ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Once again on Sanders and socialism

சாண்டர்ஸ் மற்றும் சோசலிசம் குறித்து மீண்டுமொருமுறை

Barry Grey
20 February 2016

லாஸ் வேகாஸ் நகர அரங்கில் வியாழனன்று இரவு, MSNBC கேபிள் சானல் மற்றும் Telemundo கூட்டாக ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளரும் மற்றும் தன்னைத்தானே "ஜனநாயக சோசலிசவாதி" என்று கூறிக் கொள்பவருமான பேர்னி சாண்டர்ஸிடம், நிகழ்ச்சி நெறியாளர்களில் ஒருவர் சோசலிசம் என்றால் என்னவென கருதுகின்றார் என்பதை விளங்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

வெள்ளை மாளிகையை பிடிக்கும் அவரது முயற்சியின் அடித்தளத்தில், சமூக சமத்துவமின்மை மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் அரசியல் மேலாதிக்கம் மற்றும் குற்றகரத்தன்மையை குற்றஞ்சாட்டியதால் உழைக்கும் மக்களிடையே மற்றும் இளைஞர்களிடையே சாண்டர்ஸ் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளார். ஒரு சோசலிசவாதி என்ற அவரது கூற்று, பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அன்னியப்படுவதிலிருந்து விலகி, அவரது பிரச்சாரத்தை நோக்கி ஈர்த்துள்ளது. இது முதலாளித்துவ-எதிர்ப்புணர்வு அதிகரித்திருப்பதன் ஓர் அறிகுறியாகும். வெள்ளியன்று வெளியான ஒரு பிரபல கருத்துக்கணிப்பின்படி, அவர் தேசியளவில் ஜனநாயக கட்சி வாக்காளர்களிடையே வெறும் 3 சதவீத புள்ளிகள் அளவில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனை விடவும் முன்னிலையில் உள்ளார்.

சோசலிசம் குறித்த கேள்விக்கு விடையிறுக்கையில், சாண்டர்ஸ் கூறினார்: “ஜனநாயக சோசலிசவாதி குறித்து நான் பேசுகையில், நான் எதைக் குறித்து பேசுகிறேன் தெரியுமா? இந்நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான திட்டங்களில் ஒன்றும், மூத்தக் குடிமக்களுக்குரிய மதிப்பு மற்றும் பாதுகாப்புக்காக FDR ஆல் அபிவிருத்தி செய்யப்பட்டதுமான சமூக பாதுகாப்பு குறித்து பேசுகிறேன்... ஜனநாயக சோசலிசவாதி குறித்து நான் பேசுகையில், நான் வயதானவர்களுக்கு ஒரே செலவில் மருத்துவ கவனிப்பு, மருத்துவக் காப்பீட்டு குறித்து பேசுகிறேன். மேலும் எனது கண்ணோட்டத்தில், அக்கருத்தை நாம் எல்லா ஜனங்களுக்கும் விரிவாக்க வேண்டும்...” என்றார்.

“ஜனநாயக சோசலிசவாதி குறித்து நான் பேசுகையில், நான் வெனிசூலாவைப் பார்க்கவில்லை. நான் கியூபாவைப் பார்க்கவில்லை. நான் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளைப் பார்க்கிறேன்...”

இப்பதிலை மிகவும் கவனமாக ஆய்வுக்குட்படுத்தவேண்டும். “பில்லியனர் வர்க்கத்திற்கு" எதிராக ஓர் "அரசியல் புரட்சி" குறித்த அவரது பேச்சுக்களுக்கு இடையே, சாண்டர்ஸ், 150 ஆண்டுகளுக்கும் மேலாக எதை கொண்டு அமெரிக்க பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கு ஆட்சி செய்துள்ளதோ அந்த இரு-கட்சி அரசியல் ஏகபோகத்திற்கோ அல்லது முதலாளித்துவ அமைப்புமுறைக்கோ அவரொரு எதிர்ப்பாளர் இல்லை என்பதை அந்த பதில் தெளிவுபடுத்துகிறது.

சாண்டர்ஸின் "சோசலிசம்" என்றழைக்கப்படுவதில் அங்கே எந்த முதலாளித்துவ-எதிர்ப்பும் கிடையாது. சோசலிசம் என்பது முதலாளித்துவத்தின் சீர்திருத்தம் அல்ல, அது அதற்கு நேரெதிரானது. அது உற்பத்தி கருவிகளின் —பிரதான தொழில்துறைகள், போக்குவரத்து, தொலைதொடர்புகள், வங்கித்துறையில்— தனியார் சொத்துரிமையை நீக்குவதையும் மற்றும் அவற்றை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொது பயன்பாடுகளுக்குள் மாற்றுவதையும் அடிப்படையாக கொண்டது. அது தனியார் இலாபத்திற்கான உற்பத்தியை, ஒட்டுமொத்தமாக சமூக நலனுக்கான உற்பத்திமுறையைக் கொண்டு பிரதியீடு செய்வதாகும், அதாவது தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமாக உபரி மதிப்பைப் பெறும் அடிப்படையில் அமைந்த முறையை பிரதியீடு செய்கிறது. அது பொருளாதார வாழ்வை, பகுத்தறிவார்ந்த திட்டமிடலின் அடித்தளத்தில் அமைப்பதன் மூலமாக சந்தையின் அராஜகத்தை அகற்றுகிறது.

அது முதலாளித்துவத்தின் பூகோளமயப்பட்ட உற்பத்தி மற்றும் தேசிய-அரசு அரசியல் கட்டமைப்பிற்கு இடையிலான முரண்பாடுகளை, ஓர் உலக சோசலிச கூட்டமைப்பிற்கான போராட்டத்தில் தொழிலாளர்களைச் சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவதன் மூலமாக முரண்பாடுகளைக் கடந்து வருகிறது. அதுவொரு புரட்சிகரமான மாற்றம், அதை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஒன்றுதிரள்வின் மூலமாக மற்றும் தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே அடைய முடியும்.

சாண்டர்ஸ் இவை அனைத்தையும் எதிர்க்கிறார். அவர், சோசலிசம் என்ற பெயரில், நடப்பிலிருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறையை, 1930கள் (சமூக பாதுகாப்பு) மற்றும் 1960களில் (மருத்துவ கவனிப்பு) கொண்டு வரப்பட்ட திட்டங்களின் வரிசையில் சீர்திருத்தி விடலாமென வாதிடுகிறார். இத்தகைய திட்டங்கள் உழைக்கும் மக்களுக்கான முக்கிய சலுகைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற போதினும், இவை இரண்டுமே அமெரிக்க ஆளும் உயரடுக்கின் அடிப்படை வர்க்க நலன்களைச் சவால் செய்யவில்லை. துல்லியமாக ஆளும் வர்க்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தைத் தொந்தரவுக்கு உட்படுத்தாததால், இத்தகைய வேலைத்திட்டங்கள் தொடர்ந்து தாக்குதலின் கீழ் உள்ளன. அவை அதிகரித்தளவில் குறைக்கப்பட்டு, இப்போது அவை முற்றிலுமாக அழிக்கப்பட இலக்கில் வைக்கப்படுகின்றன.

அனைத்திற்கும் மேலாக இந்த வேலைத்திட்டங்கள் எங்கிருந்து வருகின்றன? அவை அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் இலாபத்திற்காக கொண்டு வரப்பட்டவை அல்ல. அவை, அமெரிக்கர்கள் மட்டுமல்ல, மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கடுமையான மற்றும் இரத்தக்களரியான போராட்டங்களின் போக்கில் ஆளும் உயரடுக்கிடமிருந்து பறிக்கப்பட்டவையாகும். அமெரிக்காவில் 1930 கள் மற்றும் 1960 களில் சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததற்குப் பின்னால் இருந்த மிக முக்கிய காரணி, உலக வரலாற்றில் முதன்முதலில் தொழிலாளர்களின் அரசை ரஷ்யாவில் ஸ்தாபித்த 1917 சோசலிச புரட்சியாகும்.

உலகையே மாற்றிய அச்சம்பவம், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஒரு பலமான தூண்டுதலை வழங்கியதுடன், ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டின் ஆளும் வர்க்கத்தையும் அதேபோன்று ஏதாவது அவர்களுக்கும் நடந்துவிடுமோ என்று பயப்பட செய்தது. 1929 இல் பெருமந்தநிலை வெடித்தமை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்களின் கண்களில் முதலாளித்துவத்தை மதிப்பிழக்கச் செய்தது மற்றும் வர்க்க போராட்டம் அதிகரிப்பதற்கு எரியூட்டியது. இது 1934 இல் மூன்று பிரதான அமெரிக்க நகரங்களான டொலிடோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் மினியபொலிஸ் இல் பொது வேலைநிறுத்தங்களுக்கு வெடிக்க செய்தது.

இந்த உள்ளடக்கத்தில் தான், முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்க நலன்களின் ஒரு உறுதியான பாதுகாவலரான பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், சமூக பாதுகாப்பு உட்பட பல சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார். அமெரிக்காவில் சமூக புரட்சியைத் தடுப்பதே அத்தகைய சீர்திருத்தங்களின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

அடுத்த பிரதான சமூக சீர்திருத்தங்கள், வயது முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கான அரசு மருத்துவ திட்டங்களான மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ கவனிப்பு திட்டங்களும், அதிகரித்த சமூக போராட்டங்கள் மற்றும் அதிகரித்த அரசியல் அதிருப்தி நிலைமைகளின் கீழ் தான் கொண்டு வரப்பட்டன. இது பாரிய குடிமுறை உரிமைகள் இயக்க காலகட்டமாக இருந்தது. இது, உள்ளார்ந்தரீதியில், 1930 களில் தொழில்துறை தொழிற்சங்கங்களை முன்னுக்குக் கொண்டு வந்த வர்க்க போராட்டங்களின் ஒரு நீட்சியாக இருந்ததுடன், சமத்துவவாத மரபுகளால் உயிரூட்டப்பட்டிருந்தது. இது ஆசியா மற்றும் ஆபிரிக்காவை உலுக்கிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டங்களுடன் ஒன்றுகூடி நிகழ்ந்தது. அமெரிக்க நகரங்களை மூழ்கடித்த நகர்புற கிளர்ச்சிகள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களது போர்குணம் மிகுந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போர்-எதிர்ப்பு இயக்கத்தின் முதல் எழுச்சிகளையும் இக்காலகட்டம் உள்ளடக்கி இருந்தது.

ஆனால் அமெரிக்க முதலாளித்துவம் அதன் உலகளாவிய பொருளாதார மேலாதிக்கம் மற்றும் அரசியல் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த போதும் கூட, அதனால் படர்ந்து பரவிய வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் ஒடுக்குமுறையைக் கடந்து வர முடியவில்லை. 1964 இல், லிண்டன் ஜோன்சன் அவரது "வறுமைக்கு எதிரான போர்" என்பதை பிரகடனப்படுத்தினார், ஆனால் அமெரிக்க முதலாளித்துவம் அதன் சர்வதேச மற்றும் உள்ளார்ந்த முரண்பாடுகளால் இழுக்கப்பட்ட போது அது உடனடியாக தோல்வியடைந்தது. அப்போதிலிருந்து, ஜனநாயக கட்சியும் மற்றும் ஆளும் வர்க்கமும் ஒட்டுமொத்தமாக, எந்தவொரு தாராளவாத சீர்திருத்த கொள்கையையும் கைவிட்டு, முன்பினும் அதிக வன்முறையாக வலதிற்கு மாறியுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு சளைக்காத ஆளும் வர்க்க தாக்குதல் மேலாதிக்கம் செய்துள்ளது. இது 2008 முதலாளித்துவ உடைவுக்குப் பின்னர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இன்று, மிகப் பணக்கார 20 தனிநபர்கள் மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீத மக்களை விட —150 மில்லியனுக்கும் அதிகமான மக்களை விட— அதிக செல்வத்தை வைத்திருப்பதாக சாண்டர்ஸ் அடிக்கடி குறிப்பிடுகிறார். அவ்வாறிருந்தாலும், வரலாற்றில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து செல்வத்தை மிக அதிகளவில் பணக்காரர்களுக்கு மாற்றுவதை மேற்பார்வை செய்துள்ள இந்த ஜனாதிபதியை அவர் அகம் மகிழ்ந்து பாராட்டுகிறார்.

வியாழனன்று இரவு அவர் கூறியவாறு, “மொத்தத்தில், ஜனாதிபதி அசாதாரணமானரீதியில் நல்ல வேலையைச் செய்துள்ளார் என்றே நான் நினைக்கிறேன். பல விடயங்களில் நான் அவருடன் தொடர்ந்து வேலை செய்துள்ளேன்,” என்றார்.

சமீபத்திய நாட்களில், போல் க்ரெக்மன் மற்றும் ஜரீத் பேர்ன்ஸ்டைன் போன்ற கிளிண்டனுக்கு-ஆதரவான பொருளியலாளர்கள், அரசு கல்லூரிகளில் இலவச கல்வி மற்றும் அனைவருக்கும் அரசு வழங்கும் மருத்துவ கவனிப்பு உட்பட சாண்டர்ஸின் சீர்திருத்த முன்மொழிவுகளை, பெரிதும் நடைமுறையில் முடியாதவை மற்றும் கைவரப் பெறாதவை என்று தாக்கியுள்ளனர். இது சமூக திட்டங்களுக்கு "அங்கே பணமில்லை" என்ற நிரந்தரமான பொய்யின் அடிப்படையில் வலதிலிருந்து சாண்டர்ஸ் மீது வைக்கப்படும் தாக்குதல் என்றாலும், க்ரெக்மன் மற்றும் ஏனையவர்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் சரியாகவே சொல்கிறார்கள். அவரது கிளிண்டனுக்கு ஆதரவானவர்களின் விமர்சகர்களுக்குக் குறைவில்லாமல், சாண்டர்ஸ், இப்போதைய பொருளாதார அமைப்புமுறையை ஏற்று பாதுகாக்கிறார். இந்த தொடக்கப் புள்ளியிலிருந்து செல்லும் அவரது சீர்திருத்த முன்மொழிவுகள், உண்மையில் கற்பனாவாதமாகும்.

முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளத்தை நேரடியாக சவாலுக்கு உட்படுத்தும் ஒரு மக்கள் போராட்டத்திற்கு, வெளியேற எந்த நிஜமான முற்போக்கான மாற்றங்களையும் எட்ட முடியாது.

சாண்டர்ஸின் "சோசலிச" முன்மாதிரிகள் என்று கூறப்படும் டென்மார்க் மற்றும் ஸ்வீடனை பொறுத்த வரையில், அவ்விரண்டுமே இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட நலன்புரி அரசுகளைக் கலைப்பதில் வேகமாக ஈடுபட்டுள்ளன மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்பினும் கடுமையான சிக்கன முறைமைகளைத் திணித்து வருகின்றன. சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கு அவர்கள் திரும்பி இருப்பதை, அகதிகள் மீதான அவர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களே எடுத்துக்காட்டுகின்றன. மத்திய கிழக்கு ஏகாதிபத்திய போர்களில் இருந்து தப்பியோடி வந்த சுமார் 80,000 மக்களை அது வெளியேற்ற இருப்பதாக ஸ்வீடன் கடந்த மாதம் அறிவித்தது, டென்மார்க் தஞ்சம் கோருவோர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்யும் திட்டங்களை அறிவித்தது.

சாண்டர்ஸ், சமத்துவமின்மை, போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்துவரும் எதிர்ப்பைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அவர் பெருந்திரளான மக்களிடையே முதலாளித்துவ எதிர்ப்புணர்வு அதிகரிப்பதை வெளிப்படுத்தவில்லை. அவர் இத்தகைய அபிவிருத்திகளுக்கு ஆளும் வர்க்கத்தின் ஒரு விடையிறுப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். ஜனநாயக கட்சிக்குப் பின்புலத்தில் உள்ள சமூக அதிருப்தியைத் திசைதிருப்பி விடுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் எழுச்சி பெறுவதைத் தடுப்பதே அவரது மத்திய அரசியல் செயல்பாடாகும்.