ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Air of crisis overhangs central bankers’ meeting

மத்திய வங்கியாளர்களது கூட்டத்தில் நெருக்கடிச்சூழல் நிலவுகின்றது

Nick Beams
26 August 2016

வியோமிங் ஜாக்சன் ஹோலில் வெள்ளியன்று மத்திய வங்கியாளர்களது வருடாந்தர கூட்டம் கூடுகையில், நிதிய சந்தைகளின் முழு கவனமும் பெடரல் ரிசர்வ் பெண்தலைவர் ஜெனெட் யெலென் வழங்கவிருக்கும் உரை மீதே இருக்கும். அவை பெடரல் வட்டி விகிதங்களை உயர்த்துமா, எப்போது உயர்த்த தொடங்கும் என்பதற்கான அறிகுறிகளை தேடிக் கொண்டிருக்கும். 

பெடரல் ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக கடந்த டிசம்பரில் தான் 0.25 சதவீத புள்ளிகளை உயர்த்தியது. மேற்கொண்டு 2016 இல் உயர்த்தப்படும் என்று அது சுட்டிக்காட்டி இருந்த போதினும், இதுவரையில் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் வேலைகளுக்கான சந்தை மற்றும் பணவீக்கத்தில் மாற்றங்களைக் கடந்த வாரம் சுட்டிக்காட்டிய பெடரல் துணை தலைவர் ஸ்டான்லெ பிஷ்ஷர், இந்த இரண்டு குறியீடுகள் அடிப்படையில் பெடரல் அதன் இலக்குகளை நெருங்கக்கூடும் என்றார். இக்கருத்துக்கள் வட்டிவிகித உயர்வுக்கு சார்பானவை என்று விளக்கமளிக்கப்பட்டன.

ஆனால் நிதி கொள்கையின் குறுகிய-கால முடிவுகளைப் பற்றிய அனுமானங்கள் மேலோங்கியிருப்பதானது, ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நிதி அமைப்புமுறைக்குள் பாய்ச்சிய பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் கொள்கை (quantitative easing - QE) முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது என்ற உணர்வு ஆளும் வட்டாரங்களில் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இன்னும் மோசமானது என்னவெனில், அது ஒரு புதிய நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

நடக்கவிருக்கும் கூட்டம் பற்றி வலது சாரி பிரிட்டிஷ் நாளிதழ் Daily Telegraph ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், மத்திய வங்கியாளர் தங்களுக்கு தாங்களே மூன்று கடுமையான கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும், அதுவாவது: பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் (QE) கொள்கை உண்மையிலேயே இயங்குகின்றதா, எதிர்மறை வட்டி விகிதங்கள் பரவி வருவதால் வங்கி அமைப்புமுறை முறிந்துள்ளதா, “இதுவரை நமக்கு நிஜமான உலகை பெரிதும் எடுத்துக்காட்டாத" ஒரு பொருளாதார மாதிரியை மாற்றியமைப்பதற்குரிய நேரமா இது" என்று கேள்விகளை எழுப்பியது.

வட்டி விகிதங்களைக் குறைப்பது நிதியியல் மூலதனத்தை நிஜமான பொருளாதாரத்தில் முதலீடு செய்ய தூண்டும் என்பதே, 2008 நெருக்கடிக்கு பொறுப்பான வங்கிகளையும் நிதியியல் அமைப்புகளையும் பிணையெடுத்ததும் மற்றும் மேலதிகமாக ஊக வணிகங்களைப் பலப்படுத்தியதுமான QE கொள்கைக்கான காரணவிளக்கமாக இருந்தது. ஆனால் இது நடக்கவில்லை.  

எட்டாண்டுகள் ஆகிவிட்டன, உலகெங்கிலும் முதலீடு உயர்வதற்கான எந்த அறிகுறியும் இன்றி 2008 க்கு முன்னர் இருந்ததை விட முதலீடு மிகக் குறைவாக உள்ளது. இது கீழ்நோக்கி சரிந்துள்ள உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன் சேர்ந்துள்ளது ஏனென்றால் பிரதான பெருநிறுவனங்கள் திரட்டிய நிதிகள், பங்கு வாங்கி-விற்றல்களிலும் மற்றும் இணைப்புகள் போன்ற ஊக வணிக நடவடிக்கைகளுக்குள்ளும் திருப்பி விடப்பட்டுள்ளதால் மூலதன செலவினங்கள் குறைந்துள்ளன. அமெரிக்காவில் உற்பத்தி எதிர்மறை பகுதியில் சென்றுவிடும் அளவிற்கு வீழ்ச்சி கூர்மையாக உள்ளது.

நிதியியல் சொத்து விலைகளை உயர்த்தியதே QE கொள்கையின் பிரதான விளைவாகும். பொருளாதார மீட்சி இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய எந்தவொரு காலத்தையும் விட மிகக் குறைந்த விகிதத்தில் நடந்து வருகின்ற நிலைமைகளின் கீழ், அமெரிக்காவில் பங்குகளது மதிப்புகள் சாதனையளவிற்கு அல்லது அதற்கு நெருக்கத்தில் உள்ளன. உலகெங்கிலும் பிரதான நகரங்களில், மலிவுப் பணம் சொத்து குமிழியை உருவாக்கி உள்ளது. 

பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் கொள்கையின் மிகவும் முக்கியமான தாக்கம், பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளது. சுமார் 13 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான அரசு பத்திரங்கள் எதிர்மறை இலாபங்களில் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுவரும் ஒரு நிலைமையை அது உருவாக்கி விட்டுள்ளது, இதன் அர்த்தம் பத்திரங்களின் விலை மிகவும் அதிகமாக இருந்தால், இலாபம் அதேளவிற்கு குறையும் (இது இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் தொடர்பில் இருக்கும்), அதாவது ஒரு பத்திரம் வாங்கும் ஒரு முதலீட்டாளர் அதன் முதிர்வு காலம் வரையில் வைத்திருந்தால் அவருக்கு நஷ்டம் ஏற்படும் என்பதாகும். எவ்வாறிருப்பினும் பத்திரங்களின் விலை முன்பினும் அதிகமாக உயரும் என்ற எதிர்ப்பார்ப்பில் தொடர்ந்து அவை வாங்கப்படுகின்றன, இது மூலதன இலாபங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், தொலைவில் என்பதை விட விரைவிலேயே பொறிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாரிய குமிழியைக் குறித்து தனியார் முதலீட்டு நிறுவனங்களும் பத்திர வர்த்தகர்களும் தொடர்ந்து எச்சரிக்கும் அளவிற்கு விலைகள் உயர்ந்துவிட்டன.

ஆனால் இத்தகைய எச்சரிக்கைகளுக்கு இடையிலும் கூட, நிதியியல் முட்டாள்தனம் தொடர்கிறது. “கடன்வழங்கும் சந்தைகள்: ஊக்கப்பொதி முயற்சிகள் விசித்திரமாக உள்ளன" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் இந்த வாரம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவிக்கையில், ஐரோப்பிய மத்திய வங்கியினது QE கொள்கையின் பாகமாக, அது முதலீட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களுள் கடன் வாங்குவதற்கான புதிய வடிவங்களை உட்புகுத்தி வருவதாக குறிப்பிட்டது.

எதிர்மறை வட்டி விகிதங்களுக்கு நகர்ந்ததன் மூலமாக கடன் வழங்குவதை தலைநிமிர செய்திருக்கும் மத்திய வங்கிகள் இப்போது "நிதியியல் அமைப்புமுறைக்குள் தொடர்ந்து பணத்தைப் பாய்ச்சுவற்காக தனியார் பங்களிப்பாளர்கள் குறிப்பிட்ட அவர்களுக்கான விடயங்களை வாங்கி சூழ்ச்சி செய்வதை கிட்டத்தட்ட முழுமையாக வரவேற்கிறது" என்று அந்த கட்டுரை குறிப்பிட்டது. பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் கொள்கையில் ஐரோப்பிய மத்திய வங்கி தாமதமாக வந்திறங்கியது என்றாலும், இப்போது அது "பத்திரங்கள் வாங்குவதை தீவிரமாக தழுவி" இருந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் QE திட்டத்தைத் தொடங்கியபோது, அதன் அப்போதைய தலைவர் பென் பெர்னான்கி, அதன் நடவடிக்கைகள் பணவீக்கத்தை அதிகரித்து முதலாளித்துவ பொருளாதாரத்தை அதன் முந்தைய வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பி, நிலைமையைத் தலைகீழாக்கும் என்று கணித்தார். “அச்சடிக்கும் இயந்திரம் என்றழைக்கப்படும் ஒரு தொழில்நுட்பத்தை நாம் கொண்டிருக்கிறோம்,” 2002 இல் பணச்சுருக்கம் குறித்து பேசிய பிரதான உரை ஒன்றில் இதை அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறிருப்பினும் முதலாளித்து அமைப்புமுறையின் முரண்பாடுகள், மிகவும் சக்தி வாய்ந்த மத்திய வங்கியாளர்களை விட சக்தி வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளது.

பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் திட்டத்திற்கு இடையிலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பணவீக்க விகிதம் மிகக் குறைந்த வரலாற்று மட்டங்களில் இருந்து வருகிறது, ஜப்பான் மற்றும் யூரோ மண்டலத்தில் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக இருந்து வருகிறது. நெருக்கடியைக் கடந்து வருவதற்குப் பதிலாக, QE திட்டம் அதை தீவிரப்படுத்தி உள்ளது.  

மிகக்குறைந்த வட்டி விகிதம் மற்றும் எதிர்மறை வட்டி விகிதமே கூட உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின் தூண்களில் ஒன்றை நேரடியாக பாதித்துள்ளது. ஓய்வூதிய நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதி வழங்கும் முறையையே அச்சுறுத்தும் அளவிற்கு, பாதுகாப்பான சொத்திருப்புகளில், குறிப்பாக அரசு பத்திரங்களில் இருந்து கிடைக்கும் அவற்றின் இலாபம் மிகவும் குறைந்திருக்கும் ஒரு நிலைமையை அவை முகங்கொடுத்துள்ளன.

ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஓய்வூதியங்களுக்கான முன்னாள் மந்திரி பரொனெஸ் அல்ட்மான் கூறுகையில், ஒட்டுமொத்த அமைப்பும் ஒரு "நெருக்கடி கட்டத்தில்" இருப்பதாக தெரிவித்து, இலாபங்களை குறைந்த மட்டங்களுக்கு கொண்டு வந்ததற்காக பேங்க் ஆஃப் இங்கிலாந்தினது கொள்கைகளை குற்றஞ்சாட்டுகிறார், அதேவேளையில் இந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகையில் அரசு கடனில் பாதுகாப்பாக முதலீடு செய்வதிலிருந்து பெறும் சீரான இலாபங்களைச் சார்ந்துள்ள ஓய்வூதிய நிதிகள் அதிகரித்தளவில் நெருக்கடியை முகங்கொடுத்து வருவதாக குறிப்பிட்டது. எஸ்&பி 500 குறியீட்டில் பதிவு செய்துள்ள ஓய்வூதிய நிதிகள் கடந்த மாத இறுதியில் 562 பில்லியன் டாலர் நிதி பற்றாக்குறையில் இருந்ததாகவும், பத்திர இலாபங்கள் குறைந்ததால் கடந்த ஏழு மாதங்களில் இந்த பற்றாக்குறை 160 பில்லியன் டாலர் உயர்ந்திருப்பதாகவும் அப்பத்திரிகை குறிப்பிட்டது.

எதிர்கால வட்டிவிகித மாற்றங்கள் குறித்த அறிகுறிகளுக்கு அப்பாற்பட்டு, யெலெனின் கருத்துக்களை மிக நெருக்கமாக ஆய்வு செய்தால் வரும் பிரச்சினைகளில் ஒன்று மாற்றமில்லாத வட்டிவிகிதம் (neutral rate of interest) என்றழைக்கப்படுவது குறித்து அவர் குறிப்பிடுவதாகும். இந்த விகிதத்தில் தான் பொருளாதாரம் சமநிலையில் இருப்பதாக தீர்மானிக்கப்படுகிறது—பணவீக்கத்தை உயர்ந்த மட்டங்களுக்கு இட்டுச் செல்ல இதில் வட்டிவிகிதங்கள் மிகவும் குறைவாகவும் இருப்பதில்லை அல்லது மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் அதிகமாகவும் இருப்பதில்லை.  

இந்த விகிதம் மிகவும் குறைந்தளவிற்கு வீழ்ந்துள்ளதாக அச்சம் அதிகரித்து வருகிறது, பெரிதும் இது அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதனால் ஆகும், அந்த வட்டி விகிதங்களை மேற்கொண்டு அதிகரிக்க முடியாது. வட்டிவிகிதங்களை அதிகரிக்காமல், மற்றொரு மந்தநிலையில் பெடரலால் கீழ் நோக்கிய நடவடிக்கை எடுப்பதற்கு அங்கே வாய்ப்பில்லை என்பதால் இது கவலைக்குரியதாக உள்ளது.

இதற்கும் மேலாக, ஊதிப்பெருக்க செய்யப்பட்ட பத்திர விலைகளில் நிஜமான வளர்ச்சி விகிதத்தின் ஏதேனும் உயர்வு ஒரு வீழ்ச்சியைக் கொண்டு வந்து வட்டி விகிதங்களின் மீது மேல்நோக்கிய அழுத்தத்தைத் திணிக்கும் என்றளவிற்கு பத்திர சந்தைகள் ஊதி பெருக்கச் செய்யப்பட்டுள்ளன என்ற கவலைகளும் அங்கே உள்ளன. இது முன்னர் உயர்ந்த மட்டங்களில் இருந்தபோது சந்தைக்குள் வந்த முதலீட்டாளர்கள் மற்றும் ஊக வணிகர்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தும், விலைகள் இன்னும் மேற்கொண்டு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் முன்னர் மிக மிக குறைந்த மட்டங்களில் இருந்த 2011 சந்தை நிலைமைகளே மீண்டும் திரும்பினாலும் கூட, அது மொத்தத்தில் சுமார் 3.8 ட்ரில்லியன் டாலர் இழப்புகளைக் கொண்டு வருமென Fitch மதிப்பீட்டு நிறுவனம் கணக்கிட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அதிக "வழமையான" நிலைமைக்கு மீண்டும் திரும்புவதற்கான ஒரு சிறிய "முன்னேற்றம்" இருந்தாலும் அதுவே கூட ஒரு நிதியியல் நெருக்கடியைத் தூண்டும் தாக்கத்தைக் கொண்டிருக்கும். 

ஜாக்சன் ஹோல் இல் ஒன்றுகூடிய மத்திய வங்கியாளர்கள் மற்றும் நிதியியல் நிர்வாகிகளிடம், அவர்கள் தலைமை தாங்கிய இந்த இலாபகர அமைப்புமுறையின் நெருக்கடிக்கு எந்த பொருளாதார பதிலும் கிடையாது. இது உருவாக்கும் சமூக போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில், சர்வாதிகார ஆட்சி வடிவங்களை அதிகளவில் அபிவிருத்தி செய்வதுடன் சேர்ந்து தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை இன்னும் ஆழமாக்குவது மட்டுமே அவர்களது ஒரே "தீர்வாக" உள்ளது.