ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump picks General “Mad Dog” Mattis for secretary of defense

ஜெனரல் “முறைப்பு பார்வை” மாட்டிஸை பாதுகாப்புச் செயலர் பதவிக்கு ட்ரம்ப் தெரிவுசெய்கிறார்

By Patrick Martin
5 December 2016

ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஓய்வுபெற்ற மரைன் கார்ப்ஸ் (Marine Corps) ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸை தனது பாதுகாப்புச் செயலராக நியமிக்க இருப்பதை வியாழனன்று இரவு வெளிப்படுத்தியமையானது, அரசியல் ஸ்தாபகங்கள் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டு ஊடகங்களின் முக்கிய அங்கங்கள் எங்கிலும் ஏற்புடன் வரவேற்கப்பட்டது.

ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரில் பேரணி பாணியிலான தனது உரையின் -இதில் அவர் தீவிர தேசியவாதத்தையும் இராணுவவாதத்தையும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறுகின்ற வாய்வீச்சு வாக்குறுதிகளுடன் கலந்த ஒரு முன்னோக்கைப் பேசினார்- முடிவில் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். 2004 டிசம்பரில் ஈராக்கின் ஃபலூஜா நகரத்தை மீட்டெடுத்த மிருகத்தனமான மரைன் படை எதிர்த்தாக்குதலுக்கு தலைமை கொடுத்ததன் பின்னர் அவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயரான “Mad dog” (”முறைப்பு பார்வை”) என்பதைக் கொண்டு மாட்டிஸை பலமுறையும் அவர் குறிப்பிட்டார். இத்தகையதொரு பட்டப்பெயர் கொண்ட ஒரு ஜெனரலை நிதானமான தன்மை மற்றும் நல்லெண்ணத்தின் ஒரு அடையாளமாக பாராட்டுவதென்பது இன்றைய அமெரிக்காவில் மட்டுமே காணத்தக்கதாகும்.

மாட்டிஸின் நியமனத்துக்கு காங்கிரசில் இதற்கென சட்டம் நிறைவேற்றியாக வேண்டும், ஏனென்றால் இப்போதைய சட்டப்படி ஒரு இராணுவ அதிகாரி பென்டகனில் சிவிலியன்களுக்கான ஒரு உயர் பதவிக்குத் திரும்பும் முன்னதாக ஓய்வுபெற்று குறைந்தபட்சம் ஏழு வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும்.

1947 இல் போர்த் துறையை பிரதியீடு செய்து பாதுகாப்புத் துறை ஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில், ஒரு இராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய பத்து ஆண்டுகளுக்குள்ளாக (இது 2008 இல் ஏழு ஆண்டுகளாய் குறைக்கப்பட்டது) ஒருவர் நியமிக்கப்பட முடியாது என்று காங்கிரஸ் நிர்ணயம் செய்தது. ஆயினும் 1950 இல் ஜெனரல் ஜோர்ஜ் மார்ஷல் நியமனம் செய்யப்படுவதை அனுமதிப்பதற்காக இந்த நிர்ணயம் உடனடியாகத் தளர்த்தப்பட்டது, கடந்த 66 ஆண்டுகளில் முன்னாள் ஜெனரல்கள் யாரும் இந்தப் பதவிக்கு அமர்த்தப்பட்டிருக்கவில்லை.

ஆயினும், இராணுவத்தின் மீதான குடிமக்களின் கட்டுப்பாடு என்ற அடிப்படையான ஜனநாயகப் பிரச்சினைக்கு அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக எந்த உறுதிப்பாடும் இல்லை. மாட்டிஸுக்காக விதியைத் தளர்த்தும் தீர்மானத்திற்கு, காங்கிரஸில், இரண்டு கட்சிகளின் தரப்பிலுமே, மிகக் குறைந்த எதிர்ப்பே இருக்கிறது.

மாட்டிஸ் ஒரு நெடிய இரத்தம்தோய்ந்த ஒரு தொழில்வாழ்க்கை கொண்டவராவார். 2001 இல் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மற்றும் 2003-2004 இல் ஈராக் மீது படையெடுத்து ஆக்கிரமித்தமை இரண்டிலுமே அவர் முன்னிலை செயல்பாட்டு பாத்திரங்களை ஆற்றியிருந்தார். பின்னாளில் இவர் ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் (David Petraeus) உடன் இணைந்து பென்டகனின் கிளர்ச்சித்தடுப்பு போர் கையேட்டை தயாரித்தார், அத்துடன் நேட்டோவிலும் ஒரு உயர் பதவியை வகித்தார்.

2010 முதல் 2013 வரையில் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவராக இருந்த அவரது தொழில்வாழ்க்கை, ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளின் திரும்பப்பெறலையும், ஆப்கானிஸ்தானில் மேலும் மேலும் எத்தரப்பும் முன்நகர முடியாத நிலையையும், அத்துடன் எகிப்தில் புரட்சிகர எழுச்சிக்கு எதிராக எகிப்திய இராணுவத்திற்கு வலுக் கொடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளையும் மேற்பார்வை செய்தபடி முடிவுக்கு வந்திருந்தது. சிரியாவில் அமெரிக்கத் தலையீட்டின் திட்டங்கள் தீட்டப்படுவதையும் அவர் மேற்பார்வை செய்தார், அசாத்துக்கு எதிரான ஆயுதமேந்திய இஸ்லாமியக் கிளர்ச்சியை அசாத்தின் கூட்டாளியான ஈரானுக்கு ஒரு நாசகரமான மூலோபாய அடியாக விழும் சாத்தியம் கொண்ட ஒன்றாகப் பாராட்டினார்.

ஈரானை நோக்கிய ஒபாமா வெள்ளை மாளிகையின் கொள்கை பொருத்தமற்ற வகையில் மிகைஇணக்கம் காட்டுவதாக இருந்தது என்று அவர் கருதிய நிலையில், அது தொடர்பாக வெள்ளை மாளிகையுடன் அவருக்கு ஏற்பட்ட மோதலால் இந்த நான்கு-நட்சத்திர ஜெனரல், ஐந்து மாதங்கள் முன்கூட்டியே CENTCOM (மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த ஆயுதப்படைகள் கட்டுப்பாடு மையம்) இல் அவரது பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஓய்வுபெற்றதன் பின்னர், மாட்டிஸ் தனது பேதங்களை பகிரங்கப்படுத்தினார், “மத்திய கிழக்கில் வெளியேறிக் கொள்வதான கொள்கை” என்று அவர் குறிப்பிட்ட ஒன்றுக்காக ஒபாமா நிர்வாகத்தை அவர் தாக்கி முழங்கினார்.

இந்த பகிரங்க விமர்சனமானது குடியரசுக் கட்சியின் அத்தனை கன்னைகளுக்கும் மாட்டிஸை பிரியமானவராக ஆக்கியது. வில்லியம் கிறிஸ்டோல் போன்ற “ட்ரம்ப் ஒருபோதும் கூடாது” என்ற பழமைவாதிகள் ட்ரம்ப்புக்கு எதிராக ஜனாதிபதி பதவிக்கான சுயேச்சை வேட்பாளராக இவரது பெயரை சுற்றில் விட்டனர். முறையே குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்தேர்வு மாநாடுகளில் தங்களுக்கு ஆதரவாய் பேசுவதற்கு ட்ரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் இருவருமே அவரை அழைத்தனர், என்றாலும் 2016 பிரச்சாரத்தில் எந்தப் பாத்திரத்தையும் வகிப்பதற்கு அவர் மறுத்து விட்டார்.

பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள உயரடுக்கின் ஊடகங்களில், ட்ரம்ப்பின் நியமனத்திற்கு ஆதரவாக கணிசமான ஒற்றுமை இருக்கிறது. பழமைவாதிகள் முதல் தாராளவாதிகள் வரை மாட்டிஸுக்கான பாராட்டு பல தரப்பாக இருக்கிறது.

“ஊரா (உற்சாகக் குரல்), ஜெனரல் மாட்டிஸ்” என்று தனது தலையங்கத்திற்கு தலைப்பிட்டிருந்த வோல் ஸ்டீரிட் ஜேர்னல், ட்ரம்ப் மற்ற பதவிகளுக்கு தனது நீண்டகால எடுபிடிகளை தேர்வு செய்திருந்த அதேநேரத்தில், “பாதுகாப்புச் செயலரை தகுதி அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறார்” என்று கூறியது. அரசியல்சட்ட சம்பந்தமான விடயங்களைப் பொறுத்தவரை, இத்தலையங்கம் கூறியது: “சிவிலியன் தலைமை கோட்பாடு முக்கியமானது தான், ஆனாலும் மாட்டிஸ் இப்பதவிக்குத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் கொண்டிருக்கிறார்.”

ாஷிங்டன் போஸ்ட், கட்டவிழும் ட்ரம்ப் நிர்வாகத்தில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் முக்கியத்துவம் பெறுவது குறித்து சில கவலைகளை வெளிப்படுத்திய அதேநேரத்தில், இருந்தபோதிலும் உள்வரும் ஜனாதிபதிக்கு ஒரு தடுப்பரணாக செயல்படக் கூடிய வகையில், பென்டகன் தலைமையில் ஒரு ஓய்வுபெற்ற ஜெனரலை அமர்த்துவதற்காக சட்டத்தைத் தளர்த்துவது முகாந்திரமுடையதே என்று கூறி நிறைவு செய்கிறது. “ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவிக் காலம் இருக்கக் கூடிய அதீத சூழ்நிலையானது —இராணுவ விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் இரண்டுமே தெரியாதவரும் உணர்ச்சிவிளைவான முடிவுகளை எடுக்கக் கூடியவருமான ஒருவர் முப்படைத் தளபதியாக இருப்பது உள்ளிட்டவை— ஒரு மாட்டிஸுக்கான விதிவிலக்கு விடயத்தை வலுப்படுத்துகின்றன.”

ியூ யோர்க் டைம்ஸ் மாட்டிஸை “பென்டகனுக்கு ஒரு அனுபவம் வாய்ந்த தெரிவு” என்று வஞ்சகமின்றி பாராட்டியது; “எதிர் கண்ணோட்டங்களுக்கு மிகக் குறைந்த ஆர்வமே இதுவரை காட்டி வந்திருக்கக் கூடிய ஒரு அபாயகரமான அறியாமை கொண்ட ஒரு ஜனாதிபதியின் தலைமையிலான வெள்ளை மாளிகைக்கு பகுத்தறிவுக் குரலை இவர் கொண்டுவரக் கூடும்.”

ஜனநாயகக் கட்சி மற்றும் கிளிண்டன் பிரச்சாரத்தை ஆதரித்த இராணுவ-உளவுத் துறை எந்திரத்தின் பிரிவுகளை எதிரொலிக்கும் விதமாக, டைம்ஸ் மற்றும் போஸ்ட், உள்வரும் ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிராக போதுமான அளவுக்கு மூர்க்கமாக இருக்காது என்ற தமது கவலைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. நவம்பர் 12 அன்று டைம்ஸ், “ரஷ்யா விடயத்தில் மென்மையாக நடந்து கொள்வதன் அபாயம்” என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தை வெளியிட்டது, அதில் “ரஷ்யாவைப் பாதுகாத்துப் பேசுபவராகவும் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்கான ரஷ்யாவின் முயற்சிகளின் மூலம் ஆதாயமடைந்தவராகவும்” ட்ரம்ப் இருப்பதாக அவரை விமர்சனம் செய்தது. 

இந்த வட்டாரங்களுக்குள்ளாக, ரஷ்யா விவகாரத்தில் ட்ரம்ப் உடன் பேதம் கொண்டவராய் கருதப்படும் மாட்டிஸ், ரஷ்ய-விரோதக் கொள்கையில் இருந்து விலகிச் செல்வதற்கு உள்வரும் நிர்வாகத்தில் இருக்கக் கூடிய எந்தப் போக்கிற்கும் சமநிலைப்படுத்தும் எதிர்எடையாகப் பார்க்கப்படுகிறார்.

”அத்தனை வகை போர்முறைப் பாத்திரங்களையும் பெண்களுக்கு திறந்து விடுவது, திருநங்கைத் துருப்புகள் சேவை செய்வதற்கும் இணங்கிச் செல்வதற்கும் வெளிப்படையான ஓர்பால்விருப்பத் துருப்புகளை அனுமதிப்பது போன்ற ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கான கொள்கை மாற்றங்களை திரும்பப் பெறும் நோக்கம் ஜெனரல் மாட்டிஸுக்கு இருக்குமா” என்பது தான் டைம்ஸ் வெளிப்படுத்திய ஒரே உண்மையான கவலை. அமெரிக்கத் துருப்புகள் பொசுக்கப் பணிக்கப்படும் மக்களின் அடையாளங்களைக் காட்டிலும் அத்துருப்புகளின் பால் மற்றும் பால்விருப்ப அடையாளம் குறித்துத் தான் இந்தத் தாராளவாத ஆவண-செய்தித்தாள் மிக அதிக அக்கறை கொண்டிருக்கிறது.

மனிதாபிமானப் பேரழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு அவசியமானது என்பதான முகாந்திரத்தைக் கூறி, சிரிய உள்நாட்டுப் போரில் அமெரிக்கா இராணுவரீதியாகத் தலையீடு செய்வதன் மிக ஆர்வமான ஆலோசகராக ைம்ஸ் தன்னை தனித்துவத்துடன் காட்டி வந்திருக்கிறது. தலிபான்களைக் கொல்வது எத்தனை “மகிழ்ச்சி”யாக இருந்தது என்று ஒருமுறை பெருமையடித்த ஒரு ஜெனரல் பரிந்துரைக்கப்பட்டிருப்பது இந்த “மனித உரிமை” புனிதப் போராளிகளை மனமொடியச் செய்துவிடவில்லை.

இதில் குறிப்பாக கவனத்திற்குரியது என்னவென்றால், இந்த மூன்று தலையங்கங்களுமே மாட்டிஸ் நியமனத்தின் மூலம் கொள்ளி வைக்கப்படவிருக்கும், இராணுவத்தின் மீதான சிவிலியன் கட்டுப்பாடு கோட்பாட்டை விவாதித்து, பின் நிராகரிக்கின்றன.

மாட்டிஸ் பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஒரு தனிமைபடுத்தப்பட்டதான நிகழ்வல்ல. பாதுகாப்பு உளவு முகமையின் முன்னாள் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற லெப்டினண்ட் ஜெனரல் மைக்கல் ஃபிளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக —இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கையை ஒருங்கிணைக்கக் கூடிய தலைமையான வெள்ளை மாளிகை பதவி— ட்ரம்ப்பால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முன்னாள் அமெரிக்க தளபதியாக இருந்தவரும் சிஐஏ இன் முன்னாள் இயக்குநருமான ஓய்வுபெற்ற ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ், வெளியுறவுச் செயலர் பதவிக்கான முன்னிலைப் போட்டியாளராக இருக்கிறார். உள்நாட்டு பாதுகாப்பு துறையின் தலைமைக்கு ஓய்வுபெற்ற ஜெனரல் ஜோன் எப்.கெல்லி விவாதிக்கப்பட்டு வருகிறார். தேசியப் பாதுகாப்பு அமைப்பின் இப்போதைய தலைவரான அட்மிரல் மைக்கல் ரோஜர்ஸ், தேசிய உளவு அமைப்பின் இயக்குநராக —மிகப்பரந்த அமெரிக்க உளவு எந்திரத்தின் 19 பாகங்களையும் ஒருங்கிணைக்கும் பதவி— அநேகமாக நியமிக்கப்பட இருக்கிறார்.

ஆக, இப்போது பதவியிலோ அல்லது ஓய்வுபெற்றோ இருக்கக் கூடிய இராணுவ அதிகாரிகள், உள்வரும் ட்ரம்ப் நிர்வாகத்தில் ஒவ்வொரு முக்கியமான தேசியப் பாதுகாப்பு பதவியையும் பிடிக்கும் ஒரு நிலை சாத்தியமானதாக இருக்கிறது. இது ட்ரம்ப்பின் முன்னோக்கின் இராணுவவாத தன்மையை வெளிப்படுத்துவது மட்டுமன்று. மிக அடிப்படையாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மற்றும் ஒட்டுமொத்தமாக அமெரிக்க சமூகத்தின் நீண்டகால இராணுவமயமாக்கத்தின் ஒரு விளைவாக இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளின் பெரும்பகுதியில், 2001க்குப் பின்னர் தொடர்ச்சியாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் போரில் ஈடுபட்டு வந்திருக்கிறது. பராக் ஒபாமா, வரும் ஜனவரி 20 அன்று பதவியை விட்டு விலகும் நாளன்று, அமெரிக்க வரலாற்றில் தனது எட்டு ஆண்டு பதவிக்காலம் முழுமையாகவும் போர்க்கால முப்படைத் தளபதியாக இருந்திருந்த முதல் ஜனாதிபதியாக ஆகவிருக்கிறார். இத்தகைய நிலைமைகளின் கீழ், தேசிய-பாதுகாப்பு கொள்கையில் இராணுவம் இத்தகைய ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்ற வருவது என்பது தற்செயலானதல்ல.