ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Adama Traoré’s autopsy undermines French police’s account of his death

Adama Traoré இன் பிரேதப் பரிசோதனை அறிக்கை மரணம் குறித்த பிரெஞ்சு போலிஸின் விபரிப்பை பலவீனப்படுத்துகிறது

By Kumaran Ira
2 August 2016

24 வயது இளைஞரான Adama Traoré ஜூலை 19 அன்று போலிஸ் காவலில் இருந்த சமயத்தில் மரணமடைந்த விதம் தொடர்பான “உண்மை”யைக் கூறுமாறு கோரி பாரிஸில் சனிக்கிழமையன்று Gare du Nord இரயில் நிலையத்துக்கு முன்னால் சுமார் 600 பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Adama Traoré இன் குடும்பத்தால் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஊர்வலம் போலிசால் தடுத்து நிறுத்தப்பட்டது.

Traoré இன் மரணம் அவரது சொந்த ஊரான Beaumont-sur-Oise யிலும், மற்றும் பாரிஸின் இன்னும் பல புறநகர்ப் பகுதிகளிலும் கலகங்களைத் தூண்டியது. அவ்விடங்களில் ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்காக, பிரெஞ்சு அவசரகால சட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படைகள் நிலைநிறுத்தப்பட்டன.

CRS கலகத் தடுப்பு போலிஸ் இந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியது. பாரிஸ் போலிஸ் நிர்வாகம் (prefecture) இதற்கு அனுமதி அளிக்கவில்லை என்ற உத்தரவை அது மேற்கோள்காட்டியது. “நிலைய கட்டிடங்களின் பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காகவும்”, “பொது ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவும்” மற்றும் ”ஆர்ப்பாட்டக்காரர்களின் பாதுகாப்பையும் கூட உறுதிசெய்வதற்காகவும்” இந்த ஆர்ப்பாட்டத்திற்கான தடை அவசியப்பட்டதாக நிர்வாகத்தின் (prefecture) செய்திக்குறிப்பு தெரிவித்தது.

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினால் ஏறக்குறைய நிரந்தரமான அவசரகாலநிலை திணிக்கப்பட்டிருப்பதன் மத்தியில், இந்த பிற்போக்குத்தனமான தடையானது, ஒன்றுகூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குமான உரிமையின் மீது தொடுக்கப்பட்ட இன்னுமொரு தாக்குதலாய் இருக்கிறது. இந்த வசந்தகாலத்தில் PS இன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக இளைஞர்களும் தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, ஆர்ப்பாட்டங்களை நசுக்க PS, கலகத் தடுப்பு போலிசாரை அனுப்பியதோடு, இறுதியாக ஆர்ப்பாட்டங்களையே ஒட்டுமொத்தமாக தடை செய்ய அச்சுறுத்துகின்ற முன்கண்டிராத ஒரு முடிவையும் எடுத்தது.

Traoré இன் குடும்பமும் அவரது ஆதரவாளர்களும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாய் இருப்பதாகக் கூறப்படுவதெல்லாம் நாக்கூசாத பொய்களாகும். போலிசின் மூர்க்கத்தனத்திற்கான சமூக எதிர்ப்பு எதுவும் வெளிப்பாடு காட்ட அனுமதித்தால் அது சமூக வெடிப்பின் கட்டுப்பாடற்ற வெடிப்பிற்கு இட்டுச் சென்று விடும் என்று போலிசும் பிரெஞ்சு அரசும் கொண்டிருக்கும் அச்சமே, உண்மையில், இந்தக் கூற்றுகளின் பின்னிருக்கும் அடித்தளமாக இருக்கிறது. பிரான்சின் புறநகர்ப் பகுதிகள் பலவும் ஆழமான சமூக நெருக்கடிகளால், குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரித்துச் செல்கின்ற நிலையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, மக்களுக்கு எதிராக போலிசை நிறுத்தக் கண்ட பாரிய நகர்ப்புற கலகங்களை சமீபத்தில், குறிப்பாக 2005 மற்றும் 2007 இல், இப்பகுதிகள் கண்டிருக்கின்றன.

இந்த ஊர்வலத்தைத் தடைசெய்வதன் மூலமாக, Traoré இன் மரணத்திற்குப் பின்னர் அதிகாரிகளால் கூறப்பட்ட பொய்களை மூடிமறைத்து விடுவதற்கு அதிகாரிகள் முனைகின்றனர். புதிய பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் Traoré மூச்சுத்திணறலால் இறந்ததாகக் குறிப்பிடுகின்றன. இது மாரடைப்பாலோ அல்லது உள் அவயங்களில் ஏற்பட்ட தொற்றுகளாலோ அவர் இறந்திருப்பதாக கூறப்பட்ட பரஸ்பரம் முரண்பாடான பல்வேறு விதமான போலிஸ் விபரிப்புகளை மறுத்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

முதலாவது பிரேதப் பரிசோதனை அறிக்கை நுரையீரல் மற்றும் கல்லீரல் உள்ளிட “பல அவயங்களில் ஏற்பட்ட ஒரு தொற்றினை”யும் “மரணத்திற்கு காரணமாகக் கூடிய எந்தவகையான வன்முறையும் இருக்கவில்லை” என்றும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது, விளக்கமில்லாமல் இருந்தது. அதன்பின் Traoré இன் குடும்பம் ஒரு வெளியிலிருந்தான நிபுணரின் மூலமான இன்னுமொரு பிரேதப் பரிசோதனைக்கு கோரிக்கை வைத்தது.

இந்த வெளிப்புற நிபுணரான பாரிஸின் மருத்துவ-சட்ட நிறுவனம் அளித்திருக்கும் புதிய பிரேதப் பரிசோதனை அறிக்கையானது இருதய நோய் அல்லது உள் அவயங்களின் தொற்றுகள் குறித்த எந்த ஆதாரத்தையும் கண்டிருக்கவில்லை. அவரது மரணத்திற்குக் காரணமான மூச்சுத்திணறல் அவரைக் கைது செய்யும்போது போலிஸ் பயன்படுத்தியிருந்த அதிகப்படியான பலப்பிரயோகத்தின் விளைவாய் இருந்திருக்கக் கூடும்.

"அவரை கட்டுப்படுத்த அவசியமான அளவுக்கே பலப்பிரயோகத்தை நாங்கள் பயன்படுத்தினோம்” என்று போலிஸ் கூறியது. ஆனாலும் “அவர் கைதான சமயத்தில் எங்களது மூன்று பேரின் எடையையும் அவர் தாங்க வேண்டியதானது” என்றும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

Traoré இன் குடும்ப வழக்கறிஞரான Yassine Bouzrou கூறினார்: “அவர் மூச்சுத்திணறலால் இறந்திருக்கிறார் என்பது தெரிந்திருக்கிறது. போலிஸ் கூறியவற்றைக் கொண்டு பார்த்தால், அவரது நெஞ்சாங்கூடு அழுத்தப்பட்டதே அவரது மரணத்திற்கு காரணமாயிருந்திருக்கக் கூடும் என்பதே என் கருத்தாக இருக்கும். மூன்று போலிசார் ஒன்றாக அவர் மீது ஏறியமர்ந்திருக்கிறார்கள், அதாவது அண்ணளவாக 240 கிலோ எடை அவர் மீது அமர்ந்திருக்கிறது.”

குடும்பத்தால் அமர்த்தப்பட்ட இன்னொரு வழக்கறிஞரான Frédéric Zajac, வெளியிலிருந்தான நிபுணரின் அறிக்கையில் “எந்தத் தொற்றும் காணப்பட்டிருக்கவில்லை” என்றபோது முதலாம் பிரேதப் பரிசோதனையில் “நுரையீரல்கள், கல்லீரல் மற்றும் மூச்சுக்குழாயில் ஏற்பட்ட ஒரு தீவிர தொற்று” கண்டறியப்பட்டிருந்தது எப்படி என்று ஆச்சரியம் வெளியிட்டார்.

“இந்த 24 வயது இளைஞர் நிபுணர்களால் பொறிமுறையைக் கண்டறிய இயலாத ஒரு மூச்சுத்திணறல் பாதிப்பால் இறந்திருந்தார் என்பதே பிரச்சினை” என்ற Zajac, “உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Traoré இன் ஒரு உறவினர் விடுத்த ஒரு அறிக்கையில் அவர் அறிவித்திருந்தார்: “முதலில் மாரடைப்பென்றார்கள், பின் தொற்று என்றார்கள், இப்போது மூச்சுத்திணறல்... அவர்கள் எங்களிடம் இருந்து மறைப்பது என்ன? என்ன தான் நடந்தது உண்மையில்? இந்தக் கைது ஒரு வன்முறையான விதத்தில் நடந்தது என்பதைத் தான் அக்கம்பக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறார்கள்.”

“என் சகோதரர் இறந்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. இன்னமும் எங்களுக்கு அவரது இறப்பின் காரணம் தெரிந்தபாடில்லை. இந்த நிலைமைகளில் அவருக்கு சோகம் அனுசரிப்பதும் கூட மிகக் கடினமாக இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் Lassana Traoré கூறினார்.

Traore இன் குடும்பம் மூன்றாவதாய் ஒரு பிரேதப் பரிசோதனையைக் கேட்டு அது இவ்வழக்கைக் கையாளும் நீதிபதியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. துணை இராணுவ போலிசின் (Gendarmerie) பொது ஆய்வாளரகம் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு ஆகிய இரு முனைகளில் இணையான இரண்டு விசாரணைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.