ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“Godfather” Biden visits Turkey

“மூலமுதல்வர்" பைடென் துருக்கிக்கு விஜயம் செய்கிறார்

Andre Damon
27 August 2016

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பைடென் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுடன் சேர்ந்து ஒரு கூட்டு பத்திரிகையாளர் மாநாட்டில், வட சிரியாவில் துருக்கி ஊடுருவினால் அமெரிக்கா அதற்கு நேரடியாக ஆதரவளிக்கும் என்று அறிவிக்க புதனன்று துருக்கி விஜயம் செய்தார்.  

“துருக்கி இராணுவம் என்ன செய்கிறதோ அதை நாங்கள் பலமாக ஆதரிக்கிறோம், நாங்கள் அவர்களுக்கு வான்வழி பாதுகாப்பு வழங்கி வருகிறோம்,” என்று தெரிவித்த பைடென் தொடர்ந்து கூறுகையில், “துருக்கிய எல்லை துருக்கியாலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் மிகவும் பலமாக நம்புகிறோம்,” என்றார்.

இந்த அறிக்கை வாஷிங்டனின் உண்மையான முகத்தை எடுத்துக்காட்டியது. ஜூலையில் எர்டோகன் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியிலிருந்து உயிர் தப்பினார், அந்நடவடிக்கை அமெரிக்காவின் ஆதரவைக் கொண்டிருந்ததாக பரவலாக நம்பப்படுகிறது. துருக்கிய அரசுக்குள் உள்ள கருத்து வேறுபட்ட கன்னைகள், இவை வாஷிங்டனுடன் நெருக்கமாக பிணைந்துள்ளதாக பார்க்கப்படும் நிலையில், இப்பிரிவுகளுக்கு எதிராக ஒடுக்குமுறையைத் தொடங்குவதற்கு எர்டோகன் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசாங்கம் அதன் ஊடக ஊதுகுழல்களுடன் சேர்ந்து கடந்த ஆறு வாரங்களாக எர்டோகனைக் குற்றஞ்சாட்டி வந்தது.   

பைடெனின் நிலைமாற்றமானது அதேநேரத்தில் சிரிய மோதலில் அமெரிக்கா அதன் பினாமிகளாக ஊக்குவித்துள்ள குர்திஷ் படைகள் பற்றிய இரட்டை நிலைப்பாட்டை காட்டுகின்றது. 

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் தொடக்கத்தில் வெள்ளை மாளிகை எர்டோகனுக்கு அதன் ஆதரவை அறிவிக்காததற்காக பத்திரிகை கூட்டத்தின் போது பைடென் வருத்தம் தெரிவித்தார். “கடைசியாக ஒருமுறை இதை கூற வேண்டியிருக்கிறது: அமெரிக்க மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். நாங்களும் தான் (தெளிவில்லாமல்). நீங்கள் முதன்முதலில் பராக் ஒபாமாவைத்தான் அழைத்திருந்தீர்கள். ஆனால் நான் மன்னிப்புக்கோருகின்றேன். நான் முதலிலேயே இங்கே வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றவர் ஏதோவிதத்தில் ஒன்றுகொன்று தொடர்பின்றி அறிவித்தார்.

பைடெனின் நடிப்பு பிரான்சிஸ் ஃபோர்ட் கோப்பொலா இன் The Godfather படத்தின் ஒரு பிரபலமான காட்சியைத் தான் நினைவூட்டுகிறது, அதில் மாஃபியா கொலையாளி அவரால் பாதிக்கப்பட்டவரிடம் "இது வியாபாரம், தனிப்பட்ட விடயமல்ல,” என்று அனுதாபத்துடன் நம்பிக்கையை மீட்டளிக்க முயல்வார்.

உண்மையில் The Godfather என்பது அமெரிக்க வெளியுறவு கொள்கையைத் திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு விவாதத்திற்கு பொருத்தமான குறிப்பாக உள்ளது. நிதியியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் நலன்களுக்காக செயல்படும் உளவுத்துறை முகவர்களின் உயரதிகாரிகளது நடவடிக்கைகள் இன்றியமையாத விதத்தில் சூழ்ச்சி தன்மையோடு மற்றும் குற்றகரமான குணாம்சத்தைக் கொண்டிருக்கின்ற நிலையில், அமெரிக்க வெளியுறவு கொள்கையின் உலகளாவிய நடவடிக்கைகள் அவர்களால்தான் வழிநடத்தப்படுகின்றன. முடிவெடுப்பதில் எந்தவிதமான ஜனநாயகரீதியிலான கட்டுப்பாடும் இல்லாமல் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும், இந்த சக்திகள் அரசாங்கங்களை அத்துமீறி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ்தரமான வணிக மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க போர்களைத் தொடங்குகின்றன.

பரந்த இராணுவ எந்திரத்திற்கு நிதி வழங்க அமெரிக்க சமூகத்தை வறுமைப்படுத்தியதற்கு கூடுதலாக, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வெளியுறவு கொள்கைகள் இலக்கு வைக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு மிக கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன. சிரியாவில் அமெரிக்கா தூண்டிய போர், அந்நாட்டின் மக்கள்தொகையை 23 மில்லியனில் இருந்து 17 மில்லியனாக குறைத்துள்ளது, அரை மில்லியன் பேர் கொல்லப்பட்டுள்ளனர், 13 மில்லியனுக்கும் மேலானவர்கள் இடம் பெயர்த்தப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்படுவதில் போய் முடிந்த ஈராக் படையெடுப்புக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பின்னர், சுமார் 4.4 மில்லியன் ஈராக்கியர்கள் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்த்தப்பட்டுள்ளனர், அத்துடன் ஒரு கால் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

வெளியுறவு கொள்கை மீதான கேள்விகள் தேர்தல்களின் கட்டமைப்பிற்குள் முடிவெடுக்கப்படுவதில்லை என்பது மட்டுமல்லாமல், அது பற்றி ஒரு விவாதிக்கப்படுவதுமில்லை. சான்றாக 2016 ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு போட்டியில் துருக்கி உடனான அமெரிக்க கூட்டணியின் குணாம்சம் குறித்தோ அல்லது நடைமுறையளவில் சிரியா மீது நேட்டோ படையெடுப்பு தொடங்கியதன் விளைவுகளைக் குறித்தோ எந்தவொரு இடத்திலும் ஓர் ஆழ்ந்த விவாதம் நடத்தப்படவில்லை. காங்கிரஸ் எந்தவிதமான விசாரணையோ அல்லது வாக்கெடுப்புகளோ நடத்தவில்லை. அது ஒரு முக்கிய பாத்திரம் வகிக்க விரும்புவதும் இல்லை, அதற்கு முயல்வதும் இல்லை.

மக்களைப் பொறுத்த வரையில், அவர்கள் எதையும் கூறுவதற்கு வாய்ப்பே கிடையாது.

மக்களை ஏமாற்றுவதிலும் மற்றும் உரிமைபறிப்பதிலும் பத்திரிகைகள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. அமெரிக்க ஆதரவிலான சிரிய படையெடுப்பு போன்றவற்றை "சிறிய" அபிவிருத்திகள் என்று கூறி "செய்திகளில்" இருந்து சர்வசாதாரணமாக நீக்கியமை பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தியாகும். ஊடக செய்திகளில் துருக்கிய ஊடுருவல் குறித்த இன்றைய நாள் வரையிலான மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், நடைமுறையில் அதைப்பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இதுவொரு மிகப்பெரிய உடன்படிக்கையாகும், ஊடகங்களது ஊழல் மவுனத்தின் காரணமாக அந்த ஊடுருவல் குறித்து அறிந்திருக்கும் அமெரிக்க மக்களின் சதவீதம் ஒரு இலக்கில் இருக்கிறது.

உண்மையான செய்திகளை இருட்டடிப்பு செய்வது, அலெப்போவில் சிரிய குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து தொலைக்காட்சியில் காட்டப்படும் எரிச்சலூட்டும் "மனித உரிமைகள்" பிரச்சாரத்துடன் சேர்ந்துள்ளது. இது இஸ்லாமிய போராளிகள் குழுக்களை விரட்டி, அந்த மூலோபாய நகர் மீதான முழு கட்டுப்பாட்டை ஏற்க முனைந்து வரும் ரஷ்ய ஆதரவிலான சிரிய அரசு படைகளின் கரங்களில் அமெரிக்க ஆதரவிலான அல் கொய்தா இணைப்பு கொண்ட "கிளர்ச்சியாளர்கள்" பின்னடைவுக்கு உள்ளாகி வருவதுடன் பொருந்தி நிகழ்கிறது.

"மனித உரிமைகள்" பெயரில் அமெரிக்காவின் இன்னும் ஆக்ரோஷமான தலையீட்டிற்கு தூண்டிவிடும் விதத்தில், முன்னணி பத்திரிகைகளில், குறிப்பாக நியூ யோர்க் டைம்ஸ் இல், நேர்மையற்ற கட்டுரைகள் வருகின்றன. துருக்கிக்கான பைடென் விஜயம் குறித்தோ அல்லது சிரியாவிற்குள் ஊடுருவல் குறித்தோ குறிப்பிடாமல், டைம்ஸ் கட்டுரையாளர் நிக்கோலஸ் கிறிஸ்டோஃப் "அன்னி பிராங்க் இன்று ஒரு சிரிய சிறுமி" என்று தலைப்பிட்டு வியாழனன்று ஒரு துணை-தலையங்கம் எழுதியிருந்தார், இதில் அவர் சிரியாவில் இரத்த ஆறு ஓடுவதானது அமெரிக்க ஆதரவிலான பினாமி போரின் விளைவாக கிடையாது, மாறாக இன்னும் வன்முறையான இராணுவ தலையீட்டை அமெரிக்க செய்ய தவறியதனால் ஆகும் என்று அவரது வாசகர்களை நம்ப வைக்கும் ஒரு முயற்சியில் அவர்களின் இதயநரம்புகளை மீட்ட முனைந்தார்.        

அதே நாளில் மற்றொரு டைம்ஸ் கட்டுரையாளர் ரோஜர் கோஹன் "அமெரிக்காவின் பின்னடைவும், அலெப்போவின் மரண ஓலமும்" என்பதில் புலம்பி இருந்தார். சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை அழிப்பதற்கு 2013 இல் ஒரு முழு அளவிலான போர் தொடங்க ஒபாமா முடிவெடுக்காததே ஒபாமாவின் "மிக பெரிய தவறு" என்று அவர் குறைகூறியிருந்தார்.

அமெரிக்க அரசாங்கங்கள், அது ஜனநாயகக் கட்சி ஆகட்டும் அல்லது குடியரசுக் கட்சி ஆகட்டும், அவை ஒரு கால் நூற்றாண்டு காலமாக நடைமுறையளவில் நிறுத்தாமல் போர் நடத்தி வந்தபோது, ஒவ்வொரு முறையும் ஆளும் உயரடுக்கு ஒரு புதிய இரத்தந்தோய்ந்த சாகசத்தில் ஈடுபட விரும்பிய போதெல்லாம் இத்தகைய இற்றுபோன மனிதாபிமான முறையீடுகளை முன்சிந்தனை இல்லாது வெளியிட்டன.

வாஷிங்டன் அதன் தற்போதைய வேகத்தில் தொடர அனுமதிக்கப்பட்டால், இந்த 25 ஆண்டுகள் வரவிருப்பதற்கான வெறும் முன்அனுபவமாக மட்டுமே இருக்கும். சிரிய போர் பகுதியில் ஒரு நேட்டோ படையெடுப்பை தொடங்குவது என்பது டமாஸ்கஸ் ஆட்சிக்கு இராணுவரீதியில் ஒத்துழைப்பு அளித்து வரும் அணுஆயுதமேந்திய ரஷ்யாவுடனான ஒரு நேரடி மோதலை இன்னும் நெருக்கமாக கொண்டு வருகிறது.

அமெரிக்க வெளியுறவு கொள்கையை செயல்படுத்தி வரும் குற்றகரமான சதிக்கூட்டம் வேறேதும் மேலதிக கலந்துரையாடலை தொடரும் என்றோ அல்லது அது சதித்திட்டம் தீட்டிய போர்களில் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட "வெறும்" மில்லியன் கணக்கிலான எண்ணிக்கையை விட, பில்லியன்களில் இல்லையென்றாலும், நூற்றுக் கணக்கான மில்லியன்களில் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் ஒரு போரைத் தொடங்குவது பற்றி எச்சரிக்கையாக இருக்கும் என்றோ யாரும் நம்பி விடக்கூடாது.

போர்கள் நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான மற்றும் பொறுப்பற்ற போர் கொள்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களிடையே நிலவும் எதிர்ப்பை ஒன்றுதிரட்டுவதே சோசலிச சமத்துவக் கட்சியினது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு மத்திய நோக்கமாகும்.