ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The myth of the reactionary white working class

பிற்போக்குத்தனமான வெள்ளைத் தொழிலாள வர்க்கம் என்னும் ஒரு கட்டுக்கதை

Eric London
12 November 2016

ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றியைத் தொடர்ந்த நாட்களில், இந்த முடிவுகளுக்கு “வெள்ளை நிறத் தொழிலாள வர்க்க”த்தின் அறியாமை, பின்தங்கியநிலை மற்றும் அவர்களது உடன்பிறந்த நிறவெறி மற்றும் இனவாதம் ஆகியவையே காரணம் என்று ஜனநாயகக் கட்சியும் ஊடகங்களும் கூறி வருகின்றன.

“ட்ரம்ப் ஏன் வெற்றி பெற்றார்: தொழிலாள வர்க்க வெள்ளைநிறத்தவரால்” என்று நியூ யோர்க் டைம்ஸில் புதன்கிழமை வந்த கட்டுரை ஒன்றின் தலைப்பு கூறியது. வியாழனன்று டைம்ஸின் பத்திகளது பக்கத்தில் பத்தியாளர் சார்ல்ஸ் புளோ பின்வருமாறு எழுதினார்: “ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு குருட்டுப்பிடிவாதம் கொண்ட மனிதராக இருப்பார் என்றே என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அப்படியிருந்தும் அமெரிக்கா அவரைத் தேர்ந்தெடுத்திருந்தது என்பதை விடவும் அதன் காரணத்தால் தான் அவரைத் தேர்ந்தெடுத்திருந்தது என்று கூறுவது முற்றிலும் சாத்தியமானதாகும்.”

“இடது” ஊடகங்களாக சொல்லப்படுபவையும் இதே நிறவெறி விவரிப்பையே முன்னெடுத்தன: ”இந்தத் தேர்தல் காலத்தில் வெள்ளைத் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் பொருளாதாரத் துயரங்கள் குறித்த மென்மையான, கவலையான சித்திரங்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை” என்று  The Nation இன் மொனிக்கா பொட்ஸ் வெறுப்புமிழும் கிண்டலுடன் குறிப்பிட்டார்.

பொட்ஸ், ட்ரம்ப்பின் வெற்றியை அடையாளம், நிறம், மற்றும் பால்ரீதியாய் விளக்கினார். கிராமப்புறத்தில் இருக்கும் தொழிலாள வர்க்கம் “தமது ஏழ்மையான அண்டைவாசிகளை விடவும் அதிகமான பணம் சம்பாதிக்கிறது” என்று அவர் எழுதுகிறார். “கடுமையாக தாங்கள் உழைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள், அதேசமயத்தில் அவர்களது அண்டைவாசிகள், குடியேறியவர்கள், ’நகர் உட்புறங்களில்’ இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்’ அவ்வாறு உழைப்பதில்லை என்று கருதுகிறார்கள்… அவர்கள் நிலைமை இன்னும் மேம்பட்டதாக இருந்திருக்க முடியும் அவர்கள் நிச்சயமாக கஷ்டப்படுகிறார்கள் என்ற அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் அவர்களது கலாச்சார அடையாளம் தான் முக்கியமானதாகும்… இது மனவருத்தம் குறித்ததாக இருக்கவில்லை. அடையாளம் குறித்ததாக இருந்தது.”  

செவ்வாய் தேர்தலை இவ்வாறு அடையாள-அடிப்படையில் விபரிப்பது தேர்தல் தரவுகளின் மிக அடிப்படையான பகுப்பாய்வின் மீதான ஒரு மோசடியான விபரிப்பாகும்.

2016 தேர்தலில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு பாரிய அளவில் சரிவு கண்டுவிட்டிருந்தது என்பதே மிக முக்கியத்துவமான புள்ளிவிபரமாகும். ஹிலாரி கிளிண்டன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பராக் ஒபாமா பெற்றிருந்த வாக்குகளை விடவும் சுமார் பத்து மில்லியன் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தார் (கலிபோர்னியாவில் இருந்த எண்ணப்படாத வாக்குகள் எண்ணிக்கையை கொஞ்சம் மாற்றலாம்). ட்ரம்ப், தேர்தல் கல்லூரியில் வென்றாலும் மக்கள் வாக்கு எண்ணிக்கையில் தோல்வி கண்டிருந்தார் என்பதோடு 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அத்தனை பிரதான வேட்பாளர்களிலும் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களிக்கத் தகுதி கொண்டவர்களின் எண்ணிக்கை 18 மில்லியன் அதிகரித்திருந்தது என்பதைக் கருத்தில் கொண்டால் இந்த எண்ணிக்கை இன்னும் திகைப்பூட்டுவதாக இருக்கும்.

இந்த இரண்டு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளை விடவும் மிக அதிகமாய், 2016 தேர்தலில் வாக்களிக்க வராதவர்கள் அல்லது மூன்றாவதாய் ஒரு வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 99 மில்லியனாய் இருந்தது. இது சமூக அதிருப்தியின் அளவுகோலே தவிர உணர்ச்சியின்மையின் அளவுகோல் அல்ல. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கிளிண்டனும் ட்ரம்ப்பும் முறையே 26.6 மற்றும் 25.9 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்றால், 43.2 சதவீதம் பேர் இருவரையும் தேர்வு செய்யாதவர்களாய் இருந்தனர்.

ட்ரம்ப் பெற்ற வாக்குகளில், 27 மில்லியனுக்கும் அதிகமாய் வெள்ளை இனத்தவரின் வாக்குகள் அவருக்குக் கிடைத்திருந்தன, இது 2012 இல் குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னிக்கு வாக்களித்த 27.2 மில்லியன் வெள்ளை இனத்தவருக்கு ஏறக்குறைய சமமான அளவு மட்டுமே. பெண்களை பொறுத்தவரை, 2016 இல் கிளிண்டனுக்கு 35.5 மில்லியன் பெண்கள் வாக்களித்தனர், இது 2012 இல் ஒபாமாவுக்கு வாக்களித்திருந்த 37.6 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்து கணிசமான சரிவாகும். குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் வெறும் 30 சதவீத பெண்கள் மட்டுமே 2016 இல் கிளிண்டனுக்கு வாக்களித்தனர், 47 சதவீதம் பேர் வாக்களிக்கவேயில்லை.

ஆபிரிக்க-அமெரிக்கர்கள், லத்தீனியர்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் இடையேயும் கிளிண்டன் கணிசமான இழப்புகளைச் சந்தித்தார். 2012 இல், பராக் ஒபாமா 16.9 மில்லியன் ஆபிரிக்க-அமெரிக்க வாக்குகளை வென்றிருந்தார், இது கிளிண்டன் பெற்றிருக்கும் 13.7 மில்லியன் என்ற அளவை விடவும் 3 மில்லியனுக்கும் அதிகமாகும். கடந்த நான்காண்டு காலத்தில் லத்தீனியர்களது வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இருந்தும் கூட 9 மில்லியனுக்கும் அதிகமான லத்தீனியர்களது வாக்குகளை மட்டுமே ஒபாமா கிளிண்டன் இருவருமே பெற்றனர். 18-29 வயதுடையோர் பிரிவிலும் இதேபோன்று எண்ணிக்கை வளர்ச்சி இருந்தும் கூட, கிளிண்டன் பெற்ற 13.6 மில்லியன் வாக்குகள் என்பது 2012 இல் ஒபாமா பெற்ற 14.8 மில்லியன் வாக்குகள் என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் சுமார் 8 சதவீதம் குறைவாகும்.

வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில், அத்தனை நிறவெறிக் குழுக்களும் 2012 ஐ ஒப்பிடுகையில் 2016 இல் குடியரசுக் கட்சி வேட்பாளரை நோக்கி சாய்ந்திருந்தன. ஆனபோதும், ஆபிரிக்க அமெரிக்கர்கள் (7 சதவீத புள்ளிகள்), லத்தீனியர்கள் (8 சதவீத புள்ளிகள்) மற்றும் ஆசிய அமெரிக்கர்கள் (11 சதவீத புள்ளிகள்) ஆகியோருடன் ஒப்பிட்டால் வெள்ளை நிற வாக்காளர்கள் தான் குடியரசுக் கட்சியினரை நோக்கிய மிகக் குறைந்த சாய்வை வெளிப்படுத்தியிருந்தனர் (1 சதவீத புள்ளி).

பங்குபெறாமையின் பரந்த கட்டமைப்புக்குள் நிகழ்ந்திருந்த இந்த மாற்றங்கள் பெரும்பாலும் பொருளாதாரப் பிரச்சினைகளால் உந்தப்பட்டதாய் இருந்தன. ஐம்பத்தியிரண்டு சதவீத வாக்காளர்கள் தேர்தலில் பொருளாதாரம் தான் மிக முக்கியமான விடயம் என்று கூறினர், 18 சதவீதத்தில் நின்று கொண்டிருந்த இரண்டாவது முக்கியமான பிரச்சினையைக் காட்டிலும் மிக உயர்ந்த இடத்தில் இது இருந்தது. நிற மற்றும் பால் பிரச்சினைகள் பதிவாகவும் இல்லை என்ற அதேநேரத்தில், 68 சதவீத வாக்காளர்கள் நான்காண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலை அல்லது அதனினும் மோசமான நிலையில் தான் தங்களது நிதி நிலைமை இருப்பதாகத் தெரிவித்தனர். 39 சதவீத வாக்காளர்கள் “மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய” ஒரு வேட்பாளரையே தாங்கள் எதிர்நோக்குவதாகத் தெரிவித்தனர், இவர்களில் 83 சதவீதம் பேர் ட்ரம்புக்கு வாக்களித்தனர். இது கிட்டத்தட்ட 40 மில்லியன் வாக்குகள், அதாவது ட்ரம்ப் பெற்ற மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்குக்கு நிகரானதாகும்.

இரண்டு வேட்பாளர்களையும் வெறுப்பதாகக் கூறிய வாக்காளர்களில் 18 சதவீதம் பேரில், ட்ரம்ப் 49 சதவீதம் பேரின் வாக்குகளை வென்றார் என்ற அதேநேரத்தில் ஹிலாரி கிளிண்டன் 29 சதவீத வாக்குகளை மட்டுமே வென்றார் என்ற உண்மையானது உள்ளபடியான நிலையை “மாற்றுவதற்கான” வேட்பாளராக ட்ரம்ப் பார்க்கப்பட்டார் என்பதின் இன்னுமொரு அறிகுறியாகும். 14 சதவீதம் பேர் இருவருக்குமே ஜனாதிபதிக்குரிய சரியான மனோநிலை இருக்கவில்லை என்று கூறியிருந்தனர், இந்தப் பிரிவைச் சேர்ந்தோரின் வாக்குகளில் ட்ரம்ப் 71 சதவீத வாக்குகளையும் ஹிலாரி கிளிண்டன் 17 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், வாக்காளர்களில் 57 சதவீதம் பேர் ட்ரம்பின் ஜனாதிபதிப் பதவிக்காலம் குறித்த கவலையோ அல்லது அச்சமோ இருப்பதாகக் கூறியிருந்தனர், ஆனால் அவர்களின் வாக்குகளிலும் 14 சதவீதத்தை ட்ரம்ப் வென்று விட்டிருந்தார். இந்த புள்ளிவிபரங்கள் அரசியல் ஸ்தாபகத்திற்கு நிலவுகின்ற வெறுப்பின் ஆழத்தை சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது. 

இத்தேர்தலில் ஏழை மற்றும் பணக்கார வாக்காளர்களின் ஆதரவில் ஒரு பாரிய மாற்றம் நடந்திருந்தது. தொழிலாளர்களின் மிக வறுமைப்பட்ட பிரிவினரிடையே, 30,000 டாலருக்குக் குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தினரிடையே, குடியரசுக் கட்சிக்கு கிட்டிய வாக்குகளின் பகுதி 2012 இல் இருந்து 10 சதவீத புள்ளிகள் அதிகரித்திருந்தன. பல முக்கிய மத்தியமேற்கு மாநிலங்களில், ட்ரம்ப்பை நோக்கிய ஏழை வாக்காளர்களின் சாய்வு இன்னும் அதிகமாய் இருந்தது: விஸ்கான்சின் (17 புள்ளி சாய்வு), அயோவா (20 புள்ளிகள்), இண்டியானா (19 புள்ளிகள்) மற்றும் பென்சில்வேனியா (18 புள்ளிகள்).

$30,000 முதல் $50,000 வரை வருவாய் கொண்ட  குடும்பங்களில் குடியரசுக் கட்சியை நோக்கிய சாய்வு 6 சதவீதப் புள்ளிகளாய் இருந்தது. $50,000 க்கும் $100,000 க்கும் இடையிலான வருவாய் கொண்டோர்களின் ஆதரவு 2012 உடன் ஒப்பிடுகையில் குடியரசுக் கட்சியிடம் இருந்து 2 புள்ளிகள் அகன்றிருந்தது.

வசதியானவர்களும் மற்றும் பணக்காரர்களும் 2012 இல் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்திருந்ததை விடவும் இன்னும் பரந்த வித்தியாசத்தில் கிளிண்டனுக்கு ஆதரவாய் வாக்களித்தனர். $100,000 க்கும் $200,000 க்கும் இடையில் வருவாய் கொண்டோரில், ஜனநாயகக் கட்சிக்கு 9 புள்ளி ஆதரவு கூடியிருந்தது கிளிண்டனுக்கு அனுகூலமளித்தது. $250,000 க்கும் அதிகமான குடும்ப வருவாய் கொண்ட வாக்காளர்கள் 11 சதவீதப் புள்ளிகள் கிளிண்டனை நோக்கிச் சாய்ந்திருந்தனர். மிகவும் பணம் படைத்த ஜனநாயகக் கட்சி வாக்காளர்களின் எண்ணிக்கை 2012 இல் 2.16 மில்லியனாக இருந்ததில் இருந்து 2016 இல் 3.46 மில்லியனாக உயர்ந்திருந்தது, அதாவது 60 சதவீதம் அதிகரித்திருந்தது.

கிளிண்டனுக்கு ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த  பெண்கள் (2.1 மில்லியன்), ஆபிரிக்க அமெரிக்கர்கள் (3.2 மில்லியன்) மற்றும் இளைஞர்கள் (1.2 மில்லியன்) பிரிவுகளில் இருந்து வீழ்ச்சி கண்டிருந்த வாக்குகளின் எண்ணிக்கையை அதே பிரிவின் வசதியானவர்களிடம் இருந்து கிட்டியிருந்த வாக்கு அதிகரிப்பால் (1.3 மில்லியன்) ஈடுகட்டுவதற்கு முடியாமல் போனது. 

கிளிண்டனின் தேர்தல் தோல்வியானது, வோல் ஸ்டீரீட் மற்றும் இராணுவ-உளவு எந்திரத்துடன் நிறம், பால், மற்றும் பால் விருப்பம் ஆகியவற்றின் அரசியலை அடிப்படையாகக் கொண்ட உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகையுடைய பிரிவுகளது  கூட்டணி என்ற ஜனநாயகக் கட்சியின் தன்மையுடன் பிணைந்ததாக இருக்கிறது. கடந்த நாற்பதாண்டு காலத்தில், ஜனநாயகக் கட்சியானது சமூக சீர்திருத்தத்தின் அத்தனை நடிப்புகளையும் கைவிட்டிருந்தது, இந்த நிகழ்ச்சிப்போக்கு ஒபாமாவின் கீழ் இன்னும் தீவிரமடைந்தது. குடியரசுக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து வேலை செய்து, இனம் அல்லது பால் வித்தியாசமின்றி தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை ஏழ்மைப்படுத்திய சமூகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதற்கு இதுவே பொறுப்பானதாகும்.

இப்போதைய அரசியல் திரும்புமுனையானது அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கான உண்மையான அபாயங்களை வழங்குகிறது. ட்ரம்ப் நிர்வாகம் தான் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிற்போக்குத்தனமானதாக இருக்கும். அதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வானது ஒரு புதுப்பிக்கப்பட்ட, வெடிப்பான சமூகப் பிரளயங்களது காலகட்டத்திற்கு கட்டியம் கூறுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக நிற்கிறது. தொழிலாள வர்க்கத்தை நிறம், தேசியம் மற்றும் பால் இவற்றின் அடிப்படையில் பிரிக்க முனைகிற முயற்சிகளை தளர்ச்சியில்லாமல் எதிர்ப்பதன் மூலம் வரவிருக்கும் எழுச்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தைத் தயார் செய்வதே சோசலிஸ்டுகளின் பணியாகும். இந்த முன்னோக்குடன் உடன்படுபவர்கள் இன்றே சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய முன்வர வேண்டும்.