதே தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்காக போராடுவதற்கான ஒரே மார்க்கமாகும். தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இருந்து சுயாதினமான நடவடிக்கை குழுக்களை அமைப்பதோடு இலங்கையிலும் உலக ரீதியாகவும் ஏனய பகுதி தொழிலாளர்களின் பக்கம் திரும்ப வேண்டும். முதலாவதாக கேரளவில் உள்ள வர்க்க சகோதர, சகோதரிகளுடன் இணைய வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின்  மீதான நடப்பு தாக்குதலுக்கு மூல காரணமாக உள்ள இலாப அமைப்பை தூக்கி வீசுவதை நோக்கமாக கொண்ட சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மாத்திரமே அத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க முடியும். சோ.ச.க. மாத்திரமே இந்த முன்னோக்குக்காக போராடுகின்றது.