சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French airstrike on Syria was targeted killing of a French citizen

சிரியா மீதான பிரெஞ்சு விமானத் தாக்குதல் ஒரு பிரெஞ்சு பிரஜையைக் கொல்வதை இலக்கில் வைத்திருந்தது

By Alex Lantier
19 October 2015

Use this version to printSend feedback

அக்டோபர் 8-9 அன்று இரவு சிரியாவின் ரக்கா மீதான பிரெஞ்சு விமானத் தாக்குதல் உண்மையில் ஒரு பிரெஞ்சு பிரஜையான சலீம் பென்ஹலேம் (Salim Benghalem) ஐ இலக்கில் வைத்து கொல்வதற்காக நடத்தப்பட்டவொரு முயற்சியென்று இவ்வார இறுதியில் Le Monde குறிப்பிட்டது.

அப்பத்திரிகையின் செய்தி, அத்தாக்குதலுக்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விபரங்களோடு நேரடியாக முரண்படுகிறது. இஸ்லாமிய அரசு (IS) போராளிகள் குழுவில் இருந்த "வெளிநாட்டு போராளிகளைத்" தாக்கியதாகவும், “அதில் அனேகமாக சாத்தியமான பிரெஞ்சு பிரஜைகள் மற்றும் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் உள்ளடங்கி இருந்திருக்கலாம்" என்று அரசாங்கம் வாதிட்டிருந்தது. உண்மையில், அந்த குண்டுவீச்சு நடவடிக்கை நீதிமுறைக்கு அப்பாற்பட்டு ஒரு பிரெஞ்சு பிரஜையைக் கொல்வதற்கான பிரெஞ்சு அரசின் ஒரு முயற்சியாக இருந்தது. பென்ஹலேமைக் கொல்லும் அதன் நடவடிக்கையில் வெற்றி பெற்றதா என்பதை அது இன்னும் அறிவிக்கவில்லை என்றபோதினும், அத்தாக்குதலில் ஆறு பிரெஞ்சுவாசிகள் கொல்லப்பட்டதை பாரீஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

அந்நாளிதழ் எழுதுகிறது, “எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, அந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் பெரிதும் Val-de-Marne மாவட்டத்தின் Cachan ஐ சேர்ந்த 35 வயதான சலீம் பென்ஹலேம் எனும் ஒரு பிரெஞ்சு பிரஜையைச் சுற்றி திட்டமிடப்பட்டிருந்தது. அவர் 'ISக்குள் இருந்த பிரெஞ்சு ஆட்களை மற்றும் பிரெஞ்சு மொழி பேசுவோரை வரவேற்பதற்கு உத்தியோகபூர்வமாக பணிக்கப்பட்டிருந்தார்' என்று உளவுத்துறை சேவைகள் தெரிவிக்கின்றன.”

இந்நடவடிக்கை, அரசின் குற்றகரத்தன்மை மற்றும் பிரான்சில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவில் ஒரு தீர்க்கமான படியைக் குறித்து நிற்கிறது. எந்தவித நீதி விசாரணை வழிமுறையின்றி, மரண தண்டனைக்குத் தடை விதிக்கும் பிரெஞ்சு அரசியலமைப்பை வெளிப்படையாக மீறி, ஒரு பிரெஞ்சு பிரஜையைப் படுகொலை செய்வதென்ற சோசலிஸ்ட் கட்சியின் முடிவுக்கு எந்த சட்டபூர்வ அடித்தளமும் கிடையாது.

சோசலிஸ்ட் கட்சி, ஐ.நா. சாசனத்தின் 51வது ஷரத்தை மேற்கோளிட்டு காட்டி, அந்த விமானத் தாக்குதலை நியாயப்படுத்தியது. அந்த ஷரத்து, ஆக்கிரமிப்பிற்கு இலக்காகி உள்ள ஓர் அரசு கோரினால், அரசுகளுக்கு இடையே "கூட்டு தற்காப்பை" (collective self defence) அனுமதிக்கிறது. இவ்விடயத்தில், 2003இல் அமெரிக்க சட்டவிரோத படையெடுப்புக்குப் பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் அமைக்கப்பட்ட ஈராக்கிய கைப்பாவை அரசாங்கம், சிரியாவிலிருந்து மேற்கத்திய ஈராக் வரையில் பரவியிருக்கும் IS போராளிகளுடன் சண்டையிடுவதற்காக, நேட்டோ சக்திகளுக்கு இராணுவ உதவி கோரி மனு அளித்திருந்தது.

ஆனால் சோசலிஸ்ட் கட்சியினது சொந்த கணக்கில், பிரான்ஸ், பென்ஹலேமைப் படுகொலை செய்யும் அதன் முயற்சியில், அது அதன் ஆறு குடிமக்களைப் படுகொலை செய்திருப்பது ஈராக்கில் அல்ல, சிரியாவில் ஆகும்.

கடந்த ஆண்டு பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ், IS இலக்குகளுக்கு எதிராக ஈராக்கில் நடத்தும் பிரெஞ்சு விமானத் தாக்குதல்களை, சிரியா வரையில் நீடிக்க வேண்டுமென்ற பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் முயற்சிகளைத் தடுத்தார். சிரியாவில் பிரெஞ்சு விமானத் தாக்குதல்கள் நடத்துவதற்கு அங்கே "எந்த சட்ட அடித்தளமும் இல்லை" என்று அவர் வாதிட்டார்.

இப்போதோ, வேறெந்த சட்டபூர்வ அடித்தளமும் இன்றி, பிரெஞ்சு அதிகாரிகள் அவர்களது சொந்த குடிமக்களைக் கொல்வதற்காக அவர்களது விமானத் தாக்குதல்களை ஈராக்கிலிருந்து சிரியா வரையில் நீடித்துள்ளனர்.

இஸ்லாமிய அரசு போன்றவொரு அமைப்புகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு, “கூட்டு தற்காப்பை" மேற்கோளிடுவது விசேடமாக நம்பவியலாத சட்ட நியாயப்பாடாகும் என்று Le Monde குறிப்பிடுகிறது. அனைத்திற்கும் முதலாவதாக, "உடனே நிகழவிருந்த" ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பென்ஹலேம் ஒழுங்கமைத்து வந்தார் என்பதற்கோ, அது பிரான்சிற்குள் இலக்குகளைத் தாக்கியிருக்கும் என்பதற்கோ சோசலிஸ்ட் கட்சி எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

அதற்கும் மேல், பயங்கரவாதத்திற்கு எதிரான ஐ.நா. குழு இயக்குனர் Paul Laborde அளித்த தகவல்படி, “இத்தாக்குதலை நடத்துவதற்கு இந்த ஷரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது தீர்க்கவியலாத சட்ட பிரச்சினைகளை எழுப்புகிறது; இறையாண்மை நாடுகளில் ஒன்று மற்றதை தாக்கும்போது மட்டுந்தான் இந்த ஷரத்தை மேற்கோளிட்டு, கூட்டு தற்காப்பை முன்னெடுக்க முடியும். ஆனால் இத்தாக்குதல் ஒரு நாட்டை அல்ல, ஒரு பயங்கரவாத அமைப்பை இலக்கில் கொண்டுள்ளது.”

நேட்டோ அரசாங்கங்கள் அவற்றின் சொந்த பிரஜைகளைப் படுகொலை செய்யும் அவர்களது உரிமை மீதிருக்கும் எந்தவொரு சட்ட தடை உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகளை பரந்தளவில் அவை கைத்துறந்திருப்பதற்கு இடையே தான், பென்ஹலேமைப் படுகொலை செய்வதற்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் இந்த முயற்சி நடந்துள்ளது.

சிரியாவில் பிரிட்டனின் ராயல் விமானப்படையால் ஆகஸ்ட் 21 அன்று, இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளான ரியாத் கானும் ருஹூல் அமினும், நீதிநெறிமுறைக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டதாக செப்டம்பர் 8இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

ரக்கா மீதான அக்டோபர் 8-9 தாக்குதலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஊடகங்கள் திடீரென பென்ஹலேம் குறித்து எண்ணற்ற விடயங்களைப் பிரசுரித்தன. செப்டம்பர் 25 இல் Le Monde அவரைக் குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டதுடன், அவரை “பிரான்சில் சிறிய சிறிய குற்றங்கள் புரிந்த ஒரு பிரெஞ்சு குற்றவாளி என்றும், அவர் IS ஆல் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாகவும்" எழுதியது. அதேவேளையில் Le Figaroஇல் அக்டோபர் 1இல் Caroline Picquet இன் கட்டுரை ஒன்று அவரை "அமெரிக்காவால் தேடப்படும் பிரெஞ்சு ஜிஹாதிஸ்ட்" என்று தாக்கியது.

நீதிநெறிக்கு அப்பால் பென்ஹலேமின் படுகொலை வாஷிங்டனால் பரிந்துரைக்கப்பட்டதாக, அல்லது இன்னும் சொல்லப்போனால் செயல்படுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்க உளவுத்துறை பிரெஞ்சு இராணுவத்திற்கு பென்ஹலேம் குறித்த விபரங்களை அனுப்பியிருந்ததாகவும்; அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கனவே அவரை அதன் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் "கறுப்பு பட்டியலில்" (black list) நிறுத்தியிருந்ததாகவும் பல பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய அரசுக்குள் "மேலுயர்ந்துவரும் முக்கிய புள்ளியாக" வாஷிங்டன் அவரைக் குறித்து அஞ்சியதாக Le Monde குறிப்பிட்டது.

அட்லாண்டிக்கின் இரண்டு புறங்களிலும் இருக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஓர் இராணுவ-உளவுத்துறை சதிக்கூட்டம் செயலூக்கத்துடன் சூழ்ச்சி செய்து வருகிறது.

அரசு, சட்ட விசாரணையின்றி ஒரு பிரஜையின் வாழ்வைப் பறிக்கக் கூடாதென குறிப்பிடுகின்ற அமெரிக்க அரசியலமைப்பின் ஐந்தாவது திருத்தத்தை மீறி, 2011 டிரோன் தாக்குதலில் அமெரிக்க பிரஜை அன்வர் அல்-அவ்லாகியைப் படுகொலை செய்ததன் மூலமாக நீதிநெறிக்கு அப்பால் படுகொலை செய்வதற்கான ஒரு முன்னுதாரணத்தை ஸ்தாபித்துள்ள நிலையில், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள், படுகொலை செய்வதை ஒரு கொள்கைரீதியிலான கருவியாக நெறிப்படுத்தவும் மற்றும் பகிரங்கமாக சட்டபூர்வமாக்கவும் அவர்களது பிரெஞ்சு சமதரப்பினரோடு நெருக்கமாக வேலை செய்து வருகின்றனர்.

பென்ஹலேம் மற்றும் அல்-அவ்லாகிக்கு இடையிலான தொடர்பு முற்றிலும் தத்துவார்த்தரீதியிலானதல்ல. பென்ஹலேம் அவரது வாழ்க்கைப் போக்கின் போது அல்-அவ்லாகியைச் சந்தித்தார் என்று குறிப்பிடப்படும் செய்திகள், பதில்கள் வழங்குவதை விட நிறைய கேள்விகளையே உயர்த்துகின்றன.

2001 இல் பாரீசில் ஒரு மரணகதியிலான வீதிச் சண்டைக்குப் பின்னர், பென்ஹலேம், அல்ஜீரியாவிற்குச் செல்வதற்கு முன்னதாக கடுமையான வேலைகளைச் செய்து வந்தார். 2007 இல் அவர் பிரான்சிற்குத் திரும்பியதும், நீதிமன்றங்கள் அவருக்கு 11 ஆண்டுகால தண்டனை வழங்கியது.

இருந்தபோதினும் அவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே 2010 இல் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் நேரடியாக ஒரு பாரிஸிய இஸ்லாமிய வலையமைப்பான "Buttes-Chaumont குழு" என்றழைக்கப்படுவதில் இணைந்தார். அந்த வலையமைப்பில், சார்லி ஹெப்டோ மற்றும் பாரீசில் உள்ள Hyper Cacher பலசரக்கு அங்காடி மீது ஜனவரி 2015 தாக்குதல்களுக்குப் பொறுப்பான அமெடி குலிபாலி மற்றும் கௌச்சி சகோதரர்களான செரிப் மற்றும் சயித் ஆகியோரும் உள்ளடங்கி இருந்தனர்.

பென்ஹலேம் இராணுவ பயிற்சி பெறுவதற்காக மூன்று வாரங்கள் யேமன் சென்றிருந்தார், அத்தருணத்தில் அவர் நேட்டோ உளவுத்துறை சேவைகளால் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். Le Point குறிப்பிடுகையில், அவர் "ஐயத்திற்கிடமின்றி பிரெஞ்சு தீவிர இஸ்லாமிசத்தின் மிகப் பெரிய முக்கியஸ்தர்களில் ஒருவரான பீட்டர் செரீப்பைச் சந்தித்தார், அத்துடன் யேமனில் பிறந்த ஒரு அமெரிக்கரான மற்றும் அதன்பின்னர் ஓர் அமெரிக்க டிரோன் தாக்குதலில் விரைவிலேயே கொல்லப்பட இருந்த அன்வர் அல்-அவ்லாகி உட்பட அரேபிய வளைகுடாவின் அல் கொய்தா (AQAP) தலைவர்களை சந்தித்ததாக தெரிவித்திருந்தார்" என்றது குறிப்பிடுகிறது.

எவ்வாறிருந்த போதினும் பிரெஞ்சு அதிகாரிகளிடமிருந்து எவ்வித வெளிப்படையான விடையிறுப்புமின்றி அவரால் பிரான்சிற்குத் திரும்ப முடிந்தது. பின்னர் அவர் 2012 இல் துனிசியாவிற்கும், பின்னர் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிரான நேட்டோவின் பினாமி போரில் தரைப்படை சிப்பாய்களாக சேவையாற்றிய இஸ்லாமிய குழுக்களில் இணைவதற்காக 2013 இல் சிரியாவிற்கும் பயணித்தார்.

அதுபோன்ற முன்நடவடிக்கைகளோடு, அத்தருணங்களில் பென்ஹலேம் உளவுத்துறை சேவைகளின் நெருக்கமான கண்காணிப்பில் இருந்த நிலையில், அவரைக் கொல்லும் நோக்கமின்றி பிரெஞ்சு அரசு தற்செயலாக அவர் வேலை செய்து கொண்டிருந்த கட்டிடத்தை இலக்கில் வைத்திருந்தது என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

இத்தகைய விபரங்கள், சார்லி ஹெப்டோ மீது தாக்குதல் நடத்திய சக்திகள் சுயமாக-தீவிரமடைந்த "தனித்த ஓநாய்கள்" என்றும், உளவுத்துறை சேவைகளுக்கு அவர்கள் யாரென்றே தெரியாது என்பதால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் இந்தாண்டு ஆரம்பத்தில் கூறப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் மறுக்கின்றன. குலிபாலிக்கு ஆயுதங்கள் வழங்கிய வலையமைப்புகள் குறித்து விசாரணை நடத்துவதை தடுப்பதற்காக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் அரசின் இரகசிய தனியந்தஸ்தைப் பாவிக்க எடுத்த முடிவிலேயே எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, இத்தகைய கையாட்கள் அரசுடன் நெருக்கமாக பிணைந்திருந்தனர் என்பதோடு, ஜனநாயக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்களை நியாயப்படுத்துவற்காக அவர்களது குற்றங்கள் சுரண்டிக் கொள்ளப்பட்டன.