ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Union Commission plans multi-billion weapons fund

ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு பல பில்லியன் மதிப்பிலான ஆயுத நிதியளிப்பிற்கு திட்டமிடுகிறது

By Christoph Vandreier
2 December 2016

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியுள்ள நிலையில், ஐரோப்பிய சக்திகள் இராணுவ மீள்ஆயுதமயமாக்கும் திட்டங்களைத் துரிதமாக முன்நகர்த்த அழுத்தமளித்து வருகின்றன. புதனன்று, இராணுவ செலவினங்களை அதிகரிப்பதற்கும் மற்றும் ஆயுத தளவாடங்கள் மீதான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஐரோப்பிய மட்டத்திலான நெருங்கிய கூட்டுறவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் முன்மொழிவுகளை வழங்கியது.

சம்பந்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய இயங்குமுறைகளை மறுசீரமைப்பது மற்றும் அவற்றை ஆயுத உற்பத்தியை நோக்கி திசைதிருப்புவதற்கான ஆதாரங்களுக்கு நிதி திரட்டுவது ஆகியவை பிரதான சவலாக இருக்கும். சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதற்கு பிரயோகித்த பின்னர், இப்போது இந்த அதிகாரத்துவ எந்திரம், போர் மற்றும் இராணுவ கட்டமைப்பு மீது ஆழமாக மக்கள் மதிப்பிழந்த கொள்கையைப் பலப்படுத்த பிரயோகிக்கப்பட இருக்கிறது.

ஆணைக்குழு ஓர் ஐரோப்பிய பாதுகாப்பு நிதியத்தை உருவாக்க முன்மொழிந்தது. “அங்கத்துவ நாடுகள் கூட்டாக கொள்முதல் மற்றும் அபிவிருத்தி செய்வதும் மற்றும் தரைவழி, வான்வழி, விண்வெளி பயணம் மற்றும் கடற்படை தகைமைகளின் முழு வீச்சையும் கூட்டாக பேணுவதுமே" இத்திட்டத்தின் நோக்கமாகும்.

உளவுபார்ப்புக்கான தகைமைகள் மற்றும் ஆயுதமேந்திய டிரோன்கள், மனிதர்களின்றி விண்வெளியை அணுகுதல் மற்றும் இணையவழி பாதுகாப்பின் அபிவிருத்தி ஆகியவற்றை விரிவாக்குவதே இந்த ஒருமுனைப்பின் பிரதான பகுதிகளாக இருக்கும். துல்லியமாக இந்த பகுதிகளில் தான் ஐரோப்பிய சக்திகள் பெரிதும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளன.

“ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், இராணுவ செலவினங்களில் இரண்டாவது மிக அதிகபட்ச மட்டத்தில் ஐரோப்பா இருக்கிறது. இருந்தும், ஐரோப்பா அமெரிக்காவிற்குப் பின்னால் பின்தங்கியுள்ளதோடு, வழிவகைகளின் செயல்திறனற்ற பயன்பாட்டின் காரணத்தினால் பாதிப்புறுகிறது, இதை ஒன்றின் மீது ஒன்று மேவும் கட்டமைப்புகளுடன் இணைக்க முடியும், ஒன்றிணைந்தியங்கும் தன்மை இல்லாதிருப்பதும் மற்றும் தொழில்நுட்ப இடைவெளிகளும் உள்ளன,” என்பதை ஆணைக்குழு ஒப்புக் கொண்டது.

ஆகவே பிரதான முதலீடுகள் அவசியமாகும் மற்றும் பாதுகாப்பு கூட்டு ஒத்துழைப்பு எட்டப்பட வேண்டியதும் அவசியமாகும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிக்கிறது. இந்த வழியில் மட்டுமே அவசியமான நிபுணத்துவம் பெற முடியும் மற்றும் "ஒன்றியத்தின் மூலோபாய தன்னாட்சியைப்" பாதுகாக்க அதன் ஆதாரவளங்களை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

நடைமுறையளவில், இந்த "பாதுகாப்பு நிதியம்" இரண்டு பாகங்களை உள்ளடக்கி இருக்கும். முதல் பாகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதி வழங்கப்படும் மற்றும் ஆயுத தளவாடங்களுக்கான ஆராய்ச்சிக்கு ஒத்துழைப்பும் வழங்கப்படும். 2020 ஆம் ஆண்டில் இருந்து, இதற்காக ஆண்டுக்கு 500 மில்லியன் யூரோ திட்டமிடப்பட்டுள்ளது, இது பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றிய மக்கள்நல உதவிகளில் இருந்து வெட்டுக்கள் மூலமாக பெறப்படலாம். தற்போது சகல ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளும் ஆயுத ஆராய்ச்சிக்காக வெறும் 2 பில்லியன் டாலர் மட்டுமே செலவிடுகின்றன. ஆகவே ஐரோப்பிய ஒன்றிய நிதியம் என்பது நிதி ஒதுக்கீட்டில் 25 சதவீத உயர்வைக் குறிக்கும்.

அதனினும் மிகப்பெரிய இரண்டாம் பாகமானது இராணுவ ஆயுத தளவாடங்களின் அபிவிருத்தி மற்றும் கொள்முதலை உட்கொண்டிருக்கும். அங்கத்துவ நாடுகள் அவற்றின் தேவைக்கேற்ப இதன் மூலமாக அவற்றின் கொள்முதல்களை ஒருங்கிணைக்கலாம். சான்றாக, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி அனைத்தும் படையினரை ஏற்றிச்செல்லும் குண்டுதுளைக்காத வாகனங்களை வாங்க விரும்பினால், அவை எதிர்காலத்தில் இவற்றைத் தனித்தனியாக கொள்முதல் செய்ய வேண்டியதில்லை, மாறாக பாதுகாப்பு நிதியத்தின் மூலமாக ஒருங்கிணைந்து கொள்முதல் செய்யலாம். ஆணைக்குழு ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக 5 பில்லியன் யூரோவை மதிப்பிடுகிறது. ஆனாலும் நிதியத்திற்கான எந்த உச்சபட்ச வரம்பும் ஏற்படுத்தப்படவில்லை.

பாதுகாப்பு நிதியத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் முதலீடுகள், ஒவ்வொரு நாட்டின் வரவுசெலவு கணக்கு பற்றாக்குறையைக் கணக்கிடுகையில் அதில் சேர்த்துக் கொள்ளப்படாது என்பது இத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இதுபோன்ற முதலீடுகள், "ஸ்திரப்பாடு மற்றும் வளர்ச்சி உடன்படிக்கைக்கான உந்துசக்தியின் 'ஒன்றாக நோக்கப்படும் நடவடிக்கைகளாக' பார்க்கப்படும் என்பதால், அங்கத்துவ நாடுகளிலிருந்து எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு ஸ்திரப்படுத்தல் மீது சுமையேற்றாது,” என்று ஆணைக்குழுவின் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. 

வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையை கட்டுப்படுத்த தவறும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்த நிதிகளை படைத்துறைசாரா வேலைகள், மருத்துவமனைகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் அல்லது பள்ளிக்கூடங்களுக்காக பயன்படுத்தினால் அவை தண்டிக்கப்படும், ஆனால் அந்நாடுகள் அதே கடன்களை டாங்கிகள், நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் பயன்படுத்தினால் தண்டிக்கப்படாது என்பதையே இது நடைமுறையளவில் குறிக்கிறது.

கிரீஸில் கடனைக் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தலானது, சிகிச்சையளிக்கக்கூடிய நோய்களால் மக்களின் மரணம், இளைஞர் வேலைவாய்ப்பின்மையில் ஏறத்தாழ 50 சதவீத அதிகரிப்பு மற்றும் சம்பளக் குறைப்பு ஆகியவற்றில் போய் முடிந்தது. இதற்கு முரண்பட்ட விதத்தில், இராணுவத்தை விரிவாக்குவதற்கான கடன்களுக்கு மடைக்கதவுகள் திறந்துவிடப்பட இருக்கின்றன.

இந்த இராணுவக் கட்டமைப்பானது அதிலிருந்து இலாபமீட்டும் நிறுவனங்களுடனான நெருங்கிய ஒத்துழைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நிதியம் ஒருங்கிணைப்பு குழுவால் நிர்வகிக்கப்பட உள்ளது, அது அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளோடு சேர்ந்து, ஆயுத தொழில்துறையின் தரகர்களையும் உள்ளடக்கி இருக்கும்.

இதற்கும் கூடுதல் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு, ஆயுத தொழில்துறைக்குள் உண்மையில் மிகப் பெரியளவில் படைத்துறைசாரா திட்டங்கள் மற்றும் பொருளாதார திட்டங்களை உள்நோக்கமாக கொண்ட ஆதாரவளங்களை உள் செலுத்தும். சான்றாக, “இரட்டை நோக்கத்துடன் பண்டங்களின் பிரிவில் நடந்து வரும் நடவடிக்கைகளை விரிவாக்குவதற்காக,” ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB) "கடன்கள், உத்தரவாதங்கள் மற்றும் அதன் சொந்த மூலதனங்களைக் கிடைக்குமாறு செய்யும்" என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இவ்விதத்தில், ஆயுத நிறுவனங்களுக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் நெறிமுறைகள் தவிர்க்கப்படும்.

தலைச்சிறந்த பிராந்திய பகுதிகளுக்கு நிதியளிப்பது மற்றும் Erasmus+ போன்ற ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நிதியளிக்கும் ஆதாரவளங்கள் —இதில் பல்கலைக்கழகங்களும் பங்கெடுக்கின்றன என்பதோடு— அதிகரித்தளவில் இராணுவ ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை நோக்கி திருப்பிவிடப்படும்.

அதன் பரிந்துரைகள் ஓர் ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்குவது குறித்ததல்ல என்றும், ஆனால் கூட்டாக அபிவிருத்தி செய்யப்பட்ட மற்றும் வாங்கப்பட்ட தளவாடங்கள் தனிப்பட்ட அங்கத்துவ நாடுகளுக்கு சொந்தமாக இருக்கும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டது.

ஆனால், "பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒன்றியம்" குறித்த திட்டத்தை வெளிப்படுத்தும் இந்த முன்மொழிவுகள் டிசம்பர் 15-16 இல் ஐரோப்பிய உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. ஓர் ஐரோப்பிய இராணுவத்திற்கும் மற்றும் ஐரோப்பிய வெளியுறவு கொள்கையை ஒருங்கிணைப்பதற்குமான அழைப்புகளுக்குப் பின்னால் பிரதான உந்து சக்தியாக இருப்பது ஜேர்மன் அரசாங்கமாகும். பேர்லின் இவ்விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்புகளில் மேலாளுமை கொள்ளவும் மற்றும் ஓர் உலக சக்தியின் அந்தஸ்திற்கு உயரவும் கருதுகிறது.

செவ்வாயன்று வெளியுறவு அலுவலகத்தின் ஐரோப்பிய மந்திரி மிக்கெயில் ரோத், பேர்லின் பாதுகாப்பு மாநாட்டில் இந்த நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். குறிப்பாக பிரிட்டன் வெளியேறுவதென்று ஆன பின்னர் மற்றும் ட்ரம்ப் தேர்வான பின்னர், ஜேர்மனிக்கு "ஒரு பொறுப்பான ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை" அவசியப்பட்டது. “வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில், ஐரோப்பிய ஒன்றியம் பக்கவாட்டில் நின்று கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதவாறு இருக்க முடியாது.”

ரோத் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் இப்போது நிஜமாகவே உலகின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக, நெருக்கடி நிர்வாகியாக மற்றும் மத்தியஸ்தராக, ஆம் அவசியமானால், இராணுவரீதியிலும், கடமைப்பாட்டை ஏற்கிறது,” என்றார். போர்கள் மற்றும் தலையீடுகளுக்கான இந்த கொள்கை, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆவணம் வெளியிடப்படும் போது இன்னும் அதிகரிக்கப்பட இருக்கிறது.