சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The political struggle against war and the tasks of the Socialist Equality Party

Perspective resolution of the First National Congress of the Socialist Equality Party (Sri Lanka)

போருக்கு எதிரான அரசியல் போராட்டமும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) முதலாவது தேசிய காங்கிரசின் முன்நோக்குத் தீர்மானம்

30 April 2015

Use this version to printSend feedback

பின்வரும் தீர்மானமானது 27-30 மார்ச் 2015ல் நடந்த (இலங்கை) சோசலிச சமத்துவக் கட்சியின் முதலாவது தேசிய காங்கிரசில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகும். இது, வளர்ச்சி கண்டுவரும் ஏகாதிபத்திய போர் அச்சுறுத்தல் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக இலங்கையிலும் தெற்காசியாவிலும் கட்சியின் அரசியல் போராட்டத்திற்கு அத்தியாவசியமான அடிப்படையாகும்.

1. சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முதலாவது தேசிய காங்கிரசின் தீர்மானம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) 2014 ஜூன் 9 வெளியிட்ட சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற தீர்மானத்தை முழுமையாக அங்கீகரிக்கின்றது. முதலாவது உலக யுத்தம் வெடித்து நூறு ஆண்டுகளின் பின்னரும், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கி 75 ஆண்டுகளின் பின்னரும், ஏகாதிபத்தியம் மனித இனத்தை அழிவுக்குள் தள்ளிச் செல்கின்றது. “இன்னொரு ஏகாதிபத்திய இரத்தக் களரியின் சாத்தியம் இருப்பது மட்டுமன்றி, ஒரு புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யாவிட்டால் அதைத் தவிர்க்கவும் முடியாது” என அந்த தீர்மானம் வலியுறுத்துகின்றது. இந்த காங்கிரஸின் தீர்மானமானது அனைத்துலகக் குழுவின் தீர்மானத்தை இலங்கை சோ.ச.க.யின் அரசியல் பணிகளாக மாற்றுவதாகும்.

2. போருக்கான உந்துதலின் தோற்றுவாய், முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாட்டின் வெடிப்பாகும் -பூகோளமயமான பொருளாதாரத்துக்கும் உலகம் பகைமை தேசிய அரசுகளாக பிளவுபடுத்தப்பட்டிருப்பதற்கும் இடையிலான, மற்றும் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமைக்கும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் இடையிலான முரண்பாட்டின் வெடிப்பாகும். 2008ல் லெஹ்மன் பிரதர்சின் பொறிவை அடுத்து வந்த முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் வீழ்ச்சியின் மத்தியில், இத்தகைய முரண்பாடுகள் பண்புரீதியில் ஆழமடைந்துள்ளன. பொருளாதார சரிவு மற்றும் கூர்மையான நிதிய ஸ்திரமின்மையை எதிர்கொள்ளும் ஆளும் வர்க்கங்கள், வெளிநாடுகளில் உள்ள தமது எதிரிகளினதும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தினதும் இழப்பில் இந்த நெருக்கடியில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கின்றன. யுத்தத்துக்கான உந்துதலானது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிக்கன திட்டங்கள் மற்றும் பொலிஸ்-அரச ஒடுக்குமுறையுடன் பிணைந்துள்ளது.

3. உலக முதலாளித்துவ நெருக்கடியின் மையத்தில் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், இராணுவ பலத்தின் மூலம் உலக மேலாதிக்கத்தைக் கைப்பற்ற ஈவிரக்கமின்றி முயற்சிப்பதன் ஊடாக தனது வரலாற்று வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்கின்ற நிலையில், அது புவி-அரசியலில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணியாக இருக்கின்றது. அடுத்தடுத்து தொடரும் ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்கள், தலையீடுகள் மற்றும் போர் பதட்டங்களின் வேகத்தின் மூலம் பூகோள மோதலை நோக்கிய உக்கிரமான உந்துதல் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் அதன் ஐரோப்பிய பங்காளிகளினால் 2014 பெப்பிரவரியில் சிருஷ்டிக்கப்பட்ட, கியேவில் இடம்பெற்ற பாசிஸ்டுகள் தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் மூலம் உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் வெடித்த மோதல் தொடர்வதோடு, அமெரிக்காவானது ஈராக் மற்றும் சிரியாவில் புதிய யுத்தங்களை முன்னெடுத்துள்ளது. பரந்த யூரேசிய நிலப்பரப்பையும் அதன் மனித மற்றும் சடரீதியான வளங்களையும் கைப்பற்றி கட்டுப்படுத்துவதே வாஷிங்டனின் திட்டத்தின் மைய இலக்காகும். சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்பில், ஒரு பல்பூரண இராஜதந்திர தாக்குதல் மற்றும் இராணுவ கட்டமைப்பு வளர்ச்சி திட்டமான அமெரிக்காவின் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையுடன் கிழக்கு ஐரோப்பாவிலான அதன் உந்துதலும் பிணைக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்கள், மனித குலத்தை ஒரு அணுவாயுத பேரழிவுக்குள் தள்ளிவிடும் உண்மையான ஆபத்துக்களை முன்கொணர்ந்துள்ளன.

4. சகல ஏகாதிபத்திய சக்திகளும் போருக்கான தமது சொந்த தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. அவை அமெரிக்காவுடன் உடன்பாடான முறையில் தற்போது நடந்துகொண்டாலும், அவற்றின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் வேறுபட்டவையாகும். தற்போதைய கூட்டணிகள், ஏகாதிபத்திய உள் மோதல்கள் மற்றும் போரின் விதைகளை உள்ளடக்கிக்கொண்டுள்ளன. ஜேர்மன் மற்றும் ஜப்பான் போன்ற கடைசி போரில் தோற்கடிக்கப்பட்ட சக்திகள், யுத்தத்துக்குப் பிந்திய கட்டுப்பாடுகளை துரிதமாக அகற்றுவதோடு மீண்டும் இராணுவமயப்படுத்தலில் ஈடுபடுகின்றன. ஜேர்மன் ஜனாதிபதி ஜோகிம் கௌக், ஜேர்மன் “அதனது பொருளாதார பலம் மற்றும் செல்வாக்குடன் பொருந்தக்கூடிய பாத்திரத்தை ஐரோப்பாவிலும் உலகம் பூராவும் ஆற்ற வேண்டும்” என அப்பட்டமாக பிரகடனம் செய்தார். ஜப்பானிய அரசாங்கமானது “கூட்டு சுயபாதுகாப்புக்கு” அனுமதிப்பதற்காக நாட்டின் போருக்குப் பிந்திய அரசியலமைப்பை “மறுதிருத்தம்” செய்துள்ளது -உண்மையில் இது ஆக்கிரமிப்பு போர்களை முன்னெடுப்பதற்காக இராணுவ கூட்டணிகளை ஸ்தாபிப்பதாகும்.

5. ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான பகைமையின் வளர்ச்சியானது பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளை ஏதாவதொரு பெரும் வல்லரசின் நலன்களுக்கு அடிபணியச் செய்யும் காலனித்துவ வடிவிலான ஆட்சியை புதுப்பிப்பதுடன் பிணைந்துள்ளது. 2001ல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தலைமையிலான படையெடுப்பு மற்றும் 2003ல் ஈராக் ஆக்கிரமிப்பும், 19ம் நூற்றாண்டில் ஐரோப்பிய சக்திகள் உலகை செல்வாக்குக்கான போட்டி மண்டலங்களாக ஆக்கியபோது அவை முன்னெடுத்த காலனித்துவ ஆக்கிரமிப்பு யுத்தங்களை நினைவுபடுத்துகின்றது. ஏனைய ஏகாதிபத்திய சக்திகள், தமது செல்வாக்குப் பகுதிகள் மீதான தமது மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக அந்த சந்தர்ப்பத்தைப் பற்றிக்கொண்டன. பிரான்ஸ் ஆட்சியாளர்கள் சாட், மாலி, ஐவரிகோஸ்ட் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு உட்பட பல்வேறு இடங்களில் இராணுவத் தலையீடுகளை முன்னெடுத்த அதே வேளை, லிபியத் தலைவர் மௌமர் கடாபியை வெளியேற்றுவதற்கான போருக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய கூட்டாளிகளுக்கும் ஆதரவளித்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற சிறிய வல்லரசுகளும் கூட, கிழக்குத் தீமோரிலும் குட்டி பசுபிக் தீவுகளிலும் தலையீடு செய்து இந்த நகர்வில் இணைந்துகொண்டன. ஏகாதிபத்திய சதி, ஆத்திரமூட்டல், அச்சுறுத்தல் மற்றும் இராணுவத் தாக்குதல்களில் இருந்து எந்த நாடும் தலைதப்பி இருக்கவில்லை. தேசிய இறைமை கொள்கையானது “பாதுகாப்பதற்கான பொறுப்புடைமை” என்பதால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. இது உலகம் பூராவும் ஏகாதிபத்திய தலையீட்டுக்கான மனிதாபிமான சாக்குப் போக்கை உருவாக்குவதற்கான ஒரு பல்பயன்பாட்டு உபகரணமாகும்.

6. சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஒரு மூன்றாம் உலக யுத்த பேரழிவை தடுக்க முடியும். அனைத்துலகக் குழுவின் தீர்மானத்தின் வழியில், சோ.ச.க. உலகில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடனான ஒத்துழைப்பில், தெற்காசியாவிலும் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதை தனது அரசியல் வேலையின் மையத்தில் வைத்துள்ளது.

இலங்கையும் “ஆசியாவில் முன்னிலையும்”

7. உலகின் ஒவ்வொரு மூலையும் ஏகாதிபத்திய உட்-பகைமைகளிலும் சந்தைகள், வளங்கள், மலிவு உழைப்பு மற்றும் மூலோபாய முன்னேற்றங்களுக்கான போட்டியிலும் சிக்கிக்கொண்டுள்ளன. இலங்கை இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் 2015 ஜனவரி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றிய அமெரிக்க ஆட்சி-மாற்ற நடவடிக்கையானது ஆசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாகும். அது ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சீனாவுக்கு எதிரான இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ மோதல் மற்றும் போருக்கான தயாரிப்பின் வேகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதற்கான ஒரு சமிக்ஞையாகும். 2009 ஆரம்பத்தில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து, இப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி துணை ஆசிரியராக இருந்து வரைந்த செனட் கமிட்டி அறிக்கை, “அமெரிக்காவால் இலங்கையை இழக்க முடியாது” என அறிவித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, சீனாவுடனான அதன் உறவுகளை முறித்துக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை நெருக்குவதன் பேரில், ஒரு உக்கிரமான “மனித உரிமை” பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக, அமெரிக்கா முன்னர் கண்டும் காணாதது போல் இருந்த இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை வஞ்சத்தனமாக சுரண்டிக்கொண்டது. 2014 அளவில், பெய்ஜிங்குடனான இராஜபக்ஷவின் உறவுகளை பொறுத்துக்கொள்ள இனிமேலும் தயாரில்லாத அமெரிக்கா, அவரை வெளியேற்றுவதற்கு பச்சைக் கொடி காட்டியது.

8. வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேனவை அரசாங்கத்தில் இருந்து வெளியில் கொண்டுவருவதற்கும், ஆளும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தவும் மற்றும் அமெரிக்கச்-சார்பு ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஏனைய எதிர்க் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதற்கும் ஒரு கருவியாக செயற்பட்டுள்ளார். நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க.) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) உட்பட அனைத்து போலி இடது அமைப்புக்களும், “பொது எதிர்க் கட்சி வேட்பாளர்” சிறிசேனவுக்கு பின்னால் ஏதாவதொரு வழியில் அணிதிரண்டதுடன் இராஜபக்ஷவின் நீண்டகால பணியாளாக இருந்த அவரை, உழைக்கும் மக்களுக்கு ஒரு ஜனநாயக மாற்றீட்டை பிரதிநித்துவம் செய்பவர் என்ற பொய்யையும் முன்னிலைப்படுத்தினர். உண்மையில், இராஜபக்ஷவும் அவரது விசுவாசிகளும் தம்மை ஓரங்கட்டிவிட்டதாக கசப்படைந்திருந்த, எல்லாவற்றுக்கும் மேலாக, வாஷிங்டனுடனான எந்தவொரு மோதலதும் விளைவுகளையிட்டு பீதியடைந்திருந்த ஆளும் தட்டுக்களின் பகுதியினருக்காகவே அவர் பேசுகின்றார். தன்னை மக்களின் பாதுகாவலனாகவும் ஒரு “சர்வதேச சதியினால்” பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காட்டிக்கொள்ள முயற்சிப்பதன் மூலம், சிங்கள ஜனரஞ்சகவாதத்தை நாடுவதைத் தவிர இராஜபக்ஷவுக்கு வேறு பதில்கள் இருக்கவில்லை. அவரது பிரச்சாரம் பாசாங்குத்தனமானதாகும். உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு இராஜபக்ஷ பொறுப்பாளி மட்டுமன்றி, அவர் சீனாவிடம் இருந்து முதலீடு மற்றும் உதவிகளைப் பெற முயற்சித்தாலும் கூட, அமெரிக்காவுடன் இராணுவ உறவுகளை பலப்படுத்தியதன் மூலம் பிரதான சதிகாரரை -வாஷிங்டனை- சாந்தப்படுத்த முயற்சித்தார். தேர்தலில் இராஜபக்ஷ தோல்வியடைந்ததோடு அதிகாரத்தையும் ஒப்படைத்தார். எவ்வாறெனினும், அவர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, “திருடப்பட்ட தேர்தல்” என கண்டனம் செய்து, அவரை அதிகாரத்தில் இருந்து கீழிறக்க, குறிப்பாக உயர் மத்தியதர வர்க்கத் தட்டினரை அணிதிரட்டுவதற்கு ஒரு முழுமையான “வண்ணப் புரட்சிக்கான” அடித்தளங்கள் இடப்பட்டிருந்தன.

9. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறிசேன, “சர்வதேச சமூகத்தில் இருந்து நாடு தனிமைப்பட்டிருப்பதற்கு” முற்றுப்புள்ளி வைப்பதற்காக வெளிநாட்டு கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்தார் -வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், வாஷிங்டனையும் அதன் மூலோபாய பங்காளிகளையும், குறிப்பாக இந்தியாவையும் அரவணைத்துக்கொள்வதாகும். தொழிலாள வர்க்கத்துக்கான விளைவுகள் மிகப் பரந்தவையாகும். இந்திய சமுத்திரத்திலான கடற்பாதைகளுக்கு அருகே இலங்கை அமைந்திருப்பதானது அதை எப்போதும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருத்தியுள்ளது. இந்த தீவு பென்டகனின் மூலோபாய கொள்கை வகுப்பாளர்களுக்கு தீர்க்கமானதாகும். அவர்கள் தமது போர் திட்டங்களின் ஒரு இன்றியமையாத அங்கமாக, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து சீனாவுக்கு வரும் எரிசக்தி மற்றும் மூலப் பொருட்கள் விநியோகத்தை துண்டித்து அதற்கு ஒரு பொருளாதார தடங்களை உருவாக்குவதைப் பற்றி சிந்திக்கின்றனர். முன்னெப்போதும் இல்லாதளவு ஆக்கிரோஷமாக அது ஆசியாவில் தலையீடு செய்கின்ற நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையை சீனாவுக்கு எதிரான அதன் இராணுவத் தயாரிப்புகளுக்கு மட்டுமன்றி, ஏனைய பிரந்திய அரசாங்கங்களுக்கு எதிரான சதித்திட்டங்களுக்கும், அதேபோல், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான எதிர்ப்புரட்சிகர தலையீடுகளுக்குமான ஒரு பிரதான தளமாக சுரண்டிக்கொள்ள முயற்சிக்கும். இதே போன்ற தேவைகளுக்காக, பிரித்தானியா இலங்கையை பிரிட்டிஷ் இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதற்கும் மாறாக, தீவை ஒரு தனியான முடிக்குரிய காலனியாக பேணிவந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய படைகளிடம் சிங்கப்பூர் விழுந்ததை அடுத்து, தென்கிழக்கு ஆசியாவில் இராணுவ நடவடிக்கைகளுக்கான துணைத் தலைமையகமாக இலங்கை ஒரு மைய பங்கு வகித்தது. 

10. இராஜபக்ஷவின் வெளியேற்றமானது 2008 பூகோள நிதிய நெருக்கடியின் வெடிப்புடன் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையிலான மிகப்பரந்த மாற்றத்தின் பாகமாகவே இடம்பெற்றது. முந்தைய புஷ் நிர்வாகமானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் யுத்தங்களுக்காக இராணுவத்தை குவித்துள்ளதோடு, சீனாவின் பொருளாதார எழுச்சி மற்றும் வளர்ச்சியடையும் செல்வாக்கை அலட்சியம் செய்துள்ளது என்ற அமெரிக்க ஆளும் வட்டாரத்தின் விமர்சனத்தையே ஒபாமாவின் “ஆசியாவில் முன்னிலை” பிரதிபலிக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, அமெரிக்கா பெய்ஜிங்கின் செல்வாக்கைக் கீழறுக்க சதி செய்து, அமெரிக்க மேலாதிக்கத்தை மீள உறுதிப்படுத்தி மற்றும் சீனாவுக்கு எதிரான போருக்குத் தயாராகின்ற நிலையில், பிராந்தியம் பூராவும் அமெரிக்கா ஈவிக்கமின்றி பதட்டங்களை உக்கிரமாக்கியுள்ளது. வாஷிங்டனின் திட்டங்களுக்குள் அகப்பட்ட முதல் மனிதர் இராஜபக்ஷ அல்ல. 2010 நடுப் பகுதியில், பெய்ஜிங்குடன் மோதலுக்கு மாறாக, நல்லிணக்கத்தை பிரேரித்த, ஜப்பானிய பிரதமர் யுகியோ ஹடோயாமா, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் ஆகிய இருவரையும் அகற்றுவதற்கு சதி செய்ததன் மூலம், அமெரிக்கா அதன் இரு பிரதான பங்காளிகளுடனான உறவுகளை மறு ஒழுங்கு செய்தது. 2014 அளவில், அமெரிக்க போர் உந்துதலின் பூகோள பண்பு சரியானதாக இருந்தது. உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடனான விட்டுக்கொடுப்பற்ற நிலை தொடந்துகொண்டிருந்த நிலையிலும், மத்திய கிழக்கில் அமெரிக்கா புதிய போர்களை முன்னெடுத்துக்கொண்டிருந்த நிலையிலும் கூட, ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் ஒபாமா “ஆசியாவில் முன்னிலையை” ஆக்கிரோஷமாக மறு உறுதி செய்தார். இந்தோ-பசுபிக் பூராவும் புதிய அமெரிக்க இராணுவ நிலைகொள்ளல்கள், படைத்தள ஏற்பாடுகள் மற்றும் மூலோபாய தயாரிப்புகளின் ஒரு நீண்ட பட்டியலை மேற்கோள் காட்டிய பின்னர், பிராந்தியத்தில் கடந்த காலத்தில் அமெரிக்கா “குருதியையும் நிதியையும்” முதலீடு செய்துள்ளது என்று தெரிவித்த அவர், மீண்டும் அவ்வாறு செய்யும் என்பதை உள்ளர்த்தமாக சமிக்ஞை செய்தார்.

11. அமெரிக்க மூலோபாய கொள்கை வகுப்பாளர்கள் இப்போது ஒரு இந்து-பசுபிக் பிராந்தியத்தைப் பற்றி பேசுவதுடன், சீனாவை தனிமைப்படுத்தவும் சுற்றிவளைப்பதற்குமான தீர்க்கமான இடமாக தெற்காசியாவையும் இந்திய பெருங்கடலையும் வாஷிங்டன் கணிக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நிகழ்ச்சித் திட்டத்துக்கு இந்தியாவின் துணையைப் பெற குறிவைக்கின்றனர் --“ஒரு முறை பிரிட்டிஷ் பேரரசின் கிரீடத்தில் இரத்தினமாக இருந்த” இந்தியா, உலகின் இரண்டாவது ஜனத்தொகை அதிகம் உள்ள நாடும், (பரிவர்த்தனை நிபந்தனையில் சக்தியை கொள்வனவு செய்யும்) உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதாரமும், மற்றும் சீனாவின் ஒரு நீண்டகால எதிரியுமாகும். 2004 சீஐஏ அறிக்கையானது உலக புவிசார்-அரசியலில் இந்தியாவை “மிகவும் முக்கியமான ஊஞ்சல் அரசாக” அடையாளங் கண்டுள்ளது. பல்வேறு சிந்தனைக் குழுக்களின் கற்கையில் விவரிக்கப்பட்டவாறும், ஆசியாவின் “ஜனநாயகங்களின்” பொது பெறுமதி பற்றி அமெரிக்க தலைவர்களிடம் இருந்து வரும் பயனற்ற வாய்ச்சவடால்களில் கொடுக்கப்பட்டுள்ள ஜனரஞ்சக சொற்றொடர்களின்படியும், அமெரிக்காவின் மூலோபாய இலக்கானது ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அடங்கிய அமெரிக்கத் தலைமையிலான நாற்கூட்டு சீன-விரோத கூட்டணியின் நான்காவது தூணாக இந்தியாவை இணைத்துக்கொள்வதாகும். இந்த குறிக்கோளை முன்னெடுப்பதற்காக, வாஷிங்டன், இந்தியா “வல்லரசு” ஆவதற்கு வஞ்சத்தனமாக உதவி வழங்குவதோடு புது டில்லியுடன் ஒரு “பூகோள மூலோபாய பங்காண்மைக்குள் நுழைந்து, சீனாவுடனான இந்தியாவின் பகைமைக்கு எரியூட்டி வருகின்றது. 2006ல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 2008ல் அமுல்படுத்தப்பட்ட இந்திய-அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டின் கீழ், குடிசார் அணுவாற்றல் தொழில்நுட்பத்தையும் வெளிநாட்டு யுரேனியத்தையும் பெறுவதற்கு இந்தியாவுக்கு வாஷிங்டன் வழிவகை செய்து, அதன் மூலம் புது டில்லி அணு ஆயுதங்கள் அபிவிருத்தி சம்பந்தமாக அதன் உள்நாட்டு அணு திட்டத்தில் குவிமையப்படுத்த அனுமதித்தது. இப்போது பென்டகன் வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவுடன் ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த பல ஆண்டுகளில், இந்தியாவுக்கான ரஷ்யாவின் விற்பனையையும் கடந்து, அமெரிக்கா புது டில்லியின் பாரம்பரிய ஆயுத-விநியோகஸ்தர் ஆகியுள்ளது. ஆழ் கடல் கடற்படை ஒன்றை உருவாக்கும் இந்தியாவின் திட்டத்தை துரிதமாக அமுல்படுத்துமாறும் இந்து சமுத்திரத்தில் ஒரு பிரதான காவல்துறை பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் அதை அமெரிக்கா ஊக்குவிக்கின்றது. இந்த கெஞ்சல்கள் அமெரிக்க மூலோபாய குறிக்கோள்களின் பாதையில் புது டில்லியும் பயணிக்க வேண்டும் என்ற தொடர்ந்தும் பெருகிவரும் கோரிக்கைகளுடன் பிணைந்துள்ளது. அமெரிக்கா, அனுவாயுத உடன்படிக்கைக்கான அதன் “விலையாக”, பாகிஸ்தான் ஊடாக இந்தியாவுக்கு ஈரானிய இயற்கை வாயுவை விநியோகிக்கும் “சமாதான” குழாய் அமைக்கும் திட்டத்தை கவிழ்ப்பது உட்பட, ஈரானுக்கு எதிரான அதன் கட்டுப்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்துக்குப் பின்னால் அணிதிரளுமாறு இந்தியாவை நெருக்கிவருகின்றது. இந்தியா தொடர்பான அமெரிக்க மூலோபாயமானது சீனாவின் எழுச்சியை தோற்கடிக்கும் அதன் உறுதிப்பாட்டால் உந்தப்படும் அதேவேளை, மாஸ்கோ உடனான புது டில்லியின் தசாப்தகால மூலோபாய பங்காண்மையை இடைமறித்து கடைசியில் இழுத்து மூடிவிடும் தனது இலக்கிலும் வாஷிங்டன் அக்கறை காட்டுகின்றது.

12. யூரேசியா மீது மூலோபாய மேலாதிக்கத்தைப் பேணுவதற்கான தனது உந்துதலை அரங்கேற்றுவதற்கான ஒரு தீர்க்கமான மேடையாக தெற்காசியாவை ஆக்குவதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் பிரச்சாரம், ஏற்கனவே வெடிக்கக்கூடிய புவி-சார் அரசியல், தேசிய இன மற்றும் வகுப்புவாத மோதல்களால் கிழிந்து போயுள்ள ஒரு பிராந்தியத்தை இன்னும் எரியச் செய்கின்றது. மிகவும் கவலைக்குரிய விதத்தில், அது அணு ஆயுதங்களைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமபல நிலையை குழப்பி, ஒரு தெற்காசிய அணுவாயுத போட்டியை வெடிக்கச் செய்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் குலாவுதலால் திடம்பெற்றுள்ள இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான இந்தியாவின் புதிய அரசாங்கம், இஸ்லாமாபாத் உடனான “போட்டி விதிகளை” மாற்றும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான தன் பங்கிற்கு, இந்தியாவுடன் எப்போதும் விரிவடைந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார இடைவெளியை மூடிவிடும் முயற்சியில், “போர்க்கள” தந்திரோபாய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தி இன்னும் முன்சென்றுள்ளது. தனது கொள்ளையடிக்கும் ஆர்வம் மற்றும் குறிக்கோள்களுக்காக முன்னெப்போதையும் விட இறுக்கமாக இந்தியாவை அணைத்துக்கொள்ளும் அமெரிக்க உந்துதலின் புவிசார்-அரசியல் மற்றும் இராணுவ-மூலோபாய தர்க்கமானது இஸ்லாமாபாத்தையும் பெய்ஜிங்கையும் தமது நீண்டகால இராணுவ பங்காண்மையை பலப்படுத்திக்கொள்ள நெருக்கியுள்ளது. அமெரிக்க-சீன மோதல்கள், ஏற்கனவே மூன்று பிரகடனப்படுத்தப்பட்ட போர்களையும் எண்ணிலடங்கா யுத்த நெருக்கடிகளையும் உருவாக்கிய புகைந்துகொண்டிருக்கும் இந்திய-பாகிஸ்தான் பகைமையில் மேலும் மேலும் வெளிப்படையாகி உள்ளதனால், ஒவ்வொரு நாடும் புதிய மட்டத்திலான வெடிக்கும் நிலையைப் பெற்றுள்ளன. ஏற்கனவே ஒரே நேரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இரு முனை யுத்தம் ஒன்றில் போரிடுவதற்காக இந்தியாவுக்கு இந்திய இராணுவம் திட்டம் வகுத்துள்ளது. தெற்காசியாவில் அதன் ஆக்கிரோஷ நடவடிக்கைகளின் எரியூட்டும் தாக்கத்தை பற்றிய வாஷிங்டனின் அலட்சியத்துக்கு, அன்டனி கோர்டஸ்மேன் என்பவரால் எழுதப்பட்டு மூலோபாய மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான மையத்தினால் வெளியிடப்பட்ட 2013 அறிக்கையொன்று உதாரணங்களை தந்துள்ளது. இலட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு அணுவாயுதப் போர், அமெரிக்காவுக்கு “கடுமையான மிகப்பெரும் மூலோபாய விளைவுகளை அத்தியாவசியாமகக் கொண்டிருக்காததோடு” “சிறந்த நன்மைகளையும் கொண்டிருக்கலாம்” என்று அது கூறிக்கொள்கின்றது.

13. பர்மா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் குறிப்பாக பாகிஸ்தானுமாக தெற்காசியாவில் ஒவ்வொரு நாடும், வளர்ச்சிகண்டு வரும் புவிசார் அரசியல் பதட்ட நீர்ச்சுழிக்குள் சிக்குண்டு வருவதோடு, அவற்றின் உள்ளக நெருக்கடிகள் பெருமளவில் விரிவாக்கப்பட்டுள்ளன. 2009ல் அதிகாரத்திற்கு வந்த பின்னர், ஜனாதிபதி ஒபாமா, ஆப்கான் போரை “ஆப்பாக்” யுத்தமாக ஆக்கியதோடு பாகிஸ்தானை அமெரிக்க ஆளில்லா விமானங்களின் கொலைக் களமாக மாற்றி, நூற்றுக்கணக்கான பொது மக்களின் சாவை விளைவாக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் தனது சொதந்த மக்களுக்கு எதிரான அதன் இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா வழங்கும் “குருதி தோய்ந்த பணத்தையே” பாகிஸ்தான் பொருளாதாரம் நம்பியிருக்கின்றது. இது நாடு பூராவும் பரந்த எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது. அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்டு ஒத்துழைக்கப்பட்ட வடக்கு வஸிரிஸ்தான் மீதான அண்மைய தாக்குதல், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றியுள்ளதோடு பல பொது மக்களின் உயிரிழப்புக்கும் வழிவகுத்துள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தானின் நீண்ட “எல்லா காலத்திலுமான நண்பனான” சீனா மீது குவிமையப்படுத்தியுள்ள நிலையில், இஸ்லாமாபாத்துக்கு திட்டமிடுவதற்கான வாய்ப்புகள் குறுகிப் போய், சீன முதலீடுகள் மற்றும் உதவிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை மேலும் குவித்துள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றமானது இஸ்லாமியப் போராளிகளுக்கு உடனடித் தண்டனை வழங்குவதற்காக விசேட நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு அண்மையில் இராணுவத்துக்கு அதிகாரம் அளித்துள்ளது. இத்தகைய ஜனநாயக-விரோத பொறிமுறைகள், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மிகப் பரந்தளவில் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்படும். 

14. வாஷிங்டனின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் இராணுவத் தயாரிப்புகளுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி.) பிரதிபலிப்பு, போர் ஆபத்தை மட்டுமே உக்கிரமாக்குகின்றது. 1978ல் இருந்து சீனாவில் முதலாளித்துவ மீட்சிக்கு தலைமை வகிக்கும் மற்றும் மிகச்சிறிய அதி-செல்வந்த ஆட்சிக்குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. தலைமைத்துவமானது அமெரிக்க போர் உந்துதலை எதிர்க்க சீனாவில் அல்லது சர்வதேச ரீதியில் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு அழைப்பும் விடுப்பதற்கு முற்றிலும் இலாயக்கற்றதாகும். மாறாக, அந்த ஆட்சி, வாஷிங்டனுனடன் புதிய உடன்பாடுகளை எட்டுவதற்கு திட்டங்களைக் கையாண்டாலும் கூட, இராணுவ ரீதியில் ஏகாதிபத்திய சக்திகளுடன் பொருந்துவதற்காக பயனற்ற ஆயுதப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. சோசலிசம் பற்றிய அவ்வப்போதைய கொண்டாட்டங்களையும் கைவிட்டுள்ள சி.சி.பி., வறியவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் விரிவடைந்து வரும் இடைவெளியினால் உருவாகியுள்ள கூர்மையான சமூக பதட்டங்களின் மத்தியில் தனது ஆட்சிக்கு முண்டு கொடுப்பதற்காக, பிற்போக்கு சீன தேசியவாதத்தை, குறிப்பாக ஜப்பான்-விரோத பேரினவாதத்தை முன்னிலைப்படுத்துவதை நாடுகின்றது. ஜப்பான், ஆசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து தம்மைப் பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் தேசப்பற்று அறைகூவல்களையும், மற்றும் அமெரிக்க படையெடுப்புக்கு மேலும் சாக்குப் போக்குகளை வழங்கும் பெய்ஜிங்கின் இராணுவ மேம்படுத்தல்களையும் சீனத் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். கட்டியெழுப்பப்பட வேண்டிய சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கு 400 மில்லியன் பலமான சீனத் தொழிலாள வர்க்கம் இன்றியமையாத அங்கமாகிருப்பார்கள்.

15. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோ.ச.க.யின் பிரச்சாரமானது ஆசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தலில் யார் வென்றாலும் வளர்ச்சி கண்டுவரும் போர் அச்சுறுத்தல் மற்றும் ஆழமடைந்து வரும் சிக்கன நடவடிக்கைகள் பற்றி தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த, மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இராஜபக்ஷ மற்றும் சிறிசேன முகாம்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டப் போராடிய ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கான மற்றும் ஒரு புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டமானது அனைத்துலகவாதத்துக்கான போராட்டத்துடன் கட்டுண்டுள்ளது. சோ.ச.க. தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவித்தவாறு: “ஏகாதிபத்திய போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமானது சர்வதேச அளவிலானதாக இருப்பது இன்றியமையாததாகும். எந்தளவுக்கு பெரியது அல்லது சிறியது என்பதற்கும் அப்பால், ஒரு தேசம் என்ற அடிப்படையில் இருந்து ஏகாதிபத்தியத்தின் அல்லது பல்கூட்டுத்தாபனங்களின் அல்லது நிதி நிறுவனங்களின் கொள்ளையடிப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பது இயல்பிலேயே சாத்தியமற்றதாகும்.

ஏகாதிபத்திய போர் மற்றும் காலனித்துவ ஒடுக்குமுறையின் ஒரு புதிய காலகட்டம்

16. புதுப்பிக்கப்பட்ட ஏகாதிபத்திய போர் உந்துதல் சம்பந்தமாக தெற்காசியா பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்களின் கோழைத்தனமான பிரதிபலிப்பானது, ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் செய்த பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவமானது எந்தவொரு உண்மையான ஏகாதிபத்திய-விரோத போராட்டத்தையும் முன்னெடுக்க அல்லது வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் சமூகத் தேவைகளை திருப்திப்படுத்த முற்றிலும் இலாயக்கற்றது என அவர் வலியுறுத்தினார்.

17. இரண்டாம் உலகப் போரின் பின்னர் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சுதந்திரம் என்ற மாயை, தெற்காசிய முதலாளித்துவ வர்க்கங்கள் தற்போது ஏகாதிபத்தியத்துக்கு அடிவருடுவதை மூடிமறைத்துள்ளது. 1948ல் தூரதிருஷ்டியுடனான பகுப்பாய்வில், இந்திய துணைக் கண்டத்தில் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.), பிரிட்டனுக்கும் உள்ளூர் முதலாளித்துவத்துக்கும் இடையிலான இழிந்த உடன்பாடுகள், “வெகுஜனங்கள் மீதான ஏகாதிபத்திய அடிமைச் சங்கிலிகளுக்கு மறுவடிவம் கொடுப்பதை” மட்டுமே அர்த்தப்படுத்தும் “போலி சுதந்திரம்” என கண்டனம் செய்தது.

18. தெற்காசியாவில் அமைந்துள்ள போருக்குப் பிந்திய தேசிய அரச அமைப்புமுறை, உள்ளூர் ஆளும் வர்க்கங்கள் ஜனநாயகப் புரட்சியை நசுக்குவதை அடித்தளமாகக் கொண்டதாகும். ஏகாதிபத்தியத்துடனான முதலாளித்துவ உடன்படிக்கைகளின் பிற்போக்குப் பண்பானது, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்ட மற்றும் இரண்டு மில்லியன் மக்களின் படுகொலையை விளைவாக்கிய, இந்தியத் துணைக்கண்டத்தை இன ரீதியில் பிரித்ததில் மிகவும் விளக்கமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு முற்போக்கான முறையிலும் பிரமாண்டமான பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளை தீர்க்க முடியாத, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் ஆளும் கும்பல்கள், சமூகப் பதட்டங்களை உள்நாட்டில் வன்முறைப் படுகொலைகளின் பக்கமும் வெளிநாட்டில் போர்களின் பக்கமும் திருப்பிவிடுவதற்காக மீண்டும் மீண்டும் இனவாதத்தை நாடி வந்துள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் 1947ல் இருந்து மூன்று முழு யுத்தங்களில் மோதிக்கொண்டதோடு கடைசி யுத்தம் பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் ஸ்தாபிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

19. இலங்கையில், ஒரு மில்லியன் தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிரஜா உரிமையை பறிப்பதே, புதிதாக சுதந்திரம் பெற்ற அரசின் முதல் நடவடிக்கையாக இருந்தது. பல நெருக்கடி நேரங்களிலும், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் தமது ஆட்சிக்கு முண்டு கொடுக்கவும் மீண்டும் மீண்டும் சிங்கள பௌத்த பேரினவதாதத்தை கிளறுவதை நாடிவந்துள்ளன. 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் நுழைந்து கொண்டதன் மூலம் லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) சோசலிச சர்வதேசிய வாதத்தை காட்டிக்கொடுத்ததன் மூலம், தொழிலாள வர்க்கத்துக்குள் உருவாக்கப்பட்டிருந்த குழப்ப நிலை, இனவாதத்துக்குள் விழுவதன் மூலம் பெருமளவில் உக்கிரம் கண்டது. ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க. அரசாங்கம் சந்தை-சார்பு மறுசீரமைப்புக்குத் திரும்பியமையும் தொழிலாள வர்க்கத்தின் மீதான கொடூரத் தாக்குதலும் இடைவிடாத தமிழர்-விரோத கூச்சல்களுடன் இணைந்தே அரங்கேறின. இந்த தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்கள் 1983ல் தீவு பூராவுமான படுகொலைகளில் உச்சகட்டத்தை அடைந்ததோடு கால் நூற்றாண்டுகால இரத்தக்களரி உள்நாட்டுப் போருக்கும் வழி வகுத்தது.

20. குளிர் யுத்த கட்டமைப்புக்குள், தெற்காசியாவிலான ஆளும் வர்க்கங்கள், ஏனைய நாடுகளில் போலவே, ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சோவியத் கட்டத்துக்கும் இடையில் தந்திரோபாயங்களை கையாளக் கூடியவையாக இருந்தன, மற்றும், சில விடயங்களில், ஸ்டாலினிசத்தின் உதவியுடன் வெகுஜனங்களுக்கு முன் ஏகாதிபத்திய-விரோதிகளாக, சோசலிஸ்டுகளாக காட்டிக்கொள்ளக் கூடியவையாக இருந்தன. இது குறிப்பாக இந்தியாவில் நிச்சயமாக இடம்பெற்றது. எவ்வாறெனினும், ஸ்டாலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ மீட்சியை அணைத்துக்கொண்டதன் மூலம், அதன் கடைசி துரோகச் செயலாக 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன், இந்த சமநிலைப்படுத்தும் நடவடிக்கை முடிவுக்கு வந்ததோடு “சுதந்திரம்” என்ற முகமூடி கிழித்தெறியப்பட்டது. ஈராக்குக்கு எதிராக 1991ல் முதலாவது வளைகுடா யுத்தத்தை முன்னெடுப்பதற்கான சாக்குப் போக்காக ஈராக் “சிறிய குவைத்தின்” மீது படையெடுத்ததை அமெரிக்கா பற்றிக்கொண்டது. இந்தப் போரானது தமது சொந்த நவ-காலனித்துவ குறிக்கோள்களை நியாயப்படுத்துவதாக அடையாளங் கண்டுகொண்ட சிறியதும் பெரியதுமாக சகல ஏகாதிபத்திய சக்திகளும் உச்சகட்டம் வரை வாஷிங்டனுக்கு ஆதரவளித்தன.

21. ஏகாதிபத்திய யுத்தத்தையும் காலனித்துவ ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்! என்ற அனைத்துலகக் குழுவின் 1991 விஞ்ஞாபனம், சர்வதேச உறவுகளிலான மிகப் பரந்த மாற்றங்களின் மீது கவனத்தை திருப்பியது: “ஈராக் மீதான தாக்குதலில் அராபிய அரசுகளின் பங்களிப்பானது தேசிய முதலாளித்துவம் எந்தளவுக்கு ஏற்கனவே அரை காலனித்துவ சேவைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய முதலாளித்துவத்தின் அரசியல் அடிமைத்தனம், பகுதியளவில் மட்டுமே இராணுவத் தாக்குதல் பற்றிய பீதியினால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அது, மிகவும் நேரடியாக, ஒடுக்கப்பட்ட நாடுகள் ஏகாதிபத்திய முதலீடுகளின் மீது பொருளாதார ரீதியாக தங்கியிருப்பதில் இருந்தே வெளிப்படுகின்றது.

22. சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தையும் மற்றும் அதன் தேசிய வல்லாட்சித் திட்டத்தையும் கீழறுத்த உற்பத்தியின் பூகோளமயமாக்கம், அதே போல் பிந்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் பல்வேறு தேசிய சுய-திருப்தி திட்டங்களுக்கும் முடிவை அறிவித்தது. “சர்வதேச நிதி மூலதனத்திடம் இருந்து தமது நாடுகளை விடுவித்துக்கொள்ள முயற்சிப்பதற்கு மாறாக, தேசிய முதலாளித்துவங்கள் பிராந்தியத்தின் இயற்கை மற்றும் மனித வளங்களை இடைவிடாது சுரண்டுவதற்கு ஏகாதிபத்தியங்களை அனுமதிக்கும் ‘விசேட வர்த்தக வலயங்களை’ ஸ்தாபிக்க கெஞ்சின” என அனைத்துலகக் குழுவின் விஞ்ஞாபனம் தொடர்ந்தது.

23. சோவியத் ஒன்றியத்தின் முடிவானது தெற்காசியாவில் உறவுகளை ஆழமாக மாற்றியமைத்தது. பொருளாதார ரீதியில் சோவியத் ஒன்றியத்தில் தங்கியிருந்த இந்தியா, 1991ல் இருந்து முழுமையான சந்தை-சார்பு மறுசீரமைப்பை முன்னெடுத்ததோடு அதன் முந்தைய “அணிசேரா” தோரணையை கைவிட்டு இராஜதந்திர ரீதியில் அமெரிக்காவை நோக்கித்திரும்பியது. 1947ல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னர், துணைக் கண்டத்தில் முதலாவது ஏகாதிபத்திய இராணுவத் தலையீடான 2001ல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பிற்கு இந்தியா ஆதரவளித்தது. அடுத்து வந்த ஒன்றரை தசாப்தங்களில், அமெரிக்காவுடன் முன்னெப்போதையும் விட நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்ட புது டில்லி, சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் மட்டுமன்றி, ஈராக் மீதான அதன் படையெடுப்பு மற்றும் லிபியாவில் “ஆட்சி மாற்ற” யுத்தம் உட்பட வாஷிங்டனின் பூகோள ரீதியான தாக்குதல்களுக்கும் தன்னை உடந்தையாக்கிக் கொண்டது. முன்பை விட குறிப்பிடத்தக்களவு வாஷிங்டனை நோக்கித் திரும்பியுள்ள அதேவேளை, இந்திய முதலாளித்துவம் இன்று வரையும் அமெரிக்காவுடனான உத்தியோகபூர்வ இராணுவ கூட்டணியை நிராகரித்து, “மூலோபாய சுயாட்சி” என்ற கொள்கையை பற்றிக்கொண்டுள்ளது. ஒரு “ஊஞ்சல் அரசு” என்ற தனது நிலையை சுரண்டிக்கொண்டு, அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்படாமல் தவிர்த்துக்கொள்வதற்காக, அது ஆழமடைந்து வரும் உலக புவிசார்-அரசியல் பிளவுகளில் கால்பரப்பி நின்றுகொள்ள முயற்சிக்கின்றது. இந்த ஈவிரக்கமற்ற கொள்கை அழிவில் மட்டுமே முடிவடையும். அதே சமயம், அது தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகும். இந்திய ஆளும் தட்டு, அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளை அவற்றின் போர் தயாரிப்புகளில் ஊக்குவிக்கும் அதே வேளை, பிராந்திய வல்லரசு என்ற அதன் பிற்போக்கு உரிமை கோரலை தூக்கிப் பிடிக்கவும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தனது தாக்குதல்களை முன்னெடுக்கவும் அவற்றை சார்ந்திருக்கின்றது.

24. குளிர்யுத்த காலத்தில் வாஷிங்டனால் உத்தரவிடப்பட்ட வெளிநாட்டுக் கொள்கையை புது டில்லி ஏற்றுக்கொள்ளத் தயங்கியதை அடுத்து தனது பிராந்திய கூட்டாளியாக தான் கட்டியெழுப்பிய பாகிஸ்தானை, இப்போது இந்தியாவுடன் குலாவுவதன் மூலம் அமெரிக்கா ஓரத்திற்குத் தள்ளியது. 2001ல் அது ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தயாராகிய போது, பாகிஸ்தான் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு வசதியளிக்காவிட்டால் மற்றும் தலிபானுடனான அதன் உறவுகளை முறித்துக்கொள்ளத் தவறினால், அதன் மீது “கற்காலத்திற்குத் திரும்புமளவிற்கு” குண்டுத் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா அச்சுறுத்தியது. ஓரே வாரத்தின் பின்னர், இந்திய பாராளுமன்றத்தின் மீதான பயங்கரவாத தாக்குதலைப் பற்றிக்கொண்ட புது டில்லி, பாகிஸ்தானின் பலவீனத்தை சுரண்டிக்கொள்ள முயற்சித்து, இஸ்லாமாபாத் மீது போர் அச்சுறுத்தல் விடுத்ததுடன் எட்டு மாதங்களுக்கு அதன் எல்லைகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் துருப்புக்களை அணிதிரட்டி வைத்திருந்தது. அப்போதிருந்தே, இந்தியாவும் பாகிஸ்தானும் வாஷிங்டனின் ஆதரவுக்காக ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு ஓடின. வாஷிங்டனும் மாஸ்கோவும் முன்னர் பிராந்திய பதட்டங்களை சமாளித்து வந்த குளிர் யுத்த காலத்தின் முடிவானது, ஸ்திரத்தன்மையை உருவாக்குதவற்கு பதிலாக, இந்திய-பாகிஸ்தான் முரண்பாடுகள் பூகோள மோதலுக்கான வெடி புள்ளிகளின் நீண்ட பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதுடன் சேர்த்து, மோதலுக்கான ஆபத்தை மட்டுமே உக்கிரமடையச் செய்துள்ளது.

25. பிராந்தியம் பூராவும், முன்னர் ஏகாதிபத்திய-விரோத தோரணைகளை காட்டியும் சோசலிச வாய்சவடால்களையும் விடுத்தும் வந்த தரப்புக்கள், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வந்த மறு ஐக்கிய அலையில் இணைந்துகொண்டன. கொழும்பில், அமெரிக்கச்-சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு (ஐ.தே.க.) எதிராக தனது வெளிநாட்டுக் கொள்கையை வரையறுத்துக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), மேற்கு நோக்கி நகர்ந்தது. சிங்கள-பௌத்த தேசப்பற்றுக்கு அப்பட்டமாக வக்காலத்து வாங்குவதற்காக தனது சோசலிச பாசாங்குகளை கைவிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), 1990களின் முற்பகுதியில் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் சேர்ந்துகொள்வதற்காக “ஆயுதப் போராட்டத்தைக்” கைவிட்டது. இந்த அனைத்துக் கட்சிகளும், பிராந்தியத்தில் உள்ள அவற்றின் சமதரப்பினரைப் போலவே, அமெரிக்காவின் “பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துடன”” இணைந்துகொண்டதோடு ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்புக்கும் ஆதரவளித்தன.

26. ஏகாதிபத்தியத்துடன் உடன்பாட்டுக்குச் செல்வதன் மூலம், பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸைப் போல் தேசிய விடுதலை இயக்கத்தை பின்பற்ற புலிகள் முனைத்தனர். எனினும், குறிப்பாக அது 1991ல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு முடிவெடுத்த பின்னர், ஒரு தனியான முதலாளித்துவ ஈழ அரசுக்கான அதன் கோரிக்கைக்கு எந்தவொரு ஆதரவும் இன்றி சர்வதேசரீதியில் தனிமைப்பட்டிருப்பதை புலிகள் இயக்கம் கண்டது. 2009ல் அதன் தோல்வி, அடிப்படையில் ஒரு இராணுவப் பிரச்சினை அல்ல, மாறாக, தமிழ் வெகுஜனங்களை அன்றி, விலைபோகும் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் பிரிவினைவாத வேலைத்திட்டத்தின் பிற்போக்குப் பண்பில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. ஏகாதிபத்தியம் அதற்கு எதிராகத் திரும்பிய போது, இலங்கையில் அல்லது பிராந்தியத்தில் உள்ள பரந்த தொழிலாள வர்க்கம் ஒரு புறம் இருக்க, அதன் ஜனநாயக-விரோத வழிமுறைகளால் அந்நியப்பட்டிருந்த தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எந்தவொரு அழைப்பும்விடுக்க அது இலாயக்கற்று இருந்தது. இலங்கை இராணுவம் தம்மை நெருங்கிய நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற இலங்கையின் பாரம்பரிய ஏகாதிபத்திய எஜமானர்கள் தொடக்கம் கொழும்புக்கு ஆதரவளித்த அதே சக்திகளான “சர்வதேச சமூகத்துக்கு” புலிகளின் தலைவர்கள் பரிதாபமாக வேண்டுகோள் விடுத்தனர்.

27. பின்தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவம் பெரும் வல்லரசுகளுக்கு அஞ்சுவதும் அடிவருடுவதும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் வல்லமை கொண்ட ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்று லியோன் ட்ரொட்கியால் எட்டப்பட்ட முடிவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முடிவுகட்டுவதற்கான சர்வதேசரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு போராட்டத்திற்காக, ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தமது சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களால் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் போர் ஆபத்தையும் தடுத்து நிறுத்த முடியும்.

இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி

28. 2008ல் வெடித்த பூகோள நிதிய நெருக்கடியானது ஒரு சூழ்நிலை வீழ்ச்சி அல்ல, மாறாக, முன்னேறிய முதலாளித்துவப் பொருளாதாரங்களில் ஆறு ஆண்டுகளாக பின்னடைவு போக்குக்கு வழிவகுத்துள்ள முதலாளித்துவ அமைப்பு முறையின் வீழ்ச்சியே ஆகும். ஆசியாவில் வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் என அழைக்கப்படுவனவற்றில் ஒப்பீட்டளவிலான உயர்ந்த மட்டத்திலான முன்னேற்றமானது மலிவு உழைப்புக் களங்களாக, எல்லாவாற்றுக்கும் மேலாக சீனாவை மையாமாகக் கொண்டு, கடந்த மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முன்னெடுப்புகளில் அவை ஒருங்கிணைந்து கொண்டதிலேயே தங்கியிருக்கின்றன. 2008ன் பின்னர் தொடர்ந்த வளர்ச்சிகள் இரு காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன: அவை, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானிலும் மத்திய வங்கிகளால் முன்னெடுக்கப்பட்ட, முன்னெப்போதும் இல்லாத “கட்டங்கட்டமாக இலகுவாக்கும்” திட்டத்தின் விளைவாகக் கிடைத்த ஊக முதலீடுகள், மற்றும் பிரமாண்டமான பிணையெடுப்பு பொதிகள் ஊடாக பொருளாதார விரிவாக்கத்தைப் பேணும் சீன அரசின் உறுதிப்பாடும் ஆகும்.

29. வளர்ச்சிக்கு காரணமான அதே காரணங்கள்தான் பொருளாதார ஸ்திரமின்மைக்கு எரியூட்டியுள்ளன. 2013 நடுப் பகுதியில் அமெரிக்க பெடரல் ரிசேர்வ் வங்கி கட்டங்கட்டமான இலகுபடுத்தலை “வெட்டிக் குறைக்கவுள்ளதாக” சமிக்ஞை செய்த போது இந்தியா, துருக்கி, தென் ஆபிரிக்கா மற்றும் ஏனைய வளரும் பொருளாதாரங்களும் உடனடியாக இந்த நிதியப் பீதியால் பாதிக்கப்பட்டன. 2008 நவம்பர் மற்றும் 2013 செப்டெம்பருக்கும் இடையில், பிரதானமாக அமெரிக்காவில் இருந்து, 105 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நிறுவன முதலீடாக இந்தியாவுக்குள் பெருக்கெடுத்தன. 2013 இரண்டாம் பாதியில், இந்த போக்கு மறுபக்கம் திரும்பி, மூலதன வெளியேற்றத்தையும் இந்திய ரிசேர்வ் வங்கி தலையிடுமளவுக்கு ரூபாவின் கூர்மையான வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அமெரிக்க மத்திய வங்கி 2014 அக்டோபரில் கட்டங்கட்டமான இலகுவாக்கலை நிறுத்துவதாக அறிவித்தபோது, நிதியப் பொறிவை பற்றி எச்சரித்த இந்திய ரிசேர்வ் வங்கியின் துணைத் தலைவர், “இதன் ருசியை நாம் கடந்த ஆண்டு கண்டோம்”, என்றார். 2008 நெருக்கடியின் பின்னர், பூகோள பொருளாதாரத்தை முன்நோக்கி நகர்த்தும் வளர்ச்சி பொறியமைப்பாக வளரும் பொருளாதாரங்கள் விளங்கும் என்ற எதிர்பார்ப்பை பொருளாதார பண்டிதர்கள் முன்வைத்தனர். 2014, சீனாவில் கூர்மையான மந்தநிலையுடன் இந்த புனைகதைக்கு முடிவு கட்டப்பட்டு, ஆசியா உட்பட ஒட்டு மொத்த பூகோள பொருளாதாரமும் ஒரு மோசமடைந்து வரும் சரிவை பிரதிபலித்தது.

30. இந்த சூழ்நிலை, இலங்கையை பொருளாதார ரீதியில் “ஆசியாவின் ஆச்சரியமாக” தனது அரசாங்கம் மாற்றும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கூறிக்கொண்டதை கேலிக் கூத்தாக்கியது. நாட்டின் பொருளாதாரம் 2008ல் ஏற்பட்ட பூகோள நிதிய நெருக்கடியினால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தது. முதலீடுகள் நாட்டிற்கு வெளியே பாய்ந்தன, ஏற்றுமதி விலைகளும் வருமானமும் வீழ்ச்சியடைந்தன, 300 மில்லியன் டாலர் கடன் பெறுவதற்கான முயற்சி தோல்விகண்டதோடு 220 தொழிற்சாலைகள் மூடப்பட்டு 70,000 பேர் தொழிலை இழந்தனர். 2009ல் இருந்து பொருளாதார வளர்ச்சி மற்றும் விலையிலும் ஏற்பட்ட ஏற்றமானது ஏனைய “வளர்ந்து வரும் பொருளாதாரங்களை” தளராது நீடிக்க வைத்த அதே காரணிகளின் விளைவே ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக, உட்கட்டமைப்பையும் பொருளாதாரத்தையும் நாசமாக்கிய கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் முடிவுடன் அது பொருந்தி இருந்தது. எனவே மிகவும் கீழ் மட்டத்தில் இருந்து தொடங்கிய வளர்ச்சி, 2010ல் 8 சதவீதத்தை எட்டியதோடு அடுத்து வந்த காலங்களில் 6-7 வீதமாக காணப்பட்டது. இலங்கை, உலகப் பொருளாதாரத்துடன் மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளதோடு அதனால் பூகோள பொருளாதர சூறாவளிகளில் மிகவும் பாதிக்கப்படக் கூடியதாகவும் உள்ளது. வளர்ச்சியின் பெரும் பகுதி, 2005ல் இருந்து 40 பில்லியன் டொலர் வரை கிட்டத்தட்ட நான்கு மடங்கை எட்டிய வெளிநாட்டுக் கடன்களாலேயே உந்தப்பட்டது. நிதியுதவி மற்றும் முதலீட்டுக்கான இலங்கையின் பிரதான மூலாதாரமாக சீனா இருக்கின்றமை, அதை வளர்ச்சியடைந்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்களில் பாதிக்கப்படக் கூடியதாக ஆக்கியுள்ளது. இன்னொரு பிரதான அந்நிய செலாவணி மூலாதாரம், அமெரிக்கா புதிய போர்களை முன்னெடுத்து வரும் மத்திய கிழக்கில் இருந்து கிடைக்கும் பெருமளவான பண அனுப்பீடுகளாகும்.

31. ஏனைய ஒவ்வொரு நாடுகளிலும் போலவே, இலங்கையில் உள்ள ஆளும் வர்க்கமும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முயற்சிக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் படி, மொத்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் பொதுக் கடன் வீதமானது வளர்ந்துவரும் பொருளாதாரங்களின் சராசரி வீதத்தை விட இரண்டு மடங்காகும் மற்றும் அது குறைக்கப்பட வேண்டியதுமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குதலின் கீழ், இராஜபக்ஷ அரசாங்கமானது 2009ல் மொத்த தேசிய உற்பத்தியில் 9.9 வீதமாக இருந்த வரவு செலவுப் பற்றாக்குறையை 2013ல் 5.8 வீதமாக குறைத்தது. வெளிப்படையாகவே சிக்கன நடவடிக்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள புதிய சிறிசேன அரசாங்கம், இந்த ஆண்டு 5.2 வீதமாகவும் 2016 அளவில் 3.8 சதவீதமாகவும் நாணய நிதியத்தின் இலக்கை எட்ட வேண்டும். இது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் இன்னும் ஆழமாக சீரழிக்கப்படுவதையே அர்த்தப்படுத்தும்.

32. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சந்தை-சார்பு மறு சீரமைப்புமே முழு அரசியல் ஸ்தாபனத்தினதும் வேலைத்திட்டமாகும். 1977ல் இருந்தே திறந்த சந்தை நடவடிக்கைகளை தொடக்கி வைத்தமைக்கு ஐ.தே.க. பொறுப்பாளியாகும். அது, ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான குமாரதுங்கவினதும் இராஜபக்ஷவினதும் அரசாங்கங்கள் அதைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஆதரவளித்த ஐ.தே.க., இப்போது மீண்டும் பதவிக்கு வந்து, அதை மேலும் துரிதப்படுத்தவுள்ளது. ஜே.வி.பி. ஒரு “புதிய சோசலிச அரசை” அபிவிருத்தி செய்வதற்கான ஒரு புதிய நோக்கை வெளியிட்டிருந்த போதும், அது நாட்டை வெளிநாட்டு மூலதனத்துக்கான ஒரு மலிவு உழைப்புத் தளமாக மாற்றும் சீன மாதிரியை ஏற்றுக்கொள்வதையே அர்த்தப்படுத்துகின்றது. தமிழ் முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு, முதலீட்டாளர்களுக்காக தனது சொந்த மலிவு உழைப்புத் தளமாக தீவின் வடக்கு மற்றும் கிழக்கை மாற்றுவதன் பேரில் பிராந்திய சுயாட்சி ஒன்று தேவைப்பட்டுள்ளது.

33. பொதுச் செலவிலான வெட்டுக்கள் வாழ்க்கைத் தரங்களில் அழிவுகரமான தாக்கத்தைக் கொண்டுள்ளன. இராஜபக்ஷ அரசாங்கம் ஊதியங்களில் ஏறத்தாள ஒரு உறைநிலையை பேணி வந்த அதே வேளை, மானிய வெட்டுக்கள் மற்றும் மறைமுக வரி அதிகரிப்புகள் ஊடாக விலைவாசியை வானளாவ உயர்த்தியது. பாணின் விலை 2007ல் இருந்து இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதோடு எரிபொருள் விலை, போக்குவரத்துக் கட்டணங்களை 50 முதல் 100 வீதம் வரை உயா;த்தப்பட்டன. சமுர்தி திட்டத்தின் ஊடாக நலன்புரி உதவிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் பெற்றுவந்த குடும்பங்களின் எண்ணிக்கை, 2010ல் 1.6 மில்லியனில் இருந்து 2013ல் 100,000 ஆக சுருங்கிவிட்டது. தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பைத் திறந்து விடுவதற்காக இலவச சுகாதார சேவை மற்றும் கல்விக்கான ஒதுக்கீடுகள் திட்டமிட்டு சுருட்டிக்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான உர மானியங்களில் 25 வீத வெட்டு மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் மானியங்கள் இரத்துச் செய்யப்பட்டமையின் காரணமாக கிராமப்புற வறியவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்திப் பொருள்களுக்கான விலை வீழ்ச்சி மற்றும் முதலீட்டுச் செலவுகள் அதிகரிப்பும் பல விவசாயிகளின் வருமானத்தை துடைத்துக் கட்டியதால், அவர்கள் பெரும் கடன் மற்றும் வறுமைப் பிடிக்குள் சிக்கியுள்ளதோடு தற்கொலை வீதங்கள் அதிகரித்துள்ளன.

34. 2013ல் தனிநபர் வருமானம் 3,280 டொலர்கள் வரை அதிகரித்து, இலங்கையை நடுத்தர வருமானம் பெரும் நாடுகளின் நிலைக்குக் கொண்டுவந்துள்ளதாக இராஜபக்ஷ பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் இது பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையில் அகன்றுவரும் சமூக இடைவெளியை புறக்கணிக்கின்றது. தூய சமத்துவத்துக்கு 0 மற்றும் தூய சமத்துவமின்மைக்கு 1 என்ற புள்ளிகளுக்கு இடையில் ஒழுங்கமையும் கினி (Gini) குணகம், 1991ல் 0.34 என்ற புள்ளியில் இருந்து 2012ல் 0.40 வரை அதிகரித்துள்ளது. குடும்பத்தோரில் அதி பணக்கார 20 வீதத்தினர் வருமானத்தின் 53.5 வீதத்தைப் பெரும் அதே வேளை, அதி வறிய 20 வீதத்தினர் 4.4 வீதத்தை மட்டுமே பெறுகின்றனர். ஒரு நாளுக்கு 1.25 டாலரை அல்லது 162 ரூபாவை வருமைக் கோடாகப் பயன்படுத்தி, 2012ல் ஜனத்தொகையில் வெறும் 4.1 வீதமான மக்களே வறுமையில் இருப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்டது. எனினும், நாளொன்றுக்கு 2 டொலரை வறுமைக் கோட்டுக்குப் பயன்படுத்தினாலும், இந்த அளவு நாடகபாணியில் 23 வீதத்துக்கு பாய்கின்றது.

35. நாட்டின் தொழிற் படையில் சுமார் 2.5 மில்லியன் மக்கள், அல்லது 54 சதவீதமானவர்கள், கூலி அல்லது தற்காலிக தொழிலில் பாதுகாப்பின்றி தங்கியிருக்குமளவுக்கு தாழ்த்தப்பட்டுள்ளனர். 2006 மற்றும் 2012க்கும் இடையில், நிரந்தரத் தொழில் 5 சதவீதத்தால் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், தற்காலிக அல்லது கூலித் தொழில் 21 வீதத்தால் உயர்ந்துள்ளது. தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், இப்போது சுதந்திர வர்த்தக வலயம் உட்பட பல நிறுவனங்களுக்கு தற்காலிக தொழிலாளர்களை விநியோகம் செய்கின்றது. கடந்த கால போராட்டங்களில் வெற்றிகொள்ளப்பட்ட தொழில் நிலைமைள், ஓய்வூதிய உரிமை, சுகாதார திட்டங்கள் மற்றும் ஏனைய உரிமைகளும் “சர்வதேச போட்டித்தன்மைக்கான” ஆக்கிரோசமான உந்துதலின் பாகமாக அபகரிக்கப்பட்டு வருகின்றன.

36. 2009ல் போரின் முடிவானது இராஜபக்ஷவால் வாக்குறுதியளிக்கப்பட்ட சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவரவில்லை. தளராத பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வந்த சமூக பதட்ட நிலைமைகளையும் எதிர்கொண்ட அவரது அரசாங்கம், அதன் அனைத்து முன்னோடிகளைப் போலவே அரச ஒடுக்குமுறை மற்றும் இனவாத வெறுப்பு மற்றும் பகைமைகளை கிளறிவிடுதல் போன்ற அதே பிற்போக்கு வழிமுறைகளை நம்பயிருந்தது. வலதுசாரி கட்சிகளைத் தளமாகக் கொண்டு, தமிழர்-விரோத பேரினவாதத்தில் மூழ்கிப் போயுள்ள ஆட்சிக்கு வந்துள்ள சிறிசேன அரசாங்கம், விரைவில் அதன் ஜனநாயக போர்வையை கழற்றிவிட்டு அதையே பின்பற்றும்.

37. இராஜபக்ஷ அரசாங்கம், பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது இனவாத ஆத்திரமூட்டல்களையும் தாக்குதல்களையும் மேற்கொள்ளும் பொது பல சேனா, ரவனா பலகாய மற்றும் சிஹல ராவய போன்ற பௌத்த அதிதீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்துள்ளது. அதே சமயம், அது மூன்று தசாப்தகால இனவாத போரின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தையும் விரிவாக்கியுள்ளது. இலங்கையை தெற்காசியாவின் மிகவும் இராணுவமயப்படுத்தப்பட்ட நாடாக ஆக்குவதன் பேரில், ஆண்டுக்கு 17.4 சதவீதம் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 80,000 துருப்புக்களாவது வடக்கு மாகாணத்தல் நிறுத்தப்பட்டுள்ளன. கொடூரமான யுத்த கால அவசரகாலச் சட்டமானது பயங்கரவாத தடைச் சட்டத்துக்குள் நுழைக்கப்பட்டுள்ளது. இராஜபக்ஷ “சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக” 22 மாவட்டங்களில் ஆயுதப் படைகளை நிலைகொள்ளச் செய்வதற்கு அதிகாரமளித்துள்ளார். உழைக்கும் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்ள தொடர்ச்சியாக பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. 2011ல் கடுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், 2012ல் மீனவர்களின் ஆர்ப்பாட்டம் மற்றும் 2013ல் தொழிற்துறை மாசுபடுத்தலுக்கு எதிராக வெலிவேரிய கிராமத்தவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல்கள் இதில் அடங்கும்.

போலி-இடதுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிதிரள்கின்றன

38. இலங்கையிலும் உலகம் பூராவும் ஏகாதிபத்திய யுத்தத்துடன் அணிசேர்ந்துள்ள போலி-இடது போக்குகளுக்கு எதிரான தொடர்ச்சியான அரசியல் போராட்டத்தின் ஊடாகவே தொழிலாள வர்க்கத்துக்கு தெளிவுபடுத்துவதும் அதை அணிதிரட்டுவதும் முன்னெடுக்கப்படுகிறது. உலகம் பூராவும் உள்ள தமது சமதரப்பினரைப் போலவே, நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் (ஐ.சோ.க.), 2011ல் லிபியாவில் அமெரிக்கத் தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கும் மற்றும் சிறிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை வெளியேற்றுவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கும் வக்காலத்து வாங்குபவர்களாக செயற்படுகின்றனர். அவர்கள், லிபியாவிலும் சிரியாவிலும் உள்ள இஸ்லாமிய, சீ.ஐ.ஏ. சொத்துக்கள் மற்றும் முன்னாள்-ஜெனரல்கள் அடங்கிய ஒரு பிற்போக்கு, அமெரிக்க முகவர்கள் கும்பலை “புரட்சியாளர்களாக” சித்தரிக்கின்றனர். இந்த முகவர்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் பங்காளிகளும் ஆயுதமும் நிதியையும் வழங்கிவருகின்ற நிலையிலும் கூட இந்த சித்தரிப்புத் தொடர்கின்றது. லிபிய தூதர் இராஜனாமா செய்து, அமெரிக்க ஆதரவிளான “கிளர்ச்சியாளர்களுடன்” இணைய வேண்டும் என கோரி கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் ந.ச.ச.க. ஏற்பாடு செய்திருந்தது.

39. ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை வெளியேற்றும் முயற்சியில் சிறிசேனவுக்குப் பின்னால் அணிசேர்ந்து, கொழும்பில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சி-மாற்ற நடவடிக்கையிலும் ந.ச.ச.க. மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் இணைந்துகொண்டன. எதிர்க் கட்சியான ஐ.தே.க.யை “ஜனநாயக” மாற்றீடாக முன்னிலைப்படுத்த கடந்த தசாப்தத்தில் அவர்கள் முன்னெடுத்த பிரச்சாரம், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான அமெரிக்கத்-தலைமையிலான “மனித உரிமைகள்” பிரச்சாரத்துடன் முற்றிலுமாக பிணைந்திருந்தது. இந்த கட்சிகள் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் பகுதியாக செயற்படுகின்றன -அதாவது முதலாளித்துவ அரசியலுக்குள் ஒரு போக்காக செயற்படுகின்றன. 1983ல் தமிழர்-விரோத படுகொலைகளுடன் புலிகளுக்கு எதிரான யுத்தத்தைத் தொடக்கி வைத்து 1994 வரை அதை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த ஒரு கட்சியான ஐ.தே.க. மீது வெளிச்சமான ஜனநாயக வண்ணங்களைப் பூசுவதற்கான அவர்களது அர்ப்பணிப்பு, அவர்களால் தாண்டிச் செல்ல முடியாத அரசியல் பாதைகள் கிடையாது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

40. அரசியல் ஸ்தாபகத்தின் ஏனைய பகுதியினரைப் போலவே, ந.ச.ச.க. மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் இனவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ளமை, அவை தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் கூட்டமைப்புடனும் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) உடனும் மேற்கொண்ட தந்திரோபாயங்களில் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. முசோக 2012ல் ஜேவிபீயில் இருந்து அமைப்பு ரீதியில் பிரிந்திருந்தாலும், அது தனது சிங்கள பேரினவாத அரசியலைத் தொடர்கின்றது. ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகளால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் எதிரிகளும் கொல்லப்பட்ட, 1980களின் கடைப் பகுதியில் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பி.யின் பிற்போக்கு தேசப்பற்றுப் பிரச்சாரத்தின் பங்காளிகளாக இருந்தமையை இட்டு மு.சோ.க. தலைவர்கள் பெருமைப்பட்டுக்கொள்கின்றனர். மு.சோ.க. ஆனது ந.ச.ச.க. மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியுடன் தனது “இடது மறுகுழுவமைவுக்கான” பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்குமாறு சோ.ச.க.வுக்கு அழைப்பு விடுத்தபோது சோ.ச.க. அதை உறுதியாக எதிர்த்தது. “அத்தகைய மறுகுழுவமைவு யதார்த்தமானால், அது தொழிலாள வர்க்கத்துக்கு இன்னொரு அரசியல் பொறியை உருவாக்குவதாகவே அமையும். 45 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை பாதுகாத்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக சளைக்காது போராடும் சோ.ச.க. நீங்கள் அமுல்படுத்த முயற்சிக்கும் அத்தகைய பிற்போக்கு மறுகுழுவமைவுக்கு நம்பகத் தன்மையை வழங்கும் எண்ணம் கிடையாது”, என சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் எழுதினார்.

41. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் யுத்த உந்துதலுடனும் அணிசேர்வதை நியாயப்படுத்துவதற்காக, இந்த போலி-இடதுகள் சீனாவையும் ரஷ்யாவையும் ஏகாதிபத்திய சக்திகளாக போலியாக வகைப்படுத்துகின்றன. இந்த நாடுகளின் வரலாற்று மற்றும் சர்வதேச சூழ்நிலைகளில் இருந்து அவற்றை பிரிக்கும் இந்த பண்புமயப்படுத்தல், ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் ஐரோப்பாவில் அதன் பங்காளிகளதும் அதிகரித்துவரும் ஈவிரக்கமற்ற ஆத்திரமூட்டல்கள் மற்றும் இராணுவத் தலையீடுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுக் கருத்தை சரிசெய்ய மேற்கொள்ளும் முயற்சியாகும். முன்னாள் சோவியத் ஒன்றியத்தை ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசு என்றும், 1949 புரட்சியின் பின்னரான சீனாவை உருமாறிய தொழிலாளர் அரசு என்றும் லியோன் ட்ரொட்ஸ்கியும் ட்ரொட்ஸ்கிச இயக்கமும் செய்த விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வை இந்த போலி-இடதுகள் நிராகரிக்கின்றனர். இதன் விளைவாக, உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் தாக்கத்தின் கீழ் முதலாளித்துவம் மீள ஸ்தாபிக்கப்பட்டதுடன் இத்தகைய அரசுகளின் பொருளாதார மற்றும் சமுதாய அடித்தளத்தில் ஏற்பட்ட பிரமாண்டமான மாற்றங்களை அவர்கள் அலட்சியம் செய்கின்றனர். ரஷ்யா மற்றும் சீனாவில் தோன்றியிருப்பது புதிய ஏகாதிபத்திய மையங்கள் அல்ல, மாறாக, அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் செல்வாக்கிலான, நடப்பில் உள்ள பூகோள ஒழுங்கையே எல்லாவிதத்திலும் பொருளாதார ரீதியில் நம்பியிருக்கும் முதலாளித்துவ நாடுகளாகும். சீனாவின் துரிதமான பொருளாதார விரிவாக்கமானது சிறந்த இலாபங்களை கறப்பதற்காக அதன் மலிவு உழைப்புத் தளங்களை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கும் பிரமாண்டமான பன்னாட்டுக் கூட்டுத்தாபனங்களால் வழங்கப்படும் முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தாலேயே அடிப்படையில் உந்தப்பெற்றுள்ளது. சோ.ச.க., சீனா மற்றும் ரஷ்யாவில் முதலாளித்துவ அரசுகளை சமரசமின்றி எதிர்க்கின்றது. அவை குட்டி, அதி செல்வந்த ஆட்சிக்குழுவின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. எவ்வாறெனினும், உலகம் பூராவும் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் பாகமாக, ரஷ்யா மற்றும் சீனாவில் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தையே எமது எதிர்ப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது.

42. அதே சமயம், போரின் சாத்தியத்தை மறுப்பதன் மூலம், தொழிலாள வர்க்கத்தை மயக்குவதில் தமது சர்வதேச கூட்டாளிகளுடன் ந.ச.ச.க. மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் இணைந்துகொள்கின்றன. ந.ச.ச.க. தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன எழுதியதாவது: “இது ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றுக்கொன்று எதிர்கொண்டு போருக்குச் செல்லும் ஒரு யுகமல்ல. வர்த்தக மோதல்களைத் தீர்ப்பதன் மூலம், சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைம்பு ஆகிய முக்கூட்டு தலையீடு செய்யும் ஒரு காலத்தை நாம் எட்டியுள்ளோம்... இத்தகைய சக்திகள், உலகை பல்வேறு செல்வாக்கு மண்டலங்களாக பிரித்து, கட்டுப்படுத்தி மற்றும் ஐக்கியப்பட்ட உலக முதலாளித்துவத்துக்குள் அதன் இருப்பைப் பாதுகாக்கவுள்ளன. இது, முதலாம் உலகப் போரின் வெடிப்பின் பின்னர், கட்சியின் போர்-சார்பு சந்தர்ப்பவாதிகளுக்கு அடிபணிந்து போன ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தத்துவார்த்த தலைவரான கார்ல் கவுட்ஸ்கியின் “தீவிர-ஏகாதிபத்தியத்தின்” நவீன கால வடிவமாகும். கவுட்ஸ்கியின், “முதலாளித்துவத்தின் கீழ் நிரந்தர சமாதானம் சாத்தியமானது என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் திணிக்கும் மிகவும் பிற்போக்கான வழிமுறைக்கு” எதிராக, லெனின், ஒரு காலத்திலான தற்காலிக ஏகாதிபத்திய கூட்டணிகள், பொருளாதார அபிவிருத்தியிலான வேறுபடும் விகிதங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான பலத்தின் மாற்றங்களால் தப்பிக்க முடியாமல் கீழறுக்கப்படும்... என விளக்கினார். “ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான அல்லது தீவிர-ஏகாதிபத்திய கூட்டணிகள்... அது ஒரு ஏகாதிபத்திய கூட்டணிக்கு எதிரான இன்னொரு ஏகாதிபத்திய கூட்டணியாக இருந்தாலும் சரி, அல்லது ஏல்லா ஏகாதிபத்திய சக்திகளையும் அரவனைத்துக்கொண்ட ஒரு பொது கூட்டணியாக இருதந்தாலும் சரி, அவை தவிர்க்க முடியாமல் போர்களுக்கு இடைப்பட்ட காலத்திலான போர் நிறுத்தமே அன்றி வேறல்ல. (நூல் தொகுப்பு, பாகம் 22, பக்கம் 294-5) 

43. போலி-இடது அமைப்புகள், குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் பின்னர், உற்பத்தியின் பூகோளமயமாக்கத்துடன் இலங்கை ஒருங்கிணைக்கப்பட்டதில் இருந்து பெருமளவில் நன்மை பெற்ற உயர் மத்தியதர வர்க்க தனிச்சலுகை பெற்ற தட்டினரையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஒரு கற்கையின் படி, சமூக ஏணிப்படியில் மேலும் அபிலாஷைகளை நோக்கி ஏறும் முயற்சியுடன், ஒரு நாளுக்கு சுமார் 10 முதல் 100 டாலர் வரை செலவிடும் உலகளாவிய மத்தியதர வர்க்கம் இலங்கை ஜனத்தொகையில் 4 வீதமாக உள்ளது. பங்குச் சந்தை ஊகவாணிர்கள், தொழில்முனைவாளர்கள், செல்வந்த தொழில்வல்லுனர்கள், கல்வியாளர்கள், தொழிற்சங்க துறை சார்ந்தவர்கள் மற்றும் சர்வதேச தொடர்புகளால் நிதியளிக்கப்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊழியர்களும் இதில் அடங்குவர். ஏதாவதொரு வழியில், அமெரிக்க மேலாதிக்கத்திலான தற்போதைய ஏகாதிபத்திய ஒழுங்குடனேயே தமது நலன்கள் பிணைக்கப்பட்டுள்ளதாக கருதும் அவர்கள், அதன் போலி “மனித உரிமை” பிரச்சாரத்தை பற்றிக்கொண்டனர். இரண்டாம் உலகப்போரின் பின்னரும், மற்றும் பிரிட்டனிடம் இருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்ற பின்னரும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை தணிப்பதற்காக வழங்கப்பட்ட மட்டுப்படுத்ப்பட்ட சமூக சலுகைகளுடன் மற்றும் அரச இயந்திரத்தின் விரிவாக்கத்துடன் இணைந்த வகையில் தமது முன்னேற்றத்தை கண்ட மத்தியதர வர்க்கத்துக்கு, குறிப்பாக அரச அதிகாரத்துவத்திலும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டன. பூகோளமயமாக்கத்தின் வருகையுடன், தமது சிறப்புரிமை நிலைமை நேரடியாகவோ அல்லது வேறு வழியிலோ தொழிலாள வரக்கத்தை சுரண்டுவதை தொடர்ந்தும் உக்கிரமாக்குவதுடன் பிணைந்துள்ளதைக் காணும் புதிய மத்தியதர வர்க்கம் தோன்றியது. ஒரு சிறிய பகுதி இராஜபக்ஷவின் கீழ் வாய்ப்புகளை அனுபவித்த அதேவேளை, அவருக்கு நெருக்கமானவர்களை உள்ளடக்கிய அரசாங்கம் தமது நலன்களுக்கும் பதவிகளுக்கும் தடங்கலாக இருப்பதாக ஆழமாக அதிருப்தி கண்ட பெரும்பான்மை, சிறிசேனவுக்குப் பின்னால் அணிசேர்ந்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள்

44. போருக்கான உந்துதலை ஊக்குவிக்கும் முதலாளித்துவத்தின் அதே அடிப்படை முரண்பாடுகள், சோசலிச புரட்சிக்கான அடித்தளங்களையும் அமைக்கின்றன. எவ்வாறெனினும், யுத்தம் மட்டுமன்றி, போருக்கு எதிரான நனவுபூர்வமான போராட்டமும் முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான அரசியல் விசையை வழங்குகின்றது. அதற்காக, தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமைத்துவம் அவசியம். ஜூன் மாதம் நிறைவேற்றிய அமர்வுத் தீர்மானத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன போர்-எதிர்ப்பு இயக்கத்தைச் சூழ தொழிலாள வர்க்கத்துக்கு அரசியல் தெளிவூட்டி, அணிதிரட்டி, ஐக்கியப்படுத்துவதற்கான பொறுப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நேரடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, போருக்கு எதிரான போராட்டத்தை தனது அரசியல் வேலைகளின் மையத்தில் வைக்கத் தீர்மானித்துள்ளது” என அந்த தீர்மானம் தெரிவிக்கின்றது. “ஏகாதிபத்திய வன்முறைகள் மற்றும் இராணுவவாதம் புத்துயிர் பெறுவதற்கு விரோதமான புரட்சிகர எதிர்ப்பின் சர்வதேச மையமாக அது ஆகவேண்டும். இந்தப் பணியை முன்னெடுக்கும் குறிக்கோள் கொண்ட வேறு அமைப்புகள் கிடையாது.

45. இந்த பொறுப்புக்களை முன்னெடுப்பதில், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியால் (பி.எல்.பீ.ஐ.) தெற்காசியாவில் ட்ரொட்ஸ்கிசத்துக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மரபுகளில் இருந்து சோ.ச.க. படிப்பினைகளப் பெறுகின்றது. இரண்டாம் உலகப் போர் வெடித்தமைக்கு பிரதிபலித்த இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இலங்கையில் மட்டுமன்றி இந்தியத் துணைக்கண்டம் பூராவும் நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக பி.எல்.பீ.ஐ.யை ஸ்தாபிப்பது அவசியமானது என்ற முடிவுக்கு வந்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதற்கு அவசியமான புரட்சிகர சக்தியை, இலங்கைத் தீவுக்குள் வரையறுக்கப்பட்ட, அல்லது உண்மையில் எந்தவொரு நாட்டினதும் தேசிய திட்டவரம்புக்குள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உருவாக்க முடியாது. அதேபோல் இன்று, அதை விட பிரமாண்டமான முறையிலான அழிவுக்கு ஏகாதிபத்தியம் தயார் செய்துவருகின்ற நிலையில், பிராந்தியம் பூராவும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். தெற்காசியாவில் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை கட்டியெழுப்புவதே சோ.ச.க.யின் பணிகளில் பிரதானமானதாகும். தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் நச்சுத்தனமான பிளவுகளை விதைப்பதற்காக ஏகாதிபத்தியத்தாலும் மற்றும் அதன் உள்ளூர் அடிவருடிகாளலும் மீண்டும் மீண்டும் சுரண்டிக்கொள்ளப்படும் சகல வடிவிலுமான தேசியவாதம், வகுப்புவாதம், இனவாதம் மற்றும் மதவாதத்தை சமரசமின்றி சோ.ச.க. எதிர்க்கின்றது.

46. ஏகாதிபத்தியத்துக்கும் போருக்கும் எதிரான போராட்டமானது தொழிலாள வர்க்கத்துக்குள் தத்துவார்த்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மற்றும் நடைமுறையிலும் நிலைநாட்டப்படல் வேண்டும் என சோ.ச.க. வலியுறுத்துகின்றது. இந்தியா மற்றும் இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் விவசாயிகள் உட்பட கிராமப்புற வறியவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கங் கூடிய ஒரே புரட்சிகர சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே. இத்தகைய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை கீழறுப்பதற்கான முயற்சிகள் முழுமையாக அம்பலப்படுத்தப்படல் வேண்டும். தனது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியது போல், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியத்துடன் முன்னெடுக்கப்படும் சோசலிசப் புரட்சியின் துணை விளைவாகவே, -இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் போன்ற- ஒடுக்கப்பட்டவர்களின் மற்றும் விவசாயிகளின் ஜனநாயகப் பிரச்சினைகளை தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தீர்க்க முடியும். இது, 1917 அக்டோபரில் ரஷ்ய புரட்சியின் மிகவும் பலம்வாய்ந்த வரலாற்றுப் படிப்பினை ஆகும்.

47. முதலாம் உலக யுத்தத்தின் மத்தியில், ஏகாதிபத்திய படுகொலைகளுக்கு ஆதரவளித்த இரண்டாம் அகிலத்தின் தலைமைத்துவத்தை முறையாக அம்பலப்படுத்துவதோடு அதனிடம் இருந்து வேறுபடுவதும் அவசியமாகும் என லெனின் வலியுறுத்தினார். “சந்தர்ப்பவாதத்திடம் இருந்து தீர்க்கமாக முறித்துக்கொள்ளாமல், வெகுஜனங்களுக்கு அதன் தவிர்க்க முடியாத ஆபத்தை தெளிவுபடுத்தாமல் தற்போதைய சூழலில் சோசலிச குறிக்கோளை இட்டு நிரப்ப முடியாது, மற்றும் தொழிலாளர்களின் உண்மையான சர்வதேச ஐக்கியத்தை எட்ட முடியாது” என லெனின் எழுதினார். இன்று தொழிலாள வர்க்கத்துக்குள் ஒரு தூய்மையான சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்பவதற்கான போராட்டமானது ஆசியா மற்றும் உலகம் பூராவும் அமெரிக்க போர் உந்துதலுடன் அணிசேர்ந்துள்ள பல்வேறு போலி இடது போக்குகளை அம்பலப்படுத்துவதற்கான ஒரு முறையான அரசியல் போராட்டத்துடன் பிணைந்துள்ளது.

48. ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கமுடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது. புவிசார்-அரசியல் மோதல்களுக்கு எண்ணெய் வார்க்கும் சர்வதேச நிதி மூலதனத்தின் அதே கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளும், வாழ்க்கைத் தரத்தைப் பெருமளவு சீரழிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளை இயக்கிவிடுகின்றன. சோசலிச கொள்கைகளை முன்னெடுப்பதற்கு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான கோரிக்கைகளை சூழ, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒழுங்கமைக்கும் நடவடிக்கையை சோ.ச.க. முன்னெடுக்கின்றது. இந்த போராட்டத்தில் இருந்து எழும், நிலையான இராணுவத்தை தூக்கிவீசுவது, ஒடுக்குமுறைச் சட்டங்களை அகற்றுவது, பொலிஸ்-அரச எந்திரங்களை கலைப்பது மற்றும் ஏகாதிபத்தியத்துடனான இராணுவ உடன்படிக்கைகளை இரத்துச் செய்வது போன்ற கோரிக்கைகள், தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகர போராட்டத்தின் ஊடாக மட்டுமே பூர்த்தி செய்யப்பட முடியும். தெற்காசியாவிலும் உலகம் பூராவும் ஐக்கிய சோசலிச அரசுகளின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக சோ.ச.க. போராடுகின்றது.

49. சோ.ச.க., அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைப் (பு.க.க.) போலவே, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் காலூன்றி இருப்பதோடு அதன் கொள்கைகளுக்காகப் போராடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1964ல் ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்த பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக அனைத்துலகக் குழு முன்னெடுத்த போரட்டத்தின் படிப்பினைகளை கிரகித்துக்கொள்வதன் ஊடாகவே பு.க.க. 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. சோசலிச சர்வதேசியவாதத்துக்கான போராட்டத்தில், தமிழர்களதும் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களதும் ஜனநாயக உரிமைகளை இடைவிடாமல் பாதுகாத்து வந்த பு.க.க./சோ.ச.க., தீவின் இனவாத யுத்தத்தை எதிர்த்ததோடு இலங்கை தொழிலாளர்களை தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளோடு ஐக்கியப்படுத்துவதற்காக முயற்சித்தது. கட்சியின் ஐந்து தசாப்த கால கொள்கைப் பிடிப்பான போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள், சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) என்ற நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இது 2011 மே மாதம் நடந்த கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். எதிர் வரும் அரசியல் மோதல்களுக்கு இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள புதிய சந்ததி புரட்சியாளர்களுக்கு கல்வியூட்ட மற்றும் அவர்களைப் பயிற்றுவிக்க இந்த ஆவணம் இன்றியமையாததாகும்.

50. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோ.ச.க.யின் அரசியல் பலம், அதன் வேலைத் திட்டமானது பூகோள பொருளாதார அபிவிருத்தியின் தர்க்கத்தை பகுப்பாய்வு செய்வதோடு தொழிலாள வர்க்கத்தின் நலன்களைத் தெளிவுபடுத்துகின்றது என்ற உண்மையிலேயே பிரதிபலிக்கின்றது. கட்சியின் வளர்ச்சி இந்த புறநிலை முன்னெடுப்புகளின் வெளிப்பாடாக இருந்தாலும், அது தானாக இடம்பெறாது. கட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துக்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வெற்றிகொள்வதற்கு ஒரு நனவுபூர்வமான போராட்டம் அத்தியாவசியமாகும். இலங்கையிலும் தெற்காசியா பூராவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேறிய தட்டினருக்கு கல்வியூட்டுவதற்காகவும் மற்றும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று வழிவந்த கொள்கைகள் மற்றும் வேலலைத் திட்டத்தை முழுமையாக கிரகித்துக்கொள்வதன் அடிப்படையில் அவர்களை புதிய காரியாளர்களாக அபிவிருத்தி செய்வதற்கும், எல்லாவற்றுக்கும் மேலாக உலக சோசலிச வலைத் தளத்தில் அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகள் ஊடான அதன் முயற்சிகளை சோ.ச.க. இருமடங்காக்கும்.