ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ahead of Electoral College vote: Democrats intensify McCarthyite campaign against Russia

ஜனாதிபதி தேர்வு சபை வாக்கெடுப்பு வரவிருக்கையில்: ஜனநாயக கட்சி ரஷ்யாவிற்கு எதிராக மக்கார்த்தியிச பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துகிறது

Patrick Martin
19 December 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்வு சபையின் 538 அங்கத்தவர்கள் 50 மாநில தலைநகரங்களில் திங்களன்று வாக்களிக்கின்றனர். ஜனாதிபதி தேர்வு சபை வாக்கெடுப்பானது, ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய விதிவிலக்குகளுடன், ஹிலாரி கிளிண்டனின் 232 வாக்குகளுக்கு எதிராக குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்புக்கு 306 தேர்வு சபை வாக்குகளை வழங்கி நவம்பர் 8 வாக்கு முடிவுகளையே பின்தொடரும் என்பதற்கு சகல அறிகுறிகளும் உள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்டு அண்மித்து ஆறு வாரங்களில், ட்ரம்ப் ஏறத்தாழ எல்லா முக்கிய மந்திரிசபை மற்றும் நிர்வாக பதவிகளுக்குமான அவரது நியமனங்களை அறிவித்துள்ளார். அதிமுக்கிய சமூகநல திட்டங்களை கலைக்கவும் மற்றும் பெருநிறுவன இலாபங்கள் மீதான சகல நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குவதிலும் தீர்மானமாக உள்ள பில்லியனர்கள், பெருநிறுவன செயலதிகாரிகள், தளபதிகள் மற்றும் தனிநபர்களை உள்ளடக்கிய, அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரியாக அவர் அரசாங்கம் இருக்கப் போகிறது.

ஜனாதிபதி தேர்வு சபை வாக்குகளே கூட சர்ச்சைக்குரிய விவாதத்திற்குரிய ஒரு விடயமாக உள்ளது என்ற உண்மை, தேர்தலில் காணப்படும் ஜனநாயக விரோத குணாம்சத்திற்கான ஒரு அளவீடாகும். இரண்டு தசாப்தங்களுக்கும் குறைந்த காலத்தில் இரண்டாவது முறையாக, அதிகளவிலான தேர்வு சபை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வேட்பாளர், மக்கள் வாக்குகளில் தோல்வியடைந்துள்ளார். அண்மித்து மூன்று மில்லியன் வாக்குகளுடன் மக்கள் வாக்குகளில் ட்ரம்பின் தோல்வி, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாததாகும்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் ஸ்தாபகம் மற்றும் மாநிலங்களுக்குள் கூர்மையான பிளவுகள் மேற்புறத்துக்கு வந்துள்ளதுடன், கடந்த இரண்டு வாரங்களில் தீவிரமடைந்துள்ளன. ஜனநாயகக் கட்சியின் பிரிவுகள், தேர்வு சபை உறுப்பினர்களிடம் தனிப்பட்டரீதியில் ட்ரம்புக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முறையிடும் ஒரு பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றன, அல்லது ஜனாதிபதி தேர்வு சபை வாக்கெடுப்பில் குற்றகரமான ரஷ்ய தலையீடு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை முகமைகளிடம் இருந்து அவர்களுக்கு தகவல் வந்திருப்பதாக வலியுறுத்துகின்றன.

இந்த பிரச்சாரம் குறித்து குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இது மக்கள் வாக்குகளில் ட்ரம்பின் முடிவான தோல்வியின் அடிப்படையிலோ, அல்லது அவரின் வெள்ளை மாளிகை மற்றும் மந்திரிசபை நியமனங்கள் அடிப்படையிலோ கிடையாது. பாசிச Breitbart.com இன் தலைமை செயலதிகாரி ஸ்டீபன் பானன் ஐ ட்ரம்ப் அவரது வெள்ளை மாளிகை உதவியாளராக நியமித்ததையோ, அல்லது மில்லியன் கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்களைச் சுற்றி வளைக்கும், மருத்துவ சிகிச்சை உதவி (Medicaid) மற்றும் மருத்துவக் கவனிப்பு (Medicare) ஐ அழிக்கும், மற்றும் சமூக பாதுகாப்பை தனியார்மயமாக்குவதை நோக்கி நகர்த்தும் அவரின் திட்டங்களையோ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற அவர்களது ஊடக கூட்டாளிகள் பிரச்சினை ஆக்கவில்லை.

ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பெரும்பாலான பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் நடத்தி வரும் பிரச்சாரமானது, ஜனநாயக கட்சி மின்னஞ்சல்களை ரஷ்யா இணையவழியில் ஊடுருவியது என்று முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீதும் மற்றும் அதை ஒப்புக்கொள்ளவோ அல்லது கண்டிக்கவோ ட்ரம்ப் மறுக்கிறார் என்பதன் மீதும் ஒருங்குவிந்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு எதிராக சரமாரியான போர்வெறியூட்டல்கள் மற்றும் ட்ரம்ப் புட்டினின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையில், ஜனநாயகக் கட்சி, பாசிசவாத பில்லியனர் ட்ரம்பை வலதிலிருந்து தாக்கும் அதன் தேர்தல் பிரச்சார மூலோபாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ட்ரம்ப் ஐ எதிர்ப்பதில் ஜனநாயகக் கட்சிகள் உழைக்கும் மக்களிடம் முறையிடவில்லை, மாறாக இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளிடம் முறையிடுகின்றன.

ஞாயிறன்று காலை தேசிய தொலைக்காட்சியில் தோன்றியபோது, கிளிண்டன் பிரச்சாரக்குழு தலைவர் ஜோன் பொடெஸ்டா, வெர்ஜினியாவின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி டொன் பெயேர், மற்றும் ஜனநாயகக் கட்சியின் தேர்வுக்கு குழு உறுப்பினரும், ஓர் அமெரிக்க செனட்டரின் பேரனுமான க்ளே பெல் ஆகிய அனைவரும் தேர்தலில் குற்றகரமான ரஷ்ய தலையீடு குறித்து அவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளிடம் இருந்து ஒரு விரிவான விளக்கம் கிடைக்கும் வரையில் திங்கட்கிழமை தேர்வுக்குழு சபை உறுப்பினர்களது கூட்டம் வாக்குகள் இடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பொடெஸ்டா மற்றும் ஜனநாயக கட்சி தேசிய குழுவின் இடைக்கால தலைவர் Donna Brazile இருவருமே, நவம்பர் 8 தேர்தல் நாள் வாக்கெடுப்பில் "ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்" நடந்ததா என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட விடையிறுக்க மறுத்தனர். பொடெஸ்டா கூறினார், “அது ரஷ்ய தலையீட்டால் சிதைக்கப்பட்டிருந்தது.” Brazile அறிவித்தார், “ஒரு வெளிநாட்டு விரோதியால் நாம் தாக்கப்பட்டோம்,” தேர்தல் முடிவு "அந்த ஊடுருவலால் களங்கப்படுத்தப்பட்டது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

தேர்தலுக்குப் பின்னர் அவரது முதல் பிரசன்னமாக ஞாயிறன்று ஒரு தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் தோன்றிய பொடெஸ்டா, ட்ரம்ப் ஐ "ஒரு ரஷ்ய செல்ல நாய்க்குட்டி" என்று வர்ணித்து, அதே நாளில் வெளியான நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் நிக்கோலஸ் க்ரிஸ்டோஃப் இன் கருத்துரையை மேற்கோளிட்டார். “அமெரிக்க உளவுத்துறை சமூகத்திற்கும் மற்றும் ஒரு வெளிநாட்டு படுகொலை சர்வாதிகாரிக்கும் இடையிலான ஒரு சர்ச்சையில், ஒரு அமெரிக்க தலைவர் சர்வாதிகாரி உடன் அணிசேர்வதை நான் ஒருபோதும் நினைத்தும் பார்த்ததில்லை,” என்று க்ரிஸ்டோஃப் எழுதியிருந்தார்.

ட்ரம்ப் பிரச்சாரக் குழுவிற்கும் ரஷ்ய அரசாங்கத்திற்கும் இடையே "அங்கே நயவஞ்சகமான கூட்டணி இருந்ததோ என்று பெரிதும் தெரியவில்லை" என்று அறிவுறுத்தி, பொடெஸ்டா க்ரிஸ்டோஃப் ஐயும் கடந்து சென்றார். அவர் அறிவித்தார், “திரு. ட்ரம்ப் என்ன தெரிந்து வைத்திருந்தார், ட்ரம்ப் குழுவுக்கு என்ன தெரிந்திருந்தது, எப்போதிருந்து அவர்கள் அதை தெரிந்திருந்தார்கள், அவர்கள் ரஷ்யர்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று நிஜமாகவே நினைக்கவில்லை. அவை எல்லாம் இன்னமும் வெளிப்படையான கேள்விகளாக உள்ளன என்றே நான் நினைக்கிறேன்,” என்றார்.

இது நவ-மக்கார்த்தியிச குணாம்சத்தின் முறையீடாகும். இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளும், அதன் போட்டியாளர்களுக்கு எதிராக ஒன்றையொன்று அவர்கள் ரஷ்ய முகவர்கள் என்று குறைகூறும் அடிப்படையிலான ஒரு பிரச்சாரத்தில், சோவியத் ஒன்றியம் என்பது முதலாளித்துவ ரஷ்யா என்பதைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் வெள்ளை மாளிகைக்குள் ட்ரம்ப் நுழைவதைத் தடுக்கும்ரீதியில் இருந்தாலும், உளவுத்துறை முகமைகள் மற்றும் ஜனநாயக கட்சியினரின் ரஷ்ய-விரோத பிரச்சாரமானது, ரஷ்யாவுடன் ஒரு தீவிரப்பட்ட மோதலை நோக்கிய அமெரிக்க வெளியுறவு கொள்கையின் தற்போதைய நிலைநோக்கிலிருந்து மாறுவதை ட்ரம்ப் க்கு அதிக கடினமாக்குவதையே அதன் இலக்கில் கொண்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தியதைப் போல, அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் இராணுவ உளவுத்துறை எந்திரத்தைப் பொறுத்த வரையில், ரஷ்ய இணையவழி ஊடுருவல் என்று குற்றஞ்சாட்டப்படுவது மீதான மோதல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் இன்றியமையா உள்ளடக்கத்தை அம்பலப்படுத்துகிறது. கிளிண்டன் ட்ரம்ப் க்கு எதிரான அவரது பிரச்சாரத்தில், ரஷ்யாவை நோக்கி "மென்மையாக" இருக்கும் ஒருவராகவும், மத்தியக் கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாப்பில் போதுமானளவிற்கு ஆக்ரோஷமாக இல்லாதவராகவும் ட்ரம்ப் மீதான தாக்குதலுடன், அடையாள அரசியலின் அடிப்படையில் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளுக்கான ஒரு முறையீட்டை கிளிண்டன் சேர்த்திருந்தார்.

சிரியா மற்றும் ஈராக்கில் ஒபாமா நிர்வாகம் அடைந்த தோல்விகளை அடுத்து அமெரிக்க வெளியுறவு கொள்கையின் திசை தான் தேர்தலின் நிஜமான பிரச்சினை என்ற நிலையில், குற்றகரத்தன்மை மற்றும் ஊழல் குறித்த மோசடி பழியுரைகளும் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அதை மூடிமறைத்தன.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யா உடனான பதட்டங்களை தீவிரப்படுத்தி, இன்றியமையாத விதத்தில் ஒபாமா கொள்கைகளின் ஒரு தொடர்ச்சிக்கு கிளிண்டன் வக்காலத்து வாங்கினார், அதேவேளையில் ட்ரம்ப் சீனாவையும் அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் போட்டியாளர்களையும் இலக்கில் வைக்கும் ஒரு கண்ணோட்டத்துடன் வேறொரு அணுகுமுறைக்கு அழைப்புவிடுத்தார். மிக முக்கியமாக, ஞாயிறன்று ட்ரம்ப் டவரில் இருந்து வெளியான ஒரு செய்தியில், ABC செய்தி தொடர்பாளர் Tom Llamas கூறுகையில், ரஷ்யா அல்ல, சீனா தான் "தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப் க்கான மிக முக்கிய வெளிநாட்டு கொள்கை வேலை" என்று ஒரு மூத்த ட்ரம்ப் ஆலோசகரால் அவருக்கு கூறப்பட்டுள்ளது என்றார்.

மிகப் பொதுவாக, அங்கே அமெரிக்க தேசிய-பாதுகாப்பு ஸ்தாபகத்திற்குள் ஓர் முன்னெச்சரிக்கை உணர்வு உள்ளது. செனட்டர் ஜோன் மெக்கெயின், CNN இல் தோன்றியபோது, சிரியாவில் ரஷ்யாவின் தலையீட்டை "இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட உலக ஒழுங்கமைப்பு சிதறுவதற்கு சாத்தியமான ஓர் அறிகுறி" என்பதாக குறிப்பிட்டார், வேறுவார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவின் மேலாதிக்க நிலைப்பாடு முடிவுறுகிறது என்பதாகும்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் எந்தவொரு பிரிவும் அதுபோன்றவொரு விளைவை சமாதானமானரீதியில் ஏற்றுக் கொள்ளாது. வரவிருக்கின்ற ட்ரம்ப் நிர்வாகமும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டிலும் உள்ள அதன் விமர்சகர்களும், அடிப்படை இலக்கில் அல்ல, மாறாக தந்திரோபாயங்கள் மற்றும் அணுகுமுறைகளின் மீது தான் மோதலில் உள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளிநாட்டு போட்டியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கம் இரண்டு தரப்பிலும் உள்ள சகல சவால்களுக்கு எதிராகவும் அதன் உலகளாவிய நிலைப்பாட்டை பாதுகாக்க, உலக போர் வரையில் மற்றும் அது உள்ளடங்கலாக, அதிகரித்தளவில் இராணுவ வன்முறையின் மீது தங்கியுள்ளது.