சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political issues in the Volkswagen scandal

வோல்ஸ்வாகன் மோசடியில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

Peter Schwarz
26 September 2015

Use this version to printSend feedback

வோல்ஸ்வாகன் மோசடி தொடர்ந்து விரிவடைகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனத்தின் மாசுவெளியேற்ற பரிசோதனை முடிவுகளில் செய்யப்பட்ட முறைகேடு, அமெரிக்காவில் விற்கப்பட்ட வாகனங்களோடு மட்டுப்பட்டதல்ல என்பது இப்போது தெளிவாகி உள்ளது. இந்த சட்டவிரோத ஏமாற்றுத்தனத்தில் பயன்படுத்தப்பட்ட மென்பொருள், உலகெங்கிலும் 11 மில்லியன் கார்களில் நிறுவப்பட்டுள்ளது. ஜேர்மனியில் மட்டும், 2.8 மில்லியன் வாகனங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை மந்திரி Alexander Dobrindt தெரிவித்தார். இது அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 5 சதவீதத்திற்கு அதிகமாகும்.

வோல்ஸ்வாகனில் தலைகள் உருளுகின்றன, அதன் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் வின்டர்கோன் ஏற்கனவே பதவி விலகிவிட்டார், ஏனைய உயர் நிர்வாகிகளும் அவரைப் பின்தொடர்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஏமாற்றிய வோல்ஸ்வாகனின் குற்றகரமான முயற்சிகளை, வெறுமனே ஒருசில தனிநபர்களின் ஒழுக்கக்கேடு என்று விவரித்துவிட முடியாது.

Frankfurter Algemeine Zeitung தகவலின்படி, சுற்றுச்சூழலுக்கு-உகந்த விதத்தில் மாசுக்களை கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டதன் அடிப்படையில் ஜேர்மன் டீசல் கார்களை அமெரிக்காவில் விற்பனை செய்வதற்காக, அச்சட்டவிரோத மென்பொருள், 2005 இல் உருவாக்கப்பட்டது. கடுமையான அமெரிக்க மாசுவெளியேற்ற தரமுறைகளைத் தொழில்நுட்பரீதியில் எட்டுவது பொருளாதாரரீதியில் கட்டுபடியாகாது என்று அது கருதியதால், அந்நிறுவனம் ஏமாற்றுவதற்கும், முறைகேடு செய்வதற்கும் சென்றது. இம்மோசடி நீண்ட காலமாக மற்றும் நிறைய எண்ணிக்கையிலான வாகனங்களில் நடந்துள்ளதை எடுத்துப்பார்த்தால், இது குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும்.

வோல்ஸ்வாகன் 600,000 பணியாளர்களைக் கொண்டு, பன்னிரெண்டு மாவட்ட கார்-உற்பத்தி செயல்பாடுகளை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்து, வோல்ஸ்வாகன், ஸ்கோடா, சீட் (Seat) மற்றும் அவுடி போன்ற ரகங்களை; போர்ஷே, பென்ட்லி மற்றும் புகாட்டி போன்ற பெருமதிப்பார்ந்த ரகங்களை; மற்றும் ஸ்கானியா மற்றும் MAN டிரக்குகள் போன்ற ரகங்களையும் பாரியளவில் உற்பத்தி செய்கிறது. அப்பெருநிறுவனத்தின் வெற்றியில் ஜேர்மன் பொறியியல் திறனும், அதனுடன் தொடர்புபட்ட நம்பகத்தன்மை மீதான நன்மதிப்பும் குறைவானதில்லை., இப்பொறியியல் திறன் திட்டமிட்டு ஏமாற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது வெறுமனே தனிப்பட்ட வோல்ஸ்வாகன் பணியாளர்களது குற்றகரத்தன்மையை அல்ல, மாறாக மிக அடிப்படையிலேயே பெருநிறுவனங்கள் செயல்படும் பொருளாதார மற்றும் சமூக அமைப்புமுறையின் பகுத்தறிவற்றத்தன்மைக்கு சான்று பகிர்கிறது.

வோல்ஸ்வாகன் ஒரு தனித்த சம்பவம் அல்ல. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா போன்ற இதர கார் உற்பத்தி நிறுவனங்களும் மற்றும் சீமென்ஸ் போன்ற உலகளாவிய பெருநிறுவனங்களும் இதேபோன்ற மோசடிகளால் சூழப்பட்டுள்ளன. கடந்த வாரம் தான், ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்க அரசாங்கத்துடன் ஒரு கணக்கைத் தீர்த்துக் கொள்ள உடன்பட்டது, அதன் மூலமாக அந்நிறுவனம் நூற்றுக் கணக்கான உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்திய எரியூட்டும் (இக்னிஷன்) கருவிகளின் கோளாறைத் தசாப்தகாலமாக மூடிமறைத்ததற்காக குற்றகர வழக்கைத் தவிர்த்து கொண்டது.

பி.எம்.டபிள்யூ., ஓப்பெல், பேஜோ மற்றும் மேர்சிடஸ் உட்பட ஏனைய டீசல் வாகன உற்பத்தியாளர்களும் மாசுவெளியேற்ற பரிசோதனை முடிவுகளில் அதேபோன்ற தில்லுமுல்லு செய்திருப்பார்களென சந்தேகிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளது பரிசோதனைகளோ, பல ஆண்டுகளாக உண்மையான நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றத்திற்கும் மற்றும் ஆய்வக பரிசோதனை முடிவுகளுக்கும் இடையே வித்தியாசங்களை எடுத்துக்காட்டி வந்துள்ளன. இந்நிறுவனங்கள் அதை சட்டபூர்வ "நுணுக்கங்களின்" விளைவுகள் என்றும் —அதாவது முழுமையாக சார்ஜ் ஏற்றிய பேட்டரிகள், அதிக டயர் அழுத்தத்தைப் பேணுதல், யதார்த்தத்தில் சாத்தியமில்லாத ஆய்வக நிலைமைகளை உருவாக்குதல், இன்னும் இதரவற்றின் விளைவுகள் என்றும்—வோல்ஸ்வாகனைப் போல பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு முறைகேடு செய்யப்படுவதில்லை என்றும் கூறுகின்றன. ஆனால் இதுவும் ஒருவிதத்தில் மோசடி மற்றும் ஏமாற்றுத்தனமேயாகும்.

இந்நிறுவனங்கள் அனைத்துமே உலகளவில் செயல்படுகின்றன, அத்துடன் அவற்றின் இலாபங்களை அதிகரிக்க நிலையான அழுத்தத்தின் கீழ் உள்ளன. 1980களுக்குப் பின்னரில் இருந்து, பங்குதாரர் மதிப்பு, அதாவது ஒரு நிறுவனத்தின் நீண்டகால உற்பத்தி வளர்ச்சியை விட குறுகிய-கால பங்குவிலை உயர்வே, முதலாளித்துவ தொழில்துறையின் வழிகாட்டும் கொள்கையாக மாறியுள்ளது. புதிய சந்தை பங்கைப் பெறுவது, தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிப்பது, தொழிலாளர் செலவுகளைக் குறைப்பது ஆகியவையே பிரமாண்ட பெருநிறுவனங்களின் —அவை இயங்கினாலும் சரி அல்லது இயங்காவிட்டாலும் சரி அவற்றின்— தலைவிதியைத் தீர்மானிக்கின்றன.

2008 நிதியியல் நெருக்கடியோடு, இப்போக்கு வெறிப்பிடித்த அளவிற்கு வந்திருந்தது. மத்திய வங்கிகள் நிதியியல் சந்தைகளுக்குள் மலிவு பணத்தை வெள்ளமென பாய்ச்சின, அசாதாரணமான மிகக் குறைந்த வட்டிவிகிதத்தின் காரணமாக, அவை, பெருமளவில் பங்குச்சந்தை ஊகவணிகங்களுக்குள் பாய்கின்றன. நிதியியல் நெருக்கடியின் போது ஜேர்மன் பங்குச்சந்தை குறியீடு DAX அதன் முந்தைய சாதனையளவிலான 8,000 புள்ளிகளிலிருந்து 4,000 புள்ளிகளுக்கும் கீழே வீழ்ந்தது, அதன் பின்னர் 12,000 புள்ளிகளைக் கடந்து சென்றது. ஒரு சிறிய நிதியியல் உயரடுக்கு கணக்கிடவியலாதளவிற்கு தன்னைத்தானே செழிப்பாக்கிக் கொண்டதுடன், தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து அதன் ஏமாற்றிச்சேர்த்த செல்வவளங்களைப் பாதுகாக்க வலியுறுத்துகிறது.

வோல்ஸ்வாகன் மோசடியின் விளைவாக எத்தனை ஆயிரம் அல்லது பத்தாயிரம் தொழிலாளர்கள் அவர்களது வேலைகளை இழப்பார்கள் என்பதை அனுமானிக்க இயலாது. ஆனால் ஒரு விடயம் ஏற்கனவே நிச்சயமாகிவிட்டது, தொழிலாளர் சக்தியை விலையாக கொடுத்து இலாபங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படும்.

வின்டர்கோன் இராஜினாமா செய்ததை அடுத்து ஒட்டுமொத்த வோல்ஸ்வாகன் குழுமத்திற்கும் தலைவராக, போர்ஷே (Porsche) தலைமை நிர்வாக அதிகாரி மாத்தியஸ் முல்லர் வெள்ளியன்று நியமிக்கப்பட்டார். அவர் பந்தயக்கார் உற்பத்தி நிறுவனத்தின் (போர்ஷே நிறுவனத்தின்) விற்பனை வருவாய் சதவீதத்தை 15 சதவீதத்திற்கு உயர்த்தினார் என்ற உண்மையே அவரது பிரதான தகுதியாகும். அதே வேலை, அவருக்கு இப்போது வோல்ஸ்வாகனிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிகபட்சமாக 768,000 யூரோ விலையிலான கார்களை விற்கும் ஒரு நிறுவனத்தில் விற்பனை வருவாயை அதிகரிப்பதென்பது, பெரும் போட்டி அழுத்தங்கள் நிறைந்த பாரிய சந்தைக்காக கார்களை உருவாக்கும் ஒரு நிறுவனத்தில் அதுபோன்ற விளைபயனைப் பெறுவதை விட மிகவும் சுலபம் தான்.

வேலைகள் மற்றும் வருவாய்கள் மீதான புதிய தாக்குதல்களை வோல்ஸ்வாகன் தொழிலாளர்கள் ஏற்க மாட்டார்கள், ஒரு போராட்டமில்லாமல் இருக்காது. ஆனால் அவர்கள் ஓர் அடிப்படை அரசியல் பிரச்சினையை முகங்கொடுக்கிறார்கள்:, தொழிற்சங்கவாத அணுகுமுறைகள் மற்றும் கடந்தகாலத்தில் முற்றிலும் செயலிழந்து போன அமைப்புகள் தான் அது. வாகன தொழில்துறையில் இருக்கும் அளவிற்கு சமூக பங்காண்மை மற்றும் வர்க்க கூட்டு ஒத்துழைப்பின் முன்மாதிரி அந்தளவிற்கு வேறெந்த தொழில்துறையிலும் இருக்காது, அதேபோல வோல்ஸ்வாகன் அளவிற்கு வேறெந்த நிறுவனமும் மிகவும் படர்ந்து பரவியும் இருக்காது. IG மெட்டல் தொழிற்சங்கம், அது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள தொழிற்சாலை கவுன்சில், உயர்மட்ட நிர்வாகம் ஆகியவை தோற்றப்பாட்டளவில் ஒரேமாதிரியானவையே. IG மெட்டல் முன்னாள் தலைவர் பேர்தோல்ட் ஹூபர் வோல்ஸ்வாகன் மேற்பார்வை குழுவிற்குத் தலைமை அளிக்கிறார், அவர் அதன் முக்கிய பிரமுகராக கருதப்படுகிறார்.

வோல்ஸ்வாகனின் எதிர்காலத்தை நிறுவன பங்குத்தாரர்களும் நிர்வாகமும் எவ்வாறு பார்க்கிறதோ, அதே நிலைப்பாட்டிலிருந்து தான் தொழிற்சங்கமும் தொழிற்சாலை கவுன்சிலும் பார்க்கின்றன, அதாவது தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் நிலைமைகளில் எந்தளவிற்கு விலை கொடுக்கப்படுகிறது என்பதைக் குறித்து இல்லாமல், சர்வதேச போட்டித்தன்மை என்ற நிலைப்பாட்டிலிருந்து காண்கின்றன. அந்நிறுவனம் ஆண்டுதோறும் 5 பில்லியன் டாலர்களை சேமிப்பதற்காக, தொழிற்சாலை கவுன்சில் கடந்த ஆண்டு அதன் சொந்த திட்டத்தை முன்வைத்தது. தொழிலாளர்கள் வோல்ஸ்வாகன் நிர்வாகத்தை மட்டுமல்ல, மாறாக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை கவுன்சில் (Works Council) ஆகியவற்றையும் எதிர்கொள்கின்றனர். அவர்களது வேலைகள் மற்றும் வருவாய்களைப் பாதுகாக்க, அவர்களுக்கு ஒரு முழுமையான புதிய மூலோபாயம் தேவை.

அதன் தொடக்கப்புள்ளியாக நவீன உற்பத்தியின் சர்வதேச குணாம்சம் இருக்க வேண்டும். பூகோளமயப்பட்ட உற்பத்தியே கூட பிரமாண்டமான அளவில் முற்போக்கான அபிவிருத்தியாகும். அது பெரிதும் மனித உழைப்புத்திறனை அதிகரித்து, உலகெங்கிலுமான வறுமை மற்றும் பிற்போக்குத்தன்மையைக் கடந்து செல்வதற்கு, சடரீதியிலான நிலைமைகளை உருவாக்குகிறது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மனிதயினத்தினது சடரீதியிலான மற்றும் கலாச்சாரரீதியிலான மட்டங்களை உயர்த்துகிறது.

ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறை அடித்தளத்தில் கொண்டுள்ள தேசிய அரசு மற்றும் உற்பத்தி கருவிகளது தனிசொத்துடைமையின் கட்டுகளுக்குள், பூகோளமயமான உற்பத்தி என்பது அதன் எதிர்விரோதமாக மாற்றம் பெறுகிறது. அது வெவ்வேறு நாடுகளின் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்துவதற்கு வழிவகையாகவும், பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் அனைத்து பகுதிகளையும் நிதியியல் மூலதனத்தின் தணியாத தேவைகளுக்கு அடிபணியவும் செய்கிறது.

தொழிலாளர்கள் அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும். பெருநிறுவனங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கு, அவர்கள் தொழிற்சங்கங்களின் தேசியவாத அரசியலில் இருந்து உடைத்துக் கொண்டு, அவர்களது சொந்த சுயாதீனமான போராடும் குழுக்களைக் கட்டமைத்து, சர்வதேச அளவில் அவர்களது வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்.

அவர்களது உரிமைகள் மற்றும் கடந்தகால சமூக வெற்றிகளின் பாதுகாப்பை, ஒரு சோசலிச சமூகத்திற்கான போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக ஆக்க வேண்டும். உற்பத்தி மீது தொழிலாளர்கள் கட்டுப்பாட்டைப் பெறுவது, பொதுவுடைமையின் கீழ் பெருநிறுவனங்களை தேசியமயமாக்குவது மற்றும் இலாபத்திற்கான முதலாளித்துவ உந்துதலுக்குப் பதிலாக சமூக தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை ஒழுங்கமைப்பது ஆகிய கோரிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.