ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Middle East tensions escalate in wake of Saudi mass beheadings

சவூதியில் பாரியளவிலான தலைத்துண்டிப்பு தண்டனைகளை அடுத்து மத்திய கிழக்கு பதட்டங்கள் தீவிரமடைகின்றன

By Bill Van Auken
5 January 2016

சவூதி அரேபியாவின் ஆளும் முடியாட்சி மற்றும் அந்நாட்டின் ஷியா சிறுபான்மை மக்களை அது ஒடுக்குவதை விமர்சித்திருந்த ஒரு முக்கிய ஷியா மதகுரு உட்பட, 47 கைதிகளது திரளான மரண தண்டனைகளை சவூதி அரேபியா ஜனவரி 2 அன்று நிறைவேற்றியதை அடுத்து, போரால் சீரழிந்துள்ள மத்திய கிழக்கிற்குள் பதட்டங்கள் கூர்மையாக தீவிரமடைந்துள்ளன.

அந்த ஷியா மதகுரு ஷேக் நிம்ர் அல்-நிம்ர் இன் தலைத்துண்டிப்புக்கு எதிரான கோபமான போராட்டங்களை சாக்குப்போக்காக பயன்படுத்தி, சவூதி அரேபியா ஞாயிறன்று ஈரானுடனான அதன் அனைத்து இராஜாங்க உறவுகளையும் துண்டித்தது. ஞாயிறன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெஹ்ரானில் சவூதி தூதரகத்தைத் தாக்கியதுடன், ஈரானிய மஸ்ஹத் நகர ஒரு தூதரக அலுவலகத்தையும் நெருப்புக்குண்டுவீசி தீயிட்டனர். குறைந்தபட்சம் 50 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் சவூதி அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை.

திங்களன்று, சவூதி முடியாட்சி அது ஈரானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எல்லா விமானங்களுக்கும் தடைவிதிப்பதாகவும் மற்றும் வர்த்தக உறவுகளை துண்டிப்பதாகவும் அறிவித்து, அதன் இராஜாங்க தொடர்புகளை இன்னும் கடுமையாக்கியது.

சவூதி நடவடிக்கைகளை அடுத்து திங்களன்று பஹ்ரைன் மற்றும் சூடானும் ஈரானுடனான அவற்றின் இராஜாங்க உறவுகளைக் கடுமையாக்கின. அமெரிக்க ஐந்தாம் படையின் செயற்களமான பஹ்ரைன், பெரும்பான்மையினராக ஷியா மக்களைக் கொண்ட, சுன்னி சர்வாதிகார முடியாட்சியால் ஆளப்படும் ஒரு நாடாகும். 2011 இல் அந்நாட்டை மூழ்கடித்த பாரிய போராட்டங்களை நசுக்குவதில் சவூதி துருப்புகளும் டாங்கிகளும் முக்கிய பாத்திரம் வகித்தன.

அதன் பங்கிற்கு, ஈரானின் ஒரு முன்னாள் கூட்டாளியான சூடான், சவூதி மற்றும் அவர்களது வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் இருந்து சூடானின் மத்திய வங்கியில் 4 பில்லியன் டாலர்கள் தொகை வைப்பு வைக்கப்பட்டமை உட்பட, சூடான் பொருளாதாரத்தில் பலமாக சவூதிய முதலீடுகள் வந்த பின்னர் கடந்த ஆண்டு அதன் கூட்டிணைப்புக்களை மாற்றிக் கொண்டது.

மற்றொரு சுன்னி வளைகுடா எண்ணெய் ஷேக் ஆட்சியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தெஹ்ரான் உடனான அதன் இராஜாங்க உறவுகளைக் குறைத்துக் காட்டியது, ஆனால் அதன் ஒரு பிரதான வர்த்தக பங்காளியான ஈரானுடனான அதன் சகல உறவுகளையும் கடுமையாக்க தொடங்காமல் நிறுத்திக் கொண்டது.

தொடர்புகளை வெட்டுவதற்கும் மற்றும் பதட்டங்களை தூண்டுவதற்கும், சவூதி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை சாக்குபோக்காக பயன்படுத்துவதை ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கண்டித்தது. “சவூதி அரேபியா அதன் நலன்களை மட்டும் பார்க்கவில்லை மாறாக நெருக்கடிகள் மற்றும் மோதல்களைத் தொடர்வதன் மூலம் அதன் உயிர்வாழ்வையும் பார்க்கிறது மற்றும் அதன் உள்நாட்டு பிரச்சினைகளை வெளியில் திருப்பிவிடுவதன் மூலமாக அவற்றைத் தீர்க்க முயல்கிறது,” என்று திங்களன்று அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹோஸ்சென் ஜாபர் அன்சாரி தெரிவித்தார்.

ஈரான் இராஜாங்க பாதுகாப்பை வழங்க பொறுப்பேற்றிருப்பதாக அவர் வலியுறுத்தினார், “சவூதி அரேபியாவில் பதட்டங்கள் விருத்தி அடைந்துள்ளதால், அது, இச்சம்பவத்தைப் பதட்டங்களை எரியூட்டுவதற்கான ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி உள்ளது,” என்பதையும் அதனுடன் சேர்த்துக் கொண்டார்.

உண்மையில், பாரிய மரண தண்டனைகள் மற்றும் அவற்றை அடுத்து உறவுகளில் முறிவு ஆகியவை நன்கு திட்டமிட்ட சவூதி ஆத்திரமூட்டலின் ஒரு பாகமாக இருந்தன என்பதற்கு திங்களன்று ஆதாரங்கள் வெளியாயின.

"இந்த 47 கைதிகளது பாரிய மரண தண்டனை ஒரு கோபமான எதிர்விளைவை உண்டாக்கும் என்பது" ஆளும் முடியாட்சிக்குத் "தெரியும், ஆகவே அதை முன்னெடுப்பதற்கு முன்னால் அதன் பாதுகாப்பு சேவைகளை முழு எச்சரிக்கையாக இருக்க உத்தரவிட்டிருந்தது", இதைக் காட்டும் ஒரு கசியவிடப்பட்ட சவூதி அரசாங்க சுற்றறிக்கையின் தகவல்களைப் பிரிட்டிஷ் நாளிதழ் Independent வெளியிட்டது.

அந்த பாலைவன அரசாட்சி எங்கிலுமான பொலிஸ் அமைப்புகளுக்குப் பாதுகாப்பு சேவை தலைவரிடமிருந்து அனுப்பப்பட்டிருந்த அந்த சுற்றறிக்கை, அதன் பரந்த ஒடுக்குமுறை எந்திரத்தை உயர் எச்சரிக்கை நிலையில் நிறுத்தியது.

கசியவிடப்பட்ட சுற்றறிக்கையை முதலில் பெற்ற பிரிட்டிஷ் மனித உரிமைகள் குழு Reprieve, அக்கடிதம் திரளான தலைத்துண்டிப்புகளின் "அரசியல்ரீதியில் உந்தப்பட்ட" குணாம்சத்தை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டது.

“போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவர்களது அரசியல்ரீதியில் உந்தப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து ஏற்படக்கூடிய சீற்றத்தை முன்கணித்து, சவூதி அதிகாரிகள் சனிக்கிழமையன்று எந்த மட்டத்திற்கு முன்னோக்கி தயாரிப்பு செய்திருந்தார்கள் என்பதை அக்கடிதம் காட்டுகிறது,” என்று Reprieve இன் மரண தண்டனை பிரிவு தலைவர் Maya Foa தெரிவித்தார்.

அந்த அரச படுகொலைகளை அடுத்து பாரிய போராட்டங்கள் தொடர்ந்தன. திங்களன்று மீண்டும் தெஹ்ரானில் பல ஆயிரக் கணக்கானவர்கள் ஒரு கூட்டமாக ஒன்றுகூடினர், அதேவேளையில் ஈராக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பாக்தாத் பசுமை மண்டலத்தில் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டிருந்த சவூதி தூதரகத்தை முற்றுகையிட்டனர் மற்றும் பாஸ்ரா, கர்பாலா மற்றும் நிஜாஃப் ஆகிய ஷியா மக்கள் மேலோங்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர்.

சவூதி நடவடிக்கை வகுப்புவாத குழப்பங்களை தூண்டிவிட்டு வருகிறது என்பதற்கு தொந்தரவுபடுத்தும் ஓர் அறிகுறியாக, பாக்தாத்தின் 50 மைல்கள் தெற்கே ஹில்லா பகுதியின் இரண்டு சுன்னி மசூதிகள் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன. அந்த மசூதிகளில் ஒன்றில் ஒரு மதகுரு கொல்லப்பட்டார். மற்றொரு தாக்குதலில், மத்திய ஈராக்கின் அலெக்சாண்ட்ரியாவில் ஒரு மசூதியில் சுன்னி இமாம் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, சவூதி அரேபியாவின் ஷியா மக்கள் மேலோங்கிய கிழக்கு மாகாணத்தில் ஷேக் நிம்ர் இன் பிறப்பிட நகரமான அவாமியாவில் ஒரு மரணகதியிலான துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக சவூதி ஆட்சி அதுவே ஞாயிறன்று இரவு அறிவித்தது. அதில் அதன் பாதுகாப்பு படைகள் துப்பாக்கிச்சூட்டின் கீழ் இருத்தப்பட்டதாக அந்த ஆட்சி கூறிய போதினும், பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் ஒரு குழந்தை காயமடைந்ததாக செய்திகள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களைக் குறித்து வெளியாயின.

அரபு உலகில் ஒடுக்குமுறை மற்றும் பிற்போக்குத்தனத்தின் அச்சாணியாக, சவூதி முடியாட்சி அந்நாட்டிற்குள் நிலவும் மக்கள் எதிர்ப்பை பிளவுபடுத்துவதற்கான ஒரு வழிவகையாக சுன்னி மற்றும் ஷியா மக்களிடையிலான பதட்டங்களை சுரண்டியும் வேண்டுமென்றே தூண்டிவிட்டும் முன்னிலை வகுப்புவாத தூண்டிவிடுபவராக உள்ளது.

இப்போது வரையில் அந்த ஆளும் முடியாட்சி ஷியா சமூகத்தின் முன்னணி பிரபலங்களை படுகொலை செய்வதை கைவிடவில்லை —அவர்களைக் கைது செய்வது மற்றும் அவர்களுக்கு தொல்லை அளிப்பது, ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதைச் செய்கிறது— ஆனால் ஆட்சிக்கு-விரோதமான உணர்வுகளை தணிக்கும் ஒரு முயற்சியாக வேண்டுமானால் அவர்களை இறுதியில் விடுவிக்கும்.

ஏனைய 46 கைதிகளுடன் சேர்த்து நிம்ர் ஐ தலைதுண்டித்து கொன்றமை, தெளிவாக அரசியல் நோக்கங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டது. அவரே கூட 2012 இல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், தலை வெட்டப்பட்டவர்களில் அல்லது சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் பலர் அந்த அரசாட்சிக்குள் நடந்த அல் கொய்தா தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களாக குற்றஞ்சாட்டப்பட்ட சுன்னி இனத்தவராவர். அவர்கள் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களது மரண தண்டனையோடு நிம்ர் இன் மரண தண்டனையை இணைப்பதானது, முடியாட்சியின் பரிபூரண ஆட்சிக்கு ஷியா எதிர்ப்பு என்பது பயங்கரவாதத்திற்கு ஒப்பானது என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

இந்த இரத்தந்தோய்ந்த ஆத்திரமூட்டலின் அரசியல் நோக்கங்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இரண்டினது நோக்கங்கள் ஆகும். இது ஜெனிவாவில் சிரிய சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருப்பதற்கு வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னதாக மற்றும் யேமனில் இரத்தந்தோய்ந்த ஒன்பது-மாதகால சவூதி போரைத் தீர்வுக்குக் கொண்டு வருவதன் மீது ஐ.நா. மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நடந்துள்ளது.

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அல் கொய்தா-தொடர்புபட்ட சுன்னி இஸ்லாமிய போராளிகளுக்குப் பிரதான நிதியுதவியாளரும் மற்றும் ஆதரவாளருமான சவூதி முடியாட்சிக்கு, ஈரானின் பிரதான அரபு கூட்டாளியான ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வகையில் அண்மித்து ஐந்தாண்டுக்கு அதிகமான காலத்திய மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஆர்வமில்லை.

அல்லது யேமனில், தற்போதைய நிலைமைகளில் தோற்கடிக்க முடியாதுள்ள ஒரு ஷியா-அடிப்படையிலான கிளர்ச்சி இயக்கம் ஹோதியருடனான அதன் போரை முடித்துக் கொள்ளவும் அது விரும்பவில்லை. இந்த திரளான தலைதுண்டிப்பு, டிசம்பர் 15 இல் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் என்று கூறப்பட்ட ஒன்று உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துவிட்டது என்ற சவூதி அறிவிப்புடன் நேரடியாக பொருந்தி உள்ளது.

யேமனில் கடந்த மார்ச்சில் சவூதி இராணுவம் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, அப்போரில் அண்மித்து 6,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க தலையீடு, ஆயுதங்கள், உளவுபார்ப்பு மற்றும் சவூதி குண்டுவீசிகளுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புவது போன்றவற்றைக் கொண்டு உதவியுள்ளது, அந்த சவூதி குண்டுவீசிகள் பொதுமக்கள் இலக்குகளின் மீது அமெரிக்க-தயாரிப்பு சரம்சரமான குண்டுகளை வீசியுள்ளதுடன், குறைந்தபட்சம் 100 மருத்துவமனைகளைத் தாக்கியுள்ளது. அது சவூதி முடியாட்சிக்கு அதிக விலைகொடுக்கும் நெருக்கடி என்றாலும், ஹோதியரைத் தோற்கடிக்காமல் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஓர் அவமானக்கேடான தோல்வியாக பார்க்கப்படும்.

இறுதியாக, வாஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையிலான சமீபத்திய அணுசக்தி உடன்படிக்கையை அடுத்து எந்தவித சமரசத்தையும் தொந்தரவுக்கு உள்ளாக்குவதும், சாத்தியமானால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஈரானுக்கு எதிரான ஒரு பரந்த போருக்குள் இழுப்பதுமே சவூதி ஆட்சியின் நோக்கமாகும்.

உள்நாட்டளவில், ஈரானுடன் பிரிவினைவாதம் மற்றும் மோதல்களை தூண்டிவிடுவது முடியாட்சியிலிருந்தே வெடிப்பார்ந்த சமூக பதட்டங்களை திசைதிருப்புவதற்கான ஒரு வழிவகையாக சேவையாற்றுகிறது. அந்த அரசாட்சி எண்ணெய் விலை வீழ்ச்சியால் உந்தப்பட்ட (இதற்கு அதன் சொந்த கொள்கைகளே முக்கிய பொறுப்பாகின்றன என்ற நிலையில்) அதிகளவில் கையாளவியலாத நெருக்கடியை முகங்கொடுக்கிறது. அது ஏற்கனவே அதன் நிதிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக, எரிவாயு மானியங்களில் வெட்டுக்களையும், தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களில் உயர்வையும் கொண்டு வந்துள்ளது. மக்கள் கிளர்ச்சியை தணிக்க பயன்படுத்தப்பட்ட சமூக மானியங்களை இலக்கில் வைத்த இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எதிர்நோக்கப்படுகின்றன.

உத்தியோகபூர்வ வாஷிங்டன் வட்டாரத்தில், திரளாக தலைதுண்டிப்பு தண்டனைகள் மற்றும் ஷேக் நிம்ர் இன் சட்டபூர்வ படுகொலைக்கு பிரதிபலிப்பு மிகச் சிறப்பாக மௌனமாக உள்ளது. அங்கே இந்த பேரச்சமூட்டுகிற பாரிய படுகொலைகளுக்கு எந்த கண்டனமும் இல்லை, மற்றும் எந்த மூத்த அதிகாரியும் அதுபோன்றவொரு அறிக்கையை வழங்கியிருக்கவில்லை.

அமெரிக்காவின் ஆயுத சந்தைகளில் முதலிடத்தில் உள்ளதும் மற்றும் வாஷிங்டனின் நெருக்கமான அரபு கூட்டாளியுமான சவூதி முடியாட்சியை நோக்கிய ஆளும் அரசியல் ஸ்தாபகத்தின் கொள்கை, ஏனைய அடிப்படை வெளியுறவு கொள்கை பிரச்சினைகளைப் போலவே, மோதல் மற்றும் பிளவுபடுத்துவதன் ஒரு பிரச்சினையாகும்.

இது திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இன் தலையங்கங்களில் பிரசுரிக்கப்பட்டது.

ஆளும் வட்டங்களுக்குள், அத்துடன் இராணுவ-உளவுத்துறை கூட்டு மற்றும் நிதி மூலதனம், இவை இரண்டும் சவூதி முடியாட்சியை கொண்டு பெரும் இலாபங்களை அறுவடை செய்துள்ள நிலையில், இவற்றின் மிகவும் வலதுசாரி அடுக்குகளின் கண்ணோட்டங்களை வெளிப்படுத்தும் ஜேர்னல், சவூதி குற்றங்கள் அல்லது நெருக்கடியையே கூட ஒரு விடயமாகவே முன்நிறுத்தவில்லை, அதற்கு மாறாக அது ஈரான் அபாயம் என்பதாக கூறப்படுவதை மற்றும் ரஷ்யா "சவூதி அரச மாளிகையை கவிழ்க்கிறது" என்றும், ஒபாமா நிர்வாகம் "அவற்றைத் தடுக்க ஏதேனும் செய்யுமா" என்ற கேள்வியை எழுப்புகிறது.

பெருந்தொலைவுக்கு பாயும் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகள் மீது ஈரானுக்கு எதிராக தடைகள் விதிப்பதிலிருந்து ஒபாமா நிர்வாகம் "பின்வாங்கியதற்காக" ஜேர்னல் தலையங்கம் அதன் மீது எரிச்சலைக் காட்டியது. அல் கொய்தா, ISIS மற்றும் அதுபோன்ற அமைப்புகளின் சித்தாந்த அடித்தள கட்டுமானமான வாஹ்ஹாபிசத்தைக் (Wahhabism) கொண்டு செல்வதை சவூதி ஆதரிப்பதின் மீதான பிரச்சினைகளை ஏற்றுக் கொள்கின்ற அதேவேளையில், ஜேர்னல் பின்வருமாறு முடித்தது: “ஆனால் உள்நாட்டு போர்கள், அரசியல் மேலெழுச்சி மற்றும் ஈரானிய ஏகாதிபத்தியத்தால் சிதைந்து போயுள்ள ஒரு மத்திய கிழக்கில், அந்த அரபிய தீபகற்பத்தில் சவூதியர்கள் தான் நமக்கு சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். அந்த அரசாட்சியை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கும் அல்லது அதன் மீது படையெடுக்கும் ஈரானிய முயற்சிகளில் இருந்து அதை அமெரிக்கா பாதுகாக்கும் என்பதை ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்,” என்று குறிப்பிட்டது.

நிம்ர் இன் மரண தண்டனை "மத்திய கிழக்கு எங்கிலும் ஷியைட் மற்றும் சுன்னி மக்களுக்கு இடையே மேற்கொண்டு மோதலைத் தூண்டும் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக தெரிகிறது —இது உள்நோக்கத்துடன் கூட இருந்திருக்கலாம்,” என்று ஒப்புக்கொண்டு, போஸ்ட் சற்றே இன்னும் கவலைதோய்ந்த அணுகுமுறையை எடுத்தது. “அதற்கே குழிபறித்தாலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த பிராந்தியத்தில் குழப்பங்களை பெருக்குவதாக" சவூதியின் ஆளும் அரச குடும்பத்திற்கு எதிராக அது எச்சரித்தது.

ஆனால் "சுன்னி ஆட்சிகள் அவற்றின் சொந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கும் வகையில், மத்திய கிழக்கு மேலாதிக்கத்திற்கான ஈரானின் உந்துதலை நிறுத்த அமெரிக்கா இனியும் விரும்பவில்லை அல்லது அதனால் முடியவில்லை என சவூதி உணர்ந்திருப்பதாக" ரியாத்தின் "பொறுப்பற்ற நடவடிக்கையை" சாட்டுகிறது.

இறுதியில் அவ்விரு தலையங்கங்களுமே அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அதன் சவூதி வாடிக்கையாளர் அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு மற்றும் இரத்தஆறுக்கான பரிகாரமாக கூறப்படுவதையே சுட்டிக்காட்டின: அதாவது, இராணுவவாதத்தை தீவிரப்படுத்துவது, ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டுக்கும் எதிராக திருப்பிவிடப்பட்ட புதிய மற்றும் இன்னும் பரந்த போர்களுக்கு தயாரிப்பு செய்வது.