ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Divisions grow at EU summit over trans-Atlantic trade, war drive against Russia

அட்லாண்டிக் கடந்த வர்த்தகம் தொடர்பாகவும் ரஷ்யாவுக்கு எதிரான போர் உந்துதல் தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பிளவுகள் பெருகுகின்றன

By Alex Lantier
22 October 2016

சிரியாவிலான போர், கனடாவுடனான திறம்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உடன்படிக்கை (CETA), மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது ஆகியவை தொடர்பில் எந்த உடன்பாடும் ஏற்படாமல் புரூசெல்ஸில் நடந்த இரண்டுநாள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு நேற்று முடிவடைந்தது.

இந்த கோடையில் நடந்த பிரிட்டன் வெளியேறும் வாக்களிப்பானது ஐரோப்பிய ஒன்றியம் சிதறுவதில் ஒரு முக்கியமான அடியைக் குறித்தது என்பது முன்னினும் தெளிவாகியிருக்கிறது. பல பிரச்சினைகளால், எல்லாவற்றுக்கும் மேல் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் முனைப்பு தொடர்பான மற்றும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகள் தொடர்பான பிரச்சினைகளால் கிழிபட்டு, ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை விடயத்தில் ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டுவதற்கு மட்டுமல்ல, அதன் உறுப்பு நாடுகளிடையே அதிகரித்திருக்கும் கூர்மையான பதட்டங்களை மறைப்பதற்கும் கூட திறனற்றதாக இருக்கிறது.

ஏற்கனவே மரணப்படுக்கையில் இருக்கின்ற ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தை இன்னும் முடக்கிப் போடுவதற்கு அச்சுறுத்துகின்ற சிரியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்கா அளிக்கும் அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரிக்கும் என்பதை திங்களன்று நடந்த வெளியுறவு அமைச்சர்களின் உச்சிமாநாடு எடுத்துக்காட்டியது. இருந்தபோதிலும் கூட ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், அலெப்போவில் நேட்டோ ஆதரவு எதிர்ப்படைகள் மீது ரஷ்யா குண்டுவீசுவதை இரட்டைவேடரீதியில் கண்டனம் செய்கிறதும் அத்துடன் வருங்காலத்தில் ஏதோவொரு சமயத்தில் ரஷ்யாவுக்கு எதிரான கூடுதல் தடைகளை விதிப்பதான சாத்தியத்தை குறிப்பிடுகிறதுமான ஒரு ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்தை நெருக்கிக் கொண்டுவந்து விட நம்பிக்கை கொண்டிருந்தன. ஆனால் இத்தாலிய பிரதமர் மாத்தியோ ரென்ஸியிடம் இருந்து வந்த எதிர்ப்பின் காரணத்தால் இது தோல்வியடைந்தது.

வியாழன் இரவு நீண்ட விவாதங்கள் நடந்தேறியதன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சிரியா மற்றும் ரஷ்யா மீதான தங்களது முரண்பாடான நிலைப்பாடுகளை முன்வைப்பதற்காய் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்குப் பின்னர் வெளியில் வந்தனர்.

இத்தாலிய வங்கியமைப்புமுறை ஒரு பொறிவின் விளிம்பில் நிற்கின்ற நிலையிலும் அத்துடன் டிசம்பர் 4 அன்று அரசியல்சட்டத்தின் மீதான ஒரு கருத்துவாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையிலும், ரஷ்யா மீது தடைகள் என்பதை உச்சரிப்பதே கூட, அதனுடன் நெருக்கமான வர்த்தக மற்றும் எரிசக்தித் தொடர்புகளைக் கொண்டிருக்கும் இத்தாலிக்கு ஒரு சகிக்கமுடியாத அச்சுறுத்தலாய் இருந்ததை ரென்ஸி கணக்கிட்டிருந்தார் என்பது வெளிப்படை.

”உரையில் தடைகளைக் குறிப்பிடுவது அர்த்தமற்றது என்று நான் கருதினேன்” என்றார் அவர். “ஆகவே இறுதியாக ஆவணத்தில் நாங்கள் எழுதியது தான் —அதாவது சிரியாவில் ஒரு உடன்பாட்டை ஊக்குவிப்பதற்கு சாத்தியமான அத்தனையையும் நாம் செய்வது அவசியமாகும் என்று கூறுவது— சரியானவை என்று நான் நினைக்கிறேன்.”

ரென்ஸியின் கருத்துகள் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் முனைப்பின் பின்னால் தன்னை நெருக்கமாய் நிறுத்திக் கொண்டிருக்கக் கூடிய போலந்திடம் இருந்து கூர்மையான பதிலடியை வரவழைத்தன. ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு “ஏககுரலில்” ஆதரவு இருந்ததாக போலந்தின் துணை வெளியுறவு அமைச்சரான கோன்ராட் சிசிமான்ஸ்கி (Konrad Szymanski) கூறினார். ”அத்தனை தெரிவுகளிலும் சிரியாவில் இன்று நடந்து கொண்டிருப்பது தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதிப்பதும் மற்றும் ரஷ்யாவை மட்டுப்படுத்துகின்ற பல்வேறு வழிவகைகளும் இடம்பெற்றிருந்தன” என்றார் அவர். “சிரியாவில் ரஷ்யாவின் நடத்தையில் எந்த மாற்றமுமில்லாது போனால் நாங்கள் இதே விவாதப்பொருளுக்கு வெகு விரைவில் திரும்ப வேண்டியிருக்கும்.”

ரஷ்யாவுடனான மோதல் தொடர்பாக போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையிலும் பதட்டங்கள் வெடித்தன. பால்டிக் கடல் வழியாக ரஷ்யாவையும் ஜேர்மனியையும் இணைக்கும் நோர்டு ஸ்ட்ரீம் எரிவாயு பைப்லைன் திட்டத்தைத் தாக்கி ஃபைனான்சியல் டைம்ஸில் சிசிமான்ஸ்கி ஒரு கருத்திட்டிருந்தார். 2005 இல் மாஸ்கோவுக்கும் பேர்லினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்த இந்த பைப்லைன் திட்டத்தை போலந்தும் மற்ற கிழக்கு ஐரோப்பிய அரசுகளும் நீண்டகாலமாகவே எதிர்த்து வந்திருக்கின்றன. ரஷ்யாவுடனான மோதல்களால் ரஷ்யா தனது எரிசக்தி விநியோகத்தைத் துண்டித்துக் கொள்ளும் பட்சத்தில் ஜேர்மனி மட்டும் தனக்கு தொடர்ந்து எரிசக்தி விநியோகத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது அந்நாடுகளின் அச்சம்.

இந்த பைப்லைனை “பொருளாதாரத்தை ஸ்திரம்குலைப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அரசியல் உறவுகளை நஞ்சாக்குவதற்கும் திறம்படைத்த ஒரு ட்ரோஜான் குதிரை” என்று அழைத்த சிசிமான்ஸ்கி “அவசியப்பட்டால் நீதிமன்றத்தில் [ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம்] போலந்து மற்றும் பிற நாடுகளின் சட்டரீதியான சவாலையும் அது சந்திக்க நேரும்” என்று எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளே எழுகின்ற சொல்லித் தடுக்கமுடியாத முரண்பாடுகள், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான அமெரிக்க தலைமையிலான பொறுப்பற்ற போர் உந்துதலுக்கு மத்தியில் பெரும் ஏகாதிபத்திய சக்திகளிடையே எழுந்திருக்கும் கடுமையான மோதல்களைப் பிரதிபலிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்த மாஸ்ட்ரிச்ட் உடன்பாடு கையெழுத்தாகி அடுத்த ஆண்டுடன் கால் நூற்றாண்டாகவிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதும் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்படுவதும் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்தும், அனைவருக்கும் அமைதி, வளமை மற்றும் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் என்பதான அப்போதிருந்த பிரமைகள் எல்லாம் நொறுங்கிப் போயிருக்கின்றன. வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கான யூரோக்கள் அள்ளியிறைக்கப்பட்டும் கூட பாரிய வேலைவாய்ப்பின்மையும் மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களும் தொடருவதன் மத்தியில் ஐரோப்பிய பொருளாதாரம் தேக்கமடைந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஐரோப்பா மீண்டும் இராணுவமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, நேட்டோ பத்தாயிரக்கணக்கிலான துருப்புகளை மத்திய கிழக்கிலும் மற்றும் ஐரோப்பாவில் ரஷ்யாவின் எல்லைகளிலும் நிலைநிறுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமானது, அலெப்போவில் சிரிய இஸ்லாமிய எதிர்ப்புத் தீவிரவாதப் படையினருக்கு ஆயுதமளிப்பதிலும், மொசூலிலான குருதிகொட்டும் தாக்குதலிலும், தனது சொந்த பாத்திரத்தினை மூடிமறைத்து, பொறுப்பற்ற விதத்தில் ரஷ்ய-விரோதப் பரப்புரையை விசிறி விட்டுக் கொண்டிருக்கிறது. இராணுவச் செலவினங்கள் மீதான அதிகரிப்புகளை நியாயப்படுத்துவதிலும் சொந்த நாட்டில் போலிஸ்-அரசு வெறியாட்டத்தைத் தூண்டுவதிலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இது எதிரொலிக்கிற அதேநேரத்தில், நேட்டோவிற்குள்ளான  ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளோ மறைப்பதற்கு மேலும் மேலும் கடினமானவையாக ஆகி வருகின்றன.

ரஷ்யாவிலும் சீனாவிலும் கிட்டக்கூடிய இலாப வாய்ப்புகளுக்கான அணுகலை விட்டுக்கொடுத்து விட மனமின்றி, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ரஷ்யா மீது பெரிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கோ அல்லது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை (AIIB) புறக்கணிப்பதைப் போன்ற சீனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கோ அமெரிக்கா விடுக்கின்ற அழைப்புகளை நிராகரித்து வருகின்றன.

இராணுவ மற்றும் பொருளாதார பதட்டங்கள் முன்னினும் புலப்படத்தக்கதாக ஆகியிருப்பதுடன் கரம்கோர்த்து இது நடைபெறுகிறது. சென்ற ஆண்டில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனின் தேசியவாதத் தீவிரவாதிகளுக்கு ஆயுதமளிக்கின்ற சிஐஏ இன் திட்டங்களை ஜேர்மனியும் பிரான்சும் எதிர்த்தன, இது ரஷ்யாவிடம் இருந்து இராணுவரீதியான பதிலடியைத் தூண்டிவிடும் என்பது அந்நாடுகளது அச்சம். இந்த ஆண்டில் தென்சீனக் கடலில் சீனாவுடனான அமெரிக்காவின் மோதலில் தாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கப் போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் அறிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் இப்போது அமெரிக்காவிலிருந்து சுதந்திரமான ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றனர், இதன்மூலம் பகிரங்கமான விரோத அறிக்கைகளை விடுவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் சீண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பதட்டங்கள் இந்த இலையுதிர்காலத்தில் வர்த்தக யுத்தமாக வெடிக்க அச்சுறுத்தின, அயர்லாந்தில் வரி ஏய்ப்புக்காக ஆப்பிள் நிறுவனத்தின் மீது பல பில்லியன் யூரோக்க்கள் அபராதத்தை ஐரோப்பிய  ஒன்றியம் விதித்தது. ஜேர்மனியின் திணறிவருகின்ற டோச்ச வங்கியின் மீது ஒரு பாரிய அபராதத்தை விதித்து அமெரிக்கா பதிலடி கொடுத்தது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையே அதிகரித்துச் செல்கின்ற இந்த மோதல்கள் CETA மற்றும் பிரெக்ஸிட் விடயத்தில் மேலதிக உடன்பாட்டை எட்டுவதற்கு இந்த உச்சிமாநாடு தவறியதன் கீழமைந்திருக்கின்றன.

அட்லாண்டிக் கடந்த வர்த்தக மற்றும் முதலீட்டுக் கூட்டு குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் அழைப்பு விடுத்து இரண்டுமாதங்கள் கூட ஆகியிராத நிலையில், நேற்று CETA மீதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. பெல்ஜியத்தின் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியா பிராந்தியத்தில் இருந்து - கனடாவின் போட்டியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயிகளுக்கு கூடுதல்  பாதுகாப்பை இப்பிராந்தியம் கோரியது - எதிர்ப்பு கிளம்பியது. பெல்ஜியத்தின் பொருளாதார மேலாதிக்கமிக்க ஃபிளாண்டர்ஸ் பிராந்தியத்தின் - இதன் அரசாங்கம் CETA ஐ ஆதரிக்கிறது - நோக்கத்தை முறியடிப்பதையும் வலோனிய அதிகாரிகள் நோக்கமாய்க் கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.

பெல்ஜியத்தை விட்டு கிளம்புகையில், கனடாவின் வர்த்தக அமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் கூறினார்: “கனடா போன்று ஐரோப்பிய விழுமியங்களை ஒத்த விழுமியங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டுடன் கூட ஒரு சர்வதேச உடன்பாட்டை எட்டக் கூடிய திறன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இப்போது இல்லாதிருக்கிறது என்பது எனக்கும் கனடாவுக்கும் தெள்ளத்தெளிவாய் தெரிகிறது... கனடா ஏமாற்றமடைந்திருக்கிறது, ஆனாலும் இது சாத்தியமில்லை என்றே நான் கருதுகிறேன்.”

இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்துவதில் காணக்கூடிய சிக்கல்கள், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நிகழ்முறையை தொடங்கி, இப்போது வரை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளானதான வரையறையின் கீழிருக்கும் அதன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மறுபேச்சுவார்த்தை நடத்த முற்படும்போது எத்தகைய ஆழமான மோதல்கள் தோன்றக் கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது. தனது முதல் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பங்குபெற்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே க்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இடையில் வியாழனன்று இரவு பிரெக்ஸிட் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அதிக விபரங்கள் வெளியாகவில்லை என்ற அதேநேரத்தில், திரைக்குப் பின்னால் பதட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவு.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து சுயாதீனமான ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கும் மற்றும் இராணுவத் திறன் பெருக்கத்திற்குமான திட்டங்களை தடுப்பதாகக் கூறி ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவரான மான்ஃபிரட் வேபர் பிரிட்டனுக்கு மிரட்டல் விடுத்தார்.

“ஒரு உறுப்பினர், ஒரு கிளப்பில் இருந்து விலக விரும்புகிறார் என்ற நேரத்தில், அத்தகைய ஒரு உறுப்பினர் அந்த கிளப்பின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய விரும்புவது என்பது இயல்பான ஒன்று அல்ல. அது உண்மையில் நிறைய கோபத்தை உண்டுபண்ணுகிறது, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நடத்தை” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறினார், “ஜேர்மனியர்களாக, பிரெஞ்சு மக்களாக, இத்தாலியர்களாக நாங்கள் எங்களுடைய - உங்களுடையதை அல்ல - தொலைநோக்குத் திட்டம் குறித்து சிந்திப்பது முழுக்கவும் புரிந்துகொள்ளக்கூடியது என்றே நான் கருதுகிறேன். அதனைத் தயவு செய்து தடுக்காதீர்கள், தயவு செய்து நிறுத்தாதீர்கள், ஏனென்றால் நீங்கள் அப்படிச் செய்தால் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் அது நிறைய பாதிப்பைக் கொண்டிருக்கும்.”