ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU foreign ministers adopt statement denouncing Russia and Syria

ரஷ்யா மற்றும் சிரியாவைக் கண்டனம் செய்யும் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் ஏற்றனர்

By Alex Lantier
18 October 2016

சிரியாவில் இப்போது ஐந்தாண்டு காலமாய் நடந்து வருகின்ற நேட்டோவின் ஆட்சி மாற்றத்திற்கான போரில், ரஷ்ய மற்றும் சிரிய ஆட்சிகளின் நடவடிக்கைகளை கண்டனம் செய்கின்ற ஒரு அறிக்கையை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள், லுக்செம்பேர்க்கில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் ஏற்றுக் கொண்டனர்.

நேற்று நடந்த இன்னுமொரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையில், ரஷ்யா மீதான அழுத்தத்தை கூட்டும் பொருட்டு, ரஷ்யாவின் ஆங்கில மொழி அரசுத் தொலைக்காட்சியான ரஷ்யா டுடே (RT) இன் வங்கிக் கணக்குகளை பிரிட்டிஷ் வங்கி அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். RT இன் கணக்குகளை முடக்கி வைத்திருப்பதை ஸ்காட்லாந்து ராயல் வங்கி (RBS) பின்னர் மறுத்தது என்றாலும் “எங்களுடனான உங்களது வங்கி சேவை ஏற்பாடுகள் மீது சமீபத்தில் நாங்கள் திறனாய்வு செய்ததில், இனியும் நாங்கள் இந்த வசதிகளை உங்களுக்கு அளிக்க இயலாது என்ற முடிவை நாங்கள் எட்டினோம்” என்று அறிவித்த RBS இன் ஒரு கடிதத்தை RT அதிகாரிகள் மேற்கோள் காட்டினர். இந்த முடிவை “இறுதியானது” என்று கூறியிருந்த RBS “இது தொடர்பாக எந்த விவாதத்திற்குள்ளும் நுழைய தயாராயில்லை” என்றும் கூறியிருந்தது.

இந்த லுக்செம்பேர்க் அறிக்கையானது அமெரிக்காவில் இருந்து கிளம்பி வருகின்ற ரஷ்ய-விரோத பரப்புரை வெள்ளத்தின் பின்னால் ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுத்துகிறது. அலெப்போவில் அமெரிக்க ஆதரவு இஸ்லாமிய தீவிரவாதப் படையினர் சிரிய இராணுவத்தின் மற்றும் ரஷ்ய வான் படையின் கரங்களில் உடனடித் தோல்வியை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அமெரிக்க ஊடகங்கள் ரஷ்யாவைக் கண்டனம் செய்து கொண்டிருக்கின்றன. சிரியா மீது பறக்கத் தடை கொண்ட வலயத்தை திணிப்பதற்கு சிரியாவுடனும், அணு ஆயுத சக்தியான ரஷ்யாவுடனும் ஒரு போரில் இறங்க வேண்டியிருக்கும் என்பதை ஒப்புக் கொள்கின்ற தலைமை அமெரிக்க இராணுவ அதிகாரிகள், இருந்தபோதிலும் ரஷ்யப் போர் விமானங்களை பறக்கவிடாமல் செய்ய இந்த நடவடிக்கைக்கு பகிரங்கமாக ஆலோசனையளித்து வந்திருக்கின்றனர்.

இந்த பொய்கள் அடிப்படையிலான போர் பரப்புரையையே ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையும் எதிரொலிக்கிறது. அலெப்போ மீது அத்தனை விமானங்களும் பறப்பதற்கு முடிவுகட்டுவதற்கு அழைப்பு விடுகின்ற இது, “போர்க் குற்றங்களின்” சாத்தியத்திற்காக ரஷ்யாவைக் கண்டனம் செய்கிற இது, அதேவேளையில், சிரியாவில் அல் நுஸ்ரா முன்னணி (இப்போது ஃபதே அல்-ஷாம் என்றும் அழைக்கப்படுகிறது) போன்ற அல் கெய்தாவுடன் தொடர்பு கொண்ட தீவிரவாதக் குழுக்களுக்கு நேட்டோ ஆயுதமளிப்பதை மூடிமறைக்கிறது.

அது எழுதுகிறது, “சிரிய மக்களைப் பாதுகாப்பதற்கான அடிப்படையான பொறுப்பு சிரிய ஆட்சிக்கு இருக்கிறது. ஆகவே, இந்த ஆட்சியும் அதன் கூட்டாளிகளும், திட்டமிட்டும் கண்மூடித்தனமாகவும், அப்பாவி மக்களுக்கு எதிராகவும், மனிதாபிமான மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு எதிராகவும் மற்றும் குடிமையியல் மற்றும் மனிதாபிமான உள்கட்டமைப்புகள் மீதும் நடத்துகின்ற மிதமிஞ்சிய மற்றும் விகிதாச்சார பொருத்தமற்ற தாக்குதல்களை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டனம் செய்வதோடு இந்த கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. அத்தனை தரப்புகளாலும், குறிப்பாக சிரிய ஆட்சியாலும் அதன் கூட்டாளிகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற, மனித உரிமைகள் மீதான தொடர்ச்சியான திட்டமிட்ட, பரவலான மற்றும் ஒட்டுமொத்தமான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களையும் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அத்தனை மீறல்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் செய்கிறது.”

சிரிய அகதிகள் முகாம்களைக் கொண்டிருக்கக் கூடிய லெபனான் மற்றும் ஜோர்டான் ஆட்சிகளுக்கும், மற்றும் துனிசியாவில் இளைஞர் வேலைவாய்ப்புக்கும் —இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்கள் நேட்டோ-ஆதரவு சர்வாதிகாரத்தைக் கவிழ்த்த ஒரு தொழிலாள வர்க்க கிளர்ச்சியாக மாறியது— நிதி உதவி அளிப்பதற்கும் இந்த உச்சிமாநாடு உடன்பட்டது.

ஏகாதிபத்தியத்தின் “மனிதாபிமான” வாதங்களின் அடிப்படையில் தலையீட்டுக்காக ஐரோப்பிய ஒன்றியம் விடுக்கும் விண்ணப்பங்கள் சிடுமூஞ்சித்தனமானதாகும். எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு மனித உரிமைகளை பாரிய அளவில் மீறி வருவதை அது ஒப்புக் கொள்கிறது. உண்மையில் எதிர்ப்பாளர்கள், நேட்டோவால் ஆயுதங்களும் ஆதரவும் அளிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பயங்கரவாதக் குண்டுவீச்சுகளையும், இனப்பிரிவினை படுகொலைகளையும், சிறைக் கைதிகளை மொத்தமாய் கொல்வதையும், அத்துடன் தொழிற்சாலைகளையும், களஞ்சியங்களையும் சூறையாடுவதையும் நடத்தி, 10 மில்லியனுக்கும் அதிகமான சிரிய மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தள்ளியிருக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரப்புரை, தேர்ந்தெடுத்து ஆவேசப்படும் முறையைக் கொண்டிருக்கிறது. எதிர்ப்பு தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பதிலான தனது சொந்த அரசியல்ரீதியான குற்றவியல் பாத்திரத்தை மூடிமறைத்து, இந்த ஆவேசம் வெறுமனே ரஷ்யா மீதும் சிரியா மீதும் மட்டுமே கவனம் குவிக்க வேண்டும் என்பதாய் திட்டவட்டம் செய்கிறது. இத்தனைக்கும் அண்டையிலிருக்கும் ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சி மொசூல் நகரத்தின் மீது நடத்தும் ஒரு இராணுவத் தாக்குதலுக்கு  —இது இன்னும் மிகப்பெரிய இரத்த ஆறுக்கு தூண்டக் கூடியது— அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவளிக்கின்றன.

ரஷ்ய மற்றும் சிரிய ஆட்சிகள் சிரியாவின் பெரும் பகுதியை மீண்டும் தங்கள் கைவசம் கொண்டுவருவதற்கு —இதன்மூலம் ஏகாதிபத்தியத்துடன் மேம்பட்ட உறவுகளுக்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவை நோக்கம் கொண்டுள்ளன— மேற்கொள்ளும் முயற்சிகளில் முற்போக்கானதென்று எதுவுமில்லை. ஆயினும், கிழக்கு அலெப்போ மீதான குண்டுவீச்சு உள்ளிட்ட அவற்றின் நடவடிக்கைகள் சிஐஏ தலைமையிலான ஒரு போருக்கான பதிலிறுப்பாகவே இருக்கிறது.

ரஷ்யாவை, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் செய்வது இரட்டைவேடமாகும். பிரான்சில் காண்பதைப் போல, இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான பதிலிறுப்பாக ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைப்பதற்கும் அவசரகால நிலையை திணிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இருக்கும் உரிமையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்கத்துடன் வழிமொழிகிறது. 2014 இல், உக்ரேனில் ஒரு அதி-வலது ரஷ்ய-விரோத ஆட்சியை அமர்த்துவதை ஆதரித்ததன் பின்னர், புதிய உக்ரேன் ஆட்சி ரஷ்ய மொழி பேசும் கிழக்கு உக்ரேனில் எதிர்ப்பை இராணுவரீதியாக குருதிகொட்ட ஒடுக்கியதை இது ஆதரித்தது.

ஆயினும் கூட அவர்கள், அதனினும் பெரியதொரு இராணுவ அச்சுறுத்தலில் இருந்து —பெர்சிய வளைகுடா எண்ணெய் ஷேக்குகளின் நிதியாதாரத்துடன் அல்-கெய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பதற்கு சிஐஏ மற்றும் ஐரோப்பிய உளவு முகமைகள் செய்கின்ற நேரடியானதொரு தலையீடு— தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ஆசாத்தின் ஆட்சி செய்கின்ற முயற்சிகளை ஒரு போர்க் குற்றமாய் கண்டனம் செய்கின்றனர்.

ஐரோப்பாவின் வெளியுறவு அமைச்சர்கள், குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்சின் வெளியுறவு அமைச்சர்கள் ஐரோப்பிய ஒன்றிய அறிக்கைக்கு ஆதரவாக பெரும் தார்மீக விண்ணப்பங்களைச் செய்தனர். ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவுகள் தொடர்பான விடயத்தில் “அழுத்தம் வலிமையானதாக இருக்க வேண்டும்” என்றார் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரான ஜோன்-மார்க் எய்ரோ. “ஐரோப்பிய ஒன்றியம் எத்தனை அதிகமாக ஒற்றுமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறன்தோ, அத்தனை அதிகமாக அலெப்போ மக்களின் படுகொலையை தடுத்து நிறுத்துவது என்ற தார்மீகக் கடமையில் நாம் முன்செல்ல முடியும்.”

இதேபோல, பிரிட்டனின் வெளியுறவுச் செயலரான போரிஸ் ஜோன்சன் கூறுகையில் அலெப்போ மீதான ரஷ்யாவின் குண்டுவீச்சு நடவடிக்கைகள் “மனிதகுலம் வெட்கப்படத்தக்கதாகும்” என்றார். ரஷ்யாவை சிரிய அரசாங்கத்தை “ஆட்டுவிப்பவர்கள்” என்று கூறி அவர் கண்டனம் செய்தார்.

இவையெல்லாம் இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை விநியோகிக்கப்படுவதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும் கூட ஆழமான பதட்டங்கள் நிலவுவதன் அறிகுறிகள் இருந்தன.

இந்த அறிக்கை இராணுவ தீவிரமாக்கலுக்கு பென்டகன் கோருகின்ற மிக மூர்க்கமான கோரிக்கைகளில் இருந்து தன்னை தள்ளிநிறுத்திக் கொள்கிறது. “இந்த மோதலுக்கு இராணுவரீதியாக தீர்வு கிடையாது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நம்புகிறது” என்று அறிவித்து, ரஷ்யாவுடன் முழு வீச்சிலான போர் அபாயத்திற்குள் இறங்காமல் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அசாத்தை வெளியேற்றக் கூடிய வகையிலான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்புவிடுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர்நிலைப் பிரதிநிதியான ஃபெடரிகா மொகேரினி, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிப்பிற்காக நேற்று மாலை அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை வலியுறுத்தினார்: “அலெப்போ மீதான குண்டுவீச்சை தடுத்துநிறுத்துவதற்கு அத்தனை வடிவங்களிலுமான அத்தனை முயற்சிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கிறது ஊக்குவிக்கிறது, அத்துடன் எந்த மேலதிக இராணுவ தீவிரப்படலை தவிர்ப்பதற்கும் இராணுவரீதியில் எந்த மேலதிக நேரடி மோதலைத் தவிர்ப்பதற்கும் முன்னெடுக்கப்படுகிற அத்தனை முயற்சிகளையும் அது ஆதரிக்கிறது.”

ரஷ்யாவுக்கு எதிராக படிப்படியான தடைகளைக் கொண்டுவர அமெரிக்கா விடுத்த அழைப்புகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டம் நிராகரித்தது. ஜேர்மனியின் தலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளும் இந்த யோசனைகளை வெளிப்படையாக விமர்சித்தன. “ஒருவேளை நீண்டகாலத்தில் தாக்கம் ஏற்படுத்தலாம் என்பது போன்ற தடைகள் [சிரியாவின்] அப்பாவி மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதில் இங்கே இப்போதைக்கு நமக்கு எவ்வாறு உதவும் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர்.

ஹங்கேரி, கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளும் இதேபோன்ற விமர்சனங்க்களைச் செய்தன. ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சரான செபஸ்டியான் குர்ஸ் பின்வருமாறு கூறினார்: “ரஷ்யாவுக்கு எதிராக மேலதிகத் தடைகளைக் கொண்டுவரும் யோசனை தவறானதாய் இருக்கும். மேலதிக இராணுவத் தீவிரப்படல் நமக்குத் தேவையில்லை.”

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தது முதலாகவே —ஜேர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகியவை எஞ்சிய ஐரோப்பிய அரசுகளின் ஒரு பொதுவான இராணுவக் கொள்கைக்கு கோரிக்கை வைத்தன— ஒரு சுயாதீனமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கொள்கைக்கான கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்திருக்கின்றன. ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர் உந்துதல் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளிடம் இருந்து எதிர்ப்புக்கு முகம்கொடுக்கிறது. நீண்டகால நோக்கில், அவர்கள் அமெரிக்காவிலிருந்து சுயாதீனமான, சாத்தியமான அளவில் அமெரிக்காவுக்கு எதிரான, போர்க் கொள்கையை வடிவமைக்கும் சாத்தியத்தை பரிசீலித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐரோப்பிய முதலாளித்துவம் ஒரு பாரிய இராணுவக் கட்டியெழுப்பலை முன்னெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் பத்து பில்லியன் கணக்கிலான யூரோக்களை கூடுதலாய் இராணுவச் செலவினங்களுக்காக ஒதுக்குகிறது; அமெரிக்காவுடனான அதன் மோதல்கள் அமைதிவாதத்தை பிரதிபலிக்கவில்லை. அமெரிக்கப் போர் முனைப்பு ஐரோப்பாவை ஸ்திரம் குலைத்து விடும், தாங்கள் தயாராகும் முன்பே ஒரு பெரும் போரை தூண்டி  விட்டு விடும் என்பதே அதன் அச்சமாக இருக்கிறது.

ஜேர்மனியின் சிந்தனைக் குழுமமான Stiftung Wissenschaft und Politik (SWP), சமீபத்தில் “அமெரிக்காவின் ரஷ்ய கொள்கையும் ஐரோப்பாவின் பாதுகாப்பு ஒழுங்கும்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த ஒரு சமீபத்திய ஆய்வறிக்கையில் இந்தப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. ”அமெரிக்க-ரஷ்ய உறவுகள் ஐரோப்பாவின் பாதுகாப்பு ஒழுங்கிற்கு மையமானவையாக திகழ்கின்றன” என்று புகாரிட்ட SWP மேலும் கூறியது: “ஒரு ஸ்திரமான ஒத்துழைப்பான உறவில் வலிமையான சமூக மற்றும் பொருளாதார நலன்கள் அபிவிருத்தி காண்பதில் வெற்றியடைந்திருக்கவில்லை.”

“ஒன்று உலக ஒத்துழைப்பு நலன்களின் பேரிலும், போர் அபாயங்களைத்  தவிர்ப்பதற்கும் ரஷ்யாவின் செல்வாக்கு வட்டத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும் இல்லையேல் இராணுவத் தீவிரப்படலுக்கு பெரும் சாத்தியம் கொண்ட சக்திகளிடையேயான போட்டிகள் உருவாவதற்கு முகம்கொடுக்க வேண்டும் என்ற இரண்டே மாற்றுகளுக்கு அமெரிக்கா அதிகமான அளவில் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற” ஒரு சூழ்நிலையில் இது கொண்டு சென்றுவிட்டுள்ளது என்று SWP மேலும் சேர்த்துக் கொண்டது.