ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතු කම්කරුවන්ට සහය පලකරන උද්ඝෝෂනයක් කොලඹ දී පවත්වයි

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

By our correspondent
13 October 2016

கொழும்பில், கடந்த வெள்ளிக்கிழமை நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்குமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இவர்கள், தோட்டங்களில் போதிய சம்பளம் கிடைக்காததாலும் தோட்டத் துறையில் கடுமையான வேலையின்மை காணப்படுவதாலும் வேலை தேடி கொழும்புக்கு இடம்பெயர்ந்துள்ள தோட்டத் தொழிலாளர் இளைஞர்கள் அல்லது வேலையற்ற தொழிலாளர்கள் ஆவர்.

மறியலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைப்பதற்கு தலையீடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருகின்ற, தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக தோட்ட உரிமையாளர்களும் தொழிற்சங்கங்களும் கைச்சாத்திடத் தயாராகும் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கோஷங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் செட்டிதெரு ஊடாக ஊர்வலம் சென்றனர். போலீஸ் ஊர்வலத்தை தடுக்க எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க தோட்டக் கம்பனிகள் நிராகரித்துள்ளமை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தை குழப்புவதற்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் மேற்கொள்ளும் முயற்சி சம்பந்தமாக, அவர்களுக்குள் ஏற்பட்ட கோபமும் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உண்மையான விருப்பமும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து வெளிப்பட்டது.

ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த மலையக சமூக ஆய்வு மையம், மலையக தமிழர் பண்பாட்டு பேரவை, புதிய பண்பாட்டு அமைப்பு, மலையக இளம் ஊடகவியலாளர் சங்கம் போன்றவற்றின் நோக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்கத் தலையிடுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் காத்திரமற்ற பிரச்சாரத்துக்கும் இந்து கோவிலில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து கடவுளிடம் மன்றாடும் பிற்போக்கு மத நம்பிக்கைக்குள்ளும் அவர்களைத் திருப்பிவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை ஆவியாக்கிவிடுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வதில் முன்நின்ற கத்தோலிக்க பாதிரியார் சக்திவேல், நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி உட்பட பல அமைப்புகளின் கூட்டான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராவார். இந்தக் கூட்டில் உள்ள கட்சிகள் மற்றும் அமைப்புக்கள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக பங்களிப்பு செய்துள்ளன. தொழிலாளர்களின் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை உயர்த்துதல் உட்பட பெரும் பொய்களைச் சொல்லி, இத்தகைய அமைப்புகளின் தோள்களில் ஏறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

எனினும், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், இராஜபக்ஷ அரசாங்கம் நிறுத்திய இடத்தில் இருந்து முன்சென்று, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ள மற்றும் ஆசியாவில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புடன் அணிதிரண்டுள்ள அரசாங்கமாகும்.

போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சக்திவேல், தோட்டத் தொழிலாளர்களின் “போராட்டத்துக்கு வலிமை சேர்ப்பதற்காக கொழும்பில் உள்ள அவர்களது உறவினர்கள் குரல் எழுப்புகின்றனர். இந்தக் குரல் நல்லாட்சி அரசாங்கத்திற்கு கேட்க வேண்டும். தொழிற்சங்கங்களுக்கு கேட்க வேண்டும். கம்பனிகளுக்கு கேட்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு கேட்க வேண்டும்," என பிரார்த்தித்த அவர், அதற்காக பிரச்சாரத்தை மேலும் “விரிவாக்குவதாகக்" கூறினார்.

தொழிலாளர்களது அல்லது அவர்களது உறவினர்களது குரலுக்கு செவி மடுக்க கம்பனிகள், தொழிற்சங்கங்கள் அல்லது அரசாங்கமோ தயாராக இல்லை. இந்த மூன்று தரப்பினரும், 730 ரூபா அற்ப ஊதியத்துக்கும், உழைப்புச் சுரண்டலை உக்கிரமாக்கும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டங்களுக்கும் தொழிலாளர்களை அடிபணியச் செய்யும் புதிய உடன்படிக்கையை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு முடிவு செய்துள்ளன.

இந்த அரச சார்பற்ற அமைப்புக்களின் எதிர்ப்புப் போராட்ட நடவடிக்கைகள், பெருந்தோட்டங்களில் முதலாளிகள் அமைக்கும் பொறிக்குள் தொழிலாளர்களை சிக்க வைக்க மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு முண்டு கொடுக்கின்றது. ஊதிய உரிமைகளை வென்றெடுக்க, சோசலிச வேலைத்திட்டத்துக்காக போராடுவதன் பேரில், தொழிலாளர்களின் சுயாதீனமான போராட்டமொன்றை ஏற்பாடு செய்வதற்கு இவை எதிராக அமைந்துள்ளன.


அணிவகுத்துச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு பகுதியினர்

உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞர்களும் தொழிலாளர்களும், தோட்ட கம்பனிகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் சம்பந்தமாக தமது கோபத்தை வெளிப்படுத்தியதோடு தாம் அனுபவிக்கும் கடினமான வாழ்க்கை நிலைமைகளையும் விளக்கினார்.

தனபாலசிங்கம் தலவாக்கலை லிந்துல தோட்டத்தில் இருந்து கொழும்பு வந்து ஊடகவியல் கற்கும் ஒரு மாணவர். தொழிற்சங்கங்கள் அழைத்தால் மட்டுமே தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தனர், ஆனால் இம்முறை பல தோட்டங்களில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியில் இருந்து போராட்டத்துக்கு வந்துள்ளனர் என அவர் கூறினார். "தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தொடந்தும் ஏமாற்றி, கம்பனிகளின் இலாபத்தை பாதுகாத்து வந்துள்ளன. இப்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் விலைவாசிக்கும் ஆயிரம் ரூபா போதுமா? இப்போது தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ முடியாது. தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று தொழிலாளர்களுக்கு சொல்லுவதில்லை. இது தொழிலாளர்களுக்கு மற்றொரு பொறியை அமைப்பதாகும்,” என அவர் கூறினார்.

அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கு அவசியமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று அக்கரப்பத்தனை லோவர் கிரன்லி தோட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் கூறினார். "முறையான போசாக்கு இல்லை. போதுமான சுகாதாரப் பாதுகாப்பு இல்லை. வீடுகளை திருத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. கடையில் 100 கிராம் தேயிலை 120 ரூபா. ஒரு கிலோ 1,200 ரூபா. தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு எத்தனை கிலோ கொழுந்து பறிக்கின்றனர்? 16-18 கிலோ பறிக்கின்றனர். இலாபம் கம்பனிக்குப் போய்ச் சேருகிறது. ஏன் 1,000 ரூபா கொடுக்க முடியாது? பறிக்கும் கொழுந்திலும் தண்ணீர் பாரம் என்று மூன்று கிலோவை வெட்டி விடுகின்றனர். தொழிற்சங்கங்கள் எப்போதும் மக்களை ஏமாற்றி வந்துள்ளன. மக்களின் குறைகளைக் கேட்க உங்களுக்கு நேரம் போதாது," என அவர் கூறினார்.

பி. ஆனந்தன், கொட்டகலை கிறிஸ்லெஸ்ஃபாம் தோட்டத்தில் இருந்து வந்த வாலிபர். 2008ல் கொழும்புக்கு வந்த அவர், முச்சக்கர வண்டி ஓட்டுகிறார். அவரது உடன்பிறப்புக்கள் தோட்டத்தில் வேலை செய்கின்றனர். "தாய்மார் பிள்ளைகளை காலை 7:30க்கு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் விட்டுவிட்டு, 12 மணி வரை வேலை செய்து பின்னர் மீண்டும் பிள்ளையை அழைத்துச் செல்ல வேண்டும். சாப்பாடு கொடுத்துவிட்டு பின்னர் மீண்டும் விட்டுச் செல்வர். மாலை 4-5 மணி வரை வேலை செய்ய வேண்டும். அட்டை கடிக்கின்றது, தோட்டத்துக்குள் நரி வருகின்றது, குளவிகள் கொட்டுகின்றன. போதாததற்கு புலியும் வருகின்றது. இவ்வளவு துன்பங்களையும் தாங்கிக்கொண்டு வேலை செய்தாலும் வாழ்க்கைக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதில்ல," என ஆனந்தன் தெரிவித்தார்.

புத்திக, கண்டி கடுகஸ்தொட தோட்டத்து இளைஞர். அவருக்கு 24 வயது. பெற்றோர் தோட்டத்தில் வேலை செய்து பெறும் ஊதியம் குடும்ப பராமரிப்புக்கு போதாமையினால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சிறு வயதிலேயே வேலை தேடத் தள்ளப்பட்டதாக அவர் கூறினார். "நான் நகரத்தில் மூட்டை சுமக்கிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை அம்மாவுக்கும் தங்கைக்கும் அனுப்புகிறேன். பணம் இல்லாததால் சகோதரியின் பிள்ளைகள் அடிக்கடி பாடசாலை போவதில்லை. அரசாங்கம் விலைவாசியை அதிகரித்துக்கொண்டே போகின்றது. எங்களுக்கு சரியான வீடு கூட இல்லை. ஓலையால் கூரை போட்ட பலகை வீட்டிலேயே நாம் இருக்கின்றோம்.”

சுந்தர்ராஜன் (69) ஹட்டன் மார்ஸ்க் தோட்டத்தின் ஓய்வுபெற்ற தொழிலாளி. வேறு வருமானங்கள் இல்லாததால் அவர் கொழும்புக்கு வந்து ஒரு தனியார் பாதுகாப்பு சேவையில் வேலை செய்கின்றார். "மனைவிக்கு நடக்க முடியாது. அவரால் தொழில் செய்ய முடியாது. காவலாளி வேலையில் மாதம் ரூபா 16,000 கிடைக்கும். அவர்களும் எங்களைச் சுரண்டுகின்றனர். ஆனாலும் வாழ்வதற்கு ஒரு வேலை வேண்டும் என்பதால் அதைச் செய்கிறேன். எங்கள் வீடு ஒரு லயின் (வரிசை) அறை. கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதிகள் கிடையாது. எனது பிள்ளைகளுக்கும் இதே கதிதான். அவர்களின் பிள்ளைகளை பராமரிப்பதும் பாடசாலை அனுப்புவதும் இந்த அற்பத் தொகையில் தான். தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டேன்."

சந்திரமோகன் 30 வயது இளைஞர். அவர் கொழும்பில் எண்ணெய் வியாபார நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்கின்றார். அவர் பசறை கோனகல தோட்டத்தைச் சேர்ந்தவர். அவர் 1994ல் கொழும்புக்கு வேலை தேடி வந்துள்ளார். “வீட்டுக் கஸ்டத்தினால் 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலை தேடி கொழும்பு வந்துவிட்டேன். குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர். மூன்று பேர் தோட்டத்தில் வேலை செய்கின்றனர். எனக்கு இங்கே நாள் சம்பளம் 1,000 ரூபா. முடிந்தால் வேறு ஏதாவது வேலை செய்வேன். அந்த வருமானத்தில் என் செலவையும் பார்த்துக்கொண்டு வீட்டுக்கு எவ்வளவாவது அனுப்புவேன். இப்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுப்பதாக கூறும் 730 ரூபா சம்பளம் போதாது. குறைந்தபட்சம் 1,000 கிடைக்கும் வரையாவது போராட வேண்டும்.”

யடியந்தோட்டையைச் சேர்ந்த டி. ரவிந்திரநாதன் கொழும்பு 4ம் குறுக்குத் தெருவில் கடையொன்றில் வேலை செய்கின்றார். “1,000 ரூபா கொடுத்தாலும் அது ஒரு பெரிய சம்பளம் அல்ல. சின்ன சின்ன பொருட்களை வாங்கினாலே அது முடிந்துவிடும். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதில்லை. அவர்கள் பணம் சம்பாதிக்கும் வர்த்தகம் ஒன்றையே நடத்துகின்றனர். அதற்காக அவர்களுக்கு இடையில் போட்டி இருக்கின்றது. தமக்கு கிடைக்கும் அரசியல் இலாபத்தையிட்டே அவர்கள் அக்கறை கொள்கின்றனர்,” என அவர் தெரிவித்தார்.

பி. யோகேஸ் மற்றும் ஏ. சுதாகரனும் நாவலப்பிட்டி மற்றும் யட்டியன்தொட பிரதேசங்களைச் சேர்ந்த தோட்டப்புற இளைஞர்கள். தோட்டத் தொழிலாளர்களால் அதிகரிக்கும் விலை வாசியை தாங்க முடியாது என்று அவர்கள் கூறினர். தோட்டத் தொழிலாளர்களே பெருமளவிலான வெளிநாட்டு வருவாயை சம்பாதித்துக் கொடுத்தலும், அவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியமோ அடிப்படை வசதிகளோ கிடையாது என்று அவர்கள் தெரிவித்தனர். "தோட்டங்களை நகரம் மற்றும் பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது பெரும் குறைபாடு இருக்கின்றது. கல்வி வசதி மிகவும் குறைவு. தொழிலாளர் துன்பப்படுகின்றனர். இலாபத்தை சூறையாடும் கம்பனிக்காரர்களோ சொகுசு வாகனங்களில் பயணிக்கின்றனர்," என அவர்கள் மேலும் கூறினர்.

யட்டியன்தொடயில் இருந்து அவரது கந்தலோயா தோட்டத்திற்கு செல்ல இரண்டு மணி நேரம் எடுக்கும் என சுதாகரன் கூறினார். "தோட்டத்திற்கு செல்வதற்கு ஒழுங்கான பாதை இல்லை. ஆற்றைக் கடக்க உள்ள பாலம் உடைந்து போயுள்ளது. பயணிகளை இறக்கவிட்டுத்தான் பஸ்சுகள் பாலத்தை கடக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் தோட்டத்தில் வேலை இருக்கிறது. தொழிலாளர்கள் ஏனைய நாட்களில் அயல் கிராமங்களுக்கு கூலி வேலை தேடி செல்கின்றனர். தொழிற்சாலையை மூடிவிட்டனர். நிர்வாகம் தோட்டத்தை சரியாக பராமரிப்பதில்லை. தொழிற்சங்கங்கள் பெயருக்கு மட்டுமே. அந்தப் பக்கம் வருவதே இல்லை. சந்தாப் பணத்தை குறைவில்லாமல் ஊதியத்தில் வெட்டிக்கொள்கின்றனர். ’நல்லாட்சி’ அரசாங்கம் தொழிலாளர்களின் வாக்குகளிலேயே ஆட்சிக்கு வந்தது. ஆனால் எந்த பயனும் இல்லை. இந்த ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.