ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The November 5 conference, “Socialism vs. Capitalism and War,” and the building of a new movement against imperialist war

நவம்பர் 5 “சோசலிசம் Vs. முதலாளித்துவம் மற்றும் போர்” கருத்தரங்கும், ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு புதிய இயக்கத்தைக் கட்டியெழுப்புதலும்

Eric London and Joseph Kishore
12 October 2016

சோசலிச சமத்துவக் கட்சியும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) மிச்சிகன் மாகாணம் டெட்ராயிட் நகரில் உள்ள வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Wayne State University) நவம்பர் 5 அன்று “சோசலிசம் Vs. முதலாளித்துவம் மற்றும் போர்” என்ற ஒரு போர்-எதிர்ப்பு கருத்தரங்கை நடத்துகின்றன. போரின் பெருகும் அபாயத்தை ஆய்வு செய்வதும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு இயக்கத்திற்கான அரசியல் அடித்தளங்களை அமைப்பதும் இந்தக் கருத்தரங்கின் நோக்கமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிந்து கொண்டே செல்லும் போர் உந்துதலை மையமாய் கொண்டு ஒரு தீவிரமான புவியரசியல் நெருக்கடி எழுந்திருப்பதன் மத்தியில் இந்த கருத்தரங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாய் அமெரிக்கா நடத்தியிருக்கக் கூடிய கால் நூற்றாண்டு காலப் போர்களும், பதினைந்து ஆண்டு கால “பயங்கரவாதத்தின் மீதான போரும்” அமெரிக்காவின் மிகப்பெரும் புவியரசியல் எதிரிகளுடனான ஒரு நேரடி மோதலாக, பலரும் அறிந்திருப்பதை விடவும் மிகத் துரிதமான வேகத்தில், உருமாற்றம் கண்டு வருகின்றன.

அமெரிக்க தேர்தலுக்கு முந்தைய இந்த இறுதி வாரங்களில், ஒபாமா நிர்வாகம் சிரியாவில் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கை அதிகரிப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்ற அதேசமயத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான தனது பிரச்சாரத்தை ஏககாலத்தில் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. சிரியாவில் “பறக்கத் தடை விதிக்கப்பட்ட வலயம்” அமைக்க - இது ரஷ்யாவுடனான ஒரு போரில் சென்று முடியத்தக்கது என்பதை அமெரிக்க இராணுவத் தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் - ஞாயிறன்று நடந்த நகர அரங்கு ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

சென்ற வாரத்தில், வாஷிங்டன் டிசியில் நடந்த அமெரிக்க இராணுவ கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டில் —இந்த நிகழ்வு ஏறக்குறைய அமெரிக்க ஊடகங்களால் பேசப்படாததாய் இருந்தது— ஒன்றுகூடியிருந்த அமெரிக்க அதிகாரிகள் மூர்க்கத்தனமான மிரட்டல்களை விடுத்ததோடு இராணுவம் பாரிய அளவில் விரிவாக்கப்படுவதற்கும் கோரினர்.

இராணுவத்தின் படைத் தலைவரான மார்க் மிலி கூறுகையில், வருங்காலத்தில் பெரும் தேசிய-அரசுகள் பங்குபெறுகின்ற ஒரு போர் “ஏறக்குறைய நிச்சயமானதாக இருக்கிறது” என்றார். “அமெரிக்காவை எதிர்ப்பதற்கு முயல்பவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு நாங்கள் சொல்வது, நாங்கள் உங்களைத் தடுத்து நிறுத்தி, முன்னெப்போது நீங்கள் தோற்கடிக்கப்பட்டதை விடவும் கடுமையாக உங்களைத் தோற்கடிப்போம்” என்று அறிவித்தார்.

துணை பாதுகாப்புச் செயலரான ரோபர்ட் வேர்க் (Robert Work) விடுத்த எச்சரிக்கையில், “எங்களை வெளியில் நிறுத்தி வைக்கலாம் என்று கருதுகின்ற எதிரிகள்” எவரையும் “மூக்குடைப்பதற்கு” அமெரிக்க இராணுவம் தயாரிப்புடன் இருக்கிறது என்றார். மேஜர் ஜெனரல் வில்லியம் ஹிக்ஸ் பேசுகையில், “அண்மை எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு வழமையான மோதலானது அபாயகரமானதாகவும் வேகமானதாகவும் இருக்கும்” என்றார். “கொரியாவுக்குப் பின்னர் அமெரிக்க இராணுவம் கண்டிராத வீச்சிலான வன்முறைக்கு” தயாரித்துக் கொள்வதற்கு இராணுவ அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

இந்த தீவிரமான போர் அபாயமானது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஏறக்குறைய முற்றிலும் விடுபட்டதாக இருப்பதோடு அமெரிக்காவில் அரசியல் “இடது” என தன்னைக் காட்டிக் கொள்கின்றவர்களாலும் ஏறக்குறைய உதாசீனப்படுத்தப்படுவதாய் இருக்கிறது. ஒபாமாவின் கீழான எட்டு ஆண்டுகள் உட்பட —இரண்டு முறை பதவிக்காலத்தில் இருந்த சமயம் முழுமையாக தொடர்ந்து நாட்டை போரில் ஈடுபடுத்தியிருந்த முதல் ஜனாதிபதி— கால்நூற்றாண்டு காலம் முடிவில்லாத போர் நடத்தியிருந்ததன் பின்னரும் கூட செயல்பாட்டு நிலையிலான எந்த போர்-எதிர்ப்பு இயக்கமும் இல்லாதிருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியும் IYSSE ம் அழைப்பு விடுத்திருக்கக் கூடிய கருத்தரங்கு மட்டுமே ஏகாதிபத்தியப் போருக்கான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்காக நடைபெறுகின்ற ஒரே முயற்சியாகும். விளக்க அவசியமாக இருக்கும் ஒரு அசாதாரணமான உண்மையாக இது இருக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட போர்-எதிர்ப்பு இயக்கம் காணாமல் போனதை எப்படி கணக்கில் எடுப்பது? அமெரிக்க மற்றும் உலக மக்கள் போர்-ஆதரவாளர்களாக மாறி விடவில்லை. 2003 இல் ஈராக் மீதான படையெடுப்புக்கு முன்னதாக நூறாயிரக்கணக்கில், சில சந்தர்ப்பங்களில் மில்லியன்கணக்கிலும் கூட, வெடித்தெழுந்த போரெதிர்ப்பு மனோநிலை மறைந்து விட்டிருக்கவில்லை. மாறாக, பெரும்பாலும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை கொடுத்திருந்த அமைப்புகள் ஏகாதிபத்திய தலையீட்டின் மிக ஆர்வமான ஆலோசகர்களாகவும் வக்காலத்துவாதிகளாகவும் ஆகி விட்டிருக்கின்றன.

இந்த சக்திகள் முன்வைக்கின்ற வாதங்களது ஒரு உதாரணமாக, “சுயாதீனமான சோசலிச மன்றம்” (independent socialist forum) என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற புதிய அரசியல் என்ற வலைத் தளத்தில் ஸ்டான்லி ஹெல்லர் எழுதி வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையை காணலாம். புதிய அரசியலின் ஸ்தாபக ஆசிரியர்களாக இருக்கும் ஜூலியஸ் மற்றும் பில்லிஸ் ஜாகப்சன் இருவரும் மாக்ஸ் சாச்ட்மனின் — இவர் 1940 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து முறித்துக் கொண்டு பின்னாளில் கொரியா மற்றும் வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டின் ஒரு பெரும் ஆதரவாளராக ஆனார்— அரசியல் சகாக்களாக இருந்தவர்களாவர். புதிய அரசியல் ஆசிரியர் குழுவில் பலதரப்பட்ட போலி-இடது அமைப்புகளின் அங்கத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

"அலெப்போ மற்றும் சிரியாவிற்கான ஆவேசம்” என்ற செப்டம்பர் 28 அன்றான அவரது கட்டுரையில் ஹெல்லர், “இது ஏதோ 2003 போன்றும் ஒவ்வொருவரும் மேற்கத்திய ஏகாதிபத்திய சாகசங்கள் மீது கவனம் குவிக்க வேண்டும் என்பது போன்றும் நடந்து கொள்கின்றவர்களை” தாக்கினார். “...இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரதான படுகொலைக்கும் ‘சாம்ராஜ்யத்திற்கும்’ அதிக சம்பந்தமில்லை.”

பிரச்சினை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் அல்ல, மாறாக பஷார் அல்-அசாத்தின் அரசாங்கம்தான் என்று ஹெல்லர் வலியுறுத்துகிறார். “அவருக்கு ஒரு அரை-பாசிச நாடு (ரஷ்யாவைக் குறிப்பிடுகிறார்], மற்றும் இன்னொரு மத அடிப்படையிலான நாடு [ஈரான்] ஆகிய வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து உதவியும் [சில விதங்களில் உத்தரவும்] கிடைக்கிறது.” சிரியாவில் சிஐஏ ஆதரவுடன் நடக்கின்ற நடவடிக்கைகளை எதிர்க்கின்ற எவரொருவரையும், அசாத் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஒரு ஆதரவாளராக அவர் குரூரப்படுத்துகிறார்.

ஈராக்கிலான அமெரிக்காவின் போரில் இருந்தான மிக மோசமான பிரச்சாரத்தை மீண்டும் கையிலெடுக்கும் ஹெல்லர், சிரியாவில் அமெரிக்க தலையீட்டுக்கு வெகுஜன ஆதரவு இருப்பதாய் கண்டறிந்து சொல்கிறார். “சிரிய மக்கள் பல ஆண்டுகளாகவே பறக்கத் தடை விதிக்கப்பட்ட ஒரு வலயத்தைக் கோரி வருகின்றனர்” என்றார் அவர். “NFZ [பறக்கத் தடைவிதிக்கப்பட்ட வலயம்] கோருகின்ற எவரொருவரையும் ‘பென்டகனின் முகவர்’ என்று குரூரப்படுத்திக் காட்டுகின்ற ‘ஏகாதிபத்திய-விரோத’ இடதுகள் எனக்கு வெறுப்பூட்டுகின்றனர்” என்று அவர் எழுதுகிறார்.

“ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களின் மீது” குறிப்பாக கிளிண்டன் மீது, சிரியாவில் ஒரு கூடுதல் மூர்க்கமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அழுத்தமளிக்க வேண்டும் என்று “அமைதி இயக்க”த்திற்கு அழைப்பு விடுத்து ஹெல்லர் நிறைவு செய்கிறார். ”ஹிலாரி கிளிண்டன் மட்டுமே”, ஒரு பறக்கத் தடை கொண்ட வலயத்தை ஆதரிப்பது உள்ளிட “சிரியாவின் அப்பாவி மக்களை பாதுகாப்பதற்கு ஏதேனும் செய்வது குறித்த மனோநிலை எதனையும் வெளிப்படுத்துகிறார்” என்று அவர் எழுதுகிறார். ஆயினும், கிளிண்டன் வெற்றி பெற்றாலும் கூட, அவர் “ஜனவரி வரையிலும் பதவியில் அமர்வதற்கு முடியாது” என்று முணுமுணுக்கிறார்.

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) அங்கமான சோசலிஸ்ட் தொழிலாளி (Socialist Worker) பத்திரிகைக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் எழுதி வருபவரான ஹெல்லர், “அமைதி இயக்கத்திற்கு புத்துயிரூட்டுவோம்” (“Revive the Peace Movement”) என்ற பொருத்தமில்லா பெயர் கொண்ட ஒரு குழுவின் தலைவரும் ஆவார். இக்குழு, ISO, CODEPINK, மத்திய கிழக்கு நெருக்கடிக் குழு, மற்றும் பல்வேறு பிற குழுக்களால் வழிமொழியப்பட்டதாகும். அமைதி இயக்கத்திற்கு புத்துயிரூட்டுவோம் குழு சமீபத்தில் “சிரியா தொடர்பான ஒரு பகிரங்கக் கடிதம்” ஒன்றையும் வெளியிட்டது. ஹெல்லர் மேற்கூறப்பட்ட தனது கட்டுரையில் இக்கடிதத்தைக் குறிப்பிடுகிறார்.

சென்ற மாதத்தில் தோல்வியடைந்த சண்டைநிறுத்தத்திற்காக ஒபாமா நிர்வாகத்தின் மீது தாக்குதல் நடத்துவது தான் இந்தக் கடிதத்தின் மையப் பொருளாய் இருக்கிறது. அது அசாத்திற்கு எதிரான பிரச்சாரத்தை பலவீனப்படுத்தும் என்று அது கூறுகிறது. “கெர்ரி-லாவ்ரோவ் உடன்பாட்டின்” கீழ் “அசாத்தை பதவியில் தொடர்ந்து பராமரிப்பதற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படும்” என்று அந்தக் கடிதம் தெரிவிக்கிறது.

இந்தக் கடிதத்தில் ஒரு மிகப் பரந்த கூட்டணி கையெழுத்திட்டிருந்தது. ISO இன் ஆஷ்லி ஸ்மித்; Against The Current இன் நிர்வாக இயக்குநரான டேவிட் ஃபிங்கெல்; பசுமைக் கட்சியின் ஹவி ஹாக்கின்ஸ்; அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான பிரச்சார அமைப்பின் இணை-இயக்குநரான ஜோன் லாண்டி; செய்திகள் மற்றும் கடிதங்கள் குழுவின் ஃபிரெட் மெக்லென்பெர்க்; புதிய அரசியல் பத்திரிகையின் இணை-ஆசிரியரும் Solidarity அமைப்பின் முன்னணி உறுப்பினருமான டான் லா போட்ஸ் மற்றும் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்துடன் ஒற்றுமையுணர்வு கொண்ட போரெதிர்ப்புக் குழுவின் பிரதிநிதிகள், Black Lives Matter உடன் இணைந்த “Moral Mondays’ குழு, மற்றும் பலரும் இதில் அடங்குவர்.

இந்தப் பட்டியல் அமெரிக்காவில் உள்ள ஏறக்குறைய ஒட்டுமொத்தமான போலி-இடதுகளையும் கொண்டிருக்கின்றது. இதன் கீழ்வரும் அமைப்புகள் மார்க்சிசத்தை நோக்கிய எதிர்ப்பிலும், தொழிலாள வர்க்கத்தை நோக்கிய குரோதத்திலும் தாங்கள் கொண்டிருக்கும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு தகாத உறவைப் பராமரித்து வருபவையாகும். பல்வேறு சாச்ட்மன்வாத அமைப்புகளின் ஒரு கலவையான Solidarity ஆல் Against the Current வெளியிடப்படுகிறது. 1950களின் ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட பப்லோவாதப் போக்கினால் வெளியிடப்படுகின்ற சர்வதேச கண்ணோட்டம் [International Viewpoint] பத்திரிகையுடன் ஒரு அரசியல் தொடர்பையும் இது பராமரித்து வருகிறது. ISO சாச்ட்மன்வாத அரசியலின் இன்னுமொரு கிளையாகும். செய்திகள் மற்றும் கடிதங்கள் [News and Letters] Raya Dunayevskaya மற்றும் CLR James ஆகியோரின் “மார்க்சிச மனிதநேயம்” இல் தனது தோற்றுவாய்களைக் கொண்டிருக்கிறது.

ஃபிங்கெல், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் - இது 1963 இல் பப்லோவாதிகளுடன் மறுஇணைவு கண்டு, அதற்கு அடுத்து வந்த ஆண்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கஸ் லீக்கை உருவாக்கவிருந்த போக்கினை வெளியேற்றியது - ஒரு முன்னாள் உறுப்பினராவார். International Viewpoint இன் பின்னால் இருக்கின்ற பிரதான அமைப்பான புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்பவரான ஜில்பேர் அஷ்கார் உடன் ஃபிங்கெல் சமீபத்தில் நேர்காணல் செய்தார். அஷ்கார், உலக சோசலிச வலைத் தளம் சமீபத்தில் குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, ISO வின் ஆஷ்லி ஸ்மித்துடன் இணைந்து, சிரியாவில் தலையீட்டுக்கான ஒரு முன்னணிப் பிரச்சாரகராக இருப்பவரும், அத்துடன் லிபியாவில் போரை ஆதரித்து நின்றவரும் ஆவார்.

இந்த பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திடாத போலி-இடது குழுக்கள் அதில் கூறப்பட்டிருந்த கோட்பாடுகளுக்கு எதிர்ப்புக் காட்டி அதில் இருந்து ஒதுங்கவில்லை. உதாரணமாக, சோசலிச மாற்று அமைப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான மறைப்பாக அதன் போர் உந்துதலையே அலட்சியம் செய்து வந்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தொடர்பாக செப்டம்பர் 4 அன்று வெளியான அதன் கட்டுரை, போர் அபாயத்தை தணித்துக் காட்டுவதோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகை நம்பிக்கைவாதம் கொண்டிருப்பது போன்ற ஒரு சித்திரத்தை வரைந்து காட்டுகிறது. “ஈராக்கை விடுங்கள், சிரியாவில் இந்த சமயத்தில் ஒரு முழுவீச்சிலான இராணுவத் தலையீடு என்பது, அரசியல்ரீதியாக அவர்களுக்கு [அமெரிக்காவுக்கு] சிந்தித்துப் பார்க்க முடியாததாகும்” என்று சோசலிச மாற்று எழுதுகிறது. இதே அமைப்பின் முந்தைய கட்டுரை ஒன்றில், “களத்தில் பூட்ஸ் கால்களை இறக்குவதற்கு அமெரிக்க அரசியல்வாதிகள் பெரும் தயக்கம்” கொண்டிருப்பதாகக் கூறியது.

இப்போதைய நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுமார் 1,000 தளங்களில் நூறாயிரக்கணக்கிலான படையினர்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்ற உண்மை நிலையிலும் கூட இத்தகைய கருத்துகள் வெளியிடப்படுகின்றன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாகவே, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது வெளிநாடுகளில் முற்றிலும் பொறுப்பற்ற தன்மையுடன் இராணுவ சாகசங்களை மேற்கொள்வதையே அடிப்படையாகக் கொண்டிருந்து வந்திருக்கிறது. சிரியாவின் விடயத்தில் அமெரிக்கா, அல்கெய்தாவுடன் இணைந்த அல்-நுஸ்ரா முன்னணி மற்றும் பிற பினாமி இஸ்லாமியப் படைகளுடன் அறிவிக்கப்படாத ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாய் அந்நாட்டின் மீது குண்டுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அங்கு ஆட்சியை மாற்றுவதற்காக அமெரிக்கா முன்னெடுத்த போரானது நூறாயிரக்கணக்கிலான சிரியர்களை படுகொலை செய்திருப்பதோடு மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக்கியிருக்கிறது. சிரியா ஏறக்குறைய முற்றிலுமாய் சேதப்படுத்தப்பட்டதற்கு பிரதான பொறுப்பு அமெரிக்காவினுடையதே ஆகும்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முதனிலைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சோசலிச மாற்று அமைப்பானது ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பேர்னி சாண்டர்ஸ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பிரச்சாரத்தை ஊக்குவிப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு “சோசலிச” எதிரியாகக் காட்டிக் கொண்ட சாண்டர்ஸ், தனது முதனிலைப் பிரச்சாரம் முழுமையிலும் ஒபாமாவின் போர்க் கொள்கைக்கான தனது முழுமையான ஆதரவை வழங்கினார். இப்போது அவர், பெருமளவில் ரஷ்ய-விரோதத்தை கிளறி விடுவதன் அடிப்படையில் போட்டியிடுபவரும், சிரியாவில் ஆசாத் மற்றும் ரஷ்யாவின் படைகளுக்கு எதிரான இராணுவத் தீவிரப்படுத்தலை அறிவுறுத்திக் கொண்டிருப்பவருமான கிளிண்டனுக்கு உற்சாகத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

போலி-இடதின் ஏகாதிபத்திய-ஆதரவு நோக்குநிலை என்பது அடிப்படையாக தவறான சிந்தனைகளின் விளைபொருளோ அல்லது ஏதேனும் ஒரு தனிப்பட்ட அரசியல்வாதியின் இற்றுப்போன அரசியலின் விளைபொருளோ அல்ல. இந்த அமைப்புகளின் கருத்தொற்றுமையானது அவற்றின் வர்க்க நலன்களை வெளிப்படுத்துகிறது.

அவை முதலாளித்துவ அரசியலின் ஒரு கன்னையைக் கொண்டிருக்கின்றன. மேல் மட்டத்தில் இருக்கும் 10 சதவீதம் பேரின் செல்வத்தில் தமக்கான ஒரு கூடுதல் பெரிய பங்கையும், அத்துடன் பெருநிறுவன உயரடுக்கிலும், தொழிற்சங்க எந்திரத்திலும் மற்றும் அரசிலும் கூடுதல் செல்வாக்கையும் அதிகாரத்தையும் விரும்புகின்ற தனிச்சலுகை பெற்ற நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக அவை பேசுகின்றன. மக்கள்தொகையில் மேல்மட்டத்தில் சுமார் 10 முதல் 1 சதவீதம் வரை இருக்கக் கூடிய உயர் நடுத்தர வர்க்கமானது, 2008க்குப் பிந்தைய பங்குச் சந்தை எழுச்சியில் - இதுவும் கூட வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தையும் சொந்த நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஊதிய வெட்டுகளையுமே நம்பியிருக்கிறது - மிகப் பெருமளவில் ஆதாயமடைந்திருக்கிறது. போலி-இடதுகள், தீவிரப்பட்ட மற்றும் “சோசலிச” சொல்லாடல்களைப் பயன்படுத்துவதென்பது அதன் போர்-ஆதரவு மற்றும் முதலாளித்துவ ஆதரவு நோக்குநிலையை இருட்டடிப்பு செய்வதற்காய் நோக்கம் கொண்டிருக்கிறது.

ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதென்பது, போலி-இடதுகளின் துரோக அரசியலுக்கு எதிராய் தொழிலாளர்களும், மாணவர்களும் மற்றும் இளைஞர்களும் கையிலெடுத்தாக வேண்டியிருக்கும் மிக அவசரமான அரசியல் பணியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிப்ரவரி 18, 2016 அன்று வெளியிட்ட “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற அறிக்கையில் வலியுறுத்தியிருந்தவாறாக, “இத்தகையதொரு இயக்கமானது சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம் மக்களின் அத்தனை முற்போக்கான கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்.” போருக்கு எதிரான போராட்டமானது சர்வதேசரீதியானதாகவும், சோசலிசத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாக சுயாதீனப்பட்டதாகவும் அவற்றுக்குக் குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.

ICFI மட்டுமே போருக்கான எதிர்ப்பை அணிதிரட்டுகின்ற ஒரே அமைப்பாய் இருக்கிறது, ஏனென்றால் அது மட்டுமே உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்காகவும் முன்னோக்கிற்காகவும் போராடுகின்ற ஒரே அமைப்பாகும். போரை உருவாக்குகின்ற அதே முதலாளித்துவ நெருக்கடி தான் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் போருக்கு முடிவு கட்டுவதற்கான புறநிலை அடித்தளத்தையும் உருவாக்குகிறது. உலகெங்கிலுமான தொழிலாளர்களின் கோபமும் எதிர்ப்பும் அரசியல்ரீதியாக அணிதிரட்டப்பட்டு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கத்தில் செலுத்தப்பட்டாக வேண்டும். ஒரு அரசியல் தலைமை கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும், அந்த நோக்கத்திற்காகத் தான் SEPம் IYSSEம் டெட்ராயிட்டில் நவம்பர் 5 கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

வம்பர் 5, சோசலிசம் Vs முதலாளித்துவம் மற்றும் போர் கருத்தரங்கு குறித்த கூடுதல் தகவல்களுக்கும் அதற்கு பதிவு செய்வதற்கும், இங்கே கிளிக் செய்யவும்.