ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US media’s neo-McCarthyite campaign for war against Russia

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு அமெரிக்க ஊடகங்களின் நவ-மக்கார்த்தியிச பிரச்சாரம்

Andre Damon
16 December 2016

போருக்கு வழிவகுக்கும் நோக்கில் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு சரமாரியான மூர்க்கத்தனமான பிரச்சாரத்திற்கு அமெரிக்க மக்கள் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் இன் ஒரு முன்னணி கட்டுரையின் பிரசுரத்துடன் தொடங்கி, இப்பிரச்சாரம் இவ்வாரம் கூர்மையாக தீவிரமடைந்தது. பெயர்குறிப்பிடப்படாத ஆதாரங்கள் மற்றும் முற்றிலும் வலுவற்ற மற்றும் இட்டுக்கட்டப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில்,  ஜனநாயக கட்சி மின்னஞ்சல்களை ரஷ்யா இணையவழியில் ஊடுருவி, அமெரிக்காவிற்கு எதிராக "இணையவழி போர்" தொடுத்து வருவதற்கு தீர்க்கமான ஆதாரமாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுக்கள் புதனன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைப் பின்தொடர்ந்து வந்தன, அதில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஸ் ஏர்னெஸ்ட், விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஜனநாயகக் கட்சி மின்னஞ்சல்களைக் குறித்து செய்தி வெளியிட்டு, அமெரிக்காவிலுள்ள ஊடக நிறுவனங்கள் "இன்றியமையாத விதத்தில் ரஷ்ய உளவுத்துறையின் ஆயுதங்களாக மாறிவிட்டன" என்று அறிவித்தார்.

வியாழனன்று ஏர்னெஸ்ட் அறிவிக்கையில், ஜனாதிபதியாக தேர்வாகியிருக்கும் ட்ரம்ப் "அவரது போட்டியாளரை இணையவழியில் ஊடுருவுவது அவரது பிரச்சாரத்திற்கு உதவும் என்று கருதியதால், ரஷ்யா அவரின் போட்டியாளரை இணையவழியில் ஊடுருவ" ஊக்குவித்திருந்ததாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஜனாதிபதி ஒபாமா National Public வானொலிக்கு கூறுகையில் "எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கமும் நமது தேர்தல்களில் நேர்மையில் பாதிப்பை ஏற்படுத்த முயல்கையில், நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் நாம் அதை செய்வோம் என்பதில் எந்த சந்தேகமும் என்றே நான் நினைக்கிறேன்,” என்று கூறி, ரஷ்யாவிற்கு எதிராக பதிலடி கொடுக்க அச்சுறுத்தினார்.

ஒபாமா நிர்வாகத்தின் இத்தகைய போர்வெறியூட்டும் கருத்துக்களுடன் , ரஷ்யாவை நோக்கிய ட்ரம்பின் இணக்கமான நிலைப்பாட்டைக் கண்டித்தும், மற்றும் இணையவழி ஊடுருவல் எனக்கூறப்படுவதற்கும் மிகவும் ஆக்ரோஷமான பிரதிபலிப்பை முன்னணி அமெரிக்க மற்றும் சர்வதேச பத்திரிகைகளின் தலையங்கங்கள் உள்ளடக்கி இருந்தன. செய்திகள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இணையவழி ஊடுருவலுக்கு நேரடியாக உத்தரவிட்டு, மேற்பார்வை செய்தார் என்று, பெயர் வெளியிடாத உளவுத்துறை அதிகாரிகளின் அடிப்படையில், மூச்சுவிடாமல் அறிவித்தன.

டைம்ஸ் வியாழனன்று வெளியான அதன் ஒரு ஆத்திரமூட்டும் கட்டுரையில் ஏறத்தாழ முழுமையாக, ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பவர் ஒரு ரஷ்ய முகவராக நடந்து கொள்கிறார் என்று குற்றஞ்சாட்டியது. “லெனினின் வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தினால், ஒரு நயவஞ்சகமான வெளிநாட்டு சக்தியின் கரங்களில் அவர் பயன்படுத்தப்பட்டு வருவதை அறியாத ஒரு அமெரிக்க ஜனாதிபதியை விட மிகப்பெரிய 'பயனுள்ள முட்டாள்' வேறுயாரும் இருக்க முடியாது,” என்று டைம்ஸ் குறிப்பிட்டது. அந்த தலையங்கம் இன்னும் கூடுதலாக, "நமது மிகப் பழைய, மிகவும் தீர்க்கமான வெளிநாட்டு விரோதிகளில் ஒன்று" என்பதாக ரஷ்யாவை வரையறுத்ததுடன், “2016 தேர்தலில் கிரெம்ளின் தலையை நுழைப்பது" “பழிவாங்கும் நடவடிக்கைகளை" நியாயப்படுத்துகிறது என்பதையும் சேர்த்துக் கொண்டது.

டைம்ஸ் மற்றும் ஏனைய ஊடக நிறுவனங்களின் அறிவிப்புகள், 1950 களின் இழிவார்ந்த மக்கார்த்தியிச கூறுபாடுகள் அனைத்தையும் அன்றைய சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பயன்படுத்தியதை போல்  இன்றைய  முதலாளித்துவ ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்துகின்றன: அதாவது "நயவஞ்சக ரஷ்யா" என்று மிரட்சியூட்டும் விதத்தில் கண்டிப்பது, வெட்கமின்றி பொய்யுரைப்பது மற்றும் உள்நாட்டு போட்டியாளர்களை உளவாளிகள், தேசதுரோகிகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் முகவர்கள் என்று தாக்குவது ஆகியவையாகும்.

அந்நாட்டிற்குள் கடுமையான மற்றும் சீற்றமான மோதல்கள் உள்ளன மற்றும் இராணுவ-உளவுத்துறையின் ஒரு கன்னை ரஷ்யாவுடனான ஓர் ஆக்ரோஷமான மோதலில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதில் தீர்மானகரமாக உள்ளது. இது சிரியாவில் சிஐஏ-தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கை தோல்வியடைந்ததன் மீதான கோபத்துடன் இணைந்துள்ளது. ட்ரம்ப் அவரது மந்திரிசபையை தளபதிகளைக் கொண்டு நிரப்பி உள்ளதுடன் பாரியளவில் போரைத் தீவிரப்படுத்த திட்டமிட்டு வருகிறார் என்றாலும், ரஷ்யாவுடன் அதிக இணக்கமாக இருக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆளும் வர்க்கத்திற்குள் இந்த உட்பகை மோதலுடன் சேர்ந்து, அங்கே மத்திய கிழக்கில் மற்றும் ரஷ்யாவிற்கே எதிராக கூட இரு இடங்களிலும் இன்னும் இராணுவ மோதலை ஆதரிப்பதற்கு அமெரிக்க மக்களை அரசியல்ரீதியில் நிர்ப்பந்திக்க வைக்க ஒரு மறைமுகமான முயற்சி நடந்து வருகிறது.

அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீட்டை குற்றஞ்சாட்டும் பிரச்சார நடவடிக்கையானது, அதற்கு சமாந்தரமாக, ரஷ்யா ஆதரவுடன் சிரிய அரசு துருப்புகள் சிரிய நகரமான அலெப்போவை மீண்டும் கைப்பற்றுகையில் படுகொலைகளை நடத்தி வருகின்றன என்று அதே சம்பந்தப்பட்ட ஊடகங்கள் செய்திகளைப் பொழிந்து வருகின்றன.

“அலெப்போவை அழிப்பவர்கள்: அசாத், புட்டின், ஈரான்" என்று தலைப்பிட்டு வியாழனன்று டைம்ஸில் வெளியான முதன்மை தலையங்கம் பின்வருமாறு அறிவிக்கிறது: “2011 இல் திரு. அசாத்தை "ஒதுக்க" அழைப்புவிடுத்த பின்னர், திரு. ஒபாமாவினால் அதற்குப் பின்னர் அவ்வாறு நிகழ்த்த இயலவில்லை, மேலும் அவர் பதவியில் இனி ஒருபோதும் அவ்வாறு நிகழப் போவதும் இல்லை, குறைந்தபட்சம் அதற்கான விலையாவது அமெரிக்க மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டுக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள், முந்தைய பிரச்சார நடவடிக்கை அளவிற்கு "ஒத்திசைவாக" இல்லை என்ற உண்மைக்காக, டைம்ஸ் இன் வியாழக்கிழமை முதல்பக்க தலைப்பு செய்தி புலம்புகிறது.

இந்த விஷமப் பிரச்சாரத்தில் சர்வதேச பத்திரிகையும் இணைந்துள்ளன. சிரியாவின் நெருக்கடிக்கு “ஒபாமா ஓர் இராணுவ தீர்வை அல்ல, ஓர் இராஜாங்க தீர்வை தேடினார். அது "அமெரிக்காவிலும் மற்றும் இங்கே [ஜேர்மனியிலும்] இரண்டு இடங்களிலும் அவரை பிரபலமாக்கியது,” என்று ஜேர்மனியின் Der Spiegel இல் வெளியான ஒரு துணை-தலையங்கம் கடுமையாக குறைகூறுகிறது, அக்கட்டுரை குறிப்பிடுகையில், அதுபோன்ற "சுய-நியாயப்பாடு தவறானது" என்பதை அது சேர்த்துக் கொள்கிறது.

இதுபோன்ற ஊடக பிரச்சார நடவடிக்கை புதிதல்ல. 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புக்கு முன்னதாக செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்காக ஆப்கானிஸ்தான் மீது பழிசுமத்திய முயற்சிகள்; 2003 ஈராக் படையெடுப்புக்கு முன்னதாக "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" குறித்து பொய் உரைகள்; 2011 இல் பெங்காசியில் அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் லிபியாவை நாசமாக்கியதற்குப் பின்னர் அங்கிருந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட இருந்ததாக குறிப்பிட்ட செய்திகள் என அவை ஒவ்வொரு விதிவிலக்கின்றி இரத்தக்களரியான இராணுவ சாகசத்தையே முன்னெடுத்துள்ளன.

எவ்வாறிருப்பினும் இப்போது வித்தியாசம் என்னவென்றால் இந்த பிரச்சாரம் நடைமுறையளவில் ஒரு நிராயுதபாணியான மற்றும் வறிய முன்னாள் காலனியை நோக்கி அல்ல, மாறாக உலகின் இரண்டாவது அணுசக்தி நாடான ரஷ்யாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையோ, எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதையோ, மனிதயினத்தையே அழிவுக்கு இட்டுச் செல்லும் அணுஆயுத பரிவர்த்தனையை அதுபோன்றவொரு போர் எவ்வாறு தவிர்க்கும் என்பதையோ குறித்து இந்த பிரச்சாரத்தை நடத்துகின்ற எந்தவொரு பிரமுகரும் கவனமெடுப்பதில்லை.

முதல் தலைப்புக்கள் மற்றும் அவதூறு பரப்பும் ஆசிரியதலையங்களுக்குப் பின்னால், 60 ஆண்டுகளில் பார்த்திராத அளவில் போர்முறைக்கான தயாரிப்புக்கு நிஜமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில், அமெரிக்க இராணுவ தலைமை தளபதி ஜெனரல் மார்க் A. மில்லெ அமெரிக்க இராணுவ அமைப்பிற்கு கூறுகையில், இராணுவம் வல்லரசுகளுக்கு எதிரான போர்களுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும், அவை "இரண்டாம் உலக போருக்குப் பின்னர் நமது படை அனுபவித்துள்ள எதையும் போன்றில்லாமல், மிகவும் அதிபயங்கரமானதாக" இருக்கும் என்றார்.

கடந்த இரண்டு வாரங்களாக அபிவிருத்தி அடைந்துள்ள இந்த பிரச்சாரம், கிளிண்டன் நிர்வாகத்தின் கொள்கை என்னவாக இருந்திருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஜனநாயகக் கட்சியும் மற்றும் அதன் பின்னால் அணிவகுத்துள்ள ஊடகங்களும் அண்மித்து மூன்று மில்லியன் வாக்குகளால் மக்கள் வாக்களிப்பில் ட்ரம்ப் தோல்வி அடைந்திருப்பதன் அடிப்படையிலோ, அல்லது அவர் வலதுசாரி, பிற்போக்குத்தனமான பில்லியனர்கள், வங்கியாளர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் தளபதிகளைக் கொண்ட ஒரு மந்திரிசபையை அமைப்பது குறித்தோ அல்லாமல், மாறாக அவர் ரஷ்யாவிடம் "மிருதுவாக" இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை எதிர்ப்பதற்காக அவற்றினது எதிர்ப்பை அமைத்துக் கொண்டுள்ளன. அதாவது, ஜனநாயக கட்சி வலதிலிருந்து ட்ரம்ப் ஐ தாக்க செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவிற்குள் இந்த முரண்பாட்டின் விளைவு என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கம் போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது, தொடர்ச்சியான சமாதானத்தின் சகாப்தம் ஒன்றை குறித்தும், அத்தகைய சகாப்தத்தில் போட்டியாளர் இல்லாத அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ் உலகம் 20 நூற்றாண்டில் மனிதயினத்தைத் தொற்றியிருந்த போர்களில் இருந்து சுதந்திரமாக இருக்கும் என்றும் உணர்ச்சிப் பிரவாக அறிவிப்புகளுடன் வரவேற்கப்பட்டது. இப்போதோ, ஒரு கால் நூற்றாண்டு இரத்தந்தோய்ந்த பிராந்திய மோதல்களுக்குப் பின்னர், பத்திரிகைகளது இரத்தம் கொதிக்கச் செய்யும் அறிவிப்புகள், ஒரு புதிய உலக போர் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதையே தெளிவாக்குகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகள் மத்தியில், அங்கே போரை நோக்கிய அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் எதிர்ப்பைக் குறித்து ஆழ்ந்த ஐயுறவு உள்ளது. ஆனால் இந்த எதிர்ப்பு அரசியல் ஸ்தாபகத்தின் எந்தவொரு கன்னைக்குள்ளும் எவ்வித பிரதிபலிப்பும் காணவில்லை. முதலாளித்துவம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படையில், ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியப் பணியாகும்.