ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s talk with Taiwanese president heightens US tensions with China

தாய்வான் ஜனாதிபதி உடனான ட்ரம்பின் உரையாடல் சீனா மீதான அமெரிக்காவின் அழுத்தங்களை உயர்த்துகிறது

By Peter Symonds
5 December 2016

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்னின் ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம், சீனா உடனான அதன் உறவுகளில் ஒரு போர்வெறி அணுகுமுறைக்கு சமிக்ஞை செய்தார். ட்ரம்பின் இடைக்காலக் குழு இதனை முக்கியத்துவமற்றதாக காட்டுகின்றபோதும், 1979க்கு பின்னர் அமெரிக்கா மற்றும் தாய்வான் தலைவர்களிடையே நடந்த முதல் உரையாடலாக இருந்தது. மேலும், வாஷிங்டன் ஏற்றுக்கொண்ட "ஒரே சீனா" கொள்கை அடிப்படையிலான பல தசாப்தகால இராஜதந்திர நெறிமுறைகளையும் இல்லாது செய்கின்றது.

1972ல் சீனா உடன் அமெரிக்கா சமரசம் செய்துகொண்ட பின்னர், தாய்வான் மீதான கோமின்டாங் (KMT) இராணுவ சர்வாதிகாரத்துக்கு இருந்த வாஷிங்டனின் ஆதரவு முடிவடைந்ததுடன், மேலும் பெய்ஜிங் இலிருந்து ஆட்சி செலுத்தும் "ஒரு சீனா,"வின் ஒரு அங்கமாக இந்த தீவு அங்கீகரிக்கப்பட்டது. அதேவேளையில், சீனாவின் பிரதான நிலப்பகுதியுடன் தாய்வானை கட்டாயப்படுத்தி ஐக்கியப்படுத்துவதை, பெய்ஜிங்கின் எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்கா எதிர்த்ததுடன், தாய்வான் இராணுவத்திற்கு ஆயுதம் வழங்க தொடங்கியது. 1979ல் அமெரிக்காவுக்கும் தாய்வானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் முடிவடைந்தன, ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட முறைசாரா தொடர்பு அப்படியே உள்ளது.

ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பு, அறியாமையினால் செய்த ஒரு இராஜதந்திர தவறாக இருந்தாகவோ, அல்லது சீனாவை நோக்கிய அமெரிக்க கொள்கையில் ஒரு மாற்றமாகவோ கருதும் ஊடகங்களின் பெருமளவிலான ஊகங்களுக்கு இட்டுச்சென்றது. மூத்த ட்ரம்பின் இடைக்கால ஆலோசகர் கெல்லியனே கான்வே ஞாயிறு அன்று Fox Newsல், "அது வெறும் சாதாரணமான தொலைபேசி அழைப்புதான்" என்றும், மேலும் அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பது பற்றியும் சுட்டிக்காட்டினார்.

எனினும், ட்ரம்ப் தெளிவாக இந்த உரையாடலை ஒரு தவறாகவே கருதவில்லை. அவர் விமர்சனங்களை நிராகரித்ததுடன், தாய்வான் ஜனாதிபதி சாய் சாதாரணமாக அவரை வாழ்த்துவதற்கு தான் அழைப்பு விடுத்தார் என்றும் வலியுறுத்தினார். மற்றொரு tweet இல், தாய்வானை நோக்கிய அமெரிக்க கொள்கையின் முரண்பட்ட தன்மையினை அவர் குறிப்பிட்டுக்காட்டியதுடன், "பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இராணுவ உபகரணங்களை தாய்வானுக்கு அமெரிக்கா விற்கும்போது, நான் ஒரு வாழ்த்து தெரிவிக்கும் அழைப்பை ஏற்கக்கூடாது என்பது சுவாரஸ்யமானது தான்" என்றும் கருத்து தெரிவித்தார்.

1979 ம் ஆண்டு தாய்வான் உறவுகள் உடன்படிக்கையின் கீழ், தாய்வானுக்கு ஆயுத விற்பனை அங்கீகரிக்கப்பட்டது என்ற உண்மையை ட்ரம்பின் கருத்து நிராகரிக்கின்றது. மேலும் அவரது தொலைபேசி அழைப்பு ஒரு நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்ட புரிந்துணர்வையும் மீறுகிறது. மேலும், இந்த உரையாடல் வெறும் ஒரு மகிழ்ச்சியை பரிமாற்றம்செய்யும் ஒன்றில்லை என்று சாய் விடுத்த அறிக்கை குறிப்பிடுகிறது. மாறாக, இரு ஜனாதிபதிகளுமே, "தாய்வானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவுகின்ற நெருக்கமான பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகள் பற்றி குறிப்பிட்டனர்" மேலும் ஆசிய நிகழ்வுகள் மீதான கண்ணோட்டங்களையும் பரிமாறினர்.

ஜனவரி மாதம் தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் சாய் இன் சொந்த வெற்றிக்கு ட்ரம்பும் பாராட்டியதுடன், சீனாவுக்கு ஒரு கூடுதல் அவமதிப்பினை தரும் விதமாக அவரது ஜனநாயக முற்போக்கு கட்சி (DPP) தாய்வானிய சுதந்திரம் குறித்து கவனமாக ஆதரிக்கின்றது என்றும் தெரிவித்தார். பெய்ஜிங் தாய்வானை சீனாவின் மாகாணம் என்பதிலிருந்து பிரிந்துபோகவிரும்புவதாக கருதுவதுடன், எப்போதாவது தாய்வான் முறைப்படியான சுதந்திர பிரகடனம் செய்தால் இராணுவ வழிமுறைகள் பயன்படுத்தி அது மறுஇணைப்பு செய்துகொள்ளப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் நேற்று பேசுகையில், ட்ரம்பின் தொலைபேசி உரையாடல் ஒரு "மரியாதை நிமித்தமான அழைப்பு" தான் என்று நியாயப்படுத்தினார், ஆனால் அது "ஒரே சீனா" கொள்கை மீதான முறிவிற்கு சமிக்ஞை செய்கிறதா என்ற கேள்விக்கு விடையிறுப்பதை தவிர்த்தார். அவர் எனினும், "உலகினை இணைக்கும் ஒரு விருப்பத்தை கொண்டுள்ள ஒரு ஜனாதிபதி ட்ரம்பினை நீங்கள் பார்க்கப்போகின்றீர்கள், ஆனால் அமெரிக்க நிபந்தனைகளின் அடிப்படையில் தான் இந்த உலகம் இணைக்கப்படவேண்டும்" என்றும் குறிப்பிடுகிறார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் அரசுத்துறை செயலருக்கு போட்டியிடவுள்ள முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த ஐ.நா. ஜோன் போல்டன், அப்பட்டமாக பின்வருமாறு அறிவித்தார் "அமெரிக்கா சீனாவுடனான உறவை கைவிடவேண்டும். தென் சீனக் கடல் பகுதிகள் மீது ஆக்கிரோஷ தன்மையிலான உரிமைகோரல்கள் என்ற வகையில், கடந்த பல ஆண்டுகளாக சீனா ஆக்கிரோஷத்தையே உருவாக்கி வந்துள்ளது. யாருடன் நாம் பேசலாம் என்று முடிவெடுக்க பெய்ஜிங் இல் யாரும் இல்லை.

ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பு வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட மற்றும் ஆத்திரமூட்டலாக இருந்தது என்பதும், அவரது நிர்வாகம் சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு தன்னிடமுள்ள சகல வழிமுறைகளையும் பயன்படுத்தும், மேலும் ஆசியா மற்றும் உலகம் முழுவதிலும் அமெரிக்க ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பெய்ஜிங்கிற்கு அறிவிக்கவிரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆகியவையே போல்டனின் கருத்துக்களில் உள்ள தெளிவான அறிகுறி ஆகும். அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது, ட்ரம்ப், சீனாவை ஒரு நாணய மோசடியாளர் என்று அவர் முத்திரைகுத்தப்போவதாகவும், ஒரு வர்த்தகப் போரை தூண்டும் ஒரு நடவடிக்கையாக சீனப் பொருட்கள் மீது 45 சதவிகிதம் காப்பு வரி சுமத்தப்படும் என்றும் அறிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" கொள்கையானது, தென்சீனக் கடல் பகுதி தொடர்பானது உட்பட சீனாவை நோக்கிய ஒரு இராஜதந்திர மோதல் நிலைப்பாட்டை உள்ளடக்கியிருந்ததுடன், மேலும் சீனா உடனான ஒரு போர் தயாரிப்புக்கு ஆசியாவில் ஒரு பெரும் இராணுவ கட்டியெழுப்புதலை உருவாக்குவதிலும் ஈடுபட்டுவந்தது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் உரிமைகோருதல்களுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா இன்னும் ஆக்ரோஷமான சவாலாக இல்லை என்று முந்தைய ஜோர்ஜ் W. புஷ் இன் நிர்வாகத்தில் மிகுந்த இராணுவவாத அதிகாரிகளுள் ஒருவரான போல்டன் போன்ற நபர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஞாயிறன்று இரவு வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை, அந்த தொலைபேசி பேச்சுக்கள் ஒரு திட்டமிடப்பட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகவே இருந்தது என்று உறுதிசெய்தது. "ட்ரம்ப் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டதான தாய்வான் உடன் இணைந்து இயங்குவதற்கான ஒரு புதிய மூலோபாயம் பற்றி ட்ரம்பின் ஆலோசகர்கள் மத்தியில் இருந்த பல மாதகால அமைதியான ஏற்பாடுகள் மற்றும் கலந்துரையாடல்களின் விளைவாகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு இருந்தது," என்றும் இது தெரிவித்தது.

ட்ரம்புடனான தொலைபேசி உரையாடல் குறித்து முன்கூட்டியே வெள்ளை மாளிகைக்கு தகவல் தரப்படாத நிலையில், "ஒரு சீனா" கொள்கையில் அங்கு "மாற்றம் இல்லை" என்பதை அது வலியுறுத்தி விடையிறுப்பு செய்தது. "நமது அடிப்படை நலன்கள் அமைதியான மற்றும் நிலையான இருதரப்பு உறவுகளில் உள்ளது (சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையில்)," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் அறிவித்தார். ஒபாமா நிர்வாகம் கடந்த ஆண்டு தாய்வானுக்கு, இரண்டு போர் கப்பல்கள், கவசவாகன எதிர்ப்பு ஏவுகணைகள் (antitank missiles), கண்காணிப்பு உபகரணங்கள் உட்பட 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை பற்றி அறிவித்ததன் மூலம் பெய்ஜிங்கில் இருந்து ஒரு ஆத்திரமூட்டும் எதிர்விளைவை தூண்டிவிட்டது.

தாய்வான் ஜனாதிபதியுடன் ஒரு தொலைபேசி தொடர்பு மேற்கொள்வதற்கான பரிந்துரைப்பு பற்றி அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் ஆலோசனை எதனையும் ட்ரம்ப் வெளிப்படையாக பெற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அதற்கு பதிலாக அவரது சொந்த ஆலோசகர்களை நம்பி இருக்கிறார். வெளிவிவகாரத்துறையை ஒதுக்கிவிடுவது ட்ரம்ப் கடந்தகாலத்துடன் முறித்துக்கொண்டு இன்னும் ஒரு கடுமையான வெளியுறவு கொள்கையை குறிப்பாக சீனாவை நோக்கி தொடர முனைவதன் மற்றொரு அடையாளமாக உள்ளது.

சாய் உடனான ட்ரம்பின் தொலைபேசி கலந்துரையாடலுக்கு சீன அரசாங்கம் கவனத்துடன் விடையிறுத்தது. ஆனால் அது அதுபற்றி வியப்படைந்திருந்த்தது. அமெரிக்காவுடன் ஒரு முறையான எதிர்ப்பு எதனையும் பதிவு செய்யவில்லை, மேலும் "உலகில் ஒரே ஒரு சீனா தான் உள்ளது" என்று சீன வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டது. ட்ரம்பை நோக்கிய ஒரு கூரிய கருத்தில், "ஒட்டுமொத்த சீனா-அமெரிக்க உறவுகளில் தேவையற்ற தலையீடுகள் தவிர்க்கப்படுவதற்காக தாய்வான் தொடர்பான பிரச்சனைகளை எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் கையாள "சம்பந்தப்பட்ட தரப்பினரை" அது வலியுறுத்தியது.

ஞாயிறன்று அரசுக்கு சொந்தமான China Daily பத்திரிகையின் ஒரு தலையங்கம், தொலைபேசி அழைப்பு ஒரு தவறான நிகழ்வு என்றும், சீன-அமெரிக்க மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ட்ரம்ப் குழுவின் "அனுபவமின்மை" மற்றும் "சரியான புரிந்துணர்வு குறைவு" என்பதன் ஒரு அடையாளமாக இருந்தது என்று கருத்து தெரிவித்தது. தொலைபேசி அழைப்பு யாதொரு பலனையும் அளிக்காது, ஆனால் "அவநம்பிக்கையான பெருமையை" தான் அளிக்கும் என்று இது சாயினை இன்னும் கடுமையாக விமர்சித்தது. தாய்வான் ஜனாதிபதியின் புகழ் வீழ்ச்சி கண்டுள்ளதை சுட்டிக்காட்டி, இந்த தலையங்கம்: "அவரது மோசமான செயல்பாட்டிலிருந்து பொது மக்களின் கண்டனங்களை திசைதிருப்ப அவர் முயற்சித்தால், அவரால் வெற்றியடைய முடியாது." என்றும் மேலும் தெரிவித்தது.

எவ்வாறாயினும், திரைக்குப் பின்னால், பதவிக்குவரவிருக்கின்ற ட்ரம்பின் நிர்வாகம் தொடர்பாக சீன ஆளும் வட்டங்களில் ஆழ்ந்த கவலைகளே நிலவுகின்றன. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெள்ளிக்கிழமை அன்று முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹென்றி கிஸ்ஸிங்கருடன் பேசினார். 1970களில் இவர்தான் சீன-அமெரிக்க சமரசத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தார். ஜி, "பதவி மாற்றமடையும் ஒருகாலகட்டத்தில் என்ன நடக்கிறது?," என்று "நாங்கள் மிக நெருக்கமாக நிலைமையை அவதானித்து வருகிறோம்" என்றும் கிஸ்ஸிங்கரிடம் அறிவித்தார்.

சீன விமர்சகர்கள் ஏற்கனவே பழிக்குப் பழி வாங்குவதற்கு ஆலோசனை வழங்குகின்றனர். Fudan பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான ஒரு பேராசிரியர் ஷென் டிங்லி, சாய் உடன் தொடர்புகள் ட்ரம்பின் பதவியேற்பிற்கு பின்னரும் தொடருமானால், சீனா அமெரிக்கா உடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்க வேண்டும், மேலும் ஈரான், வட கொரியா மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் மீது அமெரிக்காவுடன் கொண்டிருந்த ஒத்துழைப்பு முடிவுகட்டப்படும் என்று நியூ யோர்க் டைம்ஸ் க்கு தெரிவித்தார்.

தாய்வான் ஜனாதிபதி உடனான ட்ரம்பின் தொலைபேசி உரையாடல் பதவிக்குவரவுள்ள அமெரிக்க நிர்வாகம் உலக அரசியலுக்குள் கொண்டுவரவுள்ள ஆழ்ந்த நிச்சயமற்ற தன்மைக்கு மற்றொரு அடையாளமாக இருக்கின்றது. உலகின் மிகுந்த அபாயகரமான வெடிப்பு புள்ளிகளுள் ஒன்றில் நீண்டகாலமாகவுள்ள இராஜதந்திர உடன்படிக்கைகளை பொறுப்பற்ற முறையில் கிழித்துப்போட தயாராக உள்ள அவரது விருப்பம், அணுஆயுத அரசுகளுக்கு இடையில் போர் அபாயம் அதிகரித்துவருவது குறித்த தெளிவான எச்சரிக்கையாகும்.