ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Italian president “freezes” resignation of Prime Minister Renzi

பிரதம மந்திரி ரென்சியின் இராஜினாமாவை இத்தாலிய ஜனாதிபதி "நிறுத்தி வைக்கிறார்"

By Peter Schwarz
7 December 2016

இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லா, 2017 வரவு செலவு திட்டக்கணக்கு நிறைவேற்றப்படும் வரையில் பிரதம மந்திரி மத்தேயோ ரென்சியின் இராஜினாமாவை "நிறுத்தி வைத்துள்ளார்". ரென்சியின் அரசியலமைப்பு திருத்தத்தை மிகப் பெரும்பான்மை வாக்காளர்கள் ஞாயிறன்று நிராகரித்த பின்னர், திங்களன்று மாலை ரென்சி அவரது இராஜினாமாவைச் சமர்ப்பித்தார்.

இந்த வரவு-செலவு திட்டத்திற்கு ஏற்கனவே பிரதிநிதிகள் சபை (கீழ்சபை) ஒப்புதல் வழங்கிவிட்டது. இது நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையான செனட்டில் இவ்வாரயிறுதியில் நிறைவேற்றப்படலாம் என்றாலும் இது நிச்சயமானதில்லை என்று ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.

வரவு-செலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் என்னாகும் என்பது திறந்த கேள்வியாகும். மத்தரெல்லா ஒரு இடைமருவு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கலாம். இப்போதைய நிதி அமைச்சர் கார்லோ பாடோவான் (Carlo Padoan) மற்றும் செனட் தலைவர் பேத்ரோ கிராஸ்ஸோ (Pietro Grasso) இருவரும் சாத்தியமான அரசு தலைவருக்கான விவாதத்தின் கீழ் உள்ளனர். 2011 இல் இருந்து 2013 வரையில், மரியோ மொன்டி கீழ் வாக்காளர்களால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத அதுபோன்றவொரு தொழில் உத்தியோகஸ்த மந்திரிசபை ஒன்றரை ஆண்டுகாலம் ஆட்சி செய்து, கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தது, அதை பின்னர் ரென்சி பின்தொடர்ந்தார்.

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்குத் தலைமை கொடுத்த வலதுசாரி கட்சிகள் உடனடியாக தேர்தல்களுக்கு வலியுறுத்தி வருகின்றன. பெப்பெ கிறிஸ்லோவின் ஐந்து நட்சத்திர இயக்கமும் மற்றும் வலதுசாரி லீகா நோர்த் கட்சியும் சர்வஜன வாக்கெடுப்பின் நிராகரிப்பானது அவர்களுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒரு வாய்ப்பளித்துள்ளதாக உணர்கின்றன. முன்னாள் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சி ஃபோர்ஸா இத்தாலியாவும் முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

திங்களன்று உள்துறை அமைச்சர் ஏஞ்சலினோ அல்பனோ கூறுகையில், புதிய அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டன் விளைவாக அங்கே இப்போது செல்லுபடியாகும் எந்த தேர்தல் விதிமுறைகளும் கிடையாது என்பதால், அனேகமாக பெப்ரவரியில் தேர்தல் நடக்கலாம் என்றார். அல்பனோ, மூன்றாண்டுகளுக்கு முன்னர் ரென்சியின் ஜனநாயக கட்சியுடன் (PD) அரசாங்கம் அமைக்க ஃபோர்ஸா இத்தாலியாவில் இருந்து பிரிந்து வந்த புதிய மத்திய-வலது கட்சியின் தலைவராவார்.

வரவு-செலவு திட்ட சட்டத்தை நிறைவேற்றுவதை ரென்சி தான் மேற்பார்வையிட வேண்டுமென ஜனாதிபதி விரும்புகின்ற நிலையில், அது புரூசெல்ஸ் மற்றும் பேர்லினின் கையெழுத்தை கொண்டுள்ளது. ரென்சியின் ஒட்டுமொத்த "சீர்திருத்த கொள்கைகளைப்" போலவே, அதன் நோக்கமும் தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வறிய அடுக்குகளை பலியாக கொடுத்து நாட்டின் கடனில்-மூழ்கிய வங்கிகள் மற்றும் இத்தாலியின் மிகப்பெரும் கடன் சுமையை சீரமைப்பதாகும். இக்கொள்கை ஏற்கனவே மக்களின் பெரும் பிரிவுகளை ஒரு சமூக பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் இருந்து இத்தாலிய தொழில்துறை உற்பத்தி 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது, அதேவேளையில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை அண்மித்து 40 சதவீதத்தில் உள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் பாரிய நிராகரிப்பானது, பிரதானமாக இக்கொள்கைக்கு எதிரான வாக்குகளாக இருந்தன. பெரும்பாலான பார்வையாளர்களால் ரென்சியின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், வாக்கு முடிவை ஒரு சிறிய வித்தியாசத்தில் எதிர்பார்த்திருந்தனர். இது எதிர்பார்த்ததை விடவும் வெகு தொலைவில் இருந்தது. வாக்குப்பதிவு 68 சதவீதமாக இருந்த நிலையில், இத்தாலியைப் பொறுத்த வரையில் இது மிகவும் அதிகமாகும், 19.4 மில்லியன் பேர் அந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தனர், வெறும் 13.4 மில்லியன் பேர் மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த முடிவு, இத்தாலியினது சமூக சமத்துவமின்மை மட்டத்தினால் பலமாக ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தது. வறுமை நிறைந்த தெற்கு பகுதியின் மூன்றில் இரண்டு பங்கினர் வேண்டாமென வாக்களித்தனர். அந்நாட்டின் 20 பிராந்தியங்களில், ஒப்பீட்டளவில் செல்வசெழிப்பான வெறும் மூன்று பிராந்தியங்கள் (Trentino-Alto Adige, Emilia-Romagna மற்றும் Tuscany) மட்டுமே வேண்டுமென வாக்களித்தன.

18-34 வயதுக்குட்பட்ட வாக்காளர்களிடையே இந்த முடிவு இன்னும் தெளிவாக இருந்தது. ரென்சி அவரது இளம் வயதையும் மற்றும் அவரது மந்திரிசபையில் பெருமளவில் பெண்களுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதையும் காட்டி இளம் வாக்காளர்களுக்கு அழைப்புவிட முயற்சித்திருந்த போதினும், இந்த அடுக்கின் 68 சதவீதம் சீர்திருத்தத்திற்கு எதிராகவும், 32 சதவீதம் ஆதரவாகவும் வாக்களித்தது. ரென்சியின் சீர்திருத்தங்களால் இளைஞர்களே பிரதானமாக பாதிக்கப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்ற நிலையில், ஏனையவர்களோ வெறுமனே படுமோசமான வேலைகளோடு சமாளித்து வருகின்றனர் அல்லது வெளிநாடுகளில் வேலை தேடி வருகின்றனர்.

35 இல் இருந்து 54 வயதுடையோர் குழுவில், 37 சதவீத வேண்டும் என அளிக்கப்பட்ட வாக்குகளை 63 சதவீத வேண்டாம் என்று அளிக்கப்பட்ட வாக்குகள் ஒன்றுமில்லாது செய்தது. 54 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களின் அடுக்குகள் மட்டுமே 51 சதவீத ஆதரவுடன் வேண்டும் வாக்குகளில் மேலதிகமாக இருந்தன.

ரோம், மிலான், துரீன் மற்றும் பொலோனியா நகரங்களில், இந்த வாக்குகளிப்பு சமூக வீழ்ச்சியுடன் தொடர்புபட்டிருந்தன. “சுற்றுப்புற பகுதிகளின்" ஆம் வாக்குகளை விட மையப்பகுதிகளின் ஆம் வாக்குகள் விஞ்சியிருந்த அதேவேளையில், பொருளாதாரரீதியில் புறக்கணிக்கப்பட்டிருந்த மற்றும் சீரழிவுக்கு உள்ளாகியிருந்த புறநகர்பகுதிகள் பிரதானமாக வேண்டாமென வாக்களித்திருந்தன.

Spiegel Online குறிப்பிடுகையில், “சர்வஜன வாக்கெடுப்பில் பதிவான அதிக வாக்குப்பதிவு மற்றும் தெளிவான அரசாங்க-விரோத போக்கு ஆகியவை அனைத்திற்கும் மேலாக ஒரு விடயத்தை எடுத்துக்காட்டுகிறது: அதாவது இத்தாலியர்கள் அவர்களது அரசு, அவர்களது நிர்வாகிகள், அவர்களது வாழ்க்கை மீது முழுவதுமாக திருப்தியின்றி உள்ளனர். அவ்வாறு இருக்க அவர்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன,” என்று குறிப்பிட்டது. பல நாடுகளில் இருப்பதைப் போலவே, “பொருளாதார பூகோளமயமாக்கல் ஒரு செல்வசெழிப்பான வெற்றியாளர்களின் அடுக்காக மற்றும் மிகப்பெரிய தோல்வியடைந்த அடுக்காக இத்தாலிய சமூகத்தை பிளவுபடுத்தி உள்ளது.”

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெளிவாக ரென்சியின் இராஜினாமாவால் கவலை கொண்டுள்ளனர், ஆனால் அதேநேரத்தில் அவர்கள் அவர்களது கடுமையான சிக்கனக் கொள்கை போக்கில் தொடர்ந்து இருக்கப் போவதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு அவருக்கு "வருத்தமளிப்பதாகவும்", ஆனால் ஐரோப்பா அதன் போக்கில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார். “என் பார்வையில், நாங்கள் ஐரோப்பாவில் எங்கள் வேலையைத் தொடர்வோம், நாங்கள் சரியான முன்னுரிமைகளையே அமைத்துள்ளோம்,” என்றார்.

இதற்கிடையே ரென்சியின் தோல்வியானது யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை முன்னறிவிப்பதாக, வணிக வட்டாரங்களில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. ஜேர்மன் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் உல்றிச் க்ரில்லொ கூறுகையில், “பொருளாதார அபிவிருத்தி, நிதியியல் சந்தைகள் மற்றும் நாணய ஒன்றியத்திற்கு புதிய அரசியல் ஸ்திரமின்மையின் அபாயம் அதிகரித்து வருகிறது,” என்றார்.

பொருளாதார மற்றும் வணிகங்களுக்கான ஆய்வு மையம் தெரிவிக்கையில், இத்தாலி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு யூரோ மண்டலத்தில் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கருதுகிறது. கடுமையான வேலைவாய்ப்பின்மை, தேக்கமடைந்துள்ள கூலிகள் மற்றும் இப்போது யூரோ அங்கத்துவத்துடன் வந்துள்ள புரூசெல்ஸ் திணிக்கும் சிக்கன நடவடிக்கைகள் என இவற்றை இத்தாலிய வாக்காளர்கள் காலவரையின்றி சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதையே சர்வஜன வாக்கெடுப்பு எடுத்துக்காட்டுவதாக பிரிட்டிஷ் பொருளாதார ஆலோசனை மையம் தெரிவித்தது. “இத்தாலி நடைமுறையளவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலும் பூஜ்ஜியம் வளர்ச்சியை மற்றும் குறைந்த நுகர்வு செலவினங்களை விலையாக கொடுக்க தயாராக இருந்தால், அது யூரோவில் இருக்க முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இது, அதிகரித்தளவில் பொறுமையிழந்துள்ள வாக்காளர்களிடம் இருந்து நிறைய கோருகிறது. இந்த கொள்கையை அவர்கள் தொடர்வதற்கான வாய்ப்பு 30 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம்,” என்று குறிப்பிட்டது.

மேலும், பைனான்சியல் டைம்ஸில் கீடியன் ராச்மனும் எச்சரிக்கையில், “ஐரோப்பிய திட்டம் முன்னொருபோதும் இல்லாதளவில் பலவந்தமாக உள்ளது. வெளியேறுவதென்று பிரிட்டனின் முடிவு இதற்கான மிகவும் அதிர்ச்சியூட்டும் ஆதாரமாகும். ஆனால், நீண்டகால ஓட்டத்தில், இத்தாலியில் கட்டவிழ்ந்து வரும் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிர்பிழைப்புக்கு இன்னும் கடுமையான அச்சுறுத்தலை முன்னிறுத்தும். அரசியல், பொருளாதார மற்றும் புவியியல்ரீதியானதும் கூட இதற்கான காரணங்களாக இருக்கும்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியமானது மிகவும் சக்தி வாய்ந்த ஐரோப்பிய வியாபார மற்றும் நிதியியல் நலன்களின் ஒரு பிற்போக்குத்தனமான கருவியாகும். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஈவிரக்கமின்றி தாக்குதல்களுக்கும், அகதிகளுக்கு எதிராக பலவந்தமாக எல்லைகளை மூடுவதற்கும் மற்றும் அதிகரித்துவரும் இராணுவவாதத்திற்கும் அதுவே பொறுப்பாகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பரந்த எதிர்ப்பை சாதகமாக்கி, வலதுசாரி அமைப்புகள் ஒரு பிற்போக்குத்தனமான, தேசியவாத திசையில் அதை திருப்புவதற்கு அங்கே கணிசமான அபாயம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் சிக்கனக் கொள்கைகளுக்கான சமூக ஜனநாயகவாதிகளின், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது ஆதரவாளர்களின் ஆதரவு உருவாக்கி உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு தீவிர வலது முயன்று வருகிறது.