ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Global financial turmoil continues on fears of slower growth

மெதுவான வளர்ச்சி குறித்த அச்சங்களால் உலகளாவிய நிதியியல் கொந்தளிப்பு தொடர்கிறது

By Nick Beams
7 January 2016

சீனாவின் பங்குச் சந்தை திறந்த உடனேயே பங்குகள் வீழ்ச்சி அடைய தொடங்கியதால், அது நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக வியாழனன்று காலை நிறுத்தப்பட்டது. ஒரு முக்கிய குறியீடு 5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததால், அது 15-நிமிட தன்னியக்க நிறுத்தத்தைக் கொண்டு வந்தது. சந்தைகள் மீண்டும் திறந்த போது சரிவுகள் தொடர்ந்தன, அவை 7 சதவீதத்தை தொட்டபோது அந்நாளுக்கான வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

சீன வீழ்ச்சியானது புதனன்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு ஒரு நாளைக்குப் பின்னர் வந்ததாகும், இது எண்ணெய் விலைகள் மேலும் சரிவிற்கு இட்டுச் சென்றதுடன், சீனாவின் வளர்ச்சி மற்றும் நிதியியல் ஸ்திரப்பாடு மீது கவலைகளை உயர்த்தியது. அத்துடன் எழுச்சியடைந்துவரும் சந்தைகளது கடன் மீதும் கவலைகள் அதிகரித்தன. வட கொரிய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை பற்றிய செய்திகள் இந்த ஸ்திரமின்மையோடு சேர்ந்து கொண்டன.

அமெரிக்காவில், பிரதான குறியீடுகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தன. டோவ் மற்றும் எஸ்&பி 500 அந்நாளின் முடிவில் முறையே 17,000 மற்றும் 2,000 க்குக் கீழே போய் முடிந்தன. அமெரிக்க பங்குகளது விற்றுத்தள்ளலை அடுத்து ஜப்பான் மற்றும் ஏனைய ஆசிய பாகங்களிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்த செயல்பாட்டின் பிரதான காரணி உலகளாவிய பொருளாதாரத்தில் மந்தநிலையை நோக்கி ஆழமடைந்துவரும் போக்குகளாகும். இது அமெரிக்க பெடரல் மற்றும் ஏனைய பிரதான மத்திய வங்கிகளால் உலகளாவிய நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டு உருவாக்கப்பட்ட நிதியியல் குமிழியைப் பலவீனப்படுத்தத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க வணிக சேவை CNBC இல் பேசிய சந்தை பகுப்பாய்வாளர்கள் சீனாவிலும் மற்றும் உலகெங்கிலும் மற்றும் அமெரிக்காவிலும் மோசமடைந்துவரும் நிலைமையின் அறிகுறிகளைக் குறித்து பேசினர். “இது பெரும்பாலும் முற்றிலும் அதே கதை தான். சீனாவின் வளர்ச்சி பற்றிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளோம்,” "அமெரிக்க உற்பத்தி துறை மந்தநிலை பகுதிக்குள் செல்வதாக தெரிகிறது,” என்றொரு விமர்சகர் தெரிவித்தார்.

மற்றொருவர் கருத்துரைக்கையில், “சந்தைகளைப் பாதித்துவரும் மிகப்பெரிய விடயம்", 2015 மற்றும் 2016 இல் "உலகளாவிய பொருளாதாரம் கூடுதலாக வளர்ச்சி குறைந்து வருகிறது என்ற முன்உத்தேசத்திற்கு நாம் வருகிறோம்". “நமக்குச் சீனாவைக் குறித்த கவலை உள்ளது,” என்றவர் தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் க்குத் தெரிவித்த மற்றொரு பகுப்பாய்வாளர், "சீனாவின் வளர்ச்சி பொறிவுக்குப் போய் கொண்டிருக்கிறது என்ற அச்சத்துடன்" சந்தைகள் "வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன மற்றும் அந்த… எண்ணெய் விலைகளது சரிவு உயர்-ஆதாய பங்குச் சந்தையில் கடன்செலுத்தமுடியாமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இட்டுச் செல்கிறது,” என்றார்.

இந்த அச்சங்கள், 2004 க்குப் பின்னர் முதல்முறையாக இலகு கச்சா எண்ணெய் விலை பரலுக்கு 35 டாலருக்குக் குறைந்து போய் இருப்பதுடனும், அதேபோல அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் அதன் மிகக் குறைந்த புள்ளியை எட்டி இருப்பதுடனும் இணைந்துள்ளது. வீழ்ச்சியடைந்துவரும் எண்ணெய் விலையானது, எரிசக்தித்துறை நிறுவனங்கள் வழியாக எரிசக்தித்துறை சந்தைகளை மற்றும் உயர்-ஆதாய அல்லது "பெறுமதியற்ற" பத்திர சந்தைகளை நேரடியாக பாதிக்கிறது. எண்ணெய் விலை வெறுமனே 18 மாதங்களுக்கு முன்னர் பரலுக்கு 100 டாலருக்கு அதிகமாக விற்பனையான போது, அத்தகைய சந்தைகளுக்குள் மலிவு பணம் பாய்ந்திருந்தது.

சீனாவின் மோசமடைந்துவரும் நிலைமையைப் பொருளாதார மற்றும் நிதியியல் அமைப்புமுறை இரண்டிலும் காண முடிகிறது. சீனாவின் வளர்ச்சி ஏற்கனவே ஒரு கால் நூற்றாண்டில் குறைந்த மட்டங்களுக்கு சரிந்துள்ளது, இதில் உற்பத்தித்துறை செயல்பாடுகள் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக குறைந்த வளர்ச்சியை அனுபவித்து வருகின்றன மற்றும்  ஏற்றுமதியும் கடந்த ஒவ்வொரு 15 மாதங்களாக சரிந்துள்ளது. ஆனால் கவலைக்கான ஒரு புதிய காரணம், சேவைகள் துறை 17 மாதங்களில் அதன் மிகக்குறைந்த வளர்ச்சியை அனுபவித்திருந்தது என்ற புதனன்று செய்திகளில் வெளிப்பட்டது. சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கையின்படி, அது அதிகளவில் சேவையை அடிப்படையிலான பொருளாரத்திற்கு மாறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனப் பங்குச்சந்தை மற்றும் நிதியியல்துறை கொந்தளிப்பு, இவை கடந்த ஆண்டு ஆகஸ்டில் உலக சந்தைகளையே உலுக்கி இருந்த நிலையில், மீண்டும் திரும்பி வந்துள்ளன. பங்கு வர்த்தகம் மீதான அரசாங்க கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஆகஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட தேதி நெருங்கிவிட்ட நிலையில் தான், வர்த்தகத்தின் முதல் நாளில் சந்தைகள் ஏறத்தாழ 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்து தன்னியக்கரீதியில் நிறைவடைந்தன.

ஐந்து மாதங்களுக்கு முந்தைய நெருக்கடியின் போது, அங்கே சீனச் செலாவணி ரென்மின்பியின் ஸ்திரப்பாடு பற்றிய கவலைகள் இருந்தன. ஐந்தாண்டுகளில் அது இப்போது அதன் குறைந்தபட்ச புள்ளியை எட்டியுள்ளது, அதேவேளையில் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்ட அதன் உள்நாட்டு சந்தை மதிப்பிற்கும் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதன் மதிப்பிற்கும் இடையிலான இடைவெளி சாதனை மட்டங்களுக்கு விரிவடைந்துள்ளது. ரென்மின்பியின் வெளிநாட்டு மதிப்பு இந்த வாரம் 2 சதவீதத்திற்கு அதிகமாக வீழ்ச்சி அடைந்தது இது ஆகஸ்டின் சம்பவங்களை நினைவூட்டுகின்றன. அப்போது அதன் திடீர் மதிப்பிறக்கம் உலக சந்தைகள் எங்கிலும் அதிர்வலைகளை அனுப்பின.

கோல்ட்மன் சாச்ஸ் இன் தலைமை ஆசிய-பசிபிக் மூலோபாயவாதி திமோதி மோ புதனன்று வெளியிட்ட ஓர் ஆய்வு குறிப்பில் பின்வருமாறு எழுதினார்: “டிசம்பரில் எமது முதலீட்டாளர் கூட்டத்தின் போது, ரென்மின்பியின் ஒரு கணிசமான மதிப்பிறக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொண்டிருந்ததே மிக முக்கிய அபாயமாக இருந்தது.”

அக்கவலைகள் இரண்டு அடுக்கிலானது: முதலாவதாக சீனச் செலாவணியின் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு ஆசிய மற்றும் ஏனைய செலாவணிகளின் மதிப்பிறக்கத்திற்கு இட்டுச் செல்லும், அது உலக பொருளாதாரம் முழுவதற்கும் பணச்சுருக்க அழுத்தங்களின் ஒரு புதிய அலையை அனுப்பும். இரண்டாவதாக, முக்கிய நிதியியல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சீனாவிலிருந்து அதிகளவிலான மூலதன வெளியேற்றங்களைத் தூண்டிவிடும்.

சீன மக்கள் வங்கி (PboC) அதன் உலகளாவிய செலாவணி கையிருப்புகள் கரைந்துவிடாமல் இருக்க, ரென்மின்பியின் சரிவைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில் நிதியியல் சந்தைகளில் தலையீடு செய்து வருகிறது. அதேவேளையில், சீனாவின் வர்த்தக நிலைமையை மேம்படுத்துவதற்காக செலாவணி மதிப்பு ஒரேசீராக சரிவதையும் PBoC விரும்புகிறது.

நிலைமை நிதியியல் ஆணையங்களின் கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருப்பதாக அங்கே கவலைகள் நிலவுகின்றன. கடந்த ஆகஸ்ட்டில், அவை ரென்மின்பியின் மதிப்பை முடிவடைந்த முந்தைய நாளுடன் இணைத்து வைக்க முடிவெடுத்ததன் மூலமாக அதன் மதிப்பைத் தீர்மானிக்கும் முறையை மாற்றி இருந்தன. ஆனால் செவ்வாயன்று நிறைவடைந்த விகிதத்தை விட PboC புதனன்று அதை கணிசமான அளவிற்கு கூடுதலாக நிர்ணயித்த போது, இப்புதிய விதிமுறை முறிந்துபோனது. நாளாந்தம் நிர்ணயிக்கும் நடைமுறை சந்தை கொந்தளிப்பை அதிகரிக்க மட்டுமே செய்யுமென்ற கவலைகளை இது உண்டாக்கியது.

பைனான்சியல் டைம்ஸ் விமர்சகர் ஹெவின் டேவிஷ் குறிப்பிடுகையில், ரென்மின்பியின் பெரியளவிலான மதிப்பிறக்க அபாயம் "மீண்டும் நிதியியல் சந்தைகளை அலைக்கழிக்கிறது. இது 2016 இல் உலகளாவிய அபாய சொத்துக்களது படுமோசமான நிச்சயமற்றத்தன்மை என்பதை நிதியியல் சந்தைகள் உறுதியாக நம்புகின்றன,” என்றார். புதிய ஆண்டு ஆரம்பத்திலிருந்து, “மிகப்பெரியளவிலான மதிப்பிறக்கத்திற்கான உள்வேலைகள் நடந்து கொண்டிருக்கலாம், அது சீன ஆணையங்களின் விருப்பத்தேர்வின் மூலமாக இருக்கலாம் அல்லது தனியார் மூலதன வெளியேற்றம் கட்டுப்பாட்டுக்கு வெளியே சென்று கொண்டிருப்பதால் இருக்கலாம் என்பதில் முதலீட்டாளர்கள் மிக அதிகளவில் கவலைப்படுகிறார்கள்.”

சீனா "ஒரு நிஜமான செலாவணி விகித நெருக்கடியால்" பாதிக்கப்படக்கூடும், “அதில் அதன் பாரிய அன்னிய செலாவணி கையிருப்புகள் விரைவிலேயே வற்றிப்போகக்கூடும்” என்றும் கூட சிலர் கவலைப்பட்டனர்.

ஏனைய எழுச்சியடைந்துவரும் சந்தைகளிலும் நிதியியல் ஸ்திரப்பாடு குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சந்தைகள் 3 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு "அளவுக்கு மிஞ்சி கடன்வாங்கி இருப்பதாக" சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுகிறது. இத்தகைய அளவுக்கு மிஞ்சிய கடன்சுமை மீது கடந்தகாலத்தைப் போல கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் அவற்றில் பெரும்பாலும் அரசாங்க துறையை விட பெருநிறுவனங்களில் குவிந்துள்ளன, ஆகவே இவை தேசிய அரசுகளின் கடன் நெருக்கடியின் அபாயம் குறைவாகவே உள்ளது என்பதே தற்போது  நிலவும் சம்பிரதாயமான விளக்கமளித்தலாக இருக்கின்றது.

ஆனால் பைனான்சியல் டைம்ஸில் புதனன்று வெளியான ஒரு கட்டுரையால் இந்த மறுநம்பிக்கை அளிக்கும் மதிப்பீட்டின் மீதான பிம்பமும் சந்தேகத்திற்கு உள்ளாகிறது. அது குறிப்பிட்டது, 800 பில்லியன் டாலருக்கு அதிகமான தேசிய கடன், அரசு இருப்புநிலை கணக்கில் வழமையாகக் காட்டப்படாமல் மறைமுகமாக அரசு உத்தரவாதம் வழங்கும் பத்திரங்களது பிரயோகத்தைக் கொண்டு மறைக்கப்பட்டு வந்தது. இத்தகைய "தேசிய அரசுகளின் பத்திரங்கள் போன்ற" பங்குகள் கடந்த 12 மாதங்களில் "2015 இன் இறுதி வாக்கில் எல்லா எழுச்சிபெற்றுவரும் சந்தை தேசிய அரசுகளின் கடனையும் கடந்துவிட்டதாக" அக்கட்டுரை குறிப்பிட்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உத்தியோகப்பூர்வ கடன், உலகளாவிய தரமுறைகளின்படி இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு மிக குறைவாக இருப்பதைப் போல தெரியும், ஆனால் ஒரு நெருக்கடி சமயத்தில் அவை சமாளிக்க வேண்டிய கடன்தொகை உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதை விட மிக அதிகமாக இருக்கும்.

மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார நிலைமையைப் புதனன்று வெளியான உலக வங்கி அறிக்கை ஒன்று அடிக்கோடிட்டுக் காட்டியது. வங்கிகளது வளர்ச்சி பற்றிய முன்உத்தேச மதிப்பீட்டை அது வரிசையாக மூன்றாவது ஆண்டும் வெட்டியிருந்தது. பிரேசில் மற்றும் ரஷ்யாவில் முன்உத்தேசிக்கப்பட்டதை விட அதிகமான சுருக்கங்கள், உலகின் பிரதான பொருளாதாரங்களின் குறைந்த வளர்ச்சி ஆகியவற்றுடன் சேர்ந்து, அதன் வளர்ச்சி முன்மதிப்பீட்டை 0.4 சதவீத புள்ளிகள் குறைத்து 2.9 சதவீதமாக ஆக்கியிருப்பதாக அது குறிப்பிட்டது. இருந்தாலும் இது 2015 க்கான 2.6 சதவீத கீழ்நோக்கிய திருத்திய மதிப்பீட்டிலிருந்து சற்றே அதிகம் என்று அந்த அறிக்கை ஒரு தெளிவற்ற கண்ணோட்டத்தை முன்வைத்தது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான அதன் முன்கணிப்புகளை உலக வங்கி ஒட்டுமொத்தமாக 0.5 சதவீத புள்ளிகளுக்கும் அதிகமாக குறைத்துள்ளது. இந்த மதிப்பீடு ஒரு சீரான சீன வளர்ச்சிக்குறைவு, பண்டங்களது விலைகள் ஸ்திரமாக இருத்தல் மற்றும் கடன்பெறும் செலவுகளில் படிப்படியான உயர்வு இருக்கும்பட்சத்தில் மட்டுமே முன்வைக்கப்படுவதாகவும் அது எச்சரித்தது. “இருந்தாலும் இந்த சகல அனுமானங்களும், குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய அபாயங்களுக்கும் உட்பட்டுள்ளன,” என்றது குறிப்பிடுகிறது.

அவ்வங்கி பிரதான அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளது வளர்ச்சியை மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கீழ்நோக்கி மறுதிருத்தம் செய்திருப்பதையும், 1980களுக்குப் பின்னர் இது முதல்முறையாக செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மீட்சிகள் எதிர்பார்க்கப்பட்டதை விட பலவீனமாக இருக்கின்றன, அதேவேளையில் மெதுவாகிவரும் உலக வர்த்தகம் ஒரு பாதிப்பைக் ஏற்படுத்தும் என்றது குறிப்பிட்டது.

சூழ்நிலையைத் தொகுத்து, அந்த வங்கியின் தலைமை பொருளியல் நிபுணர் கௌசிக் பாசு கூறுகையில், “அங்கே மேற்புறத்திற்கு அடியில் கடுமையான அபாயப்பகுதிகள் நிலவுகின்றன,” என்றார்.