ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Election of Donald Trump foreshadows trade war in Asia

டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வு ஆசியாவில் வர்த்தக போர் எழவிருப்பதை முன்னறிவிக்கிறது

Peter Symonds
25 November 2016

சீனாவுக்கு எதிரான ஜனாதிபதி பராக் ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யின் பொருளாதார மையஅம்சமாக இருந்த பரந்த வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தமான பசிபிக் கடந்த கூட்டு உடன்படிக்கை (TPP) ஐ அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் கிட்டத்தட்ட கைதுறந்து விட்டார். திங்களன்று வெளியான அவரது சுருக்கமான கொள்கை காணொளியில், ட்ரம்ப், தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே இந்த உடன்பாட்டில் இருந்து திரும்பப்பெறும் ஒரு விருப்பக் குறிப்பை விநியோகிக்கவிருப்பதாக அறிவித்து தனது “அமெரிக்காவே முதலில்” எனும் பாதுகாப்புவாதத்தை உறுதிப்படுத்தினார்.

ஆசியாவில் உள்ள அமெரிக்க கூட்டாளிகள் மற்றும் TPP கூட்டாளிகளுக்கு ட்ரம்ப்பின் அறிவிப்பானது முகத்திலறைந்த ஒரு நடவடிக்கையாக இருந்தது, சென்ற வார இறுதியில் பெருவில் நடந்த ஆசிய பசிபிக் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் (APEC) ஒன்றுகூடியிருந்த இந்நாடுகள், ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பவர் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன. ஒபாமாவின் “ஆசியாவில் முன்னிலை” நடவடிக்கையை மட்டுமல்லாது ஆசிய பசிபிக்கில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கையும், குறிப்பாக, அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கையையும், கேள்விக்குள்ளாக்கியிருக்கக் கூடிய ட்ரம்ப் தேர்வாகியிருப்பதை ஒட்டி ஆசியத் தலைநகரங்களில் எழுந்திருந்த நிச்சயமற்ற தன்மையை இந்த முடிவானது மேலும் அதிகப்படுத்தும்.

அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜப்பானையும் அத்துடன் சீனாவையும் நியாயமற்ற வர்த்தகக் கூட்டாளிகளாய் கூறி, ட்ரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்ததோடு, தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான செலவுக்கு அந்நாடு போதுமான அளவில் தொகை செலுத்தவில்லை என்பதாக அதன் மீதும் விமர்சனமும் செய்தார். ஜப்பானுடனான அமெரிக்கக் கூட்டணியை அவர் இவ்வாறு சாடினார்: “ஜப்பானை யாராவது தாக்கினால் நாம் போய் மூன்றாம் உலகப் போரைத் தொடக்க வேண்டும்... நாம் தாக்கப்பட்டால் ஜப்பான் நமக்கு உதவ வேண்டியதில்லை.”

ட்ரம்ப்பின் கொள்கை காணொளி வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ஜப்பானிய பிரதமரான சின்சோ அபே “அமெரிக்கா இல்லாத TPP அர்த்தமற்றதாகி விடும்” என்று அறிவித்தார். அமெரிக்கப் பங்கேற்பு இல்லாமல் வர்த்தக அணியை உருவாக்குவதை முன்னெடுப்பதற்கு APEC இல் பங்கேற்ற மற்ற TPP பங்குதாரர்களின் யோசனைகளை அவர் கண்டித்தார். உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்கா மற்றும் மூன்றாம் பெரிய பொருளாதாரமான ஜப்பான் இல்லையென்றால், TPP, ஒருவேளை அதன்பின் உயிர்பிழைத்திருந்தால், அது, அதனுடைய ஒரு நிழலாகக் குறைக்கப்பட்டு விடும் என்றார் அவர்.

TPP ஒருபோதும் “தடையில்லா வணிக” ஒப்பந்தமாக இருந்ததில்லை. ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் சீனாவின் பொருளாதார செல்வாக்கை பலவீனப்படுத்தி தன்னுடைய சொந்த மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி செய்த வழிவகையாக அது இருந்தது. ஒபாமா அறிவித்ததைப் போல, 21 ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தின் விதிகளை, சீனா அல்லாமல் அமெரிக்கா எழுதுவதை, TPP உறுதிசெய்திருந்தது. அமெரிக்க புத்திஜீவித உடைமைகளுக்கான பாதுகாப்பு, தேசங்களின் விதிமுறைகளால் அமெரிக்க பெருநிறுவனங்களின் இலாபங்கள் பாதிக்கப்படுமானால் அந்த அரசாங்கங்களின் மீது வழக்குத் தொடுப்பதற்கு இப்பெருநிறுவனங்கள் கொண்டிருக்கக் கூடிய வசதிகள், அத்துடன் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கியிருந்தன.

TPP எப்போதும் ஒபாமா நிர்வாகத்தின் இராஜதந்திர தாக்குதல்கள் மற்றும் சீனாவுக்கு எதிரான ஆசிய பசிபிக் போருக்கான இராணுவத் தயாரிப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. ஒபாமாவின் பாதுகாப்புச் செயலரான ஆஷ்டன் கார்ட்டர், “TPP எனக்கு இன்னுமொரு விமானந்தாங்கி கப்பல் போன்ற முக்கியத்துவத்தைக் கொண்டதாகும்” என்று அறிவித்து அதன் மூலோபாய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார். ஆசியாவிலான அமெரிக்காவின் இராணுவப் பெருக்கத்தில் பிராந்தியம் முழுமையாக கூட்டணிகளை வலுப்படுத்துவது, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் புதிய தள ஏற்பாடுகளை மேற்கொள்வது, அத்துடன் 2020க்குள்ளாக கடற்படை மற்றும் விமானப்படையின் மதிப்புமிக்க சாதனங்களில் 60 சதவீதத்தை ஆசிய பசிபிக்கில் நிறுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

பின்னிழுப்பதற்கெல்லாம் எட்டாத் தூரத்தில், ட்ரம்ப் சீனாவுடனான ஒரு வர்த்தகப் போருக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார், இது ஆசியா முழுமையிலும் பதட்டங்களை பெருமளவில் தீவிரப்படுத்த இருப்பதோடு போரின் அபாயத்தையும் அதிகப்படுத்த இருக்கிறது. சீனாவை ஒரு “நாணயமதிப்பு கைப்புரட்டு நாடு” என அறிவித்து அதன்மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்கள் மீது 45 சதவீதம் வரை தண்ட வரி விதிக்க வகை செய்யப் போவதாகவும் அவர் மிரட்டியிருக்கிறார். சீனாவின் அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு தலையங்கம் இவ்வாறு பதிலடி தந்தது: “போயிங் கொள்முதல்கள் ஏர்பஸ் கொள்முதல்களைக் கொண்டு பிரதியீடு செய்யப்படும், சீனாவில் அமெரிக்க வாகனங்கள் மற்றும் ஐபோன் ஆகியவற்றின் விற்பனை சரிவைச் சந்திக்கும், அத்துடன் அமெரிக்காவின் சோயாபீன் மற்றும் மக்காச்சோள இறக்குமதிகள் நிறுத்தப்படும்.”

ட்ரம்ப்பின் தண்டிப்புமுறை வர்த்தக நடவடிக்கைகள், சீனாவின் மீது மட்டுமல்ல, சீனாவை மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகக் கொண்டிருக்கக் கூடிய ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்க கூட்டாளிகளுக்கும் பாதிப்பைக் கொண்டுவர இருக்கின்றன. Daiwa Securities கூறுவதன் படி, சீனப் பொருட்கள் மீது 15 சதவீதம் வரிவிதித்தால் அது சீனப் பொருளாதார வளர்ச்சியில் 1 சதவீத வீழ்ச்சியைக் கொண்டுவருவதோடு அதன் வர்த்தகக் கூட்டாளிகளின் வளர்ச்சி விகிதங்களையும் கணிசமாகக் குறைக்கும்.

ட்ரம்ப்பின் தேர்வை அடுத்து தீவிரமான நிச்சயமற்ற தன்மை நிலவுவதன் மத்தியில், ஆசியாவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கக் கூடிய அரசாங்கங்கள் தங்கள் பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயங்களை மறு-மதிப்பீடு செய்யத் தள்ளப்பட்டிருக்கின்றன.

ட்ரம்ப் TPP ஐ ஒழித்தார் என்றால், அதன் போட்டி வர்த்தக ஒப்பந்தமான பரந்த பிராந்திய பொருளாதாரக் கூட்டு (Regional Comprehensive Economic Partnership - RCEP) ஐ நிறைவு செய்ய சீனாவுடன் சேர்ந்து வேலை செய்ய தாங்கள் தள்ளப்படுவோம் என்பதை ஜப்பானிய பிரதமர் அபேயும் மற்ற வெளிநாட்டுத் தலைவர்களும் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். APEC கூட்டத்திற்கு முன்னதாக அபே சுட்டிக் காட்டியதைப் போல, RCEP இல் அநேக ஆசிய நாடுகளுடன் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் கூட இடம்பெறும், ஆனால் அமெரிக்கா இருக்காது.

அமெரிக்கா இல்லாமல் TPP “அர்த்தமற்றதாகி விடும்” என்று அறிவித்ததன் மூலம், அபே ஒரு வர்த்தக அணியை கிட்டத்தட்ட நிராகரித்து விட்டார், ஜப்பான் அறிவிக்கப்படாத தலைமையாக செயல்படும், இவ்வாறாய் ஆசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கான இன்னுமொரு சவாலை முன்வைக்கும். அமெரிக்காவை எதிர்க்கும் தயாரிப்புடன் அபே இல்லாமல் இருக்கலாம் என்றாலும் கூட, ஜப்பானிய ஆளும் உயரடுக்கில் இருக்கும் மற்றவர்கள், ஜப்பான் தனது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை கூடுதல் தீவிரத்துடன் பாதுகாப்பதை ஏற்கனவே ஆலோசனையளித்தே வருகின்றனர்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்குள் ஒரு சக்திவாய்ந்த மனிதரும் தலைமைக்கு இரண்டு முறை அபேவை எதிர்த்துப் போட்டியிட்டிருந்தவருமான சிகெரு இஷிபி, ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் ஜப்பான் ஒரு மாறுபட்ட அணுகுமுறையை எடுக்க வேண்டியிருக்கும் என்று திங்களன்று அறிவித்தார். “ஜப்பான் வெறுமனே தலையாட்டிக் கொண்டு அமெரிக்கா செய்யச் சொல்வதை பிறழாமல் செய்து கொண்டிருக்க முடியாது. செயலூக்கமான ஆலோசனைகளை நாம் முன்வைக்க வேண்டும், அத்துடன் தேவைப்படும் இடங்களில் நமது வெளியுறவுக் கொள்கையை துரிதகதியில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்” என்றார் அவர். அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கூறவில்லை என்றாலும், டோக்கியோவின் தரப்பில் முழுவீச்சிலான தயாரிப்புநிலைக்கும் இன்னும் கூடுதலான திட்டவட்டமான தொனிக்கும் இஷிபி அழைப்பு விடுத்தார்.

ட்ரம்ப்பின் மூர்க்கமான வர்த்தகப் போர் நடவடிக்கைகள் பிராந்தியம் முழுமையிலுமான புவியரசியல் போட்டிகளை இன்னும் பெருமளவில் மோசமாக்க இருக்கின்றன, இது அமெரிக்காவை சீனாவுடன் மட்டுமல்லாது ஜப்பான் போன்ற அதன் பாரம்பரியக் கூட்டாளிகளுடனும் மோதலுக்குள் கொண்டுவர இருக்கிறது. வரலாற்றுவழி வீழ்ச்சியின் காரணத்தால், ஆசியாவில் அல்லது வேறெங்கிலும் விதிகளை நிர்ணயம் செய்யக் கூடிய அளவுக்கு அமெரிக்காவிடம் இனியும் பொருளாதார வலிமை இல்லை, ஆகவே அது இராணுவ வழிமுறைகளில் இறங்க நிர்ப்பந்தம் பெறுகிறது.

ட்ரம்ப் இராணுவத்தை 90,000 வீரர்கள் அளவுக்கும் கடற்படையை 40 முதல் 350 வரையான போர்க்கப்பல்கள் அளவுக்கும் விரிவுபடுத்தி அமெரிக்காவின் இராணுவப் பெருக்கத்தை இரட்டிப்பாக்க இருப்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார். ட்ரம்ப்பின் ஆலோசகர் ரூடி யூலியானி சென்ற வாரத்தில் பீற்றினார்: “350 என்ற எண்ணிக்கையில், பசிபிக்கில் நம்முடன் சீனா போட்டி போட முடியாது... பாரம்பரியமுறை மற்றும் மாறுபட்ட இருபக்கங்கள் கொண்ட போர்முறைகளில், நவீன, பிரம்மாண்டமான, பெருவாரியான மற்றும் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும் ஒரு இராணுவத்தைக் கொண்டு அவர்களை எதிர்கொள்ளும்போது, அவர்கள் ஒருவேளை எதிர்த்து நிற்க முடியலாம், ஆனாலும் எனக்கு அது சந்தேகம் தான்.”

உண்மையில், ஆசியாவில் ஒரு பகிரங்கமான இராணுவ மோதலின் அபாயத்தைக் கொண்ட ஒரு வர்த்தகப் போரையும், ஆயுதப் போட்டியையும் தொடக்கி வைப்பதற்கே ட்ரம்ப் நிர்வாகம் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. ட்ரம்ப் என்ற ஆளுமையில் அல்ல, மாறாக தங்கள் சுமைகளை வெளிநாடுகளில் போட்டியாளர்கள் மீதும், சொந்த நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதும் திணிப்பதற்கு உலக சக்திகளை தள்ளிக் கொண்டிருக்கின்ற உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து செல்கின்ற நெருக்கடியிலேயே போருக்கான இந்த முடுக்கிவிட்ட உந்துதலுக்கான வேர்கள் அமைந்திருக்கின்றன.