ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU summit lines up against Russia

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள்கிறது

By Peter Schwarz
17 December 2016

வியாழனன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளது தலைவர்கள் இந்தாண்டின் அவர்களது இறுதி உச்சி மாநாட்டிற்காக புரூசெல்ஸில் ஒன்றுகூடினர். ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதென்ற பிரிட்டனின் முடிவும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்வானமையும், பல ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி தேசியவாத சக்திகளின் எழுச்சி என்பனவற்றை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தம்பிதமடைந்தும் பிளவுபட்டும் உள்ளது.

அகதிகளை ஏற்கும் வரம்பை பகிர்ந்து கொள்வது, துருக்கியை நோக்கிய அணுகுமுறை, பேர்லின் மற்றும் புரூசெல்ஸ் கட்டளையிடும் சிக்கனக் கொள்கை, ஓர் ஐரோப்பிய இராணுவத்தின் உருவாக்கம், வரவிருக்கின்ற ஜனாதிபதி ட்ரம்ப் இற்க்கான விடையிறுப்பு மற்றும், அனைத்திற்கும் மேலாக, ரஷ்யாவை நோக்கிய நிலைப்பாடு என பல பிரச்சினைகளில் இந்த அங்கத்துவ நாடுகள் நம்பிக்கையின்றி பிளவுபட்டுள்ளன.

இதற்கும் கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கை இதுவரையில் அமைத்து வந்துள்ள பெரிய அங்கத்துவ அரசுகளது தலைவர்கள், உள்-அரசியல் நெருக்கடிகளால் பலவீனமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதன் வழியில் வெளியேற உள்ள பிரிட்டன் அரசாங்கம், அது வெளியேறுவதன் மீதான வழிவகைகள் குறித்து விவாதித்து வருகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மே மாதம் பதவியிலிருந்து இறங்குகிறார். இத்தாலிய பிரதம மந்திரி மத்தேயோ ரென்சி கடந்த வாரம் இராஜினாமா செய்தார், அவரை அடுத்து வந்த பாவுலோ ஜென்ரிலோனி (Paolo Gentiloni) அதிகபட்சம் ஒரு இடைமருவுகால பிரமுகராவார். ஸ்பானிஷ் பிரதம மந்திரி மரீனோ ரஜோய் ஒரு நிச்சயமற்ற பெரும்பான்மையில் உள்ளார். அடுத்த ஆண்டு அவரது நான்காவது பதவி காலத்தை கோரவிருக்கின்ற ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அவரது சொந்த கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் அதன் கூட்டணி பங்காளியான சமூக ஜனநாயக கட்சிக்குள்ளேயே (SPD) அதிகரித்துவரும் எதிர்ப்பை முகங்கொடுத்துள்ளார்.

உச்சிமாநாட்டுக்கு சற்று முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைமையை பின்வரும் வார்த்தைகளை கொண்டு விளக்கினார்: “இம்முறை நாம் பல்வேறு நெருக்கடிகளை கையாள வேண்டி உள்ளோம். வெறுமனே ஐரோப்பாவில் மட்டுமல்ல, எல்லா இடங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஐரோப்பாவிற்கு வெளியே நெருப்பு எங்கே பற்றி எரிந்தாலும், அந்த பெரும் மோதல் ஐரோப்பாவை நோக்கி நகர்கிறது,” என்றார்.

இக்காரணங்களுக்காக, உச்சி மாநாடு வியாழனன்று ஒருசில மணி நேரங்களாக குறைக்கப்பட்டது. நெருக்கடியை ஆழப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, அந்த விவாதம் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. இரவு உணவு விருந்தின் போது, பங்குபெற்றவர்கள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே இல்லாமல் பிரிட்டன் பேரம்பேசல்களுக்கான தயாரிப்புகளை விவாதிக்க திட்டமிட்டனர்.

ஆனால் விடயங்கள் வேறுவிதமாக திரும்பின. ஆணைக்குழு தலைவர் டொனால்ட் டஸ்க் ஐரோப்பி ஒன்றிய வரலாற்றிலேயே முன்னொருபோதும் இல்லாத விதத்தில் "தன்னியல்பாக" ஒரு சிரிய அசாத்-விரோத நடவடிக்கையாளரை அழைக்க முடிவெடுத்ததோடு, உச்சி மாநாடு சில மணி நேரம் நீடிக்கப்பட்டது. “அலெப்போவின் நகர தலைவராக" அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்டா ஹாகி ஹாசன் கடுமையான வார்த்தைகளில் அந்நகரின் கிழக்கு பகுதி நிலைமையை வர்ணித்தார். அவர் கூடியிருந்த அந்த அரசாங்க தலைவர்களிடையே பேசுகையில், "விரைவில்" 50,000 அப்பாவி பொதுமக்கள் "கொல்லப்பட இருப்பதாக" தெரிவித்தார்.

ஏகாதிபத்திய இராணுவ தலையீட்டை ஊக்குவிப்பதற்காக உலகெங்கிலும் பயணித்த சிரிய "எதிர்ப்பாளர்களில்" ஒருவரான ஹாசன், அந்த நோக்கத்திற்காகவே வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தார். அவர் பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி ஜோன்-மார்க் எய்ரோவை பல முறை சந்தித்துள்ளார், மிக சமீபத்தில் நவம்பர் இறுதியில் சந்தித்தார்.

கோடையின் போது, அவர் ஈரானிய மக்கள் முஜாஹிதீன் இன் மர்யாம் ரஜாவி மற்றும் மற்றொரு சிரிய ஆட்சி எதிர்ப்பாளரும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிரியாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவ தாக்குதலுக்கு அழைப்பு விடுத்திருந்தவருமான மைக்கல் கிலோ உடன் சேர்ந்து பாரீஸின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். வெளிநாடுகளில் இருந்து தெஹ்ரான் ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டு வரும் மக்கள் முஜாஹிதீன், 2009 வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டிருந்தது.

டஸ்க், ஹோலாண்ட் மற்றும் மேர்க்கெல் ஆகியோர் உடைந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளை ரஷ்ய-எதிர்ப்பு அணியில் ஒன்றுதிரட்டுவதற்கு அழைப்புவிடுக்க ஹாசனின் பிரசன்னத்தை பயன்படுத்தினர். அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் அங்கே ரஷ்யா உடனான உறவுகள் குறித்து கடுமையான மோதல் இருந்துவரும் அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியமோ ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு அழுத்தமளித்துவரும் ஒரு அணியின் தரப்பில் நகர்ந்து வருகிறது. ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சாத்தியமான அளவிற்கு நேட்டோவையுமே கூட விலையாக கொடுத்து புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாஸ்கோவுக்கு நெருக்கமாக நகர்ந்து வருகிறார், இதன் விளைவாக நேட்டோ உடைவு ஏற்படுமென மேர்க்கெலும் ஹோலாண்டும் அஞ்சுகின்றனர்.

உச்சி மாநாட்டுக்கு சற்று முன்னர் வெளியான ஒரு தலையங்கத்தில் பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: “வரவிருக்கும் அவரது [ட்ரம்பின்] நிர்வாகத்திற்கு எவ்வாறு தயாரிப்பு செய்வது என்பதில் ஐரோப்பிய ஒன்றிய இராஜாங்க அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர்… ரஷ்யாவை நோக்கிய ஏதேனும் அமெரிக்க முன்னெடுப்பு கொள்கை இருந்தால், மாஸ்கோவிற்கு எவ்வாறு விடையிறுப்பது என்பதில் அந்த அணியின் கடினமாக வென்றெடுக்கப்பட்ட கருத்தொற்றுமை மாறக்கூடும், இது ஐரோப்பிய ஒன்றிய போர்வெறியர்கள் மற்றும் மிதவாதிகளுக்கு இடையே சமநிலையைக் குலைக்கும்.”

ஐரோப்பிய தலைவர்கள் மொசூல் அல்லது யேமன் குறித்து பேசி ஒரு வார்த்தையும் வீணடிக்க விரும்பவில்லை, அங்கே அவர்களும், அமெரிக்கா மற்றும் வாஷிங்டனின் கூட்டாளிகளும் அலெப்போவில் ரஷ்யர்கள் மற்றும் சிரிய இராணுவம் போலவே அதேயளவிற்கு ஈவிரக்கமின்றி அப்பாவி மக்கள் மீது குண்டுவீசி வருகின்றனர். ஆனால் அலெப்போ மக்களது கதியைக் குறித்து அவர்கள் அதுவும் அந்த சண்டை நிறுத்தப்பட்ட அந்த நாளில் இருந்து குடம் குடமாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

ஹாசன் வழங்கிய அறிக்கை "மிகவும் வருத்தமளிக்கிறது" என்று சான்சிலர் மேர்க்கெல் தெரிவித்தார். அவர் அலெப்போ மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ரஷ்யா மற்றும் ஈரானைப் பொறுப்பாக்கி குற்றஞ்சாட்டியதுடன், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென கோரினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் "தோல்விக்காக" அதை அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேபோன்ற அர்த்தத்தில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே பேசினார். “இத்தகைய அட்டூழியங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார்.

“சிரிய ஆட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்டுள்ள படுகொலைகளை கண்டிப்பது" போன்ற "இந்தளவிற்கு அடிப்படையான ஒரு விடயத்தில் கூட" அது "ஒன்றுபட முடியாவிட்டால்" அது ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டதன் காரணத்தையே கேள்விக்குட்படுத்துகிறது என்று ஜனாதிபதி ஹோலாண்ட் தெரிவித்தார்.

இந்த பாசாங்குத்தனமான சீற்றத்தின் ஆத்திரமூட்டும் தன்மை, அதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், மேர்க்கெல் அரசாங்கம் முதல்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு பாரியளவில் திருப்பியனுப்பும் நடவடிக்கையைத் தொடங்கியது என்ற உண்மையில் எடுத்துக்காட்டப்பட்டது. இது ஜேர்மனியிலிருந்து 12,500 அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி, போர் மற்றும் உள்நாட்டு போரால் இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ள ஒரு நாட்டிற்கு அவர்களை திருப்பியனுப்புவதில் சென்றுமுடியும் ஒரு நிகழ்முறையை தொடங்குகிறது.

ஹாசனின் பிரசன்னத்தைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட உணர்ச்சிகளின் எழுச்சியின் அடிப்படையில், ரஷ்யாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஓர் அதிகரித்த இராணுவ கட்டமைப்பை வழங்குவதற்கோ அல்லது அகதிகளைத் தடுப்பதற்கு சேவையாற்றுவதற்கோ அந்த உச்சி மாநாடு பல சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கு ஒப்புக்கொண்டது.

பல ஐரோப்பிய நாடுகளது பில்லியன் கணக்கான இழப்புகளுக்கு மத்தியிலும், உக்ரேன் மோதலுக்காக ரஷ்யாவிற்கு எதிரான தடையாணைகள் குறைந்தபட்சம் அடுத்தாண்டு ஜூலை 31 வரையில் நீடிக்கப்பட வேண்டுமென அந்த உச்சி மாநாடு முடிவெடுத்தது. உச்சி மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, ஸ்லோவாக் பிரதம மந்திரியும் தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ரோபர்ட் பிகோ அத்தடையாணைகள் முட்டாள்தனமானவை என்று விவரித்திருந்தார்.

அதேநேரத்தில், அந்த உச்சி மாநாடு உக்ரேன் உடனான பங்காண்மை உடன்படிக்கைக்கு இசைவு அளிக்கவும் வழி வகுத்தது, 2014 இல் அப்போதைய உக்ரேனிய ஜனாதிபதி யானுகோவிச் ஆல் இந்த உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டதே 2014 அவரின் பதவிக்கவிழ்ப்பு சதிக்கும் இட்டுச்சென்றது. கடந்த இளவேனிற்காலத்தில், இந்த உடன்படிக்கை டச் வாக்காளர்களால் முடக்கப்பட்டது, அவர்கள் அந்த உடன்படிக்கை நிறைவேற்றுப்படுவதை  ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் நிராகரித்தனர். டச் பிரதம மந்திரி மார்க் ரூட்டே அதை மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதிக்கும் வகையில் அந்த உச்சி மாநாடு சட்டத்திற்கு கட்டுப்பட்ட ஒரு துணை அறிக்கையை ஏற்றுக் கொண்டது. ஏனைய சகல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஏற்கனவே அதற்கு இசைவு அளித்துள்ளன.

அந்த உச்சி மாநாடு நெருக்கமான இராணுவ கூட்டுறவுக்கும் ஒப்புக் கொண்டது. அது படைத்துறைசாரா மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டமிடல் மையம் ஒன்றை கட்டமைக்க ஒப்புக் கொண்டது. ஓர் ஐரோப்பிய இராணுவத்தை நோக்கிய சகல நகர்வுகளையும் முன்னர் தடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் எதிர்ப்பை கைவிட்டது.

அந்த உச்சி மாநாடு இராணுவ ஆராய்ச்சிக்கு நிதி வழங்கும் பல பில்லியன் யூரோ நிதியத்திற்கான ஆணைக்குழுவின் திட்டங்களை வரவேற்றது. அது குறித்த முடிவுகள் அடுத்த ஆண்டு முதல் பாதியில் முடிவெடுக்கப்பட உள்ளன.

அலெப்போவின் அவலநிலை குறித்து அந்த உச்சி மாநாடு தனது ஆத்திரத்தை காட்டிய போதினும், மேர்க்கெல், ஹோலாண்ட், ஜென்டிலோனி மற்றும் ரஜோய் ஆகியோர் அகதிகள் பெருகி வருவதை நிறுத்தவும் மற்றும் அவர்களை முகாம்களில் தங்க வைக்கவும் செய்யுமாறு நைஜரின் ஜனாதிபதி Mahamadou Issoufou மற்றும் ஏனைய ஆபிரிக்க தலைவர்களை வலியுறுத்தவும், அதற்கு பிரதி உபகாரமாக பெரும் பணத்தை வழங்கவும் அவர்களைச் சந்தித்தனர்.

உத்தியோகபூர்வமாக, இத்திட்டம் "புலம்பெயர்வு பங்காண்மை" என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 100 மில்லியன் யூரோ, இதில் பாதியை ஜேர்மன் வழங்கும் என்ற நிலையில், இவற்றை கொண்டு தப்பிக்கும் வழிகளில் முகாம்கள் கட்டமைக்கப்பட இருக்கின்றன, இங்கே 60,000 பேர் காவலில் வைக்க முடியும்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை கையாள்வதென்று வந்தபோது, அம்மாநாட்டில் பேர்லின்  தனது நிலைப்பாட்டை நிறைவேற்றிக்கொண்டது. எர்டோகனின் சர்வாதிகார ஆட்சி முறைகளின் விளைவாக அங்காராவுடன் உறவுகளை சமாதானப்படுத்த ஜேர்மன் அரசாங்கம் மறுக்கிறது, அதேவேளை ஐரோப்பாவிற்குள் பயணிக்கும் அகதிகளைத் தடுக்க அங்காராவுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட அகதிகள் உடன்படிக்கை தோல்வியடைந்து விடுமோ என்றும் அது அஞ்சுகிறது.

ஆணைக்குழு தலைவர் ஜூங்கர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டஸ்க் ஆகியோரின் பங்கேற்புடன், 2017 வசந்த காலத்தில் ஒரு அகதிகள் உச்சி மாநாட்டுக்கான வாய்ப்பை உருவாக்கியதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியம் இப்போது ஒரு எர்டோகானை நோக்கிய அடி எடுத்து வைத்துள்ளது.