ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On the threshold of the New Year

புத்தாண்டின் ஆரம்பத்தில்

Joseph Kishore and David North
31 December 2015

2015 ஆம் ஆண்டு முடிவுறுகையில், பயம் மற்றும் எச்சரிக்கையுணர்வின் ஒரு பொதுவான மனோபாவம் ஆளும் வட்டாரங்களில் மேலோங்கியுள்ளது. அதில் திடநம்பிக்கையின் ஒரு சாயலைக் கூட காண்பதரிது. முதலாளித்துவ ஊடக விமர்சகர்கள் கடந்த ஆண்டைத் திரும்பி பார்த்து, அது ஆழமடைந்துவரும் நெருக்கடியின் ஓர் ஆண்டாக இருந்துள்ளதை உணர்கிறார்கள். அவர்கள் 2016 ஐ அச்சவுணர்வுடன் முன்னோக்கி பார்க்கிறார்கள். எதிர்வரவிருக்கும் ஆண்டு எதிர்பாரா விளைவுகளோடு ஆழ்ந்த அதிர்ச்சிகளது ஓர் ஆண்டாக இருக்குமென்பதே அரசாங்க வட்டங்களிலும் மற்றும் பெருநிறுவன இயக்குனர் அறைகளிலும் நிலவும் பொதுவான மனநிலையாக உள்ளது.

இந்த படர்ந்து பரவிய உணர்வுக்கு பைனான்சியல் டைம்ஸின் கிடியோன் ரஹ்மன் (Gideon Rachman), செவ்வாயன்று பிரசுரமான அவரது இந்தாண்டு இறுதி மதிப்பீட்டில் வெளிப்பாட்டை அளிக்கிறார். “2015 இல், உலகின் சகல அதிகார மையங்களிலும் அமைதியின்மை மற்றும் முன்னெச்சரிக்கை உணர்வு நிலவியதாக தெரிந்தது” என்றவர் எழுதுகிறார். “அனைத்து முக்கிய செயற்பாட்டார்களும் தைரியமின்றி—அச்சத்துடன் இருப்பதாக கூட தெரிகிறது.” சீனா, "மிகக் குறைந்த ஸ்திரப்பாட்டில் இருப்பதாக உணர்கிறது.” ஐரோப்பாவில், மனநிலை "ஊக்கமற்று" போயுள்ளது. அமெரிக்காவில், பொதுமக்கள் உணர்வு "சீர்குலைந்துள்ளன.”

மிக முக்கியமாக, “உயரடுக்கு மீது ஊதிபெருத்துவரும் எதிர்ப்புணர்வு, அத்துடன் சமத்துவமின்மை பற்றிய அமைதியின்மையுடன் இணைந்து, பிரான்ஸ், பிரேசில், சீனா மற்றும் அமெரிக்கா என இந்நாடுகளில் வேறு வேறு விதத்தில் தெரியும் ஊழல் மீதான சீற்றம்" ஆகியவற்றை, உலக நிலைமைகளில் நிலவும் "மிகப் பொதுவான காரணியாக" ரஹ்மன் குறிப்பிடுகிறார். இந்த கண்டுபிடிப்பு, வரவிருக்கும் காலம் ஆழ்ந்த சமூக மேலெழுச்சிகளில் ஒன்றின் காலமாக இருக்குமென்பதை அதிகரித்தளவில் பெருநிறுவன ஊடகங்கள் அங்கீகரிப்பதைப் பிரதிபலிக்கிறது.

ரஹ்மனின் கருத்தும் மற்றும் சமீபத்திய நாட்களில் வெளியான அதை போன்ற ஏனையவையும், 2015 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் உலக சோசலிச வலைத் தளம் முன்வைத்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகின்றன. பிரதான புவிசார்அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் வெடிப்பதற்கு இடையிலான இடைவெளிகள் "அவற்றை இடைவெளிகளாக விவரிக்க முடியாதபடிக்கு மிகவும் குறைந்து போயுள்ளன,” என்று நாம் எழுதினோம். நெருக்கடிகள் "தனித்தனி "காலகட்டங்களாக' தெரியவில்லை, மாறாக கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சமகாலத்திய யதார்த்தத்தின் நிரந்தர அம்சங்களாக தெரிகின்றன. 2014ஐ குணாம்சப்படுத்திய இடையறாத நெருக்கடியின் வடிவம், பூகோளமயப்பட்ட முதலாளித்துவ சமநிலை உடைவின் ஓர் முதிர்ந்த நிலையைக் குறித்துக் காட்டுவதில் ஓர் இன்றியமையாத அறிகுறியாக விளங்கும் அது, 2015இல் இன்னும் மேலதிக தீவிரத்துடன் தொடரும்.“

அதன் ஆட்சியைப் பாதுகாப்பதில், ஆளும் வர்க்கம், பாரியளவில் பொய்கள் மற்றும் பாசாங்குதனத்தின் திரைமறைவில் முதலாளித்துவ யதார்த்தத்தை மூடிமறைக்க முயல்கிறது. போருக்கு, சுதந்திரம் மற்றும் ஜனநாயக மொழி அங்கி போர்த்தப்படுகிறது; சமூகவிரோத உள்நாட்டு கொள்கை என்பது சமத்துவம் மற்றும் சுதந்திரத்தைப் பின்பற்றுவதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் நெருக்கடியின் ஒரு காலகட்டத்தை —சுரண்டல், சமத்துவமின்மை, போர் மற்றும் ஒடுக்குமுறையின் ஓர் அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் இன்றியமையா இயல்பை— இன்னும் அதிக அதிகமாக குணாம்சப்படுத்தும் இது, பரந்த பெருந்திரளான மக்களின் நாளாந்த அனுபவங்களுடன் பொருந்தி வருகிறது. பிரமைகள் மறைகின்றன, உள்ளடக்கம் வெளிப்படையாக தெரிகின்றது.

உலக பொருளாதார சூழலில், ஒரு மேல்நோக்கிய திருப்பத்திற்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் நிரந்தர நெருக்கடி என்ற யதார்த்தத்திற்கு வழிவிடுகிறது. அமெரிக்காவில், பொருளாதார "மீட்சி" என்றழைக்கப்பட்ட ஆறு ஆண்டுகளில், நிஜமான வேலைவாய்ப்பின்மை சாதனையளவிற்கு அண்மித்து உயர்ந்துள்ளன, கூலிகள் தாக்குதலின் கீழ் உள்ளன, மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியங்கள் துடைத்தழிக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பா ஆண்டுக்கு 2 சதவீதத்திற்கும் குறைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது, ஐரோப்பிய வங்கிகளால் கோரப்பட்ட கடுமையான சிக்கனத்திட்ட நடவடிக்கைகளின் இலக்கான கிரீஸ் உட்பட, ஐரோப்பிய பொருளாதாரத்தின் பெரும் பாகங்கள், ஆழ்ந்த மந்தநிலைமையில் உள்ளன. உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சாத்தியமான உந்து-எந்திரமாக முன்வைக்கப்பட்ட சீனா, கூர்மையாக வளர்ச்சி குறைந்து வருகிறது. பிரேசில் மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பகுதிகள் ஆழ்ந்த சரிவில் உள்ளன. ரஷ்யா மந்தநிலைமையில் உள்ளது.

இதற்கிடையே, பெறுமதியற்ற பத்திரங்கள் மற்றும் ஏனைய கடன் வடிவங்களை மையப்படுத்தி, ஊக வணிக முதலீட்டின் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ள, உலகின் மத்திய வங்கிகளது மலிவு-பணக் கொள்கையோ, 2008 க்கு முந்தைய வீட்டு அடமானக் கடன் நெருக்கடிக்குச் சமாந்தரமான ஒரு நிகழ்வுபோக்கில் கட்டவிழத் தொடங்கியுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் அரசாங்க கொள்கையின் இன்றியமையாத மற்றும் முன்னெடுக்கப்பட்ட விளைவு பரந்தளவில் சமூக சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் போது, உலக பில்லியனர்களின் செல்வவளம் 7 ட்ரில்லியன் டாலர்களைக் கடந்து அதிகரித்தது மற்றும் உயர்மட்ட 1 சதவீதம் இப்போது உலகின் செல்வவளத்தில் பாதியை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அமெரிக்காவில், “முக்கியமாக அரசாங்கம் எந்த கொள்கைகளை கடைபிடிக்கிறது அல்லது கடைபிடிக்கவில்லை என்பதன் மீது “பரந்த பெரும்பான்மை அமெரிக்கர்களின் விருப்புரிமைகள் எவ்வித தாக்கத்தையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை” என்று ஒரு சமீபத்திய விஞ்ஞானபூர்வ ஆய்வு குறிப்பிட்டு முடிக்குமளவிற்கு, சமூக சமத்துவமின்மையின் —அவ்விதத்தில் அரசியல் சமத்துவமின்மையின்— அளவு மிக அதிகளவில் உள்ளது.

பொருளாதார நெருக்கடி புவிசார்அரசியல் மோதல்களில் குறுக்கிட்டு, அவற்றை தீவிரப்படுத்துகிறது. கடந்த அரை-நூற்றாண்டின் எந்தவொரு காலத்தையும் விட 2015 இல் புவிசார்அரசியல் மோதல்கள் பூமியை உலக போருக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்திருந்தன. தோற்றப்பாட்டளவில் உலகின் ஒவ்வொரு பாகமும் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது அல்லது ஒரு போர்க்களமாக மாறக்கூடிய குணாம்சத்தை ஏற்று வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட ஒரு பிராந்திய உள்நாட்டு போருக்குள் மத்திய கிழக்கு உந்தப்பட்டுள்ளது, அதில் சிரியா இப்போது ஒரு புதிய "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மூடுதிரையின் கீழ் தொடங்கப்பட்ட தீவிர போர் உந்துதலுக்கு இலக்காகி உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ பிரச்சாரத்தின் பாகமாக கிழக்கு ஐரோப்பா மீள்இராணுவமயப்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு ஆசியாவில், அமெரிக்கா தென் சீனக் கடல் மீது சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்களை நடத்தி வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள், ஆபிரிக்காவில், லிபியா, காமரூன், நைஜீரியா மற்றும் ஏனைய நாடுகளிலும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகின்றன.

ஈவிரக்கமற்றத்தன்மை மற்றும் குற்றகரத்தன்மையின் மட்டங்களுடன் ஏகாதிபத்தியம் செயல்படுகிறது, அவற்றை 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி காலத்துடன் மட்டுந்தான் ஒப்பிட முடியும். முழு அளவிலான நாடுகள் கந்தலாகி வருகின்றன. அக்டோபரில் ஆப்கானிஸ்தானில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மீது வேண்டுமென்றே குண்டுவீசியதைப் போன்ற அட்டூழியங்கள், எந்த பின்விளைவுகளும் இன்றி நடத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச சட்ட நெறிமுறையின் வெளிவேஷம் கூட இல்லாமல் போர்கள் தொடங்கப்பட்டுள்ளன.

20ஆம் நூற்றாண்டில் இரண்டு பேரழிவுகரமான போர்களை உருவாக்கிய வல்லரசுகளின் மோதல், பூகோள உறவுகளின் அடிப்படை இயக்கமாக மீண்டும் மேலெழுந்து வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தயவுதாட்சண்யமற்ற போர் உந்துதல், அதை ரஷ்யா மற்றும் சீனா உடன் மட்டும் மோதலுக்குக் கொண்டு வரவில்லை, மாறாக அதிகரித்தளவில் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுடனும் மோதலுக்குக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜேர்மனி தன்னைத்தானே பிரதான ஐரோப்பிய சக்தியாக மீளவலியுறுத்த அதன் ஒரு பெரும் முயற்சியைக் காட்டியுள்ளது. அதில் அரசியல்வாதிகள், ஊடக கருத்துரையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஜேர்மனி ஐரோப்பாவின் "எஜமானர்" பாத்திரம் ஏற்க வகை செய்யும் விதத்தில் அதையொரு "பலமான அரசாக" ஸ்தாபிக்க அழைப்புவிடுத்திருந்தனர். மீண்டுமொருமுறை, ஜேர்மன் ஆளும் வர்க்கம் "உலகத்தை கட்டுப்படுத்த ஐரோப்பாவை கட்டுப்படுத்தும்" திட்டங்களை அபிவிருத்தி செய்து வருகிறது.

அரசின் இன்றியமையா குணாம்சம், பெருந்திரளான மக்களின் முன்னால், வர்க்க ஆட்சியை பாதுகாக்க அர்பணிக்கப்பட்ட "ஆயுதமேந்தியவர்களின் அமைப்பாக" வெளிப்படையாகி வருகிறது. இந்தாண்டு இறுதியில் பாரிஸ் மற்றும் சான் பெர்னான்டினோ தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பது முதலாளித்துவ ஜனநாயகத்தின் உத்தியோகபூர்வ நடைமுறைகளை வழக்கொழிப்பதை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. மத்திய கிழக்கில் நாசகரமான இராணுவ நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட ஒரு பாரிய அகதிகள் நெருக்கடிக்கு விடையிறுப்பதில், ஐரோப்பிய சக்திகள் எல்லைகளை அமைத்து, புலம்பெயர்வோரை வெளியேற்றி வருகின்றன. முடிவில்லா போர் நிலைமைகளின் கீழ், பாசிசவாத மற்றும் நவ-பாசிசவாத சக்திகள் (பிரான்சில் தேசிய முன்னணி, ஜேர்மனியில் பெஹிடா, அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப்) வளர்ந்து வருகின்றன.

அதன் பூகோள அபிலாஷைகளை பின்தொடர்வதற்காக சித்திரவதை மற்றும் டிரோன் படுகொலைகளை பயன்படுத்தும் அமெரிக்க ஆளும் வர்க்கம், உள்நாட்டில் ஒரு பிரமாண்டமான ஒடுக்குமுறை எந்திரத்தை கட்டமைத்துள்ளது. மரண தண்டனை வழங்குவதற்காக தன்னைத்தானே நியமித்துக் கொண்டவர்களாக செயல்படும், தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை கொண்ட, பொலிஸ் அதிகாரிகளால், நிராயுதபாணியான தொழிலாளர்களும் இளைஞர்களும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்படும் புதிய செய்திகள் நாளாந்தம் வெளியாகின்றன.

ஒவ்வொரு ஆழ்ந்த நெருக்கடி காலத்திலும், பல்வேறு போக்குகள் பிரதிநிதித்துவம் செய்யும் அவற்றினது உண்மையான வர்க்க நலன்கள் வெளிப்படுகின்றன. இது வெறுமனே ஸ்தாபக முதலாளித்துவ கட்சிகளுக்கு மட்டுமல்ல, மாறாக குட்டி முதலாளித்துவ வர்க்க "இடது" கட்சிகளுக்கும் பொருந்தும். கிரீஸில் "தீவிர இடது கூட்டணியான" சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதே, 2015 இல் தொழிலாள வர்க்கத்தினது மத்திய மூலோபாய அனுபவமாக இருந்தது. ஜனவரியில் அது அதிகாரத்திற்கு வந்தமை உலக அரசியலில் ஒரு பிரதான திருப்புமுனையாக எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால், அந்தாண்டின் போக்கினூடாக, சிரிசா அதன் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் காட்டிக்கொடுத்ததுடன், அது எதிர்ப்பதாக கூறிய அதே கொள்கைகளை இப்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தாண்டு முடிய வந்துவிட்ட நிலையில், சிக்கனத்திட்ட சகாப்தம் முடிந்துவிட்டது என்ற புதிய வாதங்களுடன், சிரிசாவின் கூட்டாளியான பொடெமோஸ் க்கு கணிசமான அளவிற்கு ஆதரவு அதிகரித்திருப்பதை ஸ்பெயின் தேர்தல்கள் காட்டின.

உண்மையில், கிரீஸ் அனுபவம் எடுத்துக்காட்டியதைப் போல, பொடெமோஸ், சிரிசா மற்றும் சர்வதேச அளவில் ஏனைய பல அதுபோன்ற கட்சிகளும் முற்றிலுமாக தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக உள்ளன. அரசியல்ரீதியிலும் மற்றும் தத்துவார்த்தரீதியிலும், அவை பின்நவீனத்துவத்தின் மார்க்சிச-விரோத கருத்துருக்களில், இனவாத, பாலுறவு மற்றும் ஆண்-பெண் பாகுபாடு கொள்கைகளிலும் வேரூன்றியுள்ளன. கடந்த ஆண்டானது, போலி-இடதின் அரசியல் திவால்நிலையை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்க அரசியலின் பொதுவான வலது நோக்கிய நகர்வின் ஒரு வெளிப்பாட்டில், “இடது" என்றழைக்கப்படுவதும் இருந்துள்ளது என்பதைக் குறித்த அதிகரித்து புரிதலுக்கும் அது பங்களித்தது.

இத்தகைய அனுபவங்கள் என்ன நிரூபிக்கின்றன, முதலாளித்துவ அமைப்புமுறைக்கான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக ஒன்றுதிரட்டுவதை தவிர வேறு மாற்றீடு இல்லை என்பதைக் காட்டுகிறது.

இந்த பின்புலத்திற்கு எதிர்முரணாக, முதலாளித்துவ நெருக்கடியின் இறுதியான மற்றும் மிகவும் தீர்க்கமான வெளிபாடாக இருப்பது, வர்க்க போராட்டத்தின் தீவிரப்பாடும் மற்றும் ஒரு சுயாதீன சக்தியாக தொழிலாள வர்க்கத்தினது மேலெழுச்சிக்கு அதிகரித்துவரும் அறிகுறிகளும் ஆகும். அங்கே ஆழ்ந்த மற்றும் அளவிட முடியாத கோபமும் எதிர்ப்பும் —வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற— பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெடித்து வருகின்றன, போலி-இடது மற்றும் தொழிற்சங்கங்களில் உள்ள அதன் துணை அமைப்புகளை ஒன்றுதிரட்டுவதன் மூலமாகவும் மற்றும் வன்முறையை கொண்டும் ஆளும் வர்க்கம் இவற்றை தனிமைப்படுத்தவும் மற்றும் ஒடுக்கவும் முனைகின்றன.

கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில், அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்களிடையே எழுந்த எதிர்ப்பு, அவர்களை வாகனத்துறை நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவன ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் இரண்டுடனும் மோதலுக்குள் கொண்டு வந்தது. பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களால் எழுப்பப்பட்ட தடைகளை உடைப்பதற்கான அமெரிக்க தொழிலாளர்களின் முயற்சிகள், உலகெங்கிலுமான நாடுகளில் இதற்கான சமாந்தரங்களுடன், ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த நிகழ்வுபோக்கு, அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும், மிகவும் தெளிவானதாகிவிடும். வர்க்க போராட்டம் செயற்கையான ரீதியில் ஒடுக்கப்பட்ட காலகட்டத்தில், அரசியல் வாழ்விலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, முடிவுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு வீணாய் போய்விடவில்லை. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் படிப்பினைகளை பெற தொடங்கியுள்ளனர், அவர்கள் முகங்கொடுக்கும் சமூக மற்றும் அரசியல் சக்திகளிடமிருந்து பெரும் நனவைப் பெற தொடங்கியுள்ளனர். இவ்விதத்தில், வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டம் குறித்த செய்தியறிக்கைகள் உலக சோசலிச வலைத் தள வாசகர்களின் எண்ணிக்கையை கூர்மையாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அது ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை, உண்மை மற்றும் முன்னோக்கின் ஓர் ஆதாரமாக WSWS நோக்கி திருப்பி இருந்தது. இது வரவிருக்கும் காலத்தில் எண்ணற்ற வடிவங்களில் முன்பினும் பெரியளவில் மீண்டும் செய்யப்பட வேண்டும், செய்யப்படும்.

அரசியல் பிரச்சினைகள் மிக மிக கூர்மையுடன் முன் வருகின்றன. முதலாளித்துவம் ஓர் உயிர்வாழ்விற்கான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பது இப்போது சுயநிரூபணமாகி உள்ளது. எழும் கேள்வி என்னவென்றால்: இந்த நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும்? உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய போக்கா அல்லது சோசலிச புரட்சியை நோக்கிய போக்கா மிக வேகமாக அபிவிருத்தி அடையும்? இதுதான் இந்த புத்தாண்டு தொடங்குகையில் முன்னுள்ள மிகப்பெரும் கேள்வியாகும்.