ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை: வர்க்கப் போராட்டங்கள் அதிகரிக்கையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை.

By Subash Somachandran
22 October 2016

யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட இரு மாணவர்களான பவுன்ராஜ் சுலக்சன் (24) நடராசா கஜன் (23) வியாழக் கிழமை இரவு 11 மணியளவில் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

அன்றிரவு சுலக்சனின் வீட்டில் இரவு போசனத்தை முடித்துவிட்டு சென்றிருந்த வேளையிலேயே இப் படுகொலை நடைபெற்றுள்ளது. ஆரம்பத்தில், இது விபத்தால் நடந்த உயிரிழப்பு என பொலிஸ் தரப்பு காட்ட முயற்சித்தது. பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ் தேசியவாதிகளும், அவர்களின் ஊதுகுழலாக செயற்படும் ஊடகங்களும், சம்பவத்தை இருட்டடிப்பு செய்ய அரைகுறை உண்மைகளையும், பொய்களையும் வெளியிட்டு, அமெரிக்க சார்பு “நல்லாட்சி அரசாங்க”த்திற்கு தமது ஆதரவை உறுதிப்படுத்தினர்.

ஆனால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவு, சுலக்சனின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் மூன்று துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுள்ளன, அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும், கஜனின் இறப்பு பாரிய உடல் எலும்புகள் உடைவால் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கிறது.

அதற்கு முன்னரே அயலவர்கள், மரணம் சம்பவித்த இடத்தில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்தபோது, காயங்களுடன் காணப்பட்ட மாணவர்களை பொலிசார் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் அயலவர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் துப்பாக்கிச் சூடே மரணத்திற்கு காரணம் என்பது வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து மிகவும் ஆத்திரமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது விரிவுரைகளை பகிஸ்கரித்து விட்டு போதனா வைத்தியசாலையை நோக்கி அணிதிரண்டு சென்றதுடன், பிரேத அறைக்குள்ளும் அத்துமீறி நுழைந்தனர். பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தனர்.

முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலையை வழமை நிலைக்கு கொண்டுவரச் சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாவை. சேனாதிராஜாவை மாணவர்களும் பொதுமக்களும் சூழ்ந்துகொண்டு தமது கோபத்தை வெளிக்காட்டியதுடன், “இது விபத்து அல்ல கொலை” என சத்தமிட்டதோடு, உண்மை வெளிவரும் வரை வெளியேறப்போவதில்லை எனவும் தெரிவித்தனர். கஜனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கையில், “இந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளை இறந்திருப்பது மிகவும் மனவேதனையளிக்கின்றது. அந்தக் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” என கூறி சேனாதிராஜா தப்பித்துக் கொண்டார்.

பொதுமக்களினதும் மாணவர்களினதும் எதிர்ப்பினை முகங்கொடுத்த அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும், அதன் வடமாகாண சபையும், விசேட அதிரடிப் பொலிசை வரவழைத்து பல்கலைக்கழக சூழலிலும் மற்றும் முக்கிய சந்திகளிலும் ஆயுதம் தரித்த பொலிசை நிறுத்தியுள்ளனர். 1 மில்லியன் மக்கள் தொகையினை கொண்ட வட மாகாணத்தில் ஏற்கனவே 1 இலட்சத்திற்கு மேற்பட்ட படையினர் இன்னமும் நிலைகொண்டுள்ளனர்.

இத்தனைக்கும் மேலாக, சமூக அமைதியின்மை வெடிக்கும் என்று அஞ்சிய ஜனாதிபதி சிறிசேன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கட்டளையிட்டு, சீற்றத்தை தணிக்க உடனடியாக தலையிட்டார்.

திருகோணமலையில், தேசிய மரம் நடுகை தின நிகழ்வில் சிறிசேனவுடன் அருகருகே இருந்து கலந்துகொண்டிருந்த சம்பந்தன், மாணவர்கள் கொலைக்கு தனது பிரதிபலிப்பை காட்டும் வகையில், “இன்றைக்கு இந்த நாடு, ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு சர்வதேசத்தால் மதிக்கப்படுகிறது”, “அதை பார்க்கும்போது நாம் பெருமை அடைகிறோம்” “நாட்டில் வாழுகின்ற சகல மக்கள் மத்தியிலும் ஒரு ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இந்த அரசு செயற்படுகின்றது என்ற கருத்து நிலவுகின்றது” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

சேவையில் இருந்த ஐந்து பொலிசாரை வேலை நிறுத்தம் செய்து கைது செய்துள்ளதோடு, சம்பவத்தை விசாரிக்குமாறு குற்றவியில் விசாரணைப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதன் மூளையாக செயல்படும் தமிழ் மக்கள் பேரவை, அதை உருவாக்கியதில் முக்கிய பாத்திரம் வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமெரிக்க சார்பு அரசியலுக்கு ஆதரவளித்த யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்கள், யாழ் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் மத அமைப்புக்கள் உட்பட தமிழ் தேசியவாதிகளின் எந்த கன்னையும் இளைஞர்களின் கொலையை ஒரு “துயர சம்பவம்” என விபரித்ததற்கு அப்பால், “நல்லாட்சி” அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சம்பிரதாயபூர்வ அறிக்கையை விடக்கூட அவர்கள் எத்தனிக்கவில்லை. சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவர பங்களித்த இவர்கள் அனைவரும் இந்த படுகொலைக்கு அரசியல் ரீதியாக பொறுப்பாளிகளாவர்.

தீவில் இருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கூட்டாளிகள், சம்பந்தன், சிறிசேன, மோடி அல்லது ஒபாமாவோ அல்ல, மாறாக சிங்கள தொழிலாளர்களும் இந்திய துணைக் கண்டம் உட்பட்ட ஒட்டுமொத்த உலகத்தை சேர்ந்த தொழிலாள வர்க்கமுமே என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு மீண்டுமொரு முறை துன்பியலான முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதங்களில் தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வு கேட்டு ஒரு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். 30 வயதான நுவரேலியா மாவட்டத்தின் புசல்லாவையில், ரோத்ஸ்சில்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் பூட்டி வைக்கப்பட்ட பொலிஸ் செல்லுக்குள் கொல்லப்பட்டிருந்தார். எந்தவித சிரமமுமின்றி பொலிசார் வழமைபோல் பொலிசார் அதை தற்கொலை என்றனர்.

ஆத்திரமடைந்த தமிழ், சிங்கள, முஸ்லீம் சமூகங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்களும் குடும்பப் பெண்களும், யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்ததுபோன்றே பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதும், அரசாங்கம் பொறுப்பதிகாரியை இடம்மாற்றியதோடு ரவிச்சந்திரனின் மரணம் நேர்ந்தபோது கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இடைநீக்கம் செய்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சகலா ரத்நாயக்க, சம்பவம் பற்றி ஒரு "விரிவான" விசாரணையை நடத்துவதாக வாக்குறுதி அளித்து முடித்துவைத்தார்.

ஒரு அமெரிக்க சார்பு ஆட்சிக்கு, “நல்லாட்சி” என “ஜனநாயக” மூடுதிரையை வழங்கி, அது நடைமுறைப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைக்கிடுகையில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்களின் கல்வி, வாழ்க்கை தரம், சமூக நிலைமைகள் பாரிய அழிவுக்கு உள்ளாகும் என்பதை தமிழ் தேசியவாதிகள் நன்கு அறிவர்.

அண்மைய மாதங்கள், சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்கள், இளைஞர்களின் ஐக்கியப்பட்ட ஒரு தொடர் போராட்டங்களின் அலையை உருவாக்கியிருந்தது. வழமையாக தமிழ் தேசியவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களை முதுகில் குத்திய இரண்டாம் நாளிலேயே, கொக்குவில் குளப்புட்டி சந்தியடியில் அப்பாவி இளைஞர்கள் மீது நடத்திய கொலைவெறியாட்டம் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் சம்பவம், இருட்டு நேரத்தில் பொலிஸ் அதிகாரியின் தவறான கணக்கீட்டால் நடந்த ஒரு விபத்து அல்ல. வர்க்கப் பதட்டங்கள் அதிகரித்து வரும்நிலையில், நாடுமுழுவதும் பொலிஸ்-அரச சர்வாதிகாரம் அதிகரித்து வருவதன் இன்னொரு ஒரு அறிகுறியாகும்.

வளர்ச்சியடைந்து வரும் சமூக அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மே 15ம் தேதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், “வடக்கில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட்டு பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபையிடம் வழங்கினால், யாழ்ப்பாணத்தில் அரங்கேறும் வன்முறை கலாச்சாரத்தை உடனடியாக கட்டுப்படுத்துவோம்.” என பொலிஸ் அதிகாரத்தை தம்கையில் தருமாறு சிறிசேனவிடம் அழைப்பு விட்டார்.

சமூக பிரச்சினைக்கு எந்த முற்போக்கான தீர்வையும் வழங்க முடியாத சிறிசேன ஆட்சி, மீண்டும் வடக்கில் பொலிஸ் ரோந்து நடவடிக்கையை பலப்படுத்தியுள்ளது. யாழ் குடாநாட்டில் சிறு சிறு சமூக குற்றங்களை தடுக்கும் சாக்குப் போக்கில், பொலிஸ் விசேட அதிரடிப்படை நிலைகொள்ள செய்யப்பட்டுள்ளது. திடீர் சோதனைகள், விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தையே பொலிஸ் பிரதானமாக இலக்கு வைத்துள்ளது. மாணவர்களின் நடவடிக்கைகளை உளவு பார்க்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்குள்ளும் பொலிசும் இராணுவமும் புலனாய்வுத் துறையினரை நுழைத்து வைத்துள்ளன.

நேற்று ஊடகங்கள் முன் தோன்றிய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கொலைகளின் தன்மை பற்றி விபரிக்கையில், “பொலிஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் போன்ற சம்பவங்கள் தெற்கிலும் நடந்துள்ளன”, “அதனால் இதை பிரத்தியேகமானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது”, என அறிவுறுத்தினார். பின்னர் வளர்ச்சியடைந்துவரும் வர்க்கப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு தனது தயார்நிலையை தெரிவிக்கையில், “தேவைப்படின் பொலிசுக்கு உதவி செய்ய இராணுவம் தயாராக உள்ளது” என திமிர்த்தனமாக அறிவித்தார்.