ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Charlie Hebdo joins racist campaign against refugees in Europe

ஐரோப்பாவில் அகதிகளுக்கு எதிரான இனவாத பிரச்சாரத்தில் சார்லி ஹெப்டோ இணைகிறது

By Alex Lantier
16 January 2016

சிரியப் போரில் கோரமாக விலை கொடுக்கப்பட்ட மனித உயிர்களுக்கு அடையாளமாக கடந்த ஆண்டு துருக்கிய கடலில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய மூன்று வயது சிறுவன் அய்லன் குர்தி பற்றிய ஒரு கீழ்தரமான தாக்குதலுடன், பிரான்சின் கேலிச்சித்திர வாரயிதழ் சார்லி ஹெப்டோ ஐரோப்பாவில் மத்திய கிழக்கு அகதிகளுக்கு எதிராக அதிகரித்துவரும் இனவாத பிரச்சாரத்தில் இணைந்தது.

அவ்வார இதழ் பதிப்பாசிரியர் குழு மீது கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த ஒரு கேலிசித்திர ஓவியரான ரிஸ், உலகெங்கிலுமான வாசகர்களை அதிர்ச்சியூட்டிய அந்த கேலிச் சித்திரத்தை வரைந்திருந்தார். ஜேர்மன் நகரான கொலோன் இல், புத்தாண்டுக்கு முதல் நாள், குற்றகரமான பாலியல் நடவடிக்கைகளது ஓர் அலையில் அகதிகள் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறும் சர்வதேச ஊடகப் பிரச்சார கூற்றுகளோடு இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ள விஷமப் பிரச்சாரத்தை அதற்கு சாதகமாக ஏற்றிருந்தது.

“அச்சிறுவன் அய்லன் வளர்ந்ததும் என்னவாகியிருப்பான்?” என்ற அடிக்குறிப்பு கேள்வியின் கீழ், ரிஸ், அந்த மூழ்கி இறந்த சிறுவன் எழுந்து நிற்பதைப் போல, வளர்ந்து வருவதைப் போல, பன்றியைப் போன்ற மூக்கு வளர்ந்திருப்பதைப் போல, பயந்து அலறிய ஒரு பொன்னிற தலைமயிர் உடைய பெண்ணை விரட்டுவதைப் போல பல கேலிப்படங்களை வரைந்து, “ஜேர்மனியில் ஒரு சிற்றின்ப வெறியன்" என்று அக்கேள்விக்கு பதிலும் அளித்திருந்தார்.

நாஜி பிரச்சார இதழ் Der Stürmer இன் பக்கங்களை தவிர வேறெதிலும் இடம்பெற்றிராத இனவாத மற்றும் யூதயின-விரோத தப்பபிப்பிராயங்களுக்கு அப்பட்டமாக முறையிடுவதாக இருந்த அது, சர்வதேச கண்டனங்களை ஈர்த்தது.

இப்போது கனடாவில் அகதியாக வாழ்ந்துவரும் அய்லன் இன் அத்தை டிமா குர்தி CBC செய்திகளுக்குக் கூறுகையில், அந்த கேலிச்சித்திரம் "அருவருப்பானது,” என்று கூறியதுடன், “எங்கள் குடும்பத்தின் வலியை மக்கள் மதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கு அதுவொரு மிகப்பெரிய இழப்பு. அந்த துயரத்திற்குப் பின்னர் நாங்கள் இன்னும் அதேமாதிரியாக இல்லை. நாங்கள் சிறிது சிறிதாக அதை மறந்து எங்கள் வாழ்க்கைக்குள் நகர்ந்து வர முயன்று வருகிறோம். ஆனால் எங்களை மீண்டும் காயப்படுத்துவது, நியாயமானதில்லை,” என்றார்.

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி (PS) பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க என்ற வெளிவேடத்தில், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" சுற்றி “நானும் சார்லி" (Je suis charlie) என்ற கருத்துருவின் மீது தேச ஒற்றுமைக்கான (unité nationale) என்று ஒரு பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்க கடந்த ஆண்டின் அத்தாக்குதலை பற்றி இருந்தது, அப்போதே கூட பல வாசகர்கள் அந்த கேலிச்சித்திரத்திற்கு கண்டன கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அத்தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் அவ்வாரயிதழை அவதூறுகளுடன் சம்பந்தப்படுத்தியதால் அதன் புதிய வாசகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், அதற்குப் பிந்தைய உத்தியோகபூர்வ ஊக்குவிப்பின் காரணமாக சார்லி ஹெப்டோவின் வாசகர் எண்ணிக்கை நான்கு மடங்காக 200,000 க்கு உயர்ந்தது. வலதுசாரி நாளிதழ் Le Figaro பின்வருமாறு குறிப்பிட்டது: “முன்னர் இந்த மாதிரியான சிதைந்து போன மற்றும் வக்கிரமான நகைச்சுவையை விரும்பிய சுதந்திரவாதிகளோடு மட்டுப்பட்டு இருந்த சார்லி ஹெப்டோவின் வாசகர் எண்ணிக்கை, பரந்தளவிலான வாசகர்கள் உள்ளிணைவை அதிகரித்தது, அதை வெறுப்புணர்வுடன் கையாளுவது அவசியமில்லை” என்றது குறிப்பிட்டது.

சார்லியின் முதல் பக்க கேலிச்சித்திரம் அருவருப்பாக உள்ளது, அருவருப்புத்தன்மையை ஊக்கப்படுத்துகிறது என்று நான் கூறினால் யாரும் அதிர்ச்சியடைய மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்,” என்று Le Figaro வலைத் தளத்தில் ஒரு வாசகர் கருத்துரைத்திருந்தார்.

கருத்துரைத்திருந்த மற்றொருவர், அவ்வாரயிதழ் பணியாளரின் ஸ்ராலினிச, சமூக-ஜனநாயகவாத மற்றும் சுதந்திரவாத-அராஜகவாத அனுதாபங்களை சுட்டிக்காட்டி எழுதுகையில், “ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதரவு கரத்தை நீட்டும் முதலாளித்துவ வர்க்க, மரபுதவறிய, கம்யூனிஸ்ட்டுக்களால் நடத்தப்படும் ஒரு பிற்போக்குத்தனமான பத்திரிகையிலிருந்து நாம் அனுமானிக்கத்தக்க விளைவுகளைப் பெறுகிறோம்: அதாவது, அவதூறு செய்வதற்காக, பிரதிகளின் விற்பனையை தூண்டுவதற்காக, அத்துடன் போர்களைத் தொடங்கி வைப்பதற்காக, ஆரோக்கியமில்லாத மற்றும் இரசனையற்ற கேலிச் சித்திரங்களைப் பெறுகிறோம்.”

அகதிகளைப் பாலியல் பலாத்காரர்களாக காட்டுவதன் மூலமாக அவர்களைப் பாரியளவில் வெளியேற்றுவதை நியாயப்படுத்தும் ஒரு சர்வதேச பிரச்சாரத்தின் பாகமாக, ஓர் அப்பாவி குழந்தை மீதான சார்லி ஹெப்டோவின் தாக்குதல், “நானும் சார்லி" பிரச்சாரத்தை ஊக்குவித்த அல்லது அதை ஏற்றிருந்த சகல அமைப்புகளையும்—பிரான்ஸ் மற்றும் ஏனைய நேட்டோ நாடுகளது ஊடகங்களை, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை, மற்றும் அதன் பல்வேறு அரசியல் துணை அமைப்புகளை—அம்பலப்படுத்துகிறது.

இது சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குச் சற்று பின்னர் உலக சோசலிச வலைத் தளத்தால் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையை நிரூபணம் செய்கிறது. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்திய ஆதரவிலான போருக்கு, வெளிநாட்டு இஸ்லாமியவாத போராளிகளை பயிற்றுவிக்கும் இஸ்லாமிய முகாம்களில் பயிற்சி பெற்ற போராட்டக்காரர்களது பத்திரிகையாளர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலை அக்கட்டுரை ஐயப்பாட்டிற்கு இடமின்றி கண்டித்த அதேவேளையில், அது சார்லி ஹெப்டோவை ஊக்குவிப்பவர்களது முற்றிலும் அரசியல் பாசாங்குத்தனத்தையும் எச்சரித்திருந்தது.

16 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளின் ஐரோப்பிய முடியாட்சிகளுக்கு எதிராக வரையப்பட்டிருந்த கேலிச்சித்திரங்களது சிறந்த பாரம்பரியங்களை சார்லி ஹெப்டோ பிரதிநிதித்துவம் செய்ததாக கூறிய ஊடகங்களின் கூற்றுகளை அக்கட்டுரை மறுத்தது. அத்தகைய முந்தைய நையாண்டி ஓவியர்கள் "ஒரு ஜனநாயக அறிவொளியின் பிரதிநிதிகளாக இருந்தனர், அவர்களின் நையாண்டி கற்பனையை அவர்கள் பிரபுத்துவ செல்வாக்கினது சக்தி வாய்ந்த மற்றும் ஊழல்மிகுந்த பாதுகாவலர்களுக்கு எதிராக திருப்பி இருந்தனர். ஆனால் சிறிதும் தயவுதாட்சண்யமின்றி முஸ்லீம்களை இழிபடுத்தும் சித்திரங்களில் சார்லி ஹெப்டோ ஏழைகளையும், அதிகாரமற்ற பலவீனர்களையும் ஏளனப்படுத்தி இருந்தது,” என்று WSWS குறிப்பிட்டது.

அந்த வாரயிதழின் அரசியல் பிரச்சாரத்தினது பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அக்கட்டுரை எச்சரித்தது: “சார்லி ஹெப்டோவினை பாதுகாக்கும் வழியில், அதன் கேலிச்சித்தரங்கள் அனைத்தும் "மிகவும் கேலிக்குரியவை" என்றும், அவை எந்த அரசியல் விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் வாதிடுவது முற்றிலும் அர்த்தமற்றதாகும்., பிரெஞ்சு அரசாங்கம் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் அதன் இராணுவ நிகழ்ச்சிநிரலை அதிகரிக்க ஆதரவைத் திரட்டுவதற்காக பெருமுயற்சி செய்து வருகிறது என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, பிரான்சில் நவ-பாசிச தேசிய முன்னணியின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அரசியல் சூழலில், சார்லி ஹெப்டோ அரசியல்மயப்பட்ட முஸ்லீம்-விரோத உணர்வின் ஒரு வடிவம் வளர்வதற்கு உதவியுள்ளது, அது 1890களில் பிரான்சில் ஒரு பாரிய இயக்கமாக எழுச்சி கண்ட அரசியல்மயப்பட்ட யூத-எதிர்ப்புவாதத்திற்கு பெரிதும் குழப்பமான ஒற்றுமையை கொண்டுள்ளது.

"முஸ்லீம்களைக் குறித்து ஒரேமாதிரியாக எரிச்சலூட்டும் படங்களை நிரப்பிக் கொடுக்கும் கோரமான மற்றும் கொச்சையான கேலிச்சித்திரங்களை அது பயன்படுத்தியதில், ஜேர்மனியின் சார்பாக ஒரு யூத அதிகாரி உளவுவேலைகளில் ஈடுபட்டதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டதற்குப் பின்னர், 1894இல் வெடித்த பிரபல டெரெஃபஸ் விவகாரத்தின் (Dreyfus Affair) போது, பிரான்ஸை மூழ்கடித்திருந்த யூத-எதிர்ப்புவாத கிளர்ச்சிக்கு முட்டுக்கொடுப்பதில் ஒரு முக்கிய பங்காற்றிய மலிந்த இனவாத பிரசுரங்களையே சார்லி ஹெப்டோ நினைவுபடுத்துகிறது.”

சோசலிஸ்ட் கட்சி முன்னெடுத்த போலித்தனமான ஜனநாயக பாசாங்குத்தனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இன்று சார்லி ஹெப்டோ தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவுகளுக்கு ஓராண்டுக்குப் பின்னர் மிகவும் வெளிப்படையாகி உள்ளன. “நானும் சார்லி" பிரச்சாரத்தைப் பற்றிய WSWS இன் ஆரம்ப எச்சரிக்கைகள் அதற்கடுத்து வந்த ஆண்டே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. பிராந்திய தேர்தல்களில் பிரான்ஸ் எங்கிலும் நவ-பாசிசவாத தேசிய முன்னணி கடந்த ஆண்டு பரவி வளர்ந்ததைக் கண்டது, மேலும் நவம்பர் 13 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடிநிலையை நிறுவுவதற்கான சோசலிஸ்ட் கட்சியின் உந்துதலை, அடிப்படை ஜனநாயக உரிமைகளது அழிப்பை மற்றும் கூடுதலாக முஸ்லீம்-விரோத உணர்வு தூண்டிவிடப்பட்டதைக் கண்டது.

பயங்கரவாதம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களின் பிரெஞ்சு குடியுரிமையைப் பறிக்கும் நகர்வுகளும் சோசலிஸ்ட் கட்சிக்குள் நடந்து வருகின்றன. மிக முக்கியமாக, சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அவர்களே இரண்டாண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு முன்னர் குடியுரிமையை பறிப்பதைக் கண்டித்திருந்தனர், அப்போது அது சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் முன்மொழியப்பட்டிருந்தது. இரண்டாம் உலக போரின் போது ஆயிரக் கணக்கான பிரெஞ்சு யூதர்கள் ஐரோப்பாவில் நாஜி படுகொலை முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக இழிவார்ந்தரீதியில் பிரெஞ்சு பாசிச அதிகாரிகளால் குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் இக்கொள்கை சம்பந்தப்பட்டுள்ளது..

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" மற்றும் பிரெஞ்சு பேரினவாதம் ஓராண்டாக தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், முன்னதாக சிந்தித்தும் பார்க்கவியலாது இருந்த கொள்கைகளை சட்டபூர்வமாக்குவதற்கான இயங்குமுறையாக இருந்ததை இந்த “நானும் சார்லி" பிரச்சாரம் நிரூபணம் செய்தது. ஓராண்டுக்கு முன்னதாக "நானும் சார்லி" அடையாளங்களை அணிந்து அணிவகுத்து சென்ற மில்லியன் கணக்கானவர்கள், பகுப்பாய்வின் இறுதியில், பிரான்சில் ஒரு பொலிஸ்-அரசு ஆட்சி நிறுவதற்கான ஓர் உந்துதலில் கூடுதல் உபரிகளாக கையாளப்பட்டிருந்தனர் என்பது இப்போது நன்கு முதிர்ந்து வெளிப்படுகிறது..

“நானும் சார்லி" என்ற மூடிமறைப்பின் கீழ் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு கடுமையான தாக்குதலைத் தொடுப்பதற்கான சோசலிஸ்ட் கட்சியின் தகைமையும் அவ்வாரயிதழின் தன்மையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன என்பதையே அய்லன் குர்தி மீதான சார்லி ஹெப்டோ தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது. அதன் பணியாளர்கள், சமூக பரிவாரங்கள் மற்றும் பிரதான வாசகர்களை சார்ந்துள்ள சுதந்திரவாத, முதலாளித்துவ வர்க்க மரபுதவறிய "கம்யூனிஸ்ட்களின்" அடுக்கு —அதாவது போலி-இடது என்று WSWS குறிப்பிடும் செல்வாக்கான நடுத்தர வர்க்க அடுக்கு— தசாப்த காலங்களில் முற்றிலுமாக உணர்ச்சி மரத்துப்போய், போருக்கு ஆதரவளித்து, முஸ்லீம்-விரோத உணர்வுகளால் மேலாதிக்கம் பெற்றுள்ளது.

இந்த அடுக்கு பாசிசவாத கொள்கைகளுக்கான ஒரு சமூக அடித்தளத்திற்குள் உருமாறியமை, சார்லி ஹெப்டோ உடன் சம்பந்தப்பட்ட உயிர்பிழைத்துள்ள மிக முக்கிய பிரமுகர்கள் சிலரது வாழ்க்கை வரலாற்றில் பிரதிபலிக்கிறது.

1968 பொது வேலைநிறுத்தத்தின் போது ஓர் உயர்நிலை பள்ளி மாணவர் தொழிற்சங்க தலைவரான மற்றும் இன்றைய புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் முன்னோடி அமைப்பான பப்லோவாத கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னாள் அங்கத்தவரான ரோமன் குப்பில், நகைச்சுவையாளர் Coluche இன் 1981 ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு ஒரு முக்கிய ஆலோசகராக இருந்தார், அப்பிரச்சாரத்தைச் சார்லி ஹெப்டோ உத்தியோகபூர்வமாக ஆதரித்தது. அவர் 1990 இன் போது யூகோஸ்லாவியாவில் நேட்டோ போர்களை, 2003 இல் பிரெஞ்சு அரசாங்கத்தாலேயே கூட எதிர்க்கப்பட்ட ஈராக்கில் சட்டவிரோத அமெரிக்க தலையீடு, மற்றும் லிபியாவில் 2011 நேட்டோ போரை ஆதரித்தார்.

சார்லி ஹெப்டோவில் வேலை செய்தவரும், இப்போது சோசலிஸ்ட் கட்சியின் குடியுரிமை பறிப்பு கொள்கையை ஆதரிப்பவருமான ஒரு பத்திரிகையாளரும் "மதசார்பின்மையை ஆதரிக்கும்" நடவடிக்கையாளருமான கரோலின் ஃபுரெஸ்ட், 2010 “Goutte d’Or பிராந்தியத்தில் பன்றி உணவு, திராட்சை மதுபான உணவு" ஆத்திரமூட்டலைப் பகிரங்கமாக ஆதரித்தார். இது தொழிலாள வர்க்க Goutte d’Or பகுதியில் வழிபாடு செய்துவந்த முஸ்லீம்களது அருகாமை பகுதியில் திராட்சை மதுபானம் குடிப்பது மற்றும் பன்றிஇறைச்சி உண்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக அவர்களைத் தொந்தரவு செய்யும் நோக்கில், Identity Block and Secular Counter attack போன்ற குழுக்களை உள்ளடக்கிய தீவிர வலது குழுக்களால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளாக இருந்தது.

இறந்துபோன மற்றும் நிராயுதபாணியான ஒரு சிறுவன் மீது சார்லி ஹெப்டோவின் சமீபத்திய அவதூறான தாக்குதல், ஜனநாயக உணர்வுகளின்றி இத்தகைய சக்திகள் இறுகிப் போயிருப்பதையும் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அவர்களது விரோதங்களையும் நிரூபிக்கின்றன.