ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan port minister threatens to sack striking workers

இலங்கை துறைமுக அமைச்சர் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பணிநீக்குவதாக அச்சுறுத்துகிறார்

By our reporters 
14 December 2016

இலங்கை துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, தொழிலாளர்கள் தமது போராட்டத்தை நிறுத்தி உடனடியாக வேலைக்குத் திரும்பாவிட்டால், அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழப்பர் என பிரகடனம் செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 500 தொழிலாளர்கள், துறைமுகத்தை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்தும் அரசாங்கத்தின் துறைமுக அதிகாரசபையின் கீழ் தங்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்குமாறும் கோரி, டிசம்பர் 7 முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். 2013ல் இருந்தே அவர்கள் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.


அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

கடந்த வெள்ளியன்று, அரசாங்கம் சீன அரசிற்கு சொந்தமான மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு துறைமுக கம்பனியின் பங்குகளில் 80 சதவீதத்தை விற்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரணதுங்க தொழிலாளர்களுக்கு கூறியதாவது: "போராட்டத்தை கைவிட்டு, வீட்டிற்கு சென்று அடுத்த நாள் புதிதாக வேலை செய்ய வாருங்கள். எம்மிடம் கடமைகளை ஏற்க ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தயாராக உள்ளளனர்."

“வேலை நிறுத்தக்காரர்கள் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தினர்" என்றும் ரணதுங்க கூறியிருந்தார். தொழிலாளர்கள், தங்களின் போராட்டத்தை ஒடுக்குவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரம் என இந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.

அரசாங்கத்தின் சார்பில் பேசிய அமைச்சர், வேலைநிறுத்தம் செய்தவர்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்றும் துறைமுக அதிகாரசபையின் "தொழில்வழங்கு நிலையை ஸ்திரமற்றதாக செய்வதற்கு" முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

"நான் நாளை ஒரு புதிய நிறுவனத்தை நடத்தினால், இந்த ஊழியர்களில் எவரையும் சேர்த்துக்கொள்ள மாட்டேன், ஏனெனில் அவர்கள் இன்னுமும் சில அரசியல் சக்திகளினால் செல்வாக்கு செலுத்தப்படுவதோடு அவர்களை நம்ப முடியாது" என ரணதுங்க தெரிவித்தார்.

ஊடகங்களின் ஆதரவோடு அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த நச்சுத்தனமான பிரசாரத்தின் நோக்கம், வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் வன்முறையை கையாண்டதை நியாயப்படுத்துவதற்கே ஆகும். இதில் இராணுவம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் மற்றும் கருங்காலிகளை அணிதிரட்டுவது உட்பட வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அச்சுறுத்துவதும் அடங்கும்.

துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த தொழிலாளர்களை கலைக்கவும் இரண்டு கப்பல்களை விடுவிக்கவும் அரசாங்கம் நூற்றுக்கணக்கில் கடற்படை சிப்பாய்களை அனுப்பி, சனிக்கிழமை ஒரு கொடூரமான இராணுவ நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது. வேலைநிறுத்தம் செய்தவர்கள், பொல்லுகள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு சிப்பாய்களால் தாக்கப்பட்டதுடன் உதைத்துத் தள்ளப்பட்டனர். இதன் விளைவாக நான்கு தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று தொழிலாளர்கள் துறைமுகத்துக்குள் நுழையும் வாகனங்களை தடுக்க உருவாக்கிய தடுப்புக்களை போலீசார் வலுக்கட்டாயமாக நீக்கினர். கடற்படையினர் தற்போது துறைமுகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

நேற்று, துறைமுக நிர்வாகம், வாகனங்களை ஒரு கப்பலில் ஏற்றுவதற்காக தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்தும் மற்றொரு நிறுவனத்தில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்தது. எனினும், இந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலை செய்ய மறுத்து வெளியேறினர். துறைமுக பணிகளை கடற்படை வீரர்கள் கையாள்வதை பின்னர் காணக் கூடியதக இருந்தது.

இத்தகைய தொழிலாளர் வாடகை நிறுவனங்கள், சமீபத்திய ஆண்டுகளில் காளான்கள் போல் முளைத்து, வேலையற்ற தொழிலாளர்களின் மலிவு உழைப்பை சுரண்டி, கட்டணமாக அவர்களது ஊதியத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறது.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும், பயிற்சிக் காலத்திற்குப் பின்னர், அவர்கள் நிரந்தரமாக்கப்படவில்லை. மாறாக, அவர்கள் 2013ல் புதிதாக அமைக்கப்பட்ட மாகம்புர போர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் பேசுகையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகளை விளக்கியதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய அரசாங்கம் மற்றும் அதன் முன்னோடியான இராஜபக்ஷ அரசாங்கம் மீதும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு நிதிப் பிரிவு தொழிலாளியான அசாந்த, தான் ஒரு முறை வங்கி வேலை தேடுவது பற்றி சிந்தித்ததாகவும், ஆனால் துறைமுகத்தில் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று கருதியதாகவும் கூறினார். "ஆனால் என் நம்பிக்கை தகர்ந்து விட்டது. என்னை போன்ற பலர் உள்ளனர். அவர்களில் அநேகர் கணக்குப்பதிவியல் படிப்புகளை முடித்துவிட்டனர். மொத்தமாக எமது மாத வருமானம் வெறும் 30,000 ரூபா ($200) தான். ஆனால், துறைமுக அதிகார சபை இப்போது கிட்டத்தட்ட 65,000 ரூபாய் மாத ஊதியத்துக்கு அரசாங்கத்தின் பல அரசியல் ஆதரவாளர்களை நியமித்திருக்கின்றது."

அவர், இராஜபக்ஷ அரசாங்கமும் தொழிலாளர்களை அடக்கியது என்று விளக்கினார். தொழிலாளர்கள் 2013ல் ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்த முயன்றார் என்று அவர் கூறினார். எனினும், இராஜபக்ஷவின் அரசாங்கம் அவற்றை ஏற்பாடு செய்ய முயற்சி எடுத்த பல தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து எதிர்ப்பை அடக்கி விட்டது.


ருவன்

ருவன் என்ற மற்றொரு தொழிலாளி கூறுகையில், தான் துறைமுக அதிகார சபையில் இணைந்தபோது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். "அவர்கள் [முந்தைய அரசாங்கத்தின்] எங்களுக்கு நிரந்தர வேலை தருவதாக கூறினர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை," என்று அவர் கூறினார்.

"இரு அரசாங்கங்களும் [இராஜபக்ஷவும் மற்றும் சிறிசேன-விக்கிரமசிங்க] தொழிலாளர்களை ஒரே மாதிரியாக நடத்துகின்றன என்பதில் நாங்கள் இப்போது தெளிவாக இருக்கின்றோம். இன்று அவர்கள் [மேலாண்மை] வெளியில் இருந்து தொழிலாளர்களை பெற முயற்சிக்கின்றனர். ஒரு கப்பல் வந்துவிட்டது, அவர்களது திட்டம் எமது போராட்டத்தை உடைக்க வேண்டும் என்பதே."

இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான ஒரு சாரதி, தான் துறைமுக கட்டுமானத்தின் போது நாள் ஒன்றுக்கு 375 ரூபாய் சம்பளத்துக்கு 2006ல் இருந்து வேலை செய்ததாக கூறினார். "நான் எல்லா கொடுப்பனவுகளும் சேர்த்து மாதம் இப்போது 50,000 ரூபா பெறுகின்றேன் ஆனால் வங்கி கடனுக்கு 35,000 ரூபா செலுத்த வேண்டும். 55 வயதாகும் வரை நாங்கள் வேலை செய்யலாம் என்று நிறுவனம் எங்களிடம் கூறியதால் என் போன்ற அனைத்து தொழிலாளர்களும் வங்கி கடன் எடுத்துள்ளனர். தற்போது தொழிலாளர்கள் பெரிதும் கடன்பட்டுள்ளதுடன், தங்கள் வேலை பறி போகும் அச்சுறுத்தலால் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்."

சில தொழிலாளர்கள் கம்பஹா, களுத்துறை மற்றும் பொலனறுவை போன்ற நீண்ட தூர பகுதிகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற ஒரு உறைவிட அறைக்கு மாதம் குறைந்தபட்சம் 3,000 ரூபாய் செலுத்த வேண்டும், அத்துடன் உணவு மற்றும் பயண செலவுகளுக்கு கூடுதலாகப் பணம் தேவை.

மாகம்புர துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் (MPW) தலைவர்கள், தனியார்மயமாக்கம் மற்றும் வேலை பாதுகாப்பின்மை பற்றி தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்து வந்த நிலையில் மட்டுமே வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர். தொழிற்சங்கமானது, தனியார்மயமாக்கத்தை கைவிடத் தயாரில்லாத அல்லது தொழிலாளர்களின் கோரிக்கைகளை கொடுக்கும் நோக்கம் இல்லாத அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு எதிர்ப்பு முன்னோக்குக்குள் வேலை நிறுத்தத்தை மட்டுப்படுத்த முயன்றது.  

ஒரு MPW தலைவரான புத்திக பிரசாத், "துறைமுகத்தை இயக்குவதற்கு வெளியில் இருந்து புதிய தொழிலாளர்களை நியமிப்பதை தொழிற்சங்கம் எதிர்க்கவில்லை, நாங்கள் அப்படி செய்தால், நாங்கள் மீண்டும் தாக்கப்படுவோம், என உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். "அதே நேரம், எங்கள் கோரிக்கைகள் கிடைக்கும் வரை எமது பிரார்த்தனை தொடரும்" என்றார்.

எமது நிருபர்களுடன் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் பேசுவதை தடுக்க முயன்ற பிரசாத், அத்தகைய கலந்துரையாடல்கள் "நிலைமையை குழப்பிவிடும்," என்று தெரிவித்தார். தொழிற்சங்கத் தலைவர்களின் கவலை என்னவெனில், தொழிலாளர்களின் தாம் எதிர்கொண்டுள்ள அரசியல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிவிடுவர் என்பதே ஆகும்.

தொழிலாளர்களை திசைதிருப்பும் தங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, MPW தலைமை, உள்ளூர் புத்த பிக்குகள் ஏற்பாடு சமய சடங்குகளை பங்கேற்குமாறு அவர்களை நெருக்கியது.

முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான தனது முயற்சியில் ஒரு பகுதியாக தொழிலாளர்களின் போராட்டத்தை சுரண்டிக்கொள்ள முயல்கிறார். நேற்று ஊடகத்திற்கு அவர் கூறியதாவது: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு நிரந்தர நியமனம் கொடுப்போம்." தொழிலாளர்கள் மறதி நோயால் அவதியுறுகின்றனர் என அவர் நினைக்கின்றார் போல் தெரிகின்றது. அவரது அரசாங்கத்தின் கீழ், தொழிலாளர்கள் இதே அடக்குமுறையை எதிர்கொண்டிருந்தனர்.

மேலும், இராஜபக்ஷவின் ஆட்சியின் காலத்தில் தொடங்கிய தனியார்மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு நுழைவாயில் அதே சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதேபோல், தற்போதைய அரசாங்கம் ஒரு இந்தியக் கம்பனிக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை குத்தகைக்கு விட திட்டமிடுகின்றது.

சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டத்தை அமுல்படுத்தி விரைவில் மதிப்பிழந்து போகும் சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் மீது பெருகிவரும் வெகுஜன எதிர்ப்பை, இராஜபக்ஷ பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்.

மாகம்புரவில் வேலைநிறுத்தம் செய்பவர்கள், பெருவணிக மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை மட்டுமே காக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் சகல பிரிவினதும் போலி வாக்குறுதிகளை நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்கள், தமது உரிமைகளை பாதுகாக்க ஏனைய துறைமுகங்களில் உள்ள தமது சகாக்கள் மற்றும் முழு தொழிலாள வர்க்கத்தின் பக்கமும் திரும்ப வேண்டும்.

மாகம்புர தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறை, முழு தொழிலாள வர்க்கத்திற்குமான ஒரு எச்சரிக்கை ஆகும். தங்கள் வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக அணிதிரண்டு, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை கட்டியெழுப்ப போராட வேண்டும். இதன் மூலம் மட்டுமே துறைமுகங்கள் மற்றும் பிற அடிப்படைத் தொழிற் துறைகளை சமூக உடமையாக மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைக்க முடியும்.

ஆசிரியரின் பரிந்துரை:

இலங்கை அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்யும் துறைமுக தொழிலாளர்களை ஒடுக்க கடற்படையை அனுப்புகிறது

[12 டிசம்பர் 2016]