ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European far right hails Trump’s win

ஐரோப்பிய அதி-வலதுகள் ட்ரம்ப்பின் வெற்றியை போற்றுகின்றன

By Alex Lantier
10 November 2016

ஐரோப்பாவெங்கிலும் உள்ள அதி-வலது கட்சிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் பெற்ற ஆச்சரியமான வெற்றியை தாங்களும் மேலே வந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதற்கான சான்றாகக் கண்டு புகழ்ந்தனர்.

பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணி (FN), சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் போர் ஆகிய கொள்கைகளுக்கு எதிரான பாரிய கோபத்தின் மத்தியில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலில் இதுவும் கூட ஆட்சிக்கு வந்துவிடக் கூடும், —பிரான்சில் FN இன் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காக ட்ரம்ப்பின் வெற்றியைப் பாராட்டியது.

“இன்றிரவு நடந்தது உலகின் முடிவல்ல, மாறாக ஒரு உலகத்தின் முடிவாகும்” என்று FN இன் தலைவரான மரின் லு பென் அறிவித்தார். அவர் மேலும் கூறினார், “அமெரிக்க மக்களின் முடிவானது சுதந்திரத்தின் வெற்றியாக பொருள்கொள்ளப்பட வேண்டும்... டொனால்ட் ட்ரம்ப் தேர்வானது நமது நாட்டிற்கு நல்ல செய்தியாகும்.”  

அவரது தந்தையும் FN இன் முன்னாள் தலைவருமான ஜோன்-மரி லு பென் —இவர் குற்றம் உறுதிசெய்யப்பட்ட யூதப்படுகொலை மறுப்பாளரும், பிரான்சுக்கு எதிராக 1954-62 வரை போர் நடந்த காலத்தில் அல்ஜீரிய சுதந்திரப் போராளிகளை சித்திரவதை செய்த பாராசூட் வீரர்களது அலகுகளுக்கு தலைமை கொடுத்தவரும் ஆவார்— ட்ரம்பின் வெற்றியை “பிரான்சில் உட்பட பூகோளமயமாக்கத்திற்கு ஆதரவான அரசியல்-ஊடக அமைப்புகளுக்கு புட்டத்தில் கொடுக்கப்பட்ட அருமையான அடி” என்று வருணித்தார். அவர் மேலும் கூறினார், “இன்று அமெரிக்கா, நாளை, பிரான்ஸ். துணிந்து நிற்போம்!”

இப்போது FN இன் இரண்டாமிடத் தலைவரான ஃப்ளோரியான் பிலிப்போ (Florian Philippot) க்கு ஆலோசனையளிப்பவராய் இருந்து வரும், முன்னாள் PS அமைச்சரான ஜோன் பியர் செவெனுமோ (Jean-Pierre Chevènement) கொண்டாடுகையில்: “டொனால்ட் ட்ரம்பின் வெற்றி நிச்சயமாக ஸ்தாபகத்திற்கான ஒரு தோல்வியாகும்” என்றார்.

இத்தகைய கருத்துகள் ஐரோப்பா முழுமையிலும் எதிரொலித்தன. ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவரும் (UKIP) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்காக முன்னிலையில் நின்று பிரச்சாரம் செய்தவருமான நைஜல் ஃபராஜ் (Nigel Farage) —இந்தக் கோடையில் அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றிக்கு ஆதரவாகவும் கூட இவர் பிரச்சாரம் செய்தார்— இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவேயும் ட்ரம்பின் வெற்றியை போற்றத் தொடங்கி விட்டார். “பிரெக்ஸிட் தான் மிகப் பெரிய விடயம் என்று நினைத்தேன் ஆனால் கண்ணா, இது அதனை விடப் பெரிதாய் இருக்கும் போலிருக்கிறது” என்று ITV News யிடம் ஃபராஜ் தெரிவித்தார்.

ட்விட்டரில் அவர் எழுதினார்: “2016 ஆம் ஆண்டு இரண்டு பெரும் அரசியல் புரட்சிகளின் ஆண்டாயிருக்கும் போல் தெரிகிறது: டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி பிரெக்ஸிட்டை விடவும் பெரிது.”

நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியின் அதி-வலது அரசியல்வாதிகளிடம் இருந்தும் இதேபோன்ற கருத்துக்கள் வந்திருந்தன. அதிவலது ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியைச் சேர்ந்த Beatrix von Storch, ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவியின் கீழ், அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் மோதல்கள் உருவாகும் என்று தலைமை ஜேர்மன் அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தி விட்டு, ட்ரம்ப்பின் வெற்றி “வரலாற்றுசாதனை” என்று அழைத்தார்.

“ஸ்தாபகத்திற்கு மட்டுமே இது ஆச்சரியம், என்னுடைய பார்வையில் இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாகவே இருந்தது” என்று Die Welt இடம் கூறிய அவர் மேலும் கூறினார்: “தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் கூறிய பலவும் அதிமுக்கியத்துவத்துடன் பார்க்கப்பட வேண்டும். சமையல் செய்தவுடன் ஆவிபறக்க சாப்பிட்டு விடப்படாது. ட்ரம்ப் வெளியிலிருந்து வந்தவராகக் கூறப்பட்டிருந்தாலும் கூட, அவர் அமெரிக்காவுக்கான ஒரு புதிய தொடக்கத்தை தான் விரும்புவதை, குறிப்பாக அவர் வாக்குறுதியளித்த வெளியுறவுக் கொள்கை அத்துமீறாமைகள் மூலமாக, நடந்துகாட்ட வேண்டும்.”

இஸ்லாமை “பாசிச வகையானது” என்று கண்டனம் செய்த, நெதர்லாந்தின் அதி-வலது கட்சியான சுதந்திரக் கட்சி (PVV) இன் தலைவரான Geert Wilders, ட்ரம்ப்பின் வெற்றி “எங்களைப் போன்ற கட்சிகளுக்கு மாபெரும் ஊக்கமளிப்பதாகும்” என்று ட்விட்டரில் குதூகலித்திருந்தார்.

மத்திய கிழக்கில் இருந்தும் ஆபிரிக்காவில் இருந்தும் போர்களுக்குத் தப்பி ஓடி வந்த ஆயிரக்கணக்கான அகதிகள் மத்திய தரைக் கடலில் மூழ்கி உயிரிழக்க இட்டுச் சென்ற குடியேறுவோருக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் மூர்க்கமான கொள்கைக்கு நெருக்குதலளித்ததில் இவர் ஒரு முன்னிலைப் பாத்திரம் வகித்த ஹங்கேரியின் ஜனாதிபதி விக்டர் ஓர்பன், ஆச்சரியத்திற்கு இடமின்றி ட்ரம்பின் வெற்றியை வழிமொழிந்தார். ஹங்கேரியின் இந்த அதி-வலது ஜனாதிபதி நீண்டகாலமாகவே ட்ரம்பை ஆதரித்து வருபவராவார், ஜூலையில் அவர் அறிவித்திருந்தார்: “குடியரசுக் கட்சியின் வேட்பாளரான திரு.ட்ரம்ப் ஆலோசனையளிக்கின்ற குடியேற்ற மற்றும் வெளியுறவுக் கொள்கை ஐரோப்பாவுக்கு நல்லது, ஹங்கேரிக்கு இன்றியமையாதது ஆகும்.”

நேற்று ட்ரம்பின் வெற்றிக்கான பதிலிறுப்பாக, ஓர்பன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதினார்: “வாழ்த்துக்கள்! என்னவொரு மகத்தான செய்தி. ஜனநாயகம் இன்னும் உயிர்வாழ்கிறது.”

இத்தகைய தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான அமைப்புகள் ட்ரம்ப்பின் வெற்றியை போற்றிப் பாராட்டுகின்றன என்ற உண்மையானது, அமெரிக்கத் தொழிலாளர்கள் ட்ரம்ப்பின் நிர்வாகத்திடம் இருந்து வெகு விரைவில் நச்சுத்தனமான தாக்குதல்களுக்கு முகம்கொடுக்கவிருக்கின்றனர் என்பதன் ஒரு எச்சரிக்கையாகும்.

ஒரு வாய்ச்சவடால் பில்லியனர் மற்றும் ஏமாற்றுப் பேர்வழி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் அமெரிக்காவில் ஜனநாயகத்தின் பொறிவே வெளிப்பட்டிருக்கிறது, ஆனாலும், இது அட்லாண்டிக் கடந்து துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. வோல் ஸ்ட்ரீட் பொறிவு கண்டு ஒரு ஆழமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி தோன்றி எட்டு ஆண்டுகளின் பின்னர், ஐரோப்பாவெங்கும் பெருகிவருகின்ற பாரிய அதிருப்தியை ஐரோப்பாவில் இருக்கும் அதி-வலது கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக எவ்வாறு சுரண்டிக் கொள்ளக் கூடும் என்பதை ட்ரம்ப்பின் வெற்றி விளங்கப்படுத்திக் காட்டுகிறது.

முஸ்லீம்களையும் வெளிநாடுகளைகளையும் கண்டனம் செய்தும், அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியால் சூழப்பட்டுள்ளது என்ற பாரிய உணர்வுக்கு வாய்வீச்சுடன் விண்ணப்பம் செய்தும், ஒபாமா நிர்வாகத்திற்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கும் எதிராய் நிலவிய பாரிய வெறுப்புணர்ச்சியை ட்ரம்ப் சுரண்டிக் கொண்டார். “நம்பிக்கை” மற்றும் “மாற்றம்” ஆகியவற்றை வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்திருந்த ஒபாமா முடிவில்லாத போர்களையும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களின் மீது தாக்குதல்களையும் நடத்தினார், அதற்கு அமெரிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து எந்தவித அர்த்தமுள்ள எதிர்ப்பும் இருந்திருக்கவில்லை. 

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்குப் போட்டியிட்ட பேர்ணி சாண்டர்ஸ் குறிப்பாக ஒரு அழிவுகரமான பாத்திரத்தை வகித்தார், ஒரு “சோசலிஸ்ட்” என்று காட்டிக்கொண்டு “பில்லியனர் வர்க்கத்திற்கு” எதிராக ஒரு “அரசியல் புரட்சி”யை நடத்தப் போவதாக வாக்குறுதியளித்தார், பின் வோல் ஸ்ட்ரீட்டின் கைக்கூலியான கிளிண்டனை வழிமொழிந்தார். இடது-சாரி மனோநிலையை இவ்வாறு கழுத்தை நெரித்தமையானது அழிவுகரமான பின்விளைவுகளைக் கொண்டிருந்ததாய் நிரூபணமானது. ஜனநாயகக் கட்சி எதிர்பார்த்தோ அல்லது விரும்பியோ இராத ஒபாமாவுக்கு எதிரான எதிர்ப்பின் அதிகரிப்பை சிடுமூஞ்சித்தனத்துடன் சுரண்டிக் கொண்ட பின்னர், வாய்வீச்சுடன் அந்த மனிதரின் ஒரு நண்பராக காட்டிக் கொண்டதன் மூலமாக சமூக கோபத்திலிருந்து ட்ரம்ப் ஆதாயமடைவதற்கான களத்தை சாண்டர்ஸ் திறந்து விட்டார்.

தேர்தலில் முன்னேற்றம் காண்பதற்கு ட்ரம்ப் பயன்படுத்தியதைப் போன்ற அதே உத்திகளையே ஐரோப்பிய அதிவலதுகளும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதைக் காண மிகப்பெரும் உட்பார்வையெல்லாம் அவசியமில்லை. எட்டு ஆண்டு கால ஆழமான பொருளாதார மந்தநிலைக்கும், அத்துடன் பிரான்சில் PS தொடங்கி ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் கிரீசில் PASOK கட்சி வரையிலும் சமூக ஜனநாயகக் கட்சிகளால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கும் பின்னர், ஐரோப்பிய தொழிலாள வர்க்க்கத்தின் மத்தியில் ஒரு வெடிப்பார்ந்த கோபம் நிலவிக் கொண்டிருக்கிறது.

இதில் பல்வேறு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் - கிரீஸ், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் அதனைக் கடந்தும் தொழிலாளர்கள் தங்களது வருமானத்தில் இரட்டை இலக்க வீழ்ச்சிகளைக் கண்டிருந்த நிலையிலும், அத்துடன் கண்டமெங்கிலும் பாரிய வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருந்த நிலையிலும், இவை அதிகபட்சமாய் ஒரு சில அடையாள ஆர்ப்பாட்டங்களை மட்டுமே ஒழுங்கமைத்ததோடு, அவற்றுக்கு உடந்தையாக இருந்திருக்கின்றன.

பிற்போக்குத்தனமான போலி-இடது கட்சிகளின் ஒரு தட்டின் பாத்திரமே பிரதான முட்டுக்கட்டையாக இருந்தது, இக்கட்சிகள் மாற்றாக தங்களைக் காட்டிக் கொண்ட அதேநேரத்தில் அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்காய் வேலைசெய்து கொண்டிருந்தன. சிரிசா (தீவிர இடதுகளின் கூட்டணி) அனுபவத்தில் இது மிகவும் அதிர்ச்சிதரும் வடிவத்தை எடுத்தது, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதியளித்து கிரீசில் சென்ற ஆண்டு ஆட்சிக்கு வந்த இக்கட்சி, சிக்கன நடவடிக்கைக்கு எதிராக கிரேக்க மக்கள் மீண்டும் மீண்டும் அளித்த வாக்குகளை கழுத்துநெரித்து விட்டு முன்கண்டிராத அளவுக்கான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்தது.

இதுபோன்ற கட்சிகள் தாங்களே சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்ற அல்லது திணிக்கின்ற அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான போராட்டங்கள் எழுவதைத் தடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்ற வரையிலும், இது FN, UKIP, மற்றும் PVV போன்ற சக்திகள் வாய்வீச்சைக் கொண்டு தங்களை ஜனரஞ்சக மாற்றாகக் காட்டிக் கொள்வதற்கு பாதை அமைத்துக் கொடுக்கிறது.