ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Jaffna university student union calls off student protests over police killing

இலங்கை: யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொலிஸ் கொலை தொடர்பான மாணவர் போராட்டத்தை முடித்துக்கொண்டது

By  S. Jayanth
09 November 2016

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு மாணவர்களை பொலிஸ் கொன்றமை தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாக “வாக்குறுதியளித்த” பின்னர், தங்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை நவம்பர் 1 அன்று முடிவுக்கு கொண்டு வந்தது.

மாணவர் ஒன்றியத்தின் நடவடிக்கைகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், பவுண்ராஜ் சுலக்ஸன், நடராசா கஜன் ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் சீற்றத்தை தணிக்க மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பாகமாகும்.

மாணவர் ஒன்றியமானது தமது கோரிக்கைகளை கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி சிறிசேனவுடன் ஒரு சந்திப்பைக்கோரி வகுப்பு பகிஷ்கரிப்புக்கு அழைப்புவிடுத்திருந்தது. “முறையான சட்ட பிரதிநிதித்துவத்துடன் [கொலை தொடர்பாக] நம்பகமான மற்றும் பக்கசார்பற்ற விசாரணையை உறுதிசெய்ய வேண்டும்," விசாரணை பக்கச்சார்பற்றதாக இருப்பதை மேற்பார்வை செய்ய சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வேண்டும் மற்றும் இரண்டு வாரங்களில் பிரேத பரிசோதனை அறிக்கைகளை வெளியிட வேண்டும், போன்றவை கோரிக்கைகளில் அடங்கும்.

இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யவும், ஒரு மாதத்திற்குள் இழப்பீடு கொடுக்கவும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலை வழங்கவும் மற்றும் ஒரு பக்கசார்பற்ற விசாரணையை நடத்தவும் சிறிசேனவும் மற்றும் அங்கு கலந்து கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியளித்ததாக அறிவிக்கப்பட்டது. அமைச்சரவை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம், மாணவர் சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் விரிவுரையாளர்களும் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கு கொண்டனர்.

அக்டோபர் 20 இரவு ஒரு போலீஸ் துப்பாக்கி சூட்டில் சுலக்ஸன் மற்றும் கஜனும் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் போலீசார் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது எனக் கூறினார். பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையில், சுலக்ஸனின் மார்பிலும் தலையிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் வாகனத்தை நிறுத்த கட்டளையிட்டதை புறக்கணித்து கடந்து சென்றதாலேயே மோட்டார் சைக்கிள் மீது சுட்டதாக பொலிசார் கூறினார். போலீஸ் முன்பக்கத்தில் இருந்தே மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதை காயங்கள் குறிப்பதால் சந்தேகங்கள் ஆழமடைந்தன. சுட்ட போது மோட்டார் சைக்கிள் ஒரு சுவரில் மோதியதால் ஏற்பட்ட காயங்களால் மற்றவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைகள் கொழும்பு அரசாங்கத்தையும் தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களையும் விழிப்படையச் செய்ததால், இந்த கொலை தொடர்பாக வெடிக்கக் கூடிய அமைதியின்மையை தடுக்க உடனடியாக சுறுசுறுப்பாக அவர்கள் செயற்பட்டனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) எதிராக மூன்று தசாப்தங்களாக நீண்ட இனவாத யுத்தத்தின் முடிந்து ஏழு ஆண்டுகள் பின்னர் இத்தகைய போலீஸ் கொலை நடந்தது இதுவே முதல் முறையாகும்.

சிறிசேன உடனடியாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால் கொலைக்கு பொறுப்பான போலீஸ் குழு கைதுசெய்யப்பட்டதோடு வேலை இடைநீக்கமும் செய்யப்பட்டனர். மாணவர் சங்கம் அக்டோபர் 24 அன்று ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர். அடுத்த நாள் மக்கள் வட மாகாணத்தில் முழு ஹர்த்தாலை அனுஷ்டித்தனர். தமிழ் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் இந்த ஹர்த்தாலுக்கு அழைத்திருந்தன.

மாணவர் தலைவர்களை சந்திக்க முன்னர், சிறிசேன போரால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளை ஒப்படைக்கும் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் அறிவித்ததாவது: "இது போன்ற ஒரு சம்பவம் [பொலிசார் கொன்றமை] தெற்கில் ஏற்பட்டிருந்தால் பெரும் அமைதியின்மை ஏற்பட்டிருக்கும்." அவர் தெற்கில் பொலிஸ் படுகொலைகள் சம்பந்தமாக வெடித்த போராட்டங்களை மட்டுமன்றி, வடக்கு மற்றும் கிழக்கில் ஆகவும் ஸ்திரமற்ற நிலைமையையும் மனதில் கொண்டிருந்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று வாழ்வாதாரத்தையும் அழித்த போரின் அழிவின் பின்னர், இந்த மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதுடன் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டு கொடிய வறுமையை எதிர்கொள்கின்றனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தற்காலிக குடிசைகளில் அல்லது முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அக்டோபர் 25 ஹர்த்தாலில் மக்களின் பங்கேற்பானது இத்தகைய நிலைமைகள் மீதான கோபத்தின் வெளிப்பாடாகும். எனினும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் அமெரிக்க சார்பு கொழும்பு அரசாங்கத்துக்கும் அதன் தொடர்ச்சியான அடக்குமுறை ஆட்சிக்கும் ஆதரவு கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.

ஆர்.சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் உட்பட கூட்டமைப்பு தலைவர்கள், இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி, உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் போன்ற அமெரிக்க ஒபாமா நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து வருகின்றனர். கூட்டமைப்பு தலைவர்கள் அமெரிக்க-சார்பு கொழும்பு அரசாங்கத்தை ஆதரித்து தமிழ் ஆளும் தட்டுக்கு சலுகைகளை தக்கவைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை சிதைப்பதற்கு ஆர்வமாக உள்ளதன் காரணம் இதுவே ஆகும்.

கூட்டமைப்புடனும் ஏனைய கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள், அரசாங்கத்தையும் தமிழ் முதலாளித்துவ தலைவர்களையும் அம்பலப்படுத்துவதை எதிர்க்கின்றனர். 

அக்டோபர் 24 நடந்த எதிர்ப்பில், மாணவர் தலைவர்கள், வடக்கில் ஒடுக்குமுறை நிலைமைகளுக்கு அரசாங்கத்தின் பொறுப்பை விளக்கி, கொலையை கண்டித்து ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகம் செய்த சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் உறுப்பினர்களை தடுத்தனர். அந்த போராட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை எதிரொலித்த மாணவர் தலைவர்கள், "எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குற்றம் கூறக்கூடாது" என்று, போலீஸ்தான் இந்த சம்பவத்தில் குற்றவாளி என்றனர்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அனைத்துலக சோசலிசத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள தொழிலாளர்களுமாக சகல தொழிலாளர்களதும் சோசலிச ஐக்கியத்துக்காகப் போராடுகின்றன. சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., கொழும்பு அரசாங்கங்களின் போரை எதிர்த்ததுடன், அந்த போராட்டத்தின் பாகமாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற இடைவிடாமல் கோரிவருகின்றது. தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான நமது தலையீடுகள், இந்த போராட்டத்தை அடிப்படையாக கொண்டவை.

மாணவர்கள் கொலை செய்யப்பட்டதில் இருந்து, பல வன்முறை சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளன. அக்டோபர் 23, சிவில் உடையில் இருந்த இரண்டு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் சுன்னாகத்தில் இலக்கத் தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த வாள் ஏந்திய குழுவால் ஏற்படுத்தப்பட்ட சிறு காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்த நாள், போலீசைப் பழிவாங்க நடத்தப்பட்டதே புலனாய்வு அதிகாரிகள் மீதான தாக்குதல் என்று அதற்குப் பொறுப்பேற்கும் ஒரு துண்டுப் பிரசுரம் வெளி வந்திருந்தது. பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு மட்டுமே கிடைத்ததாக கூறப்படும் துண்டுப்பிரசுரம், போலீசாரின் படி, ஆவா என்ற ஒரு குழுவால் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அக்டோபர் 25, இலக்கத்தகடு அற்ற ஒரு ஜீப்பில் வந்த ஒரு குழு, வழியில் சிலரை கடுமையாக தாக்கிவிட்டு வாள் கொண்டு அவர்களின் மோட்டார் சைக்கிள்களை வெட்டியது. இந்தக் குழு பொலிசால் கொல்லப்பட்ட மாணவர் ஒருவரின் மரண வீட்டுக்கு அருகே கூட்டமாக இருந்தவர்களையும் தாக்க முயன்றுள்ளது.

சந்தேகத்திற்குரிய குழுக்கள் இராணுவ மற்றும் பொலிஸ் உடந்தையுடன் வேலை செய்வது பற்றிய சந்தேகம் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளன. அவர்கள் இது போன்ற ஒரு குழு நூறாயிரக்கணக்கான இராணுவ மற்றும் போலீஸ் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள வடக்கில் எப்படி செயல்பட முடியும் என கேட்கின்றனர்.

ஊடகவியலாளர் கூட்டமொன்றில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சகலா ரத்நாயக்க, குறிப்பிட்ட குழுவுடனான இராணுவத் தொடர்பு பற்றி ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் மறுத்து, அறையை விட்டு வெளியேறினார்.

அமைச்சரவை அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஆவா குழுவானது இராணுவத்தின் ஆதரவுடன் யுத்தத்தின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டது என கடந்த புதன் கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இராஜபக்ஷ இந்த கூற்றை மறுத்தார். எனினும், நூற்றுக்கணக்கான தமிழர்கள், யுத்தத்தின் போது தண்டனையிலிருந்து விலக்களிப்புடன் வெள்ளை வான்களில் போலீஸ், இராணுவம் அல்லது இராணுவத்துடன் செயற்படும் துணை இராணுவக் குழுக்கள் மூலம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த குழுக்கள், தமிழ் கூட்டமைப்பு தலைவர்களால் ஜனநாயக ஆட்சியாக சித்தரிக்கப்படும், ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கு ஆர்வமாக உள்ள தற்போதைய அரசாங்கத்தின் கீழும் கூட செயல்பட முடியும்.

இராணுவம் மற்றும் பொலிஸ், தமது நிலைமைகளையிட்டு சீற்றமடைந்துள்ள மக்களை அச்சுறுத்துவதற்காக சம்பவங்களை உருவாக்குகின்றது. சிறிசேன அரசாங்கமும் தமிழ் முதலாளித்துவ தலைவர்களும் தெற்கில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் வடக்கில் வளரும் எதிர்ப்புடன் இணையக் கூடியதையிட்டு அச்சத்தில் உள்ளன.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் யாழ்ப்பாணத்தில் நவம்பர் 20 அன்று மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாண நூலக உணவக மண்டபத்தில், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும் தமிழ் தேசியவாதமும் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகும். இந்தக் கூட்டத்திற்கு வருகை தருவதோடு கலந்துரயாடலிலும் பங்குபற்றுமாறு நாம் இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.