ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The nightmare election campaign staggers to its end

கொடுங்கனவுத் தேர்தல் பிரச்சாரம் தடுமாற்றத்துடன் முடிவுக்கு வருகிறது

Joseph Kishore and David North
8 November 2016

மில்லியன் கணக்கான வாக்காளர்கள் இன்று வாக்களிக்கச் செல்கின்ற நிலையில், அமெரிக்கா முழுவதிலும் கோபம் மற்றும் ஏமாற்றத்தின் ஒரு மனோநிலை நிலவுகிறது.

ஞாயிறன்று, CBS News’ இன் 60 நிமிடங்கள் நிகழ்ச்சியில் தேர்தல் குறித்த ஒரு குழு விவாதம் நடைபெற்றது. ஒன்றரை வருடங்களாக நடந்து வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்து என்ன உணர்கிறீர்கள் என்று ஒரே வார்த்தையில் விவரிக்கும்படி கருத்துக்கணிப்பு நடத்திய பிராங்க் லுண்ட்ஸ் கேட்டபோது, பதிலளித்தவர்கள் “பயங்கரம்”, “கோபமூட்டுவது”, ”கொடுமையானது”, “வெறுப்பூட்டுவது” மற்றும் “கொடுங்கனவு” என்று விவரித்தனர். 

ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இரண்டு பிரதான வேட்பாளர்களுமே ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகவும் பரவலாய் வெறுப்பைச் சம்பாதித்தவர்களாய் இருக்கின்றனர் என்ற உண்மையானது ஏராளமான கருத்துக்கணிப்புகளில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த இரண்டு வேட்பாளர்கள் மீதும் வெளிப்படுத்தப்பட்ட உதாசீனமானது உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியலின் ஒட்டுமொத்த அமைப்பில் இருந்தும் ஆழமான ஒரு அந்நியப்படலை வெளிப்படுத்துகிறது.

இந்த வேட்பாளர்களும் ஊடகங்களும் பெரும்பான்மை மக்களைப் பாதிக்கக் கூடிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை உதாசீனம் செய்திருந்தனர். உத்தியோகபூர்வ தேர்தல் ”விவாதங்கள்” - இதில் ஒரு வேட்பாளர் மற்றொருவரின் குற்றவியல்தனத்தைக் கண்டனம் செய்தார் - வாக்காளர்களை சங்கடப்படுத்தி வெறுப்பூட்டின. ஹிலாரி கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் இருவருமே தமது சொந்த வழியில் அரசியலமைப்பு முறையின் ஊழலடைந்த மற்றும் பிற்போக்கான தன்மையின் உருவடிவமாய் திகழ்கின்றனர்.

அமெரிக்க மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தெரிவு என்ன? இரண்டு கட்சிகளும் கொடுத்திருக்கும் வேட்பாளர்களில் யார் அதிக வலது-சாரி என்பதைக் கூறுவது கடினம், வித்தியாசம் அவர்களது பாணியில் தான் இருக்கிறதே அன்றி சாரத்தில் அல்ல. வாய்வீச்சாளரான ட்ரம்ப் சமூக அதிருப்தியை பாசிச பாதைகளில் திருப்பி விட முயல்கிறார் என்றால், ஹிலாரி கிளிண்டனோ ஒரு போர் திட்டநிரலை முன்னெடுப்பதற்காகவும் பெரும்பணக்காரர்களின் பைகளில் பணம் முடிவில்லாமல் பாய்வதை உத்தரவாதம் செய்யக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளை தொடர்வதற்காகவும், ஒரு “முற்போக்கு” முகமூடியை வழங்குவதற்காக நிறம் மற்றும் பால் ஆகியவற்றின் சிடுமூஞ்சித்தனமான கதைவிபரிப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதிப் பதவியின் கீழ் தனது வாய்ப்புவளங்கள் குறித்து வோல் ஸ்ட்ரீட் என்ன கணித்து வைத்திருக்கிறது என்பதை அவரது மின்னஞ்சல்கள் தொடர்பாக அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எதையும் FBI முன்னெடுக்கப் போவதில்லை என்று அதன் இயக்குநரான ஜேம்ஸ் கோமே அறிவித்ததற்கு பங்குச் சந்தைகள் ஆற்றிய எதிர்வினையில் பார்க்கக் கூடியதாய் இருந்தது. டோவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரிப் புள்ளிகள் 371 புள்ளிகள் உயர்ந்தன. கிளிண்டன் பிரச்சாரமானது குடியரசுக் கட்சி ஸ்தாபகத்தின் கணிசமான பிரிவுகளையும் தனக்குப் பின்னால் கொண்டுவந்திருக்கிறது, 2003 ஈராக் படையெடுப்பின் நவபழமைவாத வடிவமைப்பாளர்கள் பலரும் கூட இதில் அடங்குவர்.

ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரமானது, தனது வேட்பாளரின் அவப்பெயரை நன்கு அறிந்து வைத்திருப்பதால், அது ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்குகளைக் கொண்டுவருவதற்கு அரசியல் பிளாக்மெயிலின் புராதன வடிவத்தை நம்பியிருக்கிறது. அவர் தான் “குறைந்த தீமை” என்பதாக கட்சியும் அதன் வக்காலத்துவாதிகளும் வலியுறுத்தி வருகின்றனர். கிளிண்டன் எத்தனை கெட்டவராய் இருந்தாலும் கூட, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் தவிர்க்கவியலாமல் பின்வரக் கூடிய  ஒரு அழிவைத் தவிர்ப்பதற்கு, அவருக்கே ஆதரவளித்தாக வேண்டும் என்று அந்த வாதம் செல்கிறது.

“குறைந்த தீமை” வாதத்தின் பிரச்சினை என்னவென்றால் ஏதோவொரு வகையில் எதைத் தடுத்து விடும் நம்பிக்கையில் ஒருவர் வாக்களித்தாரோ அதனினும் மோசமான விளைவுகளுக்கே இது இட்டுச் செல்கிறது என்பது தான்.

அமெரிக்க அரசியலின் “பயங்கர ட்ரம்ப்” தத்துவத்தில் விளக்கம் ஏதுமில்லை. இந்த அபத்தமான மற்றும் ஆபாசமான முரட்டுவாய்க்காரர் வேட்பாளராக தேர்வானதே அமெரிக்க சமூகத்தின் ஆழமான நெருக்கடியின் ஒரு விளைபொருள் ஆகும். அவர் ஒரு மரணகரமான கொடிய புற்றுநோய், உடலின் இன்னொரு பாகத்திற்கு பரவுவதற்கு அரசியல்நிகராய் கூறக்கூடிய மனிதர். அவர், குறைந்தபட்சம் கடந்த 40 ஆண்டுகளாய் சமூகப் பிற்போக்குத்தனத்தையும் பின்தங்கிய  தன்மையையும் ஊக்குவித்து வந்திருக்கக் கூடிய ஒரு பெருநிறுவ-ஆதிக்கத்திலான அரசியல் கலாச்சாரத்தின் விளைபொருளாவார்.

ஆனாலும் ட்ரம்ப் வேட்பாளராய் தேர்வானதற்கு ஃபாக்ஸ் நியூஸ், டாக் ரேடியோ மற்றும் பிரச்சார நிதிச் சட்டங்களை மட்டுமே குறைகூறுவதென்பது மிதமிஞ்சிய எளிமைப்படுத்தலாகவே இருக்கும். அவரது வாய்வீச்சு சுலோகங்களுக்கு கிட்டிய மக்கள் வரவேற்பென்பது உண்மையான சமூக அவலத்தையே பிரதிபலிக்கிறது. இன்று அவருக்கு வாக்களிக்கத் திட்டம் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் பலரும் முன்னதாக ஜனநாயகக் கட்சியின் வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்திருந்தவர்களாவர். உள்ளபடியான நிலைக்கு எழுந்திருக்கும் சமூக கோபமும் குரோதமும் அரசியல் வலதுடன் அடையாளப்படுவதை உத்தரவாதம் செய்தமை தான் சாண்டர்ஸ் தனது “அரசியல் புரட்சி”யை ஹிலாரி கிளிண்டனின் பின்னால் திருப்புவதற்கு செய்த முயற்சிகளின் பிரதான பின்விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது.

இறுதி ஆய்வில், ட்ரம்பின் எழுச்சி என்பதே ஜனநாயகக் கட்சியின் அரசியல் திவால்நிலையின் ஒரு விளைபொருளாகும்.

பாரிய ஆதரவை ஈர்க்கக்கூடிய ஒரு சாதகமான அரசியல் செய்தியை வழங்க வழியில்லாமல், ஹிலாரி கிளிண்டன் ட்ரம்புக்கு எதிரான தனது பிரச்சாரத்தை மிகவும் கீழ்த்தரமான மற்றும் பிற்போக்குத்தனமான மட்டத்தில் நடத்தினார். முதலில், ஜனநாயகக் கட்சியினரும் அவர்களின் ஊடகக்கூலிகளும் ட்ரம்பை ரஷ்ய ஜனாதிபதியின் ஒரு முகவராகக் கூறிக் கண்டனம் செய்தனர். ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை ஊடுருவல் செய்வதன் மூலமாக அமெரிக்கத் தேர்தலில் விளாடிமிர் புட்டின் செல்வாக்கு செலுத்தப் பார்ப்பதாக அவர்கள் திட்டவட்டமாய் தெரிவித்தனர். எந்த ஆதார நிரூபணமும் இல்லாமலேயே இது முடிவில்லாமல் திரும்பத் திரும்ப கூறப்பட்டது. விக்கிலீக்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்களில் என்ன இருந்தது என்பதில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக சோவியத் ஒன்றியத்தின் இடத்தில் ரஷ்யாவின் பெயரைப் போட்டு மெக்கார்த்திய சிவப்பு-தூண்டில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. 

மிக அபாயகரமான விதத்தில், தேர்தலுக்குப் பின்னர் சிரியாவிலும் ரஷ்யாவுக்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கைகளை பாரிய அளவில் தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்காகவே இடைவிடாத புட்டின்-விரோத பிரச்சாரமானது கிளிண்டனால் பயன்படுத்தப்பட்டது. இந்தத் தேர்தல் முழுக்கவே உதாசீனம் செய்யப்பட்டிருந்த உலகப் போரின் அதீத அபாயமானது, ரஷ்ய மூர்க்கத்தனத்திற்கான பதிலிறுப்பாகக் கூறி, நேட்டோ 300,000 துருப்புகளை உயர் உஷார் நிலையில் நிறுத்தியிருப்பதாக திங்களன்று வந்த அறிவிப்பில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

இரண்டாவதாய், தேர்தல் அதன் இறுதிக் கட்டத்தை எட்டிய சமயத்தில், தாங்கள் நாட்டை ஆட்சி செய்த ஒரு சகாப்தத்திற்குத் திரும்புகின்ற நிறவெறி விருப்பத்தால் ஊக்கம்பெற்றிருக்கக் கூடிய ”சலுகைகொண்ட” வெள்ளை நிறத் தொழிலாளர்களிடம் இருந்து ட்ரம்புக்கு ஆதரவு கிட்டுவதான ஒரு கூற்றின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சியினர் தமது வெறித்தனமான அவதூறுகளை மேலும் தீவிரப்படுத்தினர். அத்தனை இனங்களது தொழிலாளர்கள் மத்தியிலும் நிலவக் கூடிய ஆழமான சமூகக் கோபத்தை மறுக்கின்ற ஒரு இனவாத விவரிப்பிலேயே கிளிண்டன் தனது பிரச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தார்.  

சமூகக் கொள்கைகள் விடயத்தில், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளைத் தொடர கிளிண்டன் உறுதிபூண்டிருக்கிறார். செல்வந்தர்களுக்கு பாரிய அளவில் செல்வம் சென்றுசேர்வதையும் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் நிலவிய வரலாற்று மட்டங்களுக்கு சமூக சமத்துவமின்மையை திரும்பச் செய்ததுமே ஒபாமா நிர்வாகம் மேற்பார்வையில் நடந்திருந்தது. தேர்தலுக்கு முன்வந்த நாட்களில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் ஆரோக்கிய பராமரிப்பு காப்பீட்டு பிரீமியங்கள் (health insurance premiums) இரண்டு இலக்கங்களாக உயர்வு காணவிருப்பதான செய்திக்கு முகம்கொடுத்தனர், இது பொருந்தாப் பெயர் கொண்ட கட்டுபடியாகும் பராமரிப்புச் சட்டம் (Affordable Care Act) என்ற ஒபாமாவின் பிரத்யேகமான உள்நாட்டு முன்முயற்சியின் விளைபொருளாக இருந்தது.

இன்றைய வாக்களிப்பின் முடிவு என்னவாய் வந்தாலும் சரி, அது எந்தப் பிரச்சினையையும் தீர்க்கப் போவதில்லை. தேர்தல் நாளில் நடக்கின்ற எதுவுமே வாழ்க்கைத் தரங்களின் உயர்வுக்கு கொண்டு செல்லப் போவதில்லை, தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற மாபெரும் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை, அல்லது உலகப் போரின் அபாயத்திற்கும் முடிவு கட்டப் போவதில்லை. அமெரிக்காவில் அரசியல் நெருக்கடியின் அடுத்த கட்டத்திற்கான கட்டுமானக்கூட்டை மட்டுமே அது ஸ்தாபிக்க இருக்கிறது.

இந்த அரசியல் நெருக்கடியானது தொலைநோக்கான மற்றும் உலகளாவிய பின்விளைவுகளைக் கொண்டிருக்கும். சர்வதேச அளவில் ஊடக வருணனையாளர்கள் அமெரிக்காவில் நடந்து வருவதை அதிர்ச்சியும் திகிலும் கலந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டின் ஃபைனான்சியல் டைம்ஸில், எட்வார்ட் லூஸ், நிலவும் இந்தக் கவலையை “அமெரிக்க ஜனநாயகத்தின் மிக மரணஆபத்தான சோதனை” என்ற தலைப்பின் கீழ் ஞாயிறன்று வெளியான ஒரு கருத்தில் சுருங்கக் கூறினார். ”அமெரிக்கத் தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும்” அமெரிக்க அரசியல் அமைப்புமுறை “தடுமாறிக் கொண்டிருக்கிறது” என்று அவர் எழுதினார்.

தனது வாசகர்களிடம் இரண்டு விதமான அச்சுறுத்தல்களைக் கற்பனை செய்யுமாறு லூஸ் கோருகிறார் : ”ஒன்றில் ஒரு கரடி [ட்ரம்ப்] உங்கள் கேபினுக்குள் வந்து விடுகிறது, இன்னொன்றில் கறையான்கள் உள்ளிருந்து அதை அரித்துத் தின்கிறது.” கரடி வருவதில் என்ன நல்ல விடயம் என்றால், “அது வருவதை நீங்கள் பார்க்க முடியும்” என்கிறார் லூஸ். மாறாக, “கறையான்களோ கண்ணுக்குப் புலப்படாது. எப்போது அவை அடித்தளத்தை சாப்பிட்டு விட இருக்கின்றன என்பதை துல்லியமாகக் கூறுவது கடினம். அமெரிக்கர்கள் தங்கள் அமைப்புமுறையில் எப்போது ஏன் நம்பிக்கை இழந்தார்கள்?”

2016 தேர்தலின் பிற்போக்குத்தனமான காட்சி நாட்பட்ட சிதைவின் ஒரு விளைபொருளாகும். இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகள் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது ”வரலாற்றின் முடிவை” குறித்ததாகவும் அமெரிக்கா, மேலாதிக்கமான மற்றும் சவாலற்ற உலக சக்தியாக, உலகெங்கும் தாராளவாத ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்ததாகவும் பிரகடனம் செய்தனர். வேறெதுவும் நடக்கவில்லையென்றால், இந்த தேர்தல் குறைந்தபட்சம் அந்த பிற்போக்குத்தனமான கற்பனையை என்றென்றைக்குமாய் புதைக்கும்.

இன்று அமெரிக்கா முகம்கொடுக்கும் நெருக்கடியானது கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பாக சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சி முகம்கொடுத்த நிலைமைக்கு ஆழத்தில் சற்றும் குறைந்ததல்ல. நான்கு தசாப்தங்களாய் வீழ்ச்சி கண்டு செல்கிற வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பெருகிச் செல்லும் சமூக சமத்துவமின்மை, கால் நூற்றாண்டாய் முடிவில்லாத போர், பதினைந்து ஆண்டு காலமாய் “பயங்கரவாதத்தின் மீதான போர்” மற்றும் அதனுடன் கைகோர்த்து இராணுவ-உளவு எந்திரத்தின் அதிகாரம் பரந்த அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை: இவை தான் ஜனநாயக இழையை சுக்குநூறாய் கிழித்துக் கொண்டிருக்கும் அழுத்தங்களாகும்.

இந்தத் தேர்தலில் வெளிப்பட்ட நெருக்கடியானது ஒரு தனித்துவமான அமெரிக்க நிகழ்வுப்போக்கு அல்ல. பிரிட்டனில் பிரெக்ஸிட் வாக்களிப்பு, ஐரோப்பா முழுவதிலும் அதி-வலது மற்றும் பாசிச இயக்கங்களின் எழுச்சி மற்றும் உலகெங்கிலும் அரசியல் ஸ்தாபகங்கள் பொதுவாக மதிப்பிழந்துள்ளமை போன்று உலகளாவிய அளவில் இதற்கு இணையான அதிர்ச்சிகள் நடந்தேறி வருகின்றன.

ஒட்டுமொத்த பூகோளத்தையும் அச்சுறுத்துகின்ற விரிந்து செல்கின்ற ஒரு ஏகாதிபத்தியப் போர் முனைப்பு மற்றும் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளமான வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் வெளிப்பாடு காண்கின்ற உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி தான் இவை ஒவ்வொன்றின் கீழும் அமைந்திருக்கிறது.

நடைமுறைவாதரீதியான “குறைந்த தீமை” அரசியலின் காலம் எல்லாம் எப்போதோ கடந்துபோய் விட்டது. தொழிலாளர்களது வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நிறம், பால், தேசியம் மற்றும் இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் ஒரு கட்சியைக் கட்டியெழுப்புவதே நெருக்கும் அவசர அவசியமாகும். அந்தக் கட்சியே சோசலிச சமத்துவக் கட்சி ஆகும். இந்தத் தேர்தலில், எங்களது வேட்பாளர்களான, ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் நைல்ஸ் நிமூத் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர, சர்வதேசிய மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்திருக்கின்றனர்.

லக சோசலிச வலைத் தளம் அமெரிக்காவில் இருக்கும் தனது வாசகர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களான வைட் மற்றும் நிமூத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. ஜனநாயகவிரோதமான வாக்குச்சீட்டு அணுகல் சட்டங்களின் காரணத்தால், லூசியானா மாநிலத்தில் மட்டுமே SEP வாக்குச்சீட்டில் இடம்பெறுகிறது, ஆனாலும் மற்ற மாநிலங்களில் ஆதரவாளர்கள் SEP வேட்பாளர்களின் பெயர்களை எழுதி வாக்களிக்கலாம்.

இப்போது அபிவிருத்தி கண்டுவருகின்ற மற்றும் தேர்தலின் பின்னால் தீவிரமடைய இருக்கிற போராட்டங்களுக்கு தயார்செய்வதற்கு ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே முதன்மையான மற்றும் அடிப்படையான பணியாகும். SEP மற்றும் அதன் இளைஞர் அமைப்பான, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணையுங்கள். உலக சோசலிசப் புரட்சியின் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செல்வாக்கு நாடெங்கிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கின்ற ஒவ்வொரு தொழிற்சாலை மற்றும் வேலையிடத்திற்கும், ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கும் நீண்டு விரிய உதவுங்கள்.