ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Europe reacts to US election with fear and apprehension

அமெரிக்க தேர்தல்களுக்கு ஐரோப்பா பயத்துடனும் பீதியுடனும் எதிர்வினையாற்றுகிறது

By Peter Schwarz
5 November 2016

வெறுப்பு, நடுக்கம் மற்றும் பயத்தின் ஒரு கலவையோடு ஐரோப்பா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு எதிர்வினையாற்றி வருகிறது. பல விமர்சகர்களும் அரசியல் திருப்புமுனை வரலாற்று வீதத்தில் நிகழ்ந்து வருகிறதென்ற உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

கடந்த 70 ஆண்டுகளாக ஐரோப்பிய கொள்கையில் ஆளுமை செய்திருந்த அட்லாண்டிக்கிற்கு இடையிலான நாடுகளது கூட்டணி முடிவுறுவதற்கான ஒரு முன்னறிவிப்பாக இத்தேர்தலை பலர் குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவுடனான அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி, இரண்டு உலக போர்களில் ஒன்றோடொன்று சண்டையிட்ட ஏகாதிபத்திய சக்திகளை ஒன்றிணைத்ததோடு மட்டுமின்றி, அது ஐரோப்பாவின் ஸ்திரப்பாடு மற்றும் வர்க்க போராட்டத்தை தணித்து வைப்பதிலும் பங்களிப்பைச் செய்தது.

அவ்விதத்தில் பார்த்தால், இந்த அமெரிக்க தேர்தல் ஐரோப்பாவில் மிகப் பெரிய புதிய வர்க்க போராட்டங்கள் வரவிருப்பதை முன்னறிவிக்கிறது. பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் எழுதுகிறது: “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்வு செய்வதில் இந்தளவிற்கு கூர்மையும் மற்றும் இந்தளவிற்கு பெரும் போட்டித்தன்மையும் அரிதாகவே இருந்துள்ளது… கடந்த 70 ஆண்டுகளின் சர்வதேச ஒழுங்கமைப்பு சிதறி வருகிறது, அனேகமாக உடைந்து வருவதாகவும் இருக்கலாம்.”

ஜேர்மன் SpiegelOnline குறிப்பிடுகையில், “நமது உலகம் ஆரம்ப காலகட்ட மோதல்கள் மற்றும் போர்களில் இருந்து இப்போது வேறுபட்டதாக தெரிந்தாலும், அங்கே நிறைய நிறைய சமாந்தரங்கள் உள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் ஒரு புதிய உலகளாவிய பேரழிவைத் தூண்டிவிடலாம்” என்றது குறிப்பிட்டது.

ட்ரம்ப் இன் வெற்றி, ஓர் அணுஆலை பேரழிவுக்கு ஒத்த அரசியல் சம்பவமாக கருதப்படுகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தினது வெளியுறவுக் கொள்கை குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன என்றாலும், அவரது "முதலிடத்தில் அமெரிக்கா" கொள்கை ஐரோப்பாவிற்கு பேரழிவுகரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

வெளியுறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சில், "அட்லாண்டிக்கிற்கு இடையிலான நாடுகளது கூட்டணியின் உயிர்பிழைப்பிற்கே" ட்ரம்ப் ஐ "ஓர் அச்சுறுத்தலாக" கருதுகிறது. அது அக்டோபர் 12 இல் பிரசுரித்த ஆவணம் ஒன்றில் குறிப்பிடுகையில், அவர் ஜெயித்தால், “நேட்டோவிலிருந்தும் மற்றும் ஏனைய பாதுகாப்பு உத்தரவாதங்களில் இருந்தும் விலகி, உலகளாவிய சுதந்திர சந்தை முறையின் முக்கிய பகுதிகளை பலவீனப்படுத்தி, கூட்டணிகளை விட பலம் வாய்ந்த தனிநபர் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகளைக் கட்டமைத்து—ஒரு புரட்சிகரமான பதவி காலத்தை தொடங்கிவிடுவார்,” என்று குறிப்பிடுகிறது.

வழமையாக நிதானத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் ஜேர்மன் வாரயிதழ் Die Zeit, ட்ரம்ப் ஐ "வெளியுறவு கொள்கை சாகசவாதி" என்றும், "ஒரு மனநோயாளி அல்லது பாசிசவாதியாக" கூட ஆகக்கூடியவர் என்றும் கண்டிக்கிறது.

“ட்ரம்ப் இன் கணிக்கவியலாத தன்மையிலோ அல்லது, ஆலோசகர்கள், மந்திரிசபை, இராணுவம் அல்லது காங்கிரஸ் மூலமாக அதீத நிலைப்பாடுகளை 'தடுத்துவிடலாம்' என்பதிலோ ஒருவர் சார்ந்திருக்க முடியாது,” என்று அரசியல் விஞ்ஞான பயிலகம் (The Stiftung Wissenschaft und Politik) எச்சரிக்கிறது.

ட்ரம்ப் வெற்றி மீதான அச்சங்கள் பொது கருத்துக் கணிப்புக்களிலும் பிரதிபலித்தன. அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க அவர்களுக்கு தகுதி இருந்தால் ட்ரம்ப் க்கு வாக்களிப்போம் என்பவர்கள் வெறும் 4 சதவீதத்தினர் மட்டும் இருப்பதை ஜேர்மனியின் இவ்வார கருத்துக் கணிப்பு ஒன்று எடுத்துக்காட்டியது. சுமார் 77 சதவீதத்தினர் கிளிண்டனுக்கு வாக்களிப்பதாக தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும் இது எந்தவிதத்திலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மீதான ஆர்வத்தினால் அல்ல, மாறாக ட்ரம்ப் ஐ தடுப்பதற்கு மேலோங்கி உள்ள விருப்பத்தினால் ஆகும்.

அரசியல் உயரடுக்குகளிடையே கூட, ஹிலாரி கிளிண்டன் மீதான ஆர்வம் மட்டுப்பட்டுள்ளது. "அவருக்கென தவறுகள் இருந்தாலும்… வெள்ளை மாளிகையில் முதல் பெண்மணியாக ஆவதற்கு" கிளிண்டன் "சிறந்த தகுதியுடையவர்,” என்று பைனான்சியல் டைம்ஸ் அறிவிக்கிறது என்றாலும், ஏனைய பல விமர்சனங்கள் மிகவும் விமர்சனபூர்வமாக உள்ளன. கிளிண்டனின் தேர்தல் வெற்றியானது, ட்ரம்ப் இன் முக்கியத்துவத்தை உயர்த்துவதுடன் தொடர்புபட்ட மோதல்களைப் பெரிதும் தாமதப்படுத்தும் என்று அவை அறிவுறுத்துகின்றன.

ரஷ்யாவை நோக்கிய கிளிண்டனின் ஆக்ரோஷமான மனோபாவம் மற்றும் சிரியாவில் அவரது போர் மாதிரியான போக்கைக் குறிப்பாக ஐரோப்பிய மக்களின் பரந்த அடுக்குகளும் அத்துடன் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளும் முன்னுக்குப் பின் முரணாக கருதுகின்றன. ரஷ்யாவுடனான ஓர் இராணுவ மோதல் ஐரோப்பாவை ஓர் அணுஆயுத போர்க்களமாக மாற்றுமென்று மக்கள் அஞ்சுகின்ற அதேவேளையில், ஆளும் வர்க்கமோ அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் அபாயத்தில் இருப்பதாக காண்கிறது.

சான்றாக ரஷ்யாவிற்கு எதிரான தற்போதைய பொருளாதார தடையாணைகளில் ஏதேனும் தீவிரப்பாடு என்பது, பல ஐரோப்பிய நாடுகளைக் கடுமையாக பாதித்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே மோதல்களைத் தீவிரப்படுத்தும். போலாந்து, பிரிட்டன், பால்டிக் நாடுகள் என பல நாடுகள் கடுமையாக ரஷ்ய-விரோதமாக இருக்கின்றன என்றாலும், இத்தாலி, கிரீஸ், ஹங்கேரி, ஜேர்மனியின் ஒரு பகுதி என ஏனையவை இப்போதைய தடையாணைகளைத் தளர்த்தவும் மற்றும் நல்லுறவுகளுக்கும் அழுத்தமளித்து வருகின்றன.

“ரஷ்யா மீது ஜேர்மனியர்களும் அமெரிக்கர்களும் உடன்பாட்டை எட்ட தவறினாலும் மற்றும் அவ்விவகாரம் மீதான பிடி தளர்ந்தாலும், அட்லாண்டிக் இடையிலான நாடுகளது ஐக்கியம் உடைந்து, ரஷ்யாவை நோக்கிய மேற்கத்திய அணுகுமுறை குழப்பத்திற்குள் வீழும்,” என்று வெளியுறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சில் எச்சரிக்கிறது.

எவ்வாறிருப்பினும் இதற்கு ட்ரம்ப் காரணமாக மாட்டார், மாறாக ஜனாதிபதி கிளிண்டனின் கீழ் தீவிரம் மட்டுமே அடையக்கூடிய அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் விளைவாக இருக்குமென்று பல ஆய்வாளர்கள் உணர்கிறார்கள்.

“ஆனால் கிளிண்டன் பதவியேற்கும் ஒரு சம்பவமாக இருந்தாலும் கூட, ட்ரம்ப் வேட்பாளரான அனுபவத்திலிருந்து படிப்பினைகளைப் பெற தவறினால் ஐரோப்பா முட்டாளாகிவிடும். அந்நாடு, ஒப்பீட்டளவில் ஒரு வீழ்ச்சிக் காலகட்டத்திலும், அதன் கூட்டாளிகளால் நியாயமற்ற வழியில் பயன் பெற்று வருகிறது என்ற அமெரிக்காவில் அதிகரித்துவரும் உணர்வின் அதீத வடிவத்தை மட்டுமே ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்கிறார். இந்த பங்காண்மை நீண்ட காலத்திற்கு இதே போக்கில் நீடித்திருக்க முடியாது. எதிர்கால தேர்தல்களில் ட்ரம்பிய போக்குகளைச் சார்ந்து போராடுவதென்ற வாக்குறுதி என்ன அர்த்தப்படுத்துகிறது என்றால், யார் ஜனாதிபதியாக இருந்தாலும், அமெரிக்கா மேலும் அதிகமாக தன்முனைப்புள்ளதாக மாறக்கூடும் என்பதோடு, அதையொரு சர்வதேச பங்காளியாக குறைந்தளவே அனுமானிக்க முடியும் என்பதையே ஆகும்,” என்று வெளியுறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலின் ஆவணம் தொடர்ந்து குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கு இது நன்றாகவே தெரியும், ஏனென்றால் இதுபோன்றவொரு அபிவிருத்தி ஐரோப்பாவிலேயே நடந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீதான தசாப்தகால தாக்குதல்கள், ஒரு சிறிய நிதிய ஆதிக்கக் குழுவைக் கட்டுபாடின்றி செழிப்பாக்கியமை, 2008 நிதியியல் நெருக்கடியின் பேரழிவுகரமான விளைவுகள் வர்க்க விரோதங்களை உடையும் புள்ளிக்கு கொண்டு வந்துள்ளன.

அமெரிக்காவைப் போலவே, [ஐரோப்பாவிலும்] ஸ்தாபக கட்சிகள் பெரிதும் மதிப்பிழந்துள்ளன. குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரு கட்சியினருக்கு பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்களால் குணாம்சம் அமைத்து கொடுக்கப்படும் அமெரிக்காவைப் போல இறுக்கமான இருகட்சி ஆட்சிமுறை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கிடையாது என்றாலும், ஐரோப்பாவில் பல்வேறு ஸ்தாபக கட்சிகளது கொள்கைகள் நடைமுறையளவில் அதற்கு ஒத்ததாகவே உள்ளன. அவை அனைத்துமே நிதிய, பெருவணிக மற்றும் செல்வந்த நடுத்தர வர்க்கங்களின் அதாவது 10 சதவீத மிகப்பெரும் பணக்காரர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

டோனி பிளேயர் கீழ் பிரிட்டிஷ் தொழிற் கட்சி, ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் சமூக ஜனநாயகக் கட்சி, பிரான்சுவா ஹோலாண்டின் கீழ் சோசலிஸ்ட் கட்சி போன்ற சமூக ஜனநாய கட்சிகளும் மற்றும் அலெக்சிஸ் சிப்ராஸ் இன் கீழ் சிரிசா போன்ற போலி-இடது கட்சிகளும், ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில், தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளைத் தாக்குவதில் பிரதான பாத்திரம் வகித்துள்ளன. இதுபோன்ற கொள்கைகளில் இருந்து அரசியல்ரீதியில் இலாபமடைபவர்கள், பிரதானமாக, தீவிர வலது அமைப்புகளும் அரசியல்வாதிகளுமே. பல விமர்சகர்கள், பிரெஞ்சு தேசிய முன்னணி, ஜேர்மன் AfD, ஆஸ்திரிய சுதந்திர கட்சி போன்ற ஐரோப்பிய தீவிர வலதிற்கும் டோனால்ட் ட்ரம்ப் க்கும் இடையே சமாந்தரங்களை வரைந்துள்ளனர்.

அந்த ஒப்பீடு நியாயமானதே என்றாலும், அமெரிக்காவைப் போலவே, ஐரோப்பாவிலும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் வலதிற்கு நகர்ந்து வருகின்றது. உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு அவற்றின் ஒரே விடையிறுப்பு இராணுவவாதம், அரசு எந்திரத்தை ஆயத்தப்படுத்துவது, வெளிநாட்டவர் மீதான விரோதம் மற்றும் தேசியவாதத்தை முடுக்கி விடுவதாக உள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு இருபத்து ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், உலகம் அதிகரித்தளவில் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியை ஒத்திருக்கின்றது. அப்போது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளும் மற்றும் மோதல்களும் புரட்சிகர வர்க்க போராட்டங்களையும், இரண்டு உலக போர்களையும் தூண்டின.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தலையீடு மட்டுமே ஒரு புதிய பேரழிவுக்குள் வீழ்வதில் இருந்து தடுக்க முடியும். இந்த பின்புலத்தில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மிகப்பெரும் முக்கியத்துவத்தை பெறுகிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் தேர்தல்களில் இறங்கியுள்ள ஒரே கட்சி அது மட்டுமே ஆகும். போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தின் இதயதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.