ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The provocation in Crimea and the threat of world war

கிரிமியாவில் ஆத்திரமூட்டலும் உலக யுத்தத்திற்கான அச்சுறுத்தலும்

Bill Van Auken
13 August 2016

சந்தேகத்திற்கிடமின்றி வாஷிங்டனின் முழு ஆதரவோடு, கிரிமியாவிற்கு எதிராக உக்ரேனிய இரகசிய சேவை பிரிவினரால் நடத்தப்பட்ட தோல்வியடைந்த பயங்கரவாத தாக்குதலானது, ஐரோப்பாவை இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவுக்குப் பின்னரான அதன் மிகவும் பாரிய நெருக்கடிகளில் ஒன்றுக்குள் மூழ்கடித்துள்ளது.

கியேவில் உள்ள அமெரிக்க ஆதரவு அரசாங்கமானது, உக்ரேனிய படைகளை போரிடக்கூடிய அதிஉயர்ந்த எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கிறது. அதேவேளை ரஷ்ய இராணுவமானது அப்பகுதியில் ஒரு தொடர் இராணுவ பயிற்சிகளை தொடங்கி உள்ளது. ரஷ்யா அதன் நவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கிரிமியாவில் நிறுத்தி உள்ளது என்று வெள்ளி அன்று செய்தி வெளியிட்டது. நாட்டின் பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் மாஸ்கோ கியேவுடனான இராஜீய உறவுகளை முறித்துக் கொள்ளும் என்று சுட்டிக்காட்டினார். அமெரிக்காவானது அதன் பங்கிற்கு ரஷ்யாவிற்கெதிரான பொருளாதாரத் தடைகளை தயாரித்துக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியது.

லண்டன் ஃபைனான்சியல் டைம்ஸ் ஒரு ஆசிரிய தலையங்கத்தில், “உக்ரேனும் ரஷ்யாவும் மீண்டும் ஒருமுறை போரின் விளிம்பில் நிற்கின்றன” என்று அறிவித்து இந்த சூழ்நிலையை அப்பட்டமாக பண்பிட்டது. “உக்ரேனிய நிலைமையானது 1945க்குப் பின்னர் இருந்து ஐரோப்பிய அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக தொடர்ந்து இருக்கிறது” என அச்செய்தித்தாள் மேலும் குறிப்பிட்டது. ஒபாமா நிர்வாகம் மற்றும் பிரதமர் தெரேசா மேயின் பிரிட்டிஷ் டோரி அரசாங்கம் இரண்டினதும் போர்வெறிக் கொள்கைகளைப் பற்றிக் கொண்டு, செய்தித்தாளானது ரஷ்யாவுக் எதிரான அச்சுறுத்தல்களை மேலும் விரிவுபடுத்தலை ஆதரித்தது.

மாஸ்கோவால் முன்வைக்கப்பட்ட ஆதாரம், கியேவில் உள்ள அமெரிக்க ஆதரவு ஆட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு  அப்பட்டமான குற்ற நடவடிக்கையை சுட்டிக்காட்டுகிறது. உக்ரேனிய படைப் பிரிவுகளிலிருந்து துணையாக துப்பாக்கிச் சூடுகள் ஆதரவுடன், ஆகஸ்ட் 6க்கும் 8க்கும் இடையில் சிறப்பு நடவடிக்கை குழுக்கள் கிரிமியாவுக்குள் புக இரு முயற்சிகளைச் செய்தன. இந்த தாக்குதலில் ஒரு ரஷ்ய பாதுகாப்புப்படையை சேர்ந்தவரும், இன்னொரு ரஷ்ய இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்டனர்.

உக்ரேனிய அதிரடிப்படைகள் வழமைக்குமாறான அழிவுகர வெடிபொருட்கள், நிலக் கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள், மற்றும் தாக்குதல் ஆயுதங்களைக் கொண்டு சென்றனர். ரஷ்ய அரசு தொலைக்காட்சி, இதனை இயக்குபவர்களுள் ஒருவரால் வழங்கப்பட்ட ஒப்புதலின் ஒரு பகுதியை ஒளிபரப்பியது. அவர் தாங்கள் படகுச் சேவை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இரசாயன தொழிற்சாலை அதேபோல இதர இலக்குகளையும் தகர்ப்பதற்கு நோக்கம் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார்.

கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் கிரிமியாவின் தலைவிதியை நினைந்து உருகுவது, ரஷ்ய எல்லைகளில் மாஸ்கோவின் “ஆக்கிரமிப்பு” மற்றும் “விரிவாக்கம்” என்று கூறப்படுவதை எதிர்க்க ஒரு நிலையான இராணுவப் படைகளை கட்டி எழுப்புவதற்கான ஒரு சாக்குப்போக்காகும். 1000 துருப்புக்களை கொண்ட நேட்டோ யுத்த படையணிகள் போலந்து மற்றும் மூன்று பால்ட்டிக் குடியரசுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு விரைவு பதிலடிப் படையினால் ஆதரவளிக்கப்படுகின்றன. இது ஒரு சில நாட்களிலேயே இந்தப் பிராந்தியத்தில் 40,000 துருப்புக்களை நிலைநிறுத்தக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் தொடர் இராணுவ போர் ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உக்ரேனிய நெருக்கடியும் கிரிமியாவில் நடைபெறும் நிகழ்வுகளும் ரஷ்ய ஆக்கிரமிப்பின் நேரடி வெளிப்பாடு அல்ல. மாறாக பிப்ரவரி 2014ல் ஜானாதிபதி விக்டர் யானுகோவிச்சின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஜேர்மன் கூட்டாய் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் நேரடி விளைவாகும். பாசிச படைக்குழுவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட, இந்த நடவடிக்கை வாஷிங்டன் மற்றும் பேர்லினால் நேரடியாக நிதியூட்டப்பட்டது. இது அதிவலது ரஷ்ய எதிர்ப்பு பெட்ரோ போரோஷென்கோ எனும் செல்வத்தட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்பின் அதிரடி அதிர்ச்சித் துருப்புக்களாக இருந்த நவநாஜி குண்டர்களிடம் இருந்து வரும் தொடர்ச்சியான அச்சுறுத்தலும் ஊழலும் ஒருசேரக் கலந்து, அது ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு தலைமையேற்று நிற்கிறது. மேலும் பெரும்பான்மையாக ரஷ்யமொழி பேசும் டொன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள குடிமக்களுக்கு எதிராக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அடுத்து உடனடியாக, ரஷ்ய மொழி பேசும் பெரும்பான்மையரைக் கொண்ட கிரிமியா உக்ரேனிலிருந்து உடைத்துக் கொண்டு ரஷ்யாவின் அங்கமாக இருப்பதற்கு நடத்தப்பட்ட சர்வஜனவாக்கெடுப்பில் மிகப்பெரும்பான்மை பெற்றது. சோவியத் ஒன்றியத்தின் கீழ் இத்தீபகற்பமானது, ரஷ்ய சோவியத் கூட்டாண்மை சோசலிச குடியரசின் அங்கமாக இருந்தது. ஒட்டுமொத்த சோவியத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நிர்வாக செயல்பாட்டிற்காக 1954ல்தான் உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசுக்கு மாற்றப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது இந்த பிராந்திய மாறுதல்களின் முக்கியத்துவத்தை மாற்றிவிட்டது. கிரிமியன் தீபகற்பத்தில் செவஸ்தபோல் நகரமானது 18ம் நூற்றாண்டிலிருந்து ரஷ்யாவிற்கும் அதன் பின்னர் சோவியத் கருங்கடல் கப்பற்படையின் தளமாக இருந்து வந்தது. ரஷ்யாவை பொறுத்தவரை கிரிமியாவின் விதியானது, அதன் உயிர்வாழ்வுடன் தொடர்புபட்ட பிரச்சினை ஆகும், அப்பிராந்தியம் கருங்கடலுக்கும் அதேபோல மத்தியதரைக்கடலுக்கும் அணுகும் வழியுடன் பிணைந்துள்ளது.

இறுதி ஆய்வில் இந்நெருக்கடியானது, தொழிலாளர் அரசை நிறுவிய அக்டோபர் 1917 புரட்சியை ஸ்ராலினிச அதிகாரத்துவம் இறுதியாய்க் காட்டிக் கொடுத்ததற்காக கொடுக்கப்படும் பயங்கர விலை ஆகும். இந்த அதிகாரத்துவமானது 1991ல் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததுடன் முதலாளித்துவத்தையும் மீட்டெடுத்தது.

கிரிமியா மீதாக ஒரு ஆயத மோதலுக்குள் ரஷ்யாவை இழுத்துவிடுவதில், அமெரிக்க ஏகாதிபத்தியம் முரட்டுத்தன்மைமிக்கதும், பெருந்திகைப்பூட்டக்கூடியதுமான கொள்கையை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும், இதுதான் மத்திய கிழக்கு முழுவதும் கடந்த கால்நூற்றாண்டாக முடிவுறாத மற்றும் என்றும் விரிந்து கொண்டிருக்கும் யுத்தங்கள் மீதான அமெரிக்க வெளிவிகாரக் கொள்கையின் இயல்பாக இருந்துவருகிறது.

கிரிமியா மீது தூண்டிவிடப்பட்ட மோதல்நிலை, ஏனைய யுத்தங்களிலிருந்து தனிமைப்பட்டதல்ல. சிரியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கையின் நெருக்கடி மீதான அமெரிக்க விரக்திகளோடு இது பிணைந்திருக்கிறது. சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் அரசாங்கத்திற்கான ரஷ்ய ஆதரவு, வாஷிங்டனின் பினாமிப் படையாக தொழிற்படும் அல் கொய்தா தொடர்புடைய குழுப்படைகளை தளத்திலிருந்து பின்னேறச்செய்வதில் வெற்றிபெற்றிருக்கிறது. துருக்கி ஜனாதிபதி ரெசிப் தயீப் எர்டோகானுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு ஆட்சிக் கவிழிப்பு சதியின் தோல்வியாலும் அடுத்து அங்காரா மாஸ்கோவிற்கு இடையிலான ஆழமடைந்து வரும் சுமூக உறவாலும் அமெரிக்க கொள்கை நெருக்கடியானது அதிகரித்துள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை அடுத்து அரசு சொத்தினை களவெடுப்பதன் மூலம் தங்களை செல்வந்தராக்கிக்கொண்ட குற்றகரமான செல்வத்தட்டின் ஒரு அடுக்குத்தான் ரஷ்ய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இதற்கு விரிவடைந்து வரும் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான ஒரு ஒருங்கிசைந்த கொள்கை கிடையாது. விளாடிமிர் புட்டினின் அரசாங்கத்தினுள்ளே உள்ள கூறுகள் முறுகல் நிலையைத் தவிர்த்து என்ன விலை கொடுத்தாயினும்  மேற்குலகோடு ஒரு பேரத்தைச்செய்யவே விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவிற்கு வைக்கப்படும் வேண்டுதல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காய் இருக்கின்றன.

மற்றவர்கள் மகா ரஷ்ய பேரினவாதத்தை எழுப்புவதுடன் மற்றும் மேற்குலகின் இராணுவ சுற்றி வளைப்பிற்கு எதிராக பாதுகாக்கவும் நாட்டினை அரைக் காலனித்துவ நிலைக்கு குறைத்துவிடுவதற்கும் எதிராக சோவியத் ஒன்றியம் இருந்தபோதிலிருந்து கையிலிருப்பிலுள்ள  அணுஆயுத இருப்புக்களை ஆதாரமாக காட்டுகின்றனர். தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த  மூலோபாய நோக்குநிலை இல்லாமல், உலக மக்களின் போர் எதிர்ப்பு உணர்வுக்கு அழைப்புவிடுக்க இயலாமையாலும் புட்டின் ஆட்சி ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு  நெருக்கடிக்கு தள்ளாடிச்சென்று போர் அபாயத்தை  உக்கிரப்படுத்துகிறது.

கிரிமியாவில் ஆழ்ந்துவரும் அபாயகரமான நிகழ்வுகள், அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில், குடியரசுக் கட்சியின் பாசிசத்தனமான வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை உண்மையில் ஒரு ரஷ்ய ஏஜெண்டு என முத்திரை குத்தும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் நவீன மெக்கார்திய தாக்குதல் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்களைத் தடைசெய்யும் பைத்தியக்காரத்தனமான சிலுவைப் போர் இரண்டிலும் தட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்விரு பிரச்சாரங்களுமே ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்காக பொதுக் கருத்தை உருவாக்குவதற்கு தயாரிக்க வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

அமெரிக்காவானது, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாட்டுடன் யுத்தத்திற்குச் செல்ல ஆயத்தப்படுத்தி வருகிறது, இருப்பினும் இந்த பிரச்சினை தேர்தல் பிரச்சாரத்திலும் சரி காங்கிரசிலும் சரி அல்லது பெருநிறுவன ஊடகத்துறையிலும் சரி விவாதிக்கப்படவே இல்லை. உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு போரின் விளைவு என்னவாக இருக்கும் என்று ஒரு தகவலும் வழங்கப்படவில்லை. அமெரிக்காவையும் நேட்டோவையும் மாஸ்கோவுடன் அணு ஆயுத மோதலுக்குள் இழுத்துவிடும் அத்தகைய ஒரு யுத்தத்தின் மிகவும் குறைந்த விளைவுகள் பற்றிக்கூட எவ்வித தகவல்களும் வழங்கப்படுவதில்லை.

அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் இராணுவவாதம் பற்றிய பிரச்சினை தேசிய அளவிலான விவாதத்திற்குரிய பிரச்சினையாக ஆகாமல் தடுக்கும் பொருட்டு, தேர்தல்கள் வரைக்கும் புது யுத்தங்களை முன்னெடுப்பதை மரபு ரீதியாகவே நிறுத்தி வைத்துள்ளது. சமீபத்திய நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், தற்போது தயாரிக்கப்பட்டு யுத்தமானது நவம்பருக்கு பின்னர் வரை பின்தள்ளிப்போடப்படுமா என்பது தெளிவில்லாமலே இருக்கிறது.

அமெரிக்க இராணுவவாதத்தின் ஒரு புது வெடிப்பை பின்தள்ளிபோடுதல் இருக்குமானால், அதுவும் ஒரு குறைந்த காலத்திற்காகவே இருக்கும். உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் தேசிய அரசு அமைப்பு முறையின் தீர்க்கப்படா முரண்பாடுகள் மனித குலத்தை இன்னொரு உலக யுத்தத்திற்குள் இழுத்துவிட அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இது யுத்தத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட முடியும்.