ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US-directed assault on Mosul and imperialist hypocrisy

மொசூல் மீதான அமெரிக்கா-வழிநடத்தும் தாக்குதலும், ஏகாதிபத்திய பாசாங்குத்தனமும்

James Cogan
17 October 2016

ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசிடம் (ISIS) இருந்து வடக்கு நகரமான மொசூலை மீட்டுக் கைப்பற்றுவதற்கான, நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வந்த அமெரிக்கா-வழிநடத்தும் தாக்குதல் தொடங்கியுள்ளது. திங்களன்று காலை, ஈராக்கிய பிரதம மந்திரி ஹைதர் அல்-அபாதி தேசிய தொலைக்காட்சியில் அறிவிக்கையில், “வெற்றிகரமாக இந்நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதை இன்று நான் அறிவிக்கிறேன்,” என்றார்.

மொசூல் மீதான இத்தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தீர்மானங்களின் எல்லையில்லா பாசாங்குத்தனத்தை எடுத்துக்காட்டுவதுடன், ரஷ்ய-ஆதரவிலான சிரிய படைகள் இஸ்லாமிய போராளிகளிடமிருந்து அலெப்பொவின் கிழக்கு பகுதிகளை மீண்டும் கைப்பற்ற முயன்று வருகின்ற நிலையில், அப்பாவி மக்களுக்கு எதிரான அவற்றின் "போர் குற்றங்களைக்" குற்றஞ்சாட்டும் இடைவிடாத ஊடக செய்திகளையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் மற்றும் பாக்தாத்தில் உள்ள அதன் கைப்பாவை அரசாங்கமும் ஈராக்கில் ஒரு மிகப்பெரிய நகருக்கு எதிராக மிகக் கொடூரமான தாக்குதலை தொடங்கியுள்ளன, அந்நகரில் 600,000 குழந்தைகள் உட்பட சுமார் 1.5 மில்லியன் பேர் சிக்கியுள்ளனர்.

ஈராக்கிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் Lise Grande வாரயிறுதியில் நியூ யோர்க் டைம்ஸ் க்கு கூறுகையில், “மொசூல் நடவடிக்கை ஒரு மோசமான சூழலில் மிகவும் சிக்கலானதாகவும் மற்றும் 2016 இல் உலகிலேயே மிகப் பெரியதாகவும் ஆகக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபை ஆழமாக கவலை கொண்டுள்ளது, மற்றும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படலாமென நாங்கள் அஞ்சுகிறோம்,” என்றார்.

இவ்வாறு இருக்கின்ற போதினும் நியூ யோர்க் டைம்ஸ் அதன் அக்டோபர் 14 தலையங்கத்தில் “மொசூலுக்காக வரவிருக்கின்ற போரை" வரவேற்றது. மனித உயிரிழப்பைக் கருத்தில் கொள்ளாமல், அந்நகரம் "பயங்கரவாதிகளது ஆட்சியிலிருந்து" “விடுவிக்கப்பட" வேண்டும் என்று அது அறிவித்தது. வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், அதன் தலையங்கம், "250,000 க்கும் அதிகமான மக்களின் வாழ்வை அச்சுறுத்தும்" வகையில் அலெப்பொ தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா இருப்பதால், ரஷ்யாவை ஒரு "சட்டத்தை மீறிய அரசாக"  முத்திரை குத்தியது.

ஏகாதிபத்திய பாசாங்குத்தனங்களை பொறுத்த வரையில், இவ்விரு சண்டைகளுக்கு இடையிலான வித்தியாசம் என்னவென்றால் அலெப்பொவில் தாக்குதலின் கீழ் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளால் ரஷ்ய ஆதரவிலான சிரிய அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் முயற்சியில் ஆதரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது "போர் குற்றங்களாகி" விடுகின்றன.

அதற்கு நேரெதிராக, சிரியாவில் அமெரிக்க தலைமையிலான சூழ்ச்சிகளின் விளைவாக உருவான ISIS, 2014 இல் மேற்கு மற்றும் வடக்கு ஈராக்கின் பெரும் பகுதிகளில் கைப்பற்றிய ஆயுதங்கள் மற்றும் நியமனங்களைக் கொண்டு, பாக்தாத் மற்றும் குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க-ஆதரவிலான கைப்பாவை ஆட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், வாஷிங்டன் அதையொரு தடையாக கருதுகிறது. இதனால், மொசூலை திரும்ப கைப்பற்றும் நிகழ்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதென்பது "அதன்போக்கில் நடந்த சேதாரமாக" உதறிவிடப்படும்.

சிரியா மற்றும் ஈராக் இரண்டிலும், அமெரிக்காவின் நோக்கங்கள் ஒன்று தான்: அதாவது உலகின் அந்த முக்கிய எண்ணெய் உற்பத்தி பிராந்தியத்தின் மீது அதன் மேலாதிக்கத்தை நிறுவுவது.

மொசூல், 20,000 வரையிலான ஈராக்கிய இராணுவ சிப்பாய்கள் மற்றும் 10,000 குர்திஷ் பெஷ்மெர்கா துருப்புகளால் தாக்கப்பட்டு வருகின்றது, சுமார் 6,000 ஈராக்கிய பொலிஸ், ஆயிரக் கணக்கான ISIS-எதிர்ப்பு கிறிஸ்துவ, துருக்கிய மற்றும் சுன்னி போராளிகள் மற்றும் பாக்தாத் ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஷியைட் அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு விசுவாசமான ஆயிரக் கணக்கான போராளிகளாலும் அது கூடுதலாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

திரைக்குப் பின்னால், அமெரிக்க இராணுவம் கண்காணித்து வருவதுடன், நடைமுறையளவில் அத்தாக்குதலுக்கு கட்டளை அனுப்பி கொண்டிருக்கிறது. அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஆஸ்திரேலிய மற்றும் ஜோர்டானிய போர்விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆற்றொணா நிலையில் உள்ள அரசாங்க படைகளுக்கு வான்வழி ஆதரவை வழங்கி வருகின்றன. அமெரிக்க கடற்படை மற்றும் பிரெஞ்சு இராணுவ பிரிவுகள் பீரங்கி குண்டுகளை வழங்கி ஆதரவளித்து வருகின்றன. நூற்றுக் கணக்கான அமெரிக்கர்கள், பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய, ஜேர்மன் மற்றும் இத்தாலிய சிறப்பு படைகளும் மற்றும் "பயிற்றுவிப்பாளர்களும்" இப்போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஈராக்கிய மற்றும் குர்திஷ் படைபிரிவுகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதுடன், விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களை வழிநடத்தி வருகின்றனர்.

அலெப்பொவில் ரஷ்ய ஆட்சியும் மற்றும் அதன் சிரிய வாடிக்கையாளர்-அரசும் பொறுப்பாகின்ற ஒவ்வொரு அட்டூழியத்தையும் விடவும், ஈராக்கில் அமெரிக்க ஆதரவிலான படைகள் செய்வது அனேகமாக அதிகமாக இருக்கும் மற்றும் சரிசமம் என்பதையும் விட கூடுதலாக இருக்கலாம். இந்தாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய ஈராக்கிய நகரமான பல்லூஜா மீதான தாக்குதல் உட்பட கடந்த கால அனுபவங்கள், மொசூல் மீதான தாக்குதலின் விளைவைக் குறித்து மிக சிறியளவே சந்தேகத்தை விட்டுவைக்கின்றன. அப்பாவி பொதுமக்கள் எத்தனை பேர் அவர்களின் வீடுகளில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலையின்றி, ஒட்டுமொத்த நகர்புறமும் வான்வழி மற்றும் தரைவழி இரண்டு விதத்திலும் இடிபாடுகளாக ஆக்கப்படும். அந்நகரின் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அழிக்கப்படும். மருத்துவ சேவைகள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள் செயலிழந்து போகுமளவிற்கு செய்யப்படும்.

மொசூலின் சாத்தியமான அழிவை மற்றும் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்படுவதை, தவிர்க்க முடியாததாக, வெறித்தனமான ISIS எதிர்ப்பைக் காரணம்காட்டி, முன்கூட்டியே நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்நகரில் வெறும் சில நூறாயிரத்தில் இருந்து 10,000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் ISIS போராளிகள் இன்னமும் அங்கே இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. நீடித்த மற்றும் வீதிக்கு வீதி சண்டை இடுவதற்காக, ISIS இன் பரந்த தயாரிப்புகளைக் குறித்த அதிபயங்கரமான விபரங்கள் காணக்கிடைக்கின்றன. கட்டிடங்களும் மற்றும் கார்களும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளன, பரவலாக கண்ணிவெடிகள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் பிரதான பாதைகளின் ஓரங்களில் சாலைமறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்று மொசூல் குடிவாசிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க மற்றும் ஈராக்கிய அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். அந்நகரின் பல்வேறு பகுதிகளை இணைத்து ஒரு நிலத்தடி வலையமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

வியட்நாம் நகரமான Bến Tre ஐ குறித்த குற்றகரமான 1968 அமெரிக்க இராணுவ அறிக்கையை நினைவுகூர்ந்தால், “மொசூலைக் காப்பாற்ற" அதை அழித்தாக வேண்டியிருக்கும்.

உயிர்கள் மீதான மற்றும் அந்நகர மக்களின் நல்வாழ்வு மீதான அலட்சியம், சனியன்று இரவு அந்நகரில் வீசப்பட்ட பத்தாயிரக் கணக்கான துண்டறிக்கைகளில் வெளியானது. ராய்டர்ஸ் அறிக்கையின்படி, ஒரு துண்டறிக்கை அறிவுறுத்தியதாவது: “அமைதியாக இருங்கள், அது [குண்டுவீச்சுக்கள்] வெறுமனே ஒரு விளையாட்டு என்றோ அல்லது மழைக்கு முந்தைய ஒரு இடி என்றோ உங்கள் குழந்தைகளுக்கு கூறுங்கள்… குழந்தைகளின் மனநிலையைப் பேணுவதற்காக பெண்கள் பயந்து அலற வேண்டாம்,” என்றது குறிப்பிட்டது. மற்றொன்று அச்சுறுத்தும் வகையில் எச்சரித்தது: “நீங்கள் இராணுவ படைப்பிரிவைக் கண்டால், குறைந்தபட்சம் 25 மீட்டர் தள்ளி நில்லுங்கள் மற்றும் திடீரென நகர வேண்டாம்,” என்றது குறிப்பிட்டது.

அமெரிக்க தலைமையிலான படைகளால் ISIS வசமிருந்து தப்பித்து "சுதந்திரமடையும்" ஈராக்கியர்கள், வாழ்வதற்கு தகுதியற்ற அந்நகரின் இடிபாடுகளில் இருந்து தப்பிக்க, நெரிசல் மிகுந்த மற்றும் போதிய வசதிகளற்ற அகதிகள் முகாம்களுக்கு தப்பிச் செல்ல நிர்பந்திக்கப்படுவார்கள். அதுபோன்றவொரு நிலைமையை சமாளிக்க, மருத்துவமனைகள், உணவு மற்றும் குடிநீர் வசதிகளைக் கொண்ட முன்கூட்டியே கட்டிய முகாம் நகரங்கள் போன்ற எந்தவித தீவிர தயாரிப்புகளும் செய்யப்படவில்லை. காயங்கள், தட்பவெப்பநிலை, நோய், உடல்வறட்சி அல்லது பட்டினி ஆகியவற்றால் பத்தாயிரக் கணக்கானவர்கள் இறக்கக்கூடுமென நிவாரண உதவி அமைப்புகள் அஞ்சுகின்றன.

உலகின் மிகவும் வளங்கள் நிறைந்த மற்றும் மூலோபாயரீதியில் முக்கியமான பிரதேசங்களில் ஒன்றின் மீதான அதன் மேலாதிக்கத்திற்கான வேட்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இராணுவ எந்திரமும் 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஈராக்கிய மக்கள் மீது தொடுத்துள்ள கொடூரங்கள் மற்றும் குற்றங்களின் நீண்ட பட்டியலில் இந்த மொசூல் மீதான தாக்குதலும் சேர்ந்துவிடும்.

1991 வளைகுடா போர்; அதற்கடுத்து ஈராக் மீது திணிக்கப்பட்ட தடையாணைகள்; செறிவார்ந்த யுரேனிய ஆயுதங்களின் தூய்மைகேட்டின் மரபியம்; 2003 படையெடுப்பு; அமெரிக்க ஆக்கிரமிப்பால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட மரணகதியிலான சுன்னி-ஷியைட் பிரிவினைவாத போர்முறை; மற்றும் 2010-2011 இல் பெரும்பாலான அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறப்பட்ட பின்னர் அமெரிக்க ஆதரவிலான ஈராக்கிய அரசாங்க படைகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றால் உயிரிழந்தவர்களோடு இப்போது உயிரிழக்கும் ஆயிரக் கணக்கானவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

நம்பகான மதிப்பீடுகள் 25 ஆண்டுகள் காலத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்த மரண எண்ணிக்கையை 1.5 மில்லியனுக்கு அதிகமாக மற்றும் ஏறத்தாழ அதிகபட்சமாக இரண்டு மில்லியனாக வைக்கிறது. 2003 இல் இருந்து மட்டுமே கூட, குறைந்தபட்சம் நான்கு மில்லியன் ஈராக்கியர்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர் அல்லது அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக ஈராக் மற்றும் மத்திய கிழக்கின் பெருந்திரளான மக்களைப் பாதுகாப்பதற்கு, ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான போராட்டத்தை முன்னிலையில் அமைக்க வேண்டும்.