ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What is the pseudo-left?

போலி-இடதுகள் என்றால் யார்?

The WSWS Editorial Board
30 July 2015

கிரீஸில் கடந்த பல மாதங்களாக நடந்துவரும் சம்பவங்கள் கிரேக்க தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் ஒரு முக்கிய மூலோபாய அனுபவமாகும், அது உலகெங்கிலுமான அரசியல் நனவிலும் ஒரு முக்கிய தாக்கத்தைக் கொண்டுள்ளது.

தீவிர-தொனியில் அதன் வார்த்தைப்பிரயோகம் மற்றும் சிக்கன திட்டத்திற்கு எதிரான அதன் பெயரளவிற்கான எதிர்ப்பு ஆகியனவற்றிற்கு இடையே, “தீவிர இடது கூட்டணி" என்றழைக்கப்படும் சிரிசா ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய வங்கிகளிடமும் அமைப்புகளிடமும் சரணடைந்துள்ளது. சமூக சமத்துவமின்மையை மிகவேகமாக அதிகரிக்கும் மற்றும் கிரீஸை ஜேர்மனியினதும், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தினதும் ஒரு நடைமுறை காலனியாக மாற்றும் கொள்கைகளையே சிரிசா அரசாங்கம் இப்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.

இத்தகைய நிகழ்வுகள், இந்த ஆண்டு ஜனவரியில் சிரிசா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே  பல ஆண்டுகளாக உலக சோசலிச வலைத் தளத்தால் செய்யப்பட்ட பகுப்பாய்வை வியத்தகு முறையில் உறுதிப்படுத்துகின்றன. சான்றாக, ஜூலை 2012 இல் அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சி காங்கிரஸால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தில், “சிரிசாவிற்கு அதிகாரத்தில் வரும் வாய்ப்பு கிடைத்தவுடனேயே, யூரோ மண்டலத்திலிருந்து வெளியேறும் நோக்கம் அவரது கட்சிக்கு இல்லை என்பதை வங்கிகளுக்கு உத்தரவாதமளிப்பதற்காக அதன் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஜேர்மனிக்கு விரைவார். ஐரோப்பிய வங்கிகளின் சிக்கன திட்டத்தின் மீது மறுபேரம்பேசலில் ஈடுபடுவதைத் தவிர தீவிரமான வேறொன்றுக்கும் அது முயற்சிக்கவில்லை,” என்று அது குறிப்பிட்டது.  

இந்த ஆண்டின் வசந்தகாலம் முழுவதிலும், உலக சோசலிச வலைத் தளம் தொடர்ச்சியான பல கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவற்றில் சிரிசாவினது இயல்பான தன்மை குறித்து ஆராயப்பட்டு, ஐரோப்பிய வங்கிகளின் சிக்கன கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அதன் திட்டங்களைக் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. 

சிரிசாவின் இறுதி சரணடைவுக்குப் பின்னர், பல வாசகர்கள், சம்பவங்களின் போக்கை இந்தளவிற்குத் துல்லியமாக எவ்வாறு உலக சோசலிச வலைத் தளத்தால் முன்கணிக்க முடிந்ததென கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த அனுபவம் மார்க்சிச அணுகுமுறைக்கு ஒரு நிரூபணமாகும். அது அரசியல் போக்குகளை அவை தம்மைத்தாமே என்னவிதமாக அழைக்கின்றன என்ற அடிப்படையில் ஆராய்வதில்லை, மாறாக அவற்றின் வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் அவை பிரதிநிதித்துவம் செய்யும் சமூக நலன்களின் அடித்தளத்திலிருந்து ஆராய்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, உலக சோசலிச வலைத் தளம் ஒரு சர்வதேச அரசியல் போக்கு பற்றிய கருத்துருவை அபிவிருத்தி செய்தது. அதை நாங்கள் "போலி-இடது" என்று விவரித்தோம், அவற்றில் சிரிசா ஒரேயொரு உதாரணம் மட்டுமேயாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் அவரது புதிய வெளியீடான பிராங்க்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடதின் அரசியல்: ஒரு மார்க்சிச விமர்சனம் எனும் நூலின் முன்னுரையில் வழங்கியுள்ள பகுப்பாய்வின் மீது கவனம் செலுத்துமாறு எமது வாசகர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம். "போலி-இடது" இன் மீது ஒரு சுருக்கமான மற்றும் மிகவும் விரிவான "நடைமுறை வரைவிலக்கணத்தை" நோர்த் அதில் உள்ளடக்குகிறார், அத்தகைய பிற்போக்குத்தனமான இயக்கங்களின் செல்வாக்கிற்கு எதிரான போராட்டத்தில் அந்நூல் ஒரு நோக்குநிலை வழங்க உதவும். அவர் எழுதுகிறார்:          

* போலி-இடது என்பது அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தத்துவார்த்த/சித்தாந்த போக்குகளைக் குறிக்கிறது. அது நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட மற்றும் செல்வாக்கான அடுக்கினது சமூகபொருளாதார நலன்களை ஊக்குவிப்பதற்காக வெகுஜன முழக்கங்களையும் ஜனநாயக வார்த்தைஜாலங்களையும் பயன்படுத்துகிறது. அதுபோன்ற கட்சிகள் மற்றும் போக்குகளுக்கான எடுத்துக்காட்டுகளில் கிரீஸின் சிரிசா, ஸ்பெயினின் பெடெமோஸ், ஜேர்மனியின் இடது கட்சி (Die Linke), எண்ணற்ற முன்னாள்-ட்ரொட்ஸ்கிச சிறுஅமைப்புகள் (அதாவது பப்லோவாதிகள்) மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற அரசு முதலாளித்துவ அமைப்புகள், இலங்கையில் நவ சம சமாஜக் கட்சி (NSSP) மற்றும் அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) ஆகியவை உள்ளடங்கும். அராஜகவாத மற்றும் அராஜகவாதத்திற்கு பின்னரான (post-anarchist) போக்குகளின் செல்வாக்கு பெற்ற "ஆக்கிரமிப்போம்" இயக்கங்களின் எச்சசொச்சங்களும் மற்றும் அவற்றின் வழிவந்தவைகளையும் இந்த பட்டியலில் உள்ளடக்கலாம். உலகெங்கிலும் பலதரப்பட்ட குட்டி முதலாளித்துவ போலி-இடது அமைப்புகள் இருப்பதால், இது எவ்விதத்திலும் ஒரு முழுமையான பட்டியலாகாது.

* போலி-இடது மார்க்சிசத்திற்கு விரோதமானது. அது வரலாற்று சடவாதத்தை நிராகரித்து, அதற்கு மாறாக அகநிலை கருத்துவாதம் மற்றும் இருத்தலியல்வாதத்துடன் (existentialism) தொடர்புபட்ட மெய்யியல் பகுத்தறிவு-நிராகரிப்புவாதம் (philosophical irrationalism) ஆகியவற்றின் பல்வேறு வடிவங்களையும், பிராங்க்பேர்ட் பள்ளி மற்றும் சமகாலத்திய பின்நவீனத்துவத்தையும் தழுவுகின்றது.

* போலி-இடது சோசலிச விரோதமானது, அது வர்க்க போராட்டத்தை எதிர்ப்பதுடன், சமூகத்தை முற்போக்காக மாற்றுவதில் தொழிலாள வர்க்கத்தின் மத்திய பாத்திரத்தையும் புரட்சியின் அவசியத்தையும் மறுக்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் பாரியளவில் அணிதிரள்வதையும் அதன் சுயாதீனமான அரசியல் அமைப்புக்கும் எதிராக அது வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட வெகுஜனவாதத்தை (supra-class populism) எதிர்நிறுத்துகிறது. போலி-இடதின் பொருளாதார வேலைத்திட்டம், அதன் இயல்பினாலேயே, முதலாளித்துவ-சார்பு மற்றும் தேசியவாதம் கொண்டதாகும்.

* தேசியம், இனக்கூறு, இனம், பாலின மற்றும் பாலுறவு ஆகியவை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் ஊன்றியிருந்து, செல்வவளத்தை மக்களில் 10 சதவீத மிகப்பெரிய பணக்காரர்களிடையே மிகவும் சாதகமான விதத்தில் பகிர்ந்து கொள்வதை நடைமுறைப்படுத்த, பெருநிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அதிக ஊதிய வேலைகள், தொழிற்சங்கங்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கூடுதல் செல்வாக்கைப் பெறுவதற்காக, "அடையாள அரசியலை" போலி-இடது ஊக்குவிக்கிறது. சமூக தனிச்சிறப்பு சலுகைகளை அழிப்பதற்கு மாறாக போலி-இடது அதை கூடுதலாக அணுகுவதைக் கோருகிறது.  

* வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஏகாதிபத்திய மையங்களில், பொதுவாக போலி-இடது ஏகாதிபத்திய-ஆதரவாக உள்ளது. நவ-காலனித்துவ இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்திக்கொள்ளவும் மற்றும் நேரடியாகவே ஆதரிக்கவும் "மனித உரிமைகள்" எனும் முழக்கங்களைப் பயன்படுத்துகின்றது.

“போலி-இடதின் வர்க்க அடித்தளம், பிற்போக்குத்தனமான தத்துவார்த்த கருத்துருக்கள் மற்றும் அதன் பிற்போக்கு அரசியலை அம்பலப்படுத்துவதும் மற்றும் பகுப்பாய்வு செய்வதும், தொழிலாள வர்க்கத்தை கல்வியூட்டுவதற்கான, அதை குட்டி-முதலாளித்துவ இயக்கங்களின் செல்வாக்கிலிருந்து விடுவிப்பதற்கான, மற்றும் நவீன முதலாளித்துவ சமூகத்திற்குள் மத்திய முற்போக்கான புரட்சிகர சக்தியாக அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்கொண்டிருக்கும் முக்கிய பணிகளில் இன்றியமையாதவை ஆகும்,” என்று குறிப்பிட்டு நோர்த் அவரது புதிய நூலுக்கு முன்னுரையை நிறைவு செய்கிறார்.

பிராங்க்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடதின் அரசியல்: ஒரு மார்க்சிச விமர்சனம் நூல் பிரசுரிக்கப்படுவது இந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய படியாகும், மேலும் அத்தொகுதி வரவிருக்கும் தொழிலாள வர்க்க போராட்டங்களுக்கு ஒரு மதிப்பார்ந்த உதவியாகவும் சேவை செய்யும்.