ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Why the CIA is for Hillary Clinton

ஹிலாரி கிளிண்டனுக்கு சிஐஏ ஏன் ஆதரவாக உள்ளது?

Patrick Martin
6 August 2016

வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் இன் தலையங்கத்திற்கு அடுத்த பக்க கட்டுரை ஒன்றில், முன்னாள் உயர்மட்ட சிஐஏ அதிகாரி மைக்கல் மோரால் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனின் நியமனத்தைப் பகிரங்கமாக ஆமோதித்தார். மோரால் அக்கட்டுரையில் கிளிண்டனின் போட்டியாளரான குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் ஐ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் பகடைக்காயாக முத்திரை குத்தினார்.

மோரால், இரண்டு தசாப்தங்கள் வாஷிங்டனின் உயர்மட்ட பதவிகளில் இருந்ததுடன், 33 ஆண்டுகால அவரது தொழில்வாழ்விற்கு பின்னர் 2013 இல் சிஐஏ இல் இருந்து ஓய்வு பெற்றார். ஜோர்ஜ் டபிள்யூ புஷ் க்கான ஜனாதிபதியின் அன்றாட குறிப்புகள் தயாரிப்பதும் அவர் வேலைகளில் உள்ளடங்கும். அவர் துணை இயக்குனராக இருந்த மூன்று ஆண்டுகளின் போது நாளாந்தம் அந்த அமைப்பை செயல்படுத்தியதுடன், 2011 இல் மூன்று மாதங்களும் மற்றும் 2012-2013 இல் நான்கு மாதங்களுக்கும் செயல் இயக்குனராக இரண்டு பொறுப்புகளையும் வகித்திருந்தார்.

மோரால் சம்பந்தப்பட்ட குற்றங்கள் எண்ணிக்கையில் திரண்டு கிடக்கின்றன. இரகசிய சிறைச்சாலைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களை சிஐஏ நாடு கடத்திய காலகட்டங்கள் (வேறு நாடுகளிடம் ஒப்படைப்பது) முழுவதிலும் அவர் ஓர் உயர்மட்ட அதிகாரியாக இருந்தார். சிஐஏ, டிரோன் ஏவுகணை படுகொலைகளையும் மற்றும் ஏனைய வடிவங்களில் இரகசிய அரசு பயங்கரவாதத்தையும் நடத்தியபோது அவர் சிஐஏ க்கு தலைமை கொடுக்க உதவி இருந்தார். வெர்ஜீனியாவின் லாங்லே இல் அவர் பதவியிலிருந்த காலம் முழுவதும், சிஐஏ, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, யேமன், சிரியா மற்றும் ஏனைய பல நாடுகளிலும் போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்தது.

அந்த அமைப்பிலிருந்து மோரால் வெளியேறிய பின்னர், ஒபாமா அவரை உளவுபார்ப்பு மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களுக்கான ஜனாதிபதியின் மீளாய்வு குழுவில் நியமித்தார், இக்குழு எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளியீடுகளை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைப்பின் உளவுபார்ப்புகளுக்கு ஒரு கண்துடைப்பை தயாரித்தது. பின்னர் அவர் சுமூகமாக நல்லதொரு சம்பளத்தில் CBS செய்திகளுக்கு ஊடக விமர்சகராக பதவியேற்க நகர்ந்தார், அதேவேளையில் சிஐஏ சித்திரவதை குறித்த செனட் உளவுபார்ப்பு கமிட்டி வெளியீடுகளை முடக்குவதற்கான முன்னாள் சிஐஏ அதிகாரிகளின் பிரச்சாரத்திலும் இணைந்திருந்தார்.

இத்தகைய ஒரு நபர், ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பகிரங்கமாக வருவதானது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரத்தின் இயல்பையும் மற்றும் நவம்பர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறும் சமயத்தில் கிளிண்டன் எவ்விதமான நிர்வாகத்திற்கு தலைமை கொடுப்பார் என்பதன் மீதும் தெளிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

“நான் சிஐஏ ஐ நிர்வகித்தேன், இப்போது நான் ஹிலாரி கிளிண்டனை ஆமோதிக்கிறேன்,” என்ற தலைப்பின் கீழ் தலையங்கத்திற்கு அடுத்த பக்கத்தில் மோரால் இன் கட்டுரை காணப்படுகிறது. உலகெங்கிலும் சித்திரவதை மற்றும் படுகொலையுடன் அடையாளம் காணப்படும் ஒரு அமைப்பிடமிருந்து கிளிண்டனுக்கு கிடைக்கும் ஆதரவை, நியூ யோர்க் டைம்ஸ் ஐ பொறுத்த வரையில், ஊருக்கெல்லாம் பறைசாற்ற வேண்டிய ஒன்றாக உள்ளது. அது ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கு சாதகமான நன்மதிப்பாக, ஏதோ பெருமைப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

கிளிண்டன் "முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்க பெரிதும் தகுதியானவர்" என்று அறிவிக்கும் அந்த முன்னாள் சிஐஏ அதிகாரி, “உலகிற்கு தலைமை கொடுக்க அமெரிக்கா ஒரு மகத்தான தேசம் என்று அவர் நம்புகிறார்" என்று புகழ்கிறார், மற்றும் சிரிய உள்நாட்டு போரில் அமெரிக்க தலையீடு மீதான உள்விவாதங்களில் "அவர் மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு பலமான ஆதரவாளராக இருந்தார்" என்பதையும் குறிப்பிடுகிறார். 

ஓயாது மாறுகின்ற ட்ரம்ப் இன் தனிமனிதவியல்பு மற்றும் தேசிய பாதுகாப்புத்துறை அனுபவமின்மை ஆகியவற்றின் காரணமாக பகுதியாகவும், மற்றும் பிரதானமாக ரஷ்யா உடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படுவதாலும் ஜனாதிபதியாக இருக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்று மோரால் குற்றஞ்சாட்டுகிறார்.

“ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் வி. புட்டின் தனிநபர்களின் பலவீனங்களை அடையாளம் காண்பதிலும் மற்றும் அவற்றைச் சாதகமாக்கிக் கொள்வதிலும் அவரது தொழில் வாழ்க்கையிலேயே பயிற்சி பெற்ற உளவுத்துறை அதிகாரியாவார். ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்களின் ஆரம்பத்தில் துல்லியமாக இதை தான் அவர் செய்தார். திரு. புட்டின் திரு. ட்ரம்ப் ஐ புகழ்ந்துரைத்து அவரின் பலவீனங்களைச் சாதகமாக்கிக் கொண்டார். திரு. புட்டின் கணக்கிட்டதைப் போலவே இவரும் விடையிறுத்தார்…" என்றவர் எழுதுகிறார்.  

“அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்ய உளவுவேலைகளை ஆமோதிப்பது, கிரீமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதை ஆதரிப்பது மற்றும் பால்டிக் அரசுகள் மீது சாத்தியமான ஒரு ரஷ்ய படையெடுப்புக்கு பச்சைக்கொடி காட்டுவது என திரு. ட்ரம்ப் அமெரிக்கர்களின் நலன்களுக்குப் பொருந்திய விதத்தில் இல்லாமல் ரஷ்யர்களின் நலன்களுக்குப் பொருந்திய விதத்திலேயே கொள்கை முடிவுகளை எடுத்துள்ளார். உளவுத்துறை வேலைகளில், திரு. ட்ரம்ப் க்குத் தெரியாமலேயே திரு. புட்டின் அவரை ரஷ்ய கூட்டாட்சியின் ஒரு உளவாளியாக நியமித்துள்ளார் என்று கூட நாம் கூறலாம்.” 

இந்த அசாதாரண குற்றச்சாட்டு, ட்ரம்ப் ஐ ஒரு "சைபீரிய வேட்பாளராகவும்" மற்றும் இவரின் பிரச்சாரம் அமெரிக்க தேர்தல்களுக்குள் ரஷ்ய தலையீட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது என்றும் சித்தரிக்கும் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் பௌல் க்ரூக்மன் போன்ற கிளிண்டன்-ஆதரவு பண்டிதர்களால் தொடங்கப்பட்ட பிரச்சாரத்திற்குப் பலம் சேர்க்கிறது.

கிளிண்டன் பிரச்சாரம் இத்தகைய மக்கார்த்தியிச (McCarthyite) மழுப்பல்களை அரவணைத்து ஊக்குவித்துள்ளதுடன், வெள்ளியன்று "விளாடிமீர் புட்டின் உடன் டோனால்ட் ட்ரம்ப் க்கு என்ன தொடர்பு?” என்ற கேள்வியை முன்னிறுத்தும் ஒரு காணொளியையும் வெளியிட்டது. யூடியூப் இல் காணக் கிடைக்கும் அந்த காணொளியில் ஜோ ஸ்கார்பரோ, சார்லஸ் கிரெளதாம்மெர் மற்றும் ஜோர்ஜ் வில் உட்பட வலதுசாரி ஊடக பிரமுகர்களின் காட்சிகள் உள்ளடங்கி இருப்பதுடன், இடையிடையே அது புட்டினை பாராட்டுவதற்காக ட்ரம்ப் ஐ கண்டித்தும், ட்ரம்ப் ரஷ்யாவுடன் இரகசிய வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளார் என்றும் மற்றும் ரஷ்ய செல்வந்த தட்டுக்களால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறார் என்றும் எடுத்துக்காட்டும் கேள்விகளையும் கொண்டுள்ளது.

அதன் பாணி மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில், அந்த காணொளி 1950 கள் மற்றும் 1960 களில் ஜனாதிபதி ஐசன்ஹோவர் உட்பட முன்னணி அமெரிக்க அரசியல் பிரமுகர்களை ரஷ்ய உளவாளிகள் என்று கூறிய கம்யூனிச-விரோத அமைப்பான ஜோன் பெர்ச் (John Birch) சமூகத்தின் பிதற்றல்களை நினைவுபடுத்துகிறது.

இது ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைநோக்கு தீவிரமாக வலது நோக்கி திரும்பியிருப்பதைக் காட்டுகிறது. அது ட்ரம்ப் இன் இராணுவவாதத்தையோ அல்லது ஏதேச்சதிகார தோரணையில் ஜனநாயக உரிமைகளை அவர் அவமதிப்பதன் அடிப்படையிலோ அவரை எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக கிளிண்டன் பிரச்சாரம், பில்லியனர்களுக்கும், இராணுவ உயரதிகாரிகளுக்கும் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் முறையிட்டு, இராணுவ-உளவுத்துறை கூட்டு ஸ்பாதனத்தின் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஏதேச்சதிகார கட்சியாக தன்னைத்தானே காட்டி வருகிறது.

அமெரிக்க தேர்தல் அமைப்புமுறை, ட்ரம்ப் மற்றும் கிளிண்டனுக்கு இடையிலான வடிவத்தில், பகிரங்கமான ஒரு பாசிசவாத வனப்புரையாளருக்கும் மற்றும் புதிய ஏகாதிபத்திய போர்களைத் தொடங்குவதற்கு ஈவிரக்கமின்றி பிரயத்தனம் செய்து வரும் பெண்டகன், சிஐஏ மற்றும் நிதியியல் ஸ்தாபகத்திற்கும் இடையே ஒருவரைத் "தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை" உழைக்கும் மக்களுக்கு வழங்குகிறது.

“வழமையான" அமெரிக்க அரசியல்வாதிகளில் இருந்து வேறுபட்டவராக ட்ரம்ப் குழப்பங்களுக்கு மட்டுமே தகுதியுடையவர் என்று பெருநிறுவன ஊடகங்களின் சரமாரியான வாதங்கள் வெறுமனே ஏளனத்திற்குரியதாகும். ட்ரம்ப் உம் சரி கிளிண்டனும் சரி இருவருமே தொழிலாள வர்க்கத்திற்கு மரணகரமாக எதிரிகளாவர். தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்திருக்கலாம், ஆனால் அது உழைக்கும் மக்கள் அவர்கள் பின்னால் அணிதிரள்வதற்குரிய வாதங்கள் கிடையாது. மாறாக ஆழமாக செயற்பிறழ்ந்துள்ள ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்ற முடிவைத் தொழிலாளர்களும் இளைஞர்களும் தீர்மானிக்க வேண்டும்.     

ஜனநாயகக் கட்சி உழைக்கும் மக்கள் தரப்பிலிருந்து ட்ரம்ப் மீதான பாரிய எதிர்ப்பு மற்றும் வெறுப்புக்கு முறையிடவில்லை, மாறாக குடியரசு கட்சி வேட்பாளரின் புட்டினை நோக்கிய நேசமான தோரணை, நேட்டோவின் மதிப்பைக் குறித்த அவரின் பகிரங்கமான கேள்விகள் மற்றும் மத்திய கிழக்கின் அமெரிக்க போர்கள் குறித்து அவர் வெளியிட்ட ஆட்சேபனைகள் வாஷிங்டனில் இருகட்சிகளது வெளியுறவு கொள்கை மீதான கருத்தொற்றுமையைக் குறுக்காக வெட்டுகிறது என பிரதானமாக இவை மீது கவலை கொண்டுள்ள அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் ட்ரம்ப் க்கு இருக்கும் எதிர்ப்பிற்கு முறையிடுகிறது.

இது தொழிலாள வர்க்கத்திற்கு ஆழ்ந்த அபாயங்களை முன்னிறுத்துகிறது. ஜனநாயகக் கட்சியினரின் ட்ரம்ப்-விரோத பிரச்சாரத்தின் தர்க்கம் என்னவென்றால் பாரிய ட்ரம்ப் எதிர்ப்பை ஓர் ஆணுஆயுத சக்தியான ரஷ்யாவுடனான போர் தயாரிப்புகளுக்குப் பின்னால் திருப்பி விடுவதாகும். ஜனநாயகக் கட்சி வெற்றி பெறும் சம்பவத்தில் —இந்த வார கருத்துக்கணிப்புகளின்படி அதிகரித்தளவில் அனேகமாக அவ்வாறே உள்ள நிலையில்—கிளிண்டன் போர் கொள்கைகளுக்கு கட்டளையிடுவதற்கான ஒரு அதிகாரத்தைக் கோருவார், அதை பிரதானமாக அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மூலமாக மட்டுமே நடத்த முடியும். கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் க்கு இடையிலான கருத்து வேறுபாடுகள், தொழிலாள வர்க்கத்தை எப்படி சிறப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய போர் முனைவுக்கு அடிபணிய செய்யலாம் என்ற தந்திரோபாயத்தையே முற்றிலுமாக சார்ந்துள்ளன என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

உலக சோசலிச வலைத்தளம் முன்னரே குறிப்பிட்டதைப் போல, ட்ரம்ப் மன்ஹட்டன் சேரிகளில் இருந்தோ அல்லது முனீச் மதுச்சாவடிகளில் இருந்தோ வந்தவரில்லை. அவர் நியூ யோர்க் நகரின் நில/கட்டிட பேர சந்தை ஊகவணிகர்களின் ஊழல்பீடித்த செல்வசெழிப்பான வட்டாரத்திலிருந்து வந்தவராவார், அங்கே அவர் ஜனநாயக கட்சி எந்திரத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். அவர் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களால் தசாப்தங்களாக உருக்கொடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டார். அவரும் கிளிண்டன்களும் பழைய நண்பர்கள்: தனது திருமணத்தில் ஒன்றுக்கு கிளின்டன்களை அழைத்திருந்தார்; அவர்களது அரசியல் பிரச்சாரங்களுக்கும் மற்றும் மோசடி அறக்கட்டளைகளுக்கும் ட்ரம்பிடம் அவர்கள் நன்கொடை கோரி இருந்தனர்.

வெள்ளை மாளிகையிலிருந்து விலக்கி வைக்க வேண்டிய ஒரு அரக்கராக ட்ரம்ப் திடீரென முத்திரைக் குத்தப்படுகிறார் என்றால், அதற்கு காரணம் அமெரிக்க நிதிய பிரபுத்துவமும் இராணுவ-உளவுத்துறை எந்திரமும் வேறொரு அரக்கரை, அவை அதிகமாக சார்ந்திருக்கலாம் எனும் ஒருவரை அதாவது ஹிலாரி கிளிண்டனை மனதில் கொண்டுள்ளன. அப்பெண்மணி தான் உக்ரேன், ரஷ்யா, நேட்டோ மற்றும் சீன-விரோத "ஆசிய முன்னிலை" ஆகியவற்றிற்கான செய்திகளில் அரக்கத்தன்மையுடன் உள்ளார். எந்த தளபதிகளை மதிக்க வேண்டும், எந்த பில்லியனர்களுக்கு முகஸ்துதி செய்ய வேண்டுமென்பது அப்பெண்மணிக்குத் தெரியும். அவர் "பாதுகாப்பான கரங்களில்" உள்ளார், அதாவது தேவையான நபர்களைக் கொல்வதற்கு அவரை நம்பலாம் என்பது தான் இதன் அர்த்தம். 

சிஐஏ இன் மைக்கல் மோரால் கிளிண்டனை ஆமோதிப்பதன், மேலும் மிக பொதுவாக, பில்லியனர்கள், குடியரசுக் கட்சியினர், தளபதிகள் மற்றும் ஊடகங்களிடம் இருந்தும் அவரது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் ஆதரவு அலையின் அர்த்தம் இது தான்.