ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France: Fillon wins presidential primary of right-wing parties

பிரான்ஸ்: வலது சாரி கட்சிகளது ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ஃபிய்யோன் வெற்றி பெற்றார்

By Alex Lantier
28 November 2016

ஆரம்ப மதிப்பீடுகளின்படி, பிரான்சின் பிரதான வலது-சாரி கட்சிகளது ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு போட்டியில் அலன் யூப்பே ஐ எளிதாக தோற்கடித்து, பிரான்சுவா ஃபிய்யோன் 67 சதவீத வாக்குகள் வென்றுள்ளார்.

நிக்கோலா சார்க்கோசியின் கீழ் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த ஃபிய்யோன், மார்கரெட் தாட்சரை வியந்து பாராட்டுவதுடன், ஒரு வன்முறைரீதியிலான வலதுசாரி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கத்தோலிக்கத்தைக் கடைபிடிப்பவர் ஆவார். அனேகமாக இவர் அடுத்த மே மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் நவ-பாசிசவாத மரீன் லு பென் ஐ எதிர்கொள்ளக்கூடும்.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முந்தைய முதல் சுற்றில் 4.2 மில்லியன் வாக்காளர்கள் பங்கெடுத்திருந்த நிலையில், அதை விட சுமார் 4 சதவீதம் அதிகமாக இதில் வாக்குப்பதிவு நடந்திருந்தது. யூப்பே இன் சொந்த ஊரான ஜிரோன் (Gironde) ஐ தவிர பிரான்சின் 100 க்கும் அதிகமான உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் வெளிநாட்டு பிரதேசங்கள் அனைத்திலும் ஃபிய்யோன் வெற்றி பெற்றிருந்தார். கோலிச ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கீழ் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த யூப்பேயும் Corrèze, மற்றும் வெளிநாட்டு பிரதேசங்கள், பிரெஞ்சு பொலினிஷியா, Wallis-and-Futuna மற்றும் Guyana ஆகிய இடங்களை வென்றார்.

“அவரது தீர்க்கமான வெற்றிக்காக பிரான்சுவா ஃபிய்யோனை நான் வாழ்த்துகிறேன்… அவரது வரவிருக்கும் ஜனாதிபதி பிரச்சாரத்திற்காக அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறி, யூப்பே அவரது பிரச்சார தலைமையகத்தில் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

ஃபிய்யோன் அவரது "உறுதியாக சென்றுகொண்டிருக்கும் வெற்றியை" பாராட்டியதுடன், சகல வலது-சாரி வேட்பாளர்களது ஆதரவாளர்களும் ஒற்றுமையுடன் இருக்க அழைப்புவிடுத்தார். அவர் சோசலிஸ்ட் கட்சி (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் "பரிதாபகரமான" ஐந்தாண்டு கால பதவிகாலத்தை தாக்கியதுடன், “நிலைமையின் தீவிரத்தன்மையும், எனது சக குடிமக்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும். வரவிருக்கும் மாதங்களில் அவர்களுக்கு நான் செவி மடுப்பேன். இந்த நாடு குறித்த கருத்துக்களை உண்மையாகவும் முற்றிலுமாகவும் மாற்ற வேண்டியுள்ளது என்ற பிரான்சின் பிரதான சவாலை அவர்களுடன் சேர்ந்து நான் முன்னெடுப்பேன். மகிழ்ச்சி என்பது தேடி அடையக்கூடியது என்பதை தெரிந்து வைத்துள்ள அனைவருடனும் சேர்ந்து உழைப்பேன்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கும் குறைந்த நாட்களுக்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஃபிய்யோன் தேர்வாகியிருப்பது, சிக்கன வேலைத்திட்டத்தின் ஒரு தீவிரப்பாடு மற்றும் தேசியவாதத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளை உள்ளடக்கிய வலதை நோக்கிய ஒரு முக்கிய திருப்பத்தைக் குறிக்கிறது. ஃபிய்யோன் 110 பில்லியன் யூரோ சமூக வெட்டுக்களை முன்மொழிகிறார், இதில் அண்மித்து பாதியளவு, சமூக பாதுகாப்பை வெட்டுவதில் இருந்தும் மற்றும் எண்ணற்ற நோய்களுக்கான மருத்துவக் காப்பீட்டை நீக்குவதில் இருந்தும், அத்துடன் 500,000 அரசுத்துறை வேலைகளை அழிப்பதில் இருந்தும் கொண்டு வரப்படும்.

கருக்கலைப்பு ஒரு "அடிப்படை" உரிமை கிடையாது என்று அறிவுறுத்துகின்ற அவர், புர்க்கினிக்கு ஆடை அணிவதற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றுதல் உட்பட மத சிறுபான்மையினர் மீதான நீதித்துறை விசாரணைகளை முன்னெடுப்பதை அவர் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கையை பொறுத்த வரையில், இஸ்லாமிய அரசை (IS) "இஸ்லாமிய சர்வாதிபத்தியவாதம்" என்று கண்டிக்கும் ஃபிய்யோன், அதற்கு எதிராக மத்திய கிழக்கு போர்களின் ஒரு தீவிரப்பாட்டை முன்மொழிகிறார். மூன்றாம் உலகப் போரை உண்டாக்கும் ஓர் அச்சுறுத்தலாக அவர் இப்போரை காண்கின்ற போதினும், இந்த ஆபத்திற்காக பிரதான உலக சக்திகளது கொள்கைகளை குற்றம்சாட்டாமல் மாறாக அர்த்தமற்ற விதத்தில் ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு சிறிய பகுதிகளை மட்டுமே கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்லாமிய அரசு (IS) மீது பழிசுமத்துகிறார்.

ஃபிய்யோன் வேட்பாளராக தேர்வாகியிருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தை சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் மூலோபாய போட்டிகளை மேலும் தீவிரப்படுத்தும், இது ஏற்கனவே பிரிட்டன் வெளியேற்றத்தாலும் மற்றும் அடுத்த வார இத்தாலிய வெகுஜன வாக்கெடுப்பாலும், அது ஒரு ஐரோப்பிய-எதிர்ப்பு, யூரோ-எதிர்ப்பு அரசாங்கத்தை நிறுவுவதற்கு இட்டுச் செல்லக்கூடிய அபாயத்தை கொண்டிருக்கும். ஃபிய்யோன், ரஷ்யாவுடன் நல்லுறவுகளை விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்றாலும் பிரான்சை ஐரோப்பாவின் முன்னணி சக்தியாக ஆக்குவதே அவரது நோக்கமென்று மீண்டும் மீண்டும் அறிவித்து வருகிறார். அத்தகைய கருத்துக்களின் வெளிப்படையான இலக்கில் இருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலாதிக்க அங்கத்துவ-நாடான ஜேர்மனியாகும்.

ஃபிய்யோன் ஜனாதிபதி வேட்பாளராக வெற்றி பெற்றிருப்பது, பிரெஞ்சு ஜனநாயகத்தின் சிதைவை உயர்த்தி காட்டுகிறது. சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் மற்றும் வெகுஜன ஆதரவு இல்லாத போர்களை தொடுத்ததற்காகவும் சோசலிஸ்ட் கட்சி வெறுக்கப்படுகிறது. ஆனால் தேர்தலில் அனேகமாக வெற்றி பெறக்கூடியவராக இப்போது சித்தரிக்கப்படும் இந்த வேட்பாளர் [ஃபிய்யோன்], சோசலிஸ்ட் கட்சி அரசின் அவசரகால நெருக்கடி நிலை மற்றும் பிற்போக்குத்தனமான சட்டத்தைப் பயன்படுத்தி பிரான்சின் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மற்றும் ஒரு நூற்றாண்டுகால போராட்டத்தினூடாக பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட அடிப்படை சமூக உரிமைகளை அழிக்க, தாட்சர் பாணியிலான பொருளாதார அதிர்ச்சி வைத்தியமெனும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த நோக்கம் கொண்டுள்ளார்.

சர்வதேச அளவிலான ஆழ்ந்த பொருளாதார மற்றும் இராணுவ பதட்டங்களும், அத்துடன் முன்னணி பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர்களின் குணாம்சமும், குறிப்பிடத்தக்களவில் வித்தியாசமான கொள்கையுடைய ஒரு வேட்பாளர் அதிகாரத்திற்கு வருவதை எதிர்பார்க்கவியலாதபடி செய்கிறது. இறுதியில் தேர்தல் ஃபிய்யோன் வசமோ அல்லது இப்போது பெரிதும் சாத்தியமில்லாதவராக பார்க்கப்படும் லு பென் வசமோ அல்லது சோசலிஸ்ட் கட்சி அல்லது கூட்டணி அரசியல் போக்கின் ஒரு வேட்பாளர் வசமோ யாரிடம் சென்றாலும், என்ன தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றால் வெளிநாடுகள் மீதான அதிக போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிரான சமூக போர் ஆகியவையே ஆகும்.

தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டத்தில் உள்ள கட்சிகளில் இருந்து தொழிலாளர்களின் எதிர்ப்பு சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்டால் மட்டுமே, அத்தகைய எதிர்ப்பு இத்தாக்குதலில் ஜெயிக்க முடியும். கடந்த கோடையில் சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒருமுட்டுச் சந்துக்குள் மூழ்கடித்த இத்தகைய அமைப்புகளின் தலைவர்கள், பிரெஞ்சு மக்கள் மீது, ஃபிய்யோன் அவரது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கோருவதற்கு அவருக்கு சட்டபூர்வ உரிமை இருப்பதாக ஏற்கனவே அறிவுறுத்தி வருகின்றனர்.

ஃபிய்யோன் நிர்வாகத்தின் சட்டபூர்வத்தன்மை குறித்து France Inter வானொலி தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் இடம் கேட்டபோது, “வாக்குறுதிகள் பின்பற்றப்பட்டால்… அங்கே முன்மொழியப்பட்ட புதிய சட்டங்கள் இல்லையென்றால், நிச்சயமாக அது சட்டபூர்வமானதாகவே இருக்கும்," என்றார்.

குடியரசுக் கட்சி (LR) வேட்பாளராக ஃபிய்யோனின் நியமனம் ஜனாதிபதி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் லு பென்னின் தேசிய முன்னணிக்கான (FN) வாக்குகளை அதிகரிக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிக்கோலா சார்க்கோசி முஸ்லீம்-விரோத தப்பெண்ணங்களுக்கும் மற்றும் தேசிய முன்னணியினது வாக்கு அடித்தளங்களுக்கும் முறையிட்டு ஜனாதிபதி பதவியை வென்றார். வாக்காளர்கள் அப்போது தேசிய முன்னணி வேட்பாளர் மரீனின் தந்தை ஜோன்-மரி லு பென்க்கு வாக்கிடுவதை விட சார்க்கோசிக்கு வாக்களிக்க முன்வந்தனர், ஏனென்றால் யூதஇனப்படுகொலையை மறுத்தும் மற்றும் பிரான்சின் நாஜி ஆக்கிரமிப்பை குறைத்துக் காட்டியும் அறிக்கைகள் வெளியிட்டு இழிபெயரெடுத்திருந்த ஜோன்-மரி லு பென்னுக்கு முரண்பட்ட விதத்தில் சார்க்கோசி தன்னைத்தானே ஒரு "ஜனநாயக" வேட்பாளராக காட்டிக் கொண்டார்.

ஃபிய்யோன் சார்க்கோசியின் உத்தியை பிரயோகிப்பதாக தெரிகிறது. ஆனால் சார்க்கோசி மற்றும், அதைவிட அதிகமாக, கடந்த 10 ஆண்டுகளாக ஹோலாண்டின் முன்வரலாறானது, வாக்குகளை அதிக பாரம்பரிய வலதிலிருந்து தேசிய முன்னணிக்குப் பாரியளவில் மாற்றுவதற்கான பல தடைகளை நீக்கிவிட்டுள்ளது. இதே காலகட்டம் சமூக ஜனநாயகம் மற்றும் குட்டி-முதலாளித்துவ அரசியலின் அதீத வலதை நோக்கிய பரிணாமத்தையும் கண்டுள்ளது.

விச்சி ஆட்சி மற்றும் அல்ஜீரிய போரின் சட்ட வழிவகைகளை நியாயப்படுத்துவதன் மூலமாக, பயங்கரவாதிகள் என்று குற்றச்சாட்டப்படுபவர்களது குடியுரிமையை பறிக்கும் மற்றும் ஒரு அவசரகால நிலையைத் திணிக்கும் ஒரு கொள்கையை முன்மொழிந்ததன் மூலமாக, ஹோலாண்டின் கீழ் சோசலிஸ்ட் கட்சியானது பாரம்பரிய அரசாங்க கட்சிகளுக்கும் மற்றும் தேசிய முன்னணிக்கும் இடையிலான வித்தியாசங்களை இல்லாதொழிக்கும் ஒரு பொலிஸ் அரசு கட்டமைப்பை அமைத்துள்ளது.

மரீன் லு பென் தேசிய முன்னணியை பொறுப்பெடுத்த பின்னர், மிகக் கவனமாக எந்தவித நாஜி-ஆதரவு அனுதாபங்களையும் வெளிக்காட்டாது இருக்கும் பொருட்டு, சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் அங்கத்தவரான ஜோன் பியர் செவனுமோ உடன் பிணைப்பு கொண்ட துணைத் தலைவர் புளோரியான் பிலிப்போ போன்றவர்களுக்கு கட்சியின் உயர்மட்ட பதவிகளை வழங்கி உள்ளார். செவனுமோவின் இத்தகைய முன்னாள் ஆதரவாளர்கள் தேசிய முன்னணிக்கு ஒரு வெகுஜனவாத மற்றும் "சமூக" வேஷத்தை வழங்க முயன்று கொண்டிருக்கிறார்கள். வங்கிகளால் மக்கள் சூறையாடப்படுவதற்கு ஒரே மாற்றீடாக அவர்கள் உணர்ச்சிகரமாக நிலைநிற்பதால், கடுமையான சுதந்திர-சந்தை குடியரசு கட்சியின் இந்த வேட்பாளரது நியமனம், அவர்களுக்கு உதவியாகவே இருக்கும்.

நேற்று ஏற்கனவே, பிலிப்போ ஃபிய்யோனைத் தாக்கி பேசுகையில், “ஃபிய்யோன் தெளிவாக ஒரு சுதந்திர-சந்தையாளர், தெளிவாக சிக்கன திட்டங்களுக்காக இருக்கிறார்,” என்று அறிவித்தார். ஃபிய்யோனின் "அசாதாரண மூர்க்கத்தனத்தைத்" தாக்கி அவர் தொடர்ந்து கூறுகையில், “500,000 அரசுத்துறை வேலை வெட்டுக்கள், அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில், மற்றும் விற்பனை வரி உயர்வு… என ஃபிய்யோனின் திட்டம் மிகவும் கடுமையானது. ஃபிய்யோன் என்ன செய்வாரென்று நீங்கள் ஆராய்ந்தால், 12,500 க்கு குறைவில்லாத பொலிஸ் மற்றும் துணை இராணுவ பாதுகாப்பு படைகள் மற்றும் 700,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பற்றோர் என்பதையே அது அர்த்தப்படுத்தும்,” என்றார்.

நேற்று கனடிய பத்திரிகை எச்சரிக்கையில், மே மாதம் லு பென் மற்றும் ஃபிய்யோனுக்கு இடையிலான இரண்டாம் சுற்று போட்டி மிகவும் நெருக்கமாக இருக்கலாம் என்று எச்சரித்தது. “ஃபிய்யோன், பிரெஞ்சு சமூகத்தின் இடதுகளை தன்னை சுற்றி ஈர்க்கக்கூடிய ஒரு தன்மைகொண்டவராக இருக்கிறாரா என்பது தெளிவாக இல்லை,” என்று இலண்டனின் Aberdeen Asset Management இன் பௌல் டிக்கிள் Globe and Mail க்குத் தெரிவித்தார். இந்தவகையில், “லு பென் மற்றும் ஃபிய்யோன் இடையே 50 க்கு 50 ஆக உடைந்து போகும்” என நான் சொல்வேன் என்றார்.