சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

A week before election, Greek conservatives neck and neck with Syriza

தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, கிரேக்க பழமைவாதிகளும் சிரிசாவும் நெருக்கமான போட்டியில் உள்ளனர்

By Alex Lantier
14 September 2015

Use this version to printSend feedback

முன்னாள் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் கடந்த மாதம் இராஜினாமா செய்ததும் செப்டம்பர் 20 க்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு திடீர் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கையில், பழமைவாத புதிய ஜனநாயகம் (ND) கருத்துக்கணிப்பில் முன்னேறி வருகிறது. சிப்ராஸின் சிரிசா (தீவிர இடதின் கூட்டணி) இப்போது 25.9 சதவீதம் மட்டுமே பெற்று முன்னணியில் இருப்பதையும், புதிய ஜனநாயகம் 25.5 சதவீதத்தில் இருப்பதாகவும் MRB கருத்துக்கணிப்பு ஒன்று எடுத்துக்காட்டியது. இதர மூன்று கருத்துக்கணிப்புகள், சிரிசா மற்றும் புதிய ஜனநாயக கட்சிக்கு இடையே 1 சதவீதத்திற்கும் குறைவான இடைவெளி இருப்பதை எடுத்துக்காட்டின.

கிரீஸில் எது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஐரோப்பிய ஒன்றியம் திணிக்கும் சிக்கன கொள்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுமென்ற சிரிசாவின் தேர்தல் வாக்குறுதிகளை அது மானக்கேடாக காட்டிக்கொடுத்ததன் ஆரம்ப அரசியல் விளைவுகளாகும். ஒரு மதிப்பிழந்த, இரண்டாண்டுகள் பதவியிலிருந்த புதிய ஜனநாயக அரசாங்கம், மாணவர் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அதிகரித்த பிரவாகத்தை முகங்கொடுத்த பின்னர், ஒன்பது மாதங்களுக்கு முன்னர், ஜனவரியில், சிரிசா அதிகாரத்திற்கு வந்தது. பாரிய எதிர்ப்பின் முன்னால் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய சிக்கன பொதியைத் திணிக்கும் சாத்தியக்கூறை நிறைவேற்ற தயங்கி, அதற்கு பதிலாக புதிய ஜனநாயக கட்சி புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்தது.

ஜனவரியில் சிரிசாவின் தேர்தல் வெற்றியும், ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பிரமாண்டமான "வேண்டாமென்ற" வாக்கெடுப்பும், சிஐஏ ஆதரவிலான 1967-74 கிரேக்க இராணுவ ஆட்சி ஆதரவாளர்கள் வழிவந்த நிதி மூலதனத்தினது ஓர் இழிவார்ந்த கருவியான புதிய ஜனநாயக கட்சிக்கு சரியான அடிகொடுப்பதாக இருந்தன. அந்த வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர், முன்னாள் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமாராஸ் புதிய ஜனநாயக கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார்.

எவ்வாறாயினும், ஒவ்வொரு கட்டத்திலும், சிரிசாவின் தொழிலாளர்-விரோத கொள்கைகள், அதன் செல்வாக்குமிக்க நடுத்தர வர்க்க சமூக அடித்தளத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆதரவைப் பிரதிபலித்ததுடன், புதிய ஜனநாயக கட்சியினது மறுகுழுவாக்கத்தை தொடங்கி வைத்தன. முதலாவதாக, நடைமுறையிலிருந்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன புரிந்துணர்வை நீடிக்கும் ஓர் உடன்படிக்கையில் அது பெப்ரவரியில் கையெழுத்திட்டது. பின்னர் அது ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பின் முடிவுகளை மறுத்தளித்து, ஜூலை 13 இல், முன்னொருபோதும் இல்லாதளவில் பேர்லினால் கட்டளையிட்ட பல பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய சிக்கன பிணையெடுப்பை திணித்தது.

ஆகஸ்ட் 27 இல் சிப்ராஸ் இராஜினாமா செய்த பின்னர், ஊடகங்கள், புதிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பிடுகையில் அவர் இன்னமும் பிரபலமாக இருப்பதால்தான் அவர் இந்த திடீர் தேர்தலுக்கு அழைப்புவிடுத்திருந்ததாக ஊகித்தன. அவரது சிக்கன நடவடிக்கைகள் பொதுமக்களை பாதித்து அவர் மீதான மக்கள் அபிமானம் குறைய தொடங்குவதற்கு முன்னதாக, மற்றும் பிணையெடுப்புக்கு மக்கள் எதிர்ப்பை முகங்கொடுப்பதற்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தில் அவரது பெரும்பான்மையை பலப்படுத்திகொள்ளும் நம்பிக்கையில், அவர் ஒரு தந்திரோபாயமாக இந்த முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்று ஊடகங்கள் வாதிட்டன.

தீவிர இடது" அரசாங்கம் என்றழைக்கப்படுவதால் திணிக்கப்படும் ஆழ்ந்த ஓய்வூதிய வெட்டுக்கள், விற்பனை வரி உயர்வுகள் மற்றும் இதர சமூக தாக்குதல்களின் சாத்தியக்கூறு குறித்து வாக்காளர்கள் சிந்தித்திருப்பார்கள் என்பதாலேயே சிரிசாவின் ஆதரவு பெரிதும் குறைய தொடங்கி உள்ளது. சிக்கன நடவடிக்கைக்கு தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்துவரும் எதிர்ப்பு இத்தேர்தல்களிலோ அல்லது கிரேக்க அரசியல் ஸ்தாபகத்தின் எந்தவொரு பிரிவிலோ எந்தவித வெளிப்பாட்டையும் காணவில்லை. தொழிலாள வர்க்கத்தினது இந்த முட்டுச்சந்தின் ஒரு வெளிப்பாடு தான் புதிய ஜனநாயக கட்சியின் தேர்தல் மீளெழுச்சியாகும்.

சிரிசா மற்றும் புதிய ஜனநாயகம் இரண்டுமே ஐரோப்பிய ஒன்றிய சிக்கன பொதிக்கு வக்காலத்துவாங்குகின்ற நிலையில், அவ்விரு கட்சிகளையும் வேறுபடுத்திக்காட்டுவதற்கு பெரிதாக எதுவுமில்லை. ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டத்தை திணித்த புதிய ஜனநாயகத்தின் பிற்போக்குத்தனமான முந்தைய நடவடிக்கைகளைக் குறித்த சிரிசாவின் விமர்சனங்கள், அதைவிட மிகவும் மூர்க்கமான பிணையெடுப்பை அது திணித்துள்ளதால் எல்லாவித நம்பகத்தன்மையும் இழக்கிறது.

புதிய ஜனநாயக கட்சி [ஜேர்மன் நிதி மந்திரி] திரு. சொய்பிள இன் ஐரோப்பாவுடன் உள்ளது. நாங்கள் ஒரு சமூக மாற்றத்தை விரும்பும் மற்றும் நவ-தாராளவாத கோட்பாடுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள விரும்பும் சக்திகளோடு உள்ளோம்,” என்று சிப்ராஸ் நேற்று எதினோஸில் அறிவித்தார்.

சிப்ராஸ், திரு. சொய்பிள இன் ஐரோப்பாவுடன்" இருப்பதோடு மட்டுமின்றி, தொழிலாள வர்க்கத்திற்கு சாதகமான அல்லது சுதந்திர சந்தை கொள்கைகளை மதியாதிருக்கும் ஒரு "சமூக மாற்றத்தைக்" காண்பதற்கும், புதிய ஜனநாயகத்தை விட மிகவும் விருப்பமற்று இருக்கின்றார். அவர் மிக வெளிப்படையாகவே சிக்கனத்திட்ட-சார்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-சார்பு பிரச்சாரத்தை செய்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்னர், அவர் கூறுகையில், சிரிசா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய சிக்கன பொதிக்கு இணங்கி நடக்கும் என்றார், இந்நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு இதுவொன்றே "ஒரே வழி" என்று தெரிவித்தார்.

உண்மையில் அப்பொதி மற்றொரு பேரழிவுகரமான பொருளாதார பொறிவை மட்டுமே உண்டாக்குமென பொருளியல்வாதிகளின் சகல வகையறாக்களிடமிருந்தும் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றியும் மற்றும் பல குடும்பங்கள் வெறுமனே ஓய்வூதியதார்களின் ஓய்வூதிய தொகையை மட்டுமே நம்பியும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில், சமீபத்திய ஓய்வூதிய வெட்டுக்கள் பெருந்திரளான மக்களை மிகவும் வறுமையான நிலைமைகளுக்குள் தள்ளும். மில்லியன் கணக்கான கிரேக்கர்கள் பட்டினியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் மற்றும் கிரீஸின் வீடற்ற மக்கள் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டு சிக்கனத் திட்டங்களில் அதிகரித்துள்ளன, இந்நிலையில் சிப்ராஸின் சிக்கன பொதி கணிசமான எண்ணிக்கையில் மக்களின் மரணங்களுக்கே இட்டுச் செல்லும் என்பது கேள்விக்கிடமற்றது.

ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் பானஜியோடிஸ் லவாஷானிஸ் தலைமையிலான சிரிசாவிலிருந்து உடைந்து வந்த மக்கள் ஐக்கியம் இவற்றின் திவால்நிலைமையும் புதிய ஜனநாயக கட்சியின் வளர்ச்சிக்கு எண்ணெய் வார்க்கின்றன. சிப்ராஸ், புதிய ஜனநாயகத்தின் மைமராக்கிஸ், ஐரோப்பிய ஒன்றிய சார்பு The River கட்சியின் ஸ்டாவ்ரோஸ் தேடோராக்கேஸ், Pasok கட்சியின் ஃபோபி ஜெனிமாட்டா, தீவிர வலது சுதந்திர கிரேக்கர் கட்சியின் பேனொஸ் கமெனொஸ், மக்கள் ஐக்கியத்தின் லவாஷானிஸ் மற்றும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டிமிட்ரிஸ் கொட்ஸ்சொம்பாஸ் ஆகியோருக்கு இடையிலான ஏழு வேட்பாளர்களது விவாதத்தில் இது தெளிவாக வெளிப்பட்டது.

சிரிசா முதலில் அறிவித்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத்திட்ட எதிர்ப்பை பேணுமாறு அது வலியுறுத்துவதால் அவரது கட்சியே "நேர்மையானது" என்று லவாஷானிஸ் வாதிட்டார். பின்னர் அரசின் செலவுக்காக கிரேக்க கருவூலத்திலிருந்து நிதிகளைத் திருடுவதாக கேலி செய்த அவர், கிரீஸ் ஒரு தேசிய செலாவணிக்குத் திரும்புவதன் மூலமாக சிக்கன நடவடிக்கைகளை தவிர்க்கவியலுமென வாதிட்டார்.

சிரிசாவின் சிக்கன நடவடிக்கைகளில் சிப்ராஸிற்கு உடந்தையாய் இருந்ததில் லவாஷானிஸ் ஒன்றும் குறைந்துவிடவில்லை. லவாஷானிஸ் மற்றும் சிரிசாவிலுள்ள அவரது கோஷ்டி சிப்ராஸின் சிக்கன பொதி நிறைவேற்றப்படுவதைப் பாதுகாக்க இயங்கினர், மேலும் சிரிசாவின் மத்திய குழுவில் அதற்கு எதிரான ஒரு வாக்கெடுப்புக்கும் அழைப்புவிடுக்க மறுத்தனர். கிரேக்க நாடாளுமன்றத்தில் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை சிப்ராஸ் தடுக்க விரும்பியமை தெளிவானபோது தான், அவரது கோஷ்டி சிரிசாவிலிருந்து வெளியேறியது.

சிரிசாவிலிருந்து முறித்துக் கொள்வதற்கு முன்னர், சிப்ராஸின் கூட்டாளிகளாக இருந்ததற்காக லவாஷானிஸ் மற்றும் மக்கள் ஐக்கியத்தை விமர்சித்து, கொட்ஸ்சொம்பாஸ் அதை சாதகமாக்க முயன்றார். இருப்பினும், கொட்ஸ்சொம்பாஸ் பின்னர் மக்கள் ஐக்கியத்தில் இணைந்துள்ள ஒரு நீண்டகால சிரிசா அங்கத்தவரான மனோலிஸ் கிலிசோஸ் புகழுமளவிற்கு சென்றார், மேலும் அவர் "ஜிஹாதிகளை" எச்சரிக்கும் ஒரு தேசியவாத கண்டனங்களை அறிவித்ததுடன், லவாஷானிஸ் ஒரு "ரஷ்ய விரும்பி" என்று குற்றஞ்சாட்டினார்.

தெளிவாக இந்த காட்சிப்படுத்தலில் இருந்து தான் புதிய ஜனநாயக கட்சி பலம்பெற்று மேலெழுந்தது. கடந்த வாரம் மைமராக்கிஸ் வலியுறுத்துகையில், அவர் வென்றால், பிரதம மந்திரி பதவியிலிருந்து அவர் ஒதுங்கிக் கொண்டு வேறு எவருக்கேனும் தொழில்ரீதியில் அரசியல்வாதியல்லாத பிரபலமான ஒருவருக்குஅதை விட்டுக்கொடுப்பதாக கூறி அவருக்கு வாக்களிக்கவிருந்த வாக்காளர்களை இன்னமும் குழப்ப முயன்றார். எவ்வாறிருப்பினும், உண்மையில் புதிய ஜனநாயக கட்சி பிரதான அணியாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்கே அவர் தலைமை கொடுக்க முயற்சிப்பதாக முதல்முறையாக சனியன்று அவர் தெரிவித்தார்.

மிகத் தெளிவாக, நான் பிரதம மந்திரியானால், சிப்ராஸ் அழைக்க விரும்பாத ஏனைய சக்திகளை நான் அழைப்பேன்,” என்று கூறி, புதிய ஜனநாயகம்-சிரிசா அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான அவரது முன்மொழிவுக்கு உடன்படாமைக்காக சிப்ராஸை எரிச்சலூட்டினார். சிப்ராஸ் "வெளியே நின்று, கல்லை எறிய விரும்பினால், நாம் முன்னோக்கி போகவேண்டுமா இல்லை பின்னோக்கி போகவேண்டுமா? ஒத்துழைக்க போவோமா அல்லது முரட்டுத்தனமாக மாறுவோமா? உண்மையைக் கூறுவோமா அல்லது பொய் கூறுவோமா?” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறிருப்பினும், சிரிசாவின் வாக்குறுதிகள் பொய்களாக அம்பலமாகி, பெருந்திரளான மக்களுக்கு இடதில் ஒரு மாற்றீடு காணக்கிடைக்காத நிலைமைகளின் கீழ், அத்தகைய வெற்றுரைகளே போதிய மதிப்பைப் பெற்றுவிடுகின்றன.

புதிய ஜனநாயக நிர்வாகி ஒருவர் இலண்டனின் பைனான்சியல் டைம்ஸிற்குக் கூறுகையில், முன்னதாக கட்சிக்காக கூலிக்கு மாரடிக்கும் இரண்டாம் நிலை ஆளாக" பார்க்கப்பட்ட மைமராக்கிஸ், “சிப்ராஸிற்கு எதிராக எமது சிறந்த ஆயுதமாக" புதிய ஜனநாயகம் உயர்ந்திருப்பதைக் கண்டு மலைத்துப் போனதாக தெரிவித்தார்.

செப்டம்பர் 20 தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அவர் தொழிலாள வர்க்கத்தை ஒரு கடுமையான எதிரியாக எதிர்கொள்வார். சிரிசா தலைமையில் ஆகட்டும் அல்லது புதிய ஜனநாயகம் தலைமையில் ஆகட்டும் எதுவானாலும், இந்த வங்கியாளர்களது அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அரசியல்ரீதியில் ஒன்றுதிரள்வதே முக்கிய அரசியல் பிரச்சினையாகும்.