ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP public meeting in Colombo: The international implications of Trump’s election

கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ட்ரம்ப் தேர்வானதன் சர்வதேச தாக்கங்கள்

19 November 2016

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானதன் சர்வதேச தாக்கங்கள் பற்றி கலந்துரையாட, நவம்பர் 30, கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளன.

ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலதுசாரியானதாக இருக்கும். கருக்கலைப்பைத் தடை செய்யும் மற்றும் பெருந்தொகை புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் திட்டம் தொடர்பான ட்ரம்ப்பின் வலியுறுத்தல்களும் தனது பிரதான மூலோபாயவியலாளராக வெள்ளை மேலாதிக்கவாத மற்றும் நவ-பாசிச குழுவினருடன் நேரடி உறவுகளைக் கொண்ட ஸ்டீபன் பானனை அவர் நியமித்தமையும் அதன் உண்மையான தன்மையை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. ட்ரம்ப் உள்நாட்டில் வர்க்கப் போரையும் வெளிநாடுகளில் அமெரிக்காவின் போட்டியாளர்களுக்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதல்களையும் உக்கிரமாக்குவதோடு பிரமாண்டமான ஆபத்துக்களை அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்படுத்துவார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதான அவரது சீன-விரோத கருத்துக்களில் வெளிப்பட்டவாறு, ட்ரம்ப் பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் யுத்த தயாரிப்புகளை துரிதப்படுத்தி, இந்த இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே இராணுவ மோதலுக்கான வாய்ப்பை அதிகரிப்பார். சீனா மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிரான ட்ரம்பின் கடுமையான நிலைப்பாடு, இந்தியாவை மேலும் ஊக்குவித்து, பிராந்தியத்தில் ஏற்கனவே வெடிப்பு நிலையில் இருக்கும் பூகோள-அரசியல் பதட்டங்களை அதிகரிக்கச் செய்யும்.

இலங்கையில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய பிரச்சாரத்துக்குள் கொழும்பை ஒருங்கிணைக்கும் பொருட்டு, 2015ல் அமெரிக்க அனுசரணையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையினால் நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வரவுள்ள டிரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்கத் தயார் என உடனடியாக தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பில் சோ.ச.க.-ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில், ட்ரம்ப் தேர்வாவதற்கு வழிவகுத்த இன்றியமையாத அரசியல் காரணிகளும், குறிப்பாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத்தின் வர்க்கத் தன்மை மற்றும் பல்வேறு உயர் மத்தியதர வர்க்க அமைப்புகளும் போலி இடதுகளும் ஆற்றிய பாத்திரமும் விளக்கப்படும். இந்தக் கூட்டத்தில் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்களைப் பற்றி விபரிக்கப்பட உள்ளதோடு, ஏகாதிபத்தியப் போர் அபாயத்தையும் அதிகரித்த சமூக சிக்கன வெட்டுத் தாக்குதல்களையும் எதிர்க்க தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைப் பற்றியும் தெளிவுபடுத்தப்படும்.

எமது கூட்டத்துக்கு வருகை தந்து இந்த இன்றியமையாத அரசியல் பிரச்சினைகள் பற்றிய முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

நாள் மற்றும் நேரம்: நவம்பர் 30, புதன்கிழமை, மாலை 4 மணி

இடம்: கொழும்பு, புதிய நகர மண்டபம்