ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

British pound plummets over “hard Brexit” fears

“கடுமையான பிரிட்டன் வெளியேற்றம்" மீதான அச்சங்களால் பிரிட்டிஷ் பவுண்டு மதிப்பு சரிகிறது

By Nick Beams
8 October 2016

அதிகரித்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்கள் மற்றும் நிதியியல் சந்தை கொந்தளிப்புக்கு இடையிலான அதிகரித்து வரும் இடைதொடர்பானது, வெள்ளியன்று ஆசிய நிதிச் சந்தைகள் திறந்ததும் வர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே பிரிட்டிஷ் பவுண்டு சரிந்தபோது, தெளிவான வெளிப்பாட்டை கண்டது.

ஐக்கிய இராஜ்ஜியத்தின் "கடுமையான வெளியேற்றம்" (hard Brexit) குறித்து, அதாவது பொதுச் சந்தையை அணுக அனுமதிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வெளியேற்றத்திற்கு பதிலாக பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முற்றிலுமாக உடைத்துக் கொள்ளும் என்ற செய்திகள் வெளியானதும், இரண்டே நிமிடங்களில் பவுண்டு 6 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தது.

பிரிட்டிஷ் வெளியேற்றம் மீதான விதிமுறைகள் ஏப்ரல் வாக்கில் தொடங்குமென பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரெசா மே கூறியுள்ள நிலையில், அந்த விதிமுறைகள் மீதான பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் ஒரு கடுமையான நிலைப்பாடு குறித்த செய்திகளோடு இந்த வீழ்ச்சி பொருந்தி இருந்தன.

“ஐக்கிய இராஜ்ஜியம் வெளியேறுவதென்று முடிவு செய்துவிட்டது, கடுமையான வெளியேற்றமாக கூட இருக்கலாமென நான் நினைக்கிறேன்,” என்று ஹோலாண்ட் தெரிவித்தார். “அவ்வாறாயின், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் விருப்பத்திற்கேற்ப அதே வழியில் நாமும் செல்ல வேண்டும். நாம் இந்த உறுதிப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை கோட்பாடுகளை குழப்பத்திற்கு உள்ளாக்கி விடுவோம்,” என்றார்.

ஒரு பலமான நிலைப்பாடு இல்லையென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமைப்பாடுகளுக்கு பொறுப்பாகாமல் அதன் அங்கத்துவத்தின் ஆதாயங்களை மட்டும் பெறும் விதத்தில் ஏனைய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறக் கோரும் என்று ஹோலாண்ட் எச்சரித்தார்.

“அங்கே அச்சுறுத்தல் இருக்க வேண்டும், அங்கே ஆபத்து இருக்க வேண்டும், அங்கே விலைகொடுக்க செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என்று ஹோலாண்ட் தெரிவித்தார். “இல்லையென்றால் சரியாக முடிவடையாத ஒரு பேரம்பேசலில் நாம் நின்றிருப்போம்,” என்றார். வியாழனன்று இரவு, ஆசிய சந்தைகள் திறந்தபோது, ஒரு இரவு உணவு விருந்தில் அவரது கருத்துக்கள் வந்தன.

பவுண்டு அதன் வீழ்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலான இழப்புகளில் இருந்து அது மீண்டு விட்டது என்றாலும், வீழ்ச்சியை குறித்த ஆரம்ப செய்திகள், அதை, வர்த்தகத்தில் தவறுதலாக ஏற்பட்ட "எழுத்துப்பிழை" அல்லது தானியங்கி வர்த்தக வழிமுறையில் ஏற்பட்ட குளறுபடியாக சாட்டிவிட்டன. ஆனால் அதன் விளைவுகள் ஆசிய சந்தைகளில் வர்த்தக வீழ்ச்சியை அதிகரித்திருந்தது.

எவ்வாறிருப்பினும் பிரிட்டன் வெளியேறுவது மீதான வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்பட்ட ஜூன் 24 இல் ஏற்பட்ட 11.1 சதவீத பவுண்டு வீழ்ச்சிக்குப் பிந்தைய இந்த மிகப் பெரிய வேகமான வீழ்ச்சியைப் பின்தொடர்ந்து, இவ்வாரம் நெடுகிலும் பவுண்டு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தது. வெகுஜன வாக்கெடுப்புக்கு முந்தைய சுமார் 1.50 டாலருடன் ஒப்பிட்டால், வெளியன்று பவுண்டு மதிப்பு 1.2434 டாலருக்குத் திரும்புவதற்கு முன்னதாக ஒரு சந்தர்ப்பத்தில் 1.1841 டாலரை சென்றது. அது அந்நாளின் 1.14 சதவீத வீழ்ச்சியாகும் மற்றும் அவ்வாரத்தின் 4.2 சதவீத வீழ்ச்சியாகும்.

பிரிட்டிஷ் சான்சிலர் பிலிப் ஹாமண்ட், வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த போது, சந்தைகளை சாந்தமாக இருக்கக்கோரி ஓர் அறிக்கை வெளியிட்டார். இதழாளர்களுடன் உரையாடுகையில், அரசாங்கம் "கடுமையான வெளியேற்றத்திற்கான" மூலோபாயத்தை பின்பற்ற முடிவெடுத்துள்ளது என்பதை மறுத்தார். பிரிட்டன் தீர்மானத்தின் மீது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கான முறையான இயங்குமுறையை தொடக்கி வைக்க, ஷரத்து 50 அறிக்கை அளிப்பதற்கான நேரம் குறித்து மே வெளியிட்ட தெளிவான அறிக்கை ஒன்றுதான் மாற்றப்பட்டிருக்கும் ஒரே விடயமாக உள்ளது.

ஆனால் ஹாமண்ட் இன் கருத்துக்கள் நீண்டகாலத்திற்கு சமாதானப்படுத்தி வைக்காது. வெள்ளியன்று நிலைமையை ஒரு "கொந்தளிப்பாக" வர்ணித்து அவர் கூறுகையில், பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் கூட, இந்நிலைமை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடருமென அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறினாலும், அது தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய சுங்கத்துறையின் பாகமாக இருக்குமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. பிரிட்டன் முழுமையாக முறித்துக் கொண்டால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் வர்த்தக உறவுகள் ஐரோப்பிய ஒன்றிய சந்தை வழிவகைகளுக்கு பதிலாக, உலக வர்த்தக அமைப்பினது (WTO) வழிவகைகளின் கீழ் நடத்தப்படும்—இந்நிலைமை பிரிட்டிஷ் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்.

ஒன்றிய சுங்கத்துறை பிரச்சினை மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், பிரிட்டிஷ் அரசாங்கம் "நமது பேச்சுவார்த்தை செயல்திட்டத்தை நெறிப்படுத்தும் நடைமுறையில்" இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒரு "கடுமையான வெளியேற்றத்தை" நோக்கி நகர்ந்து வருவதைக் குறித்து பிரிட்டிஷ் வணிக தலைவர்கள் கவலையடைந்துள்ளனர். பைனான்சியல் டைம்ஸ் இல் வெளியான ஒரு செய்தியின்படி, பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பு (CBI) பிரிட்டிஷ் பிரதம மந்திரிக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ஐக்கிய இராஜ்ஜியத்தின் எந்தவொரு வெளியேற்றமும் பொது சந்தை உடனான சிறப்பு உறவுகளைப் பேணி இருக்க வேண்டுமென குறிப்பிட்டது.

ஒரே சந்தையை அணுகுவதற்கான தடையில்லா சுதந்திரம் "ஐக்கிய இராஜ்ஜிய பொருளாதாரத்தின், அதுவும் குறிப்பாக நமது உற்பத்தித்துறை மற்றும் சேவை துறைகளின், ஆரோக்கியத்திற்கு முக்கியம்" என்றும், அரசாங்கம் "எந்தவொரு சூழலிலும் இந்த [WTO] விருப்பத்தேர்வை உடனடியாக கைவிடுவதன் மூலமாக வணிகத்திற்கு நிச்சயத்தன்மையை வழங்க வேண்டும்" என்றும் CBI கூறியது.

“கடுமையான வெளியேற்றம்" மீதான அச்சங்கள், பழமைவாத கட்சியின் ஆண்டு மாநாட்டிற்கு தெரேசா மே வழங்கிய உரையில் இடம்பெற்றிருந்த வெகுஜனவாத வனப்புரைகளுடன் சேர்ந்திருந்தது, அதில் அவர் "சர்வதேச உயரடுக்கை" குறை கூறியிருந்தார்.

CBI குறிப்பிடுகையில், “இத்தகைய சிக்கலான முடிவுகள் பொருளாதார தாக்கங்கள் மீதான ஒரு நிஜமான புரிதல் மற்றும் உண்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை அதிகரிப்பதற்காக எல்லா துறைகள் மற்றும் எல்லா அளவுள்ள நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கான ஒரு தெளிவான திட்டத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தது.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னே கூறுகையில், பவுண்டின் திடீர் வீழ்ச்சி, பின்னர் அதன் மீட்சி என இவற்றை ஒரு தொழில்நுட்ப விடயமென்று அவர் கருதுவதாகவும், அது குறித்து ஒரு விசாரணை மேற்கொள்ள அவர் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பவுண்டு வீழ்ச்சிக்கு நிதியியல் சந்தை விமர்சகர்கள் அதை வெறுமனே ஒரு "கண நேர முறிவு" என்பதற்கும் கூடுதலாக பார்க்கிறார்கள் என்பதை அவர்களது விமர்சனங்கள் எடுத்துக்காட்டின.

மோர்கன் ஸ்ரான்லி மூலோபாயவாதி ஹன்ஸ் ரெடெகெர் கூறுகையில், புதிய பிரிட்டிஷ் அரசாங்கம் "கணிசமானளவிற்கு இன்னல்களை தாங்க வேண்டியிருக்கும் ஒரு பொருளாதார போக்கை புரிந்து கொண்டிருப்பதாக" தெரிகிறது மற்றும் அந்த பிரச்சினையோடு "கடுமையான வெளியேற்றம்" குறித்த பேச்சுவார்த்தையும் சேர்ந்துள்ளது.

பிரிட்டிஷ் பொருளாதாரத்திற்கு ஸ்டேர்லிங் ஸ்திரப்பாடு அவசியமாகும். இது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக இருக்கும் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு நிதியளிக்க, வெளிநாட்டு நிதிகளின் உள்வரவை சார்ந்துள்ளது. இன்னும் கூடுதலான அதிக ஸ்டேர்லிங் மதிப்பிறக்கம் குறித்து நிதியியல் சந்தைகள் அஞ்சினால், அந்த நிதி வரவுகளும் வரண்டு போகும்.

ஜேர்மன் வர்த்தக வங்கி (German Commerz bank) இன் Ulrich Leuchtmann கருத்துப்படி, ஸ்டேர்லிங்கின் பெரும் மதிப்பிறக்கம் மீதான அபாயம் அதிகரித்துள்ளது.

"ஆகவே யாரும் ஸ்டேர்லிங் விற்பனையாளர்களுக்கான ஒரு சந்தையை வழங்க விரும்பாத நிலைமைகளை நாங்கள் அதிகமாக பார்க்க விரும்புகிறோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை,” என்றவர் பைனான்சியல் டைம்ஸ் க்கு தெரிவித்தார். “இந்த கண நேர வீழ்ச்சி, சந்தை கோளாறு என்பதையும் கடந்தது. நடப்பு கணக்கு நிதிவரவு 'திடீரென நின்றுபோவதற்கு' இப்போது நிறைய வாய்ப்புள்ளது என்பதற்கு அதுவொரு சமிக்ஞையாகும்,” என்றார்.

ஸ்டேர்லிங் வீழ்ச்சியின் தாக்கம் ஏனைய நிதியியல் சந்தைகளிலும் பிரதிபலித்தது. ஐக்கிய இராஜ்ஜிய பங்குச் சந்தை அதிகரித்ததென்றால் அதற்கு காரணம் பவுண்டின் குறைந்த மதிப்பினால் பங்குகள் மலிவாக இருந்தன என்பதனால் ஆகும். எவ்வாறிருப்பினும் அளவுகோலாக விளங்கும் 10-ஆண்டு அரசு பத்திரங்கள் மீதான நஷ்டம் —இது அதன் விலைக்கு நேரெதிரான தொடர்பில் நகரும்— 11 அடிப்படை புள்ளிகள் (அதாவது 0.11 சதவீத புள்ளிகள்) உயர்ந்து, அவ்வாரத்திலேயே மிக உயர்ந்தளவில் 23 அடிப்படை புள்ளிகளை அடைந்தது, இது வெறும் 1 சதவீதத்திற்கும் குறைவாகும்.

இலண்டன் நகரம் நிதியியல் ஊகவணிகத்தின் முன்னணி உலகளாவிய மையங்களில் ஒன்றாக விளங்கும் நிலையில், பவுண்டு வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்தால், நிதியியல் ஊகவணிகத்திற்கான மலிவு பண உள்வரவை முன்பினும் அதிகமாக சார்ந்துள்ள நிதியியல் சந்தைகளில் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.