ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

International Socialist Organization backs NATO escalation in Syria

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு சிரியாவில் நேட்டோ இராணுவ நடவடிக்கை அதிகரிப்பை ஆதரிக்கிறது

By Alex Lantier and David North
21 September 2016

சிரியாவில் ஆட்சியை மாற்றுவதற்கான அமெரிக்க-நேட்டோ போருக்கு ஆதரவாக சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு முன்வைக்கும் வாதங்கள் நியூ யோர்க் டைம்ஸால் பிரசுரிக்கப்படுகின்ற சிஐஏ வழிகாட்டுதலிலான பிரச்சாரங்களில் இருந்து ஏறக்குறைய பிரித்தறிய முடியாத அளவுக்கு ஒற்றுமையை கொண்டிருக்கின்றன. சிஐஏ-பென்டகன் விவரிப்பை சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) பரப்புரை செய்வதற்கான சமீபத்திய, இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், மலிவான உதாரணமாக, ISO இன் வலைத் தளமான socialistworker.org இல் ஆகஸ்ட் 25 அன்று பிரசுரமாகியிருக்கும் ஆஷ்லி ஸ்மித் எழுதிய “ஏகாதிபத்திய எதிர்ப்பும் சிரியப் புரட்சியும்” என்ற கட்டுரையைக் குறிப்பிடலாம்.

உலக சோசலிச வலைத் தளம் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருப்பதைப் போல, சிரியாவில் அமெரிக்க-நேட்டோ தலையீட்டை தீவிரப்படுத்துவதற்கான ISO இன் பிரச்சாரம் அமெரிக்க அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு நெருக்கமாக நிற்கிறது. ஆகஸ்ட் 25 அன்று டைம்ஸ் பத்திரிகை ரோஜர் கோஹன் மற்றும் நிக்கோலஸ் கிறிஸ்ரொஃப் ஆகிய அதன் முன்னணிப் பத்தியாளர்கள் இருவர் எழுதிய ஆத்திரமூட்டல் கண்ணோட்டங்களை பிரசுரித்திருந்தது. இந்தக் கண்ணியவான்கள் சிஐஏவின் போர்களை பெரும்பாலும் டைம்ஸின் ஆதிக்கத்திற்குட்பட்ட உலகக் கண்ணோட்டத்தை உடைய வசதிபடைத்த தாராளவாத அடுக்கிற்கு ”மனிதாபிமானத் தலையீடுகளாக” விற்பனை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். கோஹனின் கட்டுரை “அமெரிக்காவின் பின்வாங்கலும் அலெப்போவின் வேதனையும்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்ரொஃப் இன்னும் தீவிரமான அமெரிக்கக் குண்டுவீச்சுக்கான தனது கோரிக்கைக்காக இன்னும் கூடுதலாய் ஆத்திரமூட்டுவதான ஒரு தலைப்பான: “ஆன் ஃபிராங்க் இன்று ஒரு சிரியச் சிறுமி”. என்பதை தேர்வு செய்திருந்தார்.

கோஹனும் சரி கிறிஸ்ரொஃப்பும் சரி கடந்த காலத்தின் துயர சம்பவங்களது பயங்கரங்களை காட்டி, முற்றிலும் அறநெறிகளின் அடிப்படையில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தலுக்கான தங்கள் கோரிக்கையை வைப்பதைப் போல சிடுமூஞ்சித்தனமான தந்திரத்தைப் பயன்படுத்தினர். கிறிஸ்ரொஃப், ஆன் ஃபிராங்கின் நினைவுகளை சுரண்டிக் கொண்டாரென்றால், கோஹன் 1990களிலான சரஜேவோவின் இரத்தம் தோய்ந்த சட்டையை ஆட்டினார். இரண்டு பத்தியாளர்களுமே உணர்வை காட்டாத உலகத்தின் மனச்சாட்சியை தட்டுகின்ற தனிமைப்பட்ட தீர்க்கதரிசிகளாய் காட்டிக் கொண்டனர்.

கோஹன் அலறினார்: “அது [அலெப்போ] குண்டுவீசப்படுகிறது: இதில் என்ன புதிதாய் இருக்கிறது?... லண்டன், பாரிஸ், பேர்லின் அல்லது வாஷிங்டனில் எந்த இரவு விருந்துகளில் இது விவாதிக்கப்படுகிறது? எந்த மேற்கு பத்திரிகையாளர்களால் அங்கு சென்று அன்றாடம் ஒரு நகரம் சிதறுவதைக் குறித்த தமது குறிப்புகளை பதிவிட முடிகிறது? ஆறு வருடங்களுக்கு முன்பாக, அலெப்போ, புதிய மராகேஷாக (Marrakesh), விடுமுறைக்கால வீடு ஒன்றை வாங்கத்தகுந்த இடமாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை யார் நினைவுகூருகிறார்கள்? அலெப்போ தனியாய் நிற்கிறது, ரஷ்ய மற்றும் சிரிய ஜெட் விமானங்களின் கீழ் தனியாக, ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மற்றும் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் வன்முறையான தற்குறித்தனங்களுக்கு முகம்கொடுப்பதற்காக தனியாக நிற்கிறது.”

ஆஷ்லி ஸ்மித்தின் கட்டுரையும் - இதுவும் ஆகஸ்ட் 25 இல் வெளியானது - இதே பரப்புரை வடிவத்தையே பிரயோகித்தது. இடது-சாய்வு கொள்ளக்கூடிய வாசகர்களது உணர்வுகளைக் கிளறிவிடத்தக்கதாய் ஒரு வரலாற்று நிகழ்வைத் தேடி அவரும் கடந்த காலத்தை சலித்துக் கொண்டிருந்தார். தனது ஏகாதிபத்திய-ஆதரவு வாதத்திற்காக கெண்டகியின் ஹார்லன் கவுண்டியின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களது வரலாற்றுப் போராட்டங்களை இழுக்க அவர் தெரிவு செய்திருந்தார்.

தொழிற் சங்கத்தின் பாடலாசிரியர் Florence Reese போல நின்று கொண்டு ஆஷ்லி ஸ்மித் கேட்கிறார்: “நீங்கள் எந்தப் பக்கம்?” “எவையெவை பக்கங்கள்?” ”சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கு ஆதரவான மக்கள் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது நீங்கள் பஷார் அல்-அசாத்தின் மிருகத்தனமான ஆட்சியின், அவரது ஏகாதிபத்திய ஆதரவாளரான ரஷ்யாவின், அவரது பிராந்தியக் கூட்டாளியான ஈரானின் மற்றும் லெபனானில் இருந்தான ஹெஸ்போல்லா போன்ற ஈரானிய பினாமிகளின் பக்கமா? துயரகரமாக, பலரும் இந்தப் பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளனர்.”

ஸ்மித்தை பொறுத்தவரை, சிரியாவில் அமெரிக்க-ஆதரவுடனான எதிர்ப்பு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை ஆதரிக்காதவர்களும் மற்றும் ரஷ்யா மற்றும் ஈரானுடனான ஒரு பரந்த போரை அமெரிக்கா தொடக்குவதை எதிர்ப்பவர்களும் இந்த தேர்வில் “தோல்விகண்டவர்கள்” ஆவர். முழுமையாய் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்துக் கொண்டிருக்கும் சிஐஏ பிரதிநிதிகளது நிலைப்பாட்டில் இருந்து விவாதிக்கும் ஸ்மித், எதிர்த்து சண்டையிடுபவர்களுக்கு போதுமான அளவு கனரக ஆயுதங்களைக் கொடுக்காததற்காக ஒபாமா நிர்வாகத்தின் மீது தாக்குகிறார். 

ஒபாமா “கிளர்ச்சியுடன் தொடர்புபட்டிருக்கும் பெயர்குறிப்பிடாத நம்பகரமான அமெரிக்க-ஆதரவு நபர்களை” மனதில் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டு ஸ்மித் எழுதுகிறார்: “சிரியாவின் சர்வாதிகாரத்திற்கு ஒரு புதிய முகத்தை வழங்குவதற்கு கிளர்ச்சியாளர்களின் தரப்பில் இருந்த நபர்களை பயன்படுத்திக் கொள்ள அவரது நிர்வாகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஆனால் அசாத் தாக்குப்பிடித்து நிற்கிறார் — அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க ஒப்புக்கொண்ட போதிலும், ஆட்சியின் தாக்குதலை நிறுத்துவதற்காக அவர்கள் கேட்ட கனரக ஆயுதங்களைக் கொடுக்க மறுத்து விட்டது என்ற உண்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.”

ஸ்மித் போருக்கு ஆதரவாய் வழங்கியிருக்கும் சுருக்கமான விவரிப்பு ஒரு தொகை பொய்களை கொண்டுள்ளது. இது ஒரு மோசடியான இருமைப்பகுப்பை அடிப்படையாய் கொண்டிருக்கிறது: ஸ்மித்தைப் பொறுத்தவரை, சிரியாவில் ஒருவர், ஒன்று ஜனநாயகத்துக்கான அமெரிக்காவின் போரை ஆதரிக்க வேண்டும் இல்லையேல் அவர் அசாத்தையும், ஸ்மித் “ஏகாதிபத்திய” முத்திரை குத்தி கூடுதலாக வெறுப்புடையதாக ஆக்கியிருக்கும் ரஷ்ய ஆட்சியை ஆதரிக்க வேண்டும்.

ஜனநாயகத்திற்காக நடத்தப்படும் ஒரு மக்கள் போரை தான் ஆதரிப்பதாய் ஸ்மித் கூறுவதைப் பொறுத்தவரை, அதில் எந்த நம்பகத்தன்மையும் இருக்கவில்லை, ஏனென்றால் சிரியாவில் ஒரு கைப்பாவை சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக அமெரிக்கா எதிர்ப்புக் குழுக்களை பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறது என்பதை அவரேயும் ஒப்புக்கொள்கிறார்.

ஸ்மித்தின் வாதங்கள் வெளிப்பட அபத்தமாய் இருந்தாலும் அவை ஒரு அரசியல் சேவை ஆற்றுகின்றன. வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புபட்ட பிரிவுகளுக்கு ISO ஒரு இடது முகத்தை வழங்குகிறது.

ஸ்மித்தின் வாதங்கள், போருக்கு எதிரான சோசலிச எதிர்ப்புக்கு ஒரு தயாரிக்கப்பட்ட அவதூறினை வழங்குகின்றன: அதாவது ஜனநாயகக் கட்சியின் போர்களுக்கு எதிரான எவரும் சீன மற்றும், குறிப்பாக, ரஷ்ய “ஏகாதிபத்திய”த்தை ஆதரிப்பதற்கு நிகரானவர் என்பதாகும்.

இந்த வாதத்திற்கும் பனிப்போர் காலது சிஐஏ இன் கம்யூனிச-விரோத பரப்புரைக்கும் இடையிலான ஒற்றுமை தற்செயலானதன்று. ISO இன் வரலாற்றில் இது வேர் கொண்டிருக்கிறது. மாக்ஸ் சாச்ட்மன் (Max Shachtman) 1939-40 இல் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்தும் மார்க்சிசத்தில் இருந்தும் முறித்துக் கொண்டார். இதன் விளைவாக, AFL-CIO வுக்கான கம்யூனிச-விரோத தத்துவாசிரியராக, ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கான வக்காலத்துவாதியாக என அவரது அடுத்தடுத்த பாத்திரங்களுக்கு அவரை அழைத்துச் சென்றது.

சாச்ட்மன் (1904-1972) ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் சோவியத் ஒன்றியத்தையும், அதற்குப் பின்னர் 1949 புரட்சியில் இருந்து எழுந்திருந்த சீன ஆட்சியையும் பாதுகாப்பதை  நிராகரித்தார். அவை “அதிகாரத்துவ கூட்டுறவுவாத” (bureaucratic collectivist) ஆட்சிகள் என்பதே அதற்கு அவர் கூறிய நியாயமாய் இருந்தது. “அரசு முதலாளித்துவ” (state capitalist) தத்துவத்தின் இந்த வகையறாவின் அடிப்படையில், சாச்ட்மன் இறுதியில் வியட்நாமிலான அமெரிக்காவின் போரை ஆதரித்தார்.

சோவியத் ஒன்றியம் இப்போது இல்லை. அது மிகையில் கோர்பச்சேவ் தலைமையிலான அதிகாரத்துவ ஸ்ராலினிச ஆட்சியால் 1991 இல் கலைக்கப்பட்டு விட்டது. முன்பாய் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தில் அங்கம் வகித்திருந்த ஒருவரான பொரிஸ் ஜெல்ட்சின் தலைமையிலான சோவியத்திற்குப் பிந்தைய ரஷ்ய அரசாங்கம் முதலாளித்துவத்தை மறுஸ்தாபகம் செய்வதற்கு முரட்டுத்தனமாகவும் பொறுப்பற்ற வகையிலும் நகர்வுகளை மேற்கொண்டது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முதலாளித்துவம் மீள்ஸ்தாபிதம் செய்யப்பட்டமையானது, ‘அதிகாரத்துவம் ஒரு ஒட்டுண்ணி சாதி (வர்க்கம் அல்ல), அதற்கென எந்த சுயாதீனமான வரலாற்று செயல்பாடும் இருக்கவில்லை’ என்ற ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வை ஊர்ஜிதம் செய்தது. அத்துடன் சோவியத் அதிகாரத்துவத்தை வர்க்கச் சுரண்டலின் ஒரு புதிய உலக-வரலாற்று அமைப்புமுறையாக சித்தரித்த சாச்ட்மன்வாத மற்றும் பலதரப்பான அரசு முதலாளித்துவ தத்துவ வகையறாக்களுக்கும் அது மறுப்பாய் அமைந்தது.

1991க்கு முன்பாக, சோவியத் ஒன்றியத்தில் 1917 அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமான சொத்துறவுகளை பாதுகாக்கின்ற அதேநேரத்தில் அங்கு அதிகாரத்துவத்தை தூக்கிவீசக்கூடிய ஒரு அரசியல் புரட்சிக்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அழைப்பு விடுத்தனர். இதுவே அது “சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்தமை”யின் புரட்சிகர உள்ளடக்கமாய் இருந்தது. ஆனால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதில் சம்பந்தப்பட்டிருந்த கொள்கைகளும் அரசியல் கருத்தாக்கங்களும் ரஷ்யாவின் புதிய முதலாளித்துவ ஆட்சிக்கு எளிமையாக மாற்றப்பட்டு விட முடியாது.

ஆயினும், ரஷ்யா மற்றும் சீனாவை “ஏகாதிபத்தியங்களாய்” வரையறை செய்வதை மார்க்சிஸ்டுகள் நிராகரிக்கின்றனர். இது வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் கோணத்தில் முற்றிலும் பொய்யான ஒரு வரையறையாக இருக்கிறது. ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான ஒரு போருக்காக பாரிய அமெரிக்க-நேட்டோ தயாரிப்புகள் நடப்பதையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

சாச்ட்மன்வாதத்தின் அரசியல் வாரிசுகள், ஏகாதிபத்திய விபரக்குறிப்பை (label) சோவியத் ஒன்றியத்தில் இருந்து முதலாளித்துவ ரஷ்யாவுக்கு மாற்றுவதற்கு முன்சென்றனர். அதற்குக் கீழிருந்த காரணங்களில் அரசியல் நலன்கள் தான் சம்பந்தப்பட்டிருந்தனவே அன்றி தத்துவத்திற்கு எந்த சம்பந்தமுமில்லை. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு விட்டபோதும் கூட, ரஷ்ய அரசானது —அதன் பூகோளரீதியான இடஅமைப்பின் காரணத்தால்— மத்திய கிழக்கு மற்றும் யூரோஆசியா முழுமையிலும் அமெரிக்க அதிகாரத்தின் விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. இதுவே அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்ந்து நிலவி வருகின்ற பதட்டத்தின் மூலகாரணமாகும்.

இந்த சூழ்நிலையில், சாச்ட்மன்வாதத்தின் சித்தாந்த பாரம்பரியம் இன்னும் கூட நல்ல ஆதாயம் அளிக்கக் கூடியதாய் இருக்கிறது. ரஷ்யாவை ஏகாதிபத்திய நாடாக வரையறை செய்வது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் “இடது” ஆதரவாளர்களுக்கு, ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்காவின் புவியரசியல் மோதலை “ஏகாதிபத்திய-எதிர்ப்பின்” ஒரு வடிவமாகக் கூறி வழிமொழியத் தலைப்படுபவர்களுக்கு, ஒரு இன்றியமையாத சாதகமான தன்மையை கொடுக்கின்றது. மேலும், பனிப்போர் காலத்து மார்க்சிச-விரோத சாச்ட்மன்வாத சேறுகளை எல்லாம் முன்கொண்டுவந்த ஸ்மித், சிரியாவில் சிஐஏவின் போருக்கு எழுகின்ற எதிர்ப்பை நவ-ஸ்ராலினிசத்தின் ஒரு வடிவமாய் பின்வருமாறு சித்தரிக்கிறார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள், ஒரு சர்வாதிகாரியை, அதிலும் சிஐஏ இன் அசாதாரணமான கைதிகள் கையளிக்கும் திட்டத்தின்கீழ் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” கைதிகளை சித்திரவதை செய்வதில் அமெரிக்காவுடன் நன்கறிந்த வகையில் ஒத்துழைப்பவராக இருந்து வந்த ஒருவரை ஆதரிப்பவர்களாக எவ்வாறு சென்றடைய முடியும்?

இதற்கான பதில் பனிப் போர் காலத்தில் ஸ்ராலினின் ரஷ்யாவுக்கும் மாவோவின் சீனாவுக்கும் ஸ்ராலினிச இடதுகள் வழங்கிய ஆதரவில் இருந்து தொடங்குகிறது. அவர்கள் அரசு முதலாளித்துவ சர்வாதிகாரங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரிகளாக மட்டுமல்லாது, சோசலிசத்துக்கான சாத்தியமான முன்மாதிரிகளாகவும் ஆதரித்தனர்.

இவ்வாறு தான், இன்று அசாத்தை ஆதரித்து நிற்கும் அதே போக்குகளில் சில, அப்போது தொழிலாளர் கிளர்ச்சிகளை மரணகரமாய் ஒடுக்கியதையும் கடந்த காலத்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளையும் கூட பாதுகாத்து நின்றன.

ரஷ்யா 1956 இல் ஹங்கேரி புரட்சியையும், 1968 இல் செக்கோஸ்லேவாக்கியாவின் பிராக் வசந்தத்தையும், 1981 இல் போலந்தின் ஒற்றுமைப் போராட்டத்தையும் நசுக்கியதற்கு ஆதரவாய் அவை நின்றன. மாவோவின் சீன ஆட்சி மாபெரும் முன் பாய்ச்சல் மூலமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது வாழ்வை சீர்குலைத்ததபோதும், தசாப்தங்கள் கால ஆக்கிரமிப்பில் திபெத் மக்களை ஒடுக்கியபோதும் அவை ஆதரித்தன.

ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா நடத்துகின்ற போர்களுக்கான சமகாலத்து எதிர்ப்பை அவதூறான வகையில் ஸ்ராலினிச-ஆதரவுக் கண்ணோட்டத்துடன் அடையாளப்படுத்துகின்ற இதற்கு எந்த நியாயமான வரலாற்று மற்றும் அரசியல் அடிப்படையும் கிடையாது.

ரஷ்யாவையும் சீனாவையும் “ஏகாதிபத்தியங்கள்” என கண்டனம் செய்கின்ற ஸ்மித், அதே நேரத்தில் அமெரிக்கா மேலும்மேலும் அமைதிவாத நாடாக, இன்னும் கூறப்போனால் உலக அரங்கில் கோழைத்தனமிக்க சக்தியாகக் கூட இருப்பதாக வலியுறுத்துகிறார். ஆசியா தொடங்கி மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா வரையிலும், இராணுவ ஆக்கிரமிப்பு, ஆயுதத் தலையீடு மற்றும் ஆளில்லா விமானக் கொலைகளில் ஒபாமா கண்டிருக்கும் புதிய உச்சங்களை உதாசீனம் செய்து, ஒபாமாவின் கீழான அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்பு  கொள்கைகளை கைவிட்டிருப்பதாகப் பிரகடனம் செய்கிறார்.

ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க-ஆதரவளிக்கும் போர்களுக்கு எதிரான இடது-சாரி எதிர்ப்பாளர்கள் “கடந்தகாலத்தில் வாழ்ந்துகொண்டு, அமெரிக்கா கைவிட்டு விட்ட ஆட்சி-மாற்றத்திற்கான ஒரு மூலோபாயத்தை அம்பலப்படுத்துவதற்கு ஆதாரம் தேட முனைந்து கொண்டிருப்பதாக” நாக்கூசாமல் அறிவிக்கிறார்.

”யதார்த்தத்தில், ஈராக் மீதான அதன் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் தோல்வி கண்டதன் பின்னர், அமெரிக்கா பொதுவாக மத்திய கிழக்கில் முழுமுதல் ஆட்சிமாற்றம் என்ற தனது மூலோபாயத்தில் பின்வாங்கியிருந்தது. பின்சூழுகின்ற குழப்பங்களுக்கு அஞ்சி ஆட்சிகளை ஸ்திரம்குலைப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என்பதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான மாற்று திசையாக பராக் ஒபாமா பின்பற்றுவதன் பின்னால் இருக்கும் பிரதான முன்னுரிமையாக இருக்கிறது” என்று அவர் எழுதுகிறார்.

ஒபாமா நிர்வாகம் 2011 இல் லிபிய அரசாங்கத்தை குண்டுவீசி அழித்தது, ஏமனில் ஜனாதிபதி அலி சலேஹ் ஆட்சியினை வெளியேற்றியது, சிரியாவை நாசம் செய்திருக்கக் கூடிய இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆயுதமளிக்க பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டது என்ற நிலையில், இத்தகைய ஒரு கூற்றானது ஒரு அதிர்ச்சியூட்டும் பொய்யாக இருக்கிறது. போர்-எதிர்ப்பு மனோநிலையின் மீது தாக்குவதற்காக ஸ்மித் எந்த அவதூறையும் கையிலெடுக்கத் தயங்கப் போவதில்லை. எண்ணிலடங்காவிதத்தில் ஆயிரக்கணக்கான அரேபியர்களின் மரணத்திற்கு இட்டுச்செல்லத்தக்க மத்திய கிழக்கிலான அமெரிக்க இராணுவத்தின் ஒரு புதிய நடவடிக்கை தீவிரப்படுத்தலை எதிர்ப்பவர்களை அரேபியர்கள்-விரோத இனவாதத்தைக் கொண்டு குற்றம் சாட்டக் கூடிய அளவுக்கும் அவர் செல்ல முடிகிறது.

சிரியாவில் ஒரு சர்வாதிகாரத்தை அமர்த்தும் முயற்சியில் சிரிய எதிர்ப்புப் படைகளுக்கு அமெரிக்கா ஆயுதமளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றபோதும், “அமெரிக்க அரசாங்கம்தான் சிரியாவில் கிளர்ச்சியை ஆதிக்கத்திற்குட்படுத்தி கொண்டிருப்பதான முடிவுக்கு” வருபவர்களை அவர் கண்டனம் செய்கிறார். அவர் எழுதுகிறார்: “இத்தகைய வாதங்கள் —ஏகாதிபத்தியத்தின் பாதுகாவலர்களைப் போலன்றி என்று சொல்ல இயலாவகையில்— சுரண்டப்படுகின்ற மற்றும் ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்காகப் போராடும் திறனை ஆணவத்துடன் நிராகரிப்பதையே காட்டுகின்றன. அதற்குப் பதிலாக, “மேற்கத்திய ஏகாதிபத்தியம் தனது சொந்த நோக்கங்களுக்காக அறியாமை கொண்ட மற்றும் பிற்போக்குத்தனமான உள்ளூர் பழங்குடிகளை வைத்து விளையாடுகிறது’ என்ற மிகப்பழைய கிழக்கத்தியவாத சொல்லாடல் தான் நமக்குக் கிடைக்கிறது.”

ஸ்மித் யாருடன் விளையாடுவதாக எண்ணுகிறார்? இனவாத அரசியலுக்கான இத்தகைய மலிவான விண்ணப்பங்கள் எல்லாம் அவரது சிஐஏ-ஆதரவு வக்காலத்துகளுக்கு ஒரு “இடது” முகமூடியை அளிப்பதற்கான ஒரு அவலட்சணமான தந்திரமாக மட்டுமே இருக்கின்றன. போருக்கு எதிரான சோசலிசவாதிகள் அல்ல, மாறாக ISOவும் திருவாளர் ஸ்மித்தும் தான் உழைக்கும் மக்களின் எதிரிகளாய் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.